Advertisement

அப்போது  மேலே நிறைய பேர்  ஓடும்  சத்தம் கேட்கவும், உன்னிப்பாக கவனித்த
கதிர், போனை கட் செய்துவிட்டு, “ம்மா.. நான் இதோ வந்திடுறேன்..” என்று
வேகமாக  கதவை திறந்து மேலே மொட்டை மாடிக்கு  ஓடினான்,

அங்கு  மொட்டை மாடி மூலையில் இருந்த டேங்கிற்கு பின் பதுங்கியிருந்த
ரமேஷையும், அவனின் நண்பர்களையும்  கண்டு கொண்டவன்,

“டேய் யார்டா நீங்க எல்லாம்..? இங்க ஏன் ஒளிஞ்சிருக்கீங்க..?” என்று
இருட்டில் ஆள் தெரியாமல் திருடர்களோ என நினைத்து அடித்து வெளிச்சத்திற்கு
இழுத்து வரதான் “அது ரத்தினத்தின்  சின்ன மகன் ரமேஷ்” என புரிய,

“இந்த நேரத்துல நீ  இங்க என்ன பண்ற..?” என்று கோவத்தோடு கேட்டவனை, “அது
நான் நான் லாவண்யா, நான்..” என்று பயத்தில் திக்கி திணறி சொல்ல,
புரிந்தும் புரியாமலும் நின்ற கதிர், அவர்களை இழுத்து கொண்டு நேரே தன்
அம்மா இருக்கும் ரூமிற்கு கூட்டி கொண்டு வந்தவன்,

“என்ன பிளான் செஞ்சு இங்க வந்திருக்கீங்க..?” என்று அண்ணனுக்காக பழிவாங்க
வந்திருக்கிறானோ..? என்று நினைத்து கோவத்தோடு கேட்டான்,  கதிரின்
கோவத்தில் மேலும் பயந்த ரமேஷ்,

“இல்லை, இல்லண்ணா பிளான் எதுவும் இல்லை”, என்று சொல்ல, அவனின்
நண்பர்களும் “அப்படியெல்லாம் இல்லண்ணா..” என பயத்தோடு பதற  அவர்களிடம்
தெரிந்த உண்மையில், நம்பாமல் பார்த்த கதிரை சைகை காட்டி அமைதி படுத்திய
லட்சுமி, பொறுமையாக பேசும்படி சைகை காட்ட,

“ம்ம்.. சொல்லு,  இங்க ஏன் வந்திருக்க..?” என்று பல்லை கடித்து கோவத்தை
அடக்கியவன் பொறுமையாகவே கேட்டான்,

“அது நானும் லாவண்யாவும் ஒரே காலேஜ் தான், நான் அவளை லவ் பண்றேன், அவளும்
என்னை லவ் பண்றா..” என்று சொல்லவும்,

“டேய் பொய் சொல்லக்கூடாது.”, என்று மிரட்டலுடன் கேட்ட கதிரிடம்,

“இல்லண்ணா, நான் பொய் எல்லாம்  சொல்லலை, அவளும் என்னை லவ் பண்றாதான், ஆனா
பயந்துகிட்டு சொல்ல மாட்டேங்கிறா”, நான் வெளியூர்ல வேலையில இருக்கேன்,
அதனால ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ப்ரண்ட்ஸ் சொல்லித்தான் அவளுக்கும்,
உங்களுக்கும் கல்யாணம்ன்னு தெரிஞ்சி அவகிட்ட பேசினா அவ பயந்து அழுகிறா,

அதான் உங்ககிட்ட பேசலாம்ன்னு  முயற்சி செஞ்சேன், முடியல, அதான்
மண்டப்பத்துக்கே வந்துட்டேன், இங்க  உங்ககிட்ட பேசலாம்ன்னு தான்
வந்தேன்ண்ணா, என்னை நம்புங்க..” என்று ரமேஷ் முடிக்கவும், கதிர்  அவனின்
பேச்சை நம்பாமல் பார்த்தவன்,  ரத்தினத்திற்கு அழைத்து  உடனே
வரச்செய்தான்,

அவரும் வந்து மகனை அடித்து தான் விசாரித்தார், அப்போதும் அவன் அதையே
சொல்லவும், ஒருவேளை அவன் உண்மையை தான் சொல்கிறானா..?  என்று தோன்றவும்,
லாவண்யாவை வரவைத்து ரகசியமாக விசாரிக்க, முதலில் பயத்தில் மறுத்தவள்,
பின் தானும் ரமேஷை காதலிப்பதை ஒத்துக்கொண்டாள்,

அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, லட்சுமி அம்மாள் தான், “விடிஞ்சா
கல்யாணம், இப்போ நாம யார்கிட்டேயும் பேசி புரிய வைக்கவோ, ஒத்துக்க
வைக்கவோ முடியாது, இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா பிரச்சனை தான்
பெருசாகும், தீர்வு கண்டிப்பா கிடைக்காது, அதனால நீங்க பேசாம பொண்ணை
உங்களோடவே கூட்டிட்டு கிளம்பிடுங்க..”, என்று சைகையில் கதிரின் மூலம்
சொல்ல,

அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்த ரத்தினமும் அதற்கு ஒத்துக்கொண்டு
கதிரின் யோசனைப்படி, சுந்தரத்துடன் சென்னை கிளம்பிவிட்டனர்,

“பார்த்தியா நான் சாமி கும்பிடறதுக்கு எப்படி பேசுவ, திட்டுவ, ஆனா இப்போ
என் அம்மாதான் இந்த பிரச்னைக்கு நல்ல வழி காண்பிச்சிருக்கா, இல்லன்னா நாம
இதை எப்படி சமாளிச்சிருப்போம்..?” என்று நெகிழ்வுடன் அம்மனுக்கு நன்றி
சொல்லியபடி கதிருக்கு சைகை காட்டி சொல்ல,

“இது வேறயா..?” என்று சிரித்த கதிரின் மனமும் மிக மிக லேசானது, அந்த
நொடிவரை கல்யாண மேடை வரை கொண்டு வந்து ஒரு பொண்ணுக்கு துரோகம் செய்யும்
போறோம் என்ற குற்ற உணர்ச்சி அவனை கொன்று கொண்டிருக்க, இப்போதுதான்
யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பிரச்சனை தீர்ந்ததில்  நிம்மதியாக
உணர்ந்தவன்,

“ம்மா அதெல்லாம் இருக்கட்டும்,  விடிஞ்சா என்ன செய்றது..? என்ன சொல்லி
சமாளிக்கிறது, கண்டிப்பா இதுல ரமேஷை பத்தியோ, ரத்தினம் அங்கிளையோ சொல்ல
முடியாது, பிரச்சனை வேற மாதிரி போயிடும், சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்,
அதனால வேற என்ன சொல்லலாம்..?” என்று யோசித்து கொண்டிருக்கும் போது,

யாரோ சத்தமாக கதவை தட்டும் சத்தம் கேட்க, என்னவென்ற யோசனையுடன் கதவை
திறந்த கதிரிடம், “ரத்தினம் வந்து கல்யாண பொண்ணை தூக்கிட்டு
போயிட்டார்..” என்று கோவத்தோடு வெளியே ஒரு கூட்டமே கொதித்து
கொண்டிருந்தது.

அதிலிருந்து கதிர் என்ன செய்தும் அவனால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த
கலவரத்தை தடுக்க முடியமால் போய்விட்டது, இதில் “கதிரின் அண்ணன்களுக்கு
சுந்தரம் தான் அவர்களை சென்னை கூட்டி சென்றார் என்று தெரிந்துவிட்டது”.

அவர்களும் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை விடாமல் அவரையும்
பிரச்சனைக்குள் இழுத்துவிட்டு  மேலும் மேலும் பிரச்சனையை பெருசாக்கி
விட்டனர். பஞ்சாயத்தின் போதும், கதிரின் அண்ணன் ஆட்கள் வேண்டுமென்றே
சுந்தரத்தை மரியாதை இல்லாமல் பேச, கொதித்த சுந்தரத்தின் பக்க ஆட்கள்
கதிரையும் தேவையில்லாமல் நிறைய  பேசி விட்டனர்.

ஆக மொத்தத்தில் இதுவரை நடந்ததில் மிகவும் பாதிக்கப்பட்டது லட்சுமி
அம்மாள் தான், அவருக்கு ஏனோ அன்று லாவண்யாவை அவர்களுடன் அனுப்பி தான்
அவசரப்பட்டு விட்டதாகவே தோன்றியது,

அன்று விஷயம் தெரிந்தவுடன் கணவனிடம் பேசியிருந்தால்கூட, அவர் இந்த
விஷயத்தை வேறு மாதிரி கையாண்டு, இப்பிரச்னைகளை தவிர்த்திருப்பாரோ,
நாம்தான் எதையும் யோசிக்காமல் அவசரப்பட்டு விட்டோமோ..? என்று கலவரம்
நடந்ததில் மிகவும் கஷ்டப்பட்ட லட்சுமியை,  ஆறுதல் வார்த்தை சொல்லி
தேற்றிய கதிரிடம்,

