Advertisement

“விடுங்கப்பா.. கவலைப்படாதீங்க,  பாத்துக்கலாம்”,

“இல்லை அசோக் அவ இப்போ கல்யாணம் வேணாம் சொன்னா பிரச்னையில்லை, ஆனா
எப்பவுமே வேணாம்ன்னு இல்லை சொல்றா, அதான்”  என்று யோசனையாகவும்
கவலையாகவும் இழுத்தார்.

“கொஞ்சநாளைக்கு  அவகிட்ட கல்யாணத்தை பத்தி பேசாம விட்டு பிடிக்கலாம்ப்பா”,

 “அதுக்கு டைம் இல்லை அசோக், ராஜேஷ் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவார்,
வந்தவுடனே உறுதி செஞ்சிட்டு அடுத்த முகூர்த்தத்துல கண்டிப்பா கல்யாணத்தை
முடிச்சிடனும்”,

“ஏன்ப்பா இவ்வளவு அவசரம்..? கொஞ்சம் பொறுமையா பாக்கலாமே”,

“ம்ஹூம்  பொறுமையா எல்லாம் இருக்கமுடியாது, எனக்கு அந்த கதிர் மேல
சுத்தமா நம்பிக்கையே இல்லை, அவன் நம்ம பாப்பா விஷயத்துல கண்டிப்பா எதோ
செய்ய போறான்னு என் உள்மனசு  சொல்லிட்டே இருக்கு”,

“அது மட்டுமில்லை, இப்பல்லாம் அவன் நம்ம பாப்பா பின்னாடி நிறைய
சுத்துறான், அவன் செய்றதை எல்லாம் , நான் தொடர்ந்து கண்காணிச்சிட்டு தான்
இருக்கேன், இப்படியே செய்யட்டும், ஒருநாளைக்கு இருக்கு  அவனுக்கு..”
என்று சொன்னவரின் குரலில் கதிரின் மேல் தெரிந்த கோவம் அசோக்கிற்கு
அச்சத்தையே கொடுத்தது,

“அவரின் பதவி மோகமும், கட்சி, இன வெறியும் அவன் அறிந்ததே”,

“அசோக்..  நீ நம்ம பாப்பாகிட்ட நயமா பேச்சுக்கொடுத்து அவ மனசுல என்ன
இருக்குன்னு விசாரி” என்று உத்தரவிட, நொந்து போன அசோக், “சரிப்பா..”
என்றுவிட்டான், அவனுக்கு வேறு வழியும் இல்லையே.

அவர் செல்லவும் போன் எடுத்து கால் செய்தவன், அந்த பக்கம் எடுக்கவுமே
கோவத்தில் பொரிந்து தள்ளினான்,   “நான் தான் சொன்னேன் இல்லை,
கொஞ்சநாளைக்கு அமைதியா இருன்னு, கேட்டியா..? இப்போ பாரு அப்பா, அஞ்சலி
கல்யாண விஷயத்துல  ரொம்ப தீவிரமா இருக்காரு”,

“அந்த ராஜேஷ் வேற அடுத்த ரெண்டு நாள்ல வரனாம், அப்பா அஞ்சலிகிட்ட இது
சம்மந்தமா பேசி அவ வேற எனக்கு எப்பவுமே கல்யாணமே வேணாம்ன்னு அப்பாகிட்டே
சொல்லிட்டு போய்ட்டா, இப்போ அவரு என்ன ஏதுன்னு  சந்தேகபட
ஆரம்பிச்சிட்டாரு,  என்ன செய்ய..?” இடைவிடாமல் பொரிய,

“அந்த பக்கம் பேசியதோ கதிர்”, அவனோ அசோக்கின் கோவத்தை எப்போதும் போல்
கண்டு கொள்ளாமல்,  “இப்போ எதுக்கு எவ்வளவு டென்க்ஷன்..?, மனசை ரிலாக்ஸா
வச்சிக்கிட்டு, நான் சொல்றதை மட்டும் செய்ங்க”, என்று சில விஷயங்கள்
சொன்னவன் வைத்து விட, தங்கையின் கவலையை உணர்ந்த அசோக் நேரே அஞ்சலியை
பார்க்க சென்றான்,

“ஏன் அஞ்சலி அதுக்குள்ள  அவசரப்பட்டு அப்பாகிட்ட இப்படி சொல்லிட்ட…?
அவர் ரொம்ப சந்தேக பட்ரதோடு, கதிர் மேல வேற ரொம்ப கோவமா பேசுறாரு”,
என்று ஆற்றாமையுடன் சொல்லவும்,

