Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 16

“அஞ்சலி..  முதல்ல சாமிக்கு விளக்கேத்திடலாம்.. வாங்க..”  என்று
புதுமணமக்களுக்கு ஆரத்தி எடுத்த கையோடு தம்பியையும்,அவனுடைய  மனைவியையும்
 பூஜை ரூமிற்கு அழைத்து சென்ற நாயகி, அஞ்சலிக்கு   விளக்கேற்ற உதவி
செய்ய,

அஞ்சலியும் மனதார இறைவனை வேண்டியபடி விளக்கேற்றி வழிபட, நம் கதிர்
“யாருக்கோ வந்த விருந்தோ..?” என்பது போலே நின்றிருந்தான். நாயகி அவனை
சாமி கும்பிடும்படி சொல்ல, “ம்ப்ச்..” என்றவன் முகத்தை
திருப்பிக்கொண்டான்.

 அஞ்சலி  இதை கவனித்தாலும், ஏதும் சொல்லாமல் வழிப்பட்டு விட்டு வெளியே
வர, அடுத்து பால்பழ சம்பிரதாயத்திலும் கதிர் பேருக்கே பங்கேற்று
செய்தவன், சடங்கு எல்லாம் முடியவும்,

“நாங்க கிளம்புறோம்..”  என்று தன் தந்தையிடம் சென்று நின்றான். அவன்
சொன்னதை கேட்டு அதிர்ந்த மாறன்,

 “எங்க கிளம்புறீங்க..?” என்று வேகமாக கேட்டார்,

“வேற எங்க, என்னோட தோட்ட வீட்டுக்கு தான்..”

“அங்க எதுக்கு தம்பி..? இங்கேயே இருந்துக்கோ”, என்று மாறன் சிறிது
வேண்டுகோளாகவே கேட்டார்,

“இல்லப்பா.. எனக்கு இங்க தங்க சரிப்பட்டு வராது, நான்  எப்பவும் போல
அஞ்சலியோட அங்கேயே இருந்துக்கிறேன்..”  என்று அதிர்ப்தியுடன் சொன்ன சின்ன
 மகனின் கோவத்தை மாறன் உணர்ந்துதான் இருந்தார்,

அவ்வீட்டின் பெரிய மருமகள்கள் இருவரும் பேருக்கு விருந்தில் தலை
காட்டியதோடு சரி, அஞ்சலியிடமும் சென்று ஒரு வார்த்தை கூட பேசாமல்
கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டவர்கள்,

இதோ மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் வீட்டிற்கு வந்த பிறகும் அவரவர்கள்
ரூமிலிருந்து வெளியே வரவேயில்லை, ஏன் ஆரத்தி எடுக்கவுமே, அழைத்து வந்த
மாப்பிள்ளை, பொண்ணை வெளியேவே நிற்கவைத்துவிட்டு நாயகி தான்
ஓடவேண்டியிருந்தது,

“ப்பா.. எப்படியும் நான் இங்க தங்குற ஐடியாவிலே இல்லைன்னு உங்களுக்கு
முன்னமே சொல்லிட்டேன், அம்மா வாழ்ந்த வீட்டில அஞ்சலி முதல்முதலா காலடி
எடுத்து வைக்கணும்ன்னு தான் நேரே இங்க கூட்டிட்டு வந்தேன்”,

“அதனால நீங்க என்னை நினைச்சு கவலைபடவேண்டாம், இதெல்லாம் நாம முன்னாடியே
எதிர்பார்த்தது தானே அப்பறம் என்ன, விடுங்கப்பா”, என்று ஆறுதல் சொன்னவன்,
சிறிது நேரத்திலே தந்தை, அக்கா உடன் வர, மனைவியை அழைத்து கொண்டு தோட்ட
வீட்டிற்கு வந்துவிட்டான்,

