Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25
கதிருக்குமே..  “அஞ்சலி தன் காதலை ஒப்புக்கொண்டது அதிர்ச்சி கலந்த
ஆச்சரியம் தான், இன்றும் ஏதாவது சொல்லி தப்பிக்கத்தான் பார்ப்பாள்.!!”
என்று நினைத்தபடியே தான் அவளை தூண்டி விடுவது போல் பேசினான்,
ஆனால்.. அவன் எதிர்பாராவிதமாக அஞ்சலி அவளுடைய  காதல் சொல்லிவிட,
இவ்வாய்ப்பை விடாத கதிர் மனைவியிடம்,
“உன்னால எப்படி என்னை.. எனக்கே தெரியாம காதலிக்க முடிஞ்சது..? அதுவும்
ஒரு எதிரி குடும்பத்தை பையனை எந்த நம்பிக்கையில் நீ காதலிச்ச அஞ்சலி..?”
என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டான்.
அஞ்சலியால் கதிர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாமல் போக,
இயலாமை கலந்த வலியுடன் கைகளில் முகம் புதைத்து கதறினாள். “அவருக்கு என்
காதல் தெரிஞ்சிருக்கு, என் காதல் நல்லாவே தெரிஞ்சிருக்கு..” என்ற இத்தனை
நாள் சந்தேகத்துக்கான பதில், கிடைக்க, இன்னும் இன்னும் அழுதாள்.
“அஞ்சலி..  பதில் சொல்லு, எனக்கு உண்மையிலே புரியல, என்னை எப்படி நீ  லவ்
பண்ண, எனக்கு தெரிஞ்சு நானும் நீயும் நேருக்கு நேரா பாத்துக்கிட்டது கூட
கிடையாது, அப்படி இருக்கும் பொது உனக்கு  எப்படி என்மேல் லவ் வந்துச்சு,
சொல்லு அஞ்சலி..”  என்று மனைவியின் பதிலுக்காக காத்திருந்தான்,
“அவனின் கேள்விகள்..? அஞ்சலியின் கேள்விகள் அல்லவா..? அவளும் தானே இத்தனை
வருடங்களில் நான் ஏன் அவரை காதலிக்கிறேன் என்று தினம் தினம் அவளுள்..
அவளே கேட்டு கொள்பவள் ஆயிற்றே, அப்படி இருக்கும்போது அவளால் எப்படி
கதிரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியும்..?”
“அஞ்சலி.. நான் உன்கிட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன், எனக்கு பதில்
சொல்லு, நான் உன்னை எந்தவிதத்திலும் நெருங்கனதே இல்லை,  ஏன் நான் உன்னை
சைட் கூட அடிச்சது கிடையாது, அவ்வளவு ஏன் உன்னை தூக்கிட்டு வந்தப்போதான்
உன் முகத்தையே நான் முதன் முதலா நல்லா பாத்தேன்”, என்று கதிர் சொல்ல,
அஞ்சலிக்கு கண்ணீர் இன்னும் இன்னும் தான் பெருகியது. “உன்னை சைட் கூட
அடிக்காத என் மேல் உனக்கெப்படி காதல் வந்துச்சு..” என்று ஒரு ஆண்
கேட்கும் கேள்விக்கு ஒரு பெண்ணால் என்ன பதில் சொல்ல முடியும்..?
அந்த கேள்வி ஒரு பெண்ணின் ஆழ்மனதை எந்தளவு காயப்படுத்தும்..!!?? என்று
தெரியாமல் கேட்கும் கதிரின் மேல்.., கதிர் மேல் தான் கொண்ட காதல் மேல்..
அஞ்சலிக்கே கோவம் தொன்ற ஆரம்பித்தது.
அவனின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்  கைகளில் முகம் புதைத்து அழுது
கொண்டிருக்கும் மனைவியின் கைகளில்லிருந்து முகத்தை நிமிர்த்தி தன்
கைகளில் ஏந்தி கொண்டவன், அவளின் கண்ணீர் மிதக்கும் கண்களை பார்த்தபடியே,
“ஏன் அஞ்சலி இப்படி..?” என்று உள்ளுக்குள் ஊடுருவது போல் அழுத்தத்துடன் கேட்டான்.
