வாயிலை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள், நின்று திரும்பி பார்த்தாள். புறங்கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், “இன்னும் போகலையா நீ?” எனக் கேட்டான்.
“நீங்க தூங்குங்க அப்புறம் போறேன்”
“எப்படி… நீ என்னையவே குறு குறுன்னு பார்த்திட்டு இருப்ப, நான் தூங்கவா?”
“ஆமாம் இவர் பெரிய ஆணழகன், கண்ண மூடுங்க”
அவளை ஏற இறங்க பார்த்தவன், “நீ நல்ல அழகிதான்” என்றான்.
“ஏன் எனக்கென்ன? சின்ன வயசுல இன்னும் கொழுக் மொழுக்னு இருப்பேன், கண்ணு பட்டு கண்ணு பட்டு அடிக்கடி உடம்பு முடியாம போயிடுமாம்” என அவள் சொல்லவும் கிண்டலாக சிரித்தான்.
“நீங்க மட்டும் என்னவாம்? உங்க குழந்தை வயசு ஃபோட்டோஸ்லாம் பார்த்திருக்கேன், எப்படிடா இவரை தூக்கி வச்சிருப்பாங்கனு நினைக்கிற அளவுக்கு அவ்ளோ சப்பியா இருந்திருப்பீங்க. இந்த அழகுல என்னை கிண்டல் செய்றீங்க”
“என் ஃபோட்டோலாம் உனக்கு யார் காட்டினா?” என விசாரித்தான்.
அவனது ஆல்பம் அவனது அம்மாவிடம் இருப்பதாக சொன்னால் அதற்கும் ஏதாவது சத்தம் போடுவான் என்பதால், “என் வீட்ல ஏதோ ஆல்பத்துல இருக்கு” என சமாளித்தாள்.
அவனது பாட்டி அவனது புகைப்படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருப்பார், அதை சொன்னவன், “அவங்க இருந்த வரைக்கும் அதை எடுக்க விடல, எனக்கு சில்லியா தெரிஞ்சது. பாட்டி போனதும் ஃபோட்டோஸையும் கழட்டி பூட்டி வச்சிட்டேன்” என்றான்.
“அதுல என்ன சில்லிநெஸ்? சரியான பாறை நீங்க. உங்களுக்குன்னு குழந்தை வரும் போதுதான் அந்த ஃபீலிங்ஸ்லாம் புரியும்” என்றவள் சொன்னதை உணர்ந்து, “அடிக்கடி ஏதாவது வாயை விடுறடி வேதா, கொஞ்சம் உன்னை கண்ட்ரோல்ல வை” என தனக்கு சொல்லிக் கொண்டாள்.
அவளை ரசனையாக பார்த்தான்.
“ம்ஹூம்… நான் இருந்தா உங்களால சுத்தமா தூங்க முடியாது, நான் வர்றேன்” என சொல்லி எழப் போனாள். சட்டென அவளின் கை பிடித்து அவளை எழ விடாமல் தடுத்தவன், “இரு இரு, போலாம்” என்றான்.
“தூங்க வேணாமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
‘வேண்டாம்’ என்பதாக கண்களால் சொன்னான். அவனது துளைக்கும் பார்வையில் அவளாலும் இயல்பாக இருக்க முடியவில்லை, பேச்சும் வரவில்லை. என்ன செய்வதென நெளிந்தாள். அதையும் அவன் கவனிக்கிறான் என்பதை அவனது இதழ்க் கடையோர சிரிப்பு சொன்னது.
‘அடியேய் என்னடி பண்ணிட்டு இருக்க நீ? இவன் செஞ்சதை எல்லாம் மறந்திட்டியா? இடியட் எந்திரிச்சு ஓடிப் போ’ என மனசாட்சி சொல்ல, அவனிடமிருந்து நழுவிச் செல்ல சற்று தள்ளி அமர்ந்தாள்.
“என்கிட்டருந்து தப்பிச்சு போக முடியாத அளவுக்கு சிக்கிட்டீங்க வேதநாயகி” என்றான்.
கண்டு கொண்டானே என அவள் அசடு வழிய சிரிக்க, அவனும் சிரித்தவன், “இதென்ன பழைய பேரு வச்சி விட்ருக்காங்க உனக்கு?” எனக் கேட்டான்.
