Neeyen Naayagi 1 12614 நீயென் நாயகி -1 அத்தியாயம் -1 தஞ்சையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபம் மக்கள் திரளால் நிறைந்து போயிருந்தது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தரான சண்முகநாதனின் பேரன் விஸ்வசுகந்தனின் திருமணம் என்றால் சும்மாவா? விஷ்வாவுக்கும் அவனது மாமன் மகள் வேதநாயகிக்கும் திருமணம் செய்யலாம் என பெரியவர்களால் பேசி முடிக்கப் பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே தேதியும் குறிக்கப் பட்டிருந்தது. ஆனால் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது விஷேஷம். தஞ்சைக்கு பக்கத்தில் இருக்கும் பெரிய ஊரின் மிராசுதாரர் சண்முகநாதன். அங்கே மட்டுமின்றி அக்கம் பக்கத்து ஊர்களிலும் அவரை அறியாதவர்கள் என யாருமே இல்லை. பரம்பரை பணக்காரர், அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது, தொழில்களில் எல்லாம் கோலோச்சும் செல்வாக்கான தொழிலதிபர், அப்பேர்பட்டவருடைய ஒரே வாரிசுதான் விஷ்வா. தேர் போல அலங்கரிக்கப் பட்ட சாரட் வண்டியில் வெண்ணிற புரவிகளை பூட்டி அதை செலுத்திக் கொண்டிருந்தான் வேதாவின் அண்ணன் ஆதிரன். அதில் சிம்மாசனம் போல அமைக்கப் பட்டிருந்த இருக்கையில் அரசன் போல அமர்ந்திருந்தான் விஷ்வா. வான வேடிக்கையும் செண்டை மேளமுமாக மாப்பிள்ளை ஊர்வலம் அமர்க்கள பட்டது. வேதாவின் மாமன் மகள் தனக்கு வந்திருந்த அந்த காணொளியை அவளுக்கு காண்பித்தாள். மணப் பெண்ணுக்குரிய அலங்காரத்தில் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மலர்ச்சியோடு இருந்த வேதா, தன் மனம் கொண்ட நாயகனை ஆசையாக பார்த்தாள். வசீகரிக்கும் தோற்றத்தில் மாப்பிள்ளைக்கான கம்பீரம் களை கட்ட வீற்றிருந்த விஷ்வாவை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள். சொந்த அத்தை மகன்தான் என்ற போதும் இவனுடன் பழகியதே இல்லை வேதா. அத்தை அகல்யாதான் வாய் ஓயாமல் தன் மகனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். வேதா பிறந்த போது அவளை முதன்முதலில் கைகளில் ஏந்தியது அகல்யாதான், அண்ணன் மகளை தனக்கு மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என அவருக்குதான் மிகுந்த ஆசை. வேதாவிடம் நேரடியாக சொல்லிக் கொள்ளா விட்டாலும் அவர் தன் அண்ணன் அண்ணியிடம் இது குறித்து அடிக்கடி அழுத்தி சொல்லியிருக்கிறார், அப்படி சில முறை வேதாவின் காதிலும் இந்தப் பேச்சு விழுந்திருக்கிறது. தன் பெற்றோர் அத்தையின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாத போதே அவர்களுக்கும் இதில் விருப்பம் என்பதை புரிந்து கொண்டாள் வேதா. அத்தையின் முற்று பெறாத மகன் புராணத்தால் அவனை பார்க்க வேண்டும் என அவளுக்கு ஆர்வம் பிறந்தது. அகல்யாவே ஒருநாள் தன் மகனின் புகைப்பட ஆல்பத்தை அவளுக்கு காண்பித்தார். விஷ்வா பிறந்தது முதல் இப்போது வளர்ந்து வாலிபனாக நிற்பது வரை வகை வகையாக புகைப்படங்கள் இருந்தன. அத்தைக்கு தெரியாமல் நிறைய புகைப்படங்களை தன் கைப்பேசி வழி சேமித்து வைத்துக் கொண்டாள் வேதா. தோழிகளுக்குள் காதல், கல்யாணம் என்ற பேச்சுக்கள் எழுகையில் தானாக விஷ்வாவின் உருவம் அவளது மனக் கண்ணில் நிழலாடத் துவங்கியது. அன்றாட வழிபாட்டில் தன் கணவனாக விஷ்வா வர வேண்டும் என பிரார்த்தனை செய்தாள். வேதா அறிவும் அழகும் வாய்ந்த பெண். இள வட்டங்களை பற்றி சொல்லவா வேண்டும்? ஆனால் தன் மனதை வேறு யாருக்கும் கொடுத்து விடாமல் விஷ்வாவை எண்ணியே காத்திருந்தாள். இதோ இன்று திருமணம் வரை வந்தாகி விட்டது. “உனக்கு சம்மதமா?” என அம்மா கேட்ட போது அவரை கட்டியணைத்துக் கொண்டு சம்மதத்தை