“அஞ்சலி.. இன்னைக்கு நீ டியூட்டிக்கு போகவேண்டாம்மா..” என்று மாறன் காலை உணவின்போது சொல்லவும், ஏனென்று தெரியாமல் மாமனாரை பார்த்தவள், பின் கேள்வியாக கணவனை பார்த்தாள், அவனும் தந்தையை யோசனையாக பார்த்தவாறே,
“ஏன்ப்பா..?” என்று கேட்டான்,
“இன்னைக்கு உங்க அண்ணன்களை வரசொல்லியிருக்கேன்”, என்று சொல்ல,
“அவங்களை ஏன்ப்பா..?”
“அவங்களை மட்டுமில்லை, நம்ம பக்க பெரிய தலைகளையும், போலீஸையும் கூட வரசொல்லியிருக்கேன்”
“போலீஸா..? ஏன்ப்பா ஏதாவது பிரச்சனையா..?” என்று புரியாமல் கேட்ட மகனை பார்த்த மாறன்,
“இனியும் எந்த புது பிரச்சனையும் வராம இருக்கத்தான் அவங்களை எல்லாம் வரசொல்லியிருக்கேன்”, என்று வேதனையுடன் சொன்ன தந்தையின் மனப்போக்கை புரிந்து கொண்டவன்,
“எனக்கென்னமோ நாம அவசரப்படுறோமோன்னு தோணுதுப்பா, இதை இப்போ செய்ய வேண்டாமே..?” என்று கேட்டான்,
“ம்ஹூம்.. இல்லை கதிர் இதுவே லேட், இன்னும் முன்னமே செஞ்சிருக்னும், புள்ளை பாசத்திலும் நானும், அண்ணனுங்க பாசத்துல நீயும் யோசிச்சதடோ விளைவு தான், திருவிழாப்ப உனக்கு நடந்தது”,
“இனியும் அவங்களை பிடிச்சு வைக்கிறதுலயும், விட்டு வைக்கிறதிலும் எந்த பிரயோஜனுமும் இல்லை, அவங்க நம்ம கைமீறி ரொம்ப தூரம் போயிட்டங்க”, என்று ஒரு தந்தையாக தோல்வியை உணர்ந்த மாறன் எல்லையில்லா மனவருத்தத்தோடு சொன்னார்,
அவரின் வருத்தத்தை உணர்ந்த அஞ்சலியாலும், கதிராலும், மாறனுக்கு என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும்..? ஆறுதல் சொல்லக்கூடிய விஷயமும் இது கிடையாதே, “பிள்ளைகளின் இத்தகைய செயலால் தன் வளர்ப்பில் முழு தோல்வியை உணரும் ஒரு தந்தைக்கு ஆறுதல் சொல்லக்கூடிய வார்த்தைகளும் இந்த உலகத்தில் கிடையவும் கிடையாது”,
“நாம எடுக்க போற முடிவுக்கு ஒரு சம்மந்தியா சுந்தரத்துக்கு சொல்லணும் தான், ஆனால்..?” என்று மகன்களையும், தன் பக்க ஆட்களையும் நினைத்து தடுமாறிய மாறனின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்ட கதிர், அஞ்சலியை பார்க்க,
“இல்லை மாமா, அப்பா வரணும்ன்னு இல்லை, நீங்களே பாருங்க..” என்று புரிதலுடன் சொன்ன மருமகளுக்காக, கதிரிடம் சொல்லி அந்த நொடியே சுந்தரத்திற்கு போன் செய்து தான் எடுத்திருக்கும் முடிவை பற்றி சொன்னார்,
“நீங்க செய்ய நினைக்கிறதை செய்ங்க, அவங்க உங்க பசங்க, அது உங்க சொத்து, இதுல நான் தலையிடுறது சரியா வராது, ஏன் நான் வந்தா பிரச்சனை இன்னும் பெருசாகவும் நிறைய வாய்ப்பு இருக்கு”, என்று மறைமுகமாக மோகனையும், சேகரையும் குறிப்பிட்டவர்,
“அதனால நான் வர்றது சரிப்பட்டு வராது, அதில்லாம எனக்கு உங்கமேல பரிபூர்ண நம்பிக்கையும் இருக்கு”, என்று முடித்துவிட, சம்மந்தியின் புரிதலில் மாறனுக்கு மனதில் புதுவிதமான நெகிழ்ச்சியே.
மாறன் ஏற்பாடு செய்திருந்தது போல் எல்லோரும் தோட்ட வீட்டிற்கே வந்துவிட்டனர். அப்பொழுதும் மோகனும், சேகரும் தங்களின் தப்பை உணராமல், திமிராகத்தான் நின்றனர்.
