“கூப்பிட கூப்பிட காதுல வாங்கிக்காம நீங்க பாட்டுக்கும் போறீங்க?” என கண்டனமாக கேட்டாள்.
“கொஞ்சம் நடந்திட்டு வர்றேன் வேதா, நீ போ” என்றான்.
“நானும் சேர்ந்து நடக்கிறேன், வாங்க” என சொல்லி அவனது கையை பிடித்துக் கொண்டாள்.
அவன் அப்படியே நிற்க, அவளே அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள். சில அடிகள் நடந்த பின் அவளிடமிருந்து தன் கையை விலக்கிக் கொண்டு தனியாக நடந்தான்.
“எம்மேல என்ன கோவம்ங்க?” என கவலையாக கேட்டாள்.
பதில் தராமல் நடையின் வேகத்தைக் கூட்டினான். முன்னே ஓடிச் சென்று அவனை நிறுத்தி, “எதுக்காக என்னை விட்டுட்டு போறீங்க?” எனக் கேட்டாள்.
“நான் யாரோட அன்புக்கும் தகுதியில்லாதவன் வேதா, என்னென்ன செஞ்சிட்டேன் உனக்கு, ஆனா நீ என் பின்னாலேயே வர்ற, அம்மாவும் அப்படித்தான்… என்னை தேடி தேடி வந்து நின்னாங்க, அவ்ளோ உதாசீனம் செஞ்சிருக்கேன், நினைக்க நினைக்க எனக்கு மனசு கூசுது” என்றான்.
அவனது கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டவள், “எல்லாத்தையும் சரி செய்ய முடியும்தானேங்க, இப்படி குற்ற உணர்ச்சில உழண்டுக்கிட்டு இல்லாம அதிலேருந்து வெளில வாங்க” என்றாள்.
“முடியலையே வேதா” குரல் கம்ம சொன்னான்.
“விஷயம் தெரிஞ்சு ரெண்டு நாள்தான் ஆகியிருக்குங்க, நேத்தைக்கு இருந்த பாரம் இன்னிக்கு இல்லதானே, நாளைக்கு இன்னும் பெட்டர் ஆவீங்க, போக போக முழுசா வெளில வந்திடுவீங்க, டைம் எடுக்கும், அது வரைக்கும் நான் இருக்கேன் உங்க கூட” என்றாள்.
கலங்கிய கண்களோடு வானத்தை பார்த்து ஆழ மூச்செடுத்துக் கொண்டான்.
சற்று நேரம் அவன் ஆசுவாசம் கொள்ள நேரம் தந்தவள் நடக்கலாம் என சொல்லி கை பிடித்துக்கொண்டாள். அவனும் அவளுடன் இணைந்தே நடந்தான். அதிக பேச்சுக்கள் இல்லாமல் இயற்கையை உள் வாங்கிய படி ஒரு நடைப் பயிற்சி.
கால் வழியெடுக்க ஆரம்பிக்கவும் அவனை பார்த்தாள். அவளை கவனிக்காமல் அவன் பாட்டுக்கும் நடந்து கொண்டிருந்தான். அவனுக்காக அவளும் தன் வலி பற்றி சொல்லிக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளவும்தான், என்னவென விசாரித்தான்.
“இதுக்கு மேல எனக்கு எனர்ஜி இல்லைங்க, நீங்க வேணா ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க” என அவள் சொல்லவும் அவனும் அவளுடன் அமர்ந்து விட்டான்.
தயங்கி தயங்கி கவுன்சிலிங் போகலாமா என கேட்டுப் பார்த்தாள்.
கவுன்சிலிங் சென்றால் ஆதியிலிருந்து அனைத்தையும் சொல்ல நேரிடும் என்பதை கூறியவன் அதற்கு தான் தயாராக இல்லை, ஆகவே கவுன்சிலிங் என இன்னொரு முறை பேச்சு வரக்கூடாது என தீர்மானமாக சொல்லி விட்டான்.
சற்று நேரம் மௌனமாக கழிய, போகலாம் என்றான். அதற்காகவே காத்திருந்தவள் போல எழுந்து கொண்டாள் அவள்.