“இங்கே ஏன்..?” என்று அஞ்சலி மனதில் குழம்பினாலும், யாரையும் எதுவும்
கேட்காமல் அமைதியாகத்தான் இருந்தாள், தோட்ட வீட்டில், அசோக் மனைவி
லதாவுடன் காத்துக்கொண்டிருக்க, இவர்கள் வந்தவுடன், லதா ஏற்கனவே தயாராக
வைத்திருந்த ஆரத்தியை நாயகியிடம் கொடுத்து எடுக்க செய்ததும்,

கதிர் அஞ்சலியின் கையை பற்றியபடி நேரே உள்ளே இருக்கும் சிறு அறைக்கு
அழைத்து சென்றவன், அஞ்சலியை பார்க்க,  அவள் அங்கு சுவரில் நடுநாயகமாக
பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்த லட்சுமி அம்மாள் போட்டோவையே  பார்த்து
கொண்டிருந்தாள்.

“அஞ்சலி..”  என்று கதிர் அழைக்கவும், முதல்முதலாக தன் பேரை சொல்லி
கூப்பிடும் கணவனை ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள், அவனோ அவளின்
ஆச்சரியத்தை கவனிக்காமல், அங்கிருக்கும் விளக்கை கண்ணால் காண்பிக்க,
புரிந்து கொண்டவள், மாமியாரை மனதார வேண்டியப்படி விளக்கேற்றி வணங்கி
விட்டு, திரும்பி கணவனை பார்த்தாள்,

கைகளை கட்டிக்கொண்டு தன் அம்மாவின் போட்டோவை தீவிரமாக பார்த்து
கொண்டிருந்த கதிரின் கண்களில் தெரிந்த நிராசை, கோவம், ஆற்றாமை, ஆதங்கம்
என எல்லாவற்றையும் புரிந்து கொண்ட அஞ்சலிக்கு கணவனின் மனநிலையை நினைத்து
வருத்தமாக இருந்தாலும், எதுவும் பேசாமல், அவனை தொந்தரவும் செய்யாமல்,
தானும் அங்கேயே நின்று கொண்டாள்.

சிலபல நிமிடங்கள் கடந்தபின்னே அசைந்த கதிரின் கண்களில் ஏறியிருந்த
சிவப்பு, அவனின் அடக்கப்பட்ட  துக்கத்தை  தான் காட்டியது. பக்கத்தில்
நின்று தன்னையே பார்த்து கொண்டிருக்கும் மனைவியின் கையை பிடித்தபடியே
வெளியே கூட்டிவந்தவன், அங்கு அமர்ந்திருந்த மாறனிடம் சென்று நின்றான்.
அவர் புரியாமல் பார்க்கவும்,

“எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கப்பா..” என்றவாறே மனைவியுடன் தந்தையின்
காலில் விழவும், அவசரமாக எழுந்துநின்ற மாறன், லக்ஷ்மியின் நினைவில்
மெலிதாக கண்கள் கலங்கியபடி, மனதார,

“ரெண்டு பெரும் கணவன் மனைவியா எல்லா செல்வமும் பெற்று நூறு வருஷம்
சந்தோஷமா வாழனும்”, என்று ஆசீர்வதித்தார்,  அடுத்து தன் “அக்கா நாயகி
மற்றும் அக்கா கணவர் மாணிக்கம்..” காலிலும் தம்பதியாக விழுந்து
ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

“அஞ்சலி..  கதிர் ரூம் மேல இருக்கு பாரு, போய் கொஞ்சநேரம் ரெஸ்ட்
எடுத்துக்கம்மா”, என்று நாயகி, அஞ்சலியின் சோர்ந்த முகத்தை பார்த்து
பரிவாக சொல்லவும்,

“சரி அண்ணி..” என்றவள், கதிர் தன்னை பார்ப்பது  உணர்ந்தும், அவனை
பார்க்காமலே லதாவுடன் மேலேறிவிட்டாள், கதிரிற்கு “அஞ்சலியின் நாசூக்கான
ஒதுக்கம்” புரியாமல் இல்லை,

