Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 14
“என்னப்பா சொல்றீங்க..? அந்த சுந்தரம்  குடும்பத்து பொண்ணையா நம்ம தம்பி
கல்யாணம் செஞ்சிருக்கான்..? என்னால நம்பவே முடியலைப்பா..? இப்போ என்ன
செய்ய..?”  என்று நாயகி தன் தந்தை மாறனிடம் ஆச்சரியத்துடனும்,
கலக்கத்துடனும் கேட்டு கொண்டிருந்தார்.
காலையிலே மாறன் போன் செய்து தன் பெரிய மகளை  கதிர் தங்கியிருக்கும் தோட்ட
வீட்டிற்கு தனியே  வரசொல்லிருக்க, வந்தவரிடம்  கதிரின் திருமண விஷயத்தை
அவர்  சொல்லவும் தான் நாயகி நம்பமுடியாயமால் தந்தையிடம் இப்படி கேட்டு
கொண்டிருந்தார்,
“எனக்கும் அதுதான் புரியலை, இந்த பையன் இப்படி செய்வான்ன்னு நான் கனவுல
கூட நினைச்சு பார்க்கலை”, என்று பெருமூச்சுடன் சொன்னவரின் குரலில்
தெரிந்த கவலையில் தானும் கவலை கொண்ட நாயகி,
“இதை எப்படிப்பா எல்லார்க்கிட்டேயும் சொல்லறது..? இந்த விஷயம் வெளியே
தெரிஞ்சாலே என்ன நடக்குமோன்னு பயமாயில்லை இருக்கு..?” என்று நாயகி
புலம்பவே செய்தார்,
“ம்ம்.. இந்த விஷயம் மத்தவங்களுக்கு தெரியறதை விடு, உன் முதல் ரெண்டு
தம்பிகளுக்கு தெரிஞ்சாலே போதும், ஏற்கனவே உன் கடைசி தம்பியை போட்டு
பார்க்க எப்படா வாய்ப்பு கிடைக்கும்ன்னு காத்திருக்கானுங்க, இதையா
விடுவானுங்க..” என்று தன் பெரிய மகன்களை நினைத்து வெறுப்புடன் மாறன்
சொல்லவும், அதிலிருந்த உண்மை புரிந்த நாயகி,
“ஆமாம்ப்பா.. இந்த விஷயத்தை பெருசாக்க அவங்க மட்டுமே போதும்”, என்று
தானும் வெறுப்புடன் சொன்ன நாயகி, கதிரை இன்னும் காணாமல்  போக,
“எங்கப்பா தம்பியை  இன்னும் ஆளே காணோம், வெளியே எங்கேயும்
போயிருக்கனா…? என்று வீட்டுக்குள் கண்களால் தேடியபடி கேட்டார்.
“அவன் அந்த சுந்தரம் குடும்பத்துக்கிட்ட பேசபோயிருக்கான்”,
“என்ன..? அங்க போயிருக்கானா..? இவ்வளவு காலையிலே அங்க ஏன்
போயிருக்கான்..? ஏதாவது  பிரச்சனையா..?” என்று பதட்டத்துடனும் கேட்கவும்,
“க்கும்..  இவன் பிரச்சனை செய்யாம  இருந்தா போதாதா..?, அங்க அடுத்து என்ன
செய்ரதுன்னு பேசபோயிருக்கான்”, என்று கடுப்புடன் நொடித்துக்கொண்டவரை
புரியாமல் பார்த்த நாயகி,
“எனக்கு புரியலைப்பா..? என்று கேட்டார்.
“அவன் பொண்டாட்டியை அவன் கூட அனுப்பிவைக்கிறதுக்காக  அந்த
சுதரத்துக்கிட்ட கேட்க போயிருக்கான்”, என்று கோவத்துடன் சொல்லவும்,
“என்னப்பா சொல்றீங்க..? இவன் எப்படி..? ஏன்ப்பா கூட யார் போயிருக்கா..?”
