Advertisement

“நீங்க எனக்கு  எதுக்கு தாலி கட்டினீங்கன்னு மறந்து போச்சா..? எங்க
அப்பாவை பழிவாங்கதானே தாலி கட்டுனீங்க, அப்பறம் எந்த அர்த்தத்துல நீங்க
என்கிட்ட இதெல்லாம் எதிர்பாக்குறேங்க..?” என்று தானும் கோவம் கொண்டு
பேசியவளை பார்த்த கதிர்,

“ஓஹ்..  அப்போ நான் பழிவாங்கதான் உனக்கு தாலி கட்டி உன்னை என்
பொண்டாட்டியாகிட்டேன் நீ உறுதியா நம்புறேன் அப்படிதானே..?” என்று சட்டென
தோன்றிய வெறுமையுடன் கேட்டான் கதிர், அவனின் வெறுமையை உணராத அஞ்சலி,

“ஆமா, எனக்கு நல்லா தெரியும், அதைத்தவிர உங்ககிட்ட வேறெந்த காரணமும்
இருக்க வாய்ப்பே இல்லை..!!”, என்று திண்ணமாக மறுத்தவள்,

“அதனால் என்கிட்ட இந்த மனைவிங்கிற கடமையையோ, உரிமையையோ எதையுமே
எதிர்பாக்காதீங்க”, என்று வெடித்தவள், பெட்ஷீட்டை இழுத்து கீழே  விரித்து
படுக்க போனவளை, கையை பிடித்து நிறுத்தியவன்,

“இப்போ நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு புரியல, கொஞ்சம் தெளிவா சொல்லு..”
என்று இன்னதென்று புரியா முகபாவத்துடன் கேட்டவனை பார்த்த அஞ்சலி,
கடுப்பாக,

“அதான் சொன்னேன்இல்லை, என்கிட்ட மனைவிங்கிற உரிமையை, கடமையை எதுவும்
எதிர்பாக்காதீங்கன்னு”, என்று மறுபடியும் எரிச்சலில் சொல்ல,

“ஓஹ்.. அப்போ என் பொண்டாட்டிங்கிற உரிமை, கடமை எதுவுமே இல்லாத உனக்கு என்
வீட்ல, என் பெட்ரூம்ல என்ன வேலை..?”  என்று மிக அழுத்தத்துடன் கேட்டான்,
அவனின் கேள்விக்குண்டான பதிலில் அதிர்ந்த அஞ்சலி, பயத்துடன் அவனை
பார்க்க,

“சொல்லு, என் பொண்டாட்டியா இல்லாத  உனக்கு இங்க என்ன வேலை..?” என்று மிக
தீவிரத்துடன் கெட்டவன், அவளின் பதிலை எதிர்பார்ப்பது போல், அவளையே
உறுத்து பார்க்க, அவனின் இடக்கான கேள்வியில் பதில் சொல்ல முடியாமல்
திணறிய அஞ்சலி,

“நீங்க என்ன கேட்கறீங்கன்னு தெரிஞ்சுதான் கேட்கிறீங்களா..? என்று முதல்
நாளே தன்னிடம் இப்படி கேட்கும் கணவனை பார்த்து ஆத்திரத்துடனும்,
ஆதங்கத்துடனும் கேட்டாள்,

 ” என்னோட பொண்டாட்டியா நீ இருக்க மாட்டேன்னு  நீ தானே சொன்ன,  நீ சொன்ன
வார்த்தைகளுக்கான பதில் கேள்விதான் இது..? அதனால அந்த கேள்விக்குண்டான
பதிலை நீதான் எனக்கு சொல்லணும், சொல்லு..?” என்று மல்லுக்கு நின்றான்
கதிர்,

