Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 12
அஞ்சலிக்கும், அசோக்கிற்கும் கடந்த ஒரு வாரமாக “சுந்தரத்தின் மனதில் என்ன
ஓடுகிறது..?” என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, “அவர் கோவமாக
இருக்கிறாரா..? இல்லை கதிருக்கு எதிராக ஏதாவது செய்ய நினைக்கிறாரா..?
இல்லை வேறேதும் யோசிக்கிறாரா..?” என்று எதுவுமே கணிக்க முடியாத நிலையில்
இறுக்கமாகவே இருந்தார்,
இதுவரை அவர் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் மகனிடம் கூட எதுவும்
பேசாமல் தான் இருந்தார், அவர்க்கு நன்றாகவே தெரிந்தது, அசோக்கிற்கு
முன்னரே இவர்களின் திருமண விஷயம் தெரிந்திருக்கிறது என்று,
ஆனாலும் மகன் தன்னிடம் சொல்லவில்லை என்ற பாதிப்பு அவரின் மனதில்
இருக்கத்தான் செய்தது, “அவர் கட்சி, இன சார்ந்த விஷயங்களில் தீவிரமாக
இருந்தாலும், குடும்பத்தை பொறுத்தவரை மிக மிக நல்ல மனிதரே”, அதனாலே
என்னவோ அவரால் மகன், மகள்  இருவரும் இவ்வளவு பெரிய விஷயத்தை அவரிடம்
மறைத்ததை ஏற்று கொள்ள முடியவில்லை,
அஞ்சலிக்கும், அசோக்கிற்கும் தந்தையின் ஒதுக்கம் மிகவும் பாதித்தது,
அதிலும் “அசோக்  சுந்தரத்திடம் மிகவும் ஓட்டுதல் உள்ள மகனே”,
இருவருக்கும் நிறைய விஷயங்களில்  மனம் சார்ந்த நல்ல புரிதலே உண்டு,
அதனாலே மற்ற வீடுகளில் இருக்கும் அப்பா, மகன் பிரச்சனை இவர்களுக்கு
இடையில் எப்போதுமே இருந்ததில்லை,
 ஏன் “எதிரி குடும்பத்தின் மகன் கதிரிடம்  நட்பு பாராட்டவும் கூட மகன்
மேல் உள்ள நம்பிக்கையால் தான் அனுமதித்து இருந்தார்”.
அதேபோல் தான்அஞ்சலி விஷயத்திலும் அவள் கேட்பதை அப்படியே நிறைவேற்றி
கொடுப்பார், எல்லா அப்பாக்களுக்கும் மகள் தானே அவ்வீட்டின் இளவரசி,
மகாலக்ஷ்மி, சுந்தரமும் அதற்கு விதிவிலகக்கல்ல, அவரும் இதுநாள்வரை
அஞ்சலியை அவ்வீட்டின் இளவரசியாகவே தான் வளர்த்தார்,
ஆனால்  “தான் அவர்களை  நினைத்திருந்தது போல் மகன், மகள் இருவரும்  தன்னை
நினைக்கவில்லையோ..?”  என்பதே அவரின் வருத்தமாக  இருந்தது, மீனாட்சியும்
மகளிடமும், மகனிடமும் தேவைக்கே பேசினார், அவர்கள் ஏதாவது பேசினால் கூட
கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விட, பிள்ளைகள் இருவரும் பெற்றோரின்
ஒதுக்கத்தில் மிகவும் வருத்தப்படவே செய்தனர்.
 இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கடந்துவிட, மாலை வேளையில்  மகனிடமும் ,
மகளிடமும்  பேச வேண்டுமென ஆபிஸ் ரூமிற்கு வரவழைத்தார் சுந்தரம். இருவரும்
தயக்கத்துடன் வர, அமரும்படி சைகை செய்தவர், அவர்கள் அவர்கள் அமரவும்,
க்கும்.. என்று தொண்டையை  செறுமியபடி பேச ஆரம்பித்தார்,
எடுத்தவுடன் நேரடியாகவே “இப்போ இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்ன்னு
நீங்க ரெண்டு பேரும் எதிர்பாக்கிறீங்க..?” என்று எந்த விதமான கோவமும்
இல்லா குரலில் மூன்றாவது மனிதர்களிடம் கேட்பது போல ஒதுக்கத்துடனே
கேட்டார்,
அவரிடம் கோவத்தை தான் எதிர்பார்த்து வந்தார்களே தவிர இப்படி ஒரு கேள்வியை
எதிர்பார்க்கவில்லை, அதனாலே அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியாமல் இருவருமே முழிக்க செய்தனர்.
