Advertisement

அத்தியாயம் எட்டு:

ஆகாஷின் செல்வ நிலையை பற்றி மனதில் எழுந்த உணர்வுகளை கட்டாயமாக ஒதுக்கி தள்ளி வேலையில் ஈடுபட்டான் செந்தில்.

உள்ளே வந்த ராஜியையும் ஆகாஷயும் ஆர்வத்துடன் பார்த்தார் அண்ணாமலை. இருவரின் முகத்தில் இருந்தும் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதை விட அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை. எல்லாம் சரி வருமா என்றும் அவருக்கு புரியவில்லை.

“சரி வர வேண்டும், சரி வர வேண்டும்”, என்று மனம் விடாமல் பிரார்தித்தது. சரி பண்ண முடியாத தப்பை செய்து விட்டு அதை சரி பண்ண வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்பது அவருக்கு நன்கு புரிந்தது.

அதை தப்பு என்றும் அவரால் சொல்ல முடியவில்லை. அது அவருடைய வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம் அல்லவா.

ராஜியை நினைத்து தான் அவருக்கு கவலையாக இருந்தது. அவருக்கு தேவிகாவை தெரியும். கட்டாயம் தன்னை புரிந்து கொள்வாள் என்று மிகுந்த நம்பிக்கை இருந்தது அவருக்கு. ஆனால் ராஜி அவருடைய செல்ல மகள்……. தந்தையை விட அன்னையிடம் ராஜிக்கு அதிக ஒட்டுதல் இருந்தாலும் அன்னையை விட அவருக்கு அவளை பற்றி நன்கு தெரியும்.

பிடிவாதக்காரி. அவளை ஒத்துக்கொள்ள வைப்பது மிகவும் கஷ்டம் என்று அவருக்கு தெரியும். ஆகாஷின் மீது அவளின் மனம் சென்றால் ஓரளவு சற்று சுலபமாக அவரால் விஷயங்களை சமாளிக்க முடியும் என்று நினைத்தார்.

அதுவுமில்லாமல் ஆகாஷ் எல்லாவிதத்திலும் மிகவும் தகுதியானவன். நிறைய வசதியுள்ளவன்……. நிறைய படித்திருக்கிறான்…….. நல்ல வேலையில் இருக்கிறான்….. பார்பதற்க்கும் நன்றாக இருக்கிறான்…….. அதைவிட எல்லாம் முக்கியமானது நல்ல குணவானே……. இதை விட சிறந்த மாப்பிள்ளையை தன் மகளுக்காக பார்ப்பது ஆகாத காரியம் என்று அவருக்கு புரிந்தது.

அதையும் விட அவருக்கு அவனை மிகவும் பிடித்தது. நடந்து விட்ட செயல்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க முயற்சிக்கிறான். அவன் செய்வதும் சொல்வதும் மிகவும் சரி என்று அவருக்கு புரிந்தது. 

எப்படி பார்த்தாலும் ஆகாஷ் ராஜியை விட ஒரு படி உயர்ந்து தான் தெரிந்தான்.

அவனோடு ஒப்பிட்டால் தங்களின் வசதி கம்மி தான்….. ராஜியும் சாதாரண டிகிரி தான் படித்துக்கொண்டிருக்கிறாள்…… தன்னுடைய செல்ல மகள் தான் என்றாலும் நிதர்சனத்தை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்……..

ராஜி அப்படி ஒன்றும் அழகில்லை…… பார்த்தவுடனே வசீகரிக்கும் தோற்றமில்லை…… ஆனால் பழக பழக வசீகரிக்கும் தோற்றம்……… அது மட்டுமே குறை….. மற்றபடி வேறு எதிலும் அவளை குறை சொல்ல முடியாது…… நல்ல பழக்க வழக்கங்கள் உடைய மிகவும் தன்னம்பிக்கையான பெண்…….. மிகுந்த சுயக்கட்டுபாடும் சுயமரியாதையும் உடையவள்.

எந்த விஷயத்திலும் தேவிகா தன்னை கேள்வி கேட்பாளோ என்று பயப்படுவதை விட ராஜி தன்னை கேட்பாளோ என்று தான் அண்ணாமலையே பயப்படுவார்.                        

