Advertisement

நீயொரு திருமொழி சொல்லாய்.. 

அத்தியாயம் 1
மஹதி சில்லிட்டிருந்த கைகளை தனது முழுக்கை டீஷர்ட்டில் செருகிக்கொண்டாள். அவளது கண்கள் குளிர்பெட்டியில் நிச்சலனமாக படுத்து கொண்டு இருந்த அவளது அப்பாவை வெறித்தது. கண்களில் நீர் திரையிட்டு அந்த காட்சியை மறைக்க.. தனது அழுகையை தொண்டைக்குள் விழுங்கினாள் மஹதி. 
பணம் படைத்தவர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும்  ஒரு சாபம் உண்டு. அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளியிட  முடியாது. அழுகையோ, கோபமோ, காதலோ எதுவாயினும் சுற்றுப்புறம் பார்த்து யாரும் அறியாதபடி அல்லது மிகவும் நாசூக்காக செய்யவேண்டும். இல்லையென்றால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இவர்களின் அந்தரங்கம் ட்விட்டரின் பேசுபொருளாகி இருக்கும். 
இங்கே மஹதியின் தந்தையின் உடலுக்கு அருகே கூடி நிற்கும் யாரையும் இவளுக்குத் தெரியாது. அனால் இங்கிருக்கும் எல்லோருக்கும் இவளைத் தெரியும். துக்கத்தை தெரிவிக்க கருப்பு உடையுடன் வந்திருந்த பெரிய மனிதர்கள் சிலர் ஆதரவாக சில நிமிடங்கள் மஹதியின் அருகே நின்று கொண்டனர். சிலர் கை கொடுக்கிறார்கள், ஆறுதலாக தோள் தட்டுகிறார்கள், சிலர் நாகரீகமாக தோளணைகிறார்கள், இன்னும் சில பெண்கள் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் கூட. 
ஆனால்..இவளோ இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தன்னை நிறுத்திய அப்பாவிடம் சண்டையிட்டாள். ‘என்ன அவசரம் அதுக்குள்ள பரலோகம் போய் எப்போவோ செத்துப்போன பொண்டாட்டிய பாக்கணும்னு?’ 
மஹதிக்கு இந்த சூழல் புதிது, கும்பல் அவளுக்கு அறவே பிடிக்காது. அவளது அப்பாவின் இந்த பங்களா எப்போதும்  அமைதியாய் இருக்கும், இவள் பிறந்ததில் இருந்து ஹாஸ்டல் செல்லும்வரை இதுதான் மஹதியின் வசிப்பிடம். பள்ளியில் சேர்ந்த பின் வருட விடுமுறையின்போது சுற்றுலா போல வந்து செல்வாள். 
ஆனால் இப்போது இத்தனை முகங்கள் நிறைந்திருந்தும் ஒரு சில வேலையாட்களைத் தவிர, எந்த ஒரு முகத்திலும் உண்மையான சோகம் இல்லை. இவன் போய்விட்டான் அடுத்து என்ன நடக்கும் இவனது சொத்துக்களை என்ன செய்வார்கள்? நிறுவனம் என்னாகும் ? யார் அடுத்த தலைமை? என்ற அவர்களது யோசனை அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. 
இந்த சமயத்தை எப்படி தனது நிறுவனத்திற்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்க்கும் முகங்கள். மனதுக்குள் நல்ல நல்ல வார்த்தைகளால் அவர்களை திட்டினாள் மஹதி. இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையென்று அங்கு படுத்து  கிடந்த அப்பாவை பார்க்கும்போது ஆற்றாமையோடு கோபமும் வந்தது.  
“வொய் டாட்? என்ன ஆச்சு? நேத்து பேசும்போது கூட நல்லாத்தானே இருந்தீங்க? சின்ன சின்ன பிரச்சனைங்கள எல்லாம் தலைல ஏத்திக்காதீங்கப்பா, ஜஸ்ட் டூ மந்த்ஸ்-ல நான் வந்து டேக் ஓவர் பண்ணிக்கறேன்னு சொன்னேனே? இப்போ இப்படி..?”, மஹதி போட்டுக்கொண்டிருந்த கூலரையும் தாண்டி கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.  அதை தனது இடது கையில் இருந்த கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.  
