Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 2

“ம்மா.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..”  என்று கதிர் படுக்கையில்
இருக்கும் தன் தாயின் காலை தொட்டு கும்பிட, கண்கள் கலங்கிய லட்சுமி
அம்மாள்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு   இருப்பதால்  பேசமுடியாமல்
சிரமப்பட்டு கையை தூக்கி ஆசீர்வாதம் செய்ய,

 “ம்ம்மா..”  என்று அவர் அழுகையில் பல்லை கடித்தவன், “இப்போ எதுக்கு
அழறீங்க..?”  என்று கடிந்து கொண்டான். அவரோ அவனின் கோவத்தை
கண்டுகொள்ளாமல் எதோ சொல்ல, அதை புரிந்தாலும் புரியாதது போல்  நின்றான்.

அவனுக்கு அவர் சொல்ல வருவது மிக நன்றாகவே  தெரியும். “இன்று கதிரின்
பிறந்தநாள்..”  அன்று அவர்  எப்போதும் அவனுடன் “அம்மன் கோவிலுக்கு”
செல்வது  வழக்கம். அதுவும் ஒரு வருடம் கதிரின் பிறந்தநாளன்றே அவனக்கு
ஆக்ஸிடெண்ட்  ஆகி மரணத்தின் விளிம்பு வரை சென்று வர,

அந்த வருடம் முதல் அவன் பிறந்த நாளன்று “அம்மனுக்கு வேண்டிய படி அன்று
முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து,  கோவிலில் அன்னதானமும் செய்வார்”,

ஆனால் இந்த வருடம் அது எதுவும் செய்யமுடியாமல் படுக்கையில் இருக்கும் தன்
நிலையை நினைத்து அழுதவர், அவனை கோவிலுக்கு போக சொல்லி சைகை செய்தார்,

அவர் சொல்வது புரிந்தாலும்,  தன் விருப்பமின்மையை முகத்தில் காட்டி
“செய்ய மாட்டேன்..”  என்ற உறுதியுடன் நிற்க, அதை புரிந்து கொண்ட லட்சுமி
அம்மாளும், கோவத்தில் முகத்தை திருப்பிக்கொண்டு இயலாமையால் அழுகவே
செய்தார்,

கதிருக்கு  எப்பொழுதும்  கடவுள் மேல் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை,
அதுவும் “அவனின் அம்மா பக்கவாதத்தால் பாதிக்க பட”  இன்னும் இருந்த
ஈடுபடும் குறைந்தே போனது.

லட்சுமி அம்மாளுக்கோ  “தன் வேண்டுதல் செய்யா விடினும்,  இவன்
கோவிலுக்காவது சென்று வந்தால் கூட போதுமே”  என்ற எண்ணத்தில் இருக்க,
கதிரோ, “போக மாட்டேன்”  என்பது போல் பிடிவாதமாய் நிற்கவும் அவருக்கு இந்த
நிலையில் அழுவதை தவிர வேற என்ன செய்துவிட முடியும்,

அவரின் அழுகையில் ஆதங்கம் கொண்ட கதிர்,  “ம்மா.. நீ இத்தனை வருஷம்
எவ்வளவு விரதம் இருந்த, எத்தனை பேருக்கு உன்னால் முடிஞ்ச உதவி
செஞ்சிருப்ப, அவ்வளவு ஏன் இந்த குடும்பத்தில இருந்துகிட்டு  மனசுல கூட நீ
யாருக்கும் கேட்டது நினைச்சதில்லை”,

“அப்படியிருந்தும் உன்னை இப்படி நடக்கமுடியாம, பேசமுடியாம வலியோட ஒரே
இடத்தில படுக்க வச்ச,  அந்த சாமியை நான் கும்பிட போகணுமா..?
முடியாதும்மா..   நீ அழுதாலும் பரவாயில்லை, நான் கண்டிப்பா
போகப்போறதில்ல”,   என்று உறுதியாக சொன்னவன்  வெளியே கிளம்பிவிட,

லட்சுமி அம்மாளை பார்த்து கொள்ள வைத்திருந்த கேர் டேக்கர்  போன் செய்து,
“அம்மா எதுவும் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிப்பதாக சொல்ல”, உடனே விரைந்து
வீட்டிற்கு வந்தவன்,

அங்கு லட்சுமி அம்மாளுடன் படுக்கையில் அமர்ந்திருந்த மாறன், இவனை
பார்த்தவுடன் எப்போதும் போல் முகத்தை திருப்பிக்கொண்டு கோவமாக   எழுந்து
செல்ல, அதை எப்பொழுதும் போல் கதிரும் கண்டுகொள்ளாமல், தன் அன்னையிடம்
நெருங்கியவன் கோவமாக முறைக்க,  அவரும்  “உனக்கு நான் சளைத்தவளில்லை”
என்பது போல இவனை கோவமாக முறைத்து பார்த்தார்.