காதல்.. இந்த ஓர் வார்த்தை..!!!  இந்த ஓர் வார்த்தைக்கு  எதிரி, நண்பன்,
இனம், மதம் எதுவும் கிடையாதே, அப்படி இருக்கும்போது,  நீ ஏன்  என்னை
காதலிச்ச..? என்ற கதிரின் கேள்வியே தப்பல்லவா..? காதலுக்கு எந்த
நம்பிக்கை வேண்டும்..?, எந்த அடிப்படை வேண்டும்..? அது உயிருக்குள்
ஊடுருவும்  இன்னொரு உயிர் அல்லவா..? அந்த உயிருக்கு எந்த நம்பிக்கை
வேண்டும்..?
கதிரின் தொடர் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் நின்ற அஞ்சலிக்குள் ஒரே ஒரு
கேள்விதான் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது. “இவருக்கு எப்போ..?
எப்படி..? என் காதல் தெரியும்..?” என்ற கேள்விதான், அதையே கணவனிடம்
கேட்க,
“ம்ம் தெரியும், மூணு வருஷத்துக்கு முன்னாடி..” என்று சொன்ன கதிரை
அதிர்ச்சியுடன் பார்த்தவள்,
“எப்படி..? யார்..? யார் சொன்னாங்க..? அண்ணனா..?”
“ம்ஹூம் நீதான் சொன்ன..”
“நானா..? நான் எப்படி..? இல்லையே..?’ என்று கலக்கத்துடன் யோசித்தவளின்
இடைய வளைத்து தன் எதிரில் நிறுத்தியவன்,
“உன்னோட காதல் தான்..!!!  எனக்கு உன் காதலை சொல்லிச்சு..” என்று சொன்னவனை
குழப்பத்துடன் பார்த்தாள்.
“மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னோட பர்த்டே அன்னிக்கு நீ அம்மன்
கோவிலுக்கு வந்திருந்தயே   ஞாபகம் இருக்கா..?”
“ம்ம்.. “  என்று தலையாட்டியவளின் மனதில், கதிருக்கு திருமணம் என்று
கேள்விப்பட்டு, லண்டன் செல்லுமுன் கடைசி முறையாக ஊருக்கு வந்திருந்த போது
கதிரின் பிறந்த நாள் என்று, எல்லா வருடமும் போல் அந்த வருடமும் அம்மன்
கோவிலுக்கு சென்றிருந்தாள்,
அங்கு அப்போது கதிரும் அவனின் அம்மாவின் வற்புறுத்தலுக்காக
வந்திருந்தான், அதை நினைத்து பார்த்தவளிடம், கதிர் அவளின் காதலை எப்படி
தெரிந்துகொண்டான் என்று சொல்ல ஆரம்பித்தான்,
அன்று கோவிலில் கதிருக்கு  ஸ்வேதா திருநீறு வைத்தபின்,  கிளம்பியவனிடம்
தெரிந்தவர் ஒருவர் பேச ஆரம்பிக்க, தானும் நின்று பேசியவனின் முன் எல்லா
கோவிலிலும் மாட்டபட்டிருப்பது போல் அங்கும் பெரிய சைஸ் கண்ணாடி
மாட்டப்பட்டிருந்தது,
அந்த கண்ணாடி மேலே கட்டப்பட்டிருக்க, கதிரால் தனக்கு பின்
நின்றிருந்தவர்களை நன்றாக பார்க்க முடிந்தது, ஆனால் அவனுக்கு பின் சிறிது
தூரத்தில் நின்றிருந்த அஞ்சலிக்கு அந்த கண்ணாடியில் தெரியும் தன் பிம்பம்
தெரியாமல் போனது. அதனாலே அன்று அவளின் பார்வையை கண்டு கொண்டான்.
அன்று மொத்தமாக லண்டன் செல்லும் முடிவில் இருந்த அஞ்சலி,  இன்றோடு உலகம்
முடிவது போல், எல்லையில்லா காதலை கண்ணில் தேக்கி, கண்களில் கண்ணீர்
நிறைய..  உச்சி முதல் பாதம் வரை தன்னவனை தன்னுள் சேமித்து
கொண்டிருந்தாள்.
