சண்முகநாதன் குடும்பத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு அங்கே யாருக்கும் துணிவில்லை.
விஷ்வா அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. “வாங்க” என பொதுவாக அழைத்தவன் ‘என்ன?’ என வேதாவிடம் பார்வையால் கேட்டான்.
“மாமாகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன் மாப்ள, நாளான்னிக்கு வீட்ல விருந்து, வேதாவும் நீங்களும் வந்திடுங்க” என மரியாதையாக அழைப்பு விடுத்தார் சந்திரன்.
பேரன் மறுத்து ஏதும் சொல்லி விடுவானோ என நினைத்த தாத்தா முந்திக் கொண்டு, “அதெல்லாம் தவறாம வந்திடுவாங்க ரெண்டு பேரும்” என்றார்.
தாத்தாவை செல்லமாக முறைத்தவன், “அதான் தாத்தா சொல்லிட்டாரே, வந்திடுறோம்” என மட்டும் சொல்லி உணவு மேசைக்கு சென்று விட்டான்.
வேதா அவனுக்கு பரிமாற செல்ல, வாசுகிக்கு நிம்மதியாக இருந்தது.
“அவங்களையும் ஒரு வார்த்தை சாப்பிடுறீங்களான்னு கேட்ருக்கலாம்” என சொல்லிக் கொண்டே பரிமாறினாள் வேதா.
“டைம் லெவன் ஆகுது, இன்னும் சாப்பிடலையா அவங்க?” எனக் கேட்டவனை கண்டனமாக பார்த்தாள்.
“இப்படி பார்த்தா? எனக்கெல்லாம் வாயால சொல்ற விஷயமே மண்டைக்குள்ள ஏறாது” என சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
“அதெல்லாம் ஒரு மரியாதை” என்றாள்.
“ஃபார்மாலிடிதானே? நான் கூப்பிடுற மாதிரி கூப்பிடனும், அவங்க மாட்டேன்னு சொல்லிடுவாங்க, நானும் தலையாட்டிகிட்டு வந்து அப்புறம் சாப்பிடணும்”
“ப்ச்!”
“என்ன இப்போ கூப்பிடனும் அதானே?” என்றவன் சாப்பிட்ட கையோடு சென்று விட்டான். இவள் அழைத்தும் நிற்கவே இல்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தங்களை நோக்கி வரவும் என்னவோ என எழுந்து விட்டனர் வேதாவின் பெற்றோர்.
“சாப்பிடலாம் வாங்க” என அவன் அழைக்க, தாங்கள் எப்போதோ சாப்பிட்டு விட்டதாக சொன்னார்கள்.
“வேதா கோச்சுக்குறாளே, நீங்க சாப்பிட்டாதான் எனக்கு சாப்பாடு போடுவா, வாங்க” என்றான்.
“விஷ்வா!” என பல்லை கடித்தவள், பெற்றோரை உட்கார சொல்லி விட்டு அவனது கையை பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள்.
சிரித்த தாத்தா, “எப்பவும் ரெண்டு பேருக்கும் ஒரே விளையாட்டுதான்! வேதா வந்த பிறகுதான் வீடே கல கலப்பா இருக்கு. அவ சொல்லிட்டா மறுக்காம செஞ்சிடுவான்” என அள்ளி விட்டார்.
“நீ சொன்னதைத்தானே செஞ்சேன், அதும் தப்பா?” என கேட்டுக் கொண்டே விஷ்வா அமர, “ஐயா சாமி தெரியாம சொல்லிட்டேன், சாப்பிடுங்க” என்றாள்.
“மதியம் விருந்து சமைச்சு போட்டு நல்லா கவனிச்சு அனுப்பு அவங்கள, என்னை உள்ள இழுக்காத. உன் அப்பாவும் என்னை நினைச்சு பார்க்காம நடந்திருக்கார், அதையெல்லாம் என்னால மறக்க முடியாது” என்றான்.
“பொங்கல் கொஞ்சம் வைக்கவா?” எனக் கேட்டாள்.
