Advertisement

அத்தியாயம் ஒன்பது:

“நீங்க யாரு? என்ன நடக்குது இங்கே?”, என்ற ராஜியின் கேள்விக்கு ஒரு நொடியே தயங்கினான் ஆகாஷ். அடுத்த நொடியே………. “உங்க அப்பா சொல்வார் ராஜி…… அவர் சொன்னதுக்கு அப்புறம் நீ என்கிட்ட கட்டாயம் பேசணும் ப்ளீஸ்……. நீ என்ன மாதிரி நினைச்சாலும் என்கிட்ட பேசணும்”,

“நீ பேசறது அவர் செய்கையை நான் நியாயப்படுத்தனும் அப்படின்றதுக்காக கண்டிப்பா கிடையாது. என்னோட செய்கைக்கு ஒரு விளக்கம் கண்டிப்பா குடுக்கணும். நீ என்னை கண்டிப்பா புரிஞ்சிக்குவேன்னு நம்பறேன் ப்ளீஸ்”, என்றான்.

“என்னால உங்க அம்மா கிட்டயும் நேரடியா பேச முடியாது……. உன்னோட துணை இருந்தா அவங்ககிட்ட பேச எனக்கு ஈஸியா இருக்கும்………. ப்ளீஸ்”, என்றான் மறுபடியும். 

எதற்கு அவன் இத்தனை ப்ளீஸ் போடுகிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை………. என் அம்மாவிடம் என் மூலமாக இவன் பேச வேண்டிய விஷயம் என்னவென்றும் புரியவில்லை.

“உங்கப்பா உன்கிட்ட சொல்லுவாரா இல்லை உங்கம்மா கிட்ட சொல்லுவாரா எனக்கு தெரியலை……… ஆனா ஏதோ ஒரு வகையில உனக்கு விஷயம் தெரிய வரும். நானும் மறுபடியும் வீட்ல பேசிட்டு இன்னும் ரெண்டு நாள்ல கண்டிப்பா வருவேன்”,

“ப்ளீஸ்……… விஷயம் தெரிஞ்சதும் என்கிட்ட பேசாம மட்டும் விட்டுடாத…… நடக்கறதை விளக்க எனக்கொரு சந்தர்ப்பம் கொடு. நடக்கறது சரின்னு நான் எப்பவும் சொல்ல மாட்டேன்……… என்னையும் மீறி சில விஷயங்கள் நடந்துடுச்சு……. இப்போ அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கேன்”, என்றான்.

இவன் எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறான் என்று சத்தியமாக ராஜிக்கு புரியவில்லை. ஏதோ பெரிதாக வரப்போகிறது என்று அவளின் மனதிற்கு நன்கு புரிந்தது.

கலக்கமாக இருந்தது………

அவளிடம் பேசிய பிறகு போனை வைத்த ஆகாஷ் சென்னை நோக்கி வேகமெடுத்தான். அண்ணாமலையிடம் ராஜி பற்றி செந்தில் வெளியே பேசி வருவதை  அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

இப்போது சொன்னால் அவர் அவரின் மனைவியிடமும் மகளிடமும் முக்கியமாக பேச வேண்டிய  விஷயம் தள்ளி போய்விடும் என்பதால்……. அவர் முதலில் அதை அவர்களிடம் சொல்லட்டும்………. பிறகு தான் செந்திலின் விஷயத்தை பற்றி கூறலாம்”, என்று விட்டு விட்டான்.     

தன் தந்தையிடம் சென்று போனை திரும்ப கொடுத்த ராஜி அவரிடம் எதுவும் கேட்கவில்லை வருவது வரும்போது வரட்டும் என்று விட்டுவிட்டாள்……..

ஆகாஷ் பேசியதை எல்லாம் கேட்ட பிறகு மனதுக்கு ஒரு மாதிரி இருக்க……… போய் படுத்துக்கொண்டாள். இந்த மாதிரி மன உளைச்சல்கள் எல்லாம் அவளுக்கு புதிது. எந்த கவலையும் எப்போதும் அவளின் பெற்றோர் அவளுக்கு வரவிட்டதில்லை. 

“சாப்ட்டு படு பாப்பா”, என்ற அவளின் அம்மாவிடம்……….