அந்த பெரியவரிடம் பேசியபடியே எதேச்சையாக கண்ணாடி பார்த்தவனுக்கு,
அஞ்சலியின் காதல் கண்ணீர் புரிய ஷாக்கடித்தது போல் அதிர்ந்தவன், “ஒருவேளை
தான் தான் தவறாக புரிந்து கொள்கிறோமோ..?” என்று தன்னயே நம்பாமல் மேலும்
நன்றாக பார்க்க..  பார்க்க..,
அவளின் காதல் தவிப்பு புரிய, அதிர்வு மறைந்து கோவத்தில் உடல் இறுகியவன்,
சட்டென்று அந்த கண்ணாடி முன்னிருந்து வேகமாக நகர்ந்தவன், புல்லட்டை
எடுத்து கொண்டு நேரே தன் பார்மிற்கு வந்துவிட்டான்,
அவனால் அஞ்சலியின் காதலை சுத்தமாகவே நம்பமுடியவில்லை, இந்த பொண்ணு நம்மளை
லவ் பண்ணுதா..? ஆனா எப்படி..? நான் அந்த மாதிரி எதுவும் செஞ்சதில்லயே..?
இல்லை ஒருவேளை நான்தான் அந்த பொண்ணு லவ் பண்ணுதுன்னு  தப்பா
நினைச்சிக்கிட்டீனா..?
ஆனா அந்த பொண்ணு கண்ணுல, முகத்துல அந்த காதல் நல்லா தெரிஞ்சுதே,
இருக்காது.. இருக்காது, அந்த பொண்ணும், நானும் இப்போவரை  நேருக்கு நேரா
பாத்துக்கிட்டது கூட  கிடையாது, அப்பறம் எப்படி..?
“ஒருவேளை அந்த பொண்ணு  கோவில்ல வேற யாரையாவது பாத்திருக்குமோ..? நாந்தான்
என்னை பாக்குதுன்னு தப்பா நினைச்சிட்டினோ..?” என்று பல கேள்விகளால்
சந்தேகத்தில் திண்டாடி கொண்டிருந்தவனை,
உறுதி செய்யும் பொருட்டு  அஞ்சலியே பார்ம் அவுஸிற்கு வெளியே வர, CCTV
கேமரா மூலம் பார்த்தவனுக்கு அந்த வெஸ்பா அஞ்சலியை காட்டி கொடுத்தது,
ஏனெனில் அசோக் அந்த வெஸ்பாவை அஞ்சலிக்காக வாங்க சென்றிருந்த போது,
அவனும்தான் அன்று உடன் இருந்தான், அதனாலே அஞ்சலி முகத்தை கட்டியிருந்த
போதும், அந்த ஸ்கூட்டியை வைத்து கண்டு கொண்டான்,
“இவ ஏன் இங்க வந்தா..? என்னை பாக்கத்தான் வந்திருக்களோ..? அப்பறம் ஏன்
வெளியவே நிக்கிறா..?” என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.  அஞ்சலி
ஒரு மணி நேரம் கடந்தும் அந்த வெயிலில்  வெளியவே சுற்றினாளே தவிர, உள்ளே
வராமல் போக, அவன் தான் ஒரு பெண்மணியை அனுப்பி, என்னவென்று கேட்டு வர
செய்தான்,
அந்த பெண்மணி பூசாரி  கொடுத்தாக சொல்லி, அவன் எப்போதும் கட்டும் சாமி
கயிறை அஞ்சலி கொடுக்க சொன்னதாக சொல்லி கொடுத்தார், அந்த கயிறை தன் கையில்
வாங்கிய கதிர், CCTVயில் வெளியவே நின்று தன் பார்ம் அவுஸை பார்த்து
கொண்டிருக்கும் அஞ்சலியியை பார்த்தான்.
