Advertisement

நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 15
சுந்தரம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தபோதும்
அஞ்சலியால் நிலையான ஓர் முடிவை எடுக்க முடியவில்லை, அவர் கொடுத்த “இரண்டு
ஆப்ஷனுமே அவளுக்கு ஏற்புடையதாக இல்லாதபோது அவளால் அதில்  ஒன்றை எப்படி
தேர்ந்தெடுக்க முடியும்..?”,
அதிலும் ஒன்று எந்த ஜென்மத்திலும் நடக்காத ஒன்று, மற்றொன்றான கதிருடன்
சேர்ந்து வாழ்வது, அதை விரும்பாத அவளின் கோபம்கொண்ட  மனம்,  இதிலிருந்து
தப்பிக்க “வேறேதுவும்  வழியிருக்கா..?” என்று
அன்று முழுவதும்  யோசித்தவளுக்கு மாலையில் பளிச்சென தோன்றிய  ஐடியா தான்,
“மறுபடியும் லண்டன் செல்வதே”, ஆனால் அதையும் செய்ய முடியாதப்படி அவளையே
கண்காணித்து கொண்டிருந்த மீனாட்சி,  அவளின் முகம் திடீரென பிரகாசிக்கவும்
மகளை நன்கு அறிந்தவராக,
“யாரும் எங்கேயும் அப்படி நினைச்சவுடனே போயிட எல்லாம் முடியாது லதா,
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்,  அதனால வீணா பகல் கனவு காணாம வேலையை
பார்க்கச்சொல்லு..”  என்று மருமகளிடம் சொல்வது போல் மகளை நக்கலாக
பார்த்தபடி சொல்லி செல்லவும் நொந்து போன அஞ்சலிக்கு நேரம் தான்
நெருங்கியதே தவிர  வேறு வழி எதுவும் தென்படவில்லை.
அதிலும் காலையில் கோவிலில் கதிர் அவனுடைய அக்காவிடம், எதோ அவள் அவர்கள்
வீட்டிற்கு செல்வது உறுதி போல், “அவள் அவர்களுடைய வீட்டிற்கு வந்ததிற்கு
பிறகு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்..” என்று நாயகியிடம் சொன்னதை
நினைத்து பார்த்தவளுக்கு மேலும் தான் கோவத்துடன்  கூடிய இயலாமை உண்டானது,
“அஞ்சலி அப்பா கூப்பிடறார் வா..”  என்று மீனாட்சியே அவளின் ரூமிற்கு
வந்து நிற்க, தாயை கடுப்பாக பார்த்தவள்,
“ஏன்மா இப்படி எல்லாம் செய்ற..?” என்று எரிச்சலோடு கேட்கவே செய்தாள்.
“ஒரு அம்மாவோட மனசு உனக்கு இப்போ புரியாது அஞ்சலி..!!”, என்று சுருக்கமாக
முடித்துவிட்டவர், மகளை கையோடு அழைத்துகொண்டு சென்று கணவரின் முன்பும்
நிறுத்திவிட்டார்,
எல்லோருமே எதிர்பார்ப்புடன் இவளையே பார்க்க, சுந்தரம் மட்டும் மகளை போல்
அரைகுறை மனதோடே பார்த்தார்.  “மாறன் வீட்டிற்கு தன் மகளை மருமகளாக
அனுப்ப சுந்தரத்திற்கு இன்னமுமே யோசனைதான்”,
“இது எப்படி சரியாகவரும்..?” என்ற குழப்பமும், மனசஞ்சலமும் இன்னும்
தீர்ந்தபாடில்லை, “அஞ்சலியை அனுப்பமுடியாது..!!”  என்று கதிரிடம்
உறுதியாக  மறுத்துவிட முடியும்தான்.