கதிர் மேல் கோவம்படும் தன் தந்தையை நினைத்து துணுக்குற்ற அஞ்சலி,
“என்னண்ணா சொல்றீங்க..? அவர் மேல ஏன் அப்பா கோவப்பட்றாரு..?”  என்று
பயத்துடன் கேட்டாள்,

“அவன் உன் விஷயத்துல எதாவது ஏடாகூடமா செய்வான்ன்னு அப்பா ரொம்பவே
நம்பறாரு, இதுல அவன் வேற அடங்காம உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தா,
கோவம் வரமா என்ன செய்யும்..?” என்று சலிப்பாக சொன்னவன்,

“அப்பா கதிரை வேற விடாம பல்லோவ் பண்ற  மாதிரி இருக்கு”, என்று யோசனையாக
முடித்தான்,  தந்தையின் கோவத்தை புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, கதிரின்
மேல்தான் ஆதங்கம் கொப்பளித்தது,

“ஏன் இப்படி செய்றாரு..?”  என்று அவனின் பாதுகாப்பு குறித்து உள்ளுக்குள்
மறுகியவள்,

“ண்ணா.. கொஞ்சநாளைக்கு அவரை கொஞ்சம் உஷாரா இருக்க சொல்லு”, என்று
கவலையுடன் சொன்னவள், பின் கோபத்துடன், “என் பின்னாடி அவரை இப்படி
வரவேணாம்ன்னு சொல்லு, இப்போ அதுவே வில்லங்கமா வந்து நிக்குது” என்று
சொல்லவும்,

“க்கும்.. நான் சொல்லி அவன் கேட்டுட்டாலும்”, என்று நொடித்தவன்,
அஞ்சலியின் கெஞ்சலான பார்வையில், “சரி சொல்றேன், அவ்வளவுதான், ஆனா அவன்
கேட்பான்னு எனக்கு தோணலை”, என்று அஞ்சலியிடம் சொன்னவன், அதையே கதிரிடம்
போன் செய்து சொல்ல,

அவனோ  “ஹாஹா..”  என்று சிரிக்கவும், கடுப்பான அசோக், “உனக்கு சொன்னேன்னு
பாரு, என்னை சொல்லணும்”  என்று வெடிக்க,

“விடுங்க விடுங்க இதெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன..?”  என்று விடாமல்
கிண்டலாக வார,  “உன்னயெல்லாம் திருத்தவே முடியாதுடா”  என்று அசோக் தான்
அவன் தலையில் அடித்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களும், “அஞ்சலியிடம் பேசிட்டியா..?” என்று சுந்தரம்
மகனை நச்சரிக்க, தாங்க முடியாத அவன்,  மூன்றாம் நாள் காலையில் அஞ்சலி
டியூட்டிக்கு கிளம்புமுன் அவளிடமே சொல்லிவிட்டான், “இன்று ராஜேஷ் அவளை
பார்க்க ஹாஸ்பிடல் வருவதாக”,

 அசோக்  சொன்னதை கேட்டு ஓர் நொடி அதிர்ந்த அஞ்சலி, பின் “என்றாவது
ஒருநாள் சமாளிக்க வேண்டிய பிரச்சனை தானே, அதை இன்றே முடித்துவிட
வேண்டும்..”  என்று மனதுள் உறுதி எடுத்தவாறே ஹாஸ்பிடல் கிளம்பினாள்,

கதிர் வழக்கம் போல் அடங்காமல் அவள் போகும் இடமெல்லம் தென்படத்தான்
செய்தான், அவனின் செயலில் ஆத்திரம்  வந்தாலும், “இதுதான் அவன்” என்று
உனக்கு முன்னமே தெரியாத்தானே செய்யும், “பிறகென்ன கோவம்..?” என்று தன்னை
தானே சமாளித்து கொண்டவள்,

“இப்போதைக்கு ராஜேஷ் பிரச்சனை தான் முக்கியம், அதை பார்ப்போம்” என்று
நினைத்தவாறே ஹாஸ்பிடல் வந்தவள், தன் பணியை ஆரம்பிக்க, மதியம் போல் வந்த
ராஜேஷ், அவளிடம் பேச டைம் கேட்கவும், ஒத்துக்கொண்டு, கேன்டீன் சென்றவளின்
உள்ளுணர்வு உந்த வேகமாக சுற்றி பார்த்தவளின் கண்கள்,

