Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 26  { PREFINAL  1 }
அஞ்சலியின் பேச்சில்  கோவப்பட்டு  கத்திவிட்டு வந்த கதிருக்கு  மனதே
ஆறவில்லை. “அவளே அவ காதலுக்காக ஒண்ணுமே  செய்யாம லண்டன் போயிட்டா.. ஆனா
நான் அவளுக்காக… அவளுடைய காதலுக்காக என்ன என்ன செஞ்சிருக்கேன், எத்தனை
பிரச்சனை, எத்தனை சண்டை..”,
“ஏன் கடைசி.. கடைசில அம்மாகூட அவங்க ஆசைப்பட்ட,  என் கல்யாணத்தை
பாக்கமுடியாம எவ்ளோ வேதனைபட்டாங்க.  அப்படி எல்லாத்தையும்
தாங்கிக்கிட்டு, சமாளிச்சு இந்த மூணு வருஷமா இவளுக்காகவே காத்திருந்து
இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா..?,
இவ  என்கூட வாழவரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா, இதுதான் இவகாதலா..?
நான் என்ன சொல்ல வரேன்னு கூட பொறுமையா கேட்கமுடியல,
ஏன் என் கேரக்டர் இவளுக்கு தெரியாதாமா..? என்னைக்கு நான் பிரச்சனைக்குள்ள
பொண்ணுங்களை கொண்டு வந்திருக்கேன், எதோ பழிவாங்கத்தான் இவளை கல்யாணம்
செஞ்சிக்கிட்ட மாதிரி என்னமா நம்புறா,
என்னை பத்தி தெரியாமத்தான் இவ என்னை இத்தனை வருஷமா லவ் பண்ணலாமா..?
என்று மனதுக்குள் கொதித்தவனின் நேர்மையான கோவம் அஞ்சலிக்கு புரியாமல்
போனது,
அங்கு அஞ்சலியின் கோவம் எல்லாம்.. “என் காதல் தெரிஞ்சும் எப்படி இவர்
இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க போலாம்..? அப்படி அந்த பொண்ணு மட்டும்
அன்னிக்கு அங்க இருந்திருந்தா, இவர் அந்த பொண்ணை தானே கல்யா..!!?”  என்று
அதற்கு மேல் நினைக்க கூட முடியாமல் அவளின் மனம் அதிலே உழன்றது. முதலில்
எப்படியோ ஆனால், இப்போது இருவரும் கணவன்.. மனைவி எனும்போது, அவளால்
அவளின் கணவனின் செயலை ஏற்று கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல
வேண்டும்,
அதிலும் கதிர் கேட்ட, “உன் காதலுக்கு நீ என்ன செஞ்ச..?”ன்ற கேள்வி,
அவளுக்கு கோவத்தையும் தாண்டி கண்ணீரை தான் வரவழைத்தது, “என்னால என்ன
செஞ்சிருக்க முடியும்..? நான் போய் இவர்கிட்ட என் காதலை சொல்றதா..?”
“அது என்னால முடியுமா..? என்னோட காதலுக்கு..  இந்த பகை, இனம், கட்சி
எல்லாம் தெரியாது, புரியாதுதான், ஆனாலும் இவர் என்னோட எதிரி குடும்பத்து
பையன்தானே, அப்படி இருக்கிற இவர்கிட்ட  போய் என்னோட காதலை நான்
சொல்றதா..?
இதுல நான்  இவர் எதிர்ல வந்தா கூட  பாக்கமா,  ஒதுங்கிதான் போவார், அவர்
அப்படி செய்யாம எதோ என்னை கொஞ்சம் ஆர்வமா பாத்திருந்தா கூட எனக்கு
அவர்கிட்ட காதலை சொல்ற தைரியம் வந்திருக்கலாம்,
ஆனா..  என்னை ஒரு பொண்ணா கூட பாக்காம ஒதுங்கி போற ஒரு ஆண்கிட்ட போய் நான்
என் காதலை முதல்ல சொல்றதா..? அப்படி சொல்லி அவர் ஏத்துக்கிட்டாலோ, இல்ல
டீசண்டா மறுத்துட்டா கூட பரவாயில்லை,
ஆனா  இப்போ இவர்,  “எந்த நம்பிக்கையில நீ என்னை காதலிச்சன்னு..?” கேட்டது
போல அப்போ கேட்டிருந்தா, நான் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்..?
