Advertisement

“வரமுடியாது போடி..” என்று தானும் உறுதியாக சொன்னவன்,  வெளியே
கிளம்பிவிட்டான்.  சிறிது நேரத்திலே அவனின் மொபைல் ஒலிக்க எடுத்து
பார்த்தால் மாறன்,
“என்னப்பா..?”
“எங்கிருக்க கதிர்..?” என்ற மாறனின் குரலில் தெரிந்த கோவத்தில் யோசனையானவன்,
“நம்ம பார்ம்ல தான்ப்பா..”
“நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா கதிர்..” என,
“என்ன ஆச்சுப்பா..? ஏதாவது  அவசரமா..?”
“நீ முதல்ல கிளம்பி வா கதிர்..” என்றவர் வைத்துவிட, உடனே வீட்டுக்கு
சென்றவனை பிடி பிடியென பிடித்துவிட்டார் மாறன்,
“என்ன  செய்ற நீ..? லக்ஷ்மியை தான் இப்படி படுத்துனன்னா, அடுத்து இப்போ
மருமகளையும் படுத்த ஆரம்பிச்சுட்டியா..? ஏன் உனக்கு மருமகளோட கோவிலுக்கு
போய்ட்டு வரதுல என்ன பிரச்சனை..?”,
“எப்படியும் நீ அங்கபோய் சாமி கும்பிட போறதில்லை, சும்மாதான் நிக்கப்போறா
அப்பறம் என்ன..? முதல்ல மருமகளோட கோவிலுக்கு கிளம்பு..” என்று
அதட்டியவர், “எதோ  இன்னிக்கு உன் பிறந்த நாளா போயிருச்சு, இல்லன்னா
பாத்துக்கோ..?”என்று மிரட்டிவிட்டு செல்ல,
“இப்போ மட்டும் எதோ திட்டாத மாதிரி..?” என்று தந்தையை மனதுள்
கடுப்படித்தவன், திரும்பி மனைவியை முறைக்க, அவளோ எனக்கும் இதுக்கும் எந்த
சம்மந்தமும் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்,
“கிளம்பியாச்சா..?” என்று உள்ளிருந்து மாறன் சத்தம் கொடுக்கவும், வேறு
வழி இல்லாமல்,
“ஏய் வாடி.. செய்றதெல்லாம் செஞ்சுட்டு எனக்கென்னன்னு நிக்கிற..” என்று
கருவிக்கொண்டு மனைவியை கோவிலுக்கு கூட்டி சென்றவன் எப்போதும் போல் சாமி
கும்பிடாமல் நின்று விட்டு, வெளியே வர, திருநீறு வைக்க தன் முகம் பார்த்த
மனைவியை வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் காருக்கு சென்றுவிட்டான்,
அவன் சென்று வெகு நேரம் ஆகியும் வராத மனைவியை தேடி கொண்டு மறுபடியும்
உள்ளே வந்தவன், ஹாயாக அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்றவன்,
அடிக்குரலில்,
“என்னடி.. எனக்கே ஆட்டம் காட்டுறியா..?” என்று சீற, அஞ்சலி அவனை பார்த்து
உதட்டத்தை சுழித்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“இப்போ நீ வரலன்னா நான் கிளம்பிடுவேன் பாத்துக்கோ..?” என்று அவளின்
உதட்டு சுழிப்பில் கோவம் கொண்டு மிரட்டியவன்,  அவள் வராமல்
உட்கார்ந்திருக்கவே,
“உனக்கு ரொம்ப திமிர் கூடி போச்சு, இங்கேயே இரு..” என்று கத்தியவன்,
அங்கிருந்து கிளம்பியும் விட்டான், கிளம்பியவன் அரை மணி நேரத்தில்
மறுபடியும் உள்ளே வந்து, அவளை உறுத்து விழிக்க, அதுவரை அங்கேயே
அமர்ந்திருந்த அஞ்சலி, கணவன் வரவும் எழுந்து நின்றவள்,
கோவத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவன், பல்லை கடித்தபடி நெற்றியை காட்ட,
அம்மனை வேண்டியபடி திருநீறு வைத்தவள், அடுத்து சாமி கயிறை கையில் எடுக்க,
பார்த்தவன்,
“அதெல்லாம் கட்ட மாட்டேன், போடி..” என்று வேகமாக கைகளை கட்டிக்கொள்ள,
மறுபடியும் அங்கேயே அமர்ந்துவிட்டாள். அதில் மேலும் ஆத்திரம் கொண்டவன்,
“ரொம்ப ஓவராதான் போற.. உன்னை கவனிச்சிக்குறேன் இறுடி.” என்று கொதித்தபடி
கைகளை பிரித்து தொங்கவிட்டு நின்றான், எழுந்து நின்ற அஞ்சலியே அவனின்
கையை தூக்கி சாமி மந்திரம் சொல்லியபடி கட்டி முடிக்க,
“அவ்வளவுதானா..? இல்லை இன்னும் இருக்கா..?” என்று கத்தியவனின் கை
பிடித்து அன்னதானம் நடக்கும் இடத்திற்கு கூட்டி சென்றவள், அவனின் கையில்
ஸ்வீட்டை கொடுக்க, சாப்பாடு விஷயம் என்பதால் மறுக்காமல், அவனே இறுதிவரை
எல்லோருக்கும் பரிமாறினான்.