“இல்லைமா கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து சாப்பிடறேன்”, என்றவள் தூங்கியும் விட்டாள்.

மகள் அவளின் அறையில் அமைதியாக தூங்குவதை பார்த்த அண்ணாமலை தன் மனைவியிடம் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவரால் தன்னுடைய பெண்ணை வைத்துக்கொண்டு இந்த விஷயத்தை மனைவியிடம் பேசமுடியும் என்று தோன்றவில்லை.

அண்ணாமலைக்கு தேவிகா உணவு பரிமாறினார். “நீயும் உட்கார்ந்து சாப்பிடு தேவி”, என்றார் அண்ணாமலை.

“நீங்க சாப்பிடுங்க…….. நான் ராஜி எழுந்த பிறகு சாப்பிட்டுக்குறேன்”.

“அவ என்னைக்காவது படுத்து கொஞ்ச நேரத்துல எழுந்து இருக்காளா…… எப்படியும் மூணு மணி நேரத்துக்கு முன்ன முழிக்க மாட்டா………….. பேசாம நீ சாப்பிடு…….. நான் உன்கிட்ட பேசணும்”, என்றார்.

“என்ன விஷயங்க”,

“சாப்பிடு பேசலாம்”,  

இருவரும் சாப்பிட்டு முடிக்க……….. அண்ணாமலை ரூமிற்குள் புகுந்து கொண்டார்.

ஏதோ ஆகாஷ் பற்றி தான் பேச போகிறார் என்று நினைத்த தேவிகா அவரின் பின்னாலேயே அவரை தொடர்ந்து சென்றார்.

அண்ணாமலை எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து…. “என்னங்க ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க”,

“தேவி! நான் உன்கிட்ட ஒருவிஷயம் சொல்ல போறேன்……. பொறுமையா கேட்கணும். அவசரப்படக்கூடாது………… பொறுமையா யோசிச்சு சொல்லனும்”, என்றார்…..

“என்னங்க விஷயம்”, என்றார் கவலையாக தேவி. 

அண்ணாமலை எதுவும் பேசாமல் மெளனமாக இருக்க………..  

“என்னங்க நமக்கு ஏதாவது ப்ரச்சனையா……… உங்களால சமாளிக்க முடியலையா……. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் சொல்லுங்க”,

தனக்கு ஏதாவது பிரச்சனையோ என்ற தேவிகாவின் கவலை அண்ணாமலைக்கு குற்ற உணர்வை அதிகப்படுத்தியது. “தேவி! கொஞ்சம் நான் என்ன தான் சொல்றேன்னு கேளேன்”, என்று அதட்டினார்.

“அப்புறம் எதுக்கு இவ்வளவு கவலையோட தடுமாறீங்க”,

“ப்ச்! நான் சொல்றதை கேளு”,

“என்ன?”, என்பது போல தேவிகா பார்க்க…….

“நான் ஒரு பொண்ணை பத்தி சொல்லப்போறேன்”,  

“பொண்ணு விஷயமா!”, புரியாத கவலை மனதை அழுத்தியது.

தேவிகா தன் கணவரின் முகத்தையே பார்க்க அண்ணாமலை அவரின் பார்வையை தவிர்த்தார். வேறெங்கோ பார்த்தபடி பேசினார்………..  

“அது எனக்கும் ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு”, என்று ஒரு வழியாக விஷயத்தை உடைத்தே விட்டார்.

முகம் இருண்ட தேவிகா……… உடனேயே முகம் தெளிந்து………. “ஏங்க! பொய் தானே சொல்றிங்க!”, என்றார். உடனேயே அவர் கூறிய விதத்திலேயே தன் கணவர் கூறியது பொய் என்று வந்துவிடவேண்டும் என்ற மித மிஞ்சிய ஆவல் இருந்தது.

அவருக்கு தெரியும் தன்னுடைய உடல்நிலை காரணமாக சில வருடங்களாக அவரால் தன் கணவருக்கு சரியான ஒத்துழைப்பை கொடுக்க முடியாத நிலையில் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு ஞாபகம் வந்தது.

“நீங்க வேற வழில உங்களுடைய ஆசைகளை நிறைவேத்துறதுன்னா நிறைவேத்திக்கலாம்”, என்று தேவிக்காவே சம்மதம் கொடுத்தவர் தான்.

