“ரொம்ப பண்றான்டி உன் ஃப்ரெண்ட்!” என சொல்லிக் கொண்டே மனைவியிடம் வந்த விஷ்வா, அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்தான்.
“உன் அண்ணன் மூஞ்சு என்னடி கொடூரமா இருக்கு?” என விசாரித்தான்.
“ப்ச், அண்ணாக்கும் அது ஆளுக்கும் ஏதோ சண்டை போல, நேத்திலேருந்தே இப்படித்தான் ஃபோனும் கையுமா தனியா தனியா போய் நிக்குது” என கவலை பட்டாள் வேதா.
“சண்டையும் சமாதானமும் காதலில் தவிர்க்க முடியாத விஷயங்கள். இதுக்கு போய் நீ ஏன் ஒர்ரி பண்ணிக்கிற, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்”
“பெரிய சண்டையாயிருந்தா?”
“என்ன சண்டையா இருந்தாலும் பொண்ண தட்டி தூக்க உன் அண்ணனுக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்ற கணவனை நன்றாக முறைத்தாள் வேதா.
“என்னையவே நீ மன்னிச்சிட்ட, உன் அண்ணன்லாம் புள்ள பூச்சி, அதெல்லாம் அந்த பொண்ணு மன்னிச்சுடும்” என அவன் விளக்கம் வேறு சொல்ல, “ஏதாவது சொல்லிட போறேங்க” என கடுப்பாக சொன்னாள் அவள்.
“ஹேய் ஹேய்… இன்னிக்கு நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு, வேற பேசக்கூடாது, உன் அண்ணா டாபிக் இன்னொரு நாள்” என சொல்லி அந்த பேச்சை முடித்து வைத்து, மனைவியின் கோவத்திலிருந்து தப்பித்துக் கொண்டான் விஷ்வா.
வீடு வந்த பிறகு மகனுக்கும் மருமகளுக்கும் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் அகல்யாவே முன் நின்று முறையாக செய்தார், அவர்களையும் செய்ய வைத்தார்.
அவர் வாழ்ந்த வீடு, இப்போது புதுப்பிக்க பட்டிருந்தாலும் பழைய நினைவுகளை அவருக்கு கொடுக்கத்தான் செய்தது. செல்வ பிரபுவின் இறப்புக்கு தன் மீது எந்த தவறும் இல்லை என்பது நிம்மதியை வழங்கியது.
மதிய உணவுக்கு பின் பெரும்பாலானோர் கிளம்பி விட்டனர். அகல்யா, வாசுகி, விஷ்வாவின் சித்தி என மூவரும் இருந்தனர். உள்ளூர் கோயிலுக்கு புதுமண தம்பதியினரை அழைத்து சென்று வந்தனர்.
பின் அவர்களும் கிளம்ப, காரெடுக்க போனான் விஷ்வா. மறுத்து விட்ட சித்தி தன் கணவரை வரச் செய்து அவருடன் கிளம்பினார்.
அகல்யாவும், “டிரைவர் இருக்கும் போது போயிக்க மாட்டோமா? நீ வீட்ல வேதவோட இரு” என்றார்.
அம்மாவின் வார்த்தையை மீற மனமில்லாமல் சரி என்றவன், “அடிக்கடி வரணும் மா” என்றான். அவன் சொல்லத் தேவையே இல்லை, இனி எப்படி மகனை விடுவார். அவனிடம் புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டார்.
“நானும் கூட குறைச்ச ஏதாவது பேசிருப்பேன், மனசுல வச்சுக்க வேணாம் மாப்ள” என்றார் வாசுகி.
“அதெல்லாம் வச்சுக்க மாட்டார்மா, லட்டு மாதிரி பொண்ணு பெத்து கொடுத்திருக்க, அதுக்காகவாவது நீ பேசினதை மறந்திடுவார்” என்றாள் வேதா.
அப்படியா என்பது போல விஷ்வா மனைவியை பார்க்க, இல்லையா என கண்களால் கேட்டு மிரட்டினாள் வேதா.
“அடியே பாவம்டி அவன்” என மருமகளிடம் சொன்ன அகல்யா, “பாருங்க ண்ணி, கண்ணாலேயே எப்படி அதட்டி உருட்டுறான்னு” என அண்ணியிடம் சொன்னார்.
வாசுகி சிரிக்க, “ஆமாம் உங்க புள்ள அப்படியே பயந்திட்டார்!” என சலுகையாக அத்தையின் தோளை கட்டிக் கொண்டாள் வேதா.
