“என் தலைல நல்ல எழுத்து எழுதி இல்லை, இல்லைனா இங்க வந்து மாட்டுவேனா? வாய் இருக்குன்னு என்ன வேணா பேச வேண்டியது, அப்புறம் அதெல்லாம் விஷயமான்னு நடந்துக்க வேண்டியது” என சத்தமாக புலம்பியவள் வேறு ஆடை கையில் எடுத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

“நான் ரெடி!” என குறும்பாக சொல்ல, “கண்ண நோண்டிடுவேன்!” என சொல்லிக் கொண்டே குளியலறை சென்று விட்டாள்.

வெளியில் கிளம்புவதற்கு ஏற்ற படி ஆடையணிந்து வந்தவள் அவனை கண்டு கொள்ளாமல் பின்னலிட்டு லேசாக ஒப்பனைகளும் செய்து கொண்டாள்.

“எங்க போற இப்போ?” எனக் கேட்டவனுக்கு, “எங்கேயோ… இங்க இருக்க பிடிக்கல, கால் போற போக்குல போவேன், உங்களுக்கென்ன?” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

பத்து நிமிட பயணத்தில் ஒரு கோயிலிருக்கும். விஷ்வா அதிகமாக பயப்படுத்திய போது இந்த கோயிலுக்கு போய்தான் வேண்டிக் கொண்டாள். அதன் பிறகுதான் இன்று இத்தனை தெளிவாக விஷ்வா இவளிடம் வம்பு செய்து கொண்டிருக்கிறான்.

 இறைவனுக்கு அவனுடன் சேர்ந்து போய் நன்றி சொல்ல வேண்டும் என தோன்றியது, வெளியில் வர மாட்டேன் என அடமாக இருப்பவனை வரவழைக்கத்தான் சமாதானமாகாமலே புறப்பட்டு விட்டாள்.

அவள் எதிர் பார்த்த படியே அவனும் தயாராகி ஓடி வந்து அவளோடு இணைந்து நடந்தான். அவள் அமைதியாக நடக்க, அவளின் கையை பிடித்துக்கொண்டு நடந்தான். அவன் கையை விலக்கவும் இல்லை, கோவத்திலிருந்து இறங்கி வந்ததாகவும் காட்டிக் கொள்ளவில்லை.

கோயில் வாசலில் அவள் காலணிகளை கழட்டி விடவும், “இங்க எதுக்கு? கோயில் குளம் சுத்துற வயசா நமக்கு?” எனக் கேட்டான்.

அவள் பார்த்த பார்வையில் கை வைத்து வாயை மூடிக் கொள்வதாக சைகையில் சொல்லி விட்டு அவளோடு கோயிலுக்குள் நுழைந்தான்.

நடை சாத்தும் நேரமாகியிருத்தது. ஆனாலும் கடவுளை சுவாதீனமாக தரிசிக்க முடிந்தது. அசுவாரஷ்யமாக விழிகளை சுழற்றிக் கொண்டிருந்தவனின் கையை இழுத்து, “சாமிய கும்பிடுங்க!” என அதட்டினாள்.

கையெடுத்து கும்பிட்டவன், “என் பொண்டாட்டியோட ஒரே ஒரு புருஷனுக்கு நல்ல புத்தி கொடுங்க சாமி” என வாய் விட்டு வேண்டிக் கொண்டான்.

அவள் கண்டனமாக பார்க்க, “வேணாமா?” என்றவன் மீண்டும் சந்நிதியை நோக்கி, “இவ புருஷனுக்கு புத்தியே வேணாமாம், அப்புறம் ஏன் நீங்க கஷ்ட பட்டுக்கிட்டு? வேண்டுதல் வாபஸ் கடவுளே!” என்றான்.

“விஷ்வா ஒழுங்கா இருங்க” என அவள் தீவிர தொனியில் சொல்லவும் கண்களை மூடி சிரத்தையாக வேண்டிக் கொண்டான்.

வேதாவை தனக்கு கொடுத்ததற்கு நன்றி சொன்னான், அம்மாவுக்காக வேண்டிக் கொண்டான், தாத்தா செய்த தவறுக்கு இவன் பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

 அவனுக்கு திருநீறு பூசி விட்டவள், “என்ன வேண்டுகிட்டீங்க?” எனக் கேட்டாள்.

