“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள். 

அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து, “இந்த நேரம் நான் உங்களோட இருக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். நீங்க முன்னாடி நடந்துகிட்ட விதம் எதையும் இப்ப குத்தி காட்டி பேச மாட்டேன். உண்மை எல்லாம் அப்போ உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். என்கிட்டருந்து பயந்து ஓட வேணாம்” என்றாள். 

“நீ குத்தி காட்டி பேச தேவையில்லை வேதா” என வேதனையாக சொன்னான். 

“குத்தி காட்டி பேசத் தேவையில்லைன்னு உங்க மனசாட்சிகிட்டேயும் சொல்லுங்க, நடந்தத புரிஞ்சுகிட்டு நீங்க மாறணும்னு நினைச்சேனே தவிர இப்படி குற்ற உணர்ச்சில கஷ்ட படணும்னு நினைக்கல”

“ம்… வாயால சொல்லிடலாம், அதை கோ த்ரூ பண்ற எனக்குத்தான் தெரியும், நான் எப்படியெல்லாம்…” என்றவன் எதையும் வாய் விட்டு சொல்ல இயலாமல் அமைதியானான். 

“என்னால உங்களை புரிஞ்சுக்க முடியுது, உங்க இடத்துல யாரா இருந்தாலும் இப்படி ஆகுறது நார்மல்தான். உங்களால இந்த உணர்வுகளை சமாளிக்க முடியும், உங்களை நீங்களே ப்ளேம் பண்ணிக்க வேணாமே” என்றவள் அவனை ஆதரவாக அணைத்து முதுகை தடவிக் கொடுத்தாள். 

அப்படியே அவளது அணைப்பிலேயே இருந்தவனிடம் சாப்பிட வேண்டும் என்றாள். அவனுக்கு எது செய்யவும் விருப்பமில்லை, சாப்பிட பிடிக்கவில்லை, அவள் எழுந்த பிறகும் படுத்தேதான் கிடந்தான். 

அவனை வற்புறுத்தி குளியலறை அனுப்பி வைத்தாள். 

பாட்டி அவனுக்கு சொன்னதும் அவன் அம்மாவிடம் நடந்து கொண்டதும் தாத்தாவின் கெடுபிடிகளுமாக பழையவை அனைத்தும் திரும்ப திரும்ப அவனுக்கு நினைவுக்கு வந்து கொண்டேதான் இருந்தது. 

தாய்க்கும் மகனுக்கும் இழைக்கப் பட்ட அநீதியில் அந்த மகன் தன்னை கொடுமைக்காரனாக உணர நெஞ்சம் கூசிப் போனான். 

எத்தனை எத்தனை முறை மகன் மீதான அன்பையும் அவனிடமிருந்து சின்ன சிரிப்பாவது வந்து சேராதா என்ற ஏக்கத்தையும் சுமந்து கொண்டு இவனை தேடி வந்திருப்பார் அகல்யா. அம்மாவின் சோக முகமும் இவனுக்காக அவர் வடித்த கண்ணீரும் குத்தீட்டிகளாக அவனை குத்திக் கிழிக்க, உச்ச பட்ச வேதனை வலியில் அவனது உள்ளம் நடுங்க ஆரம்பித்தது. 

வெகு நேரமாகியும் குளியலறையிலிருந்து அவன் வெளிவராமல் போனதால் கதவை தட்டினாள் வேதா. ஷவருக்கு அடியில் அப்படியே நின்றிருந்தவன் நிகழ் உலகத்துக்கு திரும்பியவனாக கதவை திறந்தான். இன்னும் ஷவர் மூடப் படாமல் இருக்க தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது. 

ஆடை கூட களையாமல் அப்படியே நனைந்து போயிருந்தவனை கடிந்து கொண்டவள் ஷவரை நிறுத்தி விட்டு அவனை பார்த்தாள். 

குளியலறை சுவரில் சாய்ந்து கொண்டவன் கண்களை மூடிக் கொண்டான். 

“என்ன நேரம் ஆகுதுங்க, சாப்பிட வேணாமா?” என கேட்டுக் கொண்டே அவனது தோள் தொட்டாள். அலைப்புறுதலில் இருந்தவன் தன்னால் சமாளிக்க இயலாமல் அவளிடம் தஞ்சமடைவது போல அவளது அணைப்புக்குள் புகுந்து கொண்டான். 

இரு நிமிடங்களுக்கு பின்னர்தான் அவன் அழுகிறான் என்பதே அவளுக்கு தெரிந்தது. அதிர்ந்து போனாலும் அவனது அழுகையை நிறுத்த முயலாமல் அவனை அழ விட்டாள். 

சற்று நேரத்துக்கெல்லாம் சுயம் பெற்று விட்டவன் அழுத முகத்துடன் அவளை எதிர்கொள்ள வெட்கியவனாக விலகி செல்ல, அவள் விடவில்லை. 