“ம்மா.. ஏன்ம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க, எனக்கு அதுல எல்லாம்
சுத்தமா நம்பிக்கையே இல்லை, அதுவும் உன் கஷ்டத்தை பார்க்க.. பார்க்க உன்
கடவுள் மேல் எனக்கு கோவம் தான் வருது,   நான் என்ன செய்யட்டும்..?”
என்று ஆத்திரமாக கத்தவே செய்தான்,

அவரோ “நீ என்ன வேண்டுமானாலும் கத்தி கொள்,  ஆனால் எனக்கு நீ கோவிலுக்கு
செல்ல வேண்டும் அவ்வளவுதான்”  என்பது போல்  பார்க்க, அவரின் பிடிவாதத்தை
தளர்த்த முடியாது என்று தெரிந்து கொண்ட கதிர்,

“போறேன்.. உனக்காக மட்டுமே போறேன்,  ஆனா கண்டிப்பா உன் சாமியெல்லாம்
கும்பிடவே மாட்டேன்”  என்று கத்தியவன், அதே கோவத்தோடு அவர்கள் வழக்கமாக
செல்லும் அம்மன் கோவிலுக்கும் சென்று அங்கிருக்கும் மரத்தடியில் அமர்ந்து
கொண்டான்,

அஞ்சலி தன் இஷ்ட தெய்வமான அம்மமனை வழிபட எப்போதும் போல் தன் அம்மாவுடன்
கோவிலுக்கு வந்தவள், அங்கு கதிருடன் வந்திருந்த  லட்சுமி அம்மாள் அவன்
பிறந்தநாளுக்கென்று  விஷேஷ அர்ச்சனை  செய்து கொண்டிருக்கவும் தான்
அஞ்சலிக்கு அன்று கதிரின் பிறந்த நாள் என்பதே தெரியும்,

அன்று முதல் அஞ்சலியும், அவன் பிறந்தநாளுக்கென  வழிபட வருடம் தவறாமல்
அம்மன் கோவிலுக்கு வந்துவிடுவாள், இந்த வருடமும் அவனின் நலனுக்காக வேண்ட
“தன் அன்னை மற்றும் ஸ்வேதாவுடன்” கோவிலுக்கு வந்திருந்திருந்தவளின்
கண்களில் பட்டான் கதிர்,

கதிர் கோவிலுக்கு வந்ததையே நம்பாமல் ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள்
அஞ்சலி. ஏனெனில் லட்சுமி அம்மாவிற்கு அப்படி ஆனதில் இருந்து அவன் கடந்த
ஒரு வருடமாக  எதற்குமே கோவில் பக்கமே வந்ததேயில்லை.

இன்று வந்திருந்தாலும் அவனின் முகத்தில் தெரிந்த கோவத்திலே அவன்
விருப்பமில்லாமல் தான் வந்திருக்கிறான் என புரிந்து கொள்ள முடிந்தது,
“ஒருவேளை அவரோட அம்மா சொன்னதுக்குக்காக வந்திருப்பாரோ..? அப்படி தான்
இருக்கும், அவருக்கு தான் அவருடைய அம்மான்னு ரொம்ப பிடிக்குமே. மத்தபடி
அவருக்கு  எப்பவுமே கடவுள் மேல் பெரிய ஈடுபாடே  கிடையாதே,   ஆனால்,
அதற்காக கடவுளே இல்லை எனும் வாதிடும் நாத்திகனும் இல்லை அவன்”,   இவை
எல்லாம்  இத்தனை வருடங்களில் அவனுக்கே தெரியாமல் அவன் பின்னாலே சுற்றி
தெரிந்து கொண்ட விஷயங்கள்,

