Advertisement

நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 11 1
“அஞ்சலி.. நாம இப்போ ஏதாவது  செஞ்சே ஆகணும்..”  என்று  தங்கையிடம்
அவசரமாக சொன்ன அசோக், உடனே போன் எடுத்து கதிருக்கு அழைத்தான். அவன்
எடுத்தவுடன் வேக வேகமாக விஷயத்தை சொல்ல,
“ம்ம்.. எனக்கு இது முதல்லே தெரியும்..” என்று சொன்ன கதிரின் குரலில்
தெரிந்த உஷ்ணத்தை கவனிக்க தவறிய  அசோக்,
“என்னது முதல்லே தெரியுமா..? அப்போ ஏண்டா எங்ககிட்ட இதைப்பத்தி முதல்லே
சொல்லலை நீ” என்று எகிற, பக்கத்தில் நின்றிருந்த அஞ்சலிக்கு கதிர்
பேசுவது நன்றாகவே கேட்டதோடு அவன் குரலில் ஒலித்த உஷ்ணமும் புரிந்தது,
“ஏன் சொல்லணும்..?” என்று அசோக்கிற்கு மேல் எகிறிய கதிரின் சத்தத்தில்,
அண்ணன், தங்கை இருவரும் யோசனையோடு பார்த்தனர்.
“இதென்னடா கேள்வி..? எங்ககிட்ட சொல்லணும் தானே நீ” என்று அஞ்சலியின்
கண்ணசைவில் சிறிது நிதானத்துடன் கேட்டான் அசோக்.
 “அதுதான் நானும் கேட்கிறேன், நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்..? நான்
செஞ்சதை அன்னிக்கு அவ ஏத்துக்கிட்டு இருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனைகளே
வந்திருக்காதே”, என்று கதிர் கோபத்துடன் கத்தவே செய்தான்,
அவனின் கோவத்திற்கான பதிலை இப்போது  சொல்வது சரியாக இருக்காது என்று
இருவருக்குமே நன்றாக புரிந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் பேசித்தானே
ஆகவேண்டும், அதனால் அசோக் பொறுமையுடன்,
“நீ  செஞ்சதும், சொன்னதும் உன்பக்கம் உள்ள நியாயம், ஆனா எங்களுக்கு நீ
செஞ்சது ரொம்ப பெரிய அநியாயம்  தான், அதுவும் அஞ்சலிக்கு நீ செஞ்சது
அநியாயம் மட்டுமில்லை, ஒரு விதமான குற்றமே..!!,
ஆனாலும்  நானும் சரி, அஞ்சலியும் சரி உனக்காக, உன்பக்கம் உள்ள
நியாயத்துக்காக நீ செஞ்சதை ஏத்துக்கலைன்னாலும் கூட, நீ செஞ்சு வச்ச
வேலையால வர்ற பிரச்சனைகளை  பொறுத்துகிட்டோம், ஏன் இதுவரை  நாங்களே
அதையெல்லாம்  சமாளிக்கவும் செஞ்சோம்”,
“ஆனா இன்னைக்கு, சிட்சுவேஷன் எங்க கையை மீறி போகுது, அதனால தான் உன்கிட்ட
கேட்கவே செய்தேன், ஆனா நீ.. ம்ப்ச்..” என்று கோபபெருமூச்சு விட்ட
அசோக்கிடம், மிக தீவிரமான குரலில் பேச ஆரம்பித்த கதிர்,
 “என்னை பொறுத்தவரை நான் செஞ்சது அப்பவும் சரி, இப்பவும் சரி, ஏன்
எப்பவுமே தப்பே கிடையாது, அது மட்டுமில்லை, உன் தங்கச்சி தான் நான்
செஞ்சதை ஏத்துக்கவே இல்லையே, முடியாயதுன்னு  சொல்லிட்டு தானே
வந்துட்டா”,
“அப்படி இருந்தும்  அந்த ராஜேஷ்கிட்ட வந்து அன்னிக்கு நான் பேசத்தான்
செஞ்சேன்,  என்னை வேணாம்ன்னு சொன்ன உன் தங்கச்சிக்காக  நான் வந்து
பேசினேன்”,
“ஆனா இதுல உங்க ரெண்டு பேருக்கு தான் எதார்த்தம் புரியலை, உங்க அப்பா
மட்டுமில்லை, உலகத்துல இருக்கிற  எந்த அப்பாவும் தன்  பொண்ணுக்கு
கல்யாணம் செய்யாமா அப்படியே விடமாட்டாங்க. அது எனக்கு நல்லா
தெரிஞ்சதாலதான் நான் அன்னிக்கு அப்படி செஞ்சேன், அதைவிட எனக்கு வேற
வழியும் இல்லை, ஏன்னா நம்ம பகை அப்படி,
ஆனா உன் தங்கச்சி அன்னிக்கு.. என்று  அதுவரை கோவத்தில் கத்தி
கொண்டிருந்தவன் நிறுத்த,  அவன் கேட்டதை  எல்லாம் பக்கத்தில் இருந்து
கேட்டு கொண்டிருந்த அஞ்சலிக்கு, அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிய,
மனதுள் மிக தீவிரமாக யோசித்தவாறே நின்றிருந்தாள்.
