Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL 2

 கதிரின் திருமணத்திற்கு முன் தின இரவு…    “ம்மா.. உங்ககிட்ட கொஞ்சம்
பேசணும்..” என்று நலங்கு முடிந்த கையோடு  கசங்கிய முகத்தோடு  வந்து நின்ற
 கதிரை முன்னமே எதிர்பார்த்திருந்த லட்சுமி  அம்மாள்,

“முதல்ல என் பக்கத்துல உட்காரு,  பேசலாம்..” என்று சைகை காட்ட,
பக்கத்தில் உட்கார்ந்த மகனின் கையை  இதமாக வருடியவருக்கு சிறிது
நாட்களாகவே  மகன் ஏதோ சரியில்லாமல், எந்நேரமும் எதோ யோசனையிலே  இருப்பது
நன்றாகவே தெரிந்திருந்தது,,
.
“சொல்லு தம்பி.. என்ன பேசணும்.?” என்று சைகையில் கேட்டார்,

“ம்மா.. அது அது எனக்கு நான்.”  என்று பேசமுடியாமல் முதல் முறையாக
தடுமாறிய மகனின் கையை அழுத்தி பிடித்தவர்,

“எதுவா இருந்தாலும் சொல்லுப்பா..” என்று தன் அழுத்தத்தில் தைரியம் கொடுக்க,

“நான்.. எனக்கு..” என்று மறுபடியும் தடுமாறிய கதிர், பின் கண்மூடி
நிதானமாக மூச்சு இழுத்து விட்டவன், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்
இல்லமா”, என்று வேகமாக சொல்லிவிட்டு, மெலிதான பயத்துடன்  கண்திறந்து
அம்மாவின் முகத்தை பார்த்தான்,

கதிர் சொல்ல கேட்டிருந்த லட்சுமி அம்மாக்கு உச்சகட்ட அதிர்ச்சியே, அவர்
எதையெதையோ நினைத்திருக்க, இப்படி மகனுக்கு இத்திருமணமே பிடிக்காமல்
இருக்கும் என்று சற்றும் நினைத்திருக்கவில்லை, அதனாலே முதலில்
அதிர்ந்தவர், பின் கதிரை பற்றி நன்கு தெரிந்தவராததால், தன் அதிர்ச்சியை
மறைத்து மகனை பார்த்து ஆறுதலாக சிரித்தார்.

அவரிடம் அதிகமான கோவத்தையே  எதிர்பார்த்திருந்த கதிருக்கு அம்மாவின்
சிரிப்பு ஆச்சரியத்தோடு, ஆசுவாசத்தையும் கொடுத்தது, அவன்
இத்திருமணத்திற்கு சம்மதித்தே லட்சுமி அம்மாவின் ஆசைகாகத்தான்,

அவருடைய விருப்பத்தின் பேரிலே இப்பொழுது திருமணம் செய்யும் ஆர்வம்
இல்லாது இருந்த கதிர், அவர் வேண்டி கேட்கவும் தான் அம்மாவிற்காக..!!
என்று ஒத்து கொண்டான், அதனாலே அளவில்லா பயத்துடனே வந்திருந்தவனக்கு
அவரின் சிரிப்பு தெம்பையும், தைரியத்தையும் கொடுத்தாலும்,

“தான் இத்திருமணத்தை நிறுத்தினால் தனக்காக நிச்சயக்க பட்டிருக்கும்
பெண்ணை நினைத்து சொல்லமுடியா அளவு கலக்கமும், குற்ற உணர்ச்சியும்
கொண்டான்”, மகனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த லட்சுமி ஆதரவாக மகனின்
கையை பற்ற, தானும் அம்மாவின் கையை பற்றி கொண்டவன்,

“எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாயிருக்குமா”, என்று கலங்கிய குரலில்
சொன்னவனின் கையை சுரண்டிய, அம்மாவின் “என்ன கஷ்டம்..?” என்ற கேள்வியை
உணர்ந்து,

“சொல்லனுமா.. கண்டிப்பா உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும் , இல்லாட்டி
என்  தலையே வெடிச்சிடும், நானும் இந்த ஒரு மாசமா உங்ககிட்ட சொல்லமுடியுமா
ரொம்ப தவிச்சிட்டு இருக்கேன்” என்று  சொன்னவன்,