அவனின் கேள்வியில் கொதித்த அஞ்சலி, “என்னை நினைச்சுட்டு இருக்கீங்க
நீங்க..? முதநாளே என்கிட்ட இப்படி கேட்க உங்களால எப்படி முடிஞ்சுது..?
நீங்க வான்னு சொன்ன வரணும், போன்னு சொன்ன போயிருனுமா..? இதுக்குத்தான்
என்னை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தீங்களா..?”  என்று வெடிக்க,

“நான் உன்னை போன்னு சொல்லவேயில்லேயே..?” என்று கதிர் நிதானமாக வினவ,
அவனின் நிதானத்தில், கேள்வியில், மேலும் கொந்தளித்த அஞ்சலி,

“அப்போ நீங்க என்கிட்ட கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்..? எனக்கு இங்க
என்ன வேலைன்னு கேட்டீங்களே..? அதுக்கு இதுதான் மீனிங்”,

“ம்ஹூம்.. என்னோட கேள்விக்கு இது மீனிங் கிடையாது,  நான் உன்னை என்
பொண்டாட்டியா என்கூட வாழணும்ன்னு தான் கூட்டிட்டு வந்தேன், ஆனா நீதான்
என்னோட பொண்டாட்டியா நீ இருக்க மாட்டேன்னு சொன்ன”,

“நான் அப்படி சொல்லலை, என்கிட்ட பொண்டாட்டிக்கான உரிமை, கடமையை
எதிர்பாக்காதீங்கன்னு தான் சொன்னன்..”  எனும்போதே அஞ்சலி குரல் மெலிதாக
உள்ளே சென்றுவிட்டது, அதை உணர்ந்து உள்ளுக்குள் சிரித்து கொண்ட கதிர்,
வெளியே விறைப்புடன்,

“நானும் உன்கிட்ட இதைத்தான் கேட்கிறேன், நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்,
என் பொண்டாட்டியா நீ என்கூடவே இருப்ப, ஆனா அதற்கான எந்த கடமையும் செய்ய
மாட்ட, நானும் உன்கிட்ட என் பொன்டாட்டிங்கிற எந்த உரிமையும் எடுத்துக்க
கூடாது அப்படித்தானே..?”, என்று

 மிக தெளிவாக கேட்டவனை, எரிச்சலுடன் பார்த்த அஞ்சலி, “கொஞ்சம்
அப்படித்தான்..” என்று ஒப்புக்கொள்ளவே,

“இப்போ நான்  என்ன உன்கிட்ட  கேட்கிறேன்னா..? நான் ஏன் இதுக்கு
ஒத்துக்கணும்ன்னு..? ஊர் அறிய, இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி உன்னை என்
பொண்டாட்டியா, என்கூட வாழத்தான் கூட்டிட்டு வந்தேன், ஆனா நீ என்னை உன்னோட
புருஷனா ஏத்துக்க முடியாதுன்னு சொல்ற, அப்போ இந்தஇடத்துல நான் என்ன
செய்யணும்ன்னு நீ என்கிட்ட எதிர்பாக்கிற..?” என்று தீர்க்கமாக கேட்டவனை,
எரிச்சலுடன் பார்த்த அஞ்சலி,

“என்கழுத்துல நீங்க வம்படியா தாலி கட்டிறதுக்கு முன்ன இதையெல்லம் நீங்க
யோசிச்சிருக்கணும்”, என்று கடுகடுத்தவளை,

“ஓஹ்.. அப்போ என்னை பிடிக்காத நீ,  நான் வம்படியா கட்டின தாலியை கழட்டி
எறிஞ்சிட்டு, உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சுக்க
வேண்டியதுதானே..? ஏன் செஞ்சுக்கல..?” என்று சுந்தரத்தை போல் நுணுக்கி
கேள்வி கேட்ட கதிரை,

வெறுமையாக பார்த்த அஞ்சலி பதில் சொல்லமுடியாமல் நின்றாள், அவளின்
வெறுமையில் கூர்மையாக நோக்கிய  கதிர், “சொல்லு, இதுக்கு என்ன வழி..?”
என்று பிடிவாதமாக நின்றான்,