கோவிலிருந்து வந்தவுடனே ஆகாஷ் சென்று அவனுக்கு கொடுத்திருந்த ரூமிற்குள் புகுந்து கொண்டான். 

ராஜி தான் தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள்.   

“தரிசனம் எப்படி இருந்ததும்மா”,

“நல்லா இருந்ததுப்பா, உங்களை தான் எல்லாரும் கேட்டாங்க…… நீங்க ஏன் வரலை?”,

“மூணு நாலு நாளா ஊர்ல இல்லையாம்மா…….. வேலை கொஞ்சம், அதனால வரலை”,

“ஆகாஷ் என்ன சொன்னாரும்மா?”, என்று மெதுவாக ஆகாஷை பற்றி பேச்சுக் கொடுத்தார்.

“எதை பத்திப்பா”,

“இல்லைமா, பொதுவா கேட்டேன்”,

“ஒண்ணும் சொல்லலையேப்பா”,

“இல்லைமா, அவரை பத்தி ஏதாவது சொன்னாறான்னு கேட்டேன்”.

“நிறைய படிச்சிருக்கார் போல……… பெரிய வேலைளையும் இருக்கார்பா………  அதை பத்தி தான் சொன்னார். நீங்க தான் என்னை என்ஜினியரிங் சேர்க்காம விட்டுடீங்க”, என்று அவள் வருத்தமாக பேச……..

அவளின் தந்தை பேச்சை மாற்றினார்……….. “அதனால என்னமா நிறைய படிச்சவரா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிடறேன்”,

“என்ன தான் இருந்தாலும் நான் படிச்ச மாதிரி ஆகுமா”,

அப்போதுதான் அவர்கள் இருக்குமிடம் வந்த தேவிகா…. “வந்துடீங்களா, எங்க அந்த தம்பி”, என்றார்.

வந்தவுடனே ரூம்குள்ள போயிட்டார்………

“இப்போ ஏதாவது குடிக்குமா தெரியலையே…….. காபி குடிக்குமான்னு கேட்டு சொல்றீயா”, என்றார் தேவிகா.

“கேட்க ஒருதரம் கொடுக்க ஒருதரம்……… கொடுக்க ஒரு தரம்ன்னு……….  ரெண்டு தரம் போகணுமா……….. நீங்க போட்டு குடுங்க, நான் எடுத்துட்டு போறேன். குடிச்சா பார்க்கிறேன், இல்லைன்னா நான் குடிச்சிக்கறேன்”.

அதுவும் சரிதான் என்பது போல தேவிகா உள்ளே போக…….. அண்ணாமலைக்கு ராஜி ஆகாஷை பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. இருந்தாலும் ஆகாஷின் முடிவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவளிடம் பேசவும் முடியவில்லை.

அவர் சொன்னால் ராஜி ஆகாஷுடனான திருமணதிற்கு மறுக்க மாட்டாள்…….. அதனால் ஆகாஷ்  சரி என்று சொன்னால் இப்போதைக்கு போதும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.    

நினைப்பது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன ??????? அப்புறம் இறைவன் போடும் முடிச்சு என்பது எதற்கு????????

அம்மா காபியை கொண்டு வந்து கொடுக்க அதை எடுத்துக்கொண்டு ஆகாஷ்  தங்கியிருந்த ரூம் போனாள் ராஜி. மெதுவாக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

இவள் கதவை தட்டி உள்ளே வந்ததை ஆகாஷ் கவனிக்கவேயில்லை. அவன் யாரிடமோ இவளுக்கு முதுகு காட்டி நின்று பேசிக்கொண்டு இருந்தான்.

“புரிஞ்சிக்கோ அனி……….. நான் உனக்காக தான் இவ்வளவும் செய்யறேன். உனக்காக தான் நான் இப்படி அவசரமா இந்தியா வந்தேன்……… உனக்காக தான் இந்த ஊருக்கு இப்போ வந்திருக்கேன்”,

“யாரிந்த அனி”, என்று ராஜி யோசிக்க ஆரம்பித்தாள்.

எதிர்புறம் என்ன பதில் வந்ததோ தெரியவில்லை…….  இவன் பேசுவது மட்டுமே ராஜிக்கு கேட்டது….

“நீ பேச்சு மாறக் கூடாது”,

…………..

