Advertisement

அத்தியாயம் ஐந்து:

செந்தில் ஏன் டீக்கடைக்கு வரவில்லை……. ராஜியால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஒருவருக்கொருவர் வேண்டாம் என்று நினைத்தாலும் நினைவுகள் அவர்களையும் மீறி அடுத்தவரை வட்டமிட்டது. செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு இருந்தனர்.

பஸ்ஸில் ஏறிய பிறகும் செந்திலின் நினைவாகவே இருந்தது ராஜேஸ்வரிக்கு……… அவனை காணாதது எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றமாக இருந்ததோ. 

“ஒரு நாள் சண்டை போட்டதுமே பின்னடித்து விட்டான். இவனின் வீரம் அவ்வளவு தானா…….. இவன் தன் மேல் வைத்த காதல் அவ்வளவு தானா. இவனுக்கு பிடித்த மாதிரி இருந்தால் தான் என்னை இவனுக்கு பிடிக்கும்……… நான் நானாக இருந்தால் இவனுக்கு என்னை பிடிக்காது”.

“இவன் பிடித்திருக்கிறது என்று சொன்னால் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று நான் உடனே சொல்ல வேண்டுமா…….. போறான் அவனும் அவன் காதலும்”, என்று மனதிற்குள் அவனை பற்றிய எண்ணங்களையே ஓடவிட்டு அவனை திட்டிக்கொண்டே இருந்தாள்.

காலேஜ் வந்தும் பாடங்களில் மனமே செல்லவில்லை. இரண்டாம் ஆண்டு அப்போதுதான் துவங்கி ஒரு மாதம் ஆகியிருந்ததால் ஒரு பீரியட் கூட  ப்ரீயாக விடாமல் மாற்றி மாற்றி பாடம் எடுத்துக்கொண்டு இருந்தனர். மனம் ஒரு நிலையில் இல்லை.

இடைவிடாது யோசனையில் இருந்ததால் மாலையில் மறுபடியும் வீடு செல்ல பஸ் ஏறிய போது தலைவலி ஏகத்துக்கும் இருந்தது. வீடு வந்து சேர்ந்தால் போதும் என்று ஆகிற்று.

வீட்டிற்குள் உள்ளே நுழையும் போதே கண்கள் தாமாக செந்திலை தேடின. அவன் யாரோ ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ராஜி உள்ளே நுழையும் போதே செந்தில் பார்த்துவிட்டான் உடனே பார்வையை அவளிடம் இருந்து திருப்பியும் விட்டான்.

“பெரிய இவன்”, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே மேலே போகப்போக………. “என்ன பாப்பா சோர்ந்து தெரியற”, என்றார் அவளை பார்த்த சீனியப்பன்.

“தலைவலி மாமா”, என்றாள்.

தேவிகா சீனியப்பனை அண்ணா என்று அழைப்பதால் ராஜியை மாமா என்றே அழைக்க பழக்கியிருந்தாள்.

“அப்படியா! மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா”,

“அம்மாகிட்ட இருக்கும் மாமா”,

“சரி போய் ஒரு மாத்திரையை போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு போ”, என்று கரிசனமாக சொல்லி அனுப்பினார்.

அவருக்கு எப்போதும் ராஜி என்றால் தனி பாசம்……. அவர் பார்த்து பிறந்து அவர் கண்முன்னால் வளர்ந்த குமரி அவள்.

இதையெல்லாம் பார்த்தும் பாராமல் பார்த்துக்கொண்டு இருந்தான் செந்தில். “இவளால தான் மத்தவங்களுக்கு தலைவலி, இவளுக்கு போய் எங்க இருந்து வரும் தலைவலி”, என்று மனதிற்குள்ளேயே நொடித்தான்.           

இவர்கள் பேசுவதை மேலே இருந்து பார்த்துக்கொண்டு இருந்த தேவிகா…… “என்ன ராஜி”, என்றார்.

“தலைவலிம்மா”, என்று அவருக்கும் பதிலளித்தவள்  சென்று படுத்துக் கொண்டாள்.

“ஏன் மதியம் சாப்டியா இல்லையா”, என்றார் சற்று பதட்டத்தோடு.