அம்மாவும் மாமியாரும் காரில் புறப்படும் வரை அங்கேயேதான் நின்றிருந்தான் விஷ்வா. பார்வையிலிருந்து கார் மறைந்த பின்னும் அங்கேயே இருந்தவனது உள்ளங்கையை சுரண்டினாள் வேதா.
“இன்னிக்கு நேரத்தோடவே தூங்க போயிடலாம்” என கண்கள் சிமிட்டி சொன்னாள்.
“ஆடியிலேயே உன்னை தூங்க விடாதவன் நான், ஆவணியில விடுவேன்னு நினைச்சியா?” எனக் கேட்டுக் கொண்டே அவளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
தாத்தா ஹாலில் இருக்க, அவரை கண்டதும் மனைவியை விட்டு வந்து அவருடன் அமர்ந்து கொண்டான். தனக்கு உண்மை தெரிந்து போனதோ என தாத்தாவுக்கு சந்தேகம் வந்து விட்டதை அவன் உணர்ந்தே இருந்தான்.
அவனும் அதை ஏதும் செய்ய விரும்பவில்லை. சிலவற்றை அப்படியே விட்டு விட வேண்டும். தொழில் சம்பந்தமாக ஏதோ அபிப்ராயம் கேட்பது போல பேசினான். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். வேதா வந்து சாப்பிட அழைக்கவும்தான் எழுந்தனர்.
மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பேரனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் அந்நியோன்யம் கூடியிருப்பதை உணர்ந்தார் பெரியவர். பேரனின் வாழ்க்கை நன்றாகி விட்டது என நினைத்து அவன் விஷயத்தில் அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது.
இருவரும் நேரத்தோடே அறைக்கு வந்து விட்டனர். மனைவியின் மார்பில் தலை வைத்து ஆசுவாசமாக படுத்து விட்டான். அவனது சிகை கோதி கொடுத்துக் கொண்டே, “என்ன படுத்திட்டீங்க?” எனக் கேட்டாள்.
“ரிலாக்ஸா இருக்குடி, தூங்கணும் போல இருக்கு” என்றான் அவன்.
“இப்ப இப்படி சொல்லிட்டு நாளைக்கு என்னை குறை சொல்லக்கூடாது” என்றாள்.
“அப்படியா சொல்வேன்?”
“அப்படி சொன்னா கூட பரவாயில்லை, நேத்து விட்டு போனதுக்குன்னு ஒரு அலும்பு பண்ணுவீங்க பாருங்க…” என அவள் சலித்துக் கொண்டிருக்கும் போதே, நிதானமாக அவளை அனுபவிக்க ஆரம்பித்திருந்தான் விஷ்வா.
இரண்டு வருடங்களுக்கு பிறகு…
வேதாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்திருந்தது. இந்த முறை பிறந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் என ஏதாவது காரணத்தை தூக்கிக் கொண்டு வரக்கூடாது என கண்டிப்போடு சொல்லி விட்டார் வாசுகி.
ஏழு மாத வயிற்றோடு கைகள் நிறைய வளையல்கள் அணிந்து களை கூடி காணப் பட்டாள் வேதா.
தாத்தா சென்ற வருடமே தவறியிருந்தார். அந்த நேரம் அம்மாவும் மனைவியும்தான் விஷ்வாவுக்கு ஆதரவாக இருந்து அவனை தேற்றியது.
இப்போது மனைவி அவளது பிறந்த வீட்டுக்கு சென்று விடுவாள் என்பதில் விஷ்வாவுக்கு என்னவோ போலிருந்தது.
ஒரு வாரம் போல அம்மாவின் வீட்டில் இருந்து விட்டு இங்கு வந்து விடலாம், பின் ஒன்பதாவது மாதம் பிறந்த வீட்டிற்கு சென்றால் போதும் எனதான் இருக்கிறாள் வேதா.
என்ன முயன்றும் அவளால் இரும்பு ஃபேக்டரியுடன் ஒன்ற முடியவில்லை, நட்சத்திர விடுதியை தனது பொறுப்பாக்கிக் கொண்டு அதில் தன் நிர்வாகத் திறமையை காண்பிக்கிறாள்.
குழந்தைப்பேறை தள்ளிப் போடவெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை, வேதாவுக்கு இருந்த கர்ப்ப பை சம்பந்தமான சிறு சிறு கோளாறுகளால் தானாக தள்ளிப் போய் விட்டது.