Advertisement

 “கதிர்.. பசங்க எப்படி இருக்காங்க..?” என்று மாறன் மகனிடம் கேட்க,
“ம்ம்.. பரவாயில்லப்பா, நிறைய அடி, பாவம்”,
“என்ன செய்ய..? விடு கதிர், பாத்துக்கலாம்”,
“இல்லைப்பா, அப்படியெல்லாம் விட கூடாது, அப்போதான் இன்னொரு டைம் இப்படி
செய்ய மாட்டாங்க, இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்,”, என்று ஆத்திரத்துடன்
சொன்னான்  கதிர்,
“என்ன ஆச்சு கதிர்..? ஏன் இவ்வளவு கோவம்..?” என்று நாயகி கவலையுடன்
கேட்டவர், “தம்பிங்க ஏதாவது..?” என்று இழுக்க,
“ஆமா உன் தொம்பிங்களோட தொடுப்புங்க  செஞ்ச வேலைதான்”, என்று கடுப்பாக
சொன்ன கதிரிடம்,
“என்ன ஆச்சுன்னு  சொல்லு தம்பி..?’ என்று நாயகி கேட்க, அஞ்சலியும் அதே
கேள்வியை பார்வையில் தேக்கி கணவனை பார்த்தாள்.
“நம்மகிட்ட இருக்கிற பசங்கள்ல ரெண்டு பேரை, உன் தம்பிங்களோட ஆளுங்க நைட்
அடின்னு அடின்னு அடிச்சிருக்காங்க”,
“ஏன்..? ஏன் அடிச்சாங்க..?”
“ம்ப்ச்.. உனக்கு தெரியுமில்லக்கா, நம்ம பசங்க முதல்ல எப்படி இருந்தாங்கன்னு..?”
“ஆமா, ஆமா நல்லா தெரியுமே, எப்போ பார்த்தாலும் ஒரே சண்டை, தண்ணின்னு
ஊரில் ரவுடிங்க மாதிரியில்ல  சுத்திட்டு இருந்தாங்க, ஏதோ நீயும் அசோக்
தம்பியும் தான் சேர்ந்து அவங்களை கொஞ்சம் திருத்தியிருக்கிறதா அப்பா
சொன்னாரே..!!” என்று பெருமையாக சொன்னார் நாயகி.
“ம்ம்.. ஆமாக்கா, எதோ கொஞ்சம் தான் எங்களால அவங்களை மாத்த முடிஞ்சது,
இதுல ரெண்டுபக்கமும் போதைக்கு அடிமையான பசங்க, அதிகம், அவங்களை எல்லாம்
அடிக்ஷன் சென்டர்ல விட்டு கொஞ்சம் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தோம்”,
“அப்படியும் அந்த பசங்களுக்கு போதை ஞாபகம் வந்துட்டா, கண்ட்ரோல் பண்றது
ரொம்ப கஷ்டம், இதுவேற திருவிழா சமயம், சொல்லவா வேணும், குமார், கணேஷ்ன்னு
சீனியர் பக்க ரெண்டு பசங்க, யாருக்கும் தெரியாமல் போதை சமாச்சாரம்
கேட்டு, உன் தம்பிங்களோட தொடுப்புங்கக்கிட்ட போயிருக்கானுங்க”,
“அவனுங்க, இதுதான் சமயம்ன்னு தனியா மாட்டுன பசங்களை போட்டு அடின்னு
அடிச்சிருக்காங்க, அவங்க அப்பா அம்மா மகனை காணோம்ன்னு பசங்க கிட்ட கேட்க,
அப்பறம் தான் நைட் எல்லாம் தேடி, ஊருக்கு வெளியே இருக்கிற தோப்புல
கிடைச்சாங்க, ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வந்திருக்கோம்”,
“இதுல இன்னொரு பெரிய பிரச்சனையே.!!, அந்த பசங்களோட அம்மா, அப்பா
சொந்தகாரங்க எல்லாம், பதிலுக்கு செய்ய கிளம்பிட்டாங்க, அப்பறம் அஞ்சலியோட
அப்பாவும், சீனியரும் சொல்லித்தான் விட்டாங்க, இல்லன்னா இன்னிக்கு
திருவிழா இல்லை..”, என்று முடிக்க, கேட்டிருந்த அஞ்சலிக்கும்,
நாயகிக்கும் இந்த “பிரச்சனை எல்லாம் என்று ஓயும்..!!?” என்றிருந்தது.