என்று யோசனையுடன் கேட்ட மகளிடம்,
“தனியாத்தான் போயிருக்கான்”, என்று மாறனின் குரலில் கோவமும், வருத்தமும்
கலந்தே ஒலித்தது,
“என்ன தனியா போயிருக்கனா..? அவன் ஏன் தனியா போகணும்..? கூட யாராவது நம்ம
ஆளுங்களை கூட்டிட்டு போயிருக்கலாம்  இல்லை”, என்று தம்பி  தனியே சென்ற
ஆதங்கத்தில் தந்தையிடம் கேட்டார்.
“நானும் அதைத்தான் சொன்னேன், எங்க என் பேச்சை கேட்டான் அவன், நான் முதல்ல
போய் தனியா பேசிடுறேன், அப்பறமா எல்லாரும் ஒருநாள்  உட்கார்ந்து பேசி,
மருமகளை கூட்டிட்டு வந்துரலாம்ன்னு சொல்லிட்டு போயிருக்கான்”,
“ம்ஹூம்..  நீங்க என்ன சொன்னாலும், தம்பியை இப்படி தனியா அனுப்பியிருக்க
கூடாது, அவன் கல்யாண விஷயத்தை அவனே தனியா போய் பேசுற அளவுக்கு அவன் என்ன
யாரும் இல்லாதவனா..?  ஏன் நாங்க எல்லாம் இல்லை அவனுக்கு..?” என்று
ஆற்றாமையுடன் நாயகி கண்களில் கண்ணீர் மிதக்க கேட்டு கொண்டிருக்கும் போது,
தன் புல்லட்டில் வந்து இறங்கினான் கதிர்.
வந்தவுடனே அக்காவின் கண்ணீரை கண்டு அவளின் வருத்தத்தை புரிந்து கொண்டவன்,
நாயகியை தோளோடு அணைத்து கொண்டவாறே,
“என்னக்கா..? இப்போ ஏன் அழுகிற..?” என்று பாசத்துடன் கேட்கவும்,
“ஏன்தம்பி இப்படி யாரும் இல்லாமா நீயே போய் உன் கல்யாண விஷயத்தை பேசிட்டு
வந்திருக்க, அக்காகிட்ட சொல்லிருந்தா நான் ஒரு படையோட வந்திருக்க
மாட்டேனா..?” என்று அழுகையுடன் கேட்டார்.
“இதுக்குத்தான்  நான் சொல்லலை, நீ இப்படி ஒரு படையோடு வருவேன்னு
தெரிஞ்சுதான் சொல்லலை”, என்று செல்ல மிரட்டலுடன் கதிர் மிரட்டவும்,
“ஏன் அப்படி வந்தா என்ன தப்பு..?” என்று  வீம்புடன் கேட்ட அக்காவை,
“தப்புதான்க்கா, நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ள இருக்கிற உறவுமுறை
உனக்கு நல்லாவே தெரியும், எப்படி நம்மால அந்த குடும்பத்து பொண்ணை மருமகளா
ஏத்துக்க முடியலையோ..? அப்படித்தான் அவங்களுக்கும் என்னை அவங்க மருமகனா
ஏத்துக்க முடியாது”,
“அப்படி இருக்கிறப்போ நாம அவங்ககிட்ட  பக்குவமா பேசி அவங்களை சமாதான
படுத்துறதுதான் முறை, கடைசிவரை அவங்க உறவும் எனக்கு வேணும்க்கா”, என்று
கதிர் தன் நிலைப்பாட்டை சொல்லவும்,  முறைத்த மாறன்,
“ஆமா.. ஆமாம்.. அந்த சுந்தரம் உறவு உன் தம்பிக்கு ரொம்ப வேணும்..” என்று
எதிரியின் உறவை பிடித்து வைக்கும் மகனை நொடித்தார்,
“ப்பா.. எனக்கு அவங்க உறவு வேணுமோ இல்லையோ..? ஆனா அஞ்சலிக்கு கண்டிப்பா
வேணும்ப்பா, ஒரு பொண்ணை அவங்க பிறந்தவீட்டுக்கிட்ட இருந்து பிரிக்கிறது
ரொம்ப தப்புப்பா. அந்த தப்பை நாம செய்ய வேணாம், அது என் அம்மாவுக்கும்
பிடிக்காது..” என்று சொன்ன கதிரின் முகம் அன்னையின் நினைவில் மிகவும்
கசங்கித்தான் போனது,
அவனால் இன்னமும் லட்சுமி அம்மாள் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
இருவருக்கும் உள்ள ஓட்டுதல் நன்றாக தெரிந்தவராதலால் மகனின் துயரத்தை
நினைத்து தானும் கவலை பட்ட மாறன், பேச்சை மாற்றும் விதமாக,
“அந்த சுந்தரம் என்ன சொன்னான்..?” என்று கேட்கவே,
“ம்ம்.. பேசிட்டு வந்திருக்கேன், அவரும் உங்களை மாதிரிதான், உங்களை..!!