“நீ என்ன சொல்றன்னு புரியலை”, என்று புரிந்தும் புரியாமல் கோபப்பட்ட கணவரிடம்……..

“இல்லை! அதுக்குன்னு இருக்குற பொண்ணுங்க ஏதாவது தற்காலிகமான வடிகால்……”, என்று தேவிகா ஆரம்பித்த போதே……….

“சீ! சீ! வாயை மூடு!”, என்று அவரை அதட்டி………… “ஏன் உன் எண்ணம் இவ்வளவு அசிங்கமா போகுது?”, என்று தேவிக்காவை சாடியவர் தான் அவர்.  

அந்த சமயத்தில் தன் இளமைக்கு வடிகாலாக கூட வேறொரு பெண்ணுடனான உறவை உறுதியாக……. மிகவும் உறுதியாக…….. மறுத்தவர் தான் அண்ணாமலை.

“எனக்கு இந்த மாதிரி தொந்தரவு ஏதாவது இருந்ததுன்னா என்னை விட்டுட்டு போயிடுவியா நீ”,

“என்ன பேசறீங்க நீங்க”, என்று தேவிகா பொங்கி எழுந்த போது………

“அப்போ ஆணுக்கு ஒரு நியாயம்………. பெண்ணுக்கு ஒரு நியாயமா……….. எப்படி இருந்தாலும் நீதான் என் மனைவி……….. இனிமே இப்படி எல்லாம் பேசாத”,  என்று அடக்கியவர்.

அதனால் தான் இன்று தன் கணவர் தன்னை சீண்டுவதற்காக கேட்கிறார் என்று நினைத்தது அந்த பேதை நெஞ்சம்.   

“இல்லை! நான் சொல்றது உண்மை!”, என்று தெளிவாக கூறி அவரின் எண்ணத்தை தவிடு பொடியாக்கினார் அண்ணாமலை.  

ஒரு நிமிடம் தேவிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை……..

“அப்போ நான் சொன்னது என் வாழ்க்கையில தப்பா போயிடுச்சா…… எனக்கு நானே உலை  வெச்சிகிட்டனா……..”,

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் அழ வேண்டுமா……….. என்னுடைய வாழ்க்கையை ஏன் இப்படி நீ நாசமாக்கிட்ட என்று கதற வேண்டுமா………  இல்லை ஏண்டா இப்படி செஞ்ச என்று இவரை அடிக்க வேண்டுமா……… இல்லை நான் உனக்கு என்ன குறை வெச்சேன்னு கேட்க வேண்டுமா………. அந்த கேள்வி கேட்கும் தகுதி தனக்கு இருக்கா………. இல்லை இனிமே நான் உன்னோட வாழ மாட்டேன் என்று போய்விடவேண்டுமா…………”,

கண்கள் மித மிஞ்சிய அதிர்ச்சியோடு கணவரை பார்த்தது……… எண்ணங்கள் இப்படி தாறுமாறாக ஓடியது.

வாயிலிருந்து ஒரே கேள்வி தான் வந்தது, “ஏன் எனக்கு துரோகம் பண்ணீங்க……….”,

“இதுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்…….. நான் செஞ்சது தப்புன்னு தெரியும்……….. நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கறேன்”,

“உங்களுக்கு என்ன தண்டனை என்னால குடுக்க முடியும்? உங்களுக்கு ஏதாவது தண்டனை குடுத்தா அது எனக்கே குடுத்துகிட்ட மாதிரி இல்லையா”, என்றார் ஒரு கேவலோடு………. கண்களில் இருந்து நீர் வந்தே விட்டது.

இப்படி பேசும் மனைவியிடம் என்ன பேசுவது என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். கணவரும் மகளுமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட தேவிகாவுக்கு இது மிகுந்த அதிர்ச்சி தான்.

அண்ணாமலையிடம் எந்த கேள்வியும் அவர் எப்போதுமே கேட்காததுக்கு காரணம் அவர் மேல் தேவிகா வைத்த அதீதமான நம்பிக்கை தான். மற்றபடி தேவிகா புத்திசாலி என்று சொல்ல முடியாவிட்டாலும் முட்டாள் இல்லை.