“சாப்டேன் மா”, என்று அம்மாவின் முகத்தை படுத்தவாறே பார்த்தாள்.

“சரி நீ படு! நான் காபியும் மாத்திரையும் கொண்டு வர்றேன்”, என்றார்  கவலையாக.

அம்மாவின் கவலையான முகத்தை பார்த்தவள்…….. “ஒண்ணுமில்லைமா தலைவலி தான் அதுக்கு ஏன் நீ இவ்வளவு கவலைப்படற”, என்றாள்.

தேவிகா இப்படி தான் மகளுக்கு ஏதாவது சிறு விஷயம் என்றாலும் பதறிவிடுவார். அதிக ஆர்ப்பாட்டம் செய்வார். மகளின் மீது கொள்ளை பாசம். ராஜிக்கும் அவர் போலவே அம்மா மேல் பாசம் தான் இருந்தாலும் அதிகம் வெளியே காட்ட மாட்டாள். அவளின் அம்மா அவளை பார்த்துக்கொள்வதை விட அவள் அவளின் அம்மாவை பார்த்துக்கொள்வது தான் அதிகம்.

“அம்மா இப்படி பண்ணாத, அப்படி பண்ணாத…….. இதை சாப்பிடாத அதை சாப்பிடாத……..”,  என்று ராஜி பெரிய மனுஷி போல தேவிகாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டே தான் இருப்பாள்.

ஏனென்றால் தேவிகாவிற்கு சில அல்ல பல தொந்தரவுகள். உடல் பருமனை முன்னிட்டோ ஏனோ அவருக்கு தைராயிட் இருந்தது, சக்கரை இருந்தது, பிரஷர் இருந்தது, ஆஸ்த்மா இருந்தது. இத்தனை தொந்தரவுகளும் அவருக்கு இருந்தது.    

அதனால் மகள் கவனமாகவே அன்னையை பார்த்துக்கொள்வாள். தேவிகாவிற்கு கணவனும் மகளும் தான் உலகம்.  

அண்ணாமலையும் மனைவி மகள் என்றால் உருகுவார். அவரும் ராஜியின் மேல் உயிராய் இருப்பார். அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால்  பதறுவார். இருந்தாலும் ராஜிக்கு தந்தையை விட தாயின் மீது பாசம் அதிகம். பொதுவாக பெண் மகவுக்கு தந்தை மேல் தான் அதிக பாசம் என்று சொல்வர். ஆனால் இங்கே அப்படியே தலைகீழ்.    

தேவிகா காபி எடுத்து வர செல்ல…….  

அம்மாவின் கவலையான முகத்தை பார்த்தவள்…….. மனதை அமைதி படுத்த ஆரம்பித்தாள். “எவனோ ஒருவனை தேவையில்லாமல் நினைத்து தலைவலியை வரவழைத்துக் கொண்டிருக்கிறேன்.என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான். இவன் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன? எதை பற்றியும் கவலை படக்கூடாது”, என்று தனக்கு தானே சொல்லிகொண்டாள்.

அம்மா காபி தர அதை குடித்து மாத்திரையும் சாப்பிட்டு அமைதியாக உறங்க ஆரம்பித்தாள். படுத்துறங்கி எழுந்த பிறகு மனது சற்று அமைதியானது போல இருந்தது.

யாரை கண்டும் தான் ஏன் தன் நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று எப்பொழுதும் போல தொழில் நடக்கும் இடத்திற்கு சென்று சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

செந்தில் வந்த பிறகு அவள் அதிகம் கீழே வருவதில்லை. முன்பெல்லாம் தினமும் வந்தவள் இப்போதெல்லாம் வருவதில்லை. நிறைய நாட்களுக்கு பிறகு வந்தாள்.

செந்தில் இவளுக்கு இங்கே என்ன வேலை என்பது போல பார்த்தான். யாருடைய பார்வையும் தன்னை கொண்டு போக விடவில்லை. எப்பொழுதும் போல சீனியப்பனிடம் சென்று அமர்ந்து கொண்டு தொழில் விவரங்களை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

செந்திலுக்கு அவள் முன்பு தினமும் வந்தமர்ந்து சிறிது நேரம் தொழிலை கவனித்தது தெரியாது. இன்று அவளை பார்த்தவுடன், “ஒஹ்! முதலாளி அம்மான்னு எனக்கு காட்றா போல”, என்று நினைத்துக்கொண்டான்.   

