Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 10

“டேய் இங்க வாடா..”  என்று தன்னையே சந்தேகமாக முறைத்த படி  அஞ்சலியிடம்
நின்று பேசிக்கொண்டிருந்த ராகுலை மிரட்டலுடன் அழைக்க, அவனோ கதிருக்கு
சிறிதும் பயப்படாமல், நெஞ்சை நிமிர்த்து கொண்டு திமிராக வந்து நின்றான்.

அவனின் அஞ்சா பாவனையில் உள்ளுக்குள் சிரித்த கதிர், வெளியில்
முறைப்புடன், “எந்த கிளாஸ் டா படிக்கிற நீ..?”  என்று அதட்டி கேட்க,

“ம்ம்..  அது படிக்கிறேன் பத்தாவது” என்று கதிருக்கு குறையா
தெனாவட்டுடன் சொன்னான் ராகுல்.

அவனின் தெனாவட்டான பதிலில் மேலும் சிரிப்பு வந்தபோதும் அடக்கி கொண்ட
கதிர்,   “அவ வயசு என்ன..?” என்று அஞ்சலியை கை காட்டியபடி கேட்க,

“அஞ்சலிக்கா..”   என்று ஒரு நிமிடம் யோசித்தவன், தெரியாமல் போக, அவளிடமே திரும்பி

“அஞ்சலி உன் வயசு என்ன..?”  என்று கதிர் கேட்ட அதே கேள்வியை சத்தமாகவே
கேட்டான். அதில் பல்லை கடித்த அஞ்சலி, ராகுலோடு சேர்ந்து கதிரையும்
முறைத்தவள்,

“அவன் தான் சின்ன பையன்ன்னு  தெரியுது இல்லை, அவன் பேர் சொல்லி
கூப்பிடறதுக்கெல்லாம் பஞ்சாயத்து என்ன வேண்டி கிடக்கு..?” என்று மனதில்
நொடித்தவள், அவர்களை முறைத்து பார்க்க,

“அஞ்சலி உன்னைத்தான் கேட்குறேன்ல, உன் வயசு என்ன சொல்லு..?” என்று ராகுல்
விடாமல் கேட்க, கடுப்பான அஞ்சலி, கண்களை உருட்டி, ஒற்றை விரல் நீட்டி
மிரட்டவும்,  அவளின் கோவத்தை புரிந்து கொள்ள முடியாத ராகுல்,

“இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு  இப்படி கோவப்பட்ற, வயசை கேட்டது
ஒரு குத்தமா..?” என்று புரியாமல் அவளிடமே கேட்க, மேலும் காண்டனவள்,
ராகுலை விட்டு இதற்கெல்லாம் காரணமான கதிரை தான் கொலை வெறியுடன்
பார்த்தாள்,

அவனோ அவளின் கடுப்பிற்கு எல்லாம் அசராமல், ராகுலிடம், “என்னடா.. உனக்கு
தெரியுமா..? தெரியாதா..?”  என்று மேலும் தூண்ட,

“க்கும்.. அதான் அஞ்சலி சொல்லலையே..”  என்று சலிப்பாக உதட்டை
பிதுக்கினான்  அந்த பொடியன் ராகுல்.

“எப்படியும்  உன்னைவிட பத்து வயசாவது கூட இருப்பா..? அவளை போய் கொஞ்சம்
கூட மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிட்டிட்டு இருக்க..? இனி ஒழுங்கா
அவளை அக்கான்னு இல்லயில்ல.. “அண்ணி”ன்னு கூப்புடு… என்று கண்டிப்புடன்
சொல்லவும்,

பொங்கியெழுந்த ராகுல், “என்னது அத்தை பொண்னை அக்கான்னு கூப்பிடறதா..?”
என்று உலகமே அழிந்துவிட்டது போல் பதறியவன்,

“நீங்க பெரிய ரவுடியா இருந்தா அது உங்களோட, அதுக்காக என்னோட அழகான அத்தை
பொண்ணை அக்கான்னு கூப்புட  சொல்ற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க”, என்று
கதிரை பார்த்து கோபத்துடன்  பொங்க,

அவனின் பாவனையில் கதிருக்கு சிரிப்பு வந்துவிட, நீண்ட நாட்களுக்கு பிறகு
வாய்விட்டு சத்தமாக சிரித்தவனை, அஞ்சலி மட்டுமில்லை தங்கதுரையும்
எல்லையில்லா வாஞ்சையோடே பார்த்தனர்.

