“உன் விஷயத்துல ஒரே மனப் பான்மை மட்டும்தான், உனக்கு எப்பவும் என்ன நடந்தாலும் நாந்தான் ஃபர்ஸ்ட், அதுல சின்னதா நீ சொதப்பினாலும் டாலரேட் பண்ணிக்க மாட்டேன்” என அடேத்தோடு அவன் சொல்ல, “நீங்க திருந்தற கேஸ் இல்லை!” என கிண்டலாக சொல்லி அந்தப் பேச்சை முடித்து வைத்து விட்டாள் வேதா. 

விடுதிக்கு வந்த பின் அவள் ஓய்வெடுக்க, அவன்தான் பேக் செய்தான். அவள் எழுந்த போது டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று அமர்ந்தவளிடம், “நைட் டிராவல் பண்ணலாமா? இல்லை இன்னும் ரெண்டு நாள் இங்க இருக்கலாமா?” எனக் கேட்டான். 

“இருந்து என்ன செய்ய போறோம்? அடிக்கிற வெயிலுக்கு காஞ்சு போயிடுவோம். நான் நல்லா இருக்கேன், நைட்டே கிளம்பிடலாம்” என்றாள். 

அவனும் டிவியில் கவனம் வைக்க, சட்டென அவனது கன்னத்தில் முத்தம் வைத்தவள் எழப் பார்த்தாள். எதிர் பாராத முத்தம் என்றாலும் அதை உணர்ந்து அனுபவித்தவன் அவளை பிடித்து தன்னிடமே இருத்திக் கொண்டான். 

அவள் வெட்கத்தோடு அவனது மார்பில் புதைந்திருக்க, “என்ன வேதா, அப்படியெதுக்கு இந்த கிஸ், பதில் சொல்லாம உன்னை விட மாட்டேன்” என்றான். 

“கொடுக்கணும்னு தோணிச்சு, வேணாம்னா திரும்ப கொடுத்திட்டு போங்க” என குறும்பாக சொன்னாள். 

“இப்ப வாங்கிக்கிற மூட்ல இருக்கேன். ஆடி முடிய இன்னும் எத்தன நாள் இருக்கு?” எனக் கேட்டு காற்றில் கணக்கு போட்டவன், “இருபது நாள் இருக்கு, நாளுக்கு ஒன்னுன்னு கணக்கு போட்டு கொடு” என்றான். 

கொடுக்க தயார் என்பது போல அவள் பாவனை செய்ய, அவனும் தயாராக நிமிர்ந்து அமர்ந்தான். அவளோ எழுந்து கொண்டாள். அவன் பிடிக்க நினைப்பதற்குள் அவனுக்கு அகப்படாமல் ஓடினாள். 

ஒற்றை அறைக்குள் எப்படி அவனிடமிருந்து தப்பிக்க முடியும்? அவளை சுவரில் சாய்த்து சிறை பிடித்துக்கொண்டவன் கேட்டதை குறைவில்லாமல் வாங்கிக் கொண்டான். 

அப்போதும் அவளை விடாதவன் இதழ்களில் முத்தமிட அவளும் மறுக்காமல் அவனுடன் ஒன்றினாள். சற்று நேரம் முத்தங்களும் அணைப்புகளுமாக தனி உலகில் வாழ்ந்தனர். 

நேரம் நிற்கவில்லை, வேகமாக ஓடியது. இரவு இரயிலுக்கு புறப்பட வேண்டுமே, மனமே இல்லாமல் கிளம்பினார்கள். 

இப்போதும் முதல் வகுப்பு பெட்டியில்தான் பயணம். மனைவியை தன் கையணைவுக்குள்ளேயே வெகு நேரம் வைத்திருந்தான் விஷ்வா. அவளுக்கு உறக்கம் வரவும்தான் விடுவித்தான். 

அவள் உறங்க தயாராக, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “இப்படி உனக்காக ஏங்குவேன்னு கனவு கூட கண்டதில்லை, இதெல்லாம் புது ஃபீல் வேதா” என்றான். 

அணைப்பிலிருந்து விலகி ஒற்றைக் கையால் அவனது கன்னத்தை வலிக்க பற்றிக் கொண்டவள், “நல்லா ஃபீல் பண்ணுங்க, நானெல்லாம் வருஷக் கணக்கா ஏங்கி போயிருந்தேன், கொஞ்சமா நீங்களும் ஏங்குங்க” என்றாள். 