அதனால, இந்த பிரச்சனையை  மட்டுமில்லை, இதே மாதிரி இன்னும் நிறைய
பிரச்னைகளை உங்க அப்பா கொண்டு வருவார், எல்லாத்தையும் நீங்களே சமாளிங்க,
இதுல என்னை  கேட்க என்ன இருக்கு உங்களுக்கு..?, என்று வெட்டி பேசியவன்,
அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்  நின்றிருந்த அசோக்கிடம், “அவ
பக்கத்துல இருக்காளா..? என்று அஞ்சலியை கேட்கவே, அஞ்சலியிடம் போனை
கொடுத்து தள்ளி நின்று கொண்டான் அசோக்,
அஞ்சலி போனை வாங்கியவுடனே, “நான் செஞ்சதை நீ ஏத்துக்கலைன்னாலும்,
உனக்கும் எனக்கும் உள்ள பந்தம் என்னைக்குமே மாறாது தெரியுமில்லை..”
“அதனால நீ என்ன செய்வியோ..? ஏது செய்வியோ..?  எனக்கு தெரியாது, இன்னைக்கு
 வர்ற அந்த வெண்ணெய் மாப்பிள்ளை முன்னாடி நீ போகக்கூடாது அவ்வளவுதான்”,
என்ற கதிரின் உச்ச கட்ட கோவத்தை உணர்ந்த அஞ்சலி,
“ம்ம்..” என்று மட்டும் சொன்னவள், வைத்தவுடன், “என்ன சொல்றான்..?” என்று
கேட்டபடி அசோக் வர,   “ஒன்றும் இல்லை” என்று யோசனையுடன் தலையாட்டியவள்,
சிறிது நேர அமைதிக்கு பிறகு,
“ண்ணா.. அவர் சொல்றதும் கரெக்ட்தான், இன்னும் எத்தனை  நாளைக்கு  நாமளும்
இப்படி அப்பாக்கு தெரியாம சமாளிக்க முடியும், எனக்கு என்னமோ அப்பாகிட்ட
சொல்லிடறதுதான் சரின்னு தோணுது”, என,
“என்ன விளையாடுறியா நீ..? அப்பாக்கு மட்டும் தெரிஞ்சா கதிர்.. அவன்
எப்படி..?”  என்று பதற,
 “இல்லண்ணா.. நான் யாருன்னு எல்லாம் சொல்லமாட்டேன்”, என்று அஞ்சலி சொல்லவும்,
“ம்ஹூம்.. அப்பா கண்டிப்பா யாருன்னு தெரிஞ்சிக்காம விடவே மாட்டார்”,
என்று அசோக் தன் தந்தையை பற்றி அறிந்தவனாக சொல்ல,
“ம்ம்..  எனக்கும் புரியுது தான். ஆனா நாம இதை பர்மனண்டா ஸ்டாப்
பண்ணணும்ன்னு அப்பாகிட்ட சொல்றதை தவிர வேற வழியில்லை”, என்று உறுதியுடன்
முடித்தவள் நேரே தன் தந்தையிடமே சென்றுவிட்டாள்,
அவளின் முகத்தில் தெரிந்த உறுதியில் அசோக், அவளுக்கு துணையாக தானும் உடன்
சென்றான். மாப்பிள்ளை குடும்பத்திற்காக காத்து கொண்டிருந்த சுந்தரத்தின்
முன் சென்று நின்ற அஞ்சலி,
“ப்பா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்று
உறுதியுடன் சொன்னவளையும், அவளுக்கு பக்கத்தில் இருக்கும் மகனையும்
யோசனையாக பார்த்த சுந்தரம்,
“இப்பவே பேசணுமா..?”  என்று கூர்மையாக கேட்கவும்,
“ஆமாப்பா.. இப்பவே, இந்த நிமிஷமே பேசணும்..” என்றவள், தந்தையின் முகத்தை
அனுமதிக்காக பார்க்க, அவர் மெலிதான தலையசைப்புடன் சம்மதம் தரவும்,
 “இந்த ஏற்பாட்டை உடனே நிறுத்திடுங்கப்பா, நாம பேசலாம்..”  என்று
சொன்னாள் அஞ்சலி.