“பேச்சை மாத்துறியா வேதா? ஆனாலும் நான் சொல்ல வந்ததை சொல்லித்தான் ஆவேன். குழந்தையோட பொறுப்ப ஏத்துக்க முடியாதவங்க பெத்துக்கவே கூடாது. யாரும் இல்லாம இருக்கிறது வேற, இருந்தும் இல்லாம இருக்கிறது என்னன்னு என் இடத்துல இருந்தாதான் உனக்கு புரியும். அவர் பொண்ணை கட்டிகிட்டதால இப்ப பாசம் பொங்குது அவருக்கு. ஒரு காலத்துல எனக்கு அநீதி செஞ்சவர். அந்த வீட்லேருந்து நீ மட்டும்தான் எனக்கு சொந்தம் ஆகியிருக்க, அவங்க உன் சொந்தம், என் சொந்தம் இல்லை, புரிஞ்சுதா?” என்றான்.
அவனை பற்றி ஒன்றும் தெரியாதவளாக இருந்தால் வேதாவும் கோவமாக பேசியிருக்க கூடும். இப்போதும் இவனது பேச்சு வேதனை தராமல் இல்லை, எதையும் நொடியில் மாற்ற இயலாது என்ற நிதர்சனம் புரிந்தவளாக, “மதியம் லஞ்ச்க்கு என்ன செய்ய சொல்லட்டும்? ஃபிஷ் அண்ட் க்ராப் ஓகேவா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“அவங்க கிளம்புறாங்க, நீங்க மதியம் இங்கதான் சாப்பிடணும்!” என முடிவாக சொன்னாள்.
“என்ன… என்ன… சவுண்ட் பலமா இருக்கு” என்றான்.
“நிறைய சாப்பிட்டேன், நல்ல தெம்பா இருக்கேன், அதுதான்” என நக்கலாக சொன்னாள்.
சாப்பிட்டு முடித்திருந்தவன், “நாளான்னிக்கு ஒரு வேளை மட்டும்தான் அங்க சாப்பிடுவேன், ஒன் ஹவர்ல கிளம்பிடுவேன், அது கூட தாத்தா சொல்லிட்டதால. அதுக்கு ஏத்த மாதிரி ப்ரோக்ராம் பிளான் பண்ணிக்க” என சொல்லிக் கொண்டே எழுந்தான்.
“எனக்கும் ஒன் ஹவர்தான் அங்க இருக்க பெர்மிஸனா?” பெற்றோரின் கவனம் தங்களிடம் இருக்க, கோவத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.
“ஆமாம் என் கூடவே வந்திட்டு என் கூடவே கிளம்புற” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.
அவன் பின்னாலேயே ஓடிச் சென்றவள், “அவங்க கூட கூடி இழைய வேணாம், அட்லீஸ்ட் ஜெனரலான மரியாதையை தரலாம்தானே? அவங்கள யோசிக்க வேணாம், எனக்கு எப்படி இருக்கும்னு யோசிங்க. உங்களுக்கு அவங்க எப்படியோ, எனக்கு நல்ல பேரெண்ட்ஸ்! பெத்த பொண்ணோட புகுந்த வீட்ல அவங்க சரியா நடத்த படணும்னு நான் எதிர் பார்க்கிறேன்” என்றாள்.
“ஹப்பா! எவ்ளோ லென்த்தியா பேசுற, என்ன செய்யணும் நான்?”
“சொல்லிட்டு கிளம்புங்க” என்றாள்.
“இப்படி ரெண்டு வார்த்தையிலேயே முடிச்சிருக்கலாம் நீ” என்றவன் வேகமாக உள்ளே சென்று, “போய்ட்டு வர்றேன்” என சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
மாமா அத்தை என்றெல்லாம் அவன் முறை வைத்து அழைக்காமல் போனதில் அவர்களுக்கு மன சுணக்கம் ஏற்பட்டாலும் போக போக அதுவும் மாறும் என நம்பிக்கை கொண்டனர்.