பதில் தராமல் புன்னகை செய்தான், அவளும் அப்படியே விட்டு விட்டாள். கோயிலிலிருந்து வெளியில் வந்த பின் வீடு நோக்கி அவள் நடக்க, அவனோ எதிர் பக்கமாக அவளை இழுத்தான்.

“வா நீதான் வெளில போகணும்னு சொல்லிட்டே இருக்க, சும்மா கொஞ்ச தூரம் நடந்திட்டு வரலாம்” என சொல்லி அவள் சம்மதம் சொல்லும் முன் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

“சரியான கொழுப்பெடுத்த கேஸ்!” என திட்டினாள்.

“ம்ம்… எஸ்ட்ரா கொழுப்பையெல்லாம் பர்ன் பண்ணாம கொடைக்கானல் விட்டு போறதா இல்லை” என்றான்.

“என்ன…”

“ஹனிமூன் ட்ரிப்லதான் கொலஸ்ட்ரால் அதிகமா பர்ன் ஆகும் தெரியுமா?”

“நாம ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோமா? அதும் ஆடி மாசத்துல”

“நீதான் ஆடி ஆடின்னு கூவிக்கிட்டே இருக்க, அன்னிக்கு நாம வெளில போனப்ப கூட அவ்ளோ கபிள்ஸ் பார்த்தோமே, அவங்கலாம் ஆடி ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவாங்கனு நினைக்கிற?” எனக் கேட்டவன், எந்த நேரத்தில் எவ்வளவு கலோரிகள் கரையும் என ஆழமாக, விளக்கமாக பேச, அவள் காதுகளை மூடிக் கொண்டு அவனை முறைத்தாள்.

“மூனு நாளா இதையெல்லாத்தையும்தான் நாம செஞ்சிட்டு இருக்கோம் வேதா, ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி காதை மூடிக்கிற”

“வாயை மூடுங்க விஷ்வா!”

“ஓகே ஓகே… இனி ரூம் போயிதான் இதெல்லாம் பேசுவேன்” என்றவன் நிஜமாகவே நல்ல பிள்ளையாக நடந்து கொண்டான்.

சற்று நேரத்தில் அவள் சோர்ந்து விட, வழியில் சென்ற டாக்சி ஒன்றை பிடித்துக்கொண்டான். குளிர்கால உடைகள் விற்பனை நடக்குமிடத்தில் நிறைய வாங்கினாள்.

தயங்கி தயங்கி, “அம்மாக்கும் ஏதாவது வாங்கி தர்றியா வேதா” என கேட்டான் அவன்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “அதுக்கு ஏன் இவ்ளோ தயங்குறீங்க? அத்தை டேஸ்ட் எனக்கு அத்துப்படி, நான் வாங்கி தர்றேன், நீங்க உங்க கையால கொடுக்கலாம்” என்றாள்.

“அதெல்லாம் வேணாம், நீயே கொடு” என்றான்.

அம்மாவும் பிள்ளையும் இனிமேல்தான் முதலில் பார்த்துக் கொள்ள போகிறவர்கள் இல்லையென்றாலும் நல்ல விதமாக சந்தித்துக்கொள்ள போவது இனிதான். அது நிகழும் வரையில் அதை எப்படி கையாள போகிறோம் என அவனுக்கு சந்தேகம் இருப்பது இயல்புதான் என நினைத்துக் கொண்டவள் அவனை எதுவும் சொல்லவில்லை.

வீட்டினர் அனைவருக்குமே நிறைய வாங்கினாள். தாத்தாவுக்கும் சால்வைகள் தேர்வு செய்து வாங்கிக் கொண்டாள். பைகளை எல்லாம் அவன்தான் கையில் வைத்துக் கொண்டான். வழியோரக் கடையில் சூடாக சோளம் வாங்கி அவனிடம் நீட்டினாள், தனக்கு வேண்டாம் என அவன் ஓரடி பின்னால் தள்ளிச் செல்ல, கண்களால் சுட்டெரித்தாள்.

“இதெல்லாம் ஓவர்டி, சாப்பிடறதுக்கு எல்லாம் கட்டாய படுத்துவியா?” என அழுது விடுவது போல கேட்டான்.

“வேணாம்னா வேணாம்னு சாதாரணமா சொல்லணும், ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது” என அவள் எடுத்து சொல்ல, “நல்லா செய்றடி!” என அலுத்துக் கொண்டே, அவள் கையில் இருந்த சோளத்தில் வாய் வைத்தான்.