“ஏன்..?” என்று சுந்தரம்  ஒற்றை கேள்வி கேட்டாலும், அதில்
ஒளிந்திருக்கும் பல கேள்விகளை புரிந்து கொண்ட அஞ்சலி,
“நான் எல்லாத்துக்கும் இன்னைக்கே பதில் சொல்லிடறேன், ஆனா அதுக்கு
முன்னாடி இதை நிறுத்துங்க, நாம வீட்ல போய் பேசிக்கலாம்ப்பா..” என்று
முடித்துவிட்டவள், சுந்தரத்தின் பதிலை எதிர்பார்க்காமல்  வீட்டிற்கே
கிளம்பிவிட்டாள்,
அவளின் நடவடிக்கையில் கோவம் வந்தாலும், “அஞ்சலி எப்போதுமே மிக நல்ல மகளே,
பேச்சுமே தேவையென்றால் மட்டுமே பேசுவாள், இதுவரை அவளால் அவர் பெருமை
மட்டுமே அடைந்திருக்க”, இன்று மகளின் இத்தகைய போக்கால் கோவம் கொண்டாலும்,
” இதுவரை திருமணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்த  மகள் என்னதான்
சொல்ல போகிறாள் என்று பேசித்தான் பார்ப்போமே..” என்று தானும் முடிவெடுத்த
சுந்தரம், அவரின் ஏற்பாட்டை அவரே நிறுத்திவிட்டு, “ஏன்” என்று விடாது
கேள்வி கேட்ட  குடும்பத்தினறுக்கும் எந்த பதிலும் சொல்லாமல்  வீட்டிற்கே
கூட்டிக்கொண்டு  வந்துவிட்டார்,
அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த அஞ்சலி, அவர்கள் வீட்டிற்கு
வந்து பேச உட்காரவும்,  உள்ளுக்குள்மிக பயமாக,  பதட்டமாக இருந்தாலும்,
இதை “இன்றோடு முடித்துவிட வேண்டும்” என்று உறுதியும் இருந்ததால், கொஞ்சம்
தைரியத்துடனே சுந்தரத்திடமும், வீடு ஆட்களிடமும்,
“எனக்கு.. எனக்கு..” என்று  சொல்ல ஆரம்பித்தவள், அதற்கு மேல் சொல்ல
முடியாமல் திணற, வீட்டினர் அனைவரும் அவளை புரியாமல் பார்த்தனர்,
 “என்ன அஞ்சலி..? என்ன சொல்ல வர..?” என்று மீனாட்சி காலையில் இருந்து
நடக்கும் விஷயங்களில்  மிகவும் குழம்பி போயிருந்தவர், இப்போது மகளும் எதோ
சொல்ல தடுமாறவும் தானே என்ன என்று கேட்டார்.
சுந்தரமோ மகளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தில், பயத்தில் எதோ விரும்ப
தகாதது நடக்க போவதாக  தோன்றினாலும் மகளின் மேல் இருந்த நம்பிக்கையில்,
கொஞ்சம் தைரியமாகவே  இருந்தார்.
“எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி..!!?”  என்று கண்களை மூடி வேகமாக சொல்லியே
விட்டாள் அஞ்சலி.
அவள் சொல்லி முடித்தவுடன்  “தாங்கள் ஏதாவது தவறாக கேட்டு விட்டோமா..?”
என்றே எல்லோருமே நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
சொல்லிமுடித்த பின் கண்களை திறந்த அஞ்சலையின் கண்களுக்கு அவர்களின்
மனவோட்டம் புரியவே,
 எதுவும் சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்தவாறே நின்றவள், தன்
தந்தையை பார்க்க, அவரோ சிலை போலே அமர்ந்திருந்தார். அவரின் அதிர்ச்சி
புரிய, தன் அண்ணனை பார்க்க, அசோக்குமே சுந்தரத்தை தான் பார்த்து
கொண்டிருந்தான்.
முதலில் அதிர்ச்சி நீங்கிய மீனாட்சி,  அவசரமாக மகளிடம் சென்றவர், “நீ
என்ன சொன்ன அஞ்சலி..?”  என்று நீ சொன்னது பொய் தானே.. என்று கண்கள்
நிராசையில் மின்ன கேட்ட அம்மாவிடம் பதில் சொல்ல முடியாமல் கீழே
குனிந்தாள்.
அவளின் குனிந்த தலையை நிமிர்த்திய மீனாட்சி,  “அஞ்சலி எனக்கு பதில்
சொல்லு..”  என்று விடாப்பிடியாக ஏறும் கோபத்துடன் கேட்டார்,
 “ஆமாம்மா நீங்க கேட்டது உண்மை தான், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி” என்று
மறுமுறையும் சொன்னவளை, ஆத்திரம் தாங்காமல் மீனாட்சி அறைந்தே விட்டார்.
