Neeyen Naayagi 19 2 7912 “ஹையோ அப்பா சொன்னாரா? அவரோட முடியாது, தப்பி தவறி கூட அம்மாகிட்ட சொல்லிடாதீங்க, என்னால சமாளிக்க முடியாது, உங்க பையன்கிட்டேயே ஏதாவது கேட்டு வைப்பாங்க” “கேட்டா அவனே பதில் சொல்லிக்குவான், உனக்கென்னடி கவலை?” “நல்லா சொல்வாரு பதிலு! ‘என் பொண்டாட்டிய எங்க வேணா கூட்டிட்டு போவேன், உங்களுக்கென்ன’ன்னு முகத்துல அடிச்ச மாதிரி பேசுவார், அம்மா அதுக்கு ரியாக்ட் பண்ணாம இருக்க மாட்டாங்க, ரெண்டு பேரையும் என்னால சமாளிக்க முடியாது. என் மாமியார் பரவாயில்லை, உங்க பையனோட மாமியார்தான் டெரரா இருக்காங்க” என்றாள் வேதா. சிரித்த அகல்யா, “அண்ணிக்கு ஏத்த மாப்பிள்ளைதான் என் பையன்! சரி சொல்லு, அவன் எப்படி இருக்கான், உன்னை நல்லா வச்சுக்கிறான்தானே?” என அக்கறையாக கேட்டார். “ஆச்சுவலி உங்கள்ட்ட சண்டை போட வந்திருக்கேன் நான். ரொம்ப டாமினேட் பண்றார்த்தை உங்க பையன், எதுக்கு அவரை பத்தி பேசி பேசி என் மனசுல ஆசைய வளர்த்து விட்டீங்க? போங்க நீங்க!” என செல்லமாக கோவித்துக் கொண்டாள். “நீ ரொம்ப பதிவுசு, போடி! ஏன் ஆசைய வளர்த்து விட்டீங்கன்னு இப்ப கேட்காத, இன்னும் பத்து வருஷம் கழிச்சி வந்து கேளு” என முதலில் கிண்டல் செய்தாலும், “ஏன்டா கண்ணு, அவன் ரொம்ப படுத்துறானா உன்னை? நீ சந்தோஷமா இல்லையாடா?” என குரலில் கவலை ஒலிக்க கேட்டார். “அச்சோ அத்தை, அப்படிலாம் இல்லை. என் மேல அன்பாதான் இருக்கார். அப்பப்ப கொஞ்சம் மக்கர் பண்ணுவார் அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன். அவரை தவிர யாரையும் என்னால நினைச்சு பார்க்க முடியாது, அவர் கட்டாயமா தாலி கட்டலைனா கூட என்னிக்காவது ஒரு நாள் அவர்தான் என்னை கல்யாணம் பண்ணிருந்திருப்பார்” என சொல்லி அவரை சமாதானம் செய்து சாப்பிட்டு முடிக்க வைத்தாள். வீட்டின் முன் பக்க கதவை அடைத்து விட்டு பின் பக்கம் சென்று விட்டனர் இருவரும். வெயிலின் தாக்கம் தெரியாதவாறு நிறைய மரங்கள் இருக்க, வேப்ப மரத்தின் நிழலில் இரும்பு கட்டில் ஒன்று கிடந்தது. கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்து போட்டு மடிக்க ஆரம்பித்தார் அகல்யா. அத்தைக்கு உதவி செய்து முடித்தவள் தான் கொண்டு வந்திருந்த பையை எடுத்து கொடுத்தாள். அழகான ஸ்வெட்டர்கள், சால்வைகள் என இருக்கவும் ஆசையாக பார்த்தவர், “யாருக்குனு சொல்லி வாங்கின? இல்லை அவன் இல்லாதப்ப வாங்கினியா?” எனக் கேட்டார். அத்தையின் தோள்களை கெட்டியாக பிடித்துக் கொண்டவள், “எல்லாம் உங்க பையனே உங்களுக்காக வாங்கினார், செலக்ட் பண்ண மட்டும் நான் ஹெல்ப் பண்ணினேன்” என்றாள். அவர் நம்ப இயலாமல் அதிர்வோடு அவளை பார்த்தார். “இன்னிக்கு ஈவ்னிங் உங்களை பார்க்க வர்றார் உங்க பையன், அந்த மீட்டிங்க்கு உங்களை ரெடி பண்ணத்தான் நான் வந்திருக்கேன்” என்றாள் வேதா. அதற்கே அவரின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. மூக்குறிந்து கொண்டவர், “ஏன் வேதா, என்கிட்ட பேசணும் பழகணும்னு அவனுக்கு நெருக்கடி கொடுக்கிறியா? படுத்தாதடி அவனை, அவன் நல்லாருந்தா அது போதும் எனக்கு” என்றார். பழைய கதை, தாத்தா தன்னிடம் பகிர்ந்தது, விஷ்வாவிடம் தான் சொன்னது, அவன் கொடைக்கானல் போனது, தானும் அவனை தேடிக் கொண்டு