ஆனால், “கதிர் விடுவானா..? என்றால் கண்டிப்பாகவே விடமாட்டான்”, அதை
தன்னால் சமாளிக்க முடியும் என்றாலும், கதிரை  மாறனின் மகனாக இல்லாமல்,
தனிமனிதாக பார்த்தால் “அஞ்சலிக்கு மிகப்பொருத்தமானவனே..!!”,
மீனாட்சி சொன்னது போல்,  தான் தேடி பார்த்தால் கூட கதிரை போல் ஒரு கணவனை
அஞ்சலிக்கு கொடுத்துவிட முடியாது தான், மாறனின் மகன் என்பதை தவிர அவனை
மறுக்க வேறு எந்தவிதமான காரணமும் இல்லை,
இவை எல்லாவற்றையும் விட, “அஞ்சலி கதிர் மேல் கொண்டுள்ள காதல்..!!”, கதிரை
விட்டால் அவள் காலத்துக்கும் தனியாகத்தான் நிற்பாள் என்ற மகளின்
வருங்காலத்தை நினைத்த  பயம், மற்ற எல்லா தடைகளையும், வெறுப்பையும்,
வேற்றுமையும் தாண்டி கதிரை தன் மருமகனாக, அஞ்சலியின் கணவனாக அங்கீகரிக்க
அவரை ஒத்துக்கொள்ள வைத்தது,
“அஞ்சலி என்ன முடிவு எடுத்திருக்க..?”  என்று சுந்தரம் மகளிடம் கேட்கவும்,
“இல்லைப்பா.. நான் என்ன சொல்ல வரேன்னா..? எனக்கு இன்னும் கொஞ்சம் டைம்..”
 என்று ஆரம்பிக்கும் போதே,
“டைம் எல்லாம் இனி கிடையாது பாப்பா, இப்பவே உன் பதிலை சொல்லு..” என்று
கொஞ்சமும் இலகாமல் கண்டிப்புடன் கேட்ட  தந்தையிடம்,
“ப்பா ப்ளீஸ்..  இப்படி போர்ஸ் செஞ்சா எப்படிப்பா..?”  என்று
ஆற்றாமையுடன் கெஞ்சலாக கேட்ட மகளை,
“அஞ்சலி.. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது, உனக்கு கதிர்
தாலி கட்டினது பிடிக்கலை, ஓகே, ஆனா நீ ஏன் அந்த தாலியை கழட்டிட்டு வேற
கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்கிற..?, ஏன் இவ்வளவு பிடிவாதம் உனக்கு..?”
“எனக்கு உண்மையிலே புரியல அஞ்சலி, உன்னோட மறுப்புக்கு வேற ஏதாவது காரணம்
இருக்கா..?”  என்று “அவள் கதிர் மேல் கொண்ட காதலை நிச்சயமாக தன்னிடம்
சொல்ல மாட்டாள்..!!” என்று தெரிந்தே கெட்டவரை ஏமாற்றாத அஞ்சலி, பதில்
சொல்லமுடியாமல் திணறவே செய்தாள்.
அதை பார்த்த சுந்தரத்திற்கும்  சரி, அசோக்கிற்கும் சரி அவளை நினைத்து
வருத்தமே, ஆனாலும் வெளியே இறுக்கமாகவே காட்டி கொண்டனர். “தந்தையின்
சந்தேகமான கேள்விக்கு பிறகு, மறுத்த பேச வழியே இல்லாத அஞ்சலி, கதிருடனான
திருமண வாழ்விற்கு சம்மதம் சொல்லிவிட்டாள்”.
“கதிர்.. அப்பா ஓகே சொல்லிட்டார், அடுத்து என்ன செய்ய..?” என்று அசோக்
போன் செய்து உற்சாகத்துடன் கேட்க, கதிர் முதலில் கேட்டது,
“அஞ்சலி என்கூட வரதுக்கு ஓகே சொன்னாளா..?”  என்று  சந்தேகத்துடன் கேட்டான்.
“அஞ்சலி நேத்து நைட் தான் ஓகே சொன்னா..”, என்று அசோக் சொல்லவும்,
“ரொம்ப பிடிவாதமா இருந்தாளே..!! எப்படி ஓகே சொன்னா..?” என்று சாதாரணமாக
கேட்பதுபோல் கேட்க, அசோக்கும் விகற்பம் இல்லாமல், சுந்தரத்தின் ஆப்ஷன்களை
பற்றி சொல்லிவிட்டான்,
அதை கேட்டதும் கதிருக்கு அஞ்சலியின் மேல் எல்லையில்லா கோபமே,  என்ன
நடந்ததென்று கூட கேட்டு தெரிந்துகொள்ளமல் அப்படியென்ன ஒரு கோவம்,
பிடிவாதம், இதில் அவனை மிகவும் பாதிக்க செய்தது  “இவ்வளுதானா அவள்..?”