அதிலும் அஞ்சலி,  முன் வரிசை பற்கள் தெரிய கம்பீரமாக சிரித்த படி,
அலைந்த முன் உச்சி முடியை கோதியவாறே வாய்விட்டு சிரிக்கும்  கதிரின்
அழகில், தன் கோவத்தை மறந்து, அவனை ரசிக்கவே செய்ய,

அவளின் மனசாட்சி விழித்து கொண்டு, அவன் செய்த செயலையும்  மறந்து, தன்
கோவத்தையும் மறந்து அவனை  ரசிக்கும் அவளின் காதல் மனதை துப்பவே செய்தது,
ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்  அவனை விடாமல் ரசிக்கும் அவளின்
கண்களையும், மனதையும் அவளாலே கட்டுப்படுத்த முடியவில்லை  என்றுதான்
சொல்லவேண்டும்.

“நான் என் கோவத்தை சொன்னா, இந்த அண்ணா என்ன இப்படி சிரிக்கிறாங்களே..?”
என்று கதிரையே முறைத்தபடி நின்றிருந்த ராகுலை பார்த்து மேலும்
சிரித்தவன்,

“ஏன்டா..  அத்தை பொண்ணை அக்கான்னு கூப்பிட  கூடாதா..?” என்று மேலும்
அவனின் வாயை கிண்ட,

“ஆமா கண்டிப்பாவே கூப்பிட கூடாது, அதுவும் அஞ்சலியை நோ சான்ஸ்.”  என்று
உறுதியாக  மறுத்தான் அஞ்சலியின் அந்த குட்டி மாமன்,

 “அது என்ன அவ மட்டும்  அவ்வளவு ஸ்பெஷல்..?” என்று சிறிது நக்கலுடனே
அஞ்சலியை பார்த்தவாறே கேட்க, அவனின்  நக்கலில், கொந்தளித்த போதும், “அவன்
இதுவரை தன் பெயரை எங்குமே வாய்வார்த்தையாகவோ, இல்லை தன்னை
குறிப்பதற்காகவோ கூட சொன்னதில்லை” என்று அஞ்சலியின் உள்மனம் குறித்து
கொள்ளத்தான் செய்தது.

 “என்ன ஸ்பெஷலா..? அஞ்சலி எவ்வளவு அழகு,  அதுவும் எனக்கு ரொம்ப  பிடிச்ச
“சாய்பல்லவி”  மாதிரி அழகு  அஞ்சலி,    அப்படி இருக்கிறப்போ என்னால
எப்படி அஞ்சலியை அக்கான்னு..?  ம்ஹூம், கண்டிப்பாவே முடியாது”, என்று
ராகுல் பொங்கி கொண்டிருக்கவும்,

 கதிரின் கண்கள் தன்னை முறைத்தபடியே, பதட்டத்துடன் போனையும், “அசோக்
வருகிறானா..?”  என்று  வழியையும் பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை  தலை
முதல் பாதம் வரை நிறுத்தி நிதானமாக பார்த்தான், அவளின் அழகை ரசித்து
இல்லை, ஆராய்ச்சியாகத்தான் பார்த்தான்,

இதுவரை அவன் “அஞ்சலி அழகு!!” என்கிற கண்ணோட்டத்துடன் அவளை பார்த்ததே
இல்லை, இன்னும் சொல்ல போனால், மூன்று வருடங்களுக்கு முன்பு எல்லாம் அவளை
சுத்தமாகவே  பார்த்தது இல்லை, “அந்த ஒருநாளை தவிர..”

அப்படி இருக்கும் போது, அஞ்சலி அழகா..?  என்பது எல்லாம் அவனுக்கு
தேவையற்றதாகவே இருந்தது. இப்போது ராகுல் சொல்லவும் தான், அவளை அழகு
என்கிற கண்ணோட்டத்துடனே பார்த்தான். பார்த்தவனுக்கு தோன்றியது எல்லாம்
“அழகாத்தான் இருக்கா..!!” என்ற அவனின் ஆராய்ச்சியின் முடிவு தானே தவிர
வேறொன்றும் இல்லை,

அவனின் தலை முதல் கால் வரையிலான பார்வை, ஆராய்ச்சி பார்வை தான் என்று
அஞ்சலிக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் அவனின் பார்வையால் அவளின் முகம்
சிவக்கத்தான் செய்தது, “அது கோவத்தலா..? இல்லை கதிரின் எக்ஸ்ரே
பார்வையால் உண்டான் வெட்கத்தாலா..?”  என்று அவளுக்கே வெளிச்சம்.