அங்கு  அமர்ந்திருந்த கதிரை கண்டு அதிர, அவனோ சுத்தமாகவே அஞ்சலையை
கண்டுகொள்ளாமல் மிகவும் ரசிப்புடன் டீயை குடித்து கொண்டிருந்தான், அதில்
வழக்கம் போல் பல்லை கடித்த அஞ்சலி, மனதில் பொறுமியபடி ராஜேஷுடன் அமர்ந்து
கொண்டாள்,

ராஜேஷ் சென்று காபி வாங்கி வர, அதை குடித்தவாறே சில நிமிடம் பொதுவாக
பேசியவர்கள்,  இறுதியில் திருமணத்தை பற்றி ராஜேஷே பேச ஆரம்பிக்க
கோர்த்திருந்த தன் கைகளை பார்த்தவாறே சில நொடி மௌனமாக இருந்தவள்,

நிமிர்ந்து கதிரை பார்க்க, அவன்  இன்னொரு டீயை வாங்கி  குடித்து
கொண்டிருந்தான், “அவனிடமிருந்து  தனக்கு உதவி கிடைக்காது” என்று புரிந்து
கொண்ட அஞ்சலிக்கு மனம் வலித்தாலும், வெளியே அந்த ராஜேஷிடம்  உறுதியாகவே
பேச ஆரம்பித்தவள்,

தன் பக்க சூழ்நிலையை சொல்ல, அதை எதிர்பார்க்காத ராஜேஷ் திகைத்து போய்
சிறிது நேரம்  பேசாமல்  இருந்தவன், பின்  “அது யாருன்னு நான்
தெரிஞ்சிக்கலாமா..?”  என்று கேட்டான்,

அவனிடம் பேசிய வரையிலும் சரி, அசோக் முன்னமே ராஜேஷை பற்றி விசாரித்து
சொன்னவரையிலும் சரி, நல்ல மனிதனாக, நேர்மையானவனாக தான் தெரிந்தான்,
அதனாலே தைரியத்துடன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டவளுக்கு, அவன் கேட்கும்
கேள்விக்கு பதில், சொல்லலாமா..?  வேண்டாமா..?  என்று  குழம்ப,  அப்போது,

“ஹாய் டாக்டர்..   நான் கதிர்.. கதிர் ஆனந்த்”  என்று கதிர் தன் கையை
குலுக்குவதற்காக நீட்ட, தன்னிச்சையாக  கதிரின் கையை குலுக்கிய ராஜேஷ்,
“நீ யார்..?”  என்ற கேள்வியுடன் கதிரை பார்த்தான்,

அவன் பேச வந்தைதாயே ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்த அஞ்சலி, ராஜேஷின்
கேள்வி உணர்ந்து அவனிடம், “இவர்..  இவர்தான்..” என்று  தடுமாறியபடி
சொல்ல,

முதலில் புரியாமல் விழித்த ராஜேஷ், புரிந்த பின், “ஓஹ்.. நீங்கதானா..?”
என்று சகஜமாக பேச ஆரம்பிக்க, கதிரும், ராஜேஷும் சில நிமிடங்கள் பேசவும்,
அஞ்சலி எதுவும் பேசாமல், மொபைலை பார்ப்பதும், கதிரை பார்ப்பதுமாக
இருந்தாள்.

பேசிமுடித்தபின் கதிர் மறுபடியும் ராஜேஷிடம் கை குலுக்கி விடை பெற்றவன்,
குனிந்து மொபைலை பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை பார்க்க, அவனின் பார்வையை
உணர்ந்து  நிமிர்ந்து பார்த்த அஞ்சலியிடம்,  எதுவும் பேசாமல், வெறும்
தலையாட்டலுடன் கிளம்பி விட்டான்,

அவனின் தலையாட்டலையே நம்ப முடியாமல் ஆச்சரியமாக அவன் சென்ற வழியை
பார்த்து கொண்டிருந்தாள் “அவனின் அஞ்சலி!!??”.