இருவரும் வீட்டுக்கு வந்த போது நன்றாக இருட்டியிருந்தது. இரவு உணவை தயார் செய்து விட்டு சமையல் செய்யும் பெண் சென்று விட்டாள். காவலாளியும் வீட்டின் உதவியாளருமாக இருவர் மட்டுமே இருந்தனர். வேதாவை இங்கு கொண்டு வந்து விட்ட டிரைவரும் புறப்பட்டிருந்தான்.
இரவு உணவுக்கான நேரம் வரவும் ‘வாந்தி வருவது போலிருக்கிறது, சாப்பாடு வேண்டாம்’ என சொல்லி மறுத்தான் விஷ்வா.
“சாப்பிட்டு வாந்தி எடுத்துக்கலாம்” என அவள் சொல்ல முறைத்தான்.
அவளும் சாப்பாட்டு தட்டை தள்ளி வைத்து விட்டு அடமாக பார்க்க, சலித்துக் கொண்டே ஒரு வாய் உணவை சாப்பிட்டான். புன்னகையுடன் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். நல்ல பசியிலிருந்தவள் மளமளவென சாப்பிட, அவனோ அரை இட்லியை உள்ளே தள்ள படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
எப்படியோ அவனை வற்புறுத்தி இரண்டு இட்லிகள் சாப்பிட வைத்து விட்டாள். சில நிமிடங்களில் எல்லாம் வாந்தி செய்து விட்டான்.
பால் கலந்து எடுத்து வந்ததையும் மறுத்து விட்டான். ஏதோ ஜீரணக் கோளாறு போல என நினைத்து அவளும் அப்படியே விட்டு விட்டாள்.
பதினோரு மணியாகியும் படுக்க வராமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வைதான் அங்கிருந்ததே தவிர, கவனம் திரையில் இல்லை.
அவன் தோள் தொட்டு, “படுக்கலாம் வாங்க” என்றாள். டிவியை அணைக்காமல் அப்படியே படுக்கைக்கு சென்றான்.
அவனை கவலையாக பார்த்துக் கொண்டே டிவி, மின் விளக்கு எல்லாம் அணைத்து விட்டு அவளும் படுத்துக் கொண்டாள்.
அவனுக்கு தட்டி கொடுத்துக் கொண்டிருந்தவள் உடல் அயர்வின் காரணமாக விரைவாகவே உறங்கி விட்டாள். அவனுக்கோ கண்களை மூடவே முடியவில்லை. முன் தினம் போல மருத்துவரை வரவழைத்து விட்டான்.
அவனுக்கும் அவனது தாத்தாவுக்கும் தெரிந்த மருத்துவர் என்பதால் அழைப்பை நிராகரிக்க முடியாமல் மருத்துவரும் வந்திருந்தார்.
உறங்க ஊசி போடும் படி விஷ்வா கேட்டுக் கொள்ள, மறுத்த மருத்துவர் கண்களை மூடிக் கொண்டு உறங்கு என சொல்லிக் கொண்டிருந்தார்.
விழித்துக் கொண்ட வேதா, பக்கத்தில் கணவனை காணாமல் தேடிக் கொண்டு ஹால் வந்து விட்டாள்.
வீட்டின் உதவியாளன் தூக்க கலக்கத்தோடு விவரம் சொன்னான்.
அவளை பார்த்த மருத்துவர், “வாங்க மிஸஸ் வேதா, நல்ல ஸ்ட்ரெஸ்ல இருக்கார் இவர், டேப்லெட்லாம் வேணாமாம், இன்ஜெக்ஷன் கேட்கிறார், அடிக்கடி எடுத்துக்க கூடாதுன்னு நீங்கதான் உங்க ஹஸ்பண்ட்க்கு எடுத்து சொல்லணும்” என்றார்.
“நைட் சாப்பிட்டது வாமிட் பண்ணிட்டார் டாக்டர், அப்புறம் ஏதும் சாப்பிடல, டைஜஸ்ட் ப்ராப்லம் போல, அதுக்கு ஏதாவது மெடிசின் கொடுங்க” என்றாள் வேதா.