அதற்குள் யாரோ ராஜியின் தந்தையை பார்க்க வர செந்திலே பதில் சொல்லி அனுப்பும்படி ஆகிற்று.

இவங்கப்பா வேற வாரம் தவறாம அடிக்கடி வெளியூர் போறார் ஆர்டர் பிடிக்கிறேன்னு……… அவர் இப்படி அடிக்கடி போகவேண்டிய அவசியமேயில்லை. எல்லாம் முக்கால்வாசி போன்லயே முடிஞ்சிடுது. எல்லாம் ரெகுலர் கஸ்டமர்ஸ் தான். அதுவும் நான் வந்த ஆரம்பத்துல போனாலும் ஒரு ரெண்டு நாள்லயே வந்துடுறவர்………  இப்போல்லாம் எல்லா வேலையையும் என் தலையில கட்டிட்டு நாலு நாள் கழிச்சு வர்றார்.  

அப்படி என்ன வேலை என்று யோசனையாக இருந்தது செந்திலுக்கு. அவர் வெளியூர் போனால் வீட்டிற்கும் அடிக்கடி தொடர்பு கொள்ள மாட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது செந்திலுக்கு இப்போதெல்லாம் சற்று சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேலை ஷோக்கு பேர்வழியாக இருப்பாரோ…….. மனுஷன் தண்ணி பொண்ணுன்னு ஏதாவது விஷயமா இருக்குமோ.

மனுஷன் மட்டும் என்ன பண்ணுவாரு பார்க்க இளமையா சின்ன வயசா இருக்காரு. அவங்க வீட்டம்மா நடக்கவே கஷ்டப்படுது……… பார்த்தா அவருக்கு அக்கா மாதிரி அம்மா மாதிரி இருக்கு……… ஒருவேலை அப்படியும் விஷயம் இருக்குமோ. ஏனோ அவனுக்கு உள்மனது ஏதோ சரியில்லை அதான் அடிக்கடி சென்னை போகிறார் என்று தோன்றியது.

முதலில் தொழில் விஷயமாக தான் என்று அவன் நினைத்துக்கொண்டு இருந்தாலும் ஊன்றி பார்க்கும் போது அப்படி ஒன்றும் அதனால் தொழிலுக்கு சாதகமில்லை என்றே தோன்றியது.       

அன்று இரவு தந்தையிடம் கேட்கவும் செய்தான்……… “என்னப்பா முதலாளி அடிக்கடி வெளியூர் போறார்…….. அப்படி என்ன வேலை? தொழில் விஷயமா போனாலும் இத்தனை நாள் தேவையிருக்காதே.

அவன் கேட்கவும் ஒரு நொடி தந்தையின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி தோன்றியது அப்படியே மாற்றிக்கொண்டார். அதை செந்தில் கவனிக்கவும் செய்தான்.

“நமக்கு எதுக்கு அவங்க விஷயம் எல்லாம்………. எப்படியோ போறாங்க. நம்ம அவங்களை கேட்கவா முடியும்”, என்றார் விட்டேற்றிதனமாக……

அவரின் பதிலில் செந்திலுக்கு ஏதோ இடித்தது. தனது தந்தைக்கு அண்ணாமலை எதற்கு அடிக்கடி ஊருக்கு போகிறார் என்று தெரியும் போலவே தோன்றியது. அதனால் அவரிடம் மேலும் பேச்சுக்கொடுத்தான்.  

“தொழில் விஷயம் தானேப்பா……… நீங்க அவர்கிட்ட  எதுக்கு போறீங்கன்னு கேட்டா என்ன? இங்கிருந்தே வேலை நடக்கும் போது எதுக்கு அனாவசியமா போகணும்”,

“நம்ம எப்படி எதுக்கு நீங்க போறீங்கன்னு கேட்கவா முடியும்”,

“ஆனா தேவையே இல்லையேப்பா. ஒவ்வொரு தடவையும் போனா மூணு நாள் நாலு நாள் பண்றாரு……. அதிகமா சென்னை தான் போகறார்”.