 லட்சுமி அம்மாள் ஆட்கள் மூலம் எப்போதும் போல் அவன் பிறந்த நாளுக்கென்று
அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார், அது தெரிந்தும் அந்த பக்கம் கூட
செல்லாமல், கோபத்துடன் அமர்ந்திருந்த கதிருக்கு எதிர்ப்புறமே
அமர்ந்திருந்த அஞ்சலி,

நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை பார்ப்பதால் ஆசையோடும், காதலோடும்
பார்த்தாலும், இனி அவன் இன்னொரு..??  என்று  அதை பற்றி மனதில் கூட
நினைக்க முடியாமல்.. பிடிக்காமல்.. வலித்தாலும்,  இனி அதுதானே உண்மை
நிதர்சனம், ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று மனதிற்கு புரிந்தாலும்,
காதலின் வலியை,  இருந்த புள்ளி ஒரு சதவீத நம்பிக்கையும் தோற்று போன காதல்
தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் மிக கொடூரமாக வலிக்க தானே செய்கிறது.

“அஞ்சலி இப்போ ஏன் அதை பத்தியெல்லாம் நினைக்கிற..? நீ அழ.. வருத்தப்பட..
வேதனைப்பட இன்னும் காலம் நீண்டு இருக்கு, இப்போ அவரை ஆசைதீரமட்டும்,
ம்ஹூம்.. எத்தனை முறை பாத்தாலும் ஆசை தீரவா போகிறது”, என்று மனது புலம்பி
கொண்டிருந்தாலும்,  கண்கள் எல்லையில்லா காதலோடு அவனின் பிம்பத்தை படம்
பிடித்து வருங்காலத்திற்காக சேமித்து வைத்து கொண்டிருந்தது, இனி இது தானே
அவளுக்கு வாழ்நாள் துணை,

 “அஞ்சலி கிளம்புவோமா..” என்று மீனாட்சி மகளிடம் கேட்டவாறே எழுந்திருக்கவும்,

“இவ்வளவு சீக்கிரமாகவா..?”  இனி அவனை அடுத்து பார்க்கும் போது  அவன்..??
அதுவரை அவனை “என்னவனாக.. என் மன்னனாக.. என் மணாளனாக” பார்த்து கொள்கிறேனே
என்று காதல் மனம் ஏங்கவும், அஞ்சலிக்கு கண்களில் கண்ணீர் வருவது போல்
இருக்க, அவசரமாக கீழே குனிந்து தன் கண்ணீரை மறைத்தவள், சில நொடிகளில்
தானே மீண்டு,

“ம்மா.. நீங்க கிளம்புங்க, நான் இங்கே கொஞ்ச நேரம் இருந்துட்டு
வந்துடுறேன்” என்று கேட்க, அவள் எப்போதும் கோவிலில் சில நிமிடங்கள்
தனியாக அமர்வது வழக்கம் தான் என்பதால்,

“சரி.. நான் போய் கார் அனுப்புறேன்,  நீ சீக்கிரம் வந்துரு, அப்பா
இன்னிக்கு சென்னை கிளம்புறாரு, அவரை வழியனுப்பனும்”, என்று சொன்னவர்
ஸ்வேதாவை தன்னோடு கூப்பிட அவள்,  “அத்தையோடு வருகிறேன்”  என்று விட  அவர்
மட்டும் கிளம்பிவிட்டார்,

மரத்தடியில் அமர்ந்திருந்த கதிரின் பார்வை என்னமோ கோவிலின் கோபுரத்தில்
அமர்ந்திருக்கும் பறவைகள் மேல் தான் இருந்தது, தப்பி தவறி கூட அவன்
பார்வை  நன்றாக பார்க்கும் தூரத்தில் அமர்ந்திருந்த அஞ்சலியின் மேல்
படாது,

அது தெரிந்ததாலே அவனை முழுதாக பார்த்து ரசித்து தன் மனதுள் அவனை சேமித்து
கொண்டிருந்தாள் அஞ்சலி. கதிர் இப்பொழுது மட்டுமில்லை எப்பொழுதுமே
அஞ்சலியை பார்ப்பதில்லை, ஏன் எதிரிலே வந்தாலுமே அவன் பார்வை அவளை
தீண்டுவதில்லை,

“ஆகாத, எதிரியின் உறவு என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்”