“இந்த கையிறை என்கிட்ட கொடுக்கவா  இவ இவ்வளவு நேரம் இந்த வெயில்ல
சுத்திட்டு இருந்தா..?”  என்று புரிந்து கொள்ளா உணர்வோடு செல்லும் அவளை
பார்த்தவனுக்கு  அப்போதுதான் வேறொன்றும் ஞாபகத்திற்கு வர, அன்றிரவே
அதையும் சோதித்து அஞ்சலி தன்னை காதலிப்பதை உறுதியாக கண்டுகொண்டான்,
எப்போதுமே கதிர் இரவு அவர்களின் மில்லிற்கு சென்று விட்டு அங்கிருந்து
அஞ்சலியின் வீட்டு வழியாகத்தான் அவர்களின் வீட்டுக்கு செல்வான், அப்படி
செல்லும் பல நேரங்களில் அசோக்கின் வீட்டிலிருந்து  யாரோ தன்னை கூர்ந்து
கவனிப்பதாக தோன்றும்,
இதுவரை அதை அசட்டையாக எடுத்தவனுக்கு, இப்போது அதுஏன் அஞ்சலியாக இருக்க
கூடாதென்ற சந்தேகம் உண்டாக, அன்று எப்போதும் செல்லும் நேரத்தில்
அவர்களின் வீட்டுக்கு எதிரில் உள்ள மரத்துக்கடியில் நின்று அசோக்கின்
வீட்டை பார்த்தான்,
அங்கு அஞ்சலி அவளின் ரூரூமில் உள்ள ஜன்னல்  திண்டில் அமர்ந்தபடியே ரோடை
பார்த்து கொண்டிருப்பது தெரிய, கதிரும் அங்கேயே நின்று அஞ்சலியை கவனிக்க
ஆரம்பித்தான்,
வெகுநேரம் கடந்த பின்னும் அங்கேயே இருந்தவள், நேரத்தை பார்ப்பதும்,
ரோட்டை பார்ப்பதுமாக இருக்க, கதிருக்கு அவள் தன்னை தான்
எதிர்பார்க்கிறாள் என்று நன்றாக புரிந்தது,
நடுஇரவு  ஆகியும் அங்கிருந்து ஒரு இன்ச் கூட அசையாமல் வழியை பார்த்தபடியே
அமர்ந்திருந்தவள், தான் வராமல் போகவும் அவள் மடியில் முகம் புதைத்து
அழவும்,
 அவளின் அழுகையை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ..?, வேகமாக வண்டியை
எடுத்தவன் ஹார்ன் அடித்தபடியே,  மெதுவாக அவ்விடத்தை கடக்க, தன் ஹார்ன்
சத்தத்தில்  வேகமாக முகம் நிமிர்ந்த அஞ்சலி, கண்ணீரோடு தன்னை பார்ப்பது
புரிந்தது.
“இப்படித்தான் உன் காதலை தெரிஞ்சுகிட்டேன்”,  என்று கதிர் சொல்ல சொல்ல
கேட்டிருந்த அஞ்சலிக்கு, பூமியே தலைகீழாக சுழல்வது போல் இருந்தது.
“இந்த இரண்டு மாதமாக தான் எப்படி.. எப்படியோ..?, யார்..  யாரையோ..?
நினைத்து குழம்பி கொண்டிருக்க, இறுதியில் தன்னாலே.!!!  தன் காதல்
கதிருக்கு தெரிந்திருக்கிறது”.
“அதுவும் மூன்று வருடங்களுக்கு முன்பே, அப்போது அவனுக்கு திருமணம் வேறு
நிச்சயிக்க..” என்று தோன்றும் போதே, அஞ்சலிக்குள் திடீர்  கோவம்
கொப்பளிக்க,  வேகமாக கணவனின் கையிலிருந்து தள்ளி நின்றவள், அவனை
முறைத்தபடியே,
“அப்போ உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே என் காதல் தெரிஞ்சிருந்தும் நீங்க
கல்யாணம் செஞ்சிக்க ரெடியா இருந்திருக்கீங்க..?”, என்று திடீர் கோவத்தோடு
கேட்டவளை புரியாமல் பார்க்க, அவளோ தொடர்ந்து
“அந்த பொண்ணு மட்டும் அன்னிக்கு அங்க இருந்திருந்தா..  நீங்க அந்த பொண்ணை
கல்யாணமும் செஞ்சிருந்தீப்பீங்க இல்லை..?’, என்று ஆத்திரமாக கேட்டாள்,
அவளின் கேள்வி புரியவும்,
“எதோ தான் தப்பு செய்தது போல்..” தன்னை கேள்வி கேட்கும் மனைவியை நக்கலாக
பார்த்தவன்,
“ஆமா.. ஆமா நீ என்னை கேள்வி கேட்கிறது சரிதான், ரொம்ப சரிதான், பின்ன
நானும் நீயும் சேர்ந்து வருஷக்கணக்கா லவ் செஞ்சோம்..”,
“ஆனா பாரு  கடைசியில நான்  உன்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு
ஏமாத்திட்டு,  அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க ரெடியா இருந்தேன், அதுக்கு
நீ என்மேல் கோவப்பட்டு..  என்கிட்ட  நியாயம் கேட்கிறது சரிதான்..” என்று
ஏற்ற இறக்கதோடு நக்கல் தெறிக்க சொன்னவனை வெறித்து பார்த்த அஞ்சலியால்,
“ஏனோ  தன் காதல்  தெரிந்தும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய மணமேடை வரை
சென்ற கணவனின் செயலை  சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை”.