“முடியாது! உன் கல்யாணம் நடந்தா தான் என் கல்யாணம் நடக்கும்”,

………………

“இல்லையில்லை அதுல எந்த மாற்றமுமே இல்லை, அவளால என்னோட லைப் ஸ்டைலுக்கு ஈடு கொடுக்க முடியுமா தெரியலை……… அப்பியறேன்சும் ரொம்ப சுமார் தான்………. இந்த கல்யாணம் நடந்தா அது உனக்காக மட்டும் தான்”,

யாரை இவன் சொல்லுகிறான் என்று ராஜிக்கு யோசனை ஓடியது……. அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை அவர்கள் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று.

……………..

“நீ கல்யாணம் பண்ணிக்கோ, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”,

………..

“இதுக்கு மேல எதுவும் பேசாத………. நான் சொல்ற மாதிரி நீ நடந்தா தான், நீ சொல்ற மாதிரி நான் நடப்பேன்……… எனக்கு அவ்வளவா இதுல விருப்பம் இல்லைனாலும் உனக்காக மட்டுமே சம்மதிக்கிறேன்………”

…………..

யாரோ இவனை எதற்கோ கட்டாயப்படுத்துகிறார்கள் போல என்று ராஜி நினைத்துக்கொண்டாள்.

“நீ கொஞ்சமாவது நந்தாவை நினைச்சி பாரு………. நான் இனிமே பேசுறதுக்கு ஒண்ணுமில்லை”, என்று போனை வைத்துவிட்டு அப்படியே தான் நின்றுகொண்டிருந்தான்.

ராஜி மெதுவாக செருமினாள்………..

சட்டென்று திரும்பினான் ஆகாஷ்.

அவனை பார்த்ததும் காஃபி என்று சிநேகமாய் புன்னகைத்தாள்.

“நீ எப்போ வந்த”, என்றான் அதிர்ச்சியாக………..

அவனின் போன் பேச்சை கேட்டுவிட்டேனோ என்று தான் பதட்டப்படுகிறான் என்று புரிந்த ராஜி………… “இப்போ தான் வந்தேன், அதுவும் கதவை தட்டிட்டு தான் வந்தேன்”, என்றாள்.

“ஹப்பா! இவள் எதுவும் கேட்கவில்லை”, என்று ஆசுவாசப்பட்டவன்…… “தேங்க்ஸ்”, என்று அவளின் கையில் இருந்த டம்ளரை வாங்கினான்.              

உடனே அங்கே இருந்து வெளியே வந்துவிட்டாள் ராஜி………… யாரிந்த அனி அவளுக்கும் இவன் இங்க வந்ததுக்கும் என்ன சம்பந்தம்? அவ கல்யாணம் பண்ணிகிட்டா தான் இவன் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றான். ஆமாம் இவன் யாரை கல்யாணம் பண்ணிக்க போறான்?

ஒரே யோசனையாக போயிற்று ராஜிக்கு…..

“அம்மா! அவங்க காஃபி குடிச்சிட்டாங்க……… எனக்கு காஃபி”, என்று சமையல் மேடையில் ஏறி அமர்ந்தாள்.

அம்மா கலக்கி கொடுக்கவும் அதை குடித்தவாறே……… மறுபடியும் அவளின் அன்னையிடம்………… “அம்மா யார் இவங்க, எனக்கு தெரியலைன்னா மண்டையே உடைஞ்சிடும் போல இருக்கு”, என்றாள்.

“எனக்கு தெரியலையேம்மா”, என்று எப்பவும் போல அவளின் அம்மா சொல்ல……

“நேத்து இருந்து அப்பாகிட்ட கேட்காம என்ன பண்ணுனீங்க”, என்று சண்டையிட்டாள்.

“கேட்டேன் பாப்பா! ஆனா அப்பா தெரிஞ்சவங்க பையன்னு மட்டும் தான் சொல்றாங்க”,

“போம்மா! உனக்கு விவரமே பத்தலை”, என்று வேகமாக சமையல் மேடையை விட்டு இறங்கியவள் நேராக தந்தையிடம் வந்தாள்.

“அப்பா யாருப்பா இவங்க? எதுக்காக நம்ம வீட்ல தங்கியிருக்காங்க…….. எதுக்கு அவங்க கூட என்னை கோயிலுக்கு அனுப்புனிங்க”, என்றாள்.