பின்னால் இருந்து, “மேம்”, என்று ஒரு விளிப்பு வர.., திரும்பினாள். 
“எஸ்..”, குரல் கரகரவென வந்தது. ‘க்.. க்ஹும்’ செருமி சரி செய்து கொண்டாள். “சொல்லுங்க”
“மேம், நா ஆஷு.., ஆஷுதோஷ்”, என்று ஒருவன் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டான். கூலர்ஸ் அணிந்திருந்ததால் பக்கவாட்டில் நிற்பவனின் முகம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இருநாள் தாடி முகத்தில் இருந்தது. தலை கலைந்திருந்தான். 
இரண்டடி எடுத்து வைத்து மஹதியின் அருகே வந்தவனாலும் மஹதியை பார்க்க முடியவில்லை. அவள் போட்டிருந்த குளிர் கண்ணாடி, பத்தும் பத்தாததிற்கு அணிந்திருந்த முழுக்கை ஹூடி கழுத்தை மட்டுமல்லாது கன்னத்தில் பாதியையும்  மறைத்து இருந்தது. 
“ஓஹ் நீங்க தானா அது? ஏர்போர்ட்க்கே வருவீங்கன்னு தகவல் சொல்லியிருந்தாங்க..?”, என்ற பதிலில் நீ ஏன்  ஏர்போர்ட் வரவில்லை என்ற கேள்வி தொக்கி நின்றது. 
மஹதி இத்தனை சின்ன விஷயத்தை இப்படி துக்கமான நேரத்தில் கூட நினைவில் வைத்திருப்பாள் என்று எதிர்பாராத ஆஷு உடனடியாக பதில் சொல்ல தயங்கினான். “அது..  இங்க செய்ய வேண்டிய ஏற்பாடெல்லாம் அரேஞ்ச் பண்ண வேண்டியிருந்தது மேம், அதான்.. “, என்று சொல்லிவிட்டு அவள் அருகே நெருங்கி வந்தான். 
இவன் தந்தையின் தனிப்பட்ட காரியதரிசி என்று தந்தை முன்பு எப்போதோ அலைபேசியில் பேசும்போது சொல்லியிருந்தார். ஆனால் ஒரு காரியதரிசி ஏன் என் தந்தையின் ஈமச்சடங்குகளை ஏற்பாடு செய்யவேண்டும்? இரண்டு மகன்கள், இரு மகள்கள் என்று சீரும் சிறப்புமாக வாழ்ந்தவருக்கு.., ஒருவேளை அண்ணாதான் இவனிடம் இந்த ஏற்பாட்டையெல்லாம் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி இருப்பானோ? என்று அவளுக்குத் தோன்ற..
“ஏன் நீங்க பண்றீங்க? அண்ணா-ல்லாம் எங்க?”, இங்கே இந்தியா வந்ததிலிருந்து கொலைப் பட்டினியாக கிடக்கிறாள். இவள் வந்த விமானத்தில் காலை சிற்றுண்டி தந்தார்கள்தான்.. ஆயினும், சாப்பிட தோன்றாமல் மஹதி தவிர்த்திருந்தாள். இருந்தும் அவளது அதிகார த்வனி கொஞ்சமும் குறையவில்லை. சில குணங்கள் உடன்பிறந்தவை போலும்.
மஹ்தியின் கேள்விக்கு பதில் சொல்ல அவளை நெருங்கி வந்த ஆஷுதோஷ், அவளருகே வந்து தலை குனிந்து குரலை வெகுவாகக் குறைத்து, “மேம் உங்க பெரிய அண்ணன் எந்த ஊர்ல இருக்காருன்னே தெரில. தேட சொல்லியிருக்கேன்”, ஆஷுதோஷ்.
“ஓஹ்?”,’ஏன் அவனுக்கென்ன கேடு வந்தது? நல்லாத்தானே இருந்தான்?’ “அண்ணீ இருப்பாங்களே? அண்ணீட்ட கேட்டீங்களா?”, ‘புருஷனைப் பத்தி பொண்டாட்டி கிட்ட கேட்டா போதுமே? அவங்க சொல்லிடுவாங்களே? அதுகூட தெரியாம இவன்ல்லாம்..?’, சிடுசிடுப்பு வந்தது.  