“சீனியர்.. அசோக் சீனியர் இருக்காருல்ல, அவரோட தங்கச்சி அஞ்சலியை ஒரு
மாசத்துக்கு முன்னாடி, என் பிறந்தநாள் அப்போ அம்மன் கோவில்ல வச்சி
பார்த்தேன்”, என்று சொன்னவன் அம்மாவின் முகத்தை பார்க்க, அவர் தொடர்ந்து
சொல்லும்படி சைகை காட்டினார்,

அன்று கோவிலில் நடந்ததை மனக்கண்ணில் கண்டவாறே சொல்ல ஆர்மபித்தவன்..
“அன்னிக்கு அவ கோவில்ல வச்சி என்னை பார்த்த அந்த பார்வை…!!!!!   ம்ம..,
எப்படி சொல்றது..?”

“நீ என்னை பார்ப்ப இல்லை,  பாசத்தோட, கனிவோட,  ரசிப்போட, அதேமாதிரி தான்
அவளும் என்னை பார்த்தாமா, என்ன உங்க கண்ணில பாசம் இருக்கும்”,

“அவ கண்ணுல கா… காதல், அந்த காதல் நிறைவேறாத வலியும் இருந்துச்சு..!!??” என்று,

 மெலிதான தயக்கத்தோடு சொல்லிவிட்டு அம்மாவின் முகத்தில் தோன்றும்
உணர்வுகளை படிக்க முயன்றான், அவரோ அதே  சிரிப்புடன், தொடர்ந்து
சொல்லும்படி சைகை காட்ட, அம்மாவின் சிரிப்பில் தன் மேல் உள்ள அவரது
நம்பிக்கையை புரிந்து நெகிழ்ந்தவன், தொடர்ந்து

“எனக்கு உண்மையிலே அவ கண்ணுல எனக்கான காதலை பார்த்தப்போ என்னால நம்பவே
முடியல, ரொம்ப அதிர்ச்சி, எந்த நம்பிக்கையில், எந்த தைரியத்துல இவ என்னை
ஒன் சைடா  லவ்  பண்றான்னு..?” நிறைய கோவம் கூட வந்துச்சு,

“அதோட அன்னிக்கே அவ மறுபடியும் நீங்க எனக்காக பூசாரிக்கிட்ட சொல்லி,
அம்மன் கயிறை எப்பவும் என் கையில கட்டுவீங்களே..? அதே மாதிரி அன்னிக்கு
அவளும் அந்த கையிறை என் கையில கட்டுறதுக்காக, பூசாரிக்கிட்டருந்து
வாங்கிட்டு நம்ம பார்ம் அவுஸிற்கு வந்தவ உள்ளே வரமுடியாம வெளியவே ஒரு மணி
நேரமா சுத்திட்டு இருந்தாமா..

“அதுவும் அந்த மதிய வெயில்ல அவ அப்படி சுத்திட்டுருந்தது பார்க்கும்போது
என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணுதேன்னு..? எனக்கு கோவம் தான்,
அதுமட்டுமில்லம்மா, நான் எப்பவும் மில்லுக்கு போய்ட்டு நைட் அவ வீட்டு
வழியா தான் நம்ம வீட்டுக்கு வருவேன் இல்ல”,

“அப்போல்லாம் என்னை யாரோ உத்து பாக்கிற மாதிரி அடிக்கடி தோணும், அது ஏன்
இவளா இருக்க கூடாதுன்னு அன்னிக்கே நான் அவங்க வீட்டுக்கு முன்னாடி
இருக்கிற மரத்துக்கு பின்னாடி  மறைஞ்சிருந்து பார்த்தேன், அவ என்னை தான்
எதிர்பார்த்திட்டு ஜன்னல் திண்டுல உட்கார்ந்திருந்தா”,

“நடு ராத்திரி ஆகியும் நான் எப்பவும் வர்ற டைம்க்கு வராம போனப்பவும்,
அங்கேயே ஜன்னல் திண்டிலே உட்காந்திருக்காம்மா, பின்ன என்ன நினைச்சாளோ
நான் வராம போகவும், அழுகவே ஆரம்பிச்சிட்டா, அதை பார்த்து எனக்கு மனசு
கேட்காம, வண்டியை எடுத்து ஹார்ன்  அடிச்சிட்டே கிராஸ் ஆகவும் தான்
அமைதியானா”, என்று