இப்போ அவர் என் புருஷனா இருக்கறப்பவே என்னால எந்த பதிலும்  சொல்ல முடியல,
அப்போ  என்ன சொல்லி என் காதலை புரியவைச்சிருக்க  முடியும்..? அப்படி
புரியவச்சா அது காதலாகுமா..? காதல் ஓரு உணர்வு தானே, அதை புரியவைக்க எந்த
மொழியால முடியும்..?
“அது எல்லாம் புரியாம எதோ என்னை பெருசா கேள்வி கேட்கிறார், என் கஷ்டம்
இவருக்கு என்ன தெரியும்..?” என்று அஞ்சலியும் அவள் பக்க  நியாயத்தை
நினைத்து அழுதாள்.
இருவருமே அவரவர் பக்க நியாயங்களில் சரிதான். ஆனால் இருவருமே அவரவர்
நியாயத்தை மற்றவருக்கு புரியவைக்க தவறினர். அதுதான் இங்கு பிரச்சனையானது.
“அஞ்சலி.. எப்போ ஊருக்கு வரபோற..?” என்ற மீனாட்சியின் குரலில் தெரிந்த
கோவத்தில் தயங்கியவாறே,
“இன்னும் ரெண்டு நாள் ஆகும்ம்மா.”,
“என்ன இன்னும் ரெண்டு நாளா..? என்ன விளையாடுறியா..? நீ டெல்லி போய் ஒரு
வாரம் ஆகப்போகுது, இதுல இன்னும் ரெண்டு நாள் ஆகும்ன்னு சொல்லிட்டிருக்க,
ஒழுங்கு மரியாதையா இப்பவே கிளம்பி ஊருக்கு வர..”, என்று அதிகாரத்தோடு
சொன்னார்.
“ம்மா.. கடைசி  ரெண்டு நாள் தான்  முக்கியமான செமினார்  எல்லாம்
இருக்கும், இப்போ போய் கிளம்பி வரச்சொன்னா எப்படிம்மா..?”
“அப்போ நீ கடைசி ரெண்டு நாளே போயிருக்க வேண்டியதுதானே, அதுக்கு எதுக்கு
ஒரு வாரத்துக்கு முன்னாடியே போன..?”
 “ம்மா.. நான் சொல்றதை கொஞ்சம்  கேளுங்க..”
 “அஞ்சலி.. அஞ்சலி.. முதல்ல நான் சொல்றதை நீ கேளு, நீ முன்னமாதிரி தனி
மனுஷி கிடையாது, இங்க உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, உன் புருஷன்,
உன் மாமனார் எல்லாம் இருக்காங்க,  நீ அவங்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடமா
இப்படி ஏதோ ஒரு செமினாருக்கு டெல்லியில போய் உக்காந்திருக்க”,
“உன்கிட்ட இருந்து நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அஞ்சலி, கடைசியில
என் வளர்ப்புதான் தப்பா போச்சு போல, நீயும் உன் அண்ணன் மாதிரியே சுயநலமா
தான் இருக்க.. கடவுளே..  நான் என்ன செய்ய..? ஏது செய்ய..?” என்று ராகம்
இழுக்க ஆரம்பித்துவிட்டார்.
“ம்மா.. ப்ளீஸ்ம்மா தயவு செஞ்சு ஆரம்பிக்காதா, இப்போ என்ன நான் ஊருக்கு
வரணும்ன்னு அவ்வளவுதானே,  வரேன் போதுமா..?”
 “எப்போ கிளம்புற..? எப்படி வர..? நான் வேணும்ன்னா அசோக்கிட்ட சொல்லி
பிளைட் டிக்கெட் போடவா..?” என்று வரிசையாக கேள்விகள் கேட்க,
“ம்ம்மா.. நான் பாத்துக்கிறேன், நீங்க வைங்க..” என்று கடுப்படிக்க,
“இப்போ வைக்கிறேன்.. ஆனா  திரும்பி அரைமணி நேரத்துல  கூப்பிடுவேன்”,
“ஏன் திரும்பி கூப்பிடுவீங்க..?
ம்ம்.. அது அப்படித்தான், நீ பிளைட் ஏற்ரவரைக்கும் கூப்பிட்டுக்கிட்டே
தான் இருப்பேன்..”