அவனின் பிடிவாதத்தை உணர்ந்து உள்ளம் கொதித்த அஞ்சலி, இவர்கிட்ட இப்படி
போராடுறதை விட பேசாம அப்பாகிட்டே போயிடலாமா..?  என ஓர் நொடி தோன்றவே
செய்தது,

“அப்படி சென்றுவிட்டாள் என்ன ஆகும்..?” என்று தோன்றியவுடன் முதலில்
“அவளின் நெகிழ்ந்த காதல் நெஞ்சத்திற்கு..!!”  ஞாபகத்திற்கு வந்தது கதிர்
தான்,

“தான் சென்றுவிட்டால்..!!, இவ்வளவு பிரச்சனைகளை வெற்றிகரமாக கடந்து தன்னை
உலகறிய மனைவியாக அங்கீகரித்த அவனின்  கவுரவம், மரியாதை, எல்லாம்
என்னவாகும்..?”

அடுத்து “அவளின் தந்தை மற்றும் மாமனாரின் மரியாதை என்னவாகும்..?” அடுத்து
“அசோக்கின் நட்பு, அடுத்து இருதரப்பு மக்களிடையே உண்டாகும் பிரச்சனை”,

இவை எல்லவற்றையும் விட, “கதிரை பிரிந்துவிட்டு சென்றால், தன் தந்தையை
எப்படி சமாளிப்பது..? அது முடியாமல் தானே, நான் இவருடனான மணவாழ்விற்கு
சம்மதித்தேன்”, என நொந்தவளுக்கு,

“கதிரிடம் பேசுவதை தவிர வேறு வழியில்லை..” என்று யோசித்து தெளிந்தவள்,
தன்னை பார்த்தவாறே நின்றிருந்த கணவனிடம்,

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..”  என்று கேட்க,

“எதுக்கு டைம்..?”  என்று அவள் கேட்க வருவது புரிந்தும், புரியாதது போல் கேட்க,

 “உங்க பொண்டாட்டியா நடந்துக்க..” என்று அவனின் நடிப்பில் ஆத்திரத்துடன்
வெடித்தவளை,

ம்ம்.. எதுவரை உனக்கு டைம் வேணும்,

“ஒரு மூணு வருஷம்..!!”  என்று வேகமாக கேட்டவளை, பல்லை கடித்து முறைத்த கதிர்,

“அப்போ நீ  அந்த மூணு வருஷமும் உங்க அப்பா வீட்லே இருந்துக்கோ, அப்பறம்
வந்து நான் உன்னை கூட்டிட்டு வரேன்”, என்று நக்கலாக சொன்னான்,

“என்ன..?” என்று அதிர்ந்தவள், “அட்லீஸ்ட் ஒரு வருஷம்..”  என்று இழுக்க,

“மூணு மாசம் உனக்கு டைம்..” என்று உறுதியாக முடிக்க,

“என்னது மூணு மாசம்தானா..? முடியாது..”  என்று அவசரமாக மறுத்தவளை,
பொருட்படுத்தாத கதிர்,

“அந்த மூணு மாசம் டைம் கூட இதுக்கு தான்”, என்று கட்டிலை காட்டி
சொன்னவன்,  “மத்தபடி எனக்கு எல்லாமே, A டு Z ஒரு பொண்டாட்டியா  நீதான்
செய்ற”, என்று இதுதான் என் முடிவு என்பது போல் கட்டிலில் கால் நீட்டி
படுத்துவிட்டான்,

அவனின் முடிவில், கோவம் கொண்ட அஞ்சலி, “அதெல்லாம் ஒத்துக்க முடியாது..”
என்று சிறிதுநேரம் விடாமல் மறுத்தும், அவளை கண்டு கொள்ளாமல் படுத்திருந்த
கணவனை கண்டு வெந்தவள், இயலாமையுடன் கீழே படுக்க போக,