“அது என் அப்புச்சியோட அம்மா பேரு, அவர்தான் ஆசையா வச்சி விட்டாரு”
“ம்ம்… அப்புறம்?”
“அப்புறம்னா?”
“உன்னை பத்தி சொல்லு”
“நாம ஃபோன்ல பேசிக்கும் போதே சொல்லிருக்கேன்” என நொடிப்பாக சொன்னாள்.
“அது நிறைய நாள் லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு வேற ஏதாவது வேலை பார்த்திட்டு இருப்பேன்” என உண்மை விளம்பியாக சொன்னான்.
சுள் என கோவம் வரப் பெற்றவள் அவன் இழுத்துப் பிடித்தும் திமிறிக் கொண்டு அவனிடமிருந்து விடுபட, தெரியாமல் காயத்தில் அடித்து விட்டாள். அவனோ துடித்துப் போய் விட்டான்.
“ஹையோ ஸாரி ஸாரி… தெரியாம கை பட்ருச்சு” என பதறியவள் அவனை பற்றிக் கொள்ள, “தள்ளி போ நீ” என்றவன் காயத்திற்கு பக்கத்தில் ஆதரவாக பிடித்துக்கொண்டு கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். லேசாக அவனுக்கு வியர்த்து போயிருக்க, ஏசியின் அளவை அதிகரித்தவள் பருகுவதற்கு சில்லென நீர் கொடுத்தாள்.
அவளை முறைத்துக் கொண்டே தண்ணீர் குடித்தவன், “உனக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன், அதனாலதான் பொய் சொல்லி சமாளிக்காம உண்மையை சொன்னேன். உடனே கோச்சுக்கிட்டு கிளம்பிடுவியா?” எனக் கேட்டான்.
“நீங்க சொன்ன உண்மை என்னை எவ்ளோ ஹர்ட் செய்யும்னு உங்களுக்கு தெரியலையா?” என சீற்றமாக கேட்டாள்.
“முன்னாடி நடந்து முடிஞ்ச ஒன்னை இப்ப என்னால எதுவும் செய்ய முடியாது. என்ன செய்தா உன் கோவம் போகும்?” எனக் கேட்டான்.
“சரி விடுங்க, நான் தானா சரியாகிக்குவேன்”
“ஓகே தானா சரியாகு. உனக்கு ஏதாவது வேணும்னா கேளு வேதா, வாங்கி தர்றேன்”
“என்ன லஞ்சமா?” என அவள் கேட்கவும் சத்தமாக சிரித்தவன், “சண்டையப்போ தானா சரியாகிக்கிற வைஃப்க்கு காம்ப்ளீமென்ட்ரி கிஃப்ட்னு வச்சுக்கோ, ஏதாவது கேளு” என்றான்.
“கேளு கேளுன்னா என்ன கேட்க? எதுவும் தேவைப்படல எனக்கு”
“ரொம்ப நாளா எதுக்காவது ஆசை பட்டு வாங்க முடியாம போயிருக்கா?”
சில நொடிகள் யோசித்தவள், “அண்ணாவோட ஃபோன் உங்கள்ட்டதானே இருக்கு? அதை என்கிட்ட தாங்க, நானே ஆதிகிட்ட திருப்பி கொடுத்திடுறேன்” என்றாள்.
அவனது முகம் உடனே மாறியது. அவள் ஆவலாக அவனை பார்த்திருக்க, அவளை விட்டே கப்போர்டிலிருந்த ஆதியின் கைப்பேசியை எடுக்க சொன்னான்.
அவளும் எடுக்க, “என்கிட்ட கொடு, ஒரு வேலை இருக்கு” என்றான்.
கைப்பேசி கைக்கு வந்த அடுத்த நொடி சுவர் நோக்கி வீசி அடித்தான். லட்ச ரூபாய் கைப்பேசி சிதறி விழ, அதிர்வில் காதை பொத்திக் கொண்டவள் சுதாரித்து அவனை கோவாவேசமாக பார்த்தாள்.
“உன்னை சமாதானம் பண்ண நினைச்சி கேட்டா உன் சம்பந்தமா எந்த கோரிக்கை வேணா வை, அத விட்டுட்டு…” என எரிச்சலாக சொன்னான்.
“ஏதாவது வேணுமான்னு என் பின்னாடி வந்தீங்க…” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே செல்ல நடந்தாள்.