நம்ம எல்லாரையும் அவரோட உறவா ஏத்துக்க முடியாம தடுமாறுறார், உங்ககிட்ட
சொன்னதுபோலதான் அவர்கிட்டேயும் என்ன உங்க மறுமகனா மட்டும் பாருங்க”,
“என்னால, என் கல்யாணத்தாலா உங்க இனத்திலும், கட்சிலும் எந்த மாற்றமும்
வராதுன்னு சொல்லிருக்கேன், பாக்கலாம்” என்று யோசனையுடன் சொன்ன கதிரின்
கையை பாசமாக பிடித்து கொண்ட நாயகி,
“கவலைப்படாத தம்பி, எல்லாம் நல்லதா நடக்கும்”, என்று ஆறுதல் சொன்ன நாயகி,
“ஏன் தம்பி அக்கா ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..?” என்று
தயக்கத்துடன் கேட்டவரை,
“என்னக்கா இப்படி கேட்கிற..?உனக்கு என்ன கேட்கணுமா கேளு..” என்று கதிர் சொல்ல,
“இல்லை.. உனக்கு.. நீ..நீ ஏன் அந்த குடும்பத்து பொண்ணை..!!” என்று நாயகி
கேட்டு கொண்டிருக்கும் போதே இடையிட்ட மாறன்,
“அந்த பொண்ணுன்னு உன்  தம்பிக்கு சொல்ல கூடாதும்மா, மருமகன்னு தான்
சொல்லணும்..”  என்று கிண்டலாக எடுத்து கொடுக்க, அவரின் கிண்டலில் கதிரின்
முகத்தில் மெலிதான சிரிப்பு அரும்ப, அதை பார்த்து தானும்  சிரித்த நாயகி,
“சரி மருமகளை தான் கட்டணும்ன்னு என்ன..? ஏன்..?” என்று “அஞ்சலியை ஏன்
கல்யாணம் செய்து கொண்டாய்..?” என்று நேரே கேட்கமுடியாமல் தயங்கவும்,
அவரின் கேள்வியை புரிந்து கொண்ட கதிருக்கு என்ன பதில் சொல்வதென்றுதான்
புரியவில்லை,
“அது.. அதுக்கா.. அவங்க அப்பா என் கல்யாணத்துல..”  என்று கதிர் சொல்லும்போது,
 “ம்ஹூம்.. என் தம்பி அப்படி கிடையாது,  பழிவாங்க ஒரு பொண்ணை தூக்கிட்டு
போய் கல்யாணம் செய்ற ஆளு என்தம்பி இல்லை, எங்க அம்மாவோட வளர்ப்பு அப்படி
செய்யாது”, என்று உறுதியாக சொன்னார்.
