அவனை இழுத்து பிடித்து அமர வைத்த வாசுகி, “இந்த பாரு… உன்னை எங்கையால தூக்கி வளர்த்திருக்கேன், உரிமையா திட்டி பேசுவேன்னாலும் அன்பாதான் வளர்த்தேன்னு உனக்கே தெரியும். என் வார்த்தைக்கு மரியாதை இருக்கா இல்லையா உன்கிட்ட?” எனக் கேட்டார்.
கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவரை அமைதியாக பார்த்தான் அவன்.
தன் முந்தானை கொண்டு நன்றாகவே அவனது முகத்தை துடைத்து விட்டவர், “போ உன் ரூம்ல போய் பேசாம படுத்து தூங்கு, குழந்தை புள்ளையாட்டம் என் மாப்ள மேல பொறாமை படாம உன் கூட பொறந்தவனுக்கும் உன் அம்மாகிட்ட உரிமை இருக்குங்கிறத மனசுல பதிய வச்சு, அவங்களுக்கான நேரத்தை கொடு” என்றார்.
“வேதாவை கட்டிகிட்டதால அவன் மேல அப்படியே அன்பு பொங்கி வழியுதுல உங்களுக்கு? என்னமோ பண்ணுங்க, யாருக்காகவும் விட்டுக் கொடுத்து போகல நான், அவன் மூஞ்சிய பார்க்க பிடிக்காம போறேன், உங்க மா…ப்பிள… இங்கேருந்து கிளம்பி போனதும் சொல்லுங்க. நான் ஃபிரெண்ட் வீடு வரைதான் போறேன்” என சொல்லி வெளியேறி விட்டான் சித்தார்த்.
இதற்கு மேல் அவனை தடுக்க கூடாது என வாசுகியும் விட்டு விட்டார்.
வேதாவுக்கு பயப்படும் படி ஏதுமில்லை. களிம்பு கொடுத்து அனுப்பி விட்டார் மருத்துவர்.
காரில் வீட்டுக்கு வரும் போது கவலையோடு காணப் பட்ட வேதாவிடம், “தெரியாம நடந்து போச்சு, கழுத்துல காயம் சரியானதும் என் கையாலேயே திரும்ப கட்டி விட்டிடுறேன், இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத” என்றான்.
அவளும் தலையாட்டிக் கொள்ள, சித்தார்த் அவனது பைக்கில் அவர்களுக்கு எதிர் புறமாக செல்வதை பார்த்தனர்.
வேகமாக காரை ஒடித்து திருப்பினான் விஷ்வா.
“என்ன செய்றீங்க?” என பதறினாள் வேதா.
“என் குடும்ப ரகசியத்தை எல்லாம் எல்லாருக்கும் சொல்வேன்னு சொன்னான், அப்படி சொன்னா என்ன நடக்கும்னு அவன்கிட்ட சொல்றேன், தைரியம் இருந்தா வெளில சொல்லட்டும்” என அவன் சொல்ல, தலையில் கை வைத்துக் கொண்டாள் வேதா.
நல்ல வேளையாக மகளுக்கு அழைத்த வாசுகி, சித்தார்த் பற்றி சொன்னார். லவுட் ஸ்பீக்கரில் போட்டு கணவனிடமும் அம்மாவை பேச வைத்தாள்.
“அத்தையை ஏத்துகிட்ட நீங்க சித்துவையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்ங்க” என எடுத்து சொன்னாள்.
“ஹேய் அவன்ல்லடி முறைச்சு முறைச்சுகிட்டு பேசுறான் எகிருறான், அவனை என்ன என் இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டா லாலிபாப் கொடுக்க முடியும்?” என அவன் சினந்து கொள்ள, “சரி சரி, அவன்தான் போயிட்டானே, உங்கம்மாகிட்ட பேசுங்க முதல்ல” என தணிந்த குரலில் சொன்னாள்.
அவனும் தன் தாயின் நினைவில் அமைதியாகி விட்டான்.
வீடு வந்ததும் என்ன சொன்னார் மருத்துவர் என கேட்டறிந்து கொண்ட வாசுகி, “அதான் ஒன்னுமில்லன்னு நான் சொன்னேன்ல, நீ வா, அவர் அவரோட அம்மாவை பார்க்கட்டும். இத்தனை அமக்களம் நடந்திருக்கு வீட்ல, ஏசி ரூம்ல ஜம்முனு தூங்கிட்டு இருக்கு உன் அத்தை” என்றார்.
“உங்க மாப்ளயோட அம்மா அவங்க, அது இதுன்னு பேசாம மரியாதையா பேசுங்க” என மாமியாரை கடிந்தான் விஷ்வா.
“ஹையோ அம்மா நார்மலாவே அப்படித்தான் பேசுவாங்க, நீங்க போங்க” என அத்தையின் அறையை காண்பித்த வேதா, அடுத்து அம்மா ஏதும் பேசுவாரோ என எண்ணி அவசரமாக அம்மாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அறையின் கதவை திறக்கும் போதே அவனது உள்ளத்துள் ஒரே டம் டம். பல வித உணர்ச்சி தாக்குதல்கள், சாப்பிட்ட மாத்திரை, அடைக்க பட்ட ஏசி அறை என அகல்யாவின் உறக்கம் இன்னும் கலையாமலே இருந்தது.