“எனக்கு தெரியலையேப்பா”, என்றார்.

“ஏம்பா இத்தனை வருஷமா அங்க இருக்கறீங்க……… அவர் தொழில் வேலையெல்லாம் முக்கியமா நீங்க தான் பார்க்கறீங்க……… அவர் ஊருக்கு போனா யார்கிட்டயும் பேசறது கிடையாது, உங்ககிட்ட மட்டும் தான் பேசறார்…. உங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பில்லையேப்பா”.

“என்ன இருந்தாலும் அவர் முதலாளி…….. நான் தொழிலாளி……… அதை மீறி நான் அவர்கிட்ட அதிகம் துருவ மாட்டேன்”, என்றார்.   

“அப்போ வேலையில்லாம சும்மா வேற காரணதுக்காகவா போறாரு”, என்று மறுபடியும் ஒரு கேள்வியை தொடுத்தான்.

“அவர் எதுக்கு போனா உனக்கு என்ன? எதுக்கு இப்படி நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்க……..  சாப்பிடற வேலையை பாரு”, என்று சொல்லியவர் மேலே ஒன்றும் பேசவில்லை.

அதற்குள் அவனின் அம்மாவும்…….. “எதுக்கு செந்திலு தொன தொனன்னு பேசிட்டு இருக்க, யார் எப்படி போனா நமக்கென்ன…….. அப்பாவை சாப்பிட விடு……. நீயும் சாப்பிடு”, என்று அதட்டினார்.

“உங்கம்மா சொல்றால்ல…… சாப்பிடு”, என்று சீனியப்பனும் அதட்டினார். 

இவர் எதற்கு இவ்வளவு கோபப்படுகிறார் என்று புரியாதவனாக விட்டு பிடிப்போம் என்று நினைத்தான். அதே சமயம் தன் தந்தைக்கு ஏதாவது தெரிந்திருந்தால் விஷயத்தை வாங்கியே விடுவது என்று முடிவும் செய்துகொண்டான். ஏதோ இருக்கிறது என்று உள்மனது சொன்னது. அதிகம் அது சொல்வது செந்திலுக்கு சரியாகத்தான் இருக்கும்.       

இதே நினைவுகளுடனே உறக்கத்தை தழுவினான்.

அடுத்த நாள் காலையிலேயே அசோக் அவனை போனில் அழைத்தான். “டேய் மாப்ள! இன்னைக்கு வருவியா, மாட்டியா? அப்புறம் நான் மட்டும் பைத்தியக்காரன் மாதிரி போய், நீ எப்போ வருவேன் பார்த்துட்டு தனியா உட்கார்ந்து இருக்கணும்”,

“போவதா? வேண்டாமா? என்று பெரிய குழப்பம் செந்திலுக்கு. அவளை பார்க்க மட்டும் தான் போகவேண்டும் என்று ஏதாவது இருக்கா என்ன? நீ பாட்டிற்கு உன் நண்பனை பார்ப்பது போல போவதற்கு என்ன? இவளுக்கு பயந்து நீ போகாமல் இருக்கபோகிறாயா?”, என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போதே……

“டேய்! போன்ல இருக்கியா இல்லையா”, என்று அதற்குள் பொறுமையில்லாமல் கத்தினான் அசோக்.

“டேய்! ஏண்டா இப்படி கத்தற”

“பின்ன என்னடா கேட்டேன்? வருவியா மாட்டியான்னு கேட்டேன்? அதுக்கு பேச்சே காணோம்……… என்ன உன் ஆளோட உனக்கு ஏதாவது தகராறா”, என்று கரக்டாக பாயிண்ட்டை பிடித்தான்.

நண்பனாகவே இருந்தாலும் அவன் முன்னால் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை…….

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, அதான் சாயிந்தரம் முழுசும் வீட்ல அவளை பார்த்துட்டு தானே இருக்கேன்”.

“அப்போ என்னை பார்க்க வரமாட்டியா நீ”, என்று எகிறினான் அசோக்.

“வரண்டா! வரண்டா!”, என்று அவனை சமாதனப்படுத்தியவன் மனமேயில்லாமல் கிளம்பினான்.

