நீயென் நாயகி -13

அத்தியாயம் -13

முதல் நாள் இரவே கசப்புகள் மறைந்து போயிருக்க, கணவனுடன் வெளியில் கிளம்புகிறோம் என்ற உற்சாகத்தோடு தயாரானாள் வேதா. நேற்று பெரிதாக வெளியில் சுற்றவில்லை, அருகிலுள்ள மால் ஒன்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து விட்டு திரும்பியிருந்தனர். 

அடர் ஊதா நிறத்தில் முட்டியை தாண்டியிருந்த கையில்லாத கவுன் அணிந்திருந்தாள். வெண்மை நிறத்தில் கோட் எடுத்து அணிந்து கொண்டே “எங்க போக போறோம்ங்க?” என ஆசையாக கேட்டாள். 

அவளது அழகை நிதானமாக ரசித்துக் கொண்டே, “எந்த பிளானும் இல்லை, நானும் நீயும் பார்க்காத இடம் இங்க இருக்குமான்னும் எனக்கு தெரியலை, காரை ஸ்டார்ட் பண்ணுவோம் எங்க போறதுன்னு டிராவல் தீர்மானிக்கும்” என்றான் விஷ்வ. அவளும் மறுக்கவில்லை. 

கிழக்கு கடற்கரை சாலை  நோக்கித்தான் கார் சென்றது. வழியில்தான் காலை உணவை முடித்தனர். இடையில் ரூபனை பற்றிய பேச்சை எடுத்தாள். 

“அவனை பத்தின டிஸ்கஸன் இப்ப தேவையா வேதா?” என சலிப்பாக கேட்டான். 

“உறுத்தலா இருக்குங்க, மறைச்சுகிட்டு நடிக்க சொல்றீங்களா? வெளில சொன்னாதானே நான் ரிலாக்ஸ் ஆக முடியும்?” என அவள் கேட்க, அவள் பேசட்டும், நீ வாயே திறக்காமல் கேட்டுக் கொள் என தனக்குள் கட்டளை விதித்துக் கொண்டு அமைதியானான். 

“வேற யாரும்னா இதை ஈஸியா எடுத்திட்டு இருந்திருப்பாங்க, இவன் ரொம்ப சென்சிடிவ், ஸ்வப்னாக்கு அவன் நிலைமை என்னன்னு தெரியலை, அவன் ஃபிரெண்ட்ஸ்கிட்ட கேட்கலாம்னா அவனுங்க பெரிய அப்பாடக்கர் மாதிரி பேசுவானுங்க, நெக்ஸ்ட் வீக் நேர்ல போய் அவனை பார்க்கிறதா ஸ்வப்னா சொல்லிருக்கா” என்றாள். 

அவன் எதிர்வினை ஆற்றாமல் போகவும், “என்னங்க உங்கள்ட்டதான் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள். 

“ம்ம்… பிஃப்டீன் கிலோ மீட்டர்ஸ்ல முட்டுக்காடு வந்திடும், போலாமா, உனக்கு ஓகேதானே?” எனக் கேட்டான். 

“போட்டிங் போறோமா? எனக்கு தலை சுத்தல் வந்தா?”

அவள் பக்கம் திரும்பி, “முந்தாநேத்து மாதிரி ஏதும் பண்ணுதா?” என அக்கறையாக கேட்டான். 

“இல்லை, ஏதாவது செய்யுமோன்னு எனக்குத்தான் பயம்”

“அப்படிலாம் ஆகாது, நீ என்ஜாய் பண்ணுவேன்னுதான் நினைக்கிறேன்” என அவன் சொல்லவும் சரியென  சொல்லி விட்டாள். 

வழியில் உயர்தர விடுதி ஒன்றில் நிறுத்தி அங்கேயே ஓய்வறை உபயோகித்துக் கொள்ளும் படி சொன்னான். அவனும் உடன் வந்து சற்று தள்ளி நின்று கொண்டான். எதையும் கவனம் ஈர்க்க என்றில்லாமல், கணவனாக பொறுப்பாக, இயல்பாக செய்தான். 