“ம்ம் சொல்லுங்க, நான் என்ன செய்யணும்..?” என்று உணர்வுகளற்ற முகத்துடன்
மறுபடியும் கேட்கவே, தன் மௌனத்தை களைத்த அசோக்,
 “ப்பா.. இது.. இப்படி கேட்டா  எப்படிப்பா..?” என்று தயக்கத்துடனும்,
மெலிதான பயத்துடனும் தங்கைக்காக கேட்டவனை, கூர்ந்து நோக்கிய சுந்தரம்,
“வேற எப்படி என்னை கேட்க சொல்ற..?  நடந்து முடிஞ்ச ஒரு முக்கியமான
விஷயத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலை வர்ற வரைக்கும் உங்களோட அப்பாவான
என்கிட்ட சொல்லணும்ன்னு உங்க ரெண்டு பேருக்குமே தோணலை”,
“அப்போ இதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தானே  உண்டு, அது உங்களுக்கு இனிமேல்
ஒரு அப்பாவா நான் வேண்டாம்தானே, உங்க வாழ்க்கையோட முடிவை நீங்களே எடுக்க
அளவு பெரியா ஆளா வளந்திட்டிங்க,  இதுக்கு அப்பறமும்  இந்த அப்பாவோட தயவு
என்ன வேண்டியிருக்கு உங்களுக்கு..?, விடுங்க..”  என்று மிகவும் மனம்
விட்டு பேசும் தந்தையை அதிர்ச்சியுடந்தான் பார்த்தனர் அண்னன் தங்கை
இருவரும்,
தங்களின் செயலுக்கு இப்படி ஒரு அர்த்தம் வரும் என்று இருவருமே கனவிலும்
நினைக்கவில்லயே..?,  அப்பா கோவப்படுவார், சண்டை போடுவார் என்றே
எதிர்பார்த்திருந்த இருவருக்குமே சுந்தரத்தின் பேச்சு வருத்தத்தோடு குற்ற
உணர்ச்சியையும் கொடுத்தது. அவரின் எந்த கேள்விக்கும் பதில்
சொல்லமுடியாமல், ஏன் பதிலே இல்லாமல் திகைத்து போய் அமர்ந்திருந்தனர்
பிள்ளைகள்.
“ப்பா..” என்று கண்களில் கண்ணீர் சூழ  அழைத்த மகளை கை நீட்டி தடுத்தவர்,
“இப்போ நீங்க  என்ன பேசினாலும், என்ன காரணம் சொன்னாலும் அதை என் மனசு
ஏத்துக்காது, விட்டுடுங்க..,  நாம நம்மை பத்தி எதுவும் இப்போ
பேசவேண்டாம்”,
“நான் இப்போ உங்களை கூப்பிட்டது உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை
பத்தி பேசத்தான், நம்ம நடராஜோட  இடம் பிரச்சனை தெரியுமில்ல..?”  என்று
மகனிடம் கேட்டவர் அவன்  தெரியும் என்பது போல் தலையாட்டவும்,அடுத்து
கேள்வியாக மகளை பார்த்தார், அவள் தெரியாமல் பார்க்க,
“நட்ராஜ் இடம் ஒன்னு வாங்கினான், அதுக்கு பக்கத்தில இருக்கிற இடம்
மாறனோட  ஆளு முத்து இடம், இப்போ ரெண்டுபேருக்கும் பத்தடி  இடத்துக்காக
பிரச்சனை, இந்த சண்டை ரெண்டு வாராம இருக்கு,  அப்பவே  அவன் சார்பில பேச
நான் போறதா இருந்துச்சி”,
“ஆனா ம்ப்ச்..” என்று அஞ்சலியை அன்றுதான் பெண்பார்க்க ஏற்பாடு
செய்திருந்ததில் அவர் போகமுடியாமல் பஞ்சாயத்தை தள்ளி வைத்திருந்தனர்,
“ஆனா இப்போ பிரச்சனை பெரிசாகி அடிதடி வரை போயிருச்சு, அதனால  இன்னிக்கு
