Advertisement

அத்தியாயம் நான்கு:

முதல் முறையாக ராஜியின் யோசனைகள் செந்திலை தாக்கின. எப்போதும் அவளை காதலிக்க வைப்பது எப்படி என்று மட்டுமே யோசிப்பான். அவனுடைய குறிக்கோள் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே. வேறு அதிகம் அவளை பற்றியோ அவளின் குணாதிசயங்கள் பற்றியோ அதிகம் நினைத்ததில்லை.

இன்று அவளின், “நீ கீழே போ…… நான் வர்றேன்”, என்று அவனை மேலே நிற்க விடாமல் துரத்தியது ஒரு வகையில் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது,  ஒருவகையில் மிகுந்த மன வருத்தத்தையும் கொடுத்தது.

இப்படி துரத்தி துரத்தி காதலித்து அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து சாதிக்க போவது என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