பல முறை பார்த்த உருவம்தான், இன்றுதான் அம்மா எனும் உணர்வோடு பார்க்கிறான். ஆகையாலோ என்னவோ கண்ணில் தழும்பிய நீர் அம்மாவின் உருவத்தை மறைத்தது. மெல்ல நடந்து சென்றவன் அவரின் காலடியில் அமர்ந்து கொண்டான்.
செய்த அனைத்து பிழைகளுக்கும் அவரின் காலில் விழுந்து மன்றாடி மன்னிப்பு கேட்க வேண்டும் போலத்தான் இருக்கிறது. எது செய்யவும் அவனது உடல் ஒத்துழைக்கவில்லை.
எத்தனை முறை கால் கடுக்க தன்னை பார்க்க வந்து நின்றிருப்பார் என நினைத்தவன் அவரின் பாதங்களை மெதுவாக எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான். ஏற்பட்ட குற்ற உணர்வில் அவரின் முகத்தை பார்க்க இயலாமல் பாதங்களையே பார்த்தான்.
அவனது தொடுகையிலும் பாதத்தில் பட்ட அவனது கண்ணீரின் ஈரத்திலும் உறக்கம் கலைந்து விழித்த அகல்யா, மகனை கண்டு விட்டு பதறி எழுந்தார்.
அவனும் திடுக்கிட்டு போனவனாக அம்மாவை பார்த்தான்.
உண்மையிலேயே மகன் வந்து விட்டானா என அறிய கை நீட்டி அவனை தொடப் போனார் அவர். தன் கைக்கு எட்டும் தூரத்தில் அவன் இல்லாத காரணத்தால் கட்டிலில் அமர்ந்த வண்ணமே அவன் பக்கமாக நகர்ந்தார்.
தானே அம்மாவின் அருகில் நகர்ந்து வந்தவன் அவரின் கையை பிடித்துக்கொண்டான். அவரின் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன் தன் பிடியை இறுக்கினான். அம்மா என அழைக்க நினைக்கிறான், நா சுழல மறுத்து, தொண்டையிலும் ஏதோ அடைத்துக் கொண்டது.
“கண்ணா விஷ்வா…” என அவர் அழைத்த இரு சொற்கள் ஆயிரம் உணர்வுகளை அவனுள் கடத்தியது.
சிறு வயதிலிருந்து இப்போது வரை தான் செய்த அனைத்து தவறுகளையும் மனதிற்குள் தொகுத்து வைத்திருந்தான். ஒவ்வொன்றாக சொல்லி மன்னிப்பு கேட்க நினைத்திருந்தான். இப்போதோ ஒரு சொல் கூட அவனிடம் இல்லை.
அம்மாவின் உடைந்த குரல், அவரின் அழுகை, அவனுக்கான ஏக்கம் தொனித்த அவரின் பார்வை என எதையும் அவனால் தாள முடியவில்லை. அம்மாவின் கைகளை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொண்டவன் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லாமல் அப்படியே அவரின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
மகனை புரிந்து கொள்ள அந்த தாய்க்கு எந்த வார்த்தையும் அவசியமில்லாமல் போனது. அவனது மௌனமான அழுகையை அது சொன்ன கதைகளை அட்சரம் பிசகாமல் புரிந்து கொண்டவர் அவனின் முதுகை தடவிக் கொடுத்தார்.
ஈரைந்து மாதங்கள் பல இன்னல்கள் கடந்து சுமந்து, வலிக்க வலிக்க பெற்று, கொஞ்சம் வேகமான காற்று கூட பட்டு விடாமல் கைகளுக்குள் பொத்தி பாதுகாத்து, மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்து, அவனையே மிச்ச வாழ்க்கைக்கு அர்த்தமாக ஏற்று நின்ற போது தன் கை விட்டு போன புதல்வன்.
மொழி பேசத் தெரியாத பச்சிளம் குழந்தையாக தன்னை விட்டுச் சென்றவன், பார்க்கும் தூரத்திலிருந்தும் தன்னை ஏறெடுத்து பார்த்திராதவன், கத்தியின்றி இரத்தமின்றி காயத்தை கொடுத்தவன், அவன் உடனில்லாமல் எத்தனை எத்தனை மனத் துயரம் அனுபவிக்க நேரிட்டது?
இதோ வளர்ந்த ஆண் மகனாக கண்ணீரை மாலையாக்கி மன்னிப்பு கேட்டு நிற்கிறான்.
காலம் கடந்தே என்றாலும் இந்த நொடி அவன் அம்மாவின் பெற்ற வயிறை குளிரச் செய்து விட்டான்.
இருவருக்கும் அடுத்தவரின் செயல்களுக்கான எந்த விளக்கங்களும் சொல்லப் படாமலே ஒருவரை மற்றவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
மடி புதைந்த மகனை அவனை ஈன்ற போது எப்படி பாதுகாப்பாக அரவணைத்துக் கொண்டாரோ அந்த உணர்வில் கொஞ்சமும் குறையாமல் இப்போதும் அரவணைத்துக் கொண்டார் அகல்யா.