தன்னை  சாதாரணமாக கூட பார்க்காதவனை நினைத்து மனம்  எப்போதும் போல்
இப்போதும் வலிக்கவே செய்கிறது, அப்படி இருப்பவன் மேலா தனக்கு காதல்
வரவேண்டும்..? எந்த நம்பிக்கையில் நான் அவனை காதலிக்கிறேன்..? அவன் மேல்
காதல் கொள்ள எப்படி  தன்  மனம் விரும்பியது..?” என்ற அவளின் மனசாட்சியே
அவளை பார்த்து தினமும் கேட்கும் கேள்விக்கு அவளிடம் எப்போதுமே பதில்
இருந்ததில்லை.

சில நொடிகளிலே கதிர் கிளம்ப எந்திருக்கவும், சாமியை கூட பார்க்காமல்
செல்பவனை துடிப்போடு பார்த்து கொண்டிருந்தவள், வேகமாக ஸ்வேதாவிடம் தன்
கையில் இருக்கும் திருநீறையும்.. குங்குமத்தையும் அவளின் கையில் கொட்டி
“அந்த மாமாவுக்கு வை”  என்று கதிரை கைகாட்டி அனுப்பிவைத்தாள்,

ஸ்வேதாவிற்கு எப்போதுமே மற்றவர்களுக்கு பொட்டு வைத்து, தலை வாரி
விளையாடுவது பிடிக்கும் என்பதால் அஞ்சலி சொல்லவும் ஜாலியாக கதிரிடம்
ஓடியவள்,

“மாமா..!!”  என்று கூப்பிட்டபடி   அவனின் சட்டையை பிடித்து இழுக்க,

“யார்ரா..  இது நம்மளை மாமான்னு கூப்பிடறது..?”   என்று நினைத்தவாறே கீழே
குனிந்து பார்த்தவன் “ஸ்வேதாவை அசோக்கின் மகள்”  என்று அடையாளம் கண்டு
கொண்டவன், அவளுக்கு நிகராக கீழே முட்டி போட்டு அமர்ந்தவாறே,

“என்னங்க மேடம்..?” என்று ஆதுரமாக கேட்க, நெற்றியை தொட்டு காட்டி பொட்டு
என்று தன் மழலை மொழியில் சொன்னவள், கையை விரிக்க அவள் ஓடிவந்ததில்
எல்லாம் சிதறி சிறிதளவே ஒட்டி கொண்டிருக்க, தன் விளையாட்டை செய்ய
முடியாமல் போகவும்  ஸ்வேதா உடனே அழுகைக்கு உதட்டை பிதுக்க ஆரம்பித்தாள்,
அவர்களையே பார்த்து கொண்டிருந்த அஞ்சலிக்கு  “அய்யோ..”   என்றானது,

ஸ்வேதா அழவும்,  “ஷ்ஷ்.. இப்போ என்ன எனக்கு பொட்டு வைக்கணும்
அவ்வளவுதானே.. வா”  என்று அவளை தூக்கி கொண்டு கோவிலின் உள்ளே சென்றவன்,
அய்யரிடம் அவள் கையிலே பொட்டு கொடுக்க செய்து அவள் கையாலே தன் நெற்றியில்
வைத்து கொண்டான்,

அவர்கள் பின்னாலே வந்த அஞ்சலி, உள்ளே வந்த பிறகும் அவன் சாமியை
பார்க்காமல் இருப்பதை கண்டு கொண்டு வேதனை படவே செய்தாள்,  அவர்கள் வெளியே
வரவும், அவர்களின் கண் படும் இடத்திலே நின்ற அஞ்சலியை கவனமாக
தவிர்த்தவன், ஸ்வேதாவிடம் மட்டும் விடை பெற்று கொண்டு செல்ல,

“தன்னை இப்பொழுதாவது ஒரு முறை பார்க்க மாட்டானா..?”  என்று உள்ளம் துடியா
துடிக்க ஏக்கத்தோடும்.. எதிர்பார்ப்போடும்  நின்றிருந்த அஞ்சலிக்கு,
அவனின்  தவிர்ப்பால்  கண்களில் கண்ணீர் நிறைய ஆரம்பித்தது,

அவனுக்காக ஒவ்வொரு நொடியும் ஏங்கும் தன்னை சாதாரணமாக கூட பார்க்க
செல்பவனை கண்களில் வலியோடும்.. காதலோடும் தொடர்ந்தவள்,  அவன் வெளியே
செல்லும் போது தெரிந்தவர் பேசவும் அவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தவனை..