முட்டுக்காட்டில் ஸ்கூட்டர் போட்டில் பயண அனுபவம் இதுதான் வேதாவுக்கு முதல் முறை. நீரில் சீறிப் பாய்ந்து சென்ற படகு தண்ணீரை வாரி இறைத்தது. தனக்கு முன்னால் அமர்ந்திருந்த விஷ்வாவை கட்டிக் கொண்ட வேதா அந்த நேரத்தை மிகவும் ரசித்தாள். 

ஒரு முறை பயணித்த பின் அவள் ஆசைப் பட்டாள் என இன்னொரு முறையும் அழைத்து சென்றான். 

அங்கிருந்து புறப்படும் போது மதியத்திற்கு மேலாகி விட்டது. மதிய உணவும் வெளியில்தான். 

சண்டைகள் மனஸ்தாபங்கள் ஏதுமில்லாத இனிய பயணமாகவே அது அமைந்தது. சென்னைக்குள் நுழையும் போது மாலையாகி விட்டது. எந்த வழியில் போகிறோம் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. 

புதிதாக ஒரு இடத்தில் கார் நிற்கவும், “இங்க என்ன இருக்கு, ஓட்டல் போகலையா நாம?” என விசாரித்தாள். 

“ரூபன் இங்கதான் தங்கியிருக்கான், வா பார்த்திட்டு வரலாம்” என அவன் சொல்ல, என்ன என திகைத்து விட்டாள். 

“நீதானே அவனை நினைச்சு டிஸ்டர்ப் ஆகுதுன்னு சொன்ன? அடுத்த வாரம் உன் ஃபிரெண்ட் பார்த்திட்டு வந்து அவனை பத்தி சொல்ற வரை அப்படியே இருப்பியா? வீட்லதான் இருக்கான் இப்போ, வா வா” என்றான். 

“இப்ப நம்மள நேர்ல பார்த்தா அவனுக்கு எப்படி இருக்குமோ விஷ்வா, சரியா வராது, எனக்கும் என்ன பேசுறதுனு தெரியலை” என சொல்லி காரிலிருந்து இறங்க மறுத்தாள். 

“ஸீ… நீதான் ஃபீல் பண்ணின, உன் காலேஜ், அவன் நேம் இதை வச்சு ஒரே நாள்ல அவன் இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணியிருக்கான் என் ஃபிரெண்ட், பார்க்காம போனா என் கழுத்துலேயே மிதிச்சிடுவான், ஒழுங்கா வா” என கட்டாயப் படுத்தி அவளை அழைத்து சென்றான். 

ஆனால் ரூபனுடனான சந்திப்பு யாருக்கும் எத்தகைய சங்கடத்தையும் உண்டாக்கவில்லை.

வேதாவுக்கும், கணவனுடன் வந்திருந்தவளை எப்படி எதிர் கொள்வது என தெரியாத ரூபனுக்கும் எவ்வாறு உரையாடலை துவங்குவது என்றே தெரியவில்லை. 

“ஸாரி ரூபன்…” என விஷ்வாதான் பேச்சை ஆரம்பித்தான். பின் வேதாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். 

பதறிப் போன ரூபன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை சொன்னான். 

 மணமான பெண்ணுக்கு அவளது கணவனின் முன்னிலையில் ப்ரொபோஸ் செய்து விட்டோமோ என்ற எண்ணம் ரூபனையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்க, இந்த சந்திப்பு அவனுக்கு ஏற்பட்ட மன பாரத்திலிருந்து விடுதலை தந்திருப்பதாக அவனே அவனது வாயால் சொன்னான். 

அவனுடன் பேசிய பிறகு விஷ்வாவுக்கும் அவனை பிடித்திருந்தது. இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா என நினைக்காமல் இருக்க முடியவில்லை. தன் மனைவி இவனுக்காக ஏன் இத்தனை கவலை கொண்டாள் என்பதையும் புரிந்து கொண்டான். 

வேதாவை பற்றி நிறைய கவலை பட்டிருக்கிறான் ரூபன் என்பதை அவன் பேசியதை வைத்தே விஷ்வாவால் உணர முடிந்தது.

ரூபன் தேநீர் தயாரிக்க சென்றிருந்த நேரம், ரூபனின் மனவோட்டத்தை சொன்ன விஷ்வா, “என் கூட நீ நல்லாருக்கேன்னு உன் வாயால நீ சொன்னா அவனுக்கு சமாதானமா இருக்கலாம். அவன் வரட்டும், நான் பால்கனிக்கு போறேன், நீ பேசு” என்றான். 

