Advertisement

தன் தாலியை சுமந்து நிற்கும் மனைவியின் சோர்ந்த அழகில் ரசனையாக பார்த்து
கொண்டிருந்த கதிரின் கண்களுக்கு, அவளின் கைகளின் வழவழப்பு பளிச்சென
தெரிய, அவளை நன்றாக ஊன்றி கவனித்தவனின்  கண்கள் நொடியில் ரசனையிலுருந்து
கோவத்திற்கு மாறியது.
அவளின் இரவு கவுன் போன்ற உடை ஸ்லீவ்லஸ் மட்டுமில்லாமல் அதன் நீளமும்
முட்டிவரை மட்டுமே இருக்க,  அதிலும் அவசரத்தில் அந்த ஸ்லீவ் உடைக்கு மேல்
கோட் அணியாமல் ஓடிவந்திருந்தாள்,
அவனின் திடீர் கோவமுறைப்பிற்கு காரணம் தெரியாமல் முழித்து கொண்டிருந்த
அஞ்சலிக்கு அவனின் பார்வை செல்லுமிடம் புரியவும் தான் கீழே குனிந்து தன்
உடையை பார்த்தவள், நொடியும் தாமதிக்காமல் ஒரே ஓட்டமாக மேலே
சென்றுவிட்டாள்.
அஞ்சலி இறங்கிவந்த அரவமும், அவளின் மேல் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல்
உரிமையுடன் படும் கதிரின் பார்வையுமே சுந்தரத்திற்கு போதுமான பதிலை
தந்தது,
அவள் மேலே செல்லவும், காபி கப்பை கீழே வைத்த கதிர், எழுந்து நிற்கவும்,
அவனையே புரியாமல் பார்த்த சுந்தரத்திடம், கைகூப்பியவன், ” முதலில் என்னை
மன்னிச்சிருங்க..”  என, சுந்தரம் மட்டுமில்லாமல் அனைவருமே அவனின்
மன்னிப்பை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர் என்றால்,
அவனை பற்றி நன்றாக தெரிந்துவைத்திருந்த அசோக், அதிர்ச்சி கலந்த
பீதியுடன்தான் பார்த்தான், கதிர் நின்றவாறே தொடர்ந்து,
“நான் உங்க பொண்ணை அன்னிக்கு தூக்கிட்டு போனது மட்டுமில்லாம,  உங்க
யாருக்கும் தெரியாமல் கோவிலில் வச்சி தாலி கட்டினது தப்பு..” என்று அவன்
சொல்லி கொண்டிருக்கும்போதே ஆத்திரத்துடன் இடையிட்ட சுந்தரம்,
“நீங்க என் பொண்ணு கழுத்துல தாலி கட்டினது தப்புன்னு, இப்பாவது
உங்களுக்கு புரிஞ்சதே…” என்று வெடிக்கவும், அவரின் கோவத்திற்கு
எதிர்பதமாக மெலிதாக  சிரித்த கதிர்,
“நீங்க நான் சொன்னதை நல்லா கவனிக்கலைன்னு நினைக்கிறேன், நான் உங்க
யாருக்கும் தெரியாமல் கோவிலில் வச்சி தாலி கட்டினது தப்புன்னு தான்
சொன்னனே தவிர, அஞ்சலி கழுத்துல தாலி கட்டினது தப்புன்னு நான் சொல்லலை,
ஏன் சொல்லவும் மாட்டேன், இப்ப மட்டுமில்லை, எப்பவும் சொல்லமாட்டேன்”,
என்று உறுதியாக தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டான்,
“உங்களுக்கு சரியா தெரியறது, மத்தவங்களுக்கு  சரியா தெரியாம போனாக்கூட
பிரச்னையில்லை, ஆனா இங்க எல்லாருக்கும் தப்பா இல்லை தெரியுது”, என்று
கதிரின் நிதானத்தில் தானும் நிதானத்தை கையிலெடுத்த சுந்தரம் அழுத்தமான
குரலில் மறுப்பாக சொன்னார்.
“காலத்தை பொறுத்து, சூழ்நிலையை பொறுத்து.. ஒரே விஷயம்  சிலபேருக்கு
தப்பாவும் தெரியும், பலபேருக்கு  சரியாவும் தெரியும், ஏன்னா அது
அவங்கவங்க மனசையும் , வாழ்க்கையையும், ஆட்களையும்  பொறுத்தது தானே தவிர,
அந்த விஷயம் தப்பாகாது”,
“அதனால் நாம நமக்காக மட்டும் தான் வாழணுமே தவிர மத்தவங்களுக்காக இல்லை”.
