சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான். 

அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான் அவனை இப்படி உணர வைக்கிறதோ என நினைத்துக் கொண்டவள், “ஏசி போட்டுக்கலாம், பகல்லேயே ரொம்ப நேரம் நடந்தாச்சு, இந்த நேரம்லாம் நடக்க கூடாது” என சற்று அதட்டலாக சொல்லி மீண்டும் அவனை படுக்க வைத்தாள். 

கண்களை மூட சொல்வாள், அவனும் மூடுவான், இரண்டு நிமிடங்களில் மீண்டும் விழித்துக் கொள்வான். அவனது விசித்திர செயலில் பயமேற்பட அவளுக்கும் உறக்கம் விட்டுப் போனது. 

நள்ளிரவு இரண்டு மணி வரையிலுமே இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஏசியின் குளிரில் அவளுக்கு உடல் நடுங்க, அவனோ அமைதியின்றி நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். 

மருத்துவரை வரச் செய்து விட்டாள். அவரும் வேறு வழியின்றி உறக்கத்துக்கான நிஜமான மருந்தை செலுத்தி விட்டு புறப்பட்டார். அதன் பின்தான் அவன் உறங்கினான். ஏசியை அணைத்தவள் கவலையை சுமந்து கொண்டே தூங்கினாள். 

அடுத்த நாள் மிகவும் தாமதமாகத்தான் அவள் எழுந்தாள், விஷ்வா இன்னும் உறக்கத்தில் இருந்தான். அவள் மட்டும் குளித்து தயாராகி சாப்பிட்டாள். தாத்தா அழைத்து பேசினார், சண்டை ஏதும் இல்லையே என கவலையோடு கேட்டவருக்கு, அப்படியெல்லாம் இல்லை, இங்கு சில நாட்கள் தங்கி வருவதற்கு திட்டமிட்டிருக்கிறோம் என சொல்லி விட்டாள்.

சமாதானம் ஆகி விட்ட இருவரும் குளிர் பிரதேசத்தில்  தனிமையில் தங்கி வர விரும்புகிறார்கள் என நினைத்த தாத்தாவும் சரிதான் என விட்டு விட்டார். 

அப்பாவுக்கும் அழைத்து தாங்கள் இருவரும் கொடைக்கானல் வந்திருக்கிறோம் என அறிவித்தாள். ஆடி மாதத்தில் இதெல்லாம் என்ன என அம்மா திட்டுவாள், ஆகவே ஊரில் இருப்பதாகவே காட்டிக் கொள்கிறேன் நீயும் வேறு யாரிடமும் கூற வேண்டாம் என சொல்லி விட்டார் சந்திரன். 

உதவியாளனிடம் விஷ்வாவை பார்த்துக் கொள்ளும் படி சொல்லி விட்டு அருகிலுள்ள கோயிலுக்கு சென்றாள் வேதா. அவனை நினைத்து வேண்டும் போதே அவளை மீறி கண்ணீர் வழிந்தது. வெகு நேரம் கோயிலிலேயே அமர்ந்திருந்தாள். நடை சாத்த வேண்டும் என சொன்ன பிறகுதான் அங்கிருந்து புறப்பட்டாள். 

அவள் வீட்டுக்கு வரும் போது விஷ்வாவும் எழுந்து குளித்து முடித்திருந்தான். 

தனக்கு திருநீறு பூசி விட்டவளின் கலங்கிய முகமும் அழுத விழிகளும் அவனை வேதனை கொள்ளச் செய்தது. பசிக்கா விட்டாலும் அவளுக்காகவே கொஞ்சமாக சாப்பிட்டான். 

வெளியில் செல்லலாம் என அவள் அழைத்த போதும் பிடிக்கா விட்டாலும் அவளுக்காகவே சம்மதம் சொன்னான். 

நிரந்தர டிரைவர் யாருமில்லை, யாரேனும் வந்தால் உதவியாளனே டிரைவரை வரவழைப்பான். அன்று யாரும் கிடைக்காததால் தானே கார் ஓட்டுகிறேன் என்றான் விஷ்வா. வேதாவுக்கு காரோட்ட தெரியும் என்றாலும் மலையின் வளைவுகளில் செலுத்தும் அளவுக்கு திறமை வாய்ந்தவள் அல்ல. 

அவனது மனநிலையை எண்ணி வேதாவுக்கு பயம்தான் என்ற போதும், இது கூட அவனுக்கு நல்ல மன மாற்றத்தை கொடுக்கலாம் என நினைத்து அவனை தடுக்காமல் விட்டு விட்டாள். 

அரை மணி நேரம் பயணித்து தேவதாறு மரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்றடைந்தனர். எதிலும் ஈடுபாடே இல்லாமல் அவன் நடக்க, எதையும் ரசிக்க முடியாமல் அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டே நடந்தாள் வேதா. 