“அப்படி எப்படி அவர் கல்யாணம் செஞ்சுக்க போலாம்..?, அவர் கல்யாணம்
தெரிஞ்சு நான் எவ்வளவு துடிச்சேன், அவரை மறக்க முடியாம ஒவ்வொரு நொடியும்
எவ்வளவு வேதனை பட்டிருப்பேன்”,
“அவ்வளவு ஏன், கல்யாணமான இவரை வேறுஒரு பொண்ணு கூட பார்க்க
முடியாமல்தானே..  மூணு  வருஷம் இந்த ஊரை விட்டும் ஓடி போனேன், ஆனா
இவர்..? இவர் என் காதல் தெரிஞ்சும் கல்யாண மேடை வரை போயிருக்கார்..”
என்பதை அஞ்சலியால் ஏற்று கொள்ளவே முடியவில்லை,
அப்போதும் அவளின் “நியாய மனசாட்சி” விழித்துகொண்டு, “உன் எண்ணம், கோவம்
எல்லாம் தப்பு, நீ அவரை ஒன் சைடா லவ் பண்றதுக்கு, அவர் ஏன் அவர்
கல்யாணத்தை நிறுத்தணும், உனக்கும் அவருக்கும் என்ன இருக்கு..? நீ இப்படி
கோவப்படுறது ரொம்ப தப்பு..” என்று அறிவுரை கூற,
“அஞ்சலியின் காதல் மனதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. நீ என்ன
சொன்னாலும் அவர் செஞ்சது தப்பு தான்”, என்று அதிலே நின்றவள். கணவனிடம்
தன் கோவத்தை காட்டவும் தவறவில்லை.
அஞ்சலியின் கோவத்தில், தானும் கோபம்கொண்ட கதிர், “அடுத்து தான் சொல்ல
வந்ததை சொல்லாமல் நிறுத்தியவன்..!!??”,
“நான் உன் காதல் தெரிஞ்சும், கல்யாணம் செஞ்சிக்க போனது இருக்கட்டும், நீ
முதல்ல உன் காதலுக்காக  என்ன செஞ்ச..?” என்று நக்கலுடன் கேட்டான்,
“அது.. அது நான் என்ன செய்யணும்..? என்னால என்ன செய்ய முடியும்..? அப்படி
எதுவும் செய்ய முடியாதே..?” என்று கண்களில் நிராசை மின்ன சொன்னவளின் வலி
கதிருக்கு புரியாத்தான் செய்தது,
ஆனாலும் “மனைவியின் நியாயமற்ற குற்றசாட்டு..!!?”, அவனை மேலும் பேச தூண்டியது.
“என்ன..? உன்னால எதுவும் செய்ய முடியாதா..? ஏன் நீ லவ் பண்ற என்கிட்ட
கூடவா வந்து  உன் காதலை சொல்ல முடியாது..?”
 “என்னது..? உங்ககிட்ட என் லவ்வை சொல்றதா..? அதெப்படி என்னால முடியும்..?”
 “ஏன் முடியாது..? என்கிட்ட லவ்வை சொல்றதுல என்ன தப்பு இருக்கு..?”,
“நானே எப்படி வந்து உங்ககிட்ட என் லவ்வை சொல்ல முடியும்..?, இத்தனைக்கும்
நீங்க என்னை எதிர்ல வந்தா கூட பாக்கமாட்டீங்க”,
“ஊர்ல இருக்க அத்தனை பொண்ணையும் சைட் அடிப்பீங்க,ஆனா என்னை சும்மா கூட
பாக்கமாட்டீங்க, அப்படி இருக்கிற உங்ககிட்ட வந்து நான் என் லவ்வை
சொல்றதா..?”  என்று,  இன்றும் அவன் தன்னை பாக்காத கோவத்தை காட்டினாள்.