அவரின் நம்பிக்கையில் உள்ளம் நெகிழ்ந்த கதிர், பாசத்தோடு அவரை
அணைத்துகொண்டவன்,  ”எனக்கு அவளை தான் கட்டிக்கணும்ன்னு இருந்திருக்கு
போல.. விடுக்கா..” என, எடுத்த எடுப்பிலே அந்த டாப்பிக்கை முடிக்க
பார்க்க,
“இல்லை.. நீ அந்த பொண்ணை  இல்லை..  இல்லை மருமகளை பிடிச்சிருந்தது, அதான்
விரும்பி..?” என்று கேள்வியாக தம்பியை பார்த்தார். அவரின் கேள்வியில்
மெலிதாக  சிரித்த கதிர்,
“ம்ஹூம்..  என் கல்யாணத்துக்கு முன்ன வரை, அவளை கட்டணும்ன்றது மட்டும்
தான் என் மனசுல இருந்திருக்கு”, என்று நிறுத்தியவனை, புரியாமல் பார்த்து
நாயகி,
“அதான் தம்பி நானும் கேட்கறேன்,  மருமகளை மட்டும் ஏன் கட்டணும்ன்னு..?”
என்று விடாமல் கேட்க, சொல்லாமல் விடமாட்டார்கள் என புரிந்து கொண்ட கதிர்,
“ம்ம்.. நிறைய நடந்துருச்சிக்கா. எல்லாத்தையும் சொல்ல முடியாது, ஆனா
ஒண்ணு மட்டும் சொல்றேன், அவளை தான் கட்டுவேன்ன்னு, நான் அம்மாக்கு
சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கேன்”,  என்று சொன்னவனை  அதிர்ச்சியாக
பார்த்தனர் ,மாறனும், நாயகியும், இது இருவருக்குமே புதிய செய்தி,
“என்ன..?லக்ஷ்மிக்கா..? அவ ஏன் அப்படி சத்தியம் கேட்டா..?” என்று மாறன்
புரியாமல் கேட்டார்.
“சொன்னனேப்பா.. என்னால எல்லாத்தையும் சொல்ல முடியாது, நான் சொல்லவும்
மாட்டேன், இதுக்கு மேல இதைப்பத்தி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க..” என்று
கண்டிப்புடன் முடித்துவிட,
 “சரி அதை பத்தி கேட்கல, ஆனா நீ மனசுக்கு பிடிச்சிதானே மருமகளுக்கு தாலி
கட்டுன..”  என்று நாயகி கேட்கவும்,
“ம்ம்.. அதான் சொன்னேனாக்கா, எனக்கு அவளை கல்யாணம்  பண்ணிக்கணும்னு
அவ்வளவுதான் மனசுல இருந்துச்சே தவிர  அவளை பிடிச்சிருக்கு, பிடிக்கலன்னு
எல்லாம் நான் யோசிக்கல.” என்று கதிர் முடிக்க பார்க்க,
“ம்ம்.. அது எப்படி தம்பி சரியா வரும்..? ரெண்டு பேருக்கும் பிடிச்சி
வாழ்ந்ததானே வாழ்க்கை நல்லா இருக்கும், இதுல ஏகப்பட்ட பிரச்சனையில தான்
நீங்க ரெண்டுபேரும் ஒரு குடும்பமாவே சேர்ந்து வாழ ஆரம்பிக்க முடியும்”,
“அப்படி இருக்கிறப்போ, உனக்கு மருமகளை பிடிக்கலைன்னா எப்படி..?