சென்றது, அப்போதைய அவனது நிலை, இப்போதைய அவனது மனமாற்றம், அம்மாவுக்காக அவன் வருந்துவது, தவிப்பது என அனைத்தையும் நிதானமாக சொல்லி விட்டாள் வேதா. தன் முதல் கணவரை பற்றிய உண்மையை தெரிந்து கொண்டதிலேயே அதிர்ந்து விட்டார் அகல்யா. அந்த வாழ்க்கையில் நடந்தவற்றை இப்போதுதான் அவரால் எதற்காக என தெரிந்து கொள்ள முடிந்தது. மாமனார் மீது கோவம் கோவமாக வந்தது, உண்மையை சொல்லாமல் தன்னோடு கூடிய செல்வபிரபுவை நினைத்தும் ஆத்திரம் உண்டானது. விஷ்வா பற்றிய சிறு வயது நினைவுகள் வரவும் தொண்டையே அடைத்துக் கொண்டது. எப்படியோ தன்னை கட்டுக்குள் வைத்து மொத்தத்தையும் கேட்டு முடித்தவருக்கு அதற்கு மேல் தன் அழுகையை அடக்க முடியவில்லை. மகன் இதையெல்லாம் எப்படி ஜீரணித்தான் என அவனை நினைத்து நினைத்தே அழுதார். “அழுதிட்டே இருக்காதீங்க அத்தை, எனக்கு பயமா இருக்கு!” என வேதா சொல்லவும் அழுகையை நிறுத்த பார்த்தார். அவரால் முடியவில்லை, எதற்காக தானும் தன் மகனும் இப்படி வஞ்சிக்க பட்டு விட்டோம் என நினைக்க நினைக்க அதற்கு காரணமானவர்கள் மீது கண் மண் தெரியாத கோவமும் அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மகனை தனியே விட்டேனே என்ற ஆதங்கமும் அவரை நிலை குலைய செய்தன. சற்று நேரத்துக்குள் எல்லாம் அவரின் கண்கள் சிவந்து, இமைகளும் வீங்கி விட்டன. முடிந்து போனதை நினைத்து அழுவதால் பலனில்லை, இனியாவது உங்கள் மகனுடன் சுமூகமாக வாழ வேண்டும் என எடுத்து சொல்லி, அவரை முகம் கழுவ வைத்து, சூடாக தேநீர் பருக வைத்து என அமைதி படுத்தியிருந்தாள் வேதா. ‘அத்தையிடம் எல்லாம் சொல்லி விட்டேன், உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்’ என கணவனுக்கும் செய்தி அனுப்பி வைத்தாள் அவள். கேட்ட செய்திகளிலிருந்து அகல்யாவால் சட்டென மீள முடியவில்லைதான். மகன் தன்னை புரிந்து வருகிறான் என்பதில் தற்காலிகமாக அனைத்தையும் ஒதுக்கி வைத்தார். அதிர்ச்சியின் காரணமாக வியர்த்து வழிந்து கச கசத்து போயிருந்தவர் குளித்து வந்து பூஜையறையில் விளக்கேற்றி வைத்து மனமுருக கடவுளை கும்பிட்டார். அப்போதும் அவரை மீறிக் கொண்டு அழுகை வந்தது. புடவை முந்தானை கொண்டு கண்களை துடைத்து விட்டுக் கொண்டவர் ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தார். “எப்போடி வருவான் எம்புள்ள?” என மருமகளிடம் விசாரிக்கும் போதும் கன்னமெல்லாம் கண்ணீர். அவரை கண்டனமாக பார்த்துக் கொண்டே, அவரின் கண்ணீரை துடைத்து விட்டாள் வேதா. “பால்குடி நிறுத்துறத்துக்குள்ள என்னை விட்டு போயிட்டான் அவன், பச்ச புள்ளைக்கு என்ன தெரியும், நான்தானே அவனை என்கிட்ட புடிச்சு நிறுத்தியிருக்கணும்? என்னோட வச்சிருந்தா இன்னிக்கு எம்புள்ள இப்படிலாம் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க மாட்டான், விட்டுட்டேன்டி நான், எம்மகனை விட்டுட்டேன்…” என அரற்றியவர் முகத்தை மூடிக் கொண்டு அழுதார். “திரும்பவுமா அத்தை! உங்களை பார்க்க வர்றவர் முன்னாடி இப்படித்தான் நிக்க போறீங்களா? அவர் ஏற்கனவே குற்ற உணர்ச்சில இருக்கார், உங்களை இப்படி பார்த்தா… திரும்பவும் அவர் ஸ்ட்ரெஸ் ஆகிடுவார் அத்தை, ப்ளீஸ் அத்தை கண்ட்ரோலா இருங்க” என எடுத்து சொன்னாள் வேதா. அது