“அஞ்சலி எல்லாம் ஓகேயா..?”  என்று அவளை டியூட்டி முடித்து அழைத்து செல்ல
வந்திருந்த அசோக் கேட்கவும்,

“ம்ம் ஓகேதான் அண்ணா, நான் ராஜேஷ்கிட்ட எல்லாம் பேசிட்டேன், அவர்..
அவரும் வந்திருந்தார்” என்று மெலிதான குரலில் சொல்லவும்,

“யாரை சொல்ற..?”  என்று  “அவனாக இருக்குமோ..? ம்ஹூம் சான்ஸே இல்லை,
அவனாவது வரதாவது”, என்று மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே,

“அவர்தான்..”  என்று அஞ்சலி அழுத்தி சொல்ல, அசோக்கின் கைகளில் கார் ஓர்
நொடி ஆடி நின்றது,

“நீ கதிரையா சொல்ற..?”  என்று அப்பொழுதும் நம்ப முடியாமல் கேட்டான்,
அவனின்  சந்தேகத்தில் சிரித்த அஞ்சலி,

“அவரே தான்ண்ணா.. அவரை கேன்டீன்ல பாத்தப்போ எனக்கும் இப்படித்தான்
இருந்துச்சி” என்று சிரித்தபடி சொன்னவள், பின் நடந்ததையும் சொன்னாள்.

“THANK GOD..   ஒரு பெரிய கண்டம் முடிஞ்சது..”  என்று ரிலீஃபாக அசோக்
சொல்லவும், அஞ்சலியும் அதை ஆமோதித்து சிரித்தாள், அவர்களின் மகிழ்ச்சி
வீட்டுக்குள் சென்று சுந்தரம் கத்தும் வரை தான் நிலைத்தது.

“அவன் இல்லன்னா என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்காதா..? அவனை விட
எல்லாவிதத்திலும் உயர்ந்த மாப்பிள்ளையா கொண்டு வந்து இன்னும் மூணு
மாசத்துல  என் பொண்ணுக்கு  ஜாம் ஜாம்ன்னு கல்யாணத்தை முடிக்கிறேன் பாரு”
என்று கத்தி கொண்டிருக்க, அஞ்சலியும் அசோக்கும் “விடாது கறுப்பு..??”
என்றே சுந்தரத்தை பீதியாக பார்த்தனர்.

சுந்தரம் சொன்னது போல், அடுத்த ஒரு வாரத்திற்குள் இன்னொரு மாப்பிளையை
இறக்க, அவனையும் அஞ்சலியும், அசோக்கும்  கலைத்துவிட,

“விட்டேன்னா பார்..?”  என்று சுந்தரமும் இன்னொரு மாப்பிள்ளையை கொண்டுவர,
நொந்து போன அஞ்சலியும், அசோக்கும், இதற்கெல்லாம் காரணமான கதிர் மேல்
கழுத்து வரை கோவத்தில் இருந்தாலும், வேறு வழியே இல்லாமல்  அடுத்து
வந்தவனையும் சமாளிக்க, சுந்தரத்திற்கு வெறி உச்சிக்கே ஏறியது,

“இதெல்லாம் அந்த கதிர்  வேலைதான்” என்று மனதுள் கருவி கொண்டவர், அடுத்த
முறை யாருக்கும் ஏன் அஞ்சலி, அசோக் என்று வீட்டில் உள்ள யாருக்குமே
தெரியாமல்  மாப்பிள்ளை பார்த்து அவர்களிடமும் பேசி முடிவு
செய்துவிட்டார்,

அந்த வார இறுதியில் கோவிலில் வைத்தே அஞ்சலியை பெண் பார்த்து, அங்கேயே
அன்றே உறுதி செய்துவிடவும் தீர்மானித்தவர், அதற்கேற்றாற் போல் ரகசிய
ஏற்பாடும் செய்துவிட்டார்.

அவரின் திட்டப்படி அந்த வார இறுதியில், எல்லோரையும் கோவிலுக்கு கிளம்ப
சொல்ல, “ஏன் திடீர்ன்னு கோவில்..?” என்று புரியாமல் கேட்ட
குடும்பத்தினரை, சரிக்கட்டி கோவிலுக்கு  கூட்டி வந்துவிட்டவர்,
அப்போதுதான் சொன்னார்,

“இன்று அஞ்சலிக்கு பெண் பார்த்து பூ வைப்பது” என்று, அவர் சொன்னவுடன்
எல்லோரும் ஆச்சரியத்துடன்   “ஏன் இன்றே..? என்ன அவசரம்..?” என்று கேள்வி
கேட்டுக்கொண்டிருக்க,  அஞ்சலியும், அசோக்கும் அசையகூட முடியமால் உச்ச
கட்ட அதிர்ச்சியில் உறைந்தே நின்றுவிட்டனர்.

Advertisement