என்று கதிரும் தன் நிதானத்தை கைவிடாமல் பொறுமையாகவே சொன்னான்,
ஆனாலும் சுந்தரத்தால் “அவனை..?!!   அவனின் வாதத்தை..?!” ஏற்று
கொள்ளத்தான் முடியவில்லை, அது அவரின் சுழித்த முகத்திலும் அடுத்து அவர்
பேசியப்பேச்சிலும் தெரியத்தான் செய்தது,
“தம்பி.. நீ  உனக்கு நடந்ததுக்கு பழிவாங்கதான்  என் பொண்ணு விஷயத்துல
இப்படி செஞ்சிருக்க, உனக்கு இளரத்தம் அதான் சரி எது..? தப்பு எதுன்னு..?
தெரியாம,  பகையாளிங்க குடும்பத்துல சம்மந்தம் செய்ய நினைக்கிற, அது
எப்படி சரியா வரும்..?”, இன்னும் சொல்லப்போனா நீங்க தலைகீழா நின்னாலும்
சரிபண்ண முடியாது, இதையெல்லாம் இரத்ததிலே ஊறுன ஒண்ணு
“அதைவிட இது ஒன்னும் விளையாட்டு விஷயம் இல்லை, என் பொண்ணு வாழ்க்கை
சம்மந்தப்பட்டது, அதனால இதை இப்படியே விட்றதுதான்  மேல்,  என்னால உன்னை,
உன் குடும்பத்தை, எல்லாத்துக்கும் மேல உங்க அப்பாவை என் உறவுக்காரன
நினைச்சுக்கூட பார்க்க முடியல, என் மனசு அதை ஒப்புக்கவும்
மாட்டேங்குது..” என்று
இயலாமையுடன் சொன்ன சுந்தரத்தின் வார்த்தைகளிலே, அவர் இதையெல்லாம் முன்னமே
நிறைய யோசித்திருக்கிறார் என்று எல்லாருக்குமே புரிந்தது.
அவரின்  வார்த்தைகளில் வெளிப்பட்ட “அவரின் நீண்டநாள் மனப்போராட்டத்தை
நன்றாக புரிந்து கொண்ட கதிருக்கு அவரை நினைத்து வருத்தமாகவே இருந்தது,
ஏன் தன் தந்தையின் நிலையும் இவரை போல் தானே இருக்கிறது”, என்று நினைத்து
பெருமூச்சு விட்ட கதிர்,
“நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை கேட்கலாமா..? இதுக்கு நீங்க உண்மையான பதிலை
சொல்லுவீங்கன்னு நான் நம்புறேன்”, என்று பீடிகையுடன் கேட்பவனை பார்த்து
சம்மதத்துடன் சுந்தரம் தலையாட்டவும்,
“என்னை உங்க எதிரி மகன் கதிரா பார்க்காம,  புதுசா ஒரு சாதராண கதிரா
பாருங்க.. இல்லை  உங்க மகன் அசோக்கோட நண்பனா பாருங்க, இல்லை உங்க மகள்
அஞ்சலியோட கணவனா பாருங்க, இல்லை உங்க ஒரே மருமகனா கூட பாருங்க, இப்போ
உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பிரச்சனையா, ஒப்பாத மாதிரி, ஏத்துக்கவே
முடியாதமாதிரி ஏதாவது தோணுதா..?”  என்று கேட்டவனை, எல்லோருமே
மெச்சுதலுடனே  பார்த்தனர் ,
அவனின் புதிய கோணத்தில், அவன் சொல்வது போலே பார்த்த சுந்தரத்திற்கு,
அவனின் கம்பீரமான அழகும், கள்ளமில்லா பார்வையும், நிமிர்ந்த நெஞ்சுமாக
ஒரு முழு ஆண்மகனாக நின்றவனிடம், எந்த குறையும் இருப்பதாகவே  தோன்றவில்லை,
இன்னும் சொல்லப்போனால் தன் அழகு மகளிர்க்கு  தோற்றத்திலும், குணத்திலும்,
அளவில்லா தைரியத்திலும் என எல்லாவிதத்திலும் ஏற்ற துணையாகவே தெரிந்தான்.