“போடி! பெரிய இவ இவ! பின்னாடியே சுத்த போறாங்க. வந்து வாச்சா பாரு எனக்குன்னு” என்றவன் படுக்கையில் ஓங்கி குத்தினான்.
“ஆமாம் எனக்கு மட்டும் பெரிய உத்தம ராசா வந்து வாச்சிருக்கார்!” அவனது காதில் விழும் படி அவளும் சொன்னாள்.
“லவ் யூ விஷ்வா அப்படினு சொன்னது யாருடி?” என அவன் சொல்லிக் காட்ட, வேகமாக திரும்பியவள், “ஐ ஹேட் யூ போதுமா?” என்றாள்.
“கன்னத்துல கிஸ் பண்ணினது யாரு?”
“நாந்தான்… நாந்தான் கிஸ் பண்ணினேன், அதுக்காக வெட்க படுறேன்” என கண்கள் சிவக்க சொன்னாள்.
புருவ மத்தியில் இரண்டு விரல்கள் கொண்டு அழுத்திப் பிடித்துக் கொண்டவன் நிதானத்திற்கு வந்து, “கம் இன்சைட்” என்றான்.
“பேசாதீங்க என்கிட்ட!” என்றவள் அறைக்கு சென்று விட்டாள்.
பின்னாலேயே அவனும் வந்து நிற்பான் என அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.
“நாம எது பேசினாலும் தப்பு தப்பாவே போகுது, திரும்ப திரும்ப ஹர்ட் ஆக நான் ரெடியா இல்லை, போறீங்களா இங்கேருந்து” என கோவமாக சொன்னாள்.
“ஷ்ஷ்ஷ்… எதுவும் ஹர்டிங்கா பேச மாட்டேன் நான்” என்றவன் அறைக் கதவை அடைக்க, அவனை பயத்தோடு பார்த்தாள்.
“நான் டோர் லாக் பண்ணினதுல எந்த உள் நோக்கமும் இல்லை, இப்படி பார்த்து என்னை இன்சல்ட் செய்யாத. நீ பாட்டுக்கும் ரூமை விட்டு வெளிய நின்னுலாம் கத்துற, நாம ரெண்டு பேர் மட்டுமே இல்லை இங்க, தாத்தா இருக்கார், செர்வன்ட்ஸ் இருக்காங்க” என்றான்.
பயத்திலிருந்து தெளிந்தாலும் அவனிடம் முகம் தராமல் வேறெங்கோ பார்த்தாள்.
அவளை நெருங்கியவன் அவளது கன்னத்தில் முத்தமிட, திட்டுக்கிட்டு போனாள்.
‘ஷாக்கை குறை!’ என்பது போல பார்த்து சிரித்தவன் அதே கன்னத்தில் இன்னொரு முத்தம் வைத்தான். அவனை தள்ளி நிறுத்தி, தானும் பின்னால் நகர்ந்து நின்றாள்.
“நீ எனக்கு கிஸ் பண்ணின அன்னிலேருந்து அதை நினைச்சு நினைச்சு எனக்கு ஒரே குடைச்சல். ஒரு பொண்ணு தானா வந்து கிஸ் பண்றா, சும்மா வாங்கிட்டு வந்திட்டியேடான்னு என்னை நானே திட்டிகிட்டேன். எனக்கு கிஸ் பண்ணினப்போ வெட்க பட்டதானே? ஸோ உன் ஸ்டேட்மெண்ட் தப்பில்ல” என்றான்.
நினைவு வந்தவளாக அவன் முத்தமிட்ட கன்னத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.
“எத்தனையோ முறை இப்படி அழுத்தி துடைச்சிட்டேன் வேதா. அப்புறம்தான் புரிஞ்சது முத்தம் அது கொடுக்க பட்ட இடத்துல ஒட்டிக்கிட்டு நிக்கிறது இல்லை துடைச்சி விட்டதும் பறந்து போக. கொடுத்த வேகத்துக்கு உள்ள இறங்கி உணர்வுல கலந்து போயிடுது, காலத்துக்கும் மறக்காத ஃபீல் அது” என்றான்.
விழி விரித்து நின்றவளின் முகத்தை திருப்பி மற்றொரு கன்னத்திலும் முத்தமிட்டவன், “உன் ‘ஹேட் யூ’ ரொம்ப வலிக்குது, இனிமே சொல்லாத” என சொல்லி கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டான்.