“நான் கூப்பிட்டதை மதிச்சு வந்திருக்கிற எல்லோருக்கும் ரொம்ப நன்றி”, என்று ஆரம்பித்த மாறன், முதலில் தன் குடும்பத்தை பற்றி பொதுப்படையாக சொன்னவர், பின் தன் குடும்ப சொத்துக்கள், தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள், கதிர் சம்பாதித்த சொத்துக்கள் என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டு சபையில் வைத்தார்,
“இதுல என் குடும்ப சொத்துக்கள் எல்லாத்தையும் என் நாலு பிள்ளைகளுக்கும் சமமா நாலா பிரிக்கிறேன், அப்பறம் என் சுயசம்பாத்திய சொத்துக்கள்ல, நார் பேக்ட்ரியை பெரியவனுக்கும், மில்லை சேகருக்கும் கொடுக்கறேன்”,
“அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை என் பொண்ணு நாயகிக்கும், பரம்பரை நகைகளை என் மூணு மருமகள்களுக்கும் சமமாக பிரிச்சிருக்கேன்” என்று எல்லா பிரிக்கப்பட்ட நகைகளையும் சபையில் வைத்தார், அப்பொழுது மோகன்,
“அப்போ உங்க மத்த சுயசம்பாத்திய சொத்துக்கள் எல்லாம் எப்படி…?” என்று ஆத்திரமாக கத்தவே செய்தான், அவனுக்கு பதில் அளிக்காமல், அடுத்து பேசபோனவரை, பேசவிடாமல் கத்திய மோகனும், சேகரும்,
“அவர் கண்டிப்பா அந்த சொத்துக்களை எல்லாம் அவரோட சின்ன மகனுக்கு தான் கொடுப்பார்,எங்களுக்கு அது நல்லா தெரியும், உதவாத சொத்துக்களை எங்களுக்கு கொடுத்துட்டு, மத்த நல்ல சொத்துக்களை அவனுக்கு கொடுத்து எங்களை மோசம் செய்ய பாக்கிறார், இப்பவே அவரை அந்த சொத்துக்களை பத்தி எல்லாம் சொல்ல சொல்லுங்க”, என்று விடாமல் கத்தி பிரச்சனை செய்தனர்,
அவர்களின் மாமனார் பக்க ஆட்கள், கைத்தடிகள் வேறு அவர்களுக்கு ஆதரவாக பிரச்சனை செய்ய ஆரம்பிக்க, மாறனின் ஆதரவாளர்களும் அவருக்கு சப்போர்ட் செய்யபோக சிறிதுநேரம் அந்த இடமே அமர்களமானது,
மேலே ஜன்னலில் இருந்து எல்லாவற்றயும் பார்த்து கொண்டிருந்த அஞ்சலி, பிரச்சனை ஆரம்பிக்கவும், “எங்கே கணவனும் கோவப்பட்டு சண்டை போட்டுடுவாரோ..?’ என்று முதலில் தன் கணவனை தான் பயத்துடன் பார்த்தாள்.
ஆனால் அவள் பயந்த்ததற்கு நேர்மாறாக கதிர், ரிலாக்ஸாக தான் நின்றிருந்தான். மோகனும், சேகரும் கண்டிப்பாக பிரச்சனை செய்வார்கள் என்று அவனுக்கு தான் நன்றாக தெரியுமே.. அதனாலே பிரச்சனை முற்றினால் என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடே வந்திருந்தான்.
போலீஸ், மற்றும் ஊர் தலைவர்களின் தலையீட்டால் அவர்களின் சத்தம் அடங்கவே, மாறன் முன்னிற்கும் சத்தமாக பேச ஆரம்பித்தவர், “அவங்களுக்கு கொடுத்திருக்கிற சொத்து எல்லாம் ரொம்ப நல்ல சொத்து தான்னு, அவங்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்”,
“அதனால நான் யாரையும் மோசம் எல்லாம் செய்யல, அதோட இது எல்லாமே என்னோட சுயசம்பாத்திய சொத்துக்கள், இதை யார் யாருக்கு கொடுக்கணும்ன்னு நான் தான் முடிவெடுப்பேன், நான் மட்டும்தான் முடிவெடுப்பேன், அதுக்கு எனக்கு முழு உரிமையும் இருக்கு, இது சட்டப்பூர்வமான உண்மை”,
“அதுமட்டுமில்லாமல், கதிர் இவனுங்களை விட வயசுல ரொம்ப சின்னவன்தான், ஆனா அவன் இவங்களை மாதிரி என் சொத்தை எதிர்பார்க்காம, இந்த வயசுக்கு அவனே தனியா உழைச்சு எவ்வளவு சொத்து சம்பாதிச்சிருக்கான்”,
“ஆனா இவனுங்க இதுவரை தனியா சம்பாதிச்சு ஒரு சென்ட் இடத்தை கூட வாங்கினதில்லை, பெருசா பேச வந்துட்டானுங்க”, என்று கொதித்தவர்,
“நான் எடுத்தது தான் முடிவு, அதுக்கு கட்டுப்படறதுன்னா நான் கொடுத்த சொத்தை பேசாம வாங்கிட்டு போகச்சொல்லுங்க, இல்லை நாங்க ஒத்துக்க மாட்டோம், பிரச்சனை தான் செய்வோம்ன்னா அதுக்கும் நான் ரெடியா தான் இருக்கேன்”, என்று அதிகாரமாக சொல்ல,
அவரின் பேச்சில் இருந்த உறுதியில் யோசித்த மோகனும், சேகரும் தங்கள் வக்கிலீடம் மாறனின் முடிவு குறித்து கலந்தாலோசிக்க, அவரும் மாறன் எடுப்பதுதான் முடிவு, அதுதான் சட்டப்படியும் செல்லும் என்றுவிட்டார்,
ஆனாலும் மோகன், “குறுக்குவழியில் ஏதாவது செய்ய முடியுமா..?” என்று கேட்க, “செய்ய முடியும்தான், ஆனால் பலன் என்னமோ ஜீரோ தான்”, என்று சொல்லிவிட, அதற்கு பிறகே வந்ததே போய்விடுமோ..? என்ற பயத்தில் அமைதியாக நின்றனர்.