இன்று தூரத்தில் வரும்போதே ராஜேஸ்வரி அவனை பார்த்துவிட்டாள். “நேத்து வரலை இன்னைக்கு வந்திருக்கான்……. விட்டது தொல்லைன்னு நினைச்சேனே” என்று மனம் நினைத்தாலும் வரும்போதே டீக்கடையில் அவன் இருக்கிறானா என்று கண்கள் தேடியது நிஜமே.

“டேய்! உன் ஆளு வருதுடா”, என்றான் அசோக்.

“அதான் தினமும் வீட்ல பார்க்கறன் இல்லை விடுடா”, என்றான்.

“இதென்ன அவளை பார்ப்பதற்க்க்காகவே பிறவி எடுத்தது போல நாள் தவறாமல் வந்து பார்த்துக்கொண்டு இருப்பான்………. இப்போது இரண்டு நாட்களாக ஏதோ பின்னடிக்கிறான்………. என்னவோ நடந்திருக்கிறது”, என்று அனுமானித்தான் அசோக்.

“என்னாடா எதையாவது மறைக்கிறியா……….. ஏதாவது பிரச்சனையா”,

“ஒண்ணுமில்லைடா! நீ வேற அதையே நோண்டிட்டு இருக்க விடுடா”, என்று எரிந்து விழுந்தான்.

“இவன் இப்படி தான் பதில் சொல்ல முடியலைன்னா வள்ளுன்னு விழுந்து வாயை அடைச்சிடுவான்……… சரியான அழுத்தக்காரன்”, என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டிகொண்டான் அசோக்.

அதற்கு மேல் செந்திலிடம் பேச முடியாது…… அவனுக்கு கோபம் வந்துவிடும். சரியான முன்கோபி. தன் நண்பனின் குணம் தெரிந்து நடந்து கொள்பவன் அசோக். அதான் அவர்களுக்குள் ஒரு சிறந்த நட்பு இருந்தது. செந்திலிடம் எந்த மாதிரி உறவு வைத்துக்கொள்வதும் கஷ்டம். அவனுக்கு கோபம் வந்தால் நிமிடத்தில் தூக்கி எறிந்துவிடுவன். இப்போது ராஜ ராஜேஸ்வரியை அவள் எனக்கு வேண்டாம் தூக்கி எறிந்த மாதிரி.

ஒற்றை பிள்ளையாய் பிறந்தவன்.  கூடப் பிறந்தவர்கள் இருந்திருந்தாலாவது சற்று விட்டுக்கொடுத்தலை பற்றி, மற்றவர்களோடு அனுசரித்து போவதை பற்றி பழகி இருப்பான். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

என்ன அவனிடம் உள்ள குறை சினிமாவில் வருவது போல ஒரே பாட்டில் பணக்காரனாகி விட வேண்டும். அதற்கு அவன் தேர்ந்தேடுத்த வழியே ராஜியை திருமணம் செய்துகொள்வது……… இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. அவளை வேண்டாம் என்று நினைத்துவிட்டான்.

 தனது திட்டம் பாழானதால் கடுப்பான மனநிலையிலேயே இருந்தான். அதான் அசோக்கிடம் கூட சுள்ளென்று பேசினான். 

செந்தில் ஏதோ கடுப்பில் இருக்கிறான் என்று புரிந்த அசோக் அவனிடம் மேலும் பேச்சை வளர்க்காமல் அமைதியாக இருந்தான்.

அவனின் அமைதியை பார்த்த செந்தில், “என்ன மச்சி கடுப்படிக்கறனா”, என்றான்.

“ஏதோ புரிஞ்சா சரி”, என்று அவன் சலித்துக்கொள்ள……

“விட்றா! விட்றா! மாமூ விட்றா!” என்று அவனை சமாதானப்படுத்தினான் செந்தில்.

“என்னவோ நீ ரெண்டு நாளாவே சரியில்லைடா………. அதையும் இதையும் போட்டு குழப்பாத……… நல்ல சம்பளம்……… வேலையை விடறது பத்தி எல்லாம் யோசிக்காத!”, என்று தன் நண்பனுக்கு சொன்னான் அசோக். அவன் சொந்ததொழில் ஆரம்பிக்கும் யோசனையில் ஒருவேளை இப்படி இருக்கிறானோ என்று.