அவள் கேட்கவும் ஆகாஷ் வரவும் சரியாக இருந்தது…….. அவள் கேட்டது அவனின் காதிலும் நன்றாக விழுந்தது.

“இவள் என்ன நான் யாரெண்டு தெரியாமல் விடமாட்டாளா”, என்று அண்ணாமலையின் முகத்தை பார்க்க அவர் சங்கடமாக நெளிந்தார்.

ஆகாஷ் வந்ததால் பேச்சை விட்டுவிட்டாள் ராஜி.

“நான் ஊருக்கு கிளம்பறேன்”, என்றான் ஆகாஷ் அண்ணாமலையை பார்த்து….

“என்ன அதுக்குள்ளயா”, என்றார் அண்ணாமலை.

“நான் வந்த வேலை முடிஞ்சது கிளம்பறேன்”, என்றான்.

“இவன் எதற்கு வந்தான் என்ன வேலை முடிந்தது”, என்று ராஜிக்கு புரியவில்லை.

“நான் போயிட்டு வீட்ல பேசிட்டு சொல்றேன்”, என்றான்.

“சாப்பிட்டிட்டு கிளம்புங்க”, என்றார் அண்ணாமலை.

“இல்லை கிளம்பறேனே”, என்றான் ஆகாஷ்.

ராஜிக்கு தன் அம்மா இவனுக்காக பார்த்து பார்த்து சமைத்து வைத்தால் இவன் சாப்பிடாமல் கிளம்புகிறானா என்றிருந்தது.

“அம்மா பார்த்து பார்த்து உங்களுக்காக சமைச்சு இருக்காங்க…….. சாப்பிட்டிட்டு கிளம்புங்க”, என்று தன் தாயின் உழைப்பு வீணாவதை பொறுக்காமல் சொன்னாள் ராஜி.

தன் அம்மாவுக்காக இவள் நிறைய பார்ப்பாள் போல…….. என்ற எண்ண ஓட்டம் ஆகாஷிற்கு சற்று கவலையை கொடுத்தது. 

ராஜி சொல்லவும் ஆகாஷும் மறுக்காமல் சரி என்கவும்……… ஓரளவுக்கு ஆகாஷின் திருமணத்தை பற்றிய முடிவு என்னவாக இருக்கும் என்று அண்ணாமலையால் யூகிக்க முடிந்தது.

இனி இவனின் வேலை முடிந்தது………. இனி எல்லாம் என் வேலை தான் என்று அண்ணாமலைக்கு நன்கு தெரிந்து விட்டது. இவன் கிளம்புவதும் நல்லது தான் இவனை வைத்துக்கொண்டு எதுவும் பேசமுடியாது என்றே அவருக்கு தோன்றியது.

அவன் போய் தன்னுடைய டிரெஸ் எல்லாம் பேக் செய்து வர…….. டைனிங் டேபிளில் தேவிகா எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தார்.

அவர் சமைத்தது எல்லாம் நன்றாக இருந்தது……….

“நல்லா இருக்குங்க”, என்று சொன்னான்.

“இன்னும் சாப்பிடுங்க தம்பி”, என்று அவர் உபசரித்தார்.

“இல்லைங்க! ரொம்ப சாப்பிட்டா அசதியா இருக்கும்……. அப்புறம் டிரைவ் பண்றது கஷ்டம்”, என்று அளவாகவே சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்தவுடன்………. “உங்க அம்மாவோட சமையலை சாப்பிட்டுட்டேன் போதுமா”, என்றான் ராஜியை பார்த்து.

“நான் சாப்பிட்டதே உனக்காத் தான்”, என்ற பொருள் இருந்தது ராஜிக்கு புரிந்தது. அவனை பார்த்து பளிச்சென்று ஒரு புன்னகை புரிந்தாள்.

பதிலுக்கு அவனும் புன்னகை புரிந்தான். இருவருக்குள்ளும் அந்த நிமிடத்தில் ஒரு மெல்லிய நட்பு துளிர்விட துவங்கியது.

பின்பு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கீழே வந்தான்…….. அவனோடே அண்ணாமலை, தேவிகா, ராஜி எல்லாரும் கீழே வந்தனர்.

அங்கே அப்போது சீனியப்பனும் செந்திலும் இருக்க……… அவர்களை ஆகாஷிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணாமலை.