அம்மாகிட்ட சத்தியம் செஞ்சு குடுத்துக்காக எல்லாம் உன் வாழ்க்கையை
வீணாக்க முடியுமா..? அது அம்மாவுக்கும் தானே பிடிக்காது..” என்று
தம்பியின் நல்வாழ்விற்காக யோசித்த நாயகி கேட்க,
“க்கா.. உனக்கு எப்படி சொல்ல..? எனக்கு அவளை பிடிச்சிருக்கு அப்டிங்கிறதை
விட, அவளை எனக்கு பிடிக்காம போக எந்த காரணமும் இல்லை, அதெல்லாம் ரெண்டு
பேரும் ஒரு குடும்பமா வாழ ஆரம்பிச்சா பிடிப்பு தானாவே வந்துடும், எனக்கு
அந்த நம்பிக்கை இருக்கு”  என்ற
கதிரின் மனக்கண்ணில் தான் அணிவித்த தாலியை சுமந்தவாறு கண்களில்
ஆச்சரியத்துடன் சோர்வாக நின்றிருந்த அஞ்சலி  மின்னி மறையவே, அவன்
முகத்தில் ரசனையான புன்னகை விரிந்தது, அவளை ரசிக்கும் தன் மனதை
புரிந்துகொண்ட கதிருக்கு உல்லாசமே.
அஞ்சலியை பற்றி பேசும்போது அவனின் முகத்தில் தோன்றிய புன்னகையை கண்டபிறகே
மாறனிற்கும், நாயகிக்கும் நிம்மதியானது, அதே நிம்மதியில்,
“நாயகி  இதெல்லாம் நீ இவனை கேட்ககூடாது, இவனை பிடிச்சிருக்கான்னு
இல்லையான்னு நீ நம்ம மருமகளை தான் கேட்கணும், அந்த புள்ளை டாக்டருக்கு
பிடிச்சிருக்கு, அதுவும் பாரின்ல போய் மேல்படிப்பு படிச்சிட்டு
வந்துருக்கு”,
“இந்தப்பையன் வெறும் டிகிரி, அதுமட்டுமா அழகிலும் உன் தம்பி  மருமக
பக்கத்துலகூட நிக்க முடியாது, என்ன கலர் என் மருமக, ரோஸ் கலர் ரோசா பூ
மாதிரி ஒரு கலரு.. அப்படியே சுண்டிவிட்டா ரத்தம் வரும், இவனும் தான்
இருக்கானே..” என்று நக்கலுடன் மகனை வம்பிற்கு இழுக்க, அதை புரிந்த
நாயகியும் சிரித்தார்,
அவரின் நக்கலில் கடுப்பான கதிர்,  “என்ன பெரிய கலரு உங்க மருமக, அப்படியே
ரோஸ் கலர்ல  இருந்தா பெரிய அழகியா..? அந்த ரோஸ் மில்க் கலர் அழகிக்கு
நான் போதாதமா..?”  என்று நொடித்து கொண்டவனின் மனம் அவளின் அழகுக்கும்,
படிப்புக்கும் முன்னால் தான் கொஞ்சம் வீக்கோ என்று ஓர் நொடி தோன்றாமல்
இல்லை. ஆனால் அடுத்த நொடியே, “க்கும்.. போடி” என்று அலட்சியமாக ஊதி
தள்ளினான்,
அங்கு அந்த “ரோஸ் கலர் அழகி அஞ்சலிக்கு” சுந்தரத்தின் யோசனையான முகத்தை
பார்க்க, பார்க்க வயிற்றில் பயப்பந்து உருண்டது, எங்கே கதிரின் பேச்சில்
மயங்கி தன்னை அவனுடன் அனுப்பி வைத்துவிடுவாரோ..? என்று அவளின் கோவம்
கொண்ட மனது பயந்தது.
இப்படியே ஒருவாரம் கழிய, அசோக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
சுந்தரத்திடம் கதிரை பற்றியே பேசி ஓர் அளவுக்கு அவரின் மனதை கதிரின்
பக்கம் சாய்த்திருந்தான்.
“அஞ்சலி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், இப்படி உட்காரு”, என்று இரவு
உணவிற்கு பின், ஹாலில் எல்லோரும் கூடியிருக்கும் போது தந்தை அழைக்கவே,
பதட்டத்துடனே வந்து அமர்ந்தவளிடம்,

Advertisement