“விடுப்பா, திருவிழா முடியட்டும், அப்பறம் இதுக்கு என்ன செய்றதுன்னு
பாக்கலாம்”, என்று சொன்ன மாறன், “உன் அண்ணனுங்க எங்கப்பா
இருக்கானுங்க..?”, என்று சந்தேகத்துடன் கேட்க,
“இப்போதைக்கு ஊர்ல இல்லப்பா, ரெண்டுபேரும் மாமியார் வீட்டுக்கு
போயிட்டாங்கதான், ஆனாலும்..?’, என்று எதோ இடிக்க, நிறுத்தியவனை பார்த்த
மாறன்,
“எனக்கும் எதோ சரியில்லாம தோணுது,  பாத்துக்கோப்பா”, என்று மகனின்
பத்திரத்தை சொல்ல, புரிந்துகொண்ட கதிர், “பாத்துக்கிறேன்ப்பா..” என்று
முடித்துவிட்டான்,
“சரி தம்பி, இந்த கறிவிருந்துக்கு…” என்று நாயகி தம்பியிடம் எதோ கேட்டு
கொண்டிருக்க, அஞ்சலிக்கு மாமனாரின் கவலை முகமே மனதில் நின்றது. அவர் என்ன
சொன்னார்..?”,
“ஒரு வேளை இவருக்கு ஏதாவது..?” என்று அன்று முழுவதும் யோசித்து கவலை
கொண்டவளின் பயத்தை உண்மையாக்குவது போல், இங்கு விருந்து எல்லாம் முடிந்து
மாலை அவளின் அம்மா வீட்டிற்கு செல்லும் போது, பத்துபேர் கொண்ட கும்பல்,
அவர்களை சுற்றி வளைத்தது.
“ஏன் நீ  விருந்து சாப்பாடு சரியாவே சாப்பிடல அஞ்சலி..?” என்று அசோக்கின்
வீட்டிற்கு ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது கணவன் கேட்க,
“நல்லாத்தான்  சாப்பிட்டேன்”,
“அப்படியா என்ன..? சரிவிடு, இப்போ உங்க அம்மா வீட்ல நல்லா
சாப்புட்டுக்கோ, நைட்டுக்கு நிறைய வேலை இருக்குல்லை.” என்று குறும்பாக
சொன்னவனை, அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தவள்,
“என்ன என்ன வேலை..?”
“ம்ம்.. ஓடி பிடிச்சு விளையாடுற வேலை..” என்று கன்ணடித்து குதர்க்கமாக
பதில் சொன்னான்,
“என்ன என்ன நீங்க என்னனென்னமோ சொல்றீங்க..?” என்று வார்த்தைகள்
தந்தியடிக்க திணறியவளை, ரசிப்புடன் பார்த்தவன், “நீ.” என்று ஆரம்பிக்கும்
போது, அவனின் ஜீப் டயர்கள் இழுக்கும்   சத்தம் கேட்க, ஜீப்பை
நிறுத்தியவன், இடத்தை பார்க்க, இரு ஊருக்கும் இடையில் இருக்கும் ஆளில்லா
தரிசல் காடாக இருந்தது,
மனதில் எச்சரிக்கை ஒலி அடிக்க, ஜீப்பில் இருந்தபடியே அவனின் பக்க இரு
டயரை எட்டி பார்த்தான், இரண்டுமே பஞ்சர் ஆகியிருக்க, இன்னும் நன்றாக
பார்த்தால், வீலிற்கு அடியில் எதோ பெரிய சைஸ் ஆணிபோல் நீண்டு இருந்தது,
“அஞ்சலி.. சீனியருக்கு போன் பண்ணு..”, என்றவாறே தன் தந்தைக்கு அழைத்தவன்,
விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கும் போதே, பத்திற்கும் மேற்பட்ட கும்பல், கையில்
கட்டைகளுடன் அவனை சுற்றி வளைத்தது,
அவர்களை கண்டு நடுங்கிய மனைவியை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தவன்,
அசோக்கிற்கும் அவனே சொல்லிவிட்டு, “அஞ்சலி, கண் மூடிக்கிட்டு அப்படியே