சில இளம் தம்பதிகள் நெருக்கமாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, குடும்பமாக வந்திருந்தவர்களும் கல கலப்பாக பேசிக் கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தனர். 

சின்ன பையன் ஒருவனின் பெற்றோர் அவனை நடுவில் நிறுத்தி வித விதமாக புகைப்படங்கள் எடுக்க, அதைக் கண்ட விஷ்வா அப்படியே நின்று விட்டான். 

அந்த குட்டிப் பையன் ஏதோ சேட்டை செய்யவும் அவனது அம்மா கண்டித்தாள். உடனே அவன் கோவித்துக் கொண்டு தள்ளிப் போய் சாய்ந்து கிடந்த மரமொன்றில் அமர்ந்து கொண்டான். அவனது தந்தை வந்து சமாதானம் செய்ய, அவனே அம்மாவிடம் சென்று ஏதோ பேசி தாயின் கழுத்தை கட்டியணைத்துக் கொண்டான். 

இப்படி சில நிமிடங்களில் தாய் சமாதானம் ஆகும் தவறையா செய்திருக்கிறேன்? நியாயப் படி என் அம்மாவுக்காக நானல்லவா துணை நின்றிருக்க வேண்டும்? அந்த சின்ன பையனை பார்த்துக் கொண்டே நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவனின் கையை பிடித்தாள் வேதா. 

“போலாமா வேதா, எனக்கு எங்க வரவும் பிடிக்கவே இல்லை, யாரை பார்த்தாலும்… ப்ச்… உனக்கு சொன்னாலும் புரியாது, நீ ஏன் என்னோட இருந்து கஷ்ட படுற? ப்ளீஸ் ஊருக்கு போயேன்” என்றான். 

“உண்மை தெரிஞ்சதும் நடந்ததுக்காக வருத்த படுறீங்க பாருங்க, அது போதும். உங்க அன்பை தவிர அத்தைக்கு எதுவும் தேவையில்லை, அவங்கள எப்படி பார்ப்பேன் பேசுவேன்னு எல்லாம் யோசிக்காதீங்க, அவங்கள்ட்ட போனா அவங்களே பேசுவாங்க, அப்படியே நீங்களும் தயக்கமில்லாம பழக ஆரம்பிச்சிடலாம்” என்றாள். 

அவன் ஏதும் சொல்லாமல் காருக்கு போய் விட்டான். வீட்டுக்கே செல்லலாம் என முடிவு செய்து சென்றனர். வீட்டை நெருங்கும் வேளையில் எதிரில் வந்த லாரியில் இடிப்பது போல சென்று விட்டான் விஷ்வா. லாரி டிரைவர் சுதாரிப்போடு அவனது வாகனத்தை வளைத்து ஒடித்து நிறுத்தி விபத்து ஏற்பாடாமல் காத்து விட்டான். 

ஆனால் வண்டியிலிருந்து இறங்கி கண்ட படி பேசி விட்டான். பயந்து போயிருந்த வேதா இறங்கி லாரி டிரைவரை சமாதானம் செய்யலாம் என நினைக்கையில், விஷ்வாவின் அம்மாவை குறித்து மோசமாக திட்டி பேசி விட்டான் டிரைவர். 

அவ்வளவுதான், வேகமாக இறங்கிய விஷ்வா லாரி டிரைவரை அடிக்க ஆரம்பித்து விட்டான். வேதாவால் தன் கணவனை இழுத்து நிறுத்த முடியவில்லை. வேறு வாகனங்களும் அங்கே வரவில்லை. 

விடாமல் கணவனை தடுக்க போராடிய வேதாவின் தோளில் விஷ்வாவின் அடி ஒன்று பட அம்மா என அலறியவலாக நின்றாள் வேதா. கடைக்கு போவதற்காக வந்த வீட்டின் உதவியாளனும் இவர்களை பார்த்து விட்டு ஓடி வந்தான். 

மனைவிக்கு என்னவென விஷ்வா பார்க்க போக, அதற்குள் லாரி டிரைவர் அவனை தாக்க ஆரம்பித்து விட்டான். 

வலித்த தோளை பிடித்துக்கொண்ட வேதா, உதவியாளனிடம் விவரம் சொன்னாள். லாரி டிரைவரை பிடித்துக்கொண்டவன் அவர்களை அங்கிருந்து கிளம்பும் படி அறிவுறுத்த, கணவனை காருக்குள் ஏற வைத்து வேதாவே காரை எடுத்தாள். 

லாரி டிரைவரை சமாதானம் செய்து பணம் கொடுத்து அனுப்பி வைத்த உதவியாளனும் கடைக்கு செல்லாமல் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். 

ஹாலில் விஷ்வா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, வேதாவின் தோள்பட்டைக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் சமையல் செய்யும் பெண். 

