தாலி கட்டி விட்டதால் அழைத்து செல்வோம் எனதான் வந்திருந்தார் பெரியவர். ஆனால் அவளிடம் பேசி பார்த்ததில் பேரனை சமாளிக்க இவளை விட சிறந்தவள் இருக்க போவதில்லை என்ற எண்ணம் வலு பெற்று விட்டது.

பேரனுக்கு சொத்து சுகம் சேர்த்ததை விட இவளை அவனுக்கு இணையாக்கி விட்டால் அதுவே அவனுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என நினைத்தார்.

அதற்கு வேதாவின் மனதை மாற்ற வேண்டுமே. தாத்தாவுக்கு வேறு வழியிருக்கவில்லை. அவருக்குள் ஒளிந்து கிடக்கும் உண்மையை அவளிடம் சொல்லத் தொடங்கினார்.

அவள் சற்றும் எதிர்பாராத கதை. கேட்டு முடித்தவள் பேச வார்த்தைகள் அற்று சிலையாக சமைந்திருந்தாள்.

பழைய நினைவுகளில் சிக்கி, அழுகையை மறந்து விட்ட கண்களோடு, சோர்வாக இருந்த பெரியவரை பார்க்க பார்க்க அவளுக்கு அவர் மீது கோவம், ஆற்றாமை, வருத்தம் எல்லாம் எழ, கொஞ்சம் இரக்கமும் சுரந்தது.

தண்ணீர் எடுத்து வந்து பருக கொடுத்தாள். கட கடவென நீரை அருந்தியவர் மௌனமாகவே இருந்தார். திடீரென கிளப்பி விடப் பட்ட மனப் புயலை அவருக்கும் சமாளிக்க வேண்டுமாக இருந்தது.

“நான் செய்தது பிழைதான், ஆனா என்னளவுல அதை தவிர வேற வழி இருக்கல. இந்த உண்மை எல்லாம் என் மனைவிக்கு கூட தெரியாது. அவ என்ன கதை சொன்னாளோ அதை புடிச்சுக்கிட்டான் விஷ்வா. அவன் நினைக்கிறது உண்மைனா அவன் செயல்களுக்கு சரியான காரணமா போயிருக்கும், அது உண்மை இல்லைனு உனக்கும் எனக்கும்தான் தெரியும், என்ன செய்ய?” என இயலாமையோடு சொன்னார்.

அவள் இன்னும் மீண்டிருக்கவில்லை. ஆகவே பதில் தர தெரியவில்லை.

“அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் பிஸ்னஸ்தான் மா. சுமூகமா செய்ய முடியாதப்போ பணம் கொடுத்து சாதிக்கிறதும் அடாவடி பண்ணி ஜெயிக்கிறதும் பிஸ்னஸ்மேனுக்கு சகஜம். வாழ்க்கையையும் அப்படி எடுத்துக்கிட்டான் அவன். எல்லா தகிடு தத்தமும் பண்ணி பிஸ்னஸ் தொடங்கினாலும் அதை வளர்க்கத்தான் பார்ப்பான், அதுக்காக எந்த அளவும் போவான். அப்படித்தான் உன்னை அவன் கூட சேர்ந்து வாழ வைக்க  என்னென்னமோ செஞ்சிருக்கான், ஆனா உன்னை கை விட மாட்டான்” என்றார்.

சற்று முன் அவர் மீது ஏற்பட்ட இரக்கமெல்லாம் அவளுக்கு வடிந்து போய் விட்டது.

அவளின் முக பாவம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனாலும் அத்தனை எளிதாக விட்டுக் கொடுப்பதாக இல்லை அவர்.

“ஒரு காலத்துல அவனை நீ விரும்பியிருக்கதானே வேதா? அந்த அன்பு எங்கேயோ உன் மனசுல அடி ஆழத்துல ஒரு துளி மிச்சம் மீதி கெடக்கலையாமா?” எனக் கேட்டார்.

பட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

“எனக்கு கருணை காட்டு, என் பேரன் வாழ்க்கைய எப்படி நல்ல விதமா கொண்டு போறதுன்னு எனக்கு தெரியலை. அடிப்படைல அவன் நல்லவன், எனக்கப்புறம் யாரும் இல்லாதவனவா போயிடுவான், அவனை வாழ வை” கை கூப்பி விட்டார் பெரியவர்.

பதறிப் போனவளாக அவரின் கையை கீழ் இறக்கி விட்டாள்.

“அவன்கிட்ட மாட்டிக்க போறதா நினைக்க வேணாம் வேதாம்மா. எல்லா வகையிலும் அவனை விட ஒருபடி நீ மேலேன்னு உனக்கு எல்லாம் செய்து தர்றேன் நான். அவன் உன் பொறுப்பு, நீ என்ன வேணா அவனை செய்,  நான் கேட்டுக்கவே மாட்டேன், உன் வசதிக்கு அவனை மாத்திக்க, அந்த சாமர்த்தியம் உனக்கு இருக்குடா” என நயமாக சொன்னார்.