அடுத்து இருவரும் வீட்டிற்கு வர, அசோக் கதிரையும், அஞ்சலியையும் தங்கள்
வீட்டிற்கு கூட்டி செல்வதற்காக வந்திருந்தான், மாறனிடம் சொல்லிவிட்டு
மூவரும் அங்கு செல்ல, மீனாட்சி மருமகனின் பிறந்த நாளிற்கென ஓர்
விருந்தையே தயார் செய்திருந்தார்.
“ம்மா.. குலாப்ஜாமுன் எங்க..?” என்று அலறிய மகனை கண்டு கொள்ளாமல்,
“மாப்பிள்ளை உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரசகுல்லா.. இந்தாங்க” என்று
பவுலில் நிரப்பி கொடுத்து கொண்டிருந்தார், அதில் ஆத்திரம் கொண்ட அசோக்,
“ம்ம்ம்மா.. நான் உன்கிட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன்..” என்று சத்தமாக
கேட்க, கதிர் அசோக்கை குறுந்சிரிப்புடன் பார்த்தவாறே தன் கையிலிருக்கும்
ரசகுல்லாவை நீட்ட,
“அவனுக்கு எதுக்கு மாப்பிள்ளை..? நீங்க சாப்பிடுங்க, அவன் கிடக்கான்,
இந்தாங்க இதை வச்சிக்கோங்க..” என்று மேலும் தொடர்ந்து மருமகனையே கவனித்து
கொண்டிருந்தார்,
“அத்தை.. தம்பிக்கு பிடிச்ச இந்த பலகாரத்தை விட்டுடீங்களே..?” என்றபடி
லதா வேறு கதிரை விழுந்து விழுந்து கவனிக்க, தன் வெறும் தட்டை பார்த்து
மேலும் கடுப்பானவன்,
“லதா..” என்று அதட்ட,
“தம்பி.. நீங்க என்ன இப்படி கொறிக்கிறீங்க, நல்லா சாப்புடுங்க..” என்று
பாசமலர் தம்பிக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள் அசோக்கின் அன்பு மனைவி.
கதிருக்கே அசோக்கின் நிலைய பார்த்து பாவமாக போய்விட, “அத்தை..
சீனியருக்கு சாப்பாடு..” என்று சொல்ல,
“அதெல்லாம் டேஸ்ட் பாக்கிறேன்னு அப்பவே பிளேட் பிளேட்டா உள்ளே
தள்ளிட்டான், நீங்க சாப்புடுங்க மாப்பிள்ளை..” என,
“ம்ம்மா.. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, டேஸ்ட் பாக்காவா எனக்கு
கொடுத்த, எதோ சோதனை எலிமாதிரி என்னை வச்சு மாமியாரும் மருமகளும் டெஸ்ட்
பண்ணிட்டு இப்போ இப்படி சொல்றேங்களா..? போங்க நான் ரொம்ப கோவமா
கோவிச்சிக்கிட்டு போறேன்..” என்றவன்,
எழுந்து செல்வது போல் பாவ்லா காண்பிக்க, யாரும் கண்டு கொண்டால்தானே,
அதில் உண்மையில் கோவம் கொண்டவன், எழுந்து செல்லும் போது அவன் முன் பெரிய
பவுலில் குலாப் ஜாமுன் வைக்க,
“இதை முதல்லே கொடுத்திருந்த நான் ஏன் கோபப்படப்போறேன், அந்த பயம்
இருக்கட்டும்..” என்று கெத்தாக சொன்னபடி அமர்ந்தவன், பவுலை பார்க்க, அது
அவனின் செல்ல மகள் ஸ்வேதாவின் கையில் இருக்க, ஙேன்று விழித்த அசோக்கின்
பாவனையில்,  கதிர் சத்தமாக சிரித்துவிட்டான்,
கதிரின் சிரிப்பில் கொந்தளித்த அசோக் “டேய்..” என்று கத்திவிட, மகனுக்காக
வேறொரு பவுலில் குலாப் ஜாமூனை கொண்டு வந்த மீனாட்சி, அசோக்கின் டேய்..