அன்றே சட்டப்படி எல்லா சொத்தையும் அவரவர் பேருக்கு ரெஜிஸ்டர் செய்யவும் மாறன் ஏற்பாடு செய்திருந்தார், அதை எதிர்பாரா மோகனும், சேகரும் “அவ்வளவு ஈசியாக கதிரை விடமுடியாது..” என்று வம்புக்கே மறுபடியும் பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர்,
அப்போது கதிர், அதிரடியாக திருவிழா அன்று மோகனும், சேகரும் தன்னை அடிக்க ஏற்பாடு செய்திருந்த ஆட்களை சபைக்கு வரவழைத்துவிட்டான். அதை முற்றிலும் எதிர்ப்பார்க்காத கதிரின் அண்ணன்கள் அதிர்ச்சியாகி நின்றுவிட்டனர்,
அவர்களின் அதிர்ச்சியை நக்கலாக பார்த்தவன், போலீஸின் முன்னிலையில் அந்த ஆட்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி கொடுத்ததோடு, அவர்களின் மேல் அங்கேயே தன்னை தாக்க வந்ததிற்காக, கொலை முயற்சி காம்ப்ளயின் கொடுக்க, மாறனும் அவர்களின் ஆதரவாளர்களும் கதிருக்கு ஆதரவாக சாட்சி சொன்னனர்,
அதோடு விட மனமில்லாத மாறன், ஒரு படி மேலே சென்று “பின்னாளில் கதிருக்கோ, கதிரின் மனைவி அஞ்சலி, மற்றும் அவளின் வீட்டினர்க்கோ, எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் மோகன், சேகர் தான்..” என்று அவர்கள் முன்னிலையிலே தான் ஒரு புது கம்ப்லெய்னும் கொடுத்துவிட்டார்,
அதில் திகைத்து நின்ற அண்ணன்களை மேலும் மாட்டிவிடும் பொருட்டு, வந்திருந்த மாறனின் ஆதரவாளர்களும் அவர்கள் மேல் குற்றம் சாட்டி சாட்சி கையெழுத்து போட்டு இன்னும் இன்னும் அவரின் கம்ப்ளைனை உறுதியாக்கினர்.
போலீஸும், கதிரின் அண்ணன்களை அங்கேயே எச்சரித்து கம்ப்ளயினை வாங்கி கொண்டு சென்றுவிட்டனர், அதற்கு பிறகே வேறு வழியில்லாமல், எல்லோரின் முன்னிலையிலும் ஒத்துக்கொண்டு, வந்திருந்த எல்லோருமே சாட்சியாக நிற்க, சொத்தை ரெஜிஸ்டர் செய்து கொண்டனர்.