“ம்மா..”  என்று பதறியபடி அவரிடம் ஓடிய அசோக், அவரின் கையை பிடித்து தூர
இழுக்க, மகனை உதறி தள்ளிய மீனாட்சி, மீண்டும் மகளிடம் கோவமாக செல்ல,
அதுவரை அமைதியாக, அஞ்சலியை வெறித்தவாறே அமர்ந்திருந்த சுந்தரம்,
“மீனாட்சி..”  என்று அதட்டவே, நின்றவர், கணவனிடம் ஆத்திரத்துடன், “இவ
என்ன சொல்றான்னு கேட்டீங்களா.?” என்று பொங்கிவிட்ட அழுகையுடன்  குமுறவே
செய்தார்.
“நீ அமைதியாயிரு..” என்று கட்டளையாக மனைவியை அடக்கியவர், “எனக்கு முழு
விவரமும் சொல்லு அஞ்சலி” என்று விலகிவிட்ட குரலில் கேட்டார். அவரின்
விலகலில் வருத்தம் கொண்ட அஞ்சலி தந்தையை நெருங்க, கை தூக்கி “அங்கேயே
நில்” என்பது போல் கை காட்டியவர்,
 “முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அஞ்சலி”  என்று அதிகாரத்துடன்
மகளை தள்ளி நிறுத்தினார் சுந்தரம். அவரின் கேள்வியை முதல்லே
எதிர்பார்த்து அதற்கு என்ன பதில் சொல்வது என்று முன்னமே யோசித்து
வைத்திருந்தாலும், சுந்தரம் கேட்கும் போது சொல்லமுடியாமல் தடுமாறவே
செய்தாள்,
“அஞ்சலி..”  என்று சுந்தரம் கத்தவே,
“யார் என்னன்னு எல்லாம் என்னை கேட்காதீங்கப்பா, எனக்கு கல்யாணம்
ஆயிடுச்சு அவ்வளவுதான்..”  என்று கலங்கிய குரலில் சொன்னாலும் உறுதியுடனே
சொன்னாள், அவளின் பதிலில் மேலும் கோவம் கொண்ட மீனாட்சி,
“என்னடி பதில் இது..?”  என்று பொங்கியவர், திடீரென தோன்றிய சந்தேகத்துடன்
வேகமாக, “அப்படியே உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னாலும்  கழுத்துல தாலி
எங்கடி..?” என்று “மகள் பொய் சொல்கிறாளோ..?” என்று சிறிதளவு நம்பிக்கை
ஒளிவிட கேட்டார்,
 அவரின் நம்பிக்கையில் வருத்தம் கொண்டாலும், வேறு வழியில்லாமல், உள்ளே
பின் செய்திருந்த தாலியை எடுத்து வெளியே விட்டாள்.
மகள் சிறிது நாட்களாகவே க்ளோஸ்ட் நெக் வைத்த ட்ரெஸ் போட்டது இதை
மறைக்கதானா..? என்று ஆத்திரம் கொண்ட மீனாட்சி, அவளின் நெஞ்சில் தொங்கும்
தாலியை பார்த்தவர் மேலும் அதிர்ந்தார்,
“இது இது.. அஞ்சலி.. இது..” என்று  பேசமுடியாமல் திக்கியவர், “இது
லட்சுமி லட்சுமி அம்மாள்  தாலிதானே..?” என்று அச்சத்துடன் கேட்கவே,
முதலில் யாரென்று புரியாமல் திணறிய அனைவரும், புரிந்த பின் உச்சகட்ட
அதிர்ச்சியில் சிலை போலே நின்றனர்,
“இந்த தாலி கதிரின் அம்மா லட்சுமி அம்மாவுடையது என்று அஞ்சலிக்கே
அப்போதுதான் தெரிந்தது”,
“அப்போ.. அப்போ.. இதை கட்டினது அந்த கதிர்.. கதிர் தம்பியா..?” என்று
மீனாட்சியே கேட்கவும், இதற்கு மேல் மறைக்க முடியாது என்று அஞ்சலி
ஆமோதிப்பாக தலையாட்டியே விட்டாள்.
அஞ்சலி தலையாட்டவும் தான் லதாவிற்கு, அன்று கதிர் கோவிலில் வைத்து
அஞ்சலியிடம் எடுத்து கொண்ட உரிமையும், தான் அஞ்சலியின் திருமண விஷயம்
பேசும்போது அவன் காட்டிய அதீத கோவத்திற்கும் காரணம் புரிந்தது,
அதுவும் அன்று தான் “அஞ்சலியின் விஷயத்தில் உங்களுக்கு எந்த உரிமையும்
இல்லை” எனும்போது கதிரின் முகம் காட்டிய ரௌத்திரம் இன்றும் மனதுக்குள்
வந்து போனது.

Advertisement