“இன்றோடு உலகம் முடிவது போல்”  எல்லையில்லா காதலை கண்களில் தேக்கி
கண்களில் கண்ணீர் தேங்க  உச்சி முதல் பாதம் வரை அவனை பார்த்து ரசித்து
கொண்டிருக்க,

“கதிரோ..” தன்  கண் முன் கண்ட காட்சியில்  ஷாக்கடித்தது போல்
அதிர்ந்தவன்,  நம்ப முடியாமல்  மேலும் நன்றாக பார்க்க.. பார்க்க அதிர்வு
மறைந்து கடலளவு கோவம் கொண்டு உடல் இறுகியவன், சட்டென்று அந்த இடத்தில்
இருந்து வேகமாக நகர்ந்தவன்,  புல்லட்டை  எடுத்துக்கொண்டு சடுதியில்
மறைந்தும் விட்டான்.
அதுவரை அவனையே பார்த்து கொண்டிருந்த அஞ்சலியிடம் வந்த தங்கதுரை
“அஞ்சலிம்மா.. போலாமா..?”  என்று கேட்கவும், கீழே குனிந்து தன் கண்ணீரை
துடைத்தவள், “கிளம்பலாம்” என்பது போல் தலையாட்டும் போது,

“கதிர் தம்பி கிளம்பிருச்சா..? என்று அவசரமாக கேட்டு  கொண்டே பூசாரி வர,
அஞ்சலி தங்கதுரையை பார்க்க, அவளின் பார்வையை புரிந்து கொண்டவர்,

“என்ன பூசாரி..? ஏன் கதிர் தம்பியை கேக்கிறீங்க..?”

 “அது.. அவங்க அம்மா எப்பவும் அவர் பிறந்த நாளைக்கு அம்மன் கயிறை கையில
கட்டுவாங்க,  இந்த வருஷம் தான் அந்த மகராசிக்கு அப்படி ஆயிடுச்சே.  அதான்
என்னை செய்ய சொல்லி  ஆள் மூலமா சொல்லிவிட்டிருந்தாங்க, சரின்னுட்டு நான்
பூஜை செஞ்சு கயிறை எடுத்துட்டு வரத்துக்குள்ளே கிளம்பிட்டாரே,   நானும்
இப்போ கோவில் நடையை சாத்திட்டு கிளம்பணுமே..  என்ன செய்ய..?” என்று
புலம்ப,

“அதுக்கென்ன பரவாயில்லை கொடுங்க சாமி, நான் கொடுத்துடுறேன்” என்று
தங்கதுரை அஞ்சலியின் கண்களில் வேண்டுகோளுக்கு இணங்க கேட்கவும்,

“இல்லை நீங்க எப்படி..?”   என்று அவர்களின் பகை தெரிந்தால் அவர்
தயங்கவும், தங்கதுரை அவரை சமாதானம் செய்து வாங்கிவர, அஞ்சலி அந்த கயிறை
தன் கைகளில் வாங்கி வேண்டுதலோடு கண்களில்  ஒற்றி  கொண்டவள்,

“அண்ணா.. இது அவரோட அம்மா அவருக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப இருந்து எல்லா
வருஷமும் கட்டி விடுவாங்க, இந்த வருஷமும்  எப்படியாவது சாமி கயிறை அவர்
கையில இன்னிக்கு சேர்த்துடனும், இப்போ அவரு நர்சரில தான் இருப்பாரு,
என்னை சீக்கிரம் வீட்ல விட்டுடுங்க, நான் நம்ம வீட்ல இருந்து எப்பவும்
போல என் வண்டியிலே  போய்  அவர் கிட்ட சேர்த்துடுறேன்”  என்று சொன்னவள்,
சொன்னது போல்,

முகத்தை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு “தன் வெஸ்பாவில்”  கதிரின் நர்சரியை
அடைந்து விட்டவள், கேட் மூடியிருக்க உள்ளே அவனின் புல்லட் நிற்பதை
பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவளுக்கு, “அடுத்து சாமி கயிறை  எப்படி
அவனிடம் சேர்ப்பது..?”  என்று ஒரு வழியும் புலப்படாமல் யோசனையாக
நின்றிருந்தாள்,