கீழே குனிஞ்சிரு, நிமிர கூடாது, காரை விட்டும் இறங்க கூடாது”, என்று
அவசரமாக சொல்லியவன்,
மனைவியை தள்ளி உட்கார வைக்க போக, “போகாதீங்க..”, என்று எட்டி அவனின்
சட்டையை பிடித்தவள், மேலும் கணவனோடு ஒன்றிகொள்ள, அந்த கும்பல், எல்லா
பக்கமும் அவர்களை நெருங்கியது,
“அஞ்சலி, என்னை விடு, அவங்க கிட்ட வராங்க, ஏய் உன்பக்கமும் வராங்காடி,
என்னை விடு..” என்று கோவமாக கத்தியவன், மனைவியை பிரிக்க பார்க்க, “கணவனை
ஏதாவது செய்துவிடுவார்கள்..?’ என்று பயத்தில் இருந்த அஞ்சலி அவனை
விடாமல் மேலும் இறுக்கி கட்டி கொண்டாள்,
“அஞ்சலி என்னை கோவப்படுத்ததா, அவங்க உன்கிட்டேயும் வந்துட்டாங்கடி, நான்
இப்போ இறங்கியே ஆகணும், விடு..”  என்று மனைவியின் பாதுகாப்பில் கோவம்
கொண்டவன், அவளை கத்த, அப்போதும் விடாத மனைவியை, ஆவேசமாக
பிறித்தெடுத்தவன்,
“விடுடி..” என்றவாறே இறங்க, சட்டென அவனின் கையை பிடித்த மனைவியை,
திரும்பி ஓங்கி ஒன்று விட்டவன், அவளின் அதிர்ந்த முகத்தை கண்டு
கொள்ளாமல், அவளை அப்படியே பின் சாய்த்தவாறே, பின்னிருந்து ஒரு பெரிய
தடிமனான கம்பு போன்ற ராடை எடுத்தவன், காரில் இருந்தபடியே அஞ்சலியின்
பக்கம் இருந்தவர்களின் முகத்தில்  ஓங்கி குத்தினான்,
அதற்குள் இவனின் பக்கம் நின்றவர்கள், இவனை தாக்க பார்க்க, காரின் கதவை
ஆக்ரோஷத்துடன் தள்ளி திறக்க, இவனின் பக்கம் நின்றவர்கள் பத்தடி தள்ளி
போய் விழுந்தனர்,
அவர்கள் விழுகவும், ஜீப்பிலிருந்து குதித்து இறங்கியவன், வாயில் ராடை
கவ்வியபடி, நுனிக்காலில் வேட்டியை தூக்கி மடித்து கட்டியவன், கையிலிருந்த
காப்பை நன்றாக மேலேற்றி விட்டு, வாயிலிருந்து ராடை எடுத்து ஒரு சுழற்று
சுழற்றியவனின் பார்வை சுற்றியிருந்தோரின் மேலே  ஆராச்சியாக படிந்தது,
“நீங்க எல்லாம் இந்த ஊர் இல்லையே..? எங்கிருந்துடா வந்திருக்கீங்க..?”
என்று கர்ஜனையாக கேட்க,
“அதெல்லாம் உனக்கெதுக்கு..?” என்றவாறே அவனை தாக்க வந்தவனின் கையை
பிடித்து ஒரே திருப்பாக திருப்பியவன்,
“எனக்கெதுக்கா, எனக்கு தான்டா  வேணும்,  அப்போதானே அவங்க வந்து  உன்னை
அள்ளிப்போட்டுட்டு போக முடியும்..”, என்றபடியே அவனின் கையை இன்னும்
முறுக்கிய கதிரை தாக்க எல்லோரும் நெருங்கிவர, தன்னிடம் இருந்த ராடை
கொண்டு எல்லாரையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்தான்,
அப்படியும் கதிரின் மேல் சில அடிகள் விழத்தான் செய்தது, அதை பார்க்க
பார்க்க அஞ்சலிக்கு மயக்கமே வருவது போல் இருக்க, இருப்பக்கமும் இருந்து
எக்கச்சக்க வண்டிகளின் ஆர்ன் சத்தமும், லைட் வெளிச்சமும் தெரிந்த பின்னே
அஞ்சலிக்கு உயிர் வந்தது.