“எந்த செரிமான கோளாறும் இல்லைமா, இப்ப இவருக்கு பசிக்காது, தூக்கம் வராது, ஞாபக மறதி, இரிடேஷன், டென்ஷன், வாமிட், தலைசுத்தல் இப்படி எது வேணா வரலாம், எல்லாத்துக்கும் காரணம் டீப் ஸ்ட்ரெஸ்” என விளக்கிக் கொண்டிருந்தார் மருத்துவர்.
“இதெல்லாம் நான் கேட்கல டாக்டர், இப்ப எனக்கு தூங்கணும், அதுக்கு என்ன வழி?” என சிடு சிடுத்தான் விஷ்வா.
“விஷ்வா!” என அவனை லேசாக அதட்டியவள் அவன் பேசிய முறைக்காக மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டாள்.
“ஸ்ட்ரெஸ்க்கு என்ன காரணமோ அதை விட்டு வெளில வாங்க விஷ்வா, கவுன்சிலிங் எடுத்துக்கோங்க, நாளைக்கு…” என மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்க, “நாளைக்கு கதை நாளைக்கு. இப்ப இன்ஜெக்ஷன் போட்டு விடுங்க” என சத்தமிட்டவன் கைக்கு அகப் பட்ட டிவி ரிமோட்டை தரையில் விட்டெறிந்தான்.
அவனது தோளை பற்றிக் கொண்ட வேதா, ஏதாவது செய்யுங்கள் என்ற மன்றாடுதலோடு மருத்துவரை பார்த்தாள்.
அவன் கேட்ட படி ஊசி போட்டு விட்ட மருத்துவர், “இதுதான் லாஸ்ட் விஷ்வா, இனிமே போட மாட்டேன், சிக்ஸ் ஹவர்ஸ் அசந்து தூங்குவீங்க” என்றார்.
அவன் பதிலே சொல்லாமல் படுக்கையறை சென்று விட்டான். அவன் அகன்றதும், “பிபி லோன்னு சொன்னீங்களே டாக்டர், பயப்படற மாதிரி எதுவுமா?” எனக் கேட்டாள் வேதா.
அவனுக்கு தூக்க மருந்து எதுவும் போட்டிருக்கப் படவில்லை, பவுடர் மருந்துகளை திரவமாக்க பயன் படுத்த படும் டிஸ்டில்ட் வாட்டர் எனப்படும் வாலை வடிநீரையே ஊசி மூலம் செலுத்தியிருப்பதாக சொன்னார் மருத்துவர்.
“தூக்க மருந்து போட்டிருப்பதாதான் நம்பிட்டு இருக்கார், அதனால தூங்கிடுவார், பிபி லாம் பயப்படற அளவு லோ இல்லை, காலைல எதுவும் சாப்பிட்டதும் நார்மல் ஆகிடும் மா, இப்படியே இவரை சமாளிக்க முடியாது, கவுன்சிலிங் போனாதான் பெட்டர்” என்றார் மருத்துவர்.
தன் பிரச்சனைகளை வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை, ஆகவே கவுன்சிலிங்கிற்கு அவன் தயாராக இல்லை என்பதை சொன்னாள் வேதா.
“கவுன்சிலிங் யார் வேணா தரலாம்மா, அவர் பிரச்சனைகள் உங்களுக்கு நல்லா தெரியும், நீங்களே பேசுங்க, யங் கபிள் நீங்க, லவ் மேரேஜ்னு கேள்விப்பட்டேன், உங்க அன்பும் அரவணைப்பும் போதுமே அவர் சரியாக” என அவர் சொல்ல, அமைதியாக நின்றாள் வேதா.
இரவில் என்ன தொந்தரவு என்றாலும் யோசிக்காமல் அழைத்து பேசுங்கள் என இன் முகமாக சொல்லி சென்று விட்டார் மருத்துவர்.
வேதா அறைக்கு திரும்பிய போது, புரண்டு கொண்டிருந்தான் விஷ்வா.
“என்ன இன்ஜெக்ஷன் போட்டார் அவர், இன்னும் தூக்கம் வரலை” என எரிச்சலோடு சொன்னான்.
“இப்போதானே போட்டாங்க, கண்ண மூடி படுங்க” என சொல்லிக் கொண்டே அவனிடம் வந்தமர்ந்தவள் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.