Advertisement

“நீ தான் மறந்த, பின்ன நானா..?” என்று நொடித்தவர், “என் மக கல்யாணம் ஆன
பின்னாடி, அவ அப்பா வீட்ல நடக்கிற முதல் திருவிழாக்கு வந்து  இன்னும்
கையை கூட நினைக்கல”,
“அதை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம, இப்படி புதுத்துணி போட்டுக்கிட்டு,
சென்ட் அடிச்சிக்கிட்டு என்னமோ நீதான் புது மாப்பிள்ளை கணக்கா
கிளம்பிட்ட, ஆனா என் மருமகன், புதுமாப்பிள்ளை இன்னும் அவங்க மாமியார்
வீட்டு திருவிழாக்கு வரல, அதை பத்தி ஏதாவது கவலைபட்டியா..?”
“இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன், நீ மட்டும் உன் மாமியார் வீட்டு
திருவிழாக்கு போய் ஒரு வாரம் இருந்துட்டு வந்தியே, என் மருமகன்..” என்று
பேசி கொண்டே போனவரிடம், கை காட்டி நிறுத்தியவன்,
“போதும்மா, போதும், நான் தங்கச்சியை கூட்டிட்டு வர கிளம்பிட்டேன்..” என,
அவனின் புதுத்துணியை குறுகுறுவென பார்த்த அன்னையை கண்டவன், வேகமாக உள்ளே
சென்று புதுத்துணியை கழட்டிவிட்டு பழைய துணியை போட்டு கொண்டு வர,
“இதுவும் புதுசு போலத்தான் இருக்கு..” என்று சந்தேகமாக இழுத்த தாயை, கொலை
வெறியோடு முறைத்தவன்,
“என்னை பெத்த தெய்வமே..!!  இது அறுத பழசு, இதுக்குமேலயும் ஏதாவது
ஆரம்பிச்சு  என்னை கடுப்பேத்தின அவ்வளவுதான் பாத்துக்கோ..”  என்று
கத்தியவன், பொருமி கொண்டே கதிரின் வீட்டிற்கு வந்தான்.
“வாப்பா..” என்று உள்ளே வந்த அசோக்கை வரவேற்ற நாயகி, “திருவிழா
வேலையெல்லாம் எப்படி போகுது..?” என்று காபி கொடுத்து பொதுவாக பேசியவர்,
அசோக் தான் வந்த காரணத்தை சொல்லவும்,
“அப்படியா..? நல்லது, ஆனா அஞ்சலி.. தூங்கிட்டு இருக்காப்பா,  பாவம்
அவளுக்குத்தான் இன்னிக்கு நிறைய வேலை, இப்பவும் இங்க ஆளுங்க
வந்துட்டுதான் இருகாங்க, ஆனாலும் கதிர்தான், அவளை திட்டி தூங்க
அனுப்பிவச்சான்”,
“தம்பி தோட்டத்துல இருக்கிற பந்தியிலதான் இருக்கான், பேசிட்டு கூட்டிட்டு
போப்பா”,  என, வெளியே வந்தவன், நேரே பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றான்,
இவனை பார்த்ததும் ஆச்சரியப்பட்ட கதிர்,
“நீங்க  இந்த டைம்ல அங்க ப்ரோகிராம் நடக்குற  இடத்துல தானே எப்பவும்
இருப்பீங்க, இங்க ஏன்..?” என்று புரியாமல் கேட்க,
“டேய்.. அதை பத்தி கேட்டு என்னை கடுப்பேத்தாத,  நான் உன்னை
காலையிலிருந்து எத்தனை டைம் போன் செஞ்சு கூப்பிட்டேன், ஆனா நீ  வேலையை
சொல்லி தட்டி கழிச்சதுக்கு, நான்தான் உன் மாமியார் கிட்ட பாட்டு
வாங்கிட்டு வந்திருக்கேன், நீ வராம போனதுக்கு, நான் புதுத்துணி கூட
போடமுடியலை, இதுல எங்கிறது ப்ரோகிராம்க்கு எல்லாம் போறது, எல்லாம்
உன்னாலதாண்டா.” என்று பொரிய,
“ஹாஹா..”  என்று சிரித்த கதிர், “விடுங்க மச்சான், நமக்கு இதெல்லாம்
புதுசா என்ன..? வாங்க உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் குலாப் ஜாமுன் தரேன்,
சாப்புடுங்க..”  என்று கப்பில் போட்டு கொடுக்க, பிடித்த ஸ்வீட்டாதலால்
வேண்டாம் என்று மறுக்காமல் உர்ரென்ற முகத்துடனே சாப்பிட்டவன்,
“சரி கிளம்புங்க டைம் ஆச்சு, போய் அஞ்சலியை எழுப்பி கூட்டிட்டு வா..”, என,
“ம்ஹூம்.. அவ இன்னும் கொஞ்சநேரம் தூங்கட்டும், அப்பறமா எழுப்பிக்கலாம்”,
என்று கதிர் மறுப்பாக சொன்னான்,
“என்னது அப்பறமா எழுப்பறயா..? விளையாடாத கதிர், நைட் சாப்பாட்டுக்கு
உங்களை கூட்டிட்டு போகலேன்னா, எங்க அம்மா என்னை உப்பு கண்டம் போட்டுடும்,
கிளம்பு..”,
“நைட் சாப்பாட்டுக்கு இன்னும் டைம் இருக்கு, அதுவரைக்கும் தூங்கட்டும்..