“இவர் சீனியப்பன் நம்ம கிட்ட ரொம்ப நாளா இருக்கார். இது அவருடைய மகன் செந்தில், இப்போ தான் நம்மகிட்ட சேர்ந்தார்”, என்று சொன்னார்.

இருவரையும் பார்த்து புன்னகைத்தான் ஆகாஷ். பதிலுக்கு சீனியப்பன் அளவாய் புன்னகைக்க……….. செந்தில் நன்றாகவே அவனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்து கையை குளுக்க கையை நீட்டினான்.

அவனின் காரை பார்த்தே சற்று அவனிடத்தில் பேச ஆர்வமாய் இருந்தான் செந்தில்.பதிலுக்கு ஆகாஷும் கையை குளுக்க, “அட இது கூட இவனுக்கு தெரியுதா”, என்றவாறு இருவரையும் பார்த்திருந்தாள் ராஜி.

ராஜியின் கண்கள் தங்களை ஆர்வமாய் பார்ப்பதை இருவருமே உணர்ந்தனர். ஆனால் ஆகாஷ் அப்போது பேசும் மனநிலையில் இல்லாததால் எல்லோரிடமும்  தலையசைத்து விடை பெற்று கிளம்பி விட்டான்.

கார் கிளம்பி மெயின் ரோடை தொட்டு அந்த டீக்கடையை கடந்து செல்லும் போது ஒரு தம்மடித்தால் பரவாயில்லை என்பது போல ஆகாஷிற்கு தோன்ற………. காரை ஒரு யூ டர்ன் எடுத்து காரை கடை முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினான்.

காரில் நம்ம கடைக்கு யார் வந்து இறங்குவது என்று டீக்கடைக்காரர் ஆர்வமாக பார்க்க இவனை பார்த்ததும் அவருக்கு மிகுந்த குஷியாகிவிட்டது. 

“வாங்க! வாங்க சார்!”, என்றார் வாயெல்லாம் பல்லாக.

“என்ன சார் குடிக்கறீங்க”, என்றார்.

நேற்று வாங்கிய சிகரெட்டின் பெயரை சொன்னான்……

அதை கொடுத்தவர், “சேலம் போறீங்களா சார்”, என்றார்.

“இல்லை ஊருக்கு கிளம்பிட்டேன் சென்னை”, என்றான்.

“இங்க தொழில் விஷயமா  வந்தீங்களா  சார்”, என்றார்.

“இல்லைங்க நான் சாப்ட்வேர் லைன்ல இருக்கேன்”, என்று சொன்னான். “தெரிஞ்சவங்க வீடு…….. நேத்து சொன்னேனே அவங்க வீட்டுக்கு வந்தேன்”,

“எதுக்கு கேட்கரேன்னா பொண்ணு எதுவும் பார்க்க வரல்லியே”, என்றார்.

அவர் இப்படி சொன்னதும் ஆகாஷிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. “ஏன் பொண்ணு பார்க்க வந்தா என்ன? என்ன விஷயம்?”, என்றான்.

“இல்லை! நம்ம கடைக்கு வர்ற செந்தில்ன்ற பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் லவ்ஸ்ன்னு பேச்சு……. தினமும் அந்த பொண்ணு காலேஜ் போற டைம்ல இங்க தான் உட்கார்ந்து இருப்பான்”,

ராஜியை பற்றி சொன்னதும் சற்று கோபம் எட்டி பார்த்தது ஆகாஷிற்கு……… அவனுக்கு ராஜியை பற்றி கேள்விப்பட்ட செய்தியை ஒத்துக்கொள்ள மனமில்லை.

“காலேஜ் போற டைம்ல வந்து உட்கார்ந்தா எல்லாம் லவ்ன்னு எப்படிங்க சொல்றது”, என்று அவரிடம் பேச்சு கொடுத்தான். அவருக்கு தெரிந்த விஷயத்தை வாங்கி விடும் நோக்கத்தில்……..

“இல்லைங்க சார் நான் கூட முதல்ல நம்பலை…….. ஆனா அந்த பையனே சொல்றானே”, என்றார்.