“ம்ஹூம்.. என் பக்கத்துல தான் படுக்கணும்”, என்று கதிர் சொல்ல,

“அதெல்லாம்  படுக்க முடியாது, நீங்க ரொம்ப ஓவராதான் போறீங்க,” என்று
மீண்டும் மறுத்து சண்டையிட்டவளை,

“அப்போ நீ தனி ரூம்ல படுத்துக்கோ”, என்று ஒரேவரியில் முடித்துவிட்டான்,

அவனை பற்றி நன்கு தெரிந்த அஞ்சலி, உள்ளம் கொதித்தவாறே அவனின் பக்கத்தில்
முடிந்தவரை ஓரமே ஒடுங்கி படுக்க, வாய்க்குள் சிரிப்பை அடக்கி
கொண்டிருந்தான் கதிர்,

மறுநாள்  காலை ஆறுமணிக்கு மனைவியை எழுப்பிவிட்டவன், “காபியோடு நியூஸ்
பேப்பர் வேணும்..”  என, முதலில் புரியாமல் பார்த்தவளை,

“என்ன எல்லாம் மறந்துபோச்சா டாக்டர்   மேடத்துக்கு.?” என்று முறைக்க,
புரிந்து நொந்தவள், குளித்துவிட்டு தானே கிச்சனுக்கு சென்று பால்காய்ச்சி
கணவனுக்கு காபி, நியூஸ் பேப்பர் கொண்டுபோய் கொடுக்க, ஹாலில் இருந்த
எல்லோருமே இதை அதிசயமாகத்தான் பார்த்தனர்,

அதிலும் அசோக்கிற்கு, மனைவியின் புண்ணியத்தில் இரவு முழுதும்
தூங்காததால், இப்போ தூங்கி கொண்டே  “கனவு எதுவும்  காண்கிறோமோ..?” என்று
கண்களை நன்றாக தேய்த்துவிட்டு பார்த்தவனுக்கு நேரெதிரே நின்றிருந்த
லதாவின் முறைப்பு தெரியவும்,

“இதுகனவு இல்லையே, அப்பறம் எப்படி இந்த திடீர் மாற்றம்..? என்னடா
நடக்குது இங்க..? நைட் ரெண்டு பேருமே கோவமா தானே இருந்தாங்க,  ஒரு நைட்ல
எப்படி இந்த மாற்றம்..?” என்று யோசித்து மண்டையை உடைத்து கொண்டிருந்தான்,

மேலே சென்ற அஞ்சலி கதிரிடம் காபியை கொடுக்க, “உனக்கு..?” என்று
கேட்டவாறே, மறுத்த அவளுக்கு வம்பாக கப்பில் ஊற்றி கொடுத்துவிட்டு, தானும்
ஊற்றி குடித்தவாறே பேப்பர் படித்தவனின் அட்ராசிட்டியில் வெந்து
கொண்டிருந்த அஞ்சலியிடம்,

“நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள, டிபன் ரேடி செஞ்சுடு”, என்று குளிக்க
போகவும், நொடித்து கொண்டே கீழே கிட்சனிற்கு வந்தவள், அங்கு நாயகி, லதாவை
காணவும், லேசாக சிரித்தவாறே,

“அண்ணி அவருக்கு டிபன் செய்யணும்..” என,

“உன் புருஷனக்கு நீயே டிபன் செய்..” என்று உள்ளம் குளிர்ந்த நாயகி
மற்றும் லதா, அவளுக்கு உதவவும், முதலில் இனிப்பை செய்தவள், அடுத்து டிபனை
செய்து முடிக்கவும்,

கீழே வந்த கதிர், அசோக்கை கூட்டி கொண்டு, சாப்பிட வர,  “கதிரின்
கண்பார்வையில் தானே அவனுக்கு அருகில் நின்று பரிமாறி, அசோக்கிற்கு நெஞ்சு
வலியை வரச்செய்தாள் கதிரின் மனைவி”.

Advertisement