“ஏய்..  நீ சீனியரோட தங்கச்சிடி, உன்னை போய் நான் சைட் அடிக்கிறதா..?”
“ஏன் உங்க சீனியரோட தங்கச்சின்னா சைட் அடிக்க கூடாதா..?” என்று கடுப்பாக
நொடித்தவளை,
“ம்ஹூம்.. சைட் அடிக்க கூடாது தான்..!!!??”, என்று உறுதியாக சொன்னவன்,
தொடர்ந்து கோபத்துடன், “நீயே உன் காதலுக்கு எதுவும் செய்யாதப்போ..  என்னை
கேள்வி கேட்க உனக்கு என்ன இருக்கு..? வந்துட்டா பெருசா பேச போடி..” என,
“சும்மா சும்மா அதையே சொல்லாதீங்க, என்னால எதுவும் செய்ய முடியலதான்,
ஒத்துக்கிறேன், ஆனா நான் ஒன்னும் உங்களை மாதிரி இல்லை”, என்று
“அவன் தான் எதோ தப்பு செய்தது போல்..!!?” மறுபடியும் சொன்னவளை, வெறித்தவன்,
“ஓஹ்.. அப்போ நான் செஞ்சிருக்கணும் நீ எதிர்பாக்கிற..?, உன் காதல்
தெரிஞ்சவுடனே என் கல்யாணத்தை நிப்பாட்டிட்டு உன்னை கல்யாணம்
செஞ்சிருக்கணுமா..? இதுதான் உனக்கு வேணுமா..?” என்று கோபத்துடன்
கேட்டவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறியவாறே நின்றவளை,
மேலும் பேச செய்தான்,
“என்னமோ இந்த உலகத்திலே உன் காதல் தான் எல்லாத்தையும் விட ரொம்ப
பெருசுங்கிற மாதிரி பேசுற, ஆனா என்னை பொறுத்தவரைக்கும் உன் காதல்
அப்படியொண்ணும் இல்லைன்னு தான் சொல்வேன்”. என்று அவளின் காதலை
கேள்விக்குறியாக்கியவனை, ஆத்திரம் கொண்டு பார்த்தவள்,
“நீங்க என்னை பத்தி எதுவேனும்னாலும் பேசுங்க, ஆனா என் காதலை பத்தி சொல்ல
உங்களுக்கு எதுவும் கிடையாது..” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
கத்தவே செய்தாள்,
“ஏன் சொல்லக்கூடாது..?  உனக்கு  முதல்ல காதல்ன்னா என்ன தெரியுமா..?”
என்று அவளுக்கு மேல் கத்தியவன்,
“நம்பிக்கை.. அதுதான் காதலோட முதல் படி.. அந்த நம்பிக்கை உன்கிட்ட இருக்கா..?”
“நான் என்ன நம்பலை..?” என்று சிறிது உள்ளே போன குரலுடன் கேட்க,
“நீ என்னை நம்புறியா..? எப்படி நான் பழிவாங்கதான்  உனக்கு தாலி
கட்டினேன்ன்னு நீ உறுதியா நம்பறயே அந்த  நம்பிக்கையாவ சொல்ற..? என்று
எகிரியவன்
“அது மட்டுமா..?  நான் கட்டின தாலியை எல்லார்கிட்டயும் இருந்து மறைச்சு,
என்கூட வாழவரமட்டேன்னு சொன்னவதானே நீ..!?”,
“எதோ உங்க அப்பா கண்டிஷன் போடவும், வேற வழி இல்லாம தானே என்கூட சேர்ந்து
வாழவந்திருக்க…  இதுதான் உன் காதலா..? இந்த காதலுக்காக தான் என்னை நீ
கேள்வி கேட்கிறியா..? போடி..”  என்று கத்தியவன் வெளியே சென்றுவிட,
கணவனின் கேள்வியில்..? கோவத்தில்..? பதில் பேசமுடியாத அஞ்சலி அமைதியாக
நின்றுவிட்டாள்.

Advertisement