சிரித்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு உறங்கச் சொன்னான். இருவரும் அவரவர் இருக்கையில் படுத்துக் கொண்டனர். அவளையே அவன் பார்த்திருக்க, எழுந்தவள் அவனிடம்  சென்று நின்றாள். அவன் கைகளை விரித்துக் காண்பிக்க, கண்டனமாக பார்த்தாலும் அவன் மேலேயே படுத்துக் கொண்டாள். 

இத்தனை நாட்களில் அவனுடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொண்ட போதிலும் அவளாக இப்படி அவனுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டதில்லை. ஏற்கனவே மனதிற்கு பிடித்தவன் என்றாலும் இடையில் நிறைய மனக் கசப்புகள்தான். இந்தப் பயணம் இனிமையாக தொடங்கிய போதும் நடுவே பெரிய சண்டையானது. 

ஆனால் அதற்கடுத்த விஷ்வாவின் செயல்கள் அவன் பக்கமாகவே அவளை பிடித்து இழுத்திருந்தது. அவளுக்குமே அவனை விட்டு சில நாட்கள் தள்ளியிருக்க போகிறோம் என்பது வருத்தத்தை கொடுத்தது. 

ஒற்றைக் கையால் அவளை அணைவாக பிடித்துக்கொண்டவன் இன்னொரு கையால் அவளது கன்னம் காது மடல் கழுத்து என இதமாக வருடினான். அந்த வருடல் அவளுக்கு சுகமா, அவனுக்கு சுகமா என்றால் சரியான பதில் இல்லை. 

“இதெல்லாம் சின்ன புள்ள தனமா இல்லை?”  எனக் கேட்டாள். 

“எப்படி?” என அவன் பேசியதில் அவனது சுவாசக் காற்று கழுத்தோரம் உரசியதில் அவளுக்கு கூசியது. நெளிந்தவளை சற்றே அழுத்தமாக பிடித்துக்கொண்டவன், “விழுந்திடுவ, ஒழுங்கா படு!” என்றான். 

“இது நம்ம பெட் ரூம் இல்லை விஷ்வா, நான் சும்மா வந்து நின்னா, நீங்க என்னை என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள். 

“என்ன செஞ்சேன் நான்?” எனக் கேட்டவன் அவளை இரண்டு கைகளாலும் சுற்றி  நன்றாக அணைத்துக் கொண்டான். அவனது உள்ளம் அமைதியாக இருந்தது. அவளுக்கோ மனம் விம்மியது. 

அவன் உறங்கவும் அவனிடமிருந்து விலகி தனியே படுத்துக் கொண்ட வேதாவும் விரைவில் உறங்கிப் போனாள். 

காலையில் தஞ்சை வந்தடைந்தனர். ‘விஷ்வாவே அழைக்க வருவார், யாரும் வர வேண்டாம்’ என இரவே அப்பாவுக்கு செய்தி அனுப்பி வைத்திருந்தாள். 

நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேறும் சமயம், அகல்யா அவரது கணவர் மற்றும் மகனுடன் பயணப் பொதிகளுடன் வந்து கொண்டிருந்தார். குணாவின் பெற்றோர் கடலூர் அருகே ஒரு கிராமத்தில் இருக்கின்றனர். அவர்களை பார்க்கத்தான் இந்த பயணம். 

“ஏய் வேதா…” என குரல் கொடுத்து அவர்களின் கவனத்தை ஈர்த்தார் அகல்யா.

“அத்தை…” என அழைத்த வேதாவும் அவர்களை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, அவளின் கையோ விஷ்வாவின் பிடிக்குள் இருந்தது. 

அவனை கலக்கமாக பார்த்தவள், “நீங்க இருங்க விஷ்வா, நான் போய் பேசிட்டு டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்” என்றாள். 

“அவங்க உறவு உனக்கு தேவையில்லை, நமக்கு தேவையில்லை வேதா!” என கடினமான தொனியில் சொன்னான் விஷ்வா. 

வருத்த மிகுதியோடு தன் அத்தையை பார்த்தாள் வேதா. அகல்யாவுக்கும் ஏதோ புரிய, வருத்தமான புன்னகையோடு தள்ளியே நின்று கொண்டார். தன் மனைவியை அப்படி பார்த்த குணசேகருக்கு கவலையாகிப் போனது. 