என்ற எண்ணம், அது  மனதில் நிலையாக நிற்கவும்  செய்தது.
“அப்போ டாக்டரம்மா வேறுவழி இல்லாமல் தான் என் கூட வாழவராங்களா..?
வரட்டும்..”  என்று மனதில் கருவி கொண்டவன், அசோக்கின் கேள்விக்கு பதில்
சொல்ல செய்தான்.
 “சரி.. அடுத்து என்ன..? எப்படி செய்றதுன்னு நான் அப்பாகிட்ட கேட்டுட்டு
சொல்றேன்..” என்று மனதின் கோவத்தை காட்டாது சாதாரணமாக பேசி வைத்த கதிர்,
நேரே தன் தந்தையிடம் சென்று பேசவும்,
“ம்ம்.. இனிதான் நாம சமாளிக்க வேண்டியது நிறைய இருக்கு..” என்று
பெருமூச்சு விட்ட மாறன்,
“நாம முதல்ல நம்மோட கட்சி மேலிடத்திலும், நம்ம இனக்கூட்டத்திலும்
சொல்லணும், அங்கவர பிரச்சனையை சமாளிச்சு பின்னாடிதான் நாம  நம்ம
ஆளுங்களோட போய்  முறைப்படி தான் மருமகளை கூட்டிட்டு வரணும்”,
“அதுலயும்.. மருமகளை கூட்டிட்டு வர சுந்தரத்தோட வீடு  சரிப்பட்டு வராது,
எங்கேயாவது பொது இடத்துல, கோவில்.. மண்டபம் இப்படி தான் கூட்டிட்டு
வரணும்,” என்று அடுத்தடுத்து முடிவுகளை எடுத்த மாறன், உடனடியாக
நம்பிக்கைக்கு உரிய ஆட்களின் துணையோடு அதை செயல் படுத்தவும்
ஆரம்பித்தார்,
அவர் எதிர்பார்த்தது போல் கட்சியிலும், இனக்கட்டுப்பாட்டிலும் எதிர்க்கவே
செய்தனர், முதலில் அவர்கள் இனக்கூட்டத்தில்   கதிருடன் சென்று பேசிய
மாறன்,
“அவங்க வீட்டு பொண்ணுதான் நம்ம வீட்டுக்கு வாழவருது, இதனால நமக்கு என்ன
பிரச்சனை..? இன்னும் சொல்லப்போனால், நம்ம கதிர் கல்யாணத்துல அவங்க
செஞ்சதுக்கு, நாம பதிலுக்கு செஞ்சு அவங்களுக்கு நல்ல பாடத்தை
கத்துகுடுத்திருக்கோம், அப்பறம் என்ன..?” என்று, அவர்களை தூக்கி வைத்து
பேசி சம்மதம் வாங்கியவர், அவர்களுடனே சென்று மருமகளை கூட்டிட்டு வர
கையோடே நாள் குறித்து விட்டு வந்தார்.
அடுத்து கட்சியிலும் இதேரீதியில் பேசி ஓரளவுக்கு தலைமையை சமளித்தாலும்,
இனி “அவர்கள்  தன் மேல் முன்போல் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்” என்று
மாறனிற்கு நன்றாகவே புரியாத்தான் செய்தது,
ஆனால் அவருக்கு  இருந்த  கட்சி, அதிகார மோகத்தை லட்சுமியின் மறைவு
வெகுவாக குறைத்திருக்க, அதுவரை ஒரு தலைவனாக மட்டுமே இருந்த அவர், மகன்களை
பற்றியும், குடும்பத்தை பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருந்தார்,
அதிலும் கதிரின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை, அதை தொடர்ந்து மனைவியின்
மறைவு, எல்லாம் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே யோசிக்க வைத்தது, அது
புரிந்ததாலே கதிர் தன் தந்தையிடம் முன்போல் இல்லாமல் சகஜமாக இருக்க
ஆரம்பித்திருந்தான்.
அதனாலே தன் மகனின் நல்வாழ்விற்காக கட்சி, இனத்தை  எல்லாம் ஒதுக்கி
தள்ளியவர், அடுத்தடுத்த  ஏற்பாட்டோடு தன் பெரிய மகன்களின்
நடவடிக்கைகளையும்  கவனிக்கவே  செய்தார்.