பிரச்சனையின் ஆழம் வரை சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து வரிசையாக கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார் தேவிகா.

“சரி இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்றிங்க……..”,

மெளனமாக அமர்ந்திருந்தார் அண்ணாமலை.  

“செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு இப்படி கல்லுளிமங்கன் மாதிரி உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்………. உங்களுக்கும் அவளுக்கும் எத்தனை வருஷ பழக்கம்……”,

பெருமூச்சு விட்டவர் இனி எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்து……. “நிறைய வருஷ பழக்கம், ஆனா உறவா மாறினது ஒரு மூணு வருஷமா”,

“கணவர் நிறைய வருஷமாக ஒரு பெண்ணோடு பழகியிருக்கிறார்………. அது உறவாக மூன்று வருடங்களுக்கு முன்னால் மாறியிருக்கிறது……… இது எதுவுமே தெரியாமல் தான் எப்படி இருந்திருக்கிறோம்”.

“உறவு வளர்ந்த பின்னால் தன்னிடம் மறைப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அதற்கும் முன்னால் சாதாரண பழக்கமாக இருந்த போது கூட எனக்கு தெரியாமல் இருந்திருக்கிறதே………  எப்படி கணவன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்”,

விஷயத்தை ஆவேசமும் கோபமும் கொண்டு போக விடாமல் பொறுமையாகவே கையாண்டார்.  கண்களில் இருந்து நீர் வந்தாலும் அழுகை தன்னை கொண்டு போக விடவில்லை.

“இத்தனை வருஷ பழக்கத்தை சொல்லாதவர்…….. மூணு வருஷ உறவை மறைச்சவர்……  இப்போ மட்டும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? நீங்க இதை மறைச்சே வெச்சிருக்கலாமே……..”,

தேவிகாவின் புத்தி கூர்மை ஆச்சர்யத்தை கொடுத்தது அண்ணாமலைக்கு. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று அவர் எண்ணியிருக்க…….. தேவிகாவோ புத்திசாலித்தனமாக பிரச்சனையின் அடி ஆழம் வரை சென்று பார்ப்பது மாதிரி கேள்வி கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 

அவரை தான் நினைத்த மாதிரி சுலபமாக சமாளிக்க முடியாது என்று புரிந்தது.  

“அது சொல்ல வேண்டிய கட்டாயம்………”, என்றார் தயங்கி தயங்கி.

“என்ன கட்டாயம்”,

“என்னோட குழந்தை……….. இப்போ அவ வயத்துல வளருது”,

“இனி இது வேறா……….”, என்று தேவிகாவின் நெஞ்சை எதுவோ பிசைந்தது. “ஏன் இன்னும் ஒண்ணுமே ஆகலை எனக்கு இதையெல்லாம் கேட்டுட்டு”, என்று அவருக்கு அவரே கேட்டுக்கொண்டார்.   

கணவரையே தீர்க்கமாக பார்க்க………  

“என் குழந்தை அப்பான்ற அடையாளம் இல்லாம இந்த உலகத்துல வரக்கூடாது”,

“ஆண் என்ற திமிரோடு எப்படி பேசுகிறார்………. கட்டின மனைவியிடமே வந்து என் குழந்தை என்று வேறு ஒருத்திக்கு பிறக்க போவதை எவ்வளவு தைரியமாக சொல்கிறார்”, என்று அவர் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார்……….

“நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கணும்”,

“என்ன? என் வீட்டில் என்னிடத்தில் இன்னொருத்தியா?????”,

“ஒரு கல்யாண வயதில் இருக்கும் மகளை வைத்துக்கொண்டிருக்கும் தந்தை பேசும் பேச்சா இது”, என்று அதீத அதிர்ச்சிக்கு ஆளானார், அழுகை கூட நின்று போனது.

“இந்த வயசுல நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா”, என்று கேட்டார்.