அன்று நடந்தது முழுவதையும் சொன்னவன்,   “எனக்கு அப்போ அவமேல, அவ காதல்
மேல ரொம்ப கோவம்தான்ம்மா, இந்த பொண்ணு ஏன் இப்படி செய்றான்னு நிறைய
வருத்தம், ஆதங்கம் கூட, ஏன் சீனியர்கிட்ட பேசலாமான்னு கூட யோசிச்சேன்,
இத்தனைக்கும் நான் அவ முகத்தை கூட ஒழுங்கா பார்த்ததில்லை”,

“அப்படி இருக்கிறப்போ அவ என்னை இப்படி..? இவ்வளவு டீப்பா லவ் பண்றது
எனக்கு முதல்ல கோவத்தை கொடுத்தாலும்,  நாளாக நாளாக அன்னிக்கு அவ  கோவில்ல
வச்சு என்னை பார்த்த அந்த பார்வை…!!?  அது கொடுத்த தாக்கம், என்னால
மறக்கவே முடியலம்மா”,

“ஏன் இப்போ கண்மூடினா கூட அந்த அவளோட பார்வை என்னை  ரொம்ப தொந்தரவு
பண்ணுது, ஏதோ என்னை போட்டு வாட்டுது, என்னால நிம்மதியாவே  இருக்க
முடியல”,

“இன்னும் சொல்ல போனா நான் எதோ தப்பு பண்ற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி வேற
என்னை போட்டு பாடாபடுத்தது, நானும் இதையெல்லாம் கடந்து வரணும்ன்னு இத்தனை
நாளா நிறைய முயற்சி செஞ்சுட்டேன்ம்மா, ஆனா என்னால முடியலம்மா”,

“இதோ இப்போ அந்த பொண்ணுகூட எனக்கு நலங்கு வச்சப்போ, எனக்கு உடம்பும்
மனசும் பதறுது, அஞ்சலிக்கு துரோகம் பண்றமாதிரி மனசு துடியா
துடுக்குதும்மா”,

“அந்த பொண்ணு பக்கத்துல நின்னத்துக்கே எனக்கு இப்படின்னா என்னால
எப்படிம்மா அந்த பொண்ணை கல்.. கண்டிப்பா முடியாதும்மா.. நானும் என்னோடவே
நிறைய போராடி தான் இந்த கல்யாணத்துக்கே வந்தேன்”,

“ஆனா எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சும்மா, என்னால கண்டிப்பா முடியாதுன்னு,
எனக்கு புரியுது நான் பண்றது மன்னிக்க முடியாத தப்புன்னு, ஆனா என்னால
முடியலையே..? என்ன செய்யட்டும்ம்மா..?”, என்று சொல்லமுடியா அளவு
வேதனையோடு சொன்னவன்,

“நான் பண்றது ரொம்ப பெரிய தப்பு, ஏன் ஒருவகையில் பாவமும் கூட, கல்யாண
மேடை வரை வந்த பொண்ணை நான்..?”

“ம்மா.. இப்போ என்னோட கவலை எல்லாம் அஞ்சலியை பத்தியோ, என்னை பத்தியோ
இல்லை, கல்யாண பொண்ணு லாவண்யா..  அந்த பொண்ணுக்கு நான் பண்ண போற
துரோகம், பாவம் என்னை அப்படியே செல்லு செல்லா மொத்தமா அரிக்குது”,

“குற்ற உணர்ச்சி என்னை உயிரோட கொள்ளுது, ஒரு பொண்ணை இப்படி கல்யாண மேடை
வரை கொண்டு வந்து, விடறது எல்லாம், மன்னிக்கவே முடியாத தப்பு”, என்று
மருகிய மகனின் வேதனை புரிந்து கொண்டார்  லட்சுமி அம்மாள்.

 “ஆனா என்னாலயும் அஞ்சலி.. அவளை விடமுடியலம்மா, நான் இல்லன்னா அவ
கண்டிப்பா காலத்துக்கும் தனியாத்தான் நிற்பா.. அது இன்னும், இன்னும்
எனக்கு கொடுமையா இருக்குமே..?”,

“என்னாலயும் இன்னொரு பொண்ணை..? என்ன செய்றதும்மா..?”, என்று நேரம் நேரம்
ஆக ஆக புலம்பியபடி நிலையில்லாமல் தவித்தவனை, அமைதியாக பார்த்த லட்சுமி
அம்மாள், அவனின் கையில் அழுத்தம் கொடுத்து தன்னை பார்க்க செய்தவர்,