ஒஹ்! யாரோ ராஜியை தன்னோடு இணைத்து பேசுகிறான்………… “யார் அவன்?”,

“அவன் கூட அந்த பொண்ணு வீட்ல தாங்க வேலை பார்க்குறான்… செந்தில்ன்னு பேரு”,

அப்போது தான் பார்த்துவிட்டு வந்த செந்திலின் முகத்தை ஞாபகத்தில் கொண்டு வர முயற்சித்தான், “அவங்கப்பா கூட அங்க தான் வேலை பார்க்கிறாரா”, என்றான், தான் பார்த்த செந்தில் தானா என்று உறுதி செய்துகொள்ள……

“அவனே தான்”, என்றார் டீக்கடைக்காரர்.

“அவன் சொன்னா நம்பிடறதா? எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க அது……. அவ அப்படி எல்லாம் பண்ணலை………… நீங்க ஏதாவது அந்த  பொண்ணு அந்த பையனோட ஊர்சுத்தி இல்லை பேசி பார்த்திருக்கீங்களா?”,

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை தம்பி”, என்றார்.

“அப்புறம் எப்படி சொல்றிங்க”,

“அந்த பொண்ணு தூரத்துல வரும்போதே இவன் உட்கார்ந்து இருக்கானான்னு பார்த்துகிட்டே வரும்”,

“அவங்க வீட்ல வேலை செய்யறான்! அதனால சும்மா கூட பார்க்கலாம் இல்லை! பார்த்தா லவ்ன்னு சொல்லுவீங்களா”, என்றான்.

“ஆமாம்! நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு……… இந்த பையன் தான் சும்மா சொல்லிட்டு திரியறானோ”, என்று அவர் சந்தேகப்பட ……….

“அப்படியே தான்”, என்று கன்பார்ம் செய்தான் ஆகாஷ்.

“என்கிட்ட சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க………. பொண்ணு விஷயம்”, என்றான்.

“இல்லை தம்பி! யார்கிட்டயும் இதுவரை சொன்னது இல்லை! ஏதோ உங்க கிட்ட எனக்கு தெரியாமயே வந்துடுச்சு”, என்றார்.

“சரி, பரவாயில்லை விடுங்க!”, என்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

“சில்லறை இல்லை தம்பி”, என்றார் அவர்.

“பரவாயில்லை வெச்சிக்கங்க”, என்றான்……….

வாயெல்லாம் பல் தெரிய வாங்கிக்கொண்டார்.

“விஷயம் மட்டும் வெளில வரக்கூடாது, எங்க வீட்டு பொண்ணு அவ”, என்று மறுபடியும் ஒரு முறை சொல்லி சென்றான்.

காரில் ஏறி வண்டிய கிளப்பிக்கொண்டு பயணித்த போதும் நினைவு முழுவதும் ராஜியின் மேலேயே  இருந்தது.

“என்ன ராஜி காதலிக்கிறாளா?”. அவனால் நம்ப முடியவில்லை. அவனுக்கு ராஜி அப்படி செய்வாள் என்று தோன்றவில்லை. அவன் அவளிடம் பழகிய வரைக்கும் அவள் காதலிப்பவள் போல தெரியவில்லை.

நிஜமாகவே காதலா இல்லை………. இவன் வேண்டுமென்றே சொல்லிக்கொண்டு திரிகிறானா என்று ஆகாஷிற்கு நிச்சயமாக தெரிய வேண்டி இருந்தது.

அவளிடமே கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஒருவேளை அவள் நிஜமாகவே காதலித்தால் தான் அனாவசியமாக அவளின் வாழ்கையில் நுழைந்தது போல ஆகிவிடும். அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் முன் இந்த விஷயம் தெரிய வேண்டும் என்று நினைத்தான்.

நினைத்ததை உடனே செய்யும் ரகம் ஆகாஷ்………… உடனே அண்ணாமலைக்கு போன் செய்தான்.

“நான் ராஜேஸ்வரிகிட்ட தனியா பேசணும்………. அவகிட்ட பேசமுடியுமா”, என்றான்.

என்ன ஏது? என்று எதுவும் கேட்காமல் உடனே அவளிடம் போனை கொடுத்தார் அண்ணாமலை……….. அவர் மனதில் யோசனை ஓடியது……. “நான் வீட்டில் இன்னும் எதுவும் பேசவேயில்லையே……… அதற்குள் இவன் ஏதாவது உளறி விடுவானோ. நான் என்ன கண்டேன் இவனுக்கு ராஜியை பிடிக்கும் என்று…… பிடிக்காது என்றல்லவா நினைத்தேன்”,  

“ஆகாஷ் மா உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்”, என்றார்.