தலை குனிந்து மூக்கில் தனது ஆள்காட்டி விரலை வைத்து தேய்த்து உதடு  அசைவதை அடுத்தவர் அறியாதபடி, “க்ஹும். மேம் அவங்க டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்காங்க.. உங்களுக்கு தெரியாதா?”, என்றான் ஆஷுதோஷ்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்த மஹதியின் மனதில் அண்ணியின் சாந்தமான சிரித்த முகம் வந்தது. நல்ல வேளையாக குளிர் கண்ணாடி அணிந்து இருந்ததால் அவளது கண்களில் இருந்த அதிர்ச்சி வெளியே தெரியவில்லை. 
ஆனால், மஹதி நிமிர்ந்து ஆஷுவைப் பார்த்ததுமே அவள் நிலை புரிந்து கொண்டவனாக, “மேம், கண்ட்ரோல் யுவர்செல்ப். எதுவும் வெளில காமிச்சிக்காதீங்க“, என்று சொல்லி அவளை கட்டுக்குள் கொண்டு வந்தான். ஆனால் அவளுக்கு இவன் சொல்லித்தான் தனது உணர்ச்சிகளை  கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. அதற்குள்ளாகவே சாதாரணமாகி இருந்தாள்.
அடுத்து சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. ஆஷுதோஷுக்கு மஹதியைப் பார்த்து இரக்கம் வந்தது. கோடிகளில் புரளும் பெண், மூன்று உடன்பிறப்புகள் இருந்தும் தந்தை உடல் அருகே சொந்தம் என்று சொல்லிக்கொள்ள தனியே இவள் மட்டும். லண்டனில் இருந்து பதினான்கு மணி நேரங்கள் பிரயாணம் செய்து வந்திருக்கிறாள். .சாப்பிட்டாயா? என்ன? என்று கேட்க ஆளில்லாது அவதிப்பட்டுக்கொண்டு அவளோடு கூட பேசி புலம்பி அழக்கூட யாருமின்றி.. உட்காந்திருக்கிறாள்.  ஹ்ம்ம். அது சரி..? இவள் மற்றவர்களைப்போல் புலம்பி அழும் பெண்ணா? 
“சரி. சின்னண்ணா?”, என்று மஹதி கேட்க, பாதி வினா எழும்போதே பதிலும் அவளுக்குத் தெரிந்திருந்தது. 
அதற்கு உடனடியாக பதில் சொல்ல தயங்க.., மஹதியின் புருவம் மேலேறியது. அவளது சுழித்த நெற்றி ஆஷுவிடம் பதில் வேண்டுமென்று வற்புறுத்த  “அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார்”, என பூசி மெழுகினான். 
அவன் சொல்லாமலே சின்னண்ணன் எந்த கதியில் இருக்கிறான் என்பது மஹதிக்குப் புரிந்தது. “இன்னிக்குமா?”, என்று அருவருப்பாக நைந்து போன குரலில் கேட்க..
முகத்தில் வருத்தம் போன்ற உணர்வு படர ஆஷுதோஷ் பகின்றான், “இது தினமும் நடக்கறதுதான் மேம், எப்பவும் ட்ரைவர் இல்லாம போகக் கூடாதுன்னு ஸார் ஆர்டர் போட்டு  இருந்தார். இல்லன்னா மாசா மாசம் அனுப்பற டிவிடென்ட்ன்னு ஒன்னு  அண்ணாக்கு வரமுடியுமா பண்ணிடுவேன் ன்னு கண்டிச்சு வச்சிருந்தார். அதனால காண்டாக்ட் பண்றது ஈஸின்னு நினைச்சேன். ஆனா, இந்த முறை சார் போகும்போது ‘பிரெண்ட்ஸ் கூட இருக்காங்க, நீ தேவையில்லை’ன்னு  ட்ரைவர்ட்ட சொல்லியிருக்கார், சோ எங்கன்னு தேடி கண்டுபிடுக்க கொஞ்சம் லேட் ஆகுது”, என்ற ஆஷு.., தொடர்ந்து அவளுக்கு தெம்பூட்டும் விதமாக, “உங்க சிஸ்டர் பூர்ணா மேம் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாங்க மேம்”, என்றான்.