“இதை ஏன் நீ முன்னமே  யோசிக்கல..?” என்று கேட்டார்,

“நான் நிறைய யோசிச்சேன்ம்மா, என்னால அவ காதலை கடந்து வரமுடியும்ன்னு ஒரு
பொய்யான நம்பிக்கையை எனக்கு நானே உருவாக்கிட்டு தான்  கல்யாணத்துக்கு
வந்தேன்,

“ஆனா இன்னிக்கு அந்த பொண்ணு பக்கத்துல நலங்குக்கு நின்னப்போதான், என்னால
எப்போதுமே அஞ்சலியோட காதலை கடக்கவே முடியாதுன்னு சுரீன்னு நடுமண்டையில
அடிச்ச மாதிரி புரிஞ்சுது”,

“இனி அவ தான் எனக்கு எல்லாமே.. அவளை தவிர வேற யாரும் என் பக்கத்துல கூட
நிக்கமுடியாதுன்னு…???? அந்த நொடிதான் நான் உணர்ந்தேன்”, என்று
சொன்னவன்,

“நீங்க சொன்ன மாதிரி  என்னோட இந்த தெளிவு  கண்டிப்பா லேட் தான்..”, என்று
தன்னை நினைத்து தானே வருந்தியவனிடம்,

“இப்போ என்ன சொல்ல வர நீ..?  நீயும் அஞ்சலியை  லவ் பண்றியா..?” என,

“தெரியலம்மா, ஆனா அவளை.. அவ காதலை என்னால விடமுடியும்ன்னு எனக்கு தோணல”,
என்று  உறுதியாக சொன்னான், அவனின் பதிலில் நன்றாக சிரித்த லட்சுமி
அம்மாள்,

“என் மருமக ரொம்ப அழகா இருப்பா..” என்று சைகையில் சொல்ல, புரிந்து
அப்படியே அவரின் கையில் முகம் புதைத்து கொண்டான் கதிர், அம்மாவின்
ஒப்புதல்  இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று அவன் சுத்தமாகவே
எதிர்பார்க்க வில்லை,

“ம்மா.. ம்மா..” என்று திணறியவன், அவரின் கையில் அழுத்தமாக இதழ்
ஒற்றியவன், மனக்கண்ணில் அஞ்சலியின் முகத்தை காண, அவனுக்கு
தெரிந்ததெல்லாம்

“அவளின் அழகு முகம் இல்லை, அவளின் கண்ணில் தெரிந்த வலியோடு கலந்த காதல்
மட்டுமே..!!!”  அதையே அம்மாவிடமும் சொல்ல செய்தான்,

“உங்க மருமக அழகா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா அவ காதல் ரொம்ப
அழகு”, என்று ரசனையுடன் சொல்ல, அவனின் கையில் தட்டிய லட்சுமி அம்மாள்,

“அவ ரொம்ப அழகு,  நான் கோவில்ல வச்சு பார்ப்பேன்..” என்று சைகையில்
சொன்னார்,. அப்போதுதான் கதிருக்கு அசோக்கிடம் இருந்து போன் வந்தது,

“ம்மா சீனியர் தான் வீடியோ கால் பண்றார்..” என்றபடியே அட்டென்ட்
செய்தவனுக்கு முதலில் தெரிந்தது, அஞ்சலி தான், அசோக் தங்கையை பார்த்து
மொபைலை வீசிவிட்டு ஓட, கீழே விழுந்த மொபைலில் அஞ்சலியின் உருவம் தெரிய,
சந்தோஷமாக தன் அம்மாவிடம் காட்டியவன்,

அதற்கு பிறகே அவள் மாடி சுவற்றில் நிற்பதை பார்த்து அதிர்ந்தான், “ம்மா..
அவ அவ..” என்று பதறிய  கதிருக்கும், பார்த்திருந்த லட்சுமி
அம்மாவிற்கும், அசோக் உஷராக தங்கையின் கை பிடித்து இறக்கிவிட்ட பிறகே
மூச்சு வந்தது,

அதற்கு பிறகு அஞ்சலி, அசோக்கின்  முகம் வீடியோ காலில் தெரியாமல்
போனாலும், அவர்கள் பேசியது இருவருக்கும் நன்றாக கேட்டது, அதிலும் அஞ்சலி,

“அவரை எப்போ..? எப்படி..? லவ் பண்ணேன்னு எனக்கே தெரியலண்ணா..” என்ற
அழுகையுடன் சொல்லியது கதிரை மட்டுமில்லை, லட்சுமி அம்மைவையும் பாதித்தது.

Advertisement