சண்முகம் ஐயாவுக்கு அழைத்து சொல்லி விடலாமா என சின்ன குரலில் வேதாவிடம் கேட்டான் உதவியாளன். 

“நீங்களா ஏதும் செஞ்சிடாதீங்க, நான் பார்த்துக்கிறேன்” என்ற வேதா, கணவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டாள். 

தனிமை கிட்டியதும் மனைவியின் ஆடையை விலக்கி தோள் பட்டையை ஆராய்ந்து பார்த்தான் விஷ்வா. கண்ணுக்கு காயமாக ஏதும் தெரியவில்லை. ஆனாலும் தன்னை நொந்து கொண்டான். 

அவனை குற்றம் சுமத்தாமல் டிவியை போட்டு விட்டு அவனை அமர வைத்து அவளும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்களில் அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவளை அணைத்த படி கண்களை மூடி தளர்வாக சாய்ந்து கொண்டான் அவன். 

மதிய உணவுக்கு அவள் மட்டும்தான் வந்தாள், அவனுக்கான உணவை அறைக்கே எடுத்து சென்று ஊட்டி விட்டாள். 

சற்று நேரம் வெறுமனே படுத்திருந்தனர், அவனது செயல்களை கண்டு மனம் தளராமல், மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின் பகுதியில் இருக்கும் ஏரிப் பக்கத்துக்கு சென்றாள். 

அவனை மனம் திறந்து பேச வைத்தாள். இன்னுமே அவனிடம் புலம்பல்கள்தான், முகம் மாறாமல் கேட்டுக் கொண்டாள். அவனுக்கு ஆதரவாக நேர்மறையாக பேசினாள். இரவு உறங்கும் நேரம் வரும் வரை பிரச்சனைகள் இன்றி சென்றது. 

உறக்கத்துக்கு ஊசி வேண்டும் என அவன் ஆரம்பிக்கவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாள். அவன் கோவம் கொண்டு சத்தமிட, “அமைதியா இருங்க, எந்த ஊசியும் மருந்து மாத்திரையும் இல்லாம இன்னிக்கு நீங்க தூங்கலாம்” என்றாள். 

“நான் எப்படி இருக்கேன்னு உனக்கு தெரியாது வேதா, என்னை உன்னால புரிஞ்சுக்க முடியாது, இதுக்குத்தான் உன்னை கிளம்ப சொன்னேன்” என எரிச்சலுற்றவனாக பேசினான். 

அவனருகில் சென்று அவனுக்கு இதழ் முத்தமிட்டு விலகியவள் அவனை பிடித்துக்கொண்டே படுக்கையில் சரிந்தாள். தன் மீது விழுந்து கிடந்தவனை பக்கவாட்டில் சரித்து, அவன் புறமாக திரும்பி அவனுடனான தனது நெருக்கத்தை அதிகரித்து, அவனது கையை எடுத்து தன் இடையை சுற்றிக் கொள்ள செய்தாள். 

“வேதா என்ன செய்ற நீ?” என கண்டனமாக கேட்டான். 

“ஏன் புரியலையா உங்களுக்கு?” என கிசு கிசுப்பாக கேட்டவளின் விரல்கள் அவனது கேசத்தில் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்தன. 

அவளது கைகளை விலக்கி அவனும் விலக, அதற்கு அனுமதிக்காமல் அவனது சட்டையை பற்றி தன் பக்கமாக அவனை இழுத்தாள். 

“வேதா ப்ளீஸ்… நான் இதுக்கெல்லாம் ரெடியா இல்லை, விடு என்னை” என்றான். 

“சென்னையிலிருந்து ரிடர்ன் வர்றப்போ என்னென்ன சொன்னீங்க, மறந்து போச்சா? இப்ப உங்களுக்கு பக்கத்துல இருக்கேன் நான், என்ன பிராப்லம் உங்களுக்கு?” எனக் கேட்டாள். 

அவளை வேகமாக விலக்கி தள்ளியவன், “என்ன பிராப்லம் எனக்கு, என்னடி மீன் பண்ற?” என அடக்கப் பட்ட கோவத்துடன் கேட்டான். 

“நீங்க என்ன நினைச்சு கேட்குறீங்க?” என குழப்பத்துடன் கேட்டாள் அவள். 

“என்ன… நானும் என் அப்பா மாதிரியா இல்லையான்னு டெஸ்ட் பண்றியா?” என சிவந்து போன விழிகளுடன் கேட்டான். 

“விஷ்வா!” என அதிர்ந்தாள் அவள். 

“உனக்கு அந்த சந்தேகம் இல்லாம எப்படி இருக்கும்? இப்ப தெரிஞ்சுக்க…” என்றவன் வலுவோடு அவளை சுற்றி வளைத்தான்.