அவர் மனமே அவரிடம் சொன்னது, “என்ன வயது அவருக்கு நாற்பத்தி நாலு தானே…. இந்த வயதில் ஒரு குழந்தைக்கு தகப்பனாகும் தகுதி இருக்கும்போது திருமணம் செய்ய கூடாதா என்ன? உன்னை மாதிரி இத்தனை உடல் உபாதைகளோடு இருக்கும் மனைவியை வைத்துக்கொண்டு அவர் இளமையை அவர் வீணடிக்க வேண்டுமா என்ன?”,

யோசிக்க யோசிக்க தாங்க முடியாத வலி ஒன்று மனதை அழுத்தி பிசைந்தது.

“ரகசிய வாழ்க்கை நடத்துன மாதிரியே ரகசியமா கல்யாணமும் பண்ணியிருக்கலாமே…. என்கிட்ட எதுக்கு சொல்லனும்……. என்னை அப்படியே இன்னும் ஏமாத்திட்டே இருந்திருக்கலாமே……… நானாவது நிம்மதியா இருந்திருப்பேன், இப்போ மட்டும் ஏன் சொல்றீங்க”,

“உன் சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்றா அவ”,

“யார் அந்த அவ”, என்றார் கோபமாக.

“அவ பேர் அனிதா”,

“பழகின போதெல்லாம் என்கிட்ட கேட்கனும் தெரியலை…….. ஆனா கல்யாணத்துக்கு மட்டும் என்கிட்ட கேட்கணுமா……..”,

பதில் பேசாமல் அமைதி காத்தார்.

“ரொம்ப வருஷ பழக்கம்ன்றீங்க எனக்கு எப்படி தெரியாம போச்சு”,

“அவளை உனக்கு தெரியாது……….. ஆனா அவங்க கடையை உனக்கு தெரியும். சென்னைக்கு நம்ம சரக்கு அனுப்புவமே ஏ.ஏ ஹோல்சேல் டீலர்ஸ் அவங்க பொண்ணு”,

“அவங்க பொண்ணுக்கு தான் கல்யாணமாகி ரெண்டு மாசத்துலயே புருஷன் செத்து போயிட்டான். ஒரு பையன் கூட இருக்கணுமே”,

“ஆமாம்”, என்றபடி தலையாட்டினர் அண்ணாமலை.

“புருஷன் செத்து போயிட்டா வேறொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே… அவளுக்கு பழக என் புருஷன் தானா கிடைச்சார்”, என்ற தேவிகாவின் பேச்சுக்கு தாங்க முடியாதவறாக கண்ணை மூடி திறந்தார் அண்ணாமலை.

அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை தேவிகா………

“ரொம்ப பெரிய இடமாச்சே அவங்க………… அப்போ கட்டாயம் பணத்துக்காக அந்த பொண்ணு உங்ககூட பழகலை”,

“எனக்காக மட்டுமே என்கூட பழகினா”, என்ற வார்த்தையை அவருக்கு தேவிகாவிடம் சொல்ல மனம் வரவில்லை……… பணத்துக்காக வந்தாள் என்று சொன்னால் கூட தாங்க முடியும் தேவிகாவால். ஆனால் அவருக்காக வந்தாள் என்பதை தாங்க முடியாது. 

அவர் சொல்லாமல் விட்ட விஷயத்தை கூட சரியாக கணித்தார் தேவிகா. “அப்போ உங்களுக்காக மட்டும் தான் அவ உங்ககூட வந்திருக்கா”, என்ற தேவிகாவின் பேச்சில் அனிதாவின் மேல் உள்ள பொறாமை தெரிந்தது.

தான் நினைத்த அளவு தன் மனைவி விவரம் தெரியாதவள் அல்ல என்று அண்ணாமலைக்கு நன்கு புரிந்தது.  

“இவ்வளவும் செஞ்சவ, என் சம்மதமில்லாம கல்யாணம் மட்டும் நடக்காதுன்னு ஏன் சொல்றா?”,

அண்ணாமலை இன்னும் அமைதியாகவே இருக்க……… 

“அப்போ நான் என்ன பண்ணனும்………. இப்போ உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்கனுமா”, என்றார் தேவிகா ஆத்திரத்தோடு.

“இல்லை! இல்லை!”, என்று பதறிய அண்ணாமலை…….. “நாங்க பழக ஆரம்பிச்சப்பவே அவளால உன் வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் வராதுன்னு சொன்னா……… எப்பவும் என்கிட்ட ஒரு திருமண வாழ்கையை எதிர் பார்க்க மாட்டேன்னு தான் சொன்னா…….”,

“யார் வாழ்க்கைக்கு யார் தொந்தரவு தரமாட்டேன்னு சொல்றது………..”,

மௌனமானார் அண்ணாமலை………..