இரு ஊருக்கும் இடையில் உள்ள இடம் என்பதால், மாறனும், சுந்தரமும்
சீக்கிரமே வந்துவிட்டனர், அதற்கு பிறகு எல்லோரும் வந்தவர்களை கவனிக்க
வேண்டிய விதத்தில் கவனித்து யார் அனுப்பியது என்று கேட்டு தெரிந்து
கொண்டனர்,
அவர்கள் சந்தேகப்பட்டது போல் இது “கதிரின் அண்ணன்கள் வேலை தான்”, இது
எதிர்பார்த்தது தான் என்பதால் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி ஒன்றும்
இல்லை,
“இவரை நல்லா அடிச்சு மட்டும்தான் விட சொன்னாங்க, உயிர்க்கு எந்த
பிரச்சனையும் வரக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க..” என மாறன் மகன்களின்
செயலில் வெறுத்தே போனார், இதுநாள் வரை மகன்களை என்ன செய்வது
யோசித்துக்கொண்டிருந்தவர், இந்த நொடி  என்ன செய்வது என்று முடிவே
எடுத்துவிட்டார்.
சுந்தரமும், மாறனும் அவர்களை எல்லாம் ஊருக்குள் கொண்டுசெல்ல, திரும்பி
தன் ஜீப்பிற்கு வந்த கதிருக்கு, மனைவியின் கோபமுறைப்பில் சிரிப்புதான்
பொங்கியது,
“ஏண்டி நீயெல்லாம் என் பொண்டாட்டியா..? என் பொண்டாட்டி சும்மா எப்படி
இருக்கணும், நீயே எனக்கு ராடை எடுத்து கொடுத்து சண்டைக்கு அனுப்பனும்,
அதை விட்டு என்னை போகாதுன்னு அந்த அலப்பறையை கூட்டுற..” என்றவாறே
அவளின் கன்னத்தில் தெரிந்த தன் கைத்தடத்தை வருடிவிட, அவனின் கையை கோவமாக
தட்டிவிட்ட அஞ்சலி,
“எப்படி..  எப்படி நானே இந்த சார் கையில் ராடை எடுத்துக்கொடுத்து
வழியனுப்பனுமா..? அது போதுமா..?  இந்த வீரதிலகம் எல்லாம் வைக்க
வேணாமா..?.” என்று ஆத்திரத்தில் கண்ணில் நீர் மிதக்க கொதித்தவளை, தன்னோடு
சேர்த்து அணைத்து பிடித்தவன்,
“ச்சு.. விடுடி, அப்படி எல்லாம் உன் மாமனை யாரும் ஈஸியா தட்டி தூக்கிட
முடியாது, அதனால நீயும் மாமனுக்கு ஏத்த பொண்டாட்டியா மாறிக்கோ.. இப்படி
பேருக்கேத்த மாதிரி சுண்டெலியா இருக்காதா..?” என்று சீண்ட,
மேலும் கொதித்தவள், சரமாரியாக தன் கையால் அவனின் நெஞ்சில் குத்த
ஆரம்பித்தாள், “ஏய் விடுடி, என்னை அடிக்க வந்ததுக்கு அழுகறேன்னு
பார்த்தா, நீயே என்னை அடிச்சிட்டு இருக்க, விடுடி..” என்றவாறே
அடிக்கமுடியாதபடி அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான்.
“ம்ம் அப்பறம், சொல்லு அஞ்சலி, உனக்கெப்படி  நானும் எங்க அம்மாவும்
பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு..?” என்று கேட்க, புரியாமல் அண்ணார்ந்து
பார்த்தவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,
“அதான் என் அலர்ஜி விஷயம்..”  என்று மறுபடியும் ஆரம்பிக்க, நொந்து
போனவள், கணவன் மீதே சாய்ந்துவிட்டாள்.

Advertisement