அவரின் திருப்தி கலந்த பார்வையிலே அவரின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட
கதிர் விடாது மேலும்,
“நீங்க சொன்ன எல்லாம் எனக்கு புரியுது, நான் எதையும் மாற்ற நினைக்கலை,
என்னோட வேண்டுகோள் என்னை உங்க மருமகனா மட்டும் நீங்க  எல்லாம்
பார்த்தாபோதும், உங்களை பொறுத்தவரை நான் உங்க ஒரே மருமகன் மட்டும்தான்”,
“அதேபோலத்தான் அஞ்சலியும் எங்கவீட்டுக்கு  மருமகளா மட்டுமே வருவா, என்னோட
அடையாளம் உங்ககிட்ட எப்படியோ, அதேபோலொரு அடையாளம் தான் அஞ்சலிக்கும் எங்க
வீட்ல”,
“நான் நம்ம இத்தனை வருஷ பகையை, அடையாளத்தை, கட்சி, இன வேறுபாட்டை எல்லாம்
 கடந்து,  என்னை உங்க மருமகனா, உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா மட்டும்
பார்த்தாபோதும்ன்னு சொல்றேன்”,
“மத்தபடி நீங்க எப்பவுமே  எங்க பக்க ஆளுங்களோடு எப்படி இருப்பீங்களோ
அப்படியே இருந்துக்கோங்க, எங்க பக்கமும் அவங்க எப்பவும் உங்ககிட்ட
இருக்கிறதை போலே இருந்துகட்டும்”,
“எங்களால, எங்க கல்யாணத்தால ரெண்டு பக்கமும் எந்த விதமதமான மாற்றமும்
வரவேண்டாம், அது தேவையும் இல்லை, எங்களுக்காக யாரும் எதையும் விடவும்
வேண்டாம், சகிச்சிக்கவும் வேண்டாம்”,
“நானும் சரி அஞ்சலியும் சரி எல்லாருக்குமே பொதுவானவங்க, எங்களுக்குள்ள
யாரும் எந்த வேற்றுமையும், பிரச்சனையும் கொண்டு வரவேண்டாம், அதே போலதான்
நாங்களும் எந்த பிரச்சனைக்குள்ளும் வரவும் மாட்டோம், தலையிடவும்
மாட்டோம்”,
“அதனால என்னையும் அஞ்சலியையும் நீங்க மனசார ஆசீராவதம் செஞ்சு  என்
பொண்டாட்டியா அவளை என்கூட அனுப்பிவைக்கணும்”. என்று இறுதியாக தன்
கோரிக்கையை, முடிவாகவும் சொல்லிவிட்டான்,
கதிரின் நீண்ட பேச்சில், சுந்தரத்திற்கு முழு திருப்தியும் இல்லாமல்,
கதிரின் அடையாளம் மிகப்பெரிய உறுத்தலாக இருக்கத்தான் செய்தது, அவனின்
பேச்சு நடைமுறைக்கு ஒத்துவருமா..? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியே.!!
அப்படிருக்கும் போது அவரால் எவ்வாறு மகளை கதிருடன் அனுப்பமுடியும்..?,
தனிமனிதனாக கதிர் தன் மகளுக்கு ஏற்ற மணாளனே..!!  ஆனாலும், நம் குடும்ப
கலச்சாரத்தில் அவ்வாறு ஒரு மனிதன் தனிமனிதனாக, எவ்வித கடமையும் இல்லாமல்,
குடும்பமும் இல்லாமல் வாழமுடியாதே,
ஏன் சுற்றி இருக்கும் சொந்தபந்தங்கள் அப்படி வாழவும் விடமாட்டார்களே..!!
இப்படி பலபிரச்சனைகள் மண்டைக்குள் வண்டாக குடைய, அதிலும் மாறன், அவரின்
சம்மந்தி எனும் உறவுமுறை, இவை எல்லாம் எப்படி சாத்தியம்..? என்று இவை
எல்லாம் ஒருபக்கம் இருக்க,
“மகள்.. மகளின் வருங்கால வாழ்க்கை.. வாழ்க்கை துணை, இது எல்லாவற்றிலும்
இருக்கும் பெரிய பிரச்சனையல்லவா..?” அஞ்சலியை புரிந்தவரை அவள் கதிரை தவிர
வேறுஒரு வாழ்க்கை துணையை ஏற்றுக்கொள்ள போவதில்லை,
அவளை இப்படியே தன் வீட்டிலும் நீண்டகாலத்திற்கும் வைத்திருக்க முடியாது,
அவளுக்கென ஒரு வாழ்க்கை துணை கண்டிப்பாகவே வேண்டும், அதிலும் கதிர்
போன்றொரு வாழ்க்கை துணை இருந்தால் மகள் கண்டிப்பாகவே நன்றாக வாழ்வாள்
தான்,
ஆனாலும் இது எப்படி..? என்று மகளின்..?, தங்களின்..?, தங்களை சுற்றி
இருக்கும் மற்றவர்களின்..? வருங்கால வாழ்க்கையின் சுயஅலசல்களின்
போராட்டங்கள் சுந்தரத்தின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.