“இப்போ மட்டும் திடீர்ன்னு கல்யாணத்துக்கு என்ன வந்துச்சு”,

“எங்க பழக்கம் அரசல் புரசலா அவங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியும், யாருக்கும் அது பிடிக்கலை. அவளை கண்டிச்சு பார்த்தாங்க அவ கேட்கலை…….. சரி, எப்படியோ போகட்டும்னு விட்டுட்டாங்க. இப்போ ஒரு குழந்தை உருவாகவும் இந்த உறவு முறையை கல்யாணமா மாத்துறதுல தீவிரமா இருக்காங்க……….. என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டே ஆகணும்னு கட்டாய படுத்துறாங்க”,

“அப்போ அவளுக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு இல்லையா”, என்றார் சற்று ஆச்சர்யமாக.

“இல்லை”, என்று தலையாட்டினார். “உன் வாழ்க்கையில இப்போவும் அவ குறிக்கிட விரும்பலை”. 

“அப்போ யாரோட கட்டாயம் இது”,

“அவளுக்கு அம்மா இல்லை……… அவங்கப்பாவும் தம்பியும் தான். இது அவங்க ரெண்டு பேரோட கட்டாயம்”,

“உங்க புள்ளைக்கு அடையாளம் குடுக்கறதுல அவ்வளவு ஆர்வமா இருக்காங்களோ?”, என்றார் நக்கலாக.  

“இல்லை! அவங்களோட இருக்குற புள்ளையோட கௌரவதுக்காக பண்றாங்க”,

தேவிகா புரியாமல் பார்க்கவும்……..

“அனிதாவோட பையன் நந்தா……. அவனுக்காக தான் இந்த கல்யாணம்…….  ஒரு அடையாளமும் இல்லாம அவனோட அம்மா இன்னொரு குழந்தைக்கு தாயானா அது அவனை தானே பாதிக்கும் அதுக்காக”,

“அந்த பையனோட பாதிப்பை பத்தி பார்க்கறீங்களே……… நம்ம பொண்ணோட வாழ்க்கையை பத்தி யோசிச்சீங்களா”,

“யோசிக்காம என்ன? என்னை விட அனிதா அதிகமா யோசிக்கிறா…….. அவ தான் ஆகாஷை இங்கே அனுப்பி வெச்சா”,

“ஆகாஷ் யாரு”, என்றார் காட்டமாக.

“அனிதாவோட தம்பி”,

“என்வீட்டுக்கு எதுக்கு அனுப்பி வெச்சா”,

“ஒரு வேலை ஆகாஷ்கும் ராஜிக்கும் பிடிச்சா கல்யாணம் பேசலாம்னு”,

இதை கேட்டதும் தேவிகாவால் தாங்கவே முடியவில்லை……. இத்தனை நேரம் இருந்த பொறுமையும் பறந்துபோனது…….

“அப்போ நான் உங்களுக்கும் ஒண்ணுமில்லாம போயிட்டேன்………. இப்போ என்   பொண்ணுக்கும் ஒண்ணுமில்லாம செய்யப்போறீங்களா…….”, அவரையும் மீறி அவரிடம் இருந்து கேவல் ஒன்று வெளிப்பட்டது மறுபடியும்……

அப்படியே கையில் கிடைத்த எதையாவது தூக்கி அவர்மேல் எறியலாமா என்று ஆத்திரம் வந்தது.

தன் கணவர் தன் கைவிட்டு போய்விட்டார் என்பதையே இன்னும் தேவிகாவால் ஜீரணிக்க முடியாத பட்சதில்…….. இப்படி ஒரு சம்பந்தத்தை அண்ணாமலை சொன்னவுடனேயே மனதிற்குள் நொறுங்கி விட்டார் தேவிகா.