சுட்டு விட்டது போல, ஆ என அலறி அவளை முறைத்தான்.

“அவ்ளோ ஒன்னும் சூடு இல்லை, ரொம்ப பண்ணாதீங்க” என்றவள் சாப்பிட, அவளாலும் சாப்பிட முடியவில்லை, நல்ல சூடுதான்.

அவனது தாவாய் பிடித்து, “ஸாரி…” என கெஞ்சினாள்.

“போடி!” என்றவன் நாவினால் உதடுகளை ஈரப் படுத்திக் கொள்ள, லிப் பாம் எடுத்து நீட்டினாள்.

“இதெல்லாம் நான் போட்டுக்க மாட்டேன்” என்றவன் முன்னே நடக்க, சோளத்தை ஊதி ஊதி சாப்பிட்டுக் கொண்டே அவளும் நடந்தாள்.

லேசாக தூறல் போட, சின்ன கடைக்கு வெளியில் இருந்த இடத்தில் ஒண்டிக் கொண்டு நின்றனர். இளைஞர்கள் கூட்டம் ஒன்று மழையில் நனைந்து கொண்டே வர, அனைத்து பைகளையும் ஒரே கைக்கு மாற்றிக் கொண்டு அவள் தோள் மீது கை போட்டு தன்னிடம் இழுத்துக் கொண்டு நின்றான்.

அந்த வாலிபர்கள் இவர்கள் பக்கமே வரவில்லை, வேறு கடைக்குத்தான் சென்றார்கள்.

அவனை அவள் கிண்டலாக பார்க்க, “என்ன இப்போ? என் பொண்டாட்டி தோள்ல கை போட்டுக்கிட்டு நிக்கணும்னு தோணிச்சு…” என தீவிர தொனியில் சொல்ல ஆரம்பித்து, முடியாமல் அசடு வழிய சிரித்தான்.

“இப்போ சூடு இல்லை, நல்லாருக்கு சாப்பிட்டு பாருங்க” என அவள் சோளத்தை நீட்ட, “விட மாட்டியே” என அலுத்துக் கொண்டே அவனும் சாப்பிட்டான்.

நான்கு மணிக்கு வீடு திரும்பித்தான் மதிய உணவை முடித்தனர். அவனுக்கு உதடுகளில் சூடு பட்டதால் லேசான எரிச்சல் இருந்தது, அவள் அத்தனை வற்புறுத்தியும் லிப் பாம் போட்டுக் கொள்ள மாட்டேன் என சொல்லி விட்டான்.

அவனை கோவமாக பார்க்க, “இதெல்லாம் லேடிஸ் போட்டுக்கிறது, எனக்கு வேணாம்னா விடு” என்றான்.

“எவ்ளோ அறிவாளி நீங்க!” என பொய்யாக வியந்தவள் தன் இதழ்களில் லிப் பாமை அதீதமாகவே தடவிக் கொண்டாள்.

“பார்த்து பார்த்து… தின்னு கின்னு வச்சிடாத” என சொல்லிக் கொண்டே படுத்து விட்டான்.

அவன் பக்கத்தில் வேகமாக போய் படுத்தவள் அதே வேகத்தோடு அவனை தன் பக்கமாக திருப்பினாள்.

தன் இதழ்களில் இருந்த லிப் பாமை அவனது இதழ்களுக்கு இடம் பெயரச் செய்து விட்டு அவனை விட்டு விலகினாள்.

அவன் மந்தகாசமாக சிரிக்க, “விஷ்வா நோ!” என ஒரு விரல் நீட்டி சொன்னாள். அந்த விரலை பிடித்துக் கொண்டே அவளை நெருங்கினான். கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து அவளை தன்னிடம் மயங்க வைத்தான். பின் மென்மையாக, நிதானமாக, ரசனையாக அவளில் லயித்து அவளையும் தன்னில் லயிக்க வைத்தான்.

பனி வனத்தில் நறுமலர்கள் சேர்ந்து கவிதை பாடியது போல சுகந்தமான பேரனுபவத்தில் திளைத்தனர்.

இறுதியில் அவளே எல்லாம் என்பது போல அவன் சரணடைய, கைகள் கொண்டு அணைத்து தன் நாயகனை தாங்கிக் கொண்டாள் வேதநாயகி, இல்லையில்லை விஷ்வாவின் நாயகி.