ஆனால் செந்திலின் பிரச்சனையே ராஜி ஆயிற்றே. அதை அவன் வெளியே சொல்ல இஷ்டப்படவில்லை.

அண்ணாமலை இல்லாததால் செந்திலுக்கு அன்று நிறைய வேலை. பேங்கில் வேலை இருந்தது. அது முடிந்ததும் சேலத்திற்கு வசூலுக்கு வேறு சென்றான். அங்கே நிறைய நேரம் உட்கார வைத்துவிட்டார்கள். பசி வேறு வயிற்றை கிள்ளியது. எழுந்து போனால் பணம் வசூலாகுமோ ஆகாதோ, பிறகு நாளைக்கு வா என்று சொல்லுவார்கள், என்று அமர்ந்தே இருந்தான். பணம் வசூலாகும் போது நான்கு மணி ஆகிவிட்டது.

வெளியில் சாப்பாடு சாப்பிடுவதற்கும் அவனுக்கு பிடிக்காது. அதுவுமில்லாமல் சாப்பாடு நேரமும் கடந்து விட்டது. அதனால் ஒரு டீ குடித்து ரெண்டு போண்டாவை அதனுடன் அனுப்பினான்.

பிறகு தான் சற்று தெம்பாக உணர்ந்தான். ஆனாலும் பசித்தது. பின்பு ஊருக்கு போக பஸ்நிலையம் சென்றால் அங்கு ராஜி ரெகுலராக செல்லும் பஸ் மட்டுமே நின்றிருந்தது.

ஏறி……….. உட்கார இடத்தை பார்த்தால்……… ஒரு மூதாட்டியின் அருகில் ஒரே ஒரு சீட் மட்டுமே காலி இருந்தது. அங்கே அமர்வதா வேண்டாமா என்று நின்று கொண்டே இவன் யோசிக்க…….

அவனை பார்த்த அந்த பாட்டி, “நானென்ன குமரியா…… நீ உட்கார்றதுக்கு யோசிக்கிற, சும்மா உட்காரு கண்ணு”, என்றார் அவர்.

பிறகே அமர்ந்தான்.  

பஸ் எடுக்கும் நேரமும் ஆகிவிட்டது. பஸ்சிலும் கூட்டமாக ஆரம்பித்தது. ஏன் இன்னும் காணவில்லை என்று அவன் ராஜியைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே பஸ்சும் மெதுவாக பஸ் ஸ்டாண்டை விட்டு நகர ஆரம்பித்தது. அப்போதுதான் வேகமாக வந்து ஏறினாள். 

பஸ்சில் கூட்டத்தை பார்த்ததுமே உட்கார இடம் கிடைக்காது என்று புரிந்தவள்…… கண்களை சுழல விடவில்லை. சுற்றி பார்த்திருந்தால் செந்தில் உட்கார்ந்திருந்தது தெரிந்திருக்கும். இவள் தான் ஏறின உடனேயே முன்னே போகப்பார்த்தாள், நிறைய பேர் இருந்ததினால் உள்ளே போக முடியவில்லை. வேறு வழியில்லாமல் உள் நோக்கி நகர்ந்தாள்.

அப்போதும் செந்திலை கவனிக்கவில்லை…….. அவன் அமர்ந்திருந்ததுக்கு ஒரு சீட் முன் தான் நின்றிருந்தாள்.

அவள் தன்னை கவனிக்கவில்லை என்று செந்திலுக்கு தெரிந்தது. கூட்டம் வேறு நிறைய இருந்தது. இடித்துக்கொண்டு நிற்பர். எழுந்து அவளுக்கு இடம் விடலாமா என்று யோசித்தான்.

இவன் யோசிக்கும் போதே பஸ், பஸ் ஸ்டாண்டில் இருந்து திரும்ப……… அந்த திருப்பத்தில் யாரோ ஒருவன் வேண்டுமென்றே அவள் மேல் சாய்வது போல செந்திலுக்கு தோன்றியது.

செந்திலால் அதை பார்த்துக்கொண்டு உட்கார முடியவில்லை. அவன் எழுந்து இடம் விடுவதற்காக அவளை கூப்பிட எத்தனிக்கையிலேயே ராஜி தன் மேல் வேண்டுமென்றே சாய்ந்தவனை முறைத்தாள்.