‘சிறு வயதிலிருந்து அன்னைக்கு சமமாக போற்றி வளர்த்தவரை அராஜகம் செய்த ஒருவனுக்காக உதாசீனப் படுத்தி செல்கிறாளா’  என வேதாவை கோவமாக பார்த்தான் சித்தார்த்.  

அவர்களை யாரோ போல கடந்து செல்லும் போது தாள முடியாமல் வேதாவின் கண்கள் கலங்கிப் போயின. நாசூக்காக அவள் கண்களை துடைத்துக் கொண்டாலும் கண்டு கொண்டான் விஷ்வா. 

“இனிமே இப்படித்தான் வேதா, பார்க்கிறப்பலாம் அழுது என்னை இரிடேட் பண்ணுவியா?” எனக் கேட்டான். 

“உங்களுக்கு அவங்க எப்படிங்கிறது வேற, என்னை தூக்கி வளர்த்தவங்க, என் அம்மாகிட்ட சொல்ல முடியாததை கூட அவங்கள்ட்ட ஷேர் பண்ணிருக்கேன், நான் அவங்களோட ரொம்ப க்ளோஸ்” என மூக்குறிந்து கொண்டே சொன்னாள். 

“கட்டின புருஷனை கை விட்டாங்க, பெத்த பையனை மறந்து போனாங்க, அதுவும் அவங்கதான். நீ என்ன பேசினாலும் கெஞ்சினாலும் அவங்க எனக்கு யாருமில்லதான், உனக்கும் அப்படித்தான் இனி” என மிகவும் கறாராக சொன்னான். 

உண்மைகள் தெரிந்தும் இவனிடம் சொல்லாமல் இருக்கிறோமே என அவளுக்கு குற்ற உணர்ச்சியாகவும் அமைதியாகி விட்டாள். 

காரெடுத்து வந்த டிரைவர் சாவியை கொடுத்து சென்று விட்டான். வேதாவின் பிறந்த வீட்டுக்கு காரை செலுத்திக் கொண்டிருந்த விஷ்வா இறுக்கமாகவே இருந்தான். 

இனிமை கெடுகிறது என புரிந்து, “இன்னிக்கு ஃபேக்டரி போவீங்களா? நான் மதியத்துக்கு மேல வரவா?” என பேச்சை ஆரம்பித்தாள் வேதா. 

“இன்னிக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடு, நாளைக்கு உடம்பு பரவாயில்லைனா வா” என சொல்லி அவனும் இலகுவானான். 

“இப்ப என்னை விட்டுட்டு அப்படியே போயிடாதீங்க, ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் வீட்டுக்குள்ள வந்திட்டு போனா அப்பாம்மா சந்தோஷ படுவாங்க” என நயமாக சொன்னாள். 

வாயை குவித்து மூச்சை விட்டவன் சாலையிலேயே பார்வையை வைத்திருந்தான். பதிலும் சொல்லவில்லை. 

அவளுக்கு அயர்வாக இருந்த போதிலும் நல்ல மன நிலையுடனே அவனுக்கு விடை கொடுக்க நினைத்தாள். 

“நீங்களும் ரெஸ்ட் எடுங்க, வேலையெல்லாம் நாளையிலேருந்து பார்த்துக்கலாம்” என்றாள். 

“இல்லைடி நான் போகணும், அவ்ளோ டயர்ட் இல்லை எனக்கு” என்றவன், “தவிர்க்க முடியாத அவசியம்ங்கும் போது உன் வீட்டுக்கு வர்றேன்தானே, விருந்து அன்னிக்கு வரலை? கோவமா கிளம்பி போயும் உனக்காக திரும்ப வரலை? அதனால காரணமே இல்லாம அடிக்கடி கூப்பிடாத, போக போக நான் மாறுவேனோ என்னவோ, இப்ப எனக்கு அங்க கம்ஃபர்டபிளா இல்லை” என்றான். 

அவனது பேச்சை அமைதியாக கேட்டவள் எதுவும் சொல்லவில்லை. 

“அப்புறம் முன்னாடியே சொல்ல நினைச்சிருந்தேன், இனி ஃபேக்டரிக்கு ஸ்கூட்டில வர வேணாம். எனக்கு முன்னாடியே உனக்கு அங்க போகணும்னா வேற கார் டிரைவரோட அனுப்பி வைக்கிறேன், அந்த ஏரியால தனியா ஸ்கூட்டி ஓட்ட கூடாது” என அவள் மறுக்க முடியாத படி சொன்னான். 