“இவ்வளவு பகை பெருசானத்துக்கு அப்பறம், உனக்கும் அஞ்சலிக்கும் எப்படி
கல்யாணம்..?”  என்று வருத்தத்துடன் சைகையில் கேட்க, பெருமூச்சு விட்ட
கதிர்,

“தலை கீழா நின்னாலும் நடக்காதுதான், இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயம்
மட்டும் வெளியே தெரிஞ்சது பிரச்சனை பயங்கர பெருசாதான் ஆகும், அதனால் நாம
இப்போ அதை பத்தியே யோசிக்காம இருக்கறதுதான் நல்லது..” என்று முடித்துவிட,

லட்சுமி அம்மாவிற்கு இன்னும் இன்னும் வருத்தமாகிவிட்டது, மகன் சொல்வதை
பார்த்தால் இருவருக்கும் திருமணம் என்பது நடக்காமலே போய்விடும் போலே,
அப்போ அப்போ என் மகனுக்கு கல்யாணம் எப்படி..?

அவனால் காலத்துக்கும் எப்படி  தனியாக வாழமுடியும்..? அஞ்சலியோட
வருங்காலம், என் மகனோட வருங்காலம் என்ன..? என்று வேதனையில் இருந்தவரை
மேலும் கஷ்டப்படுத்துவது போல், “பஞ்சாயத்தில் வைத்து கதிரை  அவர்கள்
பேசிவிட்டத்தில் ஒரு அன்னையாக மனம் துடிக்கவே செய்தார்”,

“எல்லாம் தன்னால் தானோ..?” என்று மகனிடமும் தான் அவசரபட்டு விட்டதாக
சொல்லி மன்னிப்பு கேட்க, பதறிப்போன கதிர்,

“என்னம்மா இது..? ஏன்மா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..?” என்று
அம்மாவின் வேதனையில் தானும் வேதனை கொண்ட மகன் வருத்தத்துடன்,

“நீங்க அந்த டைம்ல சொன்னது சரிதான், அப்போ அதை தவிர  வேறெந்த வழியும்
இல்லை, அதனாலதானே நானும், ரத்தினம் அங்கிளும் உங்க யோசனையை
ஏத்துக்கிட்டோம், இதுல உங்க தப்பு எதுவும் கிடையாது”,

“ என்ன நடந்ததுன்னு தெரியாம, இதுதான் வாய்ப்புன்னு  தங்களோட இன, கட்சி
வெறியை வச்சி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிற இவங்க மேல்தான் தப்பு”,

“அதனால ப்ளீஸ்ம்மா இதை நினைச்சு நீங்க கவலைப்பட்டு மனசை தளரவிடாதீங்க”,
என்று சொன்ன மகனின் கையை பிடித்த லட்சுமி அம்மாள்

“பஞ்சாயத்துல உன்னை.. உன்னை ஆம்பிளை.. ஆம்பிளையான்னு..? கேட்டங்களாமே..?”
 என்று திக்கித்திணறி அழுகையுடன் சைகையில் கேட்க,

“ம்மா.. முதல்ல அழுகறதை நிப்பாட்டுங்க”, என்று கண்களை துடைத்தவன்,

“அவங்க சொன்ன நான் ஆம்பிளை இல்லன்னு ஆகிடுமா..? விடுங்கம்மா இதெல்லாம்
ஒரு விஷயம்ன்னு நினைச்சு உங்களை நீங்களே கஷ்டபடுத்திக்காதீங்க”, என்று
அன்புடன் கடிந்தவன்,

“வாங்க முதல்ல கொஞ்சம் வெளியே  தோட்டத்துக்கு போலாம், உள்ளேயே இருந்தா
இப்படித்தான் கண்டதையும் நினைச்சு கவலைபட தோணும்..”  என்றவாறே  அவரை
தூக்கி வீல்சேரில் வைத்தவன், தோட்டத்திற்கு அழைத்து சென்று பொதுவான
விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் போது, கதிரை பார்க்க ஆட்கள் வர,
அவர்களிடம் பேச சென்றான்,