“என்கிட்ட என்ன பேச இருக்கு”, என்பது போல நினைத்துக்கொண்டே அவளின் ரூமிற்குள் சென்றாள் ராஜி.

“என்னங்க விஷயம்”,

“ராஜி நான் உன்கிட்ட கேட்பேன்……… உண்மையா பதில் சொல்லனும்”, என்றான்.

“ம்! கேளுங்க”,

“நீ யாரையாவது காதலிக்கிறியா”,

அவனின் கேள்வியில் அவளுக்கு கோபம் வந்தது…….

“இல்லையே ஏன் இந்த மாதிரி எல்லாம் கேட்கறீங்க”, என்றாள் கோபமாக.

அந்த நேரத்தில் செந்திலின் முகம் அவளின் மனக்கண்ணில் தோன்றவும் இல்லை….. மின்னவும் இல்லை……….. மறையவும் இல்லை………..

அவளின் கோப குரலை கேட்டவன், “ஹேய்! கூல்! கூல்! டென்ஷன் ஆகாத…. நான் கூட அப்படி தான் நினைச்சேன்”, என்றான்.

“அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் கேட்கறீங்க”,

அவளிடம் டீக்கடைக்காரர் சொன்னார் என்றெல்லாம் சொல்ல மனம் வரவில்லை ஆகாஷிற்கு………..

“தோணிச்சு! கேட்டேன்”, என்றான்.

“எதுக்கு தோணனும்?”, என்றாள் பிடிவாதமாக……… காரணத்தை தெரிந்தே ஆக வேண்டும் என்று.

இப்போது வெளிப்படையாக பேசினான் ஆகாஷ்………

“உங்கப்பா உன்கிட்ட சொல்லிட்டாரா என்னன்னு தெரியலை…….. எனக்கும் உனக்கும் கல்யாணம் பேசலாம்னு அவர் மனசுல இருக்கு”, என்றான்.

இது முற்றிலும் புதிய செய்தி ராஜிக்கு………

“அதுக்கு”,

“நான் சரின்னு சொல்றதுக்கு முன்னாடி நீ யாரையாவது காதலிக்கிறியான்னு தெரிஞ்சிக்கனும்னு நினைச்சேன்”, என்றான்.

அவன் பேச்சிலிருந்தே அவனின் சம்மதம் தெரிந்தது…….

இந்த விஷயத்தை……….. அவனின் சம்மதத்தை ராஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை……..

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் சமைந்து நின்றாள்…………

அதே  சமயம் அவன் போனில் பேசிய பேச்சுக்கள் ஞாபகத்திற்கு வந்தது……. “அப்போது தன்னுடனான திருமணத்தை பற்றி தான் பேசினானா……… யாருக்காகவோ என்னை மனமில்லாமல் திருமணம் செய்துகொள்கிறானா…….. நான் அவனுடைய லைஃப் ஸ்டைலுக்கு ஒத்து வரமாட்டேன் என்று நினைக்கிறானா……. தோற்ற பொருத்தமும் இல்லை என்று நினைக்கிறானா……….”,

“இப்படி இவன் என்னை கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்ன இருக்கிறது……. என்னை சுற்றி என்ன நடக்கிறது………. யார் அந்த அனி….. நீ திருமணம் செய்தால் தான் நான் திருமணம் செய்வேன் என்று அவளிடம் ஏன் கூறினான்……..”,

“யாரோடு அவளின் திருமணம் நடக்க வேண்டும்……… இவனுக்கு யார் அவள்……… “,

“என்னுடைய திருமணத்தை பற்றி இவர்களுக்கு என்ன வந்தது”,

அந்தப்புறம் இவளின் அமைதியை பொறுக்காத ஆகாஷ்……. “ராஜி! ராஜி!”, என்று அழைக்க….

“நீங்க யாரு என்ன நடக்குது இங்க”, என்றாள்.

இப்போது பதில் பேச முடியாதவனாக ஆகாஷ் நின்றான்.  

Advertisement