என்ற சத்தத்தில், மறுபடியும் அதை கிட்சனுக்கே கொண்டு போக,
“ம்மா.. என்னை பெத்த தெய்வமே, தெரியாத்தனமா உன் தங்க மாப்பிள்ளையை டேய்..
ன்னு கூப்புட்டுட்டேன், தப்புதான், அதுக்காக என் குலாப் ஜாமுன்ல கை
வச்சிடாத..?” என்று கெஞ்சியபடியே மீனாட்சியின் பின்னே ஓட, கதிர் மேலும்
சத்தமாக சிரிக்க, அஞ்சலி எப்போதும் போல் கணவனின் சிரிப்பில் மயங்கி
அவனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
மனைவியின் ரசிப்பு பார்வையை உணர்ந்து அவளை முறைத்து பார்த்தவாறே
ரசகுல்லாவை சாப்பிட்டவனக்கு திடீரென என்ன தோன்றியதோ, மனைவியை கண்களில்
குறும்பு மின்ன பார்த்தவன், “அஞ்சலி..” என்று தேனொழுக கூப்பிட்டான்,
அவனின் திடீர் மாற்றத்தில், உஷாரான அஞ்சலி, “என்னங்க..” என்று சந்தேகமாக கேட்க,
“நீ ரசகுல்லா சாப்பிடல, இந்தா சாப்பிடு, நல்லா இருக்கும்..” என்று அவளின்
கன்னத்தை பார்த்தவாறே சப்புகொட்ட, கணவனின் சீண்டலில் குப்பென சிவந்த
அஞ்சலி, எல்லோரும் இருக்கவும் முறைக்க முடியாமல்,  கண்களால் மிரட்ட, அவன்
கண்டு கொண்டால் தானே,
“அக்கா..” என்று லதாவை பாசமாக அழைத்தவன், “தேன்மிட்டாய் இருக்காக்கா..?”
என்று அஞ்சலியின் உதட்டை பார்த்தவாறே மேலும் சீண்ட,
“அச்சோ.. இல்லையே தம்பி, உங்களுக்கு பிடிக்குமா..?” என்று கேட்க,
“ஆமாக்கா ரொம்ப பிடிக்கும், அதுவும் அந்த தேன்மிட்டாயில இருக்கிற தேனை
உறிஞ்ச எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று அஞ்சலியின் உதட்டை  பார்த்து
கண்ணடித்து சொன்னவனின் குறும்பில், இன்னும்  சிவந்த அஞ்சலி அவஸ்தையுடன்
அவனை முறைத்து பார்த்தாள்,
“வாடி.. வா, காலையிலருந்து என்னை எவ்வளவு டென்க்ஷன் செஞ்ச,  இனிதான்
உனக்கு இருக்கு”, என்று அடுத்து அவளை எப்படி டென்க்ஷன் செய்வது என்று
முடிவுக்கும் வந்துவிட்டான்.
சாப்பிட்டு முடிக்கவும் கை கழுவிவிட்டு வந்த கதிர் எதிரில் மனைவி வரவும்,
குறுஞ்சிரிப்புடன் அவளின் வழியை மரித்து  அவளின் இடையில் சொருகியிருந்த
சேலையை நன்றாக இடைய வருடியவாறே எடுத்து  கை துடைக்க,
அவள் டென்க்ஷனுடன் சுற்றும் முற்றும் பார்த்து, “என்ன செய்றீங்க..?”
