அப்பாவை கண்டதும் அவர் தோளில் சாய்ந்து கொண்ட வேதா, அழுது தீர்த்தாள். சற்று நேரம் அவளை அழ விட்டே சமாதானம் செய்தார் சந்திரன்.
சித்தார்த் முன்னர் விஷ்வாவை காயம் செய்து விட்டதையும் இப்போது செய்த வேலையையும் சொன்னவள், “சித்து பக்கம் பேசுறேன், அவரை முக்கியமா நினைக்கலைன்னு அவருக்கு கோவம்ப்பா. அவர் கார்லேருந்து இறங்கியிருந்தா கண்டிப்பா சண்டை ஆகியிருக்கும், அதான் நான் இறங்கிட்டேன் ப்பா” என்றாள்.
“சித்தார்த் வேணும்னே அப்படி செய்தான், நான் பார்த்தேன் ப்பா, அவன் ஏம்ப்பா இப்படி ஆகிட்டான்?” எனக் கேட்ட மகளின் தலையை ஆறுதலாக தடவி விட்டார்.
சரியான சமயத்தில் அந்த இடத்தில் தான் இல்லாது போனோமே என நொந்து கொண்டார் சந்திரன்.
“சரி வா நீ, எதையும் யோசிக்காத, உன் முடிவு படிதான் உன்னை விஷ்வா கூட அனுப்பி வச்சேன். இவ்ளோ ஆத்திரமும் அவசரமும் இருந்தா எப்படி? ப்ச்… நானும் அவசர பட்டுட்டேன் மா” என ஆறுதலாக ஆரம்பித்து கவலையாக முடித்தார்.
“அம்மாக்கு தெரிய வேணாம் ப்பா. நான் அவருக்கு மெசேஜ் பண்றேன், அவரே நம்து அழைச்சிட்டு போவார். பாவம் காயத்துல ப்ளீட் ஆகுது, தாத்தாக்கு இது தெரியாது வேற, இல்லைனா அவருக்காவது சொல்வேன், டாக்டர்கிட்ட போனாரான்னும் தெரியலை” என்றாள்.
“என்னப்பா பண்ண சொல்றீங்க? அவர் பிறவிக் குணத்தை ஒரு வாரத்துல என்னால மாத்த முடியுமா?” என்றாள் வேதா.
கொஞ்ச நாள் இங்கே இரு, பெரியவரிடம் நான் பேசுகிறேன் என சொல்லி பார்த்தார் சந்திரன். அவள்தான் மாலையே செல்கிறேன் என தீர்மானமாக சொல்லி விட்டாள். அப்படி வீம்பாக கிளம்புகிறேன் என்றவன் மகள் சொல்லி நின்றானே என அவருள்ளும் யோசனை. ஆகவே மகள் விருப்ப படியே விட்டார்.
அறைக்கு வந்த வேதா முதல் வேலையாக கணவனுக்கு அழைத்தாள். அழைப்பு துண்டிக்க பட்டது.
மருத்துவமனை சென்றாயா? எனக் கேட்டு செய்தி அனுப்பினாள். பார்த்தும் பதில் தரவில்லை அவன். எதற்காக காரிலிருந்து இறங்கினேன் என விளக்கம் சொல்லி, மாலையில் வந்து தன்னை அழைத்து செல்லுமாறு வாய்ஸ் நோட் அனுப்பி வைத்தாள். அது கேட்க படாமலே இருந்தது.
சோர்ந்து போன வேதா படுத்து விட்டாள். இரண்டு மணி நேரம் படுத்தே கிடந்தாள்.
உறங்கவில்லை என்ற போதும் கிடைத்த ஓய்வு புத்துணர்ச்சியாக உணர வைத்தது. அப்போது வரை அவளுடைய வாய்ஸ் நோட் அவனால் கேட்டிருக்க படவில்லை.
மகள் எழுந்து விட்டாளா என பார்க்க வந்தார் வாசுகி. ஆதி சித்து இருவரையும் அழைத்துக் கொண்டு உன் அப்பா எங்கேயோ சென்றிருக்கிறார் என அவர்தான் விவரம் சொன்னார்.
வேதா எதையும் காண்பித்துக் கொள்ளாமல் தேநீர் கேட்டாள்.
“உன் வீட்டுக்காரர் எப்போ வருவார், பஜ்ஜி புடிக்குமா இல்லை வேற ஏதும் செய்யட்டுமா?” எனக் கேட்டார் வாசுகி.
“எதுவும் வேணாம்மா, இப்ப இங்க இருக்கிற என்னை கவனி” என வேதா சொல்லவும், “வா கிச்சனுக்கு, உனக்கும் பஜ்ஜி போட்டு தரேன்” என சொல்லி சென்றார்.
இன்னொரு முறை விஷ்வாவுக்கு அழைத்து பார்த்தாள். பிஸியாக இருந்தது. அம்மாவுடன் அமர்ந்து தேநீர் குடித்து அவருடன் பேசிக் கொண்டிருந்தாள். நேரம் கடக்க கடக்கத்தான் அவன் வர மாட்டானோ என அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.