அதோடு, “கதிரின் சொத்துக்கள் மேல் தங்களுக்கு எக்காலத்திலும் எந்தவிதமான உரிமையும் இல்லை..” என்று அவர்களின் மேல் சிறிது கூட நம்பிக்கையில்லாமல் அவர்களிடம் கூடுதலாக எழுதி ரெஜிஸ்டெரும் செய்துவிட்டார் மாறன்,
அவர்கள் எந்த வழியிலும் கதிருக்கு தொல்லை செய்துவிடமுடியாதபடி, எல்லாவற்றையும் மிக தெளிவாக யோசித்து, அவர்கள் பிரச்சனை செய்ய ஏதுவான எல்லா வழிகளையும் அடைந்துவிட்டார் மனிதர்,
அவரின் இந்தளவு முற்போக்கான யோசனையில், கதிருக்கு அதிர்ச்சியே, அவர் செய்துவிட்ட எல்லா முன்னேற்பாடும், இனியும் அவர்கள் தன்னை எந்த இடத்திலும் நெருங்க முடியாதபடியே இருந்தது, அதையே அவரிடம்,
“ஏன்ப்பா, இப்படி அவங்க உறவை மொத்தமா முடிச்சிட்டீங்க..?”, என்று ஒருநாள் மாலை பார்மில் தன் தந்தையிடம் கேட்டான், அவனின் கேள்வியில் விரக்தியாக சிரித்த மாறன்,
“அவங்க என்னைக்குமே நமக்கு உறவாவே இருந்ததில்லைப்பா, இதுல நான் எங்க முடிச்சு வச்சேன்..?, அதோட நீ அதை அப்படி கேட்க கூடாது, இப்படித்தான் கேட்டிருக்கணும், ஏன்ப்பா இப்படி அவங்க பகையை மொத்தமா முடிச்சிட்டேங்கன்னு..?” என்று வெறுப்பு கலந்த வேதனையில் சொன்னார்,
அவர் பேச்சிலிருந்து உண்மையை புரிந்து கொண்ட கதிர் ஆதரவாக தந்தையின் கையை பற்ற, அவனின் கையை தானும் வலுவாக பற்றிக்கொண்ட மாறன்,
“லட்சுமி முதல்லே இருந்தே அடிக்கடி சொல்லிட்டு இருப்பா, நம்ம பெரிய பசங்க ரெண்டு பேரும் சரிகிடையாது, அவங்ககிட்ட இருந்து நாமதான் கதிரையும், நம்ம பொண்ணு நாயகியையும் காப்பாத்தணும்ன்னு அது சரியா தான் போச்சு”, என்று மனைவியின் நினைவில் கண்கள் கலங்கவே செய்ய,
தந்தையின் கண்ணீரை பார்த்த கதிருக்கு, அண்ணன்களை நொறுக்கிவிடும் வெறியே வந்தது. ஆனால் அப்போதும் பலன் இருக்காதே, “விஷ ஜந்துக்கள் என்றும் விஷஜந்துக்கள் தான், அதை மாற்றவா முடியும்..?”, என்ற தந்தையின் வேண்டுததிலே அவர்களிடமிருந்து தள்ளி இருந்துகொள்ள மாறனுக்கு சம்மதித்து இருந்தான்,
“இல்லையெனில் இவ்வளவு பிரச்சனை செய்யும் அவர்களை ஒரு கை பார்க்கமால் விட்டிருக்க மாட்டான்..”, அவனின் கை இறுக்கத்தில் அவனின்கோவத்தை கண்டுகொண்ட மாறன்,
“விடுப்பா.. அவங்க எல்லாம் எப்பவும் திருந்த மாட்டாங்க, எல்லா விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு, அவங்களை நினைச்சு நீ உன் சந்தோஷத்தை கெடுத்துக்கதா”,
“அஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு, நான் நம்ம குடும்பத்துக்குன்னு பாத்து பாத்து நம்ம பக்க பொண்ணாய் கட்டிவச்ச பெரிய மருமகளுங்க சரியில்லாம போக, கடைசியில நான் சரிவருமான்னு யோசிச்ச என் சின்ன மருமகத்தான் என் லட்சுமி இடத்தை பிடிச்சிருக்கா”,
“மருமகளுங்க தான் அப்படின்னு பார்த்தா, இன்னிக்கு பஞ்சாயத்துல மறுமகளுங்களோட அப்பாங்களும் அதுக்கு மேல இருக்காங்க, ஆனா சுந்தரம் பகையை விட்டுட்டு பார்த்தா ரொம்ப நல்ல மனுஷனா இருக்காரு, இவங்க இல்லன்னா என்ன, உனக்கு அவங்க எப்பவும் துணையா, உறவா நிப்பாங்க”,
“அதிலும் அசோக் தம்பி சொல்லவே வேண்டாம்..”, என்று அவர்களின் பூரண நட்பை அறிந்திருந்த மாறன் சொல்ல, கதிருக்கு அசோக்கை நினைத்து மெலிதான புன்னகை அரும்பியது.
ஆனால் அங்கு அசோக்கோ தங்கையிடமும், மனைவியிடமும் மாட்டிக்கொண்டு முழித்து கொண்டிருந்தான், அஞ்சலிக்கு கதிரின் நடவடிக்கையிலே, “அவனுக்கு தன் காதல் தெரிந்திருக்கிறது..” என்று உறுதியாக நம்பினாள்,
“ஆனால் எப்படி என்று யோசித்தவளுக்கு, அசோக்தான் சொல்லியிருப்பான் என்று தோன்றவே, கடந்த சில நாட்களாகவே அசோக்கை போட்டு கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தாள்”.