“பிராடிக்கலா இதெல்லாம் சரி வரும்னு நினைக்குறீங்களா தாத்தா?”

“கண்டிப்பா சரியா வரும்” என அவர் சொல்ல, சில நொடி மௌனத்துக்கு பின் சம்மதமாக தலையாட்டினாள் வேதநாயகி.

முகம் மலர்ந்து போனவர் அவளின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

“நான் உன்கிட்ட சொன்ன விஷயம் உனக்குள்ளேயே இருக்கட்டும் மா” என்றார்.

“உங்க பேரனுக்காவது இதை சொல்லணும்ல தாத்தா? எங்க அத்தை பாவம்!” என்றாள்.

“அவனுக்குத்தான் இது தெரியவே கூடாதுமா”  சொல்லி விடாதே என்ற இரைஞ்சுதலோடு சொன்னார்.

“அப்ப அவர் அவரோட அம்மாவை எதிரியாவே நினைச்சிட்டு இருக்கணுமா?”

“இந்த உண்மையை சொல்லாம அவன் அம்மாவை அவனுக்கு புரிய வைக்க உன்னால முடியும் மா”

“அதெப்படி என்னால முடியும்?”

“என் இடத்திலேருந்து யோசிமா, என் நிலைமையும் என் பக்க நியாயமும் உனக்கு புரியும்” என்றார்.

அதிகம் பேசிக் கொண்டே இருந்ததில் வேதாவுக்கு சக்தி வடிந்தது போலிருந்தது.. மனமும் அயர்ந்து கிடக்க, அதற்கு மேல் அவரிடம் அது குறித்து அவளால் வாதாட முடியவில்லை.

கட்டிய துணையிடம் கூட சொல்லியிராத விஷயத்தை தன்னிடம் சொல்லியிருப்பவரின் நம்பிக்கையை உடைக்கக் கூடாது என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், “யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் தாத்தா” என்றாள்.

ஹால் வந்த வேதா விஷ்வாவை கணவனாக ஏற்றுக்கொள்வதாக சொல்லவும் அகல்யா ஓடி வந்து அவளை கட்டியணைத்துக் கொண்டார். விஷ்வாவின் புருவங்கள் தன்னால் உயர்ந்து கொண்டன.

இனி ஊரறிய இன்னொரு திருமணம் என்றெல்லாம் இழுத்து செல்ல வேண்டாம் என தாத்தா கூற சந்திரனும் சரி என்றார்.

வாசுகி மகளை முறைக்க, அம்மாவை கெஞ்சலாக பார்த்தாள் வேதா.

“இந்த கெழவர் என்ன சொல்லி மிரட்டினார் வேதா?” என எகிறிக் கொண்டு வந்தான் சித்தார்த்.

சட்டைக் கையை மடித்துக் கொண்டு வந்த விஷ்வாவை பிடித்துக்கொண்ட பெரியவர், “உன் தாத்தன் கெழவன் இல்லாம குமரனாடா? அவனும் என் பேரன்தான், சொல்லிட்டு போகட்டும் விடு” என்றார்.

வேதா சம்மதம் சொன்னதே விஷ்வாவுக்கு பெரிதாக இருக்க, சித்தார்த்தின் பேச்சை அப்போதைக்கு புறம் தள்ளினான்.

நாள் பார்த்து வேதாவை புகுந்த வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்றார் சந்திரன்.

இன்றைய தினத்தை விட்டால் பிறகு நல்ல நாள் சமீபத்தில் இல்லை என்ற பெரியவர், “வேதா இன்னிக்கே வரட்டும், ரெண்டு நாளைக்கு அப்புறம் வேணா இங்க வந்து இஷ்டம் போல தங்கட்டுமே” என்றார்.

மகளை பார்த்தார் சந்திரன். உடனே அங்கு செல்ல வேண்டுமா என வேதாவின் மனம் முரண்டியதுதான். அங்கேதான் வாழ்க்கை என முடிவெடுத்து விட்ட பிறகு மறுத்து பேசி என்னாக போகிறது என நினைத்தாள். அதைவிட இன்று இங்கு இருந்தால் அம்மா அண்ணனை எல்லாம் அவளால் சமாளிக்கவே முடியாது, ஆகவே சரியென சொல்லி விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள், மற்றதை பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என யோசனை சொன்னார் அகல்யா.

நாத்தனாரையும் மகளையும் முறைத்த வாசுகி, கோவமாக தனது அறைக்கு சென்று விட்டார்.

நான் அவ்வளவு பேசியும் மிரட்டியும் மசியாதவள் இப்போது எப்படி சம்மதித்தாள் என அவளை பார்த்து நின்றான் விஷ்வா. இறுகிய முகத்தோடு அவனை பார்த்த வேதா, தன் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவனால் கணிக்கவே முடியவில்லை.