மகனையும் சின்ன மருமகனையும் அகல்யாவின் வீட்டுக்கு அழைத்து சென்று கட்டம் கட்டியிருந்தார் சந்திரன். பிள்ளைகளிடம் அத்தனை கண்டிப்பானவர் இல்லை, மென்மையாக சொல்லியே அவரது பேச்சை கேட்கும் படி வைத்துக் கொள்வார். அப்படி பட்டவர் கொடுத்த டோஸில் ஆதியும் சித்தார்த்தும் அரண்டு போய் விட்டனர்.
சித்தார்த்துக்கு சற்று கூடுதலாகவே அர்ச்சனை கிடைத்தது.
இனி எனக்கு தகவல் சொல்லாமல் எங்கேயும் போக கூடாது, கெட்ட சகவாசத்தை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும், விஷ்வாவிடம் எந்த தகராறும் வைத்துக் கொள்ள கூடாது, நேரத்துக்கு வீடு வரா விட்டால் வீட்டுக்கு வரத் தேவையே இல்லை என விதிகளை விதித்தார்.
இறுதியாக இருவரும் விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போதுதான் சித்தார்த் பொங்கினான். கேட்டுத்தான் ஆக வேண்டும் என கட்டளை போட்டு விட்டுத்தான் தன் வீட்டுக்கு கிளம்பினார் சந்திரன்.
வீட்டுக்குள் சந்திரன் நுழையவுமே, “இன்னும் உங்க மாப்பிள்ளைய காணோம், உங்க பொண்ணு ரூம்ல போய் குப்புற படுத்திட்டா. என்னதான் நடக்குது இங்க?” என சத்தம் போட்டார் வாசுகி.
“கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இரு!” என மனைவியை அதட்டியவர் மகளை காணச் சென்றார். பின்னாலேயே வாசுகியும் வந்தார்.
அப்பாவும் மகளும் பார்த்துக் கொண்டனர். கண்களால் மகளுக்கு ஆறுதல் சொன்னார் சந்திரன். மகளும் தைரியமாக இருப்பதாக அப்பாவுக்கு செய்தி சொன்னாள்.
“கழுத்தை அறுத்தா கூட ரெண்டுத்துகிட்டேயிருந்தும் சேதி வாங்க முடியாது!” என புலம்பிய படி சென்றார் வாசுகி.
“நான் கிளம்பறேன் ப்பா, அம்மாட்ட இருந்து என்னால பிடுங்கு பட முடியாது” என எழுந்தாள் வேதா.
“அவ கெடக்கா மா, நீ இரு” என்றார் சந்திரன்.
“இல்லப்பா, என்ன பிரச்சனைனு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. உங்கள, அத்தைய, தாத்தாவை, விஷ்வாவைன்னு ஒருத்தரை விடாம திட்டுவாங்க. விஷ்வாவும் எம்மேல கோவமா இருப்பாரு ப்பா. நானே போறேன்” என்ற மகளை கனிவாக பார்த்தார் சந்திரன்.
நானே கொண்டு போய் விடுகிறேன் என சந்திரன் சொல்லவும் அவளும் மறுக்கவில்லை.
விஷ்வா பிஸியாக இருப்பதால் இவளை கொண்டு வந்து விடும் படி சொல்லியிருக்கிறான் என மனைவியிடம் சொல்லி விட்டு மகளுடன் புறப்பட்டார் சந்திரன்.
‘அதென்ன அவர் வராமல் நீங்கள் போவது?’ என கோவித்துக் கொண்ட வாசுகி மகளை வழியனுப்ப வராமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஹாலிலேயே அமர்ந்து கொண்டார்.
அப்பாவும் மகளும் வாயிலுக்கு வரும் போது விஷ்வாவின் கார் வந்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கி விட்டவன் அவளை அழுத்தமாக பார்த்தான். அவள் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைக்கவும் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் காரிலிருந்து இறங்கினான்.
“வீட்டுக்கு வா மாப்ள” என அழைத்தார் சந்திரன்.
“ம்ம்… அதான் விருந்துக்கு வந்தப்பவே இங்க நல்ல மரியாதை கிடைச்சுதே, அவளை அனுப்பி வைங்க” என்றான் விஷ்வா.
“அப்பா விடுங்க, இறங்கி போனா ஏறி நிப்பார். நான் வர்றேன் ப்பா, நீங்க உடம்ப பார்த்துக்கோங்க” என அப்பாவுக்கு மட்டும் கேட்கும் படி பேசி விட்டு டிராலியை தள்ளிக் கொண்டு வந்தாள் வேதா. இன்னும் சில பைகளும் இருந்தன.
டிரைவர் ஓடிப் போய் டிராலியை கைப்பற்றிக் கொண்டு, “நீங்க ஏறுங்க மேடம், எல்லாத்தையும் நான் வைக்கிறேன்” என்றான்.
“ம்… மதியம் அவர் ஹாஸ்பிடல் போனாரா?” என டிரைவரிடமே கேட்டாள்.
“இல்லைங்க மேடம், ஃபேக்டரிக்கு போய்ட்டு அப்புறம் இங்கதான் வர்றோம்” என தகவல் சொன்னான் டிரைவர்.
வேதா ஏற கார் கதவை திறந்து வைத்து விட்டே காரில் ஏறினான் விஷ்வா. அமைதியாக காரில் அமர்ந்தவள் மருத்துவமனைக்கு செல்லும் படி டிரைவரிடம் சொன்னாள்.