இன்னைக்கு அவளுக்கு வேலை அதிகம்,  அதோட நேத்து நைட் டியூட்டி வேற, பாவம்
ரொம்ப டயர்ட் ஆயிட்டா”,
“அதெல்லாம் அஞ்சலி  சமாளிச்சுக்குவா, நீ போய் எழுப்பிவிடு”, என்று
அவசரபடுத்தியவனை,
“அப்படி கஷ்டப்பட்டு எழுந்து சமாளிக்கணும்ன்னு  அவளுக்கு இப்போ என்ன
அவசியம் இருக்கு..? விடுங்க, நல்லா தூங்கட்டும், நாளைக்கும் சாமி
ஊர்வலம், கறிவிருந்துன்னு வேலை அதிகமா இருக்கும்,  டைம் கிடைக்கும்போதே
தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..”  என்று சொல்லிக்கொண்டிருந்த கணவனை
ஆச்சரியமாக பார்த்தாள் அஞ்சலி,
கோவிலில் ஒலிக்கும் பாட்டு சத்தத்தில் அரைகுறை தூக்கத்தில் இருந்தவள்,
அசோக்கின் பேச்சு சத்தம் கேட்கவும், எழுந்து முகம்கழுவி வெளியே வந்தவள்,
நாயகி சொல்ல, இங்கு பந்தலுக்கு வர வர, கணவன் சொல்வதை கேட்டு  ஆச்சரியம்
தான்.
“இதுவரை அவனின் அதிரடியையே  பார்த்திருந்தவளுக்கு,  இந்த அக்கறை காட்டும்
கதிர் புதிது தான்..”, என்று யோசித்தவளுக்கு,
“ஒரேடியாக அப்படி சொல்லிவிட முடியாதே, இருவரும் சேர்ந்து வாழ
ஆரம்பித்ததிலிருந்து, தன்னை சாப்பிட்டாயா..?” என்று கேட்கும்  கணவன்
ஞாபகத்திற்கு வராமல் இல்லை,
அது மட்டுமா..? “அவளுக்கு பிடித்த காய்கறி, அவளுக்கு பிடித்த ஸ்வீட்,
சுப்புவிடம் சொல்லி அவளுக்காக தயாரித்து அனுப்பும் மதிய உணவு, அவள்
வருவதற்குள் அவளுக்காக, செய்துவைக்கும்  மாலை நேர ஸ்னாக்ஸ்”,
“ஏன் நாயகியும் சொன்னாரே, அவர்கள் ரூமிற்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில்
இருக்கும் ஊஞ்சலும், அவள் இங்கு வருவதற்கு முந்தின நாள் தான் கதிர்
மாட்டியிருந்தான் என, கேட்டதற்கு, “அஞ்சலிக்கு ஊஞ்சல் ரொம்ப பிடிக்கும்.”
என்று அவன் சொன்னதாக நாயகி சொல்லியிருந்தாரே,
அதுமட்டுமில்லாமல் அவளுடைய சௌகரியத்துக்காக தானே, தங்கதுரையை கூட
சுந்தரத்திடம் கேட்டு இங்கு  வரச்செய்திருக்கிறான், என்று இதே ரீதியில்
யோசிக்க,  யோசிக்க தான் முதல் நாளிலிருந்தே கணவன், தன்னை அக்கறை எடுத்து
கவனிப்பது புரிந்தது,
“தன்னிடம் மனைவிக்கான உரிமையை, கடமையை, அக்கறையை எதிர்பார்க்கும் கணவன்,
தன்னிடமும் அப்படித்தான் இருக்கிறான்..”, என புரிய, அஞ்சலிக்கு,  “இதை
எப்படி எடுத்து கொள்வது என்றே புரியவில்லை,..?” என்று தான் சொல்ல
வேண்டும்.