எதாவது சொன்னால் மட்டும் செய்பவள், மற்ற நேரத்தில் அமைதியாகவே நிற்பாள்,
அவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை, அதே சமயம் இறுக்கமாகவும்
இல்ல, ஓர் சலனமில்லாத முகத்துடனே இருந்தாள்,

பிறந்த வீட்டாரிடம் இருந்து கோவிலில் விடைபெறும்போதும், அடக்கப்பட்ட
அழுகையுடன் நின்றாளே தவிர, அழுகவில்லை, “நீங்கள் சொல்வதை செய்வது மட்டுமே
என் கடமை.!!” என்பது போலே இருந்தாள்.

பெரிய  வீட்டிற்கு கூட்டிச்சென்ற போதும் அமைதியாகவே வந்தவள், இங்கு தோட்ட
வீட்டிற்கு கூட்டி வந்தபோதும் எதுவும் கேட்காமல் அமைதியாக தான்
இருந்தாள், “எங்கு கூட்டிச்சென்றாலும் வருவேன், அதனால் எனக்கென்ன..?”
என்ற எண்ணத்துடனே மேலேறி சென்று கொண்டிருப்பவளை  வெறுமையான கண்களுடன்
பின் தொடர்ந்தான் கதிர்,

“நீ உள்ளே போய் ரெஸ்ட் எடு அஞ்சலி..”  என்றுவிட்டு கதிரின் ரூமிற்கு
வெளியே உள்ள தாழ்வாரத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்ட லதா சொல்லவும்,

“சரி அண்ணி..” என்ற அஞ்சலி, கதிரின் ரூமை திறந்து உள்ளே சென்றாள், சிறிது
அலங்கோலமாகவே இருந்த ரூமில் அங்கங்கு தொங்கி கொண்டிருந்த அவனின் உடைகள்,
பொருட்கள் என வரிசையாக நின்றபடியே பார்வையிட்டவள்,

அங்கு நடுநாயகமாக வீற்றிருந்த கட்டிலை காணவும், குப்பென்ற உணர்வு தாக்க,
கை, கால்கள் எல்லாம் சில்லிட்டு போய், மெலிதாக நடுங்கவே செய்தது,

“இனி இதுதான் வாழ்க்கை, கதிர்தான் கணவன்..”  என்ற அவள் அனுதினமும்
எதிர்பார்த்த  நிதர்சனம்  புரிந்தாலும், ஏனோ ஏற்றுக்கொள்ள முடியாமல்
தடுமாறியவள், சட்டென ரூமை விட்டு வெளிய ஓடியே வந்தாள் எனலாம்.

“கதிர், அசோக் தம்பி ரெண்டு பேரும்  சாப்பிடவாங்கப்பா..” என்று இரவு
உணவிற்கு அசோக்கையும், கதிரையும் நாயகி சாப்பிடகூப்பிட,

“இதோ வரோம்..”  என்றவர்கள் கைகழுவி சாப்பிட அமர, அஞ்சலியை காணாது
கண்களால் தேடிய கதிர், நாயகியை கேள்வியாக  பார்க்க, அவனின் பார்வையை
புரிந்து,

“அஞ்சலிக்கு பசிக்கலைன்னு சொல்லிட்டா, அதான் லதா பால் கொண்டு
போயிருக்கு”, என்று சொன்னவாறே பரிமாற, உள்ளே ஓடிய யோசனையுடன் அளவாக
சாப்பிட்ட  கதிரை, கண்ட அசோக், சாப்பிட்டு முடிந்ததும், நேரே தங்கையை
பார்க்க சென்றான்.