சுந்தரத்தின் போரட்ட முகத்தையே பார்த்து கொண்டிருந்த அசோக், அவரை
நெருங்கி,  “ப்பா.. நான் இப்போ இதை உங்ககிட்ட சொல்லலாமா..? வேண்டாவான்னு
கூட எனக்கு தெரியல, ஆனாலும் கண்டிப்பா சொல்லனும்ன்னு தோணுது, அதனால
சொல்றேன்” என்று தயங்கியவாறே,
“அது நம்ம அஞ்சலி,  கதிர் அவ கழுத்துல தாலி கட்டியிருக்கலன்னாலும், அவ
கதிரை தவிர வேற யாரையும் கண்டிப்பாவே எப்பவும் கல்யாணம்
செஞ்சியிருந்துக்க  மாட்டா.!!”, என்று அவருக்கு மட்டும் கேட்கும்வகையில்
அஞ்சலியின் மனதை கோடிட்டு சொல்லியேவிட்டான்,
அசோக் சொன்னதை தெளிவாக புரிந்து அதிர்ந்துபோன சுந்தரம், மகனை கேள்வியாக
பார்க்க, அவனும் “ஆம்..?!!”  எனும் விதமாக உறுதியுடன் தலையாட்டவே,
“அடுத்து என்ன செய்வது..? என்ன பேசுவது..?” என்று தெரியாமல் தடுமாறிய
சுந்தரம், கதிரை பார்க்க, அவனும் அவரைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
கீழே நடந்துகொண்டிருக்கும் பேச்சு வார்த்தை முழுவதையும் மேலே மாடிப்படி
வளைவில் நின்றவாறே பார்த்து கொண்டிருந்த அஞ்சலி, கதிரின்  வார்த்தை
ஜாலத்தில் “எங்கே தந்தை சம்மதம் சொல்லிவிடுவாரோ..?” என்று பயந்தே
பார்த்தாள்,
கதிர் தன் வீட்டிற்கு வந்ததிலே அவன் தன்னை அவனுடன் அழைத்து செல்லவே
வந்திருக்கிறான் என்று உடனடியாக புரிந்து கொண்டிருந்தாள் அஞ்சலி, இதில்
“எங்கே தந்தை அவனின் பேச்சில் மயங்கி தன்னை அவனுடன் அனுப்பி
வைத்துவிட்டால் என்ன செய்வது..?”
அவளால் இன்னமுமே கதிரின் பழிவாங்கும் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
எனும்போது “இருவரும் எவ்வாறு ஒரேவீட்டில் கணவன் மனைவியாக வாழமுடியும்..?”
என்று நினைத்தவளின் “மனது ஏன் தித்திக்கிறது..?!!” என்று  அவளின்
கோவம்கொண்ட மனதிற்கு  புரியவில்லை.
“முறைப்படி என்னோட அப்பா வந்துதான் உங்ககிட்ட  இதையெல்லாம்
பேசியிருக்கணும், ஆனா உங்களாலும், எங்க அப்பாவாலும் நேர்ல உட்கார்ந்து
சகஜமா பேசமுடியும்ன்னு எனக்கு தோணல, உங்களுக்கு அந்த சங்கடத்தை
கொடுக்கவும் எனக்கு இஷ்டமில்லை”,
“ஏன்னா எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும், முக்கியமும் கூட, அஞ்சலிக்கு
அவளோட அம்மா வீடு எப்பவும் இருக்கனும்ன்னு நான் ஆசைப்படறேன்”,
“ஏன் எனக்குமே உங்க எல்லோருடைய உறவும் என்னைக்குமே  வேணும், அதிலும்
முக்கியமா என்னோட மச்சானோட உறவு இல்லாம நான் எப்படி..?” என்று அசோக்கை
பார்த்து குறும்பாக கண்ணடித்து சொல்ல,
“க்கும் அப்பத்தான் காலத்துக்கும் கூடவே இருந்து என் உயிரை
வாங்கமுடியும்..” என்று கதிரின் மயக்கும் வார்த்தையில் மனதுள்
நொடித்துக்கொண்டன் அசோக்.
“நான் என்பக்க விளக்கத்தையெல்லம் சொல்லிட்டேன், நீங்க உங்களுக்கு
வேண்டியமட்டும் நல்லா டைம் எடுத்து யோசிச்சி, என்னைக்கு உங்க முறைபடி
அஞ்சலியை என்னோட, என் பொண்டாட்டியா அனுப்பி வைக்கிறீங்கன்னு மட்டும்
சொல்லுங்க”,
“அப்போதான் நானும் முறையோடு எங்கப்பக்க ஆட்களோடு வந்து உங்க  பொண்ணை என்
பொண்டாட்டியா, எங்க வீட்டு மருமகளா அழைச்சிட்டு போகமுடியும்…”  என்று
முடித்தவன், மேலே நின்று நோட்டம் பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை
“சவாலாகவே..!!”  பார்த்துவிட்டு  கிளம்பினான்

Advertisement