சுந்தரத்திற்கும் அவருடைய இனக்கட்டுப்பாட்டிலும் கேள்வி எழுந்து மறுக்கவே
செய்தனர், அங்கு ரத்தினம் செய்ததை மேற்கோள் காட்டி, “நீங்க செஞ்சதுக்கு
என் பொண்ணு வாழ்க்கைதான் பிணையாச்சி”,
“உங்களை எல்லாம் யாரு பஞ்சாயத்துல் கதிரை பார்த்து நீயெல்லாம்
ஆம்பிளையா..?ன்னு கேட்கச்சொன்னது, அதனாலதான் இன்னைக்கு என் பொண்ணு
வாழ்க்கையில கை வச்சிட்டாங்க, எல்லாம் உங்களாலதான்”, என்று அவர்கள் மேலே
பழி சொல்லி எகிறியவர்,
“அதனால நீங்களே வந்து  எந்த பிரச்னையும் செய்யாம என் பொண்ணை முறையா
அவபுகுந்த வீட்டுக்கு வழியனுப்பி வைக்கணும், உங்க எல்லாருடைய தப்புக்காக
என் பொண்ணு வாழ்க்கையில நான் ரிஸ்க் எடுக்க முடியாது, எனக்கு என் பொண்ணோட
வாழ்க்கை ரொம்ப முக்கியம்”, என்று அவர்களை தன் வாதத்தால் மடக்கியவர்,
அவர்களை கொண்டே தன் மகளை மாறனின் மருமகளாக அனுப்ப பேசி உறுதி
செய்துவிட்டு  வந்தார். இங்கு சுந்தரத்தின் கட்சி தலைமையும் ஓரளவுக்கே
சமாதானமாக, மாறனை போல் இவரும், தன் ஒரே மகளின் நல்வாழ்விற்காக அதை ஒரு
விதமான மனகணக்கோடு ஒதுக்கி தள்ளினார்.
“ண்ணா.. நீ என்னண்ணா எதுவும் செய்யாம அமைதியாவே இருக்க..?,  கதிரை போட்டு
பார்க்க எவ்வளவு பெரிய சான்ஸ் கிடைச்சிருக்கு,போயும் போயும்  எதிரி
குடும்பத்து பொண்ணை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வந்திருக்கான்,  அவனை..”
என்று ஆத்திரத்தில் கத்தி கொண்டிருந்த சேகரை, தோளில் தட்டி கொடுத்து
மோகன்,
 “தம்பி.. நாம கண்டிப்பா செய்யத்தான் போறோம், ஆனா இப்போ இல்லை..”  என்று
மர்மமான புன்னகையுடன் சொன்ன அண்ணனை புரியாது பார்த்த சேகர்,
“என்னண்ணா சொல்றீங்க..? இப்போ செய்யாம வேற எப்போ செய்றது..? இதுதான் நல்ல
வாய்ப்பு..”  என்று கேட்க,
 “இல்லை தம்பி.. நாம இப்போ எதுவும் செய்யக்கூடாது, அந்த வீட்டு பொண்ணு
மருமகளா இங்க வந்ததுக்கு அப்பறம் தான் செய்யணும்.. அப்போதான் நாம என்ன
செஞ்சாலும் பழி நம்ம மேல வராது..” என்று குரூரத்துடன் சொன்ன  மோகனிடம்,
“அதெப்படி நம்ம மேல பழி வராம போகும்..? இது என்ன கணக்குண்ணா..?”
“ம்ம்..  இதுதாண்டா உங்க அண்னன் மோகன் கணக்கு.. பழி நம்ம மேல இல்லாம
வேறிடத்துல போய்சேரும்..”
“வேறிடமா..? அது யாருண்ணா..?” என்று ஓரளவிற்கு கணித்துவிட்ட சேகர்
குதூகலத்துடன் கேட்க
“அந்த சுந்தரம் மேலயும், அவன் மகன் அசோக் மேலயும் தான் போய் சேரும்,  நாம
கொண்டுபோய் சேர்ப்போம்.. அப்போதான் நம்ம ரெண்டு எதிரிகளும்
அடிச்சுக்குவாங்க, அதுல நாம ஆனந்தமா குளிர் காயலாம்..” என்று கண்களில்
பழிவெறி மின்ன சொன்ன அண்ணனை மெச்சுதலாக பார்த்தான் சேகர்.

Advertisement