“அஞ்சலி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றவாறே வந்து நின்ற அண்ணனை  கண்டு,
கோவத்தோடு முகம் திருப்பிக்கொண்டாள் அஞ்சலி, எல்லாம் தெரிந்த தன் அண்ணன்,
இந்த திருமண விஷயத்தில் தனக்கு சப்போர்ட் செய்யாமல், கதிருக்கு சப்போர்ட்
செய்த கோவம் அவளுக்கு, இருக்கத்தான் செய்தது,

அது புரிந்தாலும், அவளின் வாழ்க்கைக்காக அதை கண்டிக்கொள்ளாத அசோக்,
பொறுமையாகவே, “அஞ்சலி.. நீ ஏன் ஒரு முறை கதிர் உன்னை ஏன் கல்யாணம்
செஞ்சிகிட்டான்னு  கேட்டு தெரிஞ்சுக்க கூடாது..?”,

“அன்னிக்கு இருந்த கோவத்துல, எனக்கு அவன் சொல்ல வர்றதை கேட்கற பொறுமை
இல்லை, ஆனா அதுக்கு அப்பறம் யோசிச்சப்போதான் என் தப்பு எனக்கு புரிஞ்சது,
புரிஞ்சவுடனே நான் அவன்கிட்ட கேட்டதுக்கு அவன் கோவத்துல சொல்ல மாட்டேன்னு
சொல்லிட்டான்”, என்று விளக்கம் கொடுத்த அசோக்,

“ நாம அன்னிக்கு செஞ்ச தப்பை இனிமேலும் நீ செய்ய வேண்டாம் அஞ்சலி,
அவன்கிட்ட முகத்தை திருப்பாம பொறுமையா பேசிப்பாரு, இனி அவன் தான் உன்
வாழ்க்கை..”  என்று சொல்லும் போதே ஆத்திரத்துடன் இடையிட்ட அஞ்சலி,

“அவர் எனக்கு தாலி கட்டும்முன்னே கூட அவர்தான் என் வாழ்க்கையாவே
இருந்திருக்கார், ஆனா.. அவர் எப்போ பழிவாங்க என் கழுத்துல தாலி கட்டி,
என்னை.. என் காதலை அவமான படுத்தினரோ அப்பவே அவருக்கான  என் காதல் போச்சு,
இனி என்னோட காதல் அவருக்கில்லை”,

“இல்லை அஞ்சலி, நீ ரொம்ப அவசரப்படற, எனக்கென்னமோ வேற ஏதாவது காரணம்
இருக்குமோன்னு..”

“அண்ணா.. நம்மளை பழிவாங்கிறதை தவிர வேற எந்த காரணமும் அவருக்கு இருக்க
போறதில்லை, நீயே சொல்லு, அதுக்கு முன்னாடி வரை அவர் என்னை சாதரணமா கூட
பாத்ததில்லை”,

“நான் அவரோட எதிரி குடும்பத்தோட பொண்ணுங்கிறது அவர் முகத்துல தெரியற
ஒதுக்கத்திலே பார்த்து,  நான் எத்தனை நாள் அழுத்திருக்கேன் தெரியுமா..?
இப்போ அதெல்லாம் எங்க போச்சு..?” என்று ஆற்றாமையில் கொதித்தவள்.

“எனக்கு அவரை தெரிஞ்சவரை இதை தவிர வேற எந்த காராணமும் இல்லைன்னு என்னால
உறுதியா சொல்ல முடியும், அதனால இனிமேலும் உங்க ப்ரண்டுக்காக சப்போர்ட்
செஞ்சிகிட்டு என்கிட்ட வராதீங்க, உங்களுக்கு அவர்தானே முக்கியம்”,
என்றவள் முகம் திருப்பிக்கொள்ள,

இப்போதுள்ள கோவத்தில் தான் சொல்வதை இவள் கண்டிப்பாக கேட்க போவதில்லை
என்று புரிந்து கொண்ட அசோக் பெருமூச்சோடு  வெளியே வந்துவிட்டவன்,
தோட்டத்தில் நடை போட்டு கொண்டிருந்த கதிரிடம் சென்றான்,

அவனின் முகத்தில் தெரிந்த இறுக்கம், அசோக்கிற்கு கவலையை தான் கொடுத்தது,
“இப்படி இருக்கும் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயமும்
வந்தது”,.

 

Advertisement