பெற்றோர் கிளம்பிய பின் தாத்தாவிடம் சொல்லித்தான் விஷ்வாவின் ஒரு மணி நேர கண்டிஷனை எல்லாம் மாற்றி, அரை நாள் அங்கே இருக்க அவனை சம்மதிக்க வைத்தாள்.
விருந்து அன்று மகிழ்ச்சியோடு கிளம்பினாள் வேதா. காலை உணவுக்கே சென்று விட்டனர். முக்கிய உறவுகள் அனைவரும் வந்திருந்தனர். அகல்யாவும் கணவர் மற்றும் மகனோடு வந்திருந்தார்.
ஆதி, சித்து இருவருக்குமே காயங்கள் இன்னும் முழுதாக ஆறியிருக்கவில்லை. வேதாவைதான் ஆவலோடு எதிர் பார்த்திருந்தனர் இருவரும். அவளோ அவர்களை தவிர்த்து தன் கோவத்தை வெளிப்படையாக காண்பித்தாள். விஷ்வாவும் இதை கவனித்துதான் இருந்தான்.
காலை உணவுக்கு பின் வேதாவின் அறைக்கு சென்று விட்டான் விஷ்வா. அம்மா மற்றும் அத்தையோடு இருந்தாள் வேதா.
கைப்பேசியில் தன் நலனை சொல்லியிருந்தவள் இப்போது நேரிலும் சொல்ல, அகல்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாசுகிதான், மாப்பிள்ளை உன்னிடம் நன்றாக நடக்கிறார்தானே, நீயும் கோவமெல்லாம் படாமல் ஒழுங்காக குடும்பம் செய்கிறாயா, நீ சொல்வதெல்லாம் உண்மைதானே என தனித் தனி கேள்விகளாக கேட்டு மகளிடம் பதில் பெற்று திருப்தி பட்டுக் கொண்டார்.
“நாம மட்டும் இல்லை அண்ணி, வேற யார் காதிலேயும் விழுந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா?” என வாசுகியை அமைதி படுத்த பார்த்தார் அகல்யா.
“உங்களுக்கென்ன? பேய்கிட்ட வாழ்க்கை பட்ருக்கது எம் பொண்ணாச்சே?” வெடுக் என சொன்னார் வாசுகி.
வேதா அம்மாவை அதட்ட, அவரோ ‘உனக்கொன்றும் தெரியாது, நீ சும்மாயிரு!’ என மகளை அதட்டி அடக்கினார்.
சட்டென கலங்கி விட்ட கண்களை துடைத்துக் கொண்ட அகல்யா, “அவன் ஒன்னும் பேய் இல்லை அண்ணி, நம்ம வேதா நல்லாருப்பா” என்றார்.
“ஹ்ம்ம்… யார் செஞ்ச தப்புக்கோ யாராரோ கஷ்ட பட வேண்டியதாயிருக்கு” என வாசுகி சாடையாக நாத்தனாரை குறை சொல்லவும், அங்கிருக்க முடியாமல் சென்று விட்டார் அகல்யா.
அம்மாவின் செயலுக்காக அவரை கடிந்து கொண்டாள் வேதா.
“நான் உண்மையத்தான் சொன்னேன். உன் வீட்டுக்காரர் கோவத்திலேயும் நியாயம் இருக்குதானே? உன் அத்தை அவ முத புருஷனோட நல்லா வாழ்ந்திருந்தா எந்த பிரச்சனையும் இல்லாம இருந்திருக்கும்தானே? காதலிக்கிறவ கட்டாய கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிச்சவர் கூட போயிருக்கணும். புருஷன் கூட ஒழுங்கா வாழாம விவாகரத்து வாங்கிட்டு வந்து…” என அங்கலாய்த்தவர் பெருமூச்சு விட்டவராக, “உன் அப்பாவும் அதுக்கு உடந்தை. இப்ப எல்லாம் உன் தலைல வந்து விடிஞ்சிருக்கு” என்றார்.