அவளின் முகசிவப்பு, கதிருக்கு ஒருவிதமான சுவாரசியத்தையும், இன்னதென்று
புரியாத உணர்வையும் கொடுக்க, மேலும் அவளை நன்றாகவே பார்வையிட்டான். அதில்
இன்னமும் சங்கடம் கொண்ட அஞ்சலியை காப்பாற்றுவது போல் அசோக் காரோடு வர,
ஆசுவாசமடைந்தாள் அஞ்சலி.

 “என்னாச்சு அஞ்சலி..?” என்று காரிலிருந்து இறங்கி வந்தவாறே கேட்ட
அசோக்கின் கேள்வி தங்கைக்கு என்றாலும்,  பார்வை என்னமோ  கதிரின் மேல்
தான் இருந்தது,

“தெரியலண்ணா..  திடீர்ன்னு பிரேக்டவுன் ஆயிடுச்சி”  என்று அஞ்சலி
சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதிரிடம் இருந்து வேகமாக வந்த தங்கதுரை,

 “என்னன்னு தெரியல தம்பி, காலையில நல்லாத்தான் இருந்தது, திடீர்ன்னு தான்
இப்படி ஆயிடுச்சி..” என்று அவரும் சொல்ல, அசோக்  கதிரை தான் சந்தேகமாக
பார்த்தான்.

அவனோ ராகுலிடம், இனி அஞ்சலையை “அண்ணி..”  என்று தான் கூப்புடவேண்டும்
என்று சீரியசாக சொல்லிக்கொண்டிருக்க, ராகுலோ, “ஏன் அண்ணி..?” என்று
புரியாமல் கேட்டான்,

“அது அப்படித்தான், இனி  அவளை நீ   “அண்ணி”ன்னு தான் கூப்பிடனும், இப்போ
டைம் ஆச்சு பாரு  கிளாஸ்க்கு ஓடு..”  என்று மிரட்டலுடன் அதட்டவும், அவனை
கடுப்பாக முறைத்து விட்டுத்தான் சென்றான் ராகுல்,

அவனின் “அண்ணி..” எனும் சொல்லில், அஞ்சலியோடு, அசோக்க்கும், “அடங்கவே
மாட்டியா நீ..?” என்று கதிரை சலித்துப்போய் தான் பார்த்தனர், அவனோ
எப்போதும் போல் அவர்களின் சலிப்பை  கண்டுகொள்ளாமல்,

“எனக்கு இந்த மாதிரி சின்ன, சின்ன வேலையெல்லாம் செய்யவராது, நம்ம ரேன்ஜ்
எல்லாம் அடிதடி, பஞ்சாயத்து, அப்பறம் என்று அஞ்சலியையவே கிண்டலாக
பார்த்தபடி ஆளை தூக்கிறதும் தான்”.

“அதனால  என்னை சந்தேகமா பாக்கிறதை விட்டு, சீக்கிரமா ஹாஸ்பிடல் கிளம்ப
சொல்லு துரையண்ணா”, என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி

“என்ன டாக்ட்டரோ..? உயிரோட வேல்வ்யூ தெரியாம இப்படி நடுரோட்ல கையை
பிசைஞ்சிட்டு நிக்க வேண்டியது, இதுல பாரின்ல வேற போய் படிச்சிட்டு
வந்திருக்காங்க, என்னத்த சொல்ல..?” என்று புலம்புவது போல் சத்தமாக செல்ல,
தான் நேசிக்கும் பணியை பற்றி சொல்லவும், கொதித்த அஞ்சலி தன் நிதானத்தை
இழந்து,

 “உயிரோட  வேல்வ்யூ அவ்வளவு  தெரிஞ்ச அவர் வெட்டி கதை பேசறதை விட்டுட்டு
என்னை முதல்லே  ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்கலாம் இல்லை”  என்று தன்
மனதின் எதிர்பார்ப்பை  சொல்லிவிட,

சொல்லிவிட்ட பின்னே  தான் சொன்னதை உணர்ந்தவள், கதிரின் தீர்க்கமான
பார்வையை எதிர் கொள்ள முடியாமல், கன்றிவிட்ட முகத்துடன் அவசரமாக சென்று
அசோக்கின் காரில் ஏறி அமர்ந்துவிட, தங்கையின் பேச்சில் அதிர்ந்து
போயிருந்த அசோக்,

பரபரப்புடன் திரும்பி கதிரின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை படிக்க
முயல, “ம்ஹூம்..”  அவனின் இறுகிய முகத்தில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க
முடியாமல் சோர்ந்தவன், தன் காரில் ஏறி அஞ்சலியை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல்
கிளம்பிவிட்டான்.