அவளை எப்படி பொது இடத்தில் பெயர் சொல்லி அழைப்பது என்று புரியவில்லை செந்திலுக்கு. அதிலும் ஒருவன் வம்பு செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.

இதற்குள் அவளை இடித்தவன் அவள் முறைப்பதை பார்த்ததுமே ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து……. பக்கம் நெருங்க……. “கொஞ்சம் தள்ளி நிக்கறீங்களா”, என்றாள் ராஜி.

“டேய்! பொண்ணு ரொம்ப சூடா இருக்குடா”, என்று அவன் அசிங்கமாக தன் நண்பனிடம் பேசினான்…… அவர்கள் மூன்று பேர் இருந்தனர். போதையில் இருந்தனர்.

கேட்ட ராஜிக்கு கோபம் வந்தது. அதற்குள் செந்தில் சற்று எட்டி அவளின் கையை தொட்டான்.

ராஜி திரும்பி பார்க்க…….. “இங்க வந்து உட்காரு”, என்றான். இவன் எங்கே இங்கே ஒரு நொடியே யோசித்தாள். இருந்தாலும் நிம்மதியாக உணர்ந்தாள். எப்படி இந்த  வம்பு செய்பவனிடம் இருந்து தப்பிப்பது என்று மனதில் சற்று பயத்தில் இருந்தாள். இன்னும் கொஞ்சம் நேரம் சென்றிருந்தால் கண்டக்டரிடம் சொல்லியிருப்பாள். தினமும் அதே பஸ்சில் வருவதால்  அந்த டிரைவரும் கண்டக்டரும் அவளின் தந்தைக்கு பரிச்சயமே.    

இவனை பார்த்ததும் சொல்லொணா நிம்மதி. இவன் விடும் இடத்தில் அமர்வதா என்று ஏட்டிக்கு போட்டியாக எல்லாம் நினைக்கவில்லை. ஏற்கனவே ஒருவன் தன்னிடம் வம்பு செய்து கொண்டிருக்கிறான் என்பதால் ராஜி பேசாமல் அங்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

ஆனால் ராஜி சற்று அவமானமாக உணர்ந்தாள். இத்தனை நாட்கள் பஸ்ஸில் வருகிறாள் ஒரு நாள் கூட இப்படி ஆனதில்லை. அதுவும் செந்தில் முன்னிலையில் இப்படி ஆனது அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை.

ராஜிக்கு இடம்விட்டு செந்தில் எழுந்து நின்றதும்……. அவளை இடித்தவன், “பாருடா அண்ணன் துடிக்கிறாரு, எழுந்து இடம் விட்டுட்டாரு”, என்றான். அதை கேட்ட அவன் நண்பர்கள் சத்தமாக சிரித்தனர்.

அங்கிருந்த பயணிகள் யாருக்கும் இவர்களின் செய்கைகள் பிடிக்கவில்லை தான், இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்க பயந்து வேடிக்கை தான் பார்த்தனர்.

அவர்கள் தன்னை சீண்டுவது புரிந்தும் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் நின்றான் செந்தில். அவனின் அமைதி  ஏதோ ஒரு வகையில் ராஜியை இடித்தவனை சீண்ட…..

“டேய்! உன்னை பத்தி தாண்டா பேசறோம், அதென்னடா பொண்ணை பார்த்த உடனே பொசுக்குன்னு எழுந்து இடம்விட்டுட்ட……… இப்போ என்ன பண்ற அந்த பொண்ணை எழுப்பிவிட்டு எங்களை உட்கார வைக்கற”, என்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கண்டக்டர், “வம்பு செய்யாதீங்க! இல்லைனா பஸ்ஸை நிறுத்தி இறக்கி விட்டுடுவேன்”, என்றார்.

“யாருகிட்ட? எங்களை இறக்கி விட்டுட்டு நீ பஸ் எடுத்துடுவியா? எப்படி இருந்தாலும் எங்க ரூட்ல தான் உங்க பஸ் வரணும். எங்களை மீறி அப்புறம் நீ எப்படி பஸ்ஸை இந்த ரூட்ல நீ ஒட்டுறேன்னு நான் பார்க்கறன்”, என்று பதிலுக்கு கண்டக்டரை மிரட்டினான்.