“எவ்வளவு பெரிய விஷயம் செஞ்சிட்டு……….. அதை எவ்வளவு சுலபமா சரி பண்ண பார்க்கறீங்க…….. கேட்க எனக்கென்ன அம்மா அப்பாவா இருக்காங்க…….. கூடப்பொறந்தது உங்களை மீறி ஒண்ணும் செய்யாது……. நான் தான் கேட்க நாதியத்து போயிட்டேனே ”, என்று அழுதார். 

“தேவி! ஆகாஷ் ரொம்ப நல்ல பையன்…….., நல்ல வசதி………, நல்லா படிச்சிருக்கான்……. நல்ல வேலை………, பார்க்கவும் நல்லா இருக்கான். குடும்பம் ரொம்ப பாரம்பரியமான குடும்பம்………. அவன் அனிதாவோட தம்பின்றதை விட்டுட்டு பாரு ஒரு குறையுமே அவன்கிட்ட சொல்ல முடியாது”.

“என்ன பெரிய குடும்ப பாரம்பரியம்…….. அடுத்தவ புருஷன் கூட குடும்பம் நடத்தறா அது பாரம்பரியமான குடும்பமா”  

“புரிஞ்சிக்கிட்டு பேசு தேவி! நான் அவனை மாப்பிள்ளையாக்க யோசிச்சதுக்கு காரணம்………. நாளைக்கு அசல்ல நம்ம பொண்ணை கட்டி குடுத்தோம்னா என்னோட வாழ்க்கையை வெச்சு நம்ம பொண்ணு கிட்ட குற்றம் குறை கண்டுபிடிக்கலாம்……… அவளை நோகடிக்கலாம்…….. ஆகாஷ்னா அப்படி எதுவும் பண்ண மாட்டான்………… ஏன்னா இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது அவங்கக்கா. அவனுக்கு அவங்க அக்கா மேல ரொம்ப பாசம்…….. அவளுக்காக எதையும் செய்வான்”,

“அப்போ அதுக்காகத்தான் என் பொண்ணை கல்யாணம் பண்ண போறானா”,

“அப்படியெல்லாம் எனக்கு தோணலை……… அவனுக்கு என்னவோ ராஜியை பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்”, என்றார்.

தேவிக்காவிற்கு எல்லாவற்றையும் கேட்க கேட்க தலையை சுற்றியது. தான் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு சத்தியமாக புரியவில்லை. வேறு விஷயமாக இருந்தால் மகளிடமே யோசனை கேட்பார். ஆனால் இந்த விஷயத்தை ஒரு விஷயமாக தான் அவளிடம் சொல்ல வேண்டும்.

அவள் மிகுந்த ரோஷக்காரி இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று தெரியாது.

முதலில் தான் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே புரியவில்லை. நடந்துவிட்டது இனி அதை மாற்ற முடியாது என்பதை விட……… இனி அதில் மாற்றம் வரவும் அண்ணாமலை விரும்பவும் மாட்டார்….. விடவும் மாட்டார் என்று நன்கு தேவிகாவிற்கு புரிந்தது. 

ஆனால் எதற்காகவும் யாருக்காகவும் தேவிகா இந்த வீட்டை விட்டு போக தயாராயில்லை. இது அவரின் வீடு என்பதில் அவர் மிகுந்த உறுதியாக இருந்தார்.  அவர் தனக்கு தான் அண்ணாமலையின் வாழ்க்கையில் முதல் உரிமை இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

“கல்யாணம் பண்ணினா இங்க வந்துடுவாங்களா”,

“இல்லையில்லை அவ சென்னையை விட்டு எங்கயும் வரமாட்டா…… இந்த கல்யாணம் சமுதாயத்துல அவங்களுக்கு இருக்கிற மரியாதை கெட்டுபோகக் கூடாதுங்கறதுக்காக தான்………. மற்றபடி நம்ம வாழ்க்கை முறைல எந்த மாற்றமும் இருக்காது”.

“நான் அப்பப்போ தொழில் விஷயமா சென்னை போகும்போது அவளை பார்க்கறதோட சரி”, என்றார் அண்ணாமலை.

“அவளை பார்க்க போகும்போது தொழிலை பார்ப்பேன்னு சொல்லுங்க…… ஏன் மாத்தி சொல்றிங்க………”, என்று வார்த்தையை ஈட்டியாக அண்ணாமலையின் நெஞ்சில் பாய்ச்ச ஆரம்பித்தார் தேவிகா.