“இதோ அஞ்சலியே வந்துட்டா..” என்று அசோக் அஞ்சலியை பார்த்து சந்தோஷத்துடன்
சொன்னவன், “அஞ்சலி.. கிளம்பு வீட்டுக்கு போலாம்..”, என்று தங்கையிடம்
அவசரபடுத்த,
“உங்களுக்கு எங்களை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு, எப்படியாவது
கச்சேரிக்கு போயிரணும் அதானே..?’  என்று அசோக்கை நன்கு புரிந்து
வைத்திருந்த கதிர் சொல்ல,
“நீ என் நண்பன்டா..” என்று அவனின் எண்ணத்தை சொன்ன கதிரை மகிழ்ச்சியுடன்
கட்டிப்பிடித்தவன்,
“கிளம்புங்க.. கிளம்புங்க..” என்றவன், “அஞ்சலி நீ என்ன அப்படியே
நின்னிட்டுருக்க, கிளம்பு..” என்று தோளில் தட்ட,
“ம்ம்.. கிளம்புறேன்..” என்று கணவனையே பார்த்தபடி சொல்ல, மனைவியின் தொடர்
பார்வையில், “என்ன..?’ என்று கணவன் கண்ணால் கேட்க,
“ம்ஹூம்.. ஒன்னும் இல்லை, நான் போய் கிளம்புறேன்..” என்றவள்,
நாயகியிடமும், மாறனிடமும் சொல்லிவிட்டு கணவனுடன் கிளம்பி  தாய்
வீட்டிற்கு வந்தாள்,  மீனாட்சி மருமகனுக்கு ஓடி ஓடி சேவை செய்ய, சுந்தரம்
எப்போதும் போல் “வாங்க..” என்று வரவேற்றதோடு ஓதுங்கி கொண்டார்.
கதிரின் மேல் “மருமகன்..!!!”  என்ற மரியாதை இருந்த போதும், அவரால்
இன்னமும் மருமகனிடம் சகஜ மனப்பான்மையோடு ஓட்டி பழக முடியவில்லை என்று
தான் சொல்லவேண்டும், அதை புரிந்துகொண்ட கதிரும் அவருக்கான நேரத்தை
கொடுத்து ஒதுங்கியே இருந்துகொண்டான். அவனின் புரிதலில், மரியாதையான
பண்பில், அலட்டா தன்மையில்   சுந்தரத்திற்கு மருமகனை நினைத்து பெருமையே,
“நான் கிளம்புறேன்..” என்று கதிரிடம் சைகை காட்டிய அசோக், அங்கிருந்து
மெதுவாக நழுவ பார்க்க,
“எங்க கிளம்பிட்டீங்க..?” என்று வேண்டுமென்றே சத்தமாக கேட்கும் மனைவியை,
திரும்பி முறைப்பாக பார்க்க, அவனை மீனாட்சி கொத்து பரோட்டா போடுவது போல்
பார்த்தார். தன்னை முறைக்கும் கணவனை மாமியாரின் பார்வையை கண்ணால்  காட்டி
 லதா நக்கலாக சைகை  காட்ட, பீதியுடன் திரும்பி தன் தாயை பார்த்தான்
அசோக்,
“சாரு..  எங்கேயோ கிளம்பிட்டேங்க போல..?” என்று மருமகனின் முன் கோவத்தை
காட்ட முடியாத மீனாட்சி, கண்ணில் மிரட்டலுடன் கேட்க,
“போகல, போகல, எங்கியும் போகல, போதுமா.. போங்க போய் உங்க மாப்பிள்ளைக்கு
விருந்து ரேடி பண்ணுங்க போங்க..” என்று  தலையில் கைவைத்து அமர, கதிர்
அசோக்கை பார்த்து சத்தமாக சிரித்தான்,
“டேய்..” என்று கதிரின் சிரிப்பில் காண்டாகி அசோக் அவன் மீது பாயவும்,
“அசோக்.” என்ற மீனாட்சியின் அதட்டலில்,
“மாப்பிள்ளை.. மாப்பிள்ளை தான்,  ஏன் மாப்பிள்ளை இப்படி..?”  என்று பல்லை
கடித்து கொண்டு கொலை வெறியுடன் மச்சானிடம் நியாயம் கேட்க, அவனின் நிலைய
கண்டு மேலும் சிரித்தான் கதிர்,
அஞ்சலிக்கு எப்போதும் கதிரின் கம்பீரமான, தலை முடியை கோதியவாறே
சிரிக்கும் அவனின் அலட்டலில்லா சிரிப்பு மிகவும் பிடிக்கும், இன்றும்
அதுபோல கணவனின் சிரிப்பை கண்டு ரசிக்க, மனைவியின் ரசிப்பு பார்வையை கண்டு
கொண்டவன், அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான்,
“மாப்பிள்ளை, சாப்பாடு ரெடி.. சாப்பிடாலமா..?..” என்றபடி மீனாட்சி
வரவும்,  “சரித்தை..” என்றவன், எல்லோருடனும் அமர்ந்து இரவு விருந்தை
முடித்தான், கதிர் சாப்பிட்டு முடிக்கவும்,
“மாப்பிள்ளை.. இந்தாங்க, எள்ளு உருண்டை..”  என்றபடி கொடுக்க, கைகழுவ
சென்றிருந்த அஞ்சலி, அதை கேட்டு “சாப்பிடாதீங்க..” என்றபடி அவசரமாக,
ஓடியே வந்தாள். அதற்குள் கதிர் சாப்பிட ஆரம்பித்திருக்க, வேகமாக அவனின்
கையிலிருந்த எள்ளு உருண்டையை பிடுங்கவே செய்தாள்.