கண்டக்டருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வண்டி கொஞ்சம் தூரமும் வந்திருந்தது……… பக்கத்தில் எதுவும் போலிஸ் ஸ்டேஷன்னும் இல்லை. அவர் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே மறுபடியும் அவர்கள் செந்திலிடம் திரும்பி, “என்ன? சொல்றேன் இல்லை! அந்த பொண்ணை எழுப்புடா”, என்றான்.

ராஜி மிகுந்த பதட்டத்தோடு இதை பார்த்துக்கொண்டு இருந்தாள். எதுக்கு வம்பு எழுந்து அவர்களுக்கே இடம் விட்டுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் டிரைவர் பஸ்ஸை நிறுத்தி இருந்தார்.

“சொல்றேன் இல்லை”, என்று மறுபடியும் எகிறிய அவன் செந்திலின் அருகில் வர…… இனி பொறுமையெல்லாம் ஆகாது என்றுணர்ந்த செந்தில்…… அவன் கையில் இருந்த வாட்சை கழட்டினான். அது ஒரு செயின் ஸ்ட்ராப் கொண்ட வாட்ச். அதன் டையல் உள்ளங்கையில் வருமாறு பிடித்து கையை மூடினான். செயின் கட்டும் இடம் கை முஷ்டிக்கு மேல் வந்தது. இதையெல்லாம் மிகுந்த பொறுமையுடன் மெதுவாக செய்தான்.

நான் பேசிக்கொண்டு இருக்கிறேன், இவன் என்ன செய்கிறான் என்பது போல பார்த்துக்கொண்டிருந்தவன்……. இவன் செய்கைகளை பார்த்து தன்னை இவன் அடிக்க போகிறானோ என்று  யோசிக்கும் போதே செந்தில் அவன் முகத்தில்  வாய் அருகே ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான்.

அந்த செயின் ஸ்ட்ராப் அடி அவன் முகத்தில் பலமாக விழ அந்த உரசியவனுக்கு ஒரு மரண வலியை கொடுத்தது. பக்கத்தில் இருந்த பஸ் கம்பி மேல் வேறு அவன் வேகமாக மோதினான். அது வேறு இன்னும் வலியை கொடுத்தது.                   

அப்படியே கீழே படுத்து விட்டான். பயணிகள் அவசரமாக அவனை விட்டு ஒதுங்கி நின்றனர்.

அவனின் நண்பர்களை பார்த்த செந்தில், “அடுத்து எவண்டா வர்றீங்க”, என்று கர்ஜிக்க, அவனின் நண்பர்கள் இவனின் புறம் திரும்ப கூட இல்லை. அடிபட்ட தங்களின் நண்பனை பார்க்க, அவன் வலியில் துடிப்பது தெரிந்தது. உதடு கிழிந்து ரத்தம் வந்தது.

“இவனுங்களுக்கு எல்லாம் இப்படி தான் பதில் கொடுக்கனும்மா”, என்று ராஜியின் பக்கத்தில் இருந்த பாட்டி ராஜியிடம் சொன்னார். ராஜியால் அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை. நடந்த நிகழ்விலிருந்து அவள் வெளியே வரவில்லை.  செந்திலின் இந்த  புதிய பரிமாணம் ராஜி அறிந்திராதது.  

பயணிகள் மத்தியிலும் ஒரே சலசலப்பு. 

அதற்குள் பஸ் நடுவில் நின்றதால் பின்னே டிராபிக் ஜாம் ஆக……… டிரைவர் வண்டியை எடுத்து அடுத்த ஸ்டாப்பில் நிறுத்த, அவர்கள் தங்களின் அடிப்பட்ட நண்பனை அழைத்துக்கொண்டு சத்தமில்லாமல் இறங்கிக்கொண்டனர். வெண்ணந்தூரை நோக்கி பஸ் கிளம்பியது.  

அவர்கள் இறங்கியதும் செந்தில் திரும்பி ராஜியை பார்க்க……….

இப்போது சற்று பயத்தோடு அவனை பார்த்தாள் ராஜி.

  

Advertisement