தெரிவித்தவள். அப்போது வரை விஷ்வாவிடம் இதுபற்றி பேசப்பட்டிருக்கவில்லை. மகள் இப்படி ஆசையில் இருக்க எங்கே அவன் மறுத்து விடுவானோ என்று வேதாவின் அம்மாவுக்கு ஒரே கலவரம். அகல்யாவிடம் பகிர்ந்தவர், “சின்ன பொண்ணு மனசுல நீங்கதான் ஆசையை இப்படி வளர்த்து விட்ருக்கீங்க, உங்க பையன் சம்மதிக்காட்டா?” என தன் பயத்தையும் சொன்னார். அன்றே தன் மாமனாரை சந்திக்க சென்று விட்டார் அகல்யா. சண்முகநாதனுக்கும் பேரனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தது. சில வருடங்கள் முன்பே என் அண்ணன் மகளைதான் அவனுக்கு கட்டி வைக்க வேண்டும் என அகல்யாவும் அவரிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். சண்முகநாதன் என்றுமே மருமகளிடம் எதிர்த்து நின்றதில்லை, ‘உன் ஆசை இப்படி இருக்கு, அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்’ என்றே சொல்லி வைத்திருந்தார். இப்போதும் அதையே சொன்னார். வேதாவின் புகைப்படத்தை விஷ்வாவிடம் காட்டி விவரம் சொன்னார் பெரியவர். அம்மா வழி சொந்தம் என்பதிலேயே முரண்டு பிடிப்பான், மறுப்பான், தான் எடுத்து சொன்னால் கூட உடனே ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதாகத்தான் இருந்தது பெரியவரின் கணிப்பு. அவரின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி, “அழகா இருக்கா, பிடிச்சிருக்கு தாத்தா, சீக்கிரம் டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க” என சொல்லி விட்டான் விஷ்வா. பெண்ணின் அழகில் பேரன் விழுந்து விட்டான் என நினைத்து மகிழ்ந்தார் சண்முகநாதன். இருவரது ஜாதகத்தையும் தான் நம்பும் ஜோதிடரிடம் காண்பித்தார் பெரியவர். தனது ஒரே பேரனின் வாழ்க்கையில் எவ்வித சிக்கலும் வந்து விடக்கூடாது, தன் வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கும் விஷ்வாவின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்ற பேரவா அவருக்கு. ஜாதக பொருத்தம் நன்றாக இருப்பதாக சொன்ன ஜோதிடர், திருமணத்தை மட்டும் தள்ளிப் போட வேண்டாம் என சொன்னார். இப்போது நடக்கா விட்டால் அவன் வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் வந்து சேருமாம். “அவன் ஆயுசு கெட்டிதானே?” பதட்டமாக கேட்டார் பெரியவர். “நிறைஞ்ச ஆயுளோட இருப்பார், என்ன… ரெண்டு தாலி கட்டுற யோகம் இருக்கு, அதொன்னுமில்ல, கல்யாணம் அன்னிக்கு வாழை மரத்துக்கு தாலி கட்டிட்டு அப்புறம் பொண்ணு கழுத்துல கட்டினா போச்சு” என்றார் ஜோதிடர். இருவரின் பொருத்தம் பற்றி இன்னொரு முறை கேட்டு ஜோதிடரின் நேர்மறையான பதிலில் திருப்தி அடைந்த பெரியவர் இரட்டைத் தாலி பற்றியெல்லாம் யாருக்கும் சொல்லவில்லை. திருமணத்தன்று ரகசியமாக அந்த சாங்கியத்தை செய்து விட முடிவு செய்தார். திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்பதை மட்டும் ஜோதிடர் சொன்னதாக சொல்லி நாளை சீக்கிரத்தில் குறித்து விட்டார். கல்யாணம் உறுதியான பின்னர்தான் விஷ்வாவுடன் பேச ஆரம்பித்தாள் வேதா. அகல்யாதான் மாமனாரிடம் சொல்லி மகனை மருமகளிடம் பேச வைத்தார். கல கலப்பாக பேச மாட்டான் என்றாலும் கணீர் என்ற குரலில் அழுத்தமும் பிடிவாதமுமாகத்தான் இருக்கும் அவனது பேச்சு. அத்தையிடம் கேட்டதற்கு அவன் இயல்பாகவே அப்படித்தான் பேசுவான் என அவளிடம் சொல்லியிருந்தார். குடும்பத் தொழில்கள் அனைத்தையும் அவன்தான் பார்க்கிறான் என்பதால் எப்போதுமே பிஸி என வீட்டில் உள்ளவர்கள் சொல்லியிருந்தார்கள். அவன் வீட்டுக்கு வரும் நேரத்தை கணித்து ‘பேசலாமா?’ என செய்தி அனுப்பி வைப்பாள் வேதா, பின்னர்தான் அவன் அழைப்பான். இவளை மனம் விட்டு பேச விடாமல் அதிகாரம் செலுத்துவான். அவள் தன் எதிர்பார்ப்புகளை அவனிடம் சொல்வாள். அவன் அவற்றை சட்டை செய்யாதது போலவே இருக்கும் அவளுக்கு. அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு வாரத்தில் வேதா மிகவும் பயந்து விட்டாள். பெற்றோரிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என எண்ணியவளுக்கு அண்ணனிடம் சொல்லவும் தயக்கமாக இருக்க, தன் நண்பன் சித்தார்த்திடம் என்ன செய்யலாம் என ஆலோசித்தாள். சித்தார்த்துக்கு விஷ்வா பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது, சொல்ல போனால் இந்த திருமணத்தில் அவனுக்கு துளியும் விருப்பமும் கிடையாது. ஆகவே விஷ்வா உனக்கு வேண்டாம் என்றான். அவன் அப்படி சொன்ன வேகத்திற்கு வேதாவுக்கு கோவம் வந்து விட்டது. “நீ இதை சொல்றதுக்காக உன்கிட்ட ஷேர் பண்ணல சித்து, அவர் குணம் இப்படி இருக்கு, அவர் வளர்ந்த சூழ்நிலை காரணமா இருக்கலாம், ஆனா கெட்டவர் ஒன்னும் கிடையாது” “அதெப்படி உனக்கு தெரியும்? காலம் காலமா பழகியிருக்கியா அவனோட?” “அவர் அம்மாவை எனக்கு தெரியும், அத்தை பையன் நல்லவனாதானே இருக்கணும்? எங்கே இல்லைனு சொல்லு” என நமட்டு சிரிப்புடன் கேட்டாள். முறைத்த சித்தார்த், “அப்புறம் அவனை பத்தி என்கிட்ட எதுக்கு சொல்ற?” என கேள்வி கேட்டான். “அவர் குணத்தை இப்பவே சரி செய்யணும்னு நினைக்கிறேன், அதுக்கு யோசனை கேட்டா அவரை வேணாம்னு சொல்லுவியா? நான் அவரை மீட் பண்ணி பேசி பார்க்கவா?” எனக் கேட்டாள். “அவனை லவ் பண்றியா என்ன?” கடுப்பாக கேட்டான் சித்தார்த். “எதுக்கு எரிச்சல் படுற? ஆமாம் அவரை எனக்கு பிடிச்சிருக்கு” என அவள் சொல்லவும் அவன் முகம் கோணலாகி விட்டது. அவனை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை அதோகதிதான், யோசித்து முடிவெடு என அறிவுறுத்தியவன் ஆதிரனிடம் போய் நின்றான். விஷ்வாவை பற்றி கொஞ்சம் கூட்டி குறைத்து சொல்லி, நீங்களே குடும்பமாக சேர்ந்து வேதாவின் வாழ்க்கையை நாசம் செய்ய போகிறீர்களா? எனக் கேட்டு அவனை உசுப்பேற்றி விட்டான். ஆதிரனும் இது சரியாக வருமா, மறு பரிசீலனை செய்யலாமா எனக் கேட்டு பெற்றோரிடம் நின்றான். இந்தப் பேச்சுக்கள் சண்முகநாதன் வரை சென்று விட்டது. அவர் பேரனை அழைத்து என்ன பேசினாரோ, அன்று மாலையே வேதாவை பார்க்க வீட்டுக்கு வந்து விட்டான் விஷ்வா. வீடு பர பரப்படைந்து விட்டது. அதிகம் இவர்களிடம் பேசி பழகியதில்லை என்ற போதும் அவனை இவர்களுக்கு நன்றாக தெரியும். வெளிநாட்டில் படிப்பை முடித்து தாத்தாவுக்கு தப்பாத பேரன் என பெயரெடுத்து ஊரில் அவனுக்கென்ற தனி அடையாளத்தோடு வளர்ந்து நிற்பவன். சண்முகநாதனுக்காவது மற்றவர்களிடம் பழகும் போது நெளிவு சுழிவுகள் இருக்கும், முக தாட்சண்யம் பார்ப்பார், விட்டுக் கொடுத்தும் போவார். ஆனால் இவன் அப்படியில்லை, அடுத்தவரிடம் சிரித்தால் கூட அதில் ஏதாவது காரியம் இருந்தால்தான், ஒருவரை தேவையில்லை என முடிவு கட்டி விட்டால் வைத்தேனா பார் என நிற்பான். ஆனால் யாருக்கும் தன் மனதில் இடம் தந்து விட்டால் அள்ளி அள்ளி கொடுப்பான். அந்த ஒரே குணத்தின் அடிப்படையில், மனைவியை சீரும் சிறப்புமாக வாழ வைப்பான் என்ற நம்பிக்கை கொண்டே மகளை இவனுக்கு தர சம்மதித்திருந்தார் வேதாவின் அம்மா. வேதாவின் அப்பாவுகோ தங்கையின் மகன் என்ற பாசம், அதைவிட தங்கையின் ஆசையை தனதாக்கிக் கொண்டார். வருங்கால மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என மாமாவிடம் உரிமையாக கேட்டு அனுமதி பெற்று வேதாவை தோட்டத்து பக்கம் அழைத்து சென்றான் விஷ்வா. “எப்படி இப்படி பேச்சு வருது, நீ என்ன சொன்ன?” என அவளை குற்றம் சொல்வது போலவே பேச்சை ஆரம்பித்தான்.