சாயந்திரம் கட்ட பஞ்சாயத்து வச்சிருக்காங்க, நான்  கண்டிப்பா போய்த்தான்
ஆகணும்,  அங்க போய் நம்ம ஆளுக்காக நான் பேசித்தான் ஆகணும்”,
“முன்னமாதிரி இருந்தா எனக்கு கட்ட பஞ்சாயத்து பேசப்போறதில எந்த
பிரச்சனையில்ல,  ஆனா இப்போ எப்படி, என்ன செய்ய..?  அந்த மாறனும் அவங்க
ஆளு சார்பா பேச வருவாங்க”, என்று நிறுத்தி பிள்ளைகளின் முகத்தை, “நான்
சொல்ல வருவது புரிகிறதா..?” என்பது போல் பார்த்தார்,
அவர் சொல்லவருவதை  நன்றாகவே புரிந்து கொண்ட இருவருமே, என்ன செய்வதென்று
புரியாமல்  உதவிக்காக தந்தையை தான் பார்த்தனர். அவரோ, மிக இறுக்கத்துடன்,
“இப்போ என்ன செய்ய வேண்டும் என்று  நீங்க தான் சொல்லவேண்டும்..”  என்பது
போல் கொஞ்சம் கூட இலகாமல் தான் பார்த்தார்,
அதில் இன்னும் சோர்ந்து போன அஞ்சலி, அசோக்கை பார்க்க, அவன் கண்களாலே
தங்கைக்கு தைரியம் கொடுத்தவன், தன் தந்தையிடம்,
“ப்பா.. ப்ளீஸ்,  எங்களுக்கு இதுல எதுவும் தெரியாது, நாங்க செஞ்சது
தப்புதான், உங்ககிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கணும்”,
“ஆனா அஞ்சலி,  இது தெரிஞ்சா எங்க பிரச்சனை ரொம்ப பெருசாகிருமோன்னு ரொம்ப
பயந்துட்டா, அதனால் தான் சொல்லலியே தவிர, உங்ககிட்ட மறைக்கணும்ன்னு நாங்க
 நினைக்கவே இல்லை”, என்று பொய்யும், மெய்யும் கலந்து தங்கைக்காக பேசியவனை
நக்கலாக பார்த்த சுந்தரம்,
“இப்போ கதிர் அஞ்சலியை தூக்கிட்டு போனது மட்டும் பிரச்சனையாகலியா..?
இல்லை ஊர்ல இருக்கிறவனெல்லாம் நம்மை பத்தி பேசலையா..? இல்லை
பஞ்சாயத்துதான் நடக்கலியா..?”  என்று கூர்மையான பார்வையுடன் கேட்டார்,
அவரின் நுணுக்கமான கேள்வியில் இருவரும் வாயடைத்து  போயினர்,
“நீங்க இன்னும் எதையோ மறைக்கிறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்,
அதுமட்டுமில்லை இதுல  இன்னொரு விஷயமும் இருக்கு..” என்று பிள்ளைகளை
குறிப்பாக பார்த்தவர்,
“அந்த கதிர் தாலி கட்டிட்டு..!!  அப்படியே  விட்டுட்டு போற ஆளெல்லாம்
கிடையாது, எவ்வளோ பெரிய பிரச்சனை வந்தாலும், எத்தனை பேர், எத்தனை
பஞ்சாயத்து நடந்தாலும் அவனெல்லாம் அசரக்கூட மாட்டான், அது உங்களுக்கும்
நல்லா தெரியும், ஏன் எனக்கும் நல்ல்லாவே தெரியும்” என்று அழுத்தி
சொன்னவர்,
“அவன் பழிவாங்க தாலி கட்டியிருந்தாலும்,  உன்னை கண்டிப்பா விட்டிருக்க
மாட்டான், அப்படி இருக்கிறப்போ, அவன் உன்னை ஏன் விட்டான்..? விட்டதுக்கு
அப்பறமும் அவன் ஏன் உன்னை கல்யாணம் செஞ்சதை இதுவரைக்கும்  சொல்லலை..?