வார்த்தை பாய்ந்ததென்னவோ அண்ணாமலையை நோக்கி ஆனால் அதன் வலியைதேவிகாவும் உணர்ந்தார்.

இதையெல்லாம் அறியாத ராஜி அப்போதுதான் உறக்கம் கலைந்து எழுந்து வந்தாள்.

ஹாலிற்கு வந்தவள் தன் அப்பாவையும் அம்மாவையும் காணாமல்………. அவர்கள் ரூமிற்குள் பேசிக்கொண்டு இருப்பதை அறியாமல்………. கீழே இருப்பார்களோ என்று எட்டிப் பார்த்தாள்.

அங்கே செந்தில் மட்டுமே இருந்தான். வேறு யாரும் இல்லை. அவர்கள் வீட்டில் ஒரு அலங்கார கண்ணாடி மீன் தொட்டி இருந்தது. அவன் அங்கே இருந்த மீன் தொட்டிக்கு அருகில் நின்று கொண்டு மீனுக்கு உணவை தண்ணீருக்குள் போட்டுக்கொண்டு இருந்தான்.

இங்கே இருந்து பார்க்கும்போதே ராஜிக்கு மீன் உணவு கொஞ்சமாக இருப்பது தெரிந்தது.

மேலே இருந்து குரல் கொடுத்தாள்…….. “போதுமா! இல்லை புது பாக்கெட் இருக்கு எடுத்துட்டு வரவா”, என்று.

தீடீரென்று குரல் கேட்டதும் செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை…… அவன் மேலே பார்க்க, ராஜி இவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவன் தன்னை பார்ப்பது தெரிந்தும், “அங்க இருக்குறது போதுமா….. இல்லை இன்னும் பிஷ் புஃட் எடுத்துட்டு வரவா”, என்றாள்.

“போ! போன்னு துரத்துறா! இப்போ தானா வந்து வலிய பேசறா! இவ எந்த வகையில் சேத்தி தெரியலையே”,

“என்ன கேட்கறேன்ல”, என்று ராஜி அதட்டலாக ஒரு குரல் கொடுக்க……  

“பார்றா! அதட்டல் தூள் பறக்குது முதலாளி அம்மாவுக்கு”, என்று மனதில் அவளை கிண்டல் செய்துகொண்டே……… “போதும்”, என்றான் செந்தில்.

ராஜிக்கு அவனிடத்தில் நன்றி சொல்ல வேண்டி இருந்தது. அன்று பஸ்சில் நடந்ததுக்கு அவள் நேரடியாக இன்னும் நன்றி சொல்லவில்லை. தனியாக இருந்தான். இது தான் சமயம் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள்.

இருந்தாலும் தயக்கமாக இருந்தது……..

ஒரு வழியாக, “தேங்க்ஸ்”, என்றாள் மேலே இருந்து……..

செந்திலுக்கு தெரியவில்லை அவள் தன்னிடம் தான் பேசுகிறாள் என்று…….. அவன் பாட்டிற்கு மீன் தொட்டியை பார்த்துக்கொண்டு இருந்தான்.

“உங்ககிட்ட தான்”, என்று மறுபடியும் சொன்னாள் சத்தமாக……..

தன்னிடம் தான் பேசுகிறாளா என்று மறுபடியும் செந்தில் தலை தூக்கி பார்க்க……

“தேங்க்ஸ்”, என்றாள்.

“எதற்கு”,  என்பது போல ஒரு பார்வை மட்டும் பார்த்தான்………….. வாய் திறந்து பேசவில்லை.

அவனின் பார்வை அவளுக்கு புரிந்தது…….

“பஸ்ல நடந்ததுக்கு”,

“ரொம்ப சீக்கிரம் சொல்லிட்ட”,  

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று சத்தமாக அவனிடம் சொல்லி……. “திமிர்பிடிச்சவன்”, என்று வாயில் முணுமுணுத்துக்கொண்டே  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் ராஜ ராஜேஸ்வரி.

செந்திலுக்கு அது நன்கு கேட்டது.

“சரியான ராங்கி புடிச்சவ”, என்று அவனும் முணுமுணுத்தான். 

 

Advertisement