என்று கடிந்து கொண்டாள்,
“ம்ம்ம்.. நான் என்ன செஞ்சேன்..? உன்னை கட்டியா பிடிச்சேன், இல்லை
உனக்கு முத்தமா கொடுத்தேன், என்று குறும்புடன் கேட்டவாறே அவளை இன்னும்
நெருங்க, அவனின் நெருக்கத்தில் பதறிப்போன அஞ்சலி, வேகமாக தள்ளி  நிற்க
பார்க்க,
அவனின் கையில் இருந்த புடவையால் மனைவியை இழுத்து தனக்கு மிக அருகில்
நிறுத்தியவன், மிக மிக நிதானமாக அவளின் இடையில் புடவையை சொருக, அவனின்
ஸ்பரிசத்தில் சிலிர்த்த அஞ்சலியின் சிலிர்ப்பை உணர்ந்து, தன் கோவத்தை
மறந்தவன்,
அவளின் இடைய அழுத்தமாக பற்றியவாறே அவளின் உதட்டை நெருங்கும்போது,
“கதிர்.. எங்க இருக்க..?” என்று கூப்பிட்டபடி வரும் அசோக்கின்
சத்தத்தில், வேகமாக கணவனை விட்டு தள்ளி நின்ற அஞ்சலி, அங்கிருந்து
ஓடியும் போனாள்.
நீண்டநாள் கழித்து கிடைத்த மனைவியின் நெருக்கத்தை கெடுத்த அசோக்கை கொலை
வெறியாக முறைத்த கதிரின் கோவத்தை புரியாத அசோக், “இங்கதான் இருக்கியா..?”
என்றவாறே வந்தவன்,
“நம்ம பசங்க உன் பிறந்தநாள் ட்ரீட் கேட்டு ஒரு வாரமா என் உயிரை
வாங்குறானுங்க, என்ன செய்ய..?” என்று கேட்க,
“இதை இப்போதான் கேட்குணுமா நீங்க..?” என்று கடுப்படிக்க,
“ஏன் இப்போ கேட்டா என்ன தப்பு..?” என்று கேள்வியாக இழுத்தவனை,
“ம்ம்.. ஒரு தப்பும் இல்லை, கொடுத்துடுங்க..” என்று முறைத்தபடியே
சொன்னவன்,  பின்னிருந்து லதா வரவும், மாட்டினியா..? என்று குறுஞ்சிரிப்பு
சிரித்தவன்,
“சீனியர்.. ராதா போன் செஞ்சு, உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்ல
சொன்னாங்க”, என்று சத்தமாக சொல்ல,
“ராதாவா.. எப்படி இருக்காளாம்..?” என்று சந்தோஷமாக கேட்ட அசோக்கை
பார்த்து உள்ளுக்குள் சிரித்த கதிர்,
“ம்ம்.. நல்லா இருக்காங்களாம், என்ன உங்களை தான் ரொம்ப மிஸ்
பண்றாங்கலாம்”, என்று கதிர் சொல்லவும்,
“யாரு தம்பி இந்த ராதா..?” என்று கணவனை முறைத்தபடியே கேட்ட லதாவை
பார்த்து பதறிப்போன அசோக், “சொல்லாத..” என்பதுபோல் கதிருக்கு சைகை காட்ட,
“அதுவாக்கா, ராதா நம்ம சீனியாரோட காலேஜ் க்ரஷ், ரெண்டுபேரும் சேர்ந்தா
பயங்கர லூட்டிதான் போங்க, இவங்க ஜோடி காலேஜில ரொம்ப பேமஸான ஜோடின்னா
பாத்துக்கோங்க..” என்று வேண்டுமென்றே சொல்லி முடித்தவன்,
“என்ன சீனியர் எதோ சைகை காட்டினீங்களே..?” என்று வேற கேட்டவன்,  லதாவின்
மேல் மூச்சை, கீழ் மூச்சை பார்த்தவாறே விசிலடித்துக்கொண்டு செல்ல,
“பாவி.. நல்ல்லா பிளான் செஞ்சு என்னை போட்டு கொடுத்துட்டான், ஆனா
எதுக்கன்னு தான் தெரியல..?” என்றவாறே மனைவியை பார்த்தவன், கையில்
கரண்டியுடன் நின்ற மனைவியை பார்த்து, அரண்டே விட்டான்.

Advertisement