கொஞ்சம் வேலை செய்தது. பின் பக்கம் காற்றோட்டமாக அமர்ந்து விட்டார். அவரின் மனம் கனத்துக் கிடப்பதை புரிந்து, அவரை தன்னிடம் மனம் விட்டு பேச வைத்துக் கொண்டிருந்தாள் வேதா. சித்தார்த் தனது நண்பனுக்கு ஆடை எடுக்கவென தன் மாமாவின் கடைக்குத்தான் நண்பனோடு வந்திருந்தான். இன்னும் சாப்பிட போகாத ஆதி, சித்துவை பார்த்ததும் அவன் கை பிடித்து பேச ஆரம்பித்தான். விஷ்வாவின் வீட்டிற்கு மன்னிப்பு கேட்கவென சென்றதற்கு பின் இன்றுதான் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர். சித்தார்த் அவசர குடுக்கையாக ஏதாவது செய்வானே ஒழிய மனதளவில் யாருக்கும் கெடுதல் நினைப்பவன் இல்லை. “வேதா விஷ்வாவை லவ் பண்றாடா, வேதா மனசுல விஷ்வா பதிய நம்ம வீட்டு ஆளுங்கதான் காரணம். நடந்ததை விட்ரலாம், இப்ப வேதா அவர் கூட எப்படி இருக்கான்னுதான் நாம பார்க்கணும். விஷ்வா அப்படி ரஃப் அண்ட் டஃப் ஆ இருக்கவும் காரணம் இருக்குதானே? விஷ்வா வேதா ரெண்டு பேரோட நிலைமைல இருந்தும் நாம யோசிக்கணும்” என்றான் ஆதிரன். என்ன எடுத்து சொன்னாலும் சித்துவால் விஷ்வாவை அவனது செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது, ஆனால் வேதாவின் நிலையை புரிந்து கொண்டான். கணவனுக்கு பிடிக்காதவர்களோடு அவனை எதிர்த்துக் கொண்டு வெளிப்படையாக அவளால் உறவு பாராட்ட முடியாதுதானே? “இப்ப கூட அத்தையை பார்க்கத்தான் போயிருக்காளாம், அம்மா அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாம கிளம்பிட்டான்னு அப்செட்டாம் தெரியுமா?” என தன் அப்பா மூலம் தெரிந்து கொண்டதை வைத்து சொன்னான் ஆதி. சித்துவுக்கு மனம் உருகிப் போய் விட்டது. இரயில் நிலையத்தில் வைத்து வேதாவிடம் கோவப் பட்டிருக்க, அவனுக்கும் அவளிடம் சமாதானம் ஆக வேண்டுமாக இருந்தது. “என் வீட்டுக்கா போயிருக்கா வேதா? அப்ப நானும் வீட்டுக்கு போயே லஞ்ச் முடிச்சிக்கிறேன்” என்றான். “இன்னும் சாப்பிடல நீ? வா நாம சேர்ந்து சாப்பிட்டு நாளாச்சு, அம்மாவையும் அழைச்சுகிட்டு உன் வீட்டுக்கு போ, அவங்களும் பொண்ணோட இருந்த மாதிரி ஆச்சு” என்ற ஆதி, அவனையும் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான். இருவரும் சாப்பிடும் போதுதான் ‘வேதா அவளின் அத்தையை பார்க்க போய் விட்டாள், என்னிடம் கூட சரியாக பேசியிருக்கவில்லை’ என புலம்பினார் வாசுகி. ஆதியும் சித்துவும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்து சிரித்துக் கொண்டனர். “நீங்களும்தான் அத்தை அங்க வந்து எவ்ளோ நாள் ஆகுது? வாங்களேன் போலாம்” என்றான் சித்து. வாசுகி தன் மகனை பார்க்க, “என்னை ஏம்மா பார்க்குற? உன் நாத்தனாருக்கு சர்க்கரை மாங்காலாம் கொடுத்து விட்டியாம், அப்படியே சர்க்கரை தடவின மாதிரி ரெண்டு வார்த்தை பேசி சமாதானம் ஆகிடு” என்றான் ஆதி. “ஏன் அம்மாக்கும் அத்தைக்கும் என்னை வாய்க்கா தகராறு?” என சித்து கேட்க, “அவன் கெடக்கான், அப்படிலாம் ஏதும் இல்லை, நீங்க சாப்பிடுங்க, நான் புடவை மாத்திட்டு வர்றேன்” என கழண்டு விட்டார் வாசுகி. சாப்பிட்ட பின் ஆதி கடைக்கு புறப்பட, வாசுகியுடன் தன் வீட்டுக்கு புறப்பட்டான் சித்தார்த். விஷ்வாவும் தன் அம்மாவை காண எப்போதோ ஃபேக்டரியிலிருந்து புறப்பட்டிருந்தான்.