“ஒழுங்கா குளிச்சிட்டு வாங்க, இல்லை நான் குளிப்பாட்டி விடணுமா?” எனக் கேட்டாள். 

சிவந்த கண்களுடன் அவளை வெளியேறும் படி சைகையால் சொன்னான். 

“சீக்கிரம் வரலைனா கதவை தட்டுவேன்” என சொல்லி விட்டு சென்றாள். 

மனதில் எதையும் யோசிக்காமல் விரைவாக குளித்து விட்டு அவன் வர, அவனுக்கான ஆடைகளை தயாராக வைத்திருந்தாள் வேதா. 

தயாரானாலும் இன்னும் பேய் அடித்தார் போலத்தான் இருந்தான். கொடைக்கானல் பயணத்தில் தான் பட்ட கஷ்டங்கள், நேற்றைய கோயில் தரிசனம் என பேசி அவனது கவனத்தை திசை திருப்ப பார்த்தாள்.

அவனும் தாத்தாவிடம் என்ன சொல்லி கிளம்பினாய் என கேட்டு, இப்படி தனியாக வருவாயா எனவும் கடிந்து கொண்டான். 

பேசிக் கொண்டே அவனை உணவு மேசைக்கு இழுத்து வந்திருந்தாள். திட உணவாக முந்தாநாள் இரவில் சாப்பிட்டிருந்தான், அதன் பின் திரவ உணவுதான். அது கூட உடலில் சக்தி வடிகிறது என தெரிந்த பின் உட்கொண்டிருந்ததுதான். 

இப்போது கூட்டு பொரியல் என முழுமையான சைவ உணவு தயாராகியிருக்க, “இதெல்லாம் நீ சாப்பிடு, எனக்கு கஞ்சி போல ஏதாவது கொடு” என்றான். 

“கஞ்சி குடிக்கிற அளவுக்கு உங்க உடம்புக்கு ஒன்னுமில்ல, உங்களுக்காகத்தான் இதெல்லாம் சமைச்சிருக்கு” என அவள் சொல்லியும் தட்டில் கை வைப்பேனா என அடமாக அமர்ந்திருந்தான். 

“என்னங்க இப்படி படுத்துறீங்க?” என அவள் கேட்க, “ஏய் உன்னை எவன் டி இங்க கூப்பிட்டது, தனியா இருக்கணும்னு வந்தா தேடி வந்து நொச்சு பண்ணுவியா?” என கோவமாக இரைந்தான். 

சட்டென இவளுக்கும் கோவம் வந்ததுதான், ஆனாலும் அவனது நிலையை மனதில் நிறுத்தி தன்னை நிதானமாக வைத்துக் கொண்டாள். 

“சரி சாப்பிட்டு நீங்க மட்டும் தனியா உங்க தனிமையை என்ஜாய் பண்ணுவீங்களாம்” என்றவள் அவனுக்கு ஊட்டி விட, சலிப்பாக உச்சு கொட்டி நெற்றியில் கை வைத்துக் கொண்டான். 

“எவ்ளோ மெனெக்கெட்டு சமைச்சிருப்பாங்க, அதுக்காகவாவது சாப்பிடுங்க” என அவள் மேலும் வற்புறுத்த, வேறு வழியின்றி உணவை வாங்கிக் கொண்டான். 

அவனது வயிற்றை நிறைத்து விட்டுத்தான் விட்டாள். அவளும் சாப்பிட அங்கேயே அமர்ந்திருந்தவன், “ஸாரி வேதா, அனாவசியமா உன் மேல கோவ பட்டுட்டேன்” என்றான். 

அவனை மன்னித்து விட்டதாக தன் புன்னகையின் மூலமாக சொன்னாள். 

அவளும் சாப்பிட்டு முடித்ததும் அறைக்குள் முடங்க பார்த்தவனை, அதற்கு அனுமதிக்காமல் வீட்டின் பின் பக்கம் அழைத்துச் சென்றாள். 

சமதளமான புல்வெளியை தாண்டி சற்று சரிவான புல்வெளி இருந்தது. அதன் அடியில் மீண்டும் சமதளம், அங்கே ஓர் ஏரி என அழகாக இருந்தது அவ்விடம். குளிராக இருந்தாலும் ஸ்வெட்டர் ஏதும் அணியாமல் சாதாரண உடைகளில்தான் இருந்தனர் இருவரும். 

ஏரியை பார்க்க சரிவான புல்வெளியில் கைகளை தலைக்கு அணைவாக கொடுத்து படுத்துக் கொண்டான் விஷ்வா. அவனது பக்கத்தில் கால்களை நீட்டிக் கொண்டு தளர்வாக அமர்ந்து கொண்டாள் வேதா. 

இயற்கை மாபெரும் மனவலி நிவாரணி என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சூழல் அவனது காயத்தை வருடி விட்டது. 