“ம்மா.. நான் இன்னும் சின்ன பொண்ணு இல்லை. முன்னதான் என்னை இப்படி
படுத்துனீங்கன்னா, இப்போவோமா..?”
“எப்பவும் நான் அப்படித்தான், அதனால் என்கிட்ட சண்டை போடறதை விட்டுட்டு
கிளம்புற வழிய பாரு.. “என்றபடி வைக்கவும்,
“ம்மா..” என்று பல்லை கடித்தவளுக்கு மீனாட்சியை விட கதிர்மேல் தான்
ஆத்திரம் அதிகமாக வந்தது,
“என்னமோ நான் அங்க இல்லாம, அவங்க மாப்பிள்ளை ரொம்ப கஷ்டப்படற மாதிரி
என்னமோ கோவப்படறாங்க, நான் அவர்கிட்ட சண்டை போட்ட நாள்லருந்து என்
முகத்தை கூட பாக்காம தான் ஒதுங்கி போறார்”,
“அப்படி இருந்தும் நான் என் கோவத்தை எல்லாம் தள்ளி வச்சிட்டு அவருக்கு
தேவையானதை செஞ்சாலும்  கண்டுக்காம யாரோமாதிரிதான் இருக்கிறது, என்னமோ
நாந்தான் தப்புங்கிற மாதிரியே முறுக்கிட்டு  இருக்கார்”,
“அவ்வளவு ஏன் நான் டெல்லிக்கு  வந்து கூட ஒரு வாரம் ஆச்சு,
இப்போவாரைக்கும் அவரா எனக்கு போன் செஞ்சு பேசவே இல்லை,   நானேதான் மனசு
கேட்காம அவருக்கு போன் செஞ்சு பேசுறேன், அப்பவும் ரெண்டு வார்த்தைக்கு
மேல பேசறதில்லை”
“இருக்கட்டும், இப்படியே இருக்கட்டும், எதோ நான்தான் தப்புங்கிற மாதிரி
என்கிட்ட கோவப்பட்டு பேசாம இருந்தா அவர் செஞ்சது சரின்னு ஆகிருமா..?
போனமுறை மாதிரி இந்தடைம்  நான் அவர்கிட்ட இறங்கி போய் பேசமாட்டேன்,
இந்தடைம் அவர்துதான் தப்பு..”,  என்று தானும் முறுக்கி கொண்டாள்.
இப்படியே இருவரின் கோவத்திலும் இரண்டு வாரம் போக, “அவள் இந்த வாரம்
அவருடன் டெல்லி வரவேண்டும்..” என்று ஹெட் டாக்டர் சொல்ல, இப்போதுள்ள
சூழ்நிலையில் போகத்தான் வேண்டுமா..? என்று யோசித்தவள், தன் கோவத்தை தள்ளி
வைத்துவிட்டு கணவனிடமே கேட்டாள்.
“ஹாஸ்பிடல் சார்பா ஹெட் டாக்டரோட கான்பிரஸுக்காக டெல்லி போகணும்..” என்று
அன்றிரவு படுக்க போகுமுன் கேட்டதுக்கு, “உன்னிஷ்டம்..”ன்னு சொல்லிட்டு
எனக்கெனன்னு படுத்து தூங்கிட்டார்,
“நான்தான் அன்னிக்கு முழு நைட்டும் கோவத்துல தூங்காம உட்காந்திருந்தேன்,
அதென்ன எப்போ கோவம் வந்தாலும், இப்படி என்னை மொத்தமா ஒத்துக்கிடறார்,
இல்லாட்டி,   என்னை எல்லாத்துக்கும் தாங்கிட்டு இருக்கிறது”,
“இதுதான் இவரோட கோவத்தை காண்பிக்கிற முறையா..? எல்லா நேரமும் சொல்ல
முடியாத அளவு பாசத்தை, கேரை காட்டிட்டு, கோவம் வந்தா மட்டும் மொத்தமா
தள்ளி வச்சா எப்படி வலிக்கும்ன்னு இவருக்கு கொஞ்சமாவது தெரியுமா..?”
என்று அன்றிரவு முழுவதும் கோவப்படுவதும், அழுவதுமாகவே தான் இருந்தாள்.

Advertisement