அன்றிலுருந்து அஞ்சலி  கிஞ்சித்தும் கதிரை பார்ப்பதே இல்லை, அவன்
எப்போதும்போல்  தன்னை தொடரத்தான் செய்கிறான் என்று உள்ளுணர்விற்கு
புரிந்தாலும், அவள் அவனை பார்க்க மட்டும் செய்யவேயில்லை,

அவனை தவிர்ப்பது அவன்மேல் கொண்ட கோவத்தால் அல்லாமல், “தன் மேலே.. தன்
அடங்கா காதல் மேலே”  கொண்ட கோவத்தால், அவனை பார்க்காமலே  தவிர்த்து தன்னை
தானே  தண்டிக்கவே அவ்வாறு செய்தாள்.

“அவளின் மனபோராட்டம் எல்லாம் கதிருக்கு புரியாமல், அவளின் தவிர்ப்பில்
புதிதாக அவள் மேல்  கோவம் கொண்டான், அவனுக்கே தெரியாமல்..!!?”  இப்படியே
அவளின் தவிர்ப்பிலும், கதிரின் கோவத்திலும் நாட்கள் செல்ல, அஞ்சலி
சுந்தரத்திடம் கேட்டிருந்த டைம் முடிய, அவர் மகளை உட்காரவைத்து
மறுப்படியும் திருமணத்தை பற்றி பேச செய்தார்.

அவருக்கு “அஞ்சலியின்  விஷயத்தில்  கதிர் மறுபடியும் ஏதாவது செய்வான்…”
 என்று  கதிரின் மேல் உறுதியான சந்தேகம் இருந்ததால், முடிந்தவரை
“அஞ்சலியின் திருமணத்தை சீக்கிரமாக முடித்துவிட  வேண்டும்” என்றே இருக்க,
விடாமல் மகளை கேட்க செய்தார்.

அவர் தன்னிடம் பேசவேண்டும் என்று சொன்னவுடனே, அஞ்சலிக்கு
புரிந்துவிட்டது,  அவர் மறுபடியும் தன் திருமணத்தை பற்றித்தான்
பேசப்போகிறார் என்று, ஆனாலும், அவர் கேட்கும் போது பதில் சொல்லமுடியாமல்
திணறவே செய்தவள், உதவிக்காக அங்கிருந்த  அசோக்கை பார்த்தாள்.

தங்கையின் தவிப்பில், கதிர் மேல் மனம் குமுறவே செய்த போதும்,  முயன்று
தன்னை அடக்கிய அசோக்,  “ப்பா..” என்று ஆரம்பிக்க,

“ நீ எதுவும்  பேசாத அசோக்..”  என்று எடுத்தவுடனே சுந்தரம் தந்தையின்
அதிகாரத்தோடு கட்டளையாக சொல்லவும், அதற்கு மேல் அவரை மறுத்து பேசமுடியாத
அசோக், தங்கையை பரிதாபத்துடன் பார்த்தான்.

“தன் கையே தனக்கு உதவி” என்று புரிந்து கொண்ட அஞ்சலி, தன் பயத்தையும்,
பதட்டத்தையும் ஓரங்கட்டியவள்,  “ப்பா..  எனக்கு இப்ப மட்டும் இல்லை, இனி
எப்பவமே கல்யாணமே வேண்டாம்”  என்று உறுதியாக சொல்லிவிட, மகளின் பதிலில்
அதிர்ந்த சுந்தரம்,

 “ஏன் பாப்பா..? ஏன் கல்யாணமே வேண்டாங்கிற..? அதுவும் எப்பவுமே
வேண்டாங்கிற..?  என்று கவலையுடன் கேட்டார்.

அவரின் அதிர்வில், கவலையில் அளவுக்கு அதிகமான குற்ற உணர்ச்சிக்கு உள்ளான
அஞ்சலி,   “ப்ப்பா.. ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காதீங்க, எனக்கு கல்யாணமே
வேண்டாம்.. அவ்வளவுதான்”  என்று கலங்கிய குரலில் சொன்னாலும், மிக மிக
உறுதியாக சொன்னவள், எழுந்து சென்றுவிட,

அவளையே வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்த தந்தையை நினைத்து தானும்
வருத்தப்பட்ட அசோக், ஆதரவாக அவரின் தோளில் கைவைக்க, அவனை பார்த்த
சுந்தரம், “என்னடா இப்படி சொல்லிட்டு போறா..?” என்று கேட்டார்,

Advertisement