ஏதாவது பேசினால் எரிச்சல் படுவான், போக போக தெளிவு கிட்டும், அதுவரை அவன் பக்கத்தில் இருக்கிறோமே அது போதும், என இயற்கையை ரசித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தாள் வேதா. 

அரை மணி நேரம் காற்று மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தது. 

“அவங்கள என்னை டச் பண்ணக் கூட விட்டது  இல்லை வேதா நான்” என திடீரென அவன்தான் பேச்சை துவக்கினான். 

செய்த தவறுகள் அவனுக்கே புரி பட ஆரம்பித்து விட்டன, இப்போது அவனுக்கு தேவை அவனை எடை போடாமல் அவன் சொல்வதை கேட்டுக் கொள்ளும் காதுகள் மட்டுமே என்பதை புரிந்தவளாக செயல் பட்டாள் வேதா. 

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எவ்ளோ கோவம் வெறுப்பு அவங்க மேல, ஆனா இப்ப எனக்கு ஏதோ சின்னதா ஒரு நிம்மதி அவங்களோட அந்த கல்யாணம்தான் தருது வேதா” எனும் போது அவனது குரல் கலங்கிப் போயிருந்தது. 

“என்ன பாவம் பண்ணினேன் அம்மாங்கிற உறவு இருந்தும் அதை ஏன் என்னால அனுபவிக்க முடியலை, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு?” எனக் கேட்டவன் தலைக்கு பின்னாலிருந்த கைகளை எடுத்து மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டான். 

அவனது வலக் கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டவள் எதுவுமே சொல்லவில்லை. அவனுக்கும் எந்த பதிலும் தேவையாக இருக்கவில்லை. 

“என் அப்பாவுக்கு அவங்க துரோகம் பண்ணிட்டதா நினைச்சிருந்தேன், கடைசில நான் உட்பட எல்லாரும் சேர்ந்து என் அம்மாவுக்கு துரோகம் பண்ணிருக்கோம். இதுல பழி வாங்குறேன்னு உன்னை ஹர்ட் பண்ணி… ப்ச் எவ்ளோ பெரிய முட்டாள் நான்!” எனக் கேட்டவன் இடது கையால் தன் நெற்றியில் அறைந்து கொண்டான். 

அவனது இடக் கையை தட்டி அவனை கண்டனமாக பார்த்தாள். 

“எப்படி நான் பிறந்திருப்பேன் வேதா? நான்… நான்… எந்த அன்புக்கும் அடையாளம் இல்லை, நான் யார், எதுக்காக நான் பொறந்தேன்?” என அவன் கேட்ட போது கண்களின் ஓரம் கசிந்து விட்டன. அவனை அப்படி பார்க்க பார்க்க அவளுக்கும் கண்களை கரித்துக் கொண்டு வந்தது. 

அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருக்க, அவனது கவனத்தில் படாமல் தன் கண்களை துடைத்து, மூச்சை இழுத்து, தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டாள். 

“எனக்கு என் அப்பாவை தெரியாது, ஆனா அம்மாக்கு அவரை பத்தின உண்மை தெரியலைனா கூட அவங்க கூட வாழ விருப்பம் இல்லாம இருக்காருன்னு தெரியும்தானே வேதா? அப்புறமும் ஏன் என்னை வேணாம்னு நினைக்கல அவங்க?” என விரக்தியாக கேட்டான். 

“நீங்க ஓவரா திங்க் பண்றீங்க, உங்களைத்தான் அத்தை அவங்க வாழ்க்கைக்கான ஆதாரமா நினைச்சிருப்பாங்க, அப்புறம் ஏன் உங்களை வேணாம்னு நினைக்க போறாங்க?” 

“ஹ்ம்ம்… ஆனா நான் என்ன பண்ணி வச்சிருக்கேன் வேதா? என்னால அவங்களுக்கு கிடைச்சது என்ன?” கன்னச் சதைகள் துடிக்க கேட்டான். 

அவனது மார்பை அழுத்திக் கொடுத்தவள், “ரிலாக்ஸ் விஷ்வா, கிடைச்சது என்னங்கிற கேள்விக்கு கசப்பான பதில்தான் கிடைக்கும், இனி என்ன நீங்க அவங்களுக்கு கொடுக்கணும்ங்கிறத நோக்கி திங்க் பண்ணுங்க” என்றாள். 

“எப்படி வேதா அவங்கள ஃபேஸ் பண்ணுவேன்?” என்றவன் அப்படி சூழல் வரும் போது தன்னால் கையாள முடியுமா என்ற சந்தேகத்துடன், எழுந்து நடக்க ஆரம்பித்தான். 

சற்று தூரம் நடந்து விட்டு திரும்ப வருவான் என அவள் எதிர் பார்க்க, அவனோ வெகு தூரம் நடந்து சென்று விட்டான். 

“விஷ்வா… எங்க போறீங்க, நில்லுங்க…” என சத்தமாக சொல்லிக் கொண்டே அவனது பின்னால் ஓடிச் சென்றாள் வேதா.