“அஞ்சலி என்ன செய்ற நீ..?” என்று மீனாட்சி அதட்ட,
“ம்மா உங்களை யாரு இதை அவருக்கு கொடுக்க சொன்னது, இதுல வேர்க்கடலை
கலந்திருக்கு, அது  அவருக்கு சேராது, அலர்ஜி..”, என்று தாயிடம் கோவமாக
கத்தியவள், கணவனிடம்,
“நீங்க ஏன் இதை சாப்பிட்டிங்க..? வேர்க்கடலை  உங்களுக்கு அலர்ஜின்னு
உங்களுக்கு தெரியாதா..?” என்று கேட்டவள், அவனை கையோடு தங்களின்
வீட்டிற்கு அழைத்து சென்று, அவளிடம் இருக்கும் அலர்ஜி மாத்திரையை
கொடுத்தவள், அவனிடம் ஏதும் அலர்ஜி தோன்றுகிறதா..? என்று அவனையே பாலோவ்
செய்தவள், ஏதும் அலர்ஜி வராமல் இருக்கவே நிம்மதியானாள்,
அதுவரை ஏதும் சொல்லமால் அவளின் தவிப்பையே, தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்த கதிர்,
 “அஞ்சலி உனக்கு ஒன்னு தெரியமா..?,  எனக்கு வேர்க்கடலை அலர்ஜிங்கிற
விஷயமே  எங்க அம்மாக்கு மட்டும் தான் தெரியும்..”, என்று உன்னிப்பாக
அவளின் முகத்தையே பார்த்தபடியே சொன்னவன்,
நிறுத்தி நிதானமாக, “அப்படி இருக்கிறப்போ, உனக்கெப்படி தெரியும்..?”
என்று மனைவியின் முகத்தில் தோன்றும் அதிர்ச்சியை அவதானித்தபடியே
கேட்டான்.
“அது.. அது..” என்று பதில் சொல்ல முடியாமல் திணறிய அஞ்சலி, “ஆஹ்ன்.. அது
எனக்கு அண்ணா.. அண்ணா  தான் சொன்னாங்க..” என்று தன் பதட்டத்தை மறைத்தவாறே
சொல்ல,
“அஞ்சலி, இப்போ உங்க வீட்ல நடந்ததை நீ கவனிக்கலன்னு நினைக்கிறேன், உங்க
அம்மா, சீனியரை திட்டிட்டு இருந்தாங்க, ஏன் தெரியுமா..? நீ என்
மாப்பிள்ளைக்கு வேர்க்கடலை சேராதுன்னு முன்னாடியே சொல்லலைன்னு..?”
“அதுக்கு, சீனியர் என்ன சொன்னார் தெரியுமா..? அவருக்கு அந்த விஷயமே
தெரியாதுன்னு சொன்னார், அதுதான் உண்மையும் கூட”,
“அவருக்குமே எனக்கு வேர்க்கடலை அலர்ஜிங்க்கிற விஷயம்  இப்போ தான்,
அதுவும் நீ சொல்லிதான் தெரியும்..”  என்று அழுத்தத்துடன் சொன்னவனின் கூர்
பார்வையில் வேர்த்து கொட்டிய அஞ்சலி, கணவனை பயத்துடன்  பார்த்தாள்.

Advertisement