இப்படியே அவர்களுக்குள் பேச்சு இயல்பானது. வேதாவின் வீடு வரவும் வழக்கம் போல வீட்டினர் வெளியே வந்து விஷ்வாவை வரவேற்றனர். 

“அவர் சீக்கிரம் கிளம்பணும், இன்னொரு நாள் வருவார்” என சமாளித்தாள் வேதா. 

“அதென்ன இந்த வீட்டு பொண்ணு மட்டும் வேணும், வீட்டுக்குள்ள வர மாட்டேன்னா என்ன அர்த்தம்? நல்லா வந்து போகத்தானே இருந்தார், இப்ப திடீர்னு என்ன வந்துச்சாம் உன் வீட்டுக்காரருக்கு?” என மகளிடம் காரமாக கேட்டார் வாசுகி. 

“அதான் வேலைன்னு சொல்றேன்ல மா?” என்ற வேதா அம்மாவை உள்ளே அழைத்து செல்ல பார்த்தாள். வாசுகி விடுவதாக இல்லை. 

“இப்படியே கொஞ்சம் கொஞ்சமா உன்னை எங்கள்ட்டருந்து பிரிக்க பார்க்கிறாரா? அதுக்கெல்லாம் நாங்க விட மாட்டோம்ன்னு சொல்லி வை” என்ற வாசுகிக்கு நிஜத்தில் அப்படியான பயம் இருந்ததுதான். 

“அந்த மாதிரி வேலையெல்லாம் உங்க வீட்டுக்காரருக்குத்தான் தெரியும், என்கிட்ட பேசும் போது பார்த்து பேசணும் இல்லைனா விளைவு மோசமா இருக்கும்” என்றான் விஷ்வா. 

“அவ தெரியாம பேசிட்டா, நீ சும்மா இரு மாப்ள” என விஷ்வாவுக்கு சமாதானமாக சொன்ன சந்திரன் மனைவியை முறைத்தார். 

“எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு! உங்களை குறை சொல்ற, என்னை மிரட்டுற உங்க மாப்ளய முறைங்க. நான் நியாயத்தைதான் கேட்கிறேன்” என அழுகையும் ஆத்திரமுமாக சொன்னார் வாசுகி. 

“விஷ்வா… நீங்க கிளம்புங்க” என கணவனை காரில் ஏற்றி விட பார்த்தாள் வேதா. 

அம்மாவை ஆதி வீட்டுக்குள் அழைத்துச் செல்ல இழுக்க, “என்னடா எல்லாரும் ஒரேடியா பயந்து போறீங்க, என்ன தப்பு பண்ணினோம் வாயை மூடிக்கிட்டு நிக்க, நம்ம பொண்ணு அங்கு வாழுறாடா, அப்படிலாம் விடக்கூடாது. பேசினா அப்படி என்ன மோசமான விளைவுன்னு கேட்டுட்டு வர்றேன் இரு, இல்லைனா வேதாவை நம்மகிட்டருந்து மொத்தமா பிரிச்சிடுவான்” என்ற வாசுகி மகனின் பிடியிலிருந்து திமிறினார். 

“ஏறுடி கார்ல, ஆடியெல்லாம் வீட்லேருந்தே பார்த்துக்கலாம். நான் பிரிப்பேன்னு சொல்றாங்கல்ல, செய்யாம அந்த பேரை வாங்கிக்கிறது விட செஞ்சிட்டு வாங்கிக்கிறேன். ஏறு!” என்றான் விஷ்வா. 

“அவங்க ஏதோ…” வேதா பேச ஆரம்பிக்க, அவளை கட்டாயப் படுத்தி காருக்குள் ஏற்றியவன் காரின் கதவை அடைத்து விட்டான். அதிர்ந்த வேதா நிதானத்திற்கு வந்து இறங்க பார்ப்பதற்குள் காரில் அவனும் ஏறி விட்டான். 

சந்திரன் சமாதானம் செய்ய நினைத்தாலும் அவரால் முடியவில்லை. அவர் வாயை திறப்பதற்குள்தான் காரை எடுத்திருந்தானே விஷ்வா. 

கோவத்திலிருந்த விஷ்வா முழுதாக நிதானம் இழந்திருந்தான். காரை நிறுத்த சொன்ன வேதாவை அலட்சியம் செய்து காரின் வேகத்தை கூட்டியிருந்தான்.