‘பூரிக்கா வந்து என்ன செய்யப்போறா? சும்மாச்சும்மா புலம்பிட்டே இருப்பா’ என்று சலித்துக்கொண்ட மஹதி, “ப்ச். சரி நா கொஞ்சம் ஃப்ரெஷ் அப் ஆகணும். இங்க அப்பா கூட யார் இருப்பா?” 
“ஸார் கூட நா இருக்கேன் மேம்”
தலையை காலே அரைக்கால் இஞ்ச் மாத்திரம் திருப்பி, ஆஷுதோஷை கீழ்க் கண்ணால் பார்த்து அமர்த்தலாக, “நோ. உங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இப்பத்தான் கொஞ்சம் முன்னால ஜனா சாரைப் பாத்தேன்.. அவர் இல்லன்னா வேற யாரையாவது இங்க நிக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு டூ மினிட்ஸ்ல உள்ள வாங்க”, என்றாள் கணீரென ஆஷுதோஷின் மேடம். மஹதி சொன்ன ஜனா என்னும் ஜெகநாதன் இவர்களது நிறுவன இயக்குனர்களில் ஒருவர், தணிக்கையாளர் அதுவும் தவிர இறந்து போன மஹதியின் அப்பாவுடைய பால்யகால நண்பரும் கூட. 
சில நிமிடங்களுக்கு முன், ‘இன்னிக்குமா?’ என்று தனது அண்ணனைப் பற்றி கேட்டபோது வருந்தியது இந்தப் பெண்தான் என்றால் நம்புவது கடினமாக இருக்கும்.  ஆனால், ஆஷுவுக்கு மஹதியைப் பற்றி அவள் தந்தை சொல்லி ஓரளவு தெரியுமே? இவளைவிட இவளது தந்தையைப் பற்றி வெகுவாக அறிந்தவனாயிற்றே .? இந்த ஒன்னரை வருடமாக அவரது நிழல் போல தனி காரியதரிசியாக உடன் சுற்றியவனல்லவா?
 எனவே அவன் மஹதியின் மன மற்றும் குண மாற்றத்தை ஒரு வித வியப்போடு எனினும், அதிர்ச்சியடையாமல் ஏற்றுக்கொண்டான். 
மஹதி சொன்னதுபோல் இங்கே கூடத்தில் வருவோரை எதிர்கொள்ள மாற்று ஏற்பாட்டை செய்து விட்டு அவள் இருந்த அறைக்கு சென்றான். அங்கே..
“அதெல்லாம் அப்பறம் அண்ணி, சண்டை அண்ணனுக்கும் உங்களுக்குத்தான். அப்பா என்ன பண்ணினார்? அதுவும் இந்த மாதிரி நேரத்துல நீங்க பக்கத்துல இருக்க வேணாம்? இதை நா உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல?”, என்று கடிந்தவள்,  “உங்க பிரச்சனையெல்லாம் அப்பறம் பாக்கலாம். இன்னும் அரை மணி நேரத்துல நீங்க பசங்களோட இங்க வரீங்க. மிச்சத்தை நேர்ல பேசிக்கலாம்”, என்ற மஹதியின் குரல் அறையில் எதிரொலித்தது.
அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அண்ணியோடு பேசி முடித்தவள்,  ஆஷுதோஷ் உள்ளே வருவதை பார்த்து, “அப்பா நேத்து நைட் இறந்து போயிருக்கார், மீடியா இன்னிக்கு காலைலதான் கவரேஜ் பண்ணுது. ஏன்? அண்ட்.. பெரிய அண்ணா இங்க வராததுக்கு என்ன காரணம்?”, என்று தனது கண்ணாடியை கழட்டியபடி கேட்டாள்.
கேள்வியை உள்வாங்கும்போதே, அதற்குள் அவளது அண்ணனை எடைபோட்டு விட்டாளே? என்று தோன்ற, நிமிர்ந்து பார்த்தான். திரையேதும் இல்லாத அவள் முகத்தை இப்போதுதான் முழுமையாக பார்க்கிறான் ஆஷுதோஷ். அடர் பழுப்பில் இருந்த அவள் கண்கள் அப்படியே அவளது அப்பாவும், இவனது பாஸுமான வரதராஜனை பிரதிபலிக்க, பேச மறந்து நின்றான் ஆஷு.

Advertisement