“கொளுத்தும்  மதிய நேர வெயில்  அவளை தகிக்க, அளவுக்கதிகமான வெயிலால்
தொண்டை வேறு வரள,  வெகு நேரம் துப்பட்டா கட்டியிருப்பதால்  முகமெல்லம்
வேறு எறிய ஆரம்பித்தது”,

எதையும் பொருட்படுத்தாமல் கதிரிடம் சாமி கயிறை சேர்ப்பது மட்டுமே
எண்ணமாக  வெளியிலே ஒரு  மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி கொண்டு
தவியாய் தவித்தவாறே இருக்கவும்,  அவளின் நல்ல நேரம், ஒரு வயதான அம்மா
கேட்டை திறந்து கொண்டு வந்தவர், அவளை பார்த்து விட்டு,

“என்னம்மா..?  செடி ஏதாவது  வேணுமா..?” என்று கேட்டார்,

“இல்லை.. அது அது.. உங்க சின்னய்யாகிட்ட கொடுக்க சொல்லி இந்த சாமி கயிறை
கோவில் பூசாரி கொடுத்து விட்டாரு அதான், நீங்க அவர்கிட்ட
கொடுத்துடரீங்களா..?” என்று கெஞ்சலாக கேட்டாள்,

அவரும் சரி என்று வாங்கி கொண்டு செல்லவும், “ஆஆ.. அம்மா.. சாமி கயிறை
இன்னிக்கே கட்டிக்க சொல்லி பூசாரி கண்டிப்பா சொல்லிருக்கார்ன்னு சொல்லி
கொடுங்க..”

 “சரிம்மா.. நான் சொல்லடுறேன்”

 “மறக்காம, பத்திரமா கொடுத்துடுங்க..”  என்று கெஞ்சுபவளை  சந்தேகமாக
பார்த்தவாறே அந்த அம்மா உள்ளே சென்று கேட்டை மூடி கொள்ளவும், சிறிது
நேரம் அங்கேயே நின்று அவனின் நர்சரியை பார்த்தவள், பின் கிளம்பியும்
விட்டவள்,

வீட்டிற்கு வந்தவுடனே துப்பட்டாவை கழட்டி எறிந்துவிட்டு சில் தண்ணீரில்
முகம் கழுவிவிட்டு, லதா கொடுத்த  முழு பாட்டில் தண்ணீரையும் வேகமாக
குடித்தவளை பார்த்து கொண்டிருந்த லதா,

“எதுக்கு உனக்கு இந்த பாடு அஞ்சலி..? இந்த வேதனை, கஷ்டம் எல்லாம் உனக்கு
தேவையா  சொல்லு..?”  என்று  அவளின் கஷ்டத்தில் ஆதங்கமாக கேட்டார்,

அவரின் கேள்வியில் விரக்தியாக சிரித்த அஞ்சலி, “இதுக்கு எனக்கு பதில்
தெரியும் போது,   நான் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன் அண்ணி..”
என்றுவிட்டு  தன் ரூமினுள் வந்து  ஓடும் பேனை பார்த்தவாறே  படுத்தவளின்
மனது கதிரிடம் தான் சென்றது,

இப்பொழுது மட்டுமில்லை, தன்னை அவன் காப்பாற்றிய  நொடியிலிருந்து அவனை
பற்றி தான் தான் மனம் அதிகமாக நினைத்தது,  “முதலில் ஆச்சரியமாக பார்த்த
மனது, பின் ஆராய்ச்சியாக பார்த்தது”,

அடுத்து அவனின் குணத்தில், தைரியத்தில், நேர்மையில், அவனின் கொள்கைகளில்,
பிரமிப்பாக பார்த்த மனது அதோடு நின்றிருந்தால்..  கூட போதுமே, ஆனால்
வளர..  வளர..  அவனின் கம்பீரத்தில்,  ஆண்மையின் அழகில் அவனை ரசிக்கவே
ஆரம்பித்த தன் மனம்,  எப்பொழுது காதலாக மாறியது..?  என்று,