“தனியாவா! எதுக்கு? ரூமுக்கு போனதும் ஏதாவது சொல்லி என்னை ஹர்ட் பண்ணவா?” என மனதில் உள்ளதை சொல்லியே விட்டாள். 

“ஏய் என்ன நீ… நான் சந்தேக பிராணி மாதிரி பேசிட்டு இருக்க? நீ ஏன் சைலன்ட்டா நின்னேன்னு எக்ஸ்பிளைன் பண்ணினதும் அதை விட்டுட்டேன், பேசினதுக்கு ஸாரியும் கேட்டுட்டேன். இப்ப நீ பேசுறதுக்கு நான்தான் உன் மேல கோவ படணும்” என்றான். 

“நீங்க இப்படி சொல்றத நம்ப முடியலை, எதுக்கும் நீங்க கூட இருக்கும் போதே நான் பேசுறேன்” என தீர்மானமாக சொன்னாள்.

அவளது முடியை ஒதுக்கி விட்டவன், “அவனை என்னால புரிஞ்சுக்க முடியுது வேதா, எனக்கும் அவனை பார்த்தா பாவமா இருக்கு, நீ பேசுடி” என நிதானமாக சொன்னான். 

ரூபன் தேநீர் எடுத்துக் கொண்டு வரவும் அவர்கள் மௌனமாகி விட்டனர். ரூபனின் வேலை, குடும்பம் என பொதுவாக பேசிய விஷ்வா, தேநீர் காலியாகவும் முக்கியமான அழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது என சொல்லி பால்கனி பக்கம் போய் விட்டான். 

விஷ்வா எனக்கு அத்தை பையன்தான், குடும்பத் தகராறில் கோவத்தில் அப்படி செய்து விட்டார், ஆனால் நான் அவரை பல வருடங்களாக விரும்பினேன், பின் பெரியவர்கள் சமாதானம் செய்து எளிமையாக எங்கள் திருமணம் முடிந்து விட்டது என ரூபனுக்கு விளக்கம் சொன்னாள் வேதா. 

“உன்னை நினைச்சு நிறைய நாள் தூங்கவே இல்லை வேதா. நீ ஹேப்பியா இருந்தா எனக்கும் சந்தோசம்!” என கண்கள் கலங்க சொன்னவனை கண்டு அவளுக்கு உருகிப் போனது. 

“நீ நல்லா இருப்ப ரூபன், என் கூட எப்பவும் டச்ல இரு, அடுத்த முறை ஃபிரெண்ட்ஸ் மட்டும் இல்லாம நாம நம்ம ஃபேமிலிஸோட  மீட் பண்ணுவோம், உன் வைஃபை எனக்கு அப்போ காட்டணும்” என அவள் சொல்ல, அவனும் சம்மதம் என்பது போல சிரித்தான். 

ரூபனுடன் தனிமையில் பேசிய பின்னர்தான் தன் கணவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான் என்பதை வேதாவும் புரிந்து கொண்டாள். 

அங்கிருந்து புறப்படும் போது வேதாவுக்கு அப்படியொரு நிம்மதியாக இருந்தது. 

“இவ்ளோ மெச்சூர்டா நடந்துப்பீங்கன்னு எதிர் பார்க்கவே இல்லை நான்” என கணவனை மனம் விட்டு பாராட்டினாள். 

“ஆஹ்… அதெல்லாம் ஒன்னுமில்ல, நிஜத்தை சொல்லணுமா ரூபனை பார்க்க வர்ற பிளான் உனக்காகத்தான். ஆனா எனக்கு இஷ்டம் இல்லை, கடுப்பா கூட இருந்தது. அவனை மீட் பண்ணவும் நானும் மாறிப் போயிட்டேன்” என அவன் சொன்னதை கேட்டு சின்னதாக சிரித்தாள். 

“என்ன ஜோக் சொன்னேன்னு இப்ப சிரிக்கிற?” எனக் கேட்டான். 

“ஆமாம் நான் மெச்சூர்ட், பரந்த மனப்பான்மை உள்ளவன் அப்படி என்கிட்ட ஸீன் போட்ருக்கலாம், சான்ஸ் விட்டுட்டீங்களேன்னு சிரிச்சேன்”