லட்சுமி அம்மாள் மட்டும் தோட்டத்திலே இருக்கும் போது மோகனின் அறையில்
உள்ள ஜன்னல் வழியாக, மகன்கள் பேசுவது கேட்டது, “ண்ணா.. சூப்பர்,
இன்னிக்கு பஞ்சாயத்துல வச்சி அந்த சுந்தரத்தை மட்டுமில்லாமல் கதிரையும்
நல்லா அசிங்கபடுத்தியாச்சி..” என்று சேகர் குதூகலிக்க,

“பின்ன வந்த சான்ஸை விடமுடியுமா தம்பி..? இந்த கதிர் நமக்கு என்ன ஆட்டம்
காட்டறான், அதான் இந்த பிரச்சனையை பெருசாக்கி ஒரே நேரத்தில் நம்ம ரெண்டு
எதிரிகளையும் பழிவாங்கிட்டோம்..” என்று  சொன்ன பெரிய மகனின்
மகிழ்ச்சியில் லட்சுமி அம்மாள் வெறுத்தே போனார்,

“என்னுடைய பிள்ளைகளா இவர்கள்..? நான் இப்படியா வளர்த்தேன்..? சொந்த
தம்பியைவே எதிரியாக பார்க்கும் அண்ணன்கள், இதுபோல இவங்க  இன்னும் என்ன
என்ன செய்ய மாட்டாங்க..? இவங்களுக்கு மத்தியில என் பிள்ளை எப்படி நல்லா
இருப்பான்..?” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் லக்ஷ்மிக்கு
மனக்கஷ்டத்துக்கு மேல் மனக்கஷ்டம் வந்தது.

அதனாலே அவர் மனதோடு உடலும் தளர ஆரம்பித்தது, கதிர் எவ்வளவு முயன்றும்
அவனால் லக்ஷ்மியின் வேதனைய போக்க முடியவில்லை, அவரின் கவலை அவரின்
உடல்நிலைய பின்னுக்கு கொண்டு செல்ல, மனவேதனை மட்டுமில்லாமல் உடல்வலியும்
அதிகரித்து அவரால் தாங்கமுடியாமல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டவர்
மனதில் கதிரின் எதிர்காலத்தை பற்றிய கவலையே,

“இனியாவது என் மகன் அவனுக்காக வாழட்டும், இவங்களை எல்லாம் பார்த்தது
போதும், இவங்க எல்லாம் என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க” என்று
வெறுப்படைந்தவர், மகனை அழைத்து,

“நீ இவங்களை பார்த்து உன் வாழ்க்கையை.. அஞ்சலியை விடாத, அவளை கல்யாணம்
செஞ்சுப்பேன்னு எனக்கு சத்தியம் செஞ்சு கொடு..” என்று கதிரிடம் சத்தியம்
வாங்கிய கையோடு மறைந்தும் விட்டார்,

அதற்கு பிறகான மூன்று வருட வாழ்க்கை, கதிருக்கு பெருந்துயரமாகவே
இருந்தது,  அம்மாவின் மறைவு, அது கொடுத்த தனிமை, அஞ்சலிக்கான
காத்திருப்பு..!!! என்று,

தனியாகவே எல்லாவற்றையும் சமாளித்தவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் மாறன்
மட்டுமே, அவர் மட்டும் அக்காலகட்டங்களில் அவனுக்கு சப்போர்ட்டாக அவனுடன்
இல்லாமல்  போயிருந்தால் இன்னும் இன்னும் வாடியிருப்பான்.

“இதுதான் நடந்ததது…”  என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தவன்,

“இந்த மூணு வருஷமும்  நீ எப்போ வருவேன்னு ஒவ்வொரு நொடியும் உனக்காக
காத்திருந்தேன், ஏன் சிலசமயம் உன்னை லண்டனுக்கே வந்து தூக்கிட்டு
வந்திரலாமான்னு கூட  தோணும், ஆனா உன் படிப்புக்காக என்னை நானே
கட்டுப்படுத்திக்கிட்டேன்”.

“இதுக்கும் மேல என்னால முடியாதுன்னு தான் நீ வந்த  அன்னிக்கே உன்னை
தூக்கிட்டு போய் கல்யாணமும்  செஞ்சுக்கிட்டேன், எனக்கு அதை தவிர வேற
வழியும் இல்லை”,

“எனக்கு நீ வேணும், உன் காதல் வேணும்..!!!”, என்று  முடித்தவன்,

இப்போ “நான் உன்னை காதலிக்கிறேனா..? இல்லையான்னு…?  நீதான் எனக்கு
சொல்லணும்..!!” என்று இறுதியில் பதிலை எதிர்பார்த்திருந்த அஞ்சலியிடமே
கேள்வியை கேட்டான் கதிர்.

Advertisement