அவனுக்கு ஆக்சிடென்ட் நடந்த போது,   “தான் தவித்த தவிப்பிலும்,
அழுகையிலும், பயத்திலும் தானே தெரிந்தது”.   தெரிந்தபோதோ..   “தன் காதலை
நினைத்து மகிழவும் முடியாமல்.. அவனை மறக்கவும் முடியாமல்.. அவன் மேல்
தான் கொண்ட காதல்,  தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து தன் உயிரோடு..
இன்னொரு உயிராக  இரண்டற  கலந்திருந்தது,

தன் காதல் கொண்ட மனதிற்கு அப்பொழதும் சரி, இப்பொழுதும் சரி..
தங்ககளுக்குள் இருக்கும் பகையும், வேற்றுமையும் தெரிவதே இல்லை,  தன்
மனதிற்கு தெரிந்தது எல்லாம் கதிர்.. கதிர்.. கதிர் மட்டுமே,

இரவு உணவிற்கு பிறகு, தன் ரூமிற்குள் வந்த அஞ்சலி, தன் வழக்கமான ஜன்னல்
திட்டில் ரோட்டை பார்த்தவாறே அமர்ந்தாள், இன்னும் சிறிது நேரத்தில் கதிர்
அவர்கள் வீட்டு வழியாகத்தான் அவர்களுடைய மில்லில் இருந்து அவன் வீடு
திரும்புவான்,

அவனை பார்க்கும் அந்த சில நொடிகளுக்காக காதலாக காத்திருக்க ஆரம்பித்தாள்,
ஆனால் அவன் எப்பொழுதும் வரும் நேரம் தாண்டியும் இன்று அவன் வராமல்
இருக்க, அஞ்சலியும் விலகி போகாமல்  உள்மனம் உந்த அங்கேயே தான்
அமர்ந்திருந்தாள்,

அவளின்  காத்திருப்பு இரண்டு மணி நேரம் நீண்ட போதும் அவள் அந்த இடத்தை
விட்டு  சிறிதளவு கூட அசையாமல் கண்களில் கண்ணீர் தேங்க அமர்ந்திருந்தாள்,
நாளை அவள் சென்னை கிளம்ப வேண்டும், அதோடு அவள் அப்படியே  “MS படிக்க
வெளிநாடு செல்வது என்று கதிரின் திருமணம் தெரிந்த உடனே  முடிவெடுத்து
விட்டவள்”,

அதை பற்றி  தன் வீட்டில் பேசவும், இறுதியாக தன்னவனை பார்க்கவுமே ஊருக்கு
வந்தவள், அவள் இஷ்டபடி அவனை நன்றாக பார்த்துவிட்டாலும், போதாமல் இன்னும்
இன்னும் அவனை பார்க்க ஏங்கவே, அவ்வளவு நேரமாகியும் அவனுக்காக
காத்திருந்தவள் அவன் வராமல் போக, மடியில் முகம் புதைந்து கதறவே செய்தாள்,

“அவன் திருமணத்தை நினைத்து, தன் காதல் தோற்பதை நினைத்து, நரக வேதனையாக
மனம் துடிக்க அழுது கொண்டிருந்தவள்”, அவனின் வண்டியின் ஹார்ன்
சத்தத்தில், உயிர் வந்தது போல் முகம் ஒளிர வேகமாக நிமிர்ந்தவள்,

கதிர் செல்வதை தெரு விளக்கின் உதவியுடன் நன்றாகவே பார்த்தவளின் அலையாய்
துடித்த மனம்..  அவனை கண்ட பிறகு  ஆழ்கடல் போல் சட்டென அமைதியானது.
மறுநாள் காலையிலே வீட்டில் எல்லோரும் இருக்க தன் தந்தையிடம் தான் பாரின்
சென்று MS படிக்க போவதை சொல்ல, மகளின் முடிவை சுந்தரம்  எதிர்க்கவே
செய்தார்,

அவர் மட்டுமில்லை அன்னையும், அண்ணியும் முடியாது என்றே மறுக்க, அவர்களை
எப்படி சமாதானபடுத்துவது என்று புரியாமல் கைகள் பிசைய நின்றவளுக்கு,
எதிர்பாரா விதமாக அசோக்கிடமிருந்து  சப்போர்ட் கிடைக்க, ஒரு வழியாக  அவள்
பாரின் செல்வது என்று முடிவெடுக்க பட்டது,

Advertisement