அவனோட கேரக்டர் இது கிடையாது”,
அதோட  “அவனை பிரிஞ்சி, அவன் தாலி கட்டினதை மறைச்சி எதுவுமே நடக்காத
மாதிரி நீ ஏன் இங்க வந்த அஞ்சலி..?” என்று அக்கு வேறாக ஆணி வேறாக
பிரித்து கேள்வி கேட்ட தந்தையை கலங்கும் கண்களுடன், அதிர்ச்சியுடன்
பார்த்தாள் அஞ்சலி.
மகளின் அதிர்ச்சியான முகத்திலே, மகள் தான் இதற்கு காரணம் என்று புரிந்து
கொண்ட சுந்தரம்,  “ஏன் அஞ்சலி..?” என்று மிக தீவிரமாக கேட்டார், அவரின்
கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்..?
“நான் அவனை காதலித்தைதயா..? இல்லை  அவனின் பழிவாங்கும் எண்ணத்திற்காக
கட்டிய தாலியை அவளின் அவளின் காதல் மனது ஏற்று கொள்ளமுடியாமல்  அவனை
விட்டு விலகியதையா..? இதில் எதை சொல்ல முடியும்..?”
 “பதில் சொல்லு அஞ்சலி, கதிர் ஏன்  உன்னை விட்டான்..?”  என்று  கோவமாக
கர்ஜிக்கவே செய்ய, அஞ்சலிக்கு அவரின் கர்ஜனையில்  பயத்தில் தூக்கிப்போடவே
செய்தது,
“அது.. அது..  நான். எனக்கு பிடிக்கல,  வேணாம்ன்னு சொன்னதால”, என்று
பயத்தில் திக்கியபடியே சொன்னவளை, அப்போதும் நம்பாமல் தான் பார்த்தார்
சுந்தரம், அவரின் சந்தேகத்தை புரிந்து கொண்ட அசோக்,
“அஞ்சலி சொன்னது உண்மை தான்ப்பா, இவளுக்கு பிடிக்கலன்னு சொன்னதும் கதிர்
விட்டுட்டான், உங்களுக்கு தான் தெரியுமே அவன் ரொம்ப ரோஷக்காரன்”, என்று
தங்கையை அப்பாவின் கோவத்தில் இருந்து காப்பாற்ற பொய் சொன்னான் அந்த
பாசமிகு அண்ணன்.
“சரி, நீங்க சொன்னது உண்மை தான், நான் ஏத்துக்கிறேன்”, என்று
ஒத்துக்கொள்ளவும், அவரின் திடீர் ஒப்புதலில் பிள்ளைகள் “அடுத்து என்ன
வருமோ..?” என்று மிகுந்த பயத்துடன் தான் தந்தையை பார்த்தனர். அவர்களின்
பயபடியே தான்,
“உனக்குத்தான்  கதிர் தாலி கட்டினது பிடிக்கல இல்லை, அப்பறம் நீ ஏன் நான்
பாக்கிற மாப்பிளையை  கல்யாணம் செஞ்சுக்க கூடாது..? என்று அழுத்தத்துடன்
கேட்கவே,
அஞ்சலி வார்த்தைகள் வராமல் தந்தையையே  தவிப்புடன் பார்த்தாள், இதற்கு
கண்டிப்பாக அவளால் எந்த பதிலும் சொல்ல முடியாதே,  அசோக்கும் தந்தையின்
கிடுக்கு பிடியில் அசையமுடியாமல் அமர்ந்துவிட்டான்,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அஞ்சலி..?” என்று சுந்தரம் விடாமல் கேட்க,
“ப்பா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க, எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு,
அவ்வளவுதான். அது எனக்கு பிடிக்குது, பிடிக்கலை அப்படிங்கிறது எல்லாம்
வேண்டாமே ப்ளீஸ்ப்பா”, என்று முயன்று பதில் சொல்லிவிட்டாள்,
“ஓகே.. அப்போ இதுக்கு என்ன தான் வழி..? நீயே சொல்லு அஞ்சலி”,
“நாம ரெண்டு குடும்பமும் வேற வேற  இனம், வேற வேற கட்சி.. இதுல நாம ரெண்டு
குடும்பமும் முதலாளி வர்க்கம் வேற, நம்மளை நம்பி நம்ம பின்னாடி ஒரு பெரிய
பட்டாளமே இருக்கு”,
“அவங்க நம்ம மேல் வச்சிருக்கிற  நம்பிக்கை,  எந்த பிரச்சனையானலும் நம்ம
கூட பக்கபலமா இருக்கிறவங்க, ஏன் நமக்காக  உயிரை கூட கொடுக்கிறவங்க,
ஒவ்வொரு எலெக்ஷனிலும் நமக்காக பாடுபடறவங்க.. இப்படி சொல்லிட்டே போகலாம்”,
“இது நமக்கு மட்டுமில்லை, அந்த மாறன் பின்னாடியும் அவனுக்காக உயிரை கூட
கொடுக்கிற இப்படி ஒரு பெரிய கூட்டமே இருக்கு”,
இது மட்டுமில்லை “எனக்கும், அந்த மாறனுக்கும் இடையில நிறைய பிரச்சனை,
நிறைய மனக்கசப்பு, நிறைய மனக்கஷ்டம், இவ்வளவு ஏன் நாங்க ரெண்டு பேரும்
இதுவரை சாதாரணமான சூழ்நிலையில சந்திச்சதே இல்லை”,
“எப்போ சந்திச்சாலும் எங்களுக்குள்ள  பகை, சண்டை, இல்லை எலெக்ஷன்
பிரச்சனை இப்படிதான் இருக்கும், இதனாலே எங்களுக்குள்ள பகை தான்
அதிகமாகும்”,
“ஏன் இப்போ இந்த நட்ராஜ் பிரச்சனையிலும் அவன் மேலே தப்பு இருந்தாலும்,
அவன் நம்ம ஆளுன்னு நான் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், இதேதான் அந்த
மாறனும் பண்ணுவான், இப்படித்தான்.. இதுதான் எங்களுடைய இத்தனை நாள்
வாழ்க்கையா இருந்திருக்கு”,
“இப்படி இருக்கிறப்போ நான் கனவுல கூட நினைச்சதில்லை, இப்படி என் பொண்ணு
கழுத்துல அந்த மாறனோட மகன் தாலி காட்டுவான்ன்னு, அதை நினைக்கும் போதே என்
ரத்தம் கொதிக்குது, அவனை வெட்டி போடணும்ன்னு மனசு துடிக்கிது”.
“இது எங்க பகையால வர்ற கோவம் இல்லை, ஒரு அப்பாவா வர்ற ஆத்திரம், என்
பொண்ணை தூக்கிட்டு போய் ஒருத்தன் தாலி கட்டியிருக்கான்னா அவனை அப்படியே
நான் சும்மா விட்ற முடியுமா..? இதை நினைக்கும் போதெல்லம் என்னால என்னையே
கண்ட்ரோல் பண்ண முடியல”,
“அப்படியிருந்தும் உனக்காக, இதுக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்காம அவன் மேல
கைவைக்க கூடாது அப்டிங்கிறதுக்காகதான் நான் அமைதியா இருக்கேன்”, என்று
கத்தவும், அஞ்சலி தந்தையின் பேச்சில் அளவில்லா பயத்துடன் பார்க்க, அசோக்
கொஞ்சம் தைரியத்துடன் அவனின் விருப்பமின்மையை முகத்தில் காட்டி
அதிர்ப்தியாக தான் பார்த்தான். அவர்களின் முகபாவத்தில்,
“இதெல்லம் உங்களுக்கு இப்போ புரியாது, ஒரு அப்பாவை ஆகும் போதுதான்
உங்களுக்கு என்னோட ஆத்திரம், ஆதங்கம்,  கோவம் எல்லாம் புரியும்”  என்று
கொதித்தவர், இறுதியாக,
 “நான் என்னோட பக்க சூழ்நிலையெல்லாம் சொல்லிட்டேன், நீயும் அந்த கதிர்
தாலி கட்டினது பிடிக்கலன்னு தான் சொல்ற, சொல்லு இப்போ இதுக்கு என்ன
செய்யலாம்..?” என்று மகளிடம்  கேட்டு கொண்டிருக்க, அங்கே மாறனும்
கதிரிடம் இதையேதான் கேட்டு கொண்டிருந்தார்.
“நீ அந்த பொண்ணை தூக்கிட்டு போனது தப்பு,   அந்த பொண்ணு கழுத்துல தாலி
கட்டினது அதை விட பெரிய தப்பு,  இது எல்லாத்தயும் விட தாலி கட்டிட்டு
அந்த பொண்ணை அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்தது  ரொம்ப ரொம்ப பெரிய
தப்பு..” என்று கத்திய மாறன்,
“இப்போ இதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற..?” என்று மகனிடம் ஆத்திரமாக கேட்டார்,
“நீங்க எனக்கு சில உதவிகளை மட்டும் செஞ்சா போதும்,”  என்று கதிர்
அப்போதும் பணியாமலே தான் கேட்டான். “என்ன உதவி..?” என்று மகன்  தன்னிடம்
முதல்முறையாக உதவி கேட்க மறுக்கமுடியாமல் ஒப்புக்கொள்ளும் பாவனையில்
கேட்டார்,
“இன்னிக்கு நீங்க அந்த  முத்து பிரச்சனைக்கு போக வேண்டாம், அங்க போனா
கண்டிப்பா பகை இன்னும் தான் கூடும், எனக்கு இனிமேலும் நமக்குள்ள இருக்கிற
பகையை பெருசு பண்றதுல விருப்பம் இல்லை..?” என்று உறுதியுடன் சொன்ன மகனை
யோசனையாக பார்த்த மாறன்,
“நீ தான் அந்த பொண்ணை..”
 “அந்த பொண்ணு கிடையாது, உங்க மருமக..!!”  என்று கண்டிப்புடன் முகம்
சுழித்து கதிர் கோவமாக சொல்லவும்,
 “என்னடா இது, நீ தான் அந்த பொன்.. சரிசரி என் மருமக..” என்று கதிரின்
முறைப்பில் வேகமாக திருத்தி கொண்டவர், “என் மருமகளை வேண்டாம்ன்னு
சொல்லித்தானே அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்த..? இப்போ என்ன..?” என்று
புரியாமல் கேட்க,
“அப்போ புத்தியில்லாம அவ பேச்சை கேட்டு விட்டுட்டு வந்துட்டேன், அதான்
நான் பண்ண பெரிய தப்பு, அதனால்தான் கண்டகண்டவனெல்லாம் என் பொண்டாட்டியை
பொண்ணு பார்க்க, பூ வைக்கண்ணு வந்து நிக்கிறாங்க”, என்று ஆத்திரத்தில்
பல்லை கடித்து கொதித்தவன்,
 “அதான் இனியும் அவளை அங்க விட்றதா இல்லை, விட்டதானே அவங்க அப்பா
அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பார்,  நான் கூட்டிட்டு வரப்போறேன்..” என்றவனை
முறைத்து பார்த்த மாறன்,
“இப்போ நீ போய்  கேட்டவுடனே அந்த சுந்தரம் அவன் பொண்ணை அனுப்பிடுவானா..?
இல்லை நானும், நம்ம ஆளுங்களும்தான் அதை  ஒத்துப்போமா..? அன்னிக்கே என்
மருமகளை கூட்டிட்டு வந்திருந்தா பிரச்னையோடே பிரச்சனையா எல்லாம்
முடிச்சிருக்கும், இப்போ மறுபடியும் பஞ்சாயத்து தான் நடக்கும்” என்று
சொல்லவே,
“ம்ம் எத்தனை பஞ்சாயத்து நடந்தாலும் பரவாயில்லை, நீங்க யாருமே
ஒதுக்கலன்னாலும் பரவாயில்லை, எனக்கு என் பொண்டாட்டி என்கூட வரணும்
அவ்வளவுதான்” என்று மிக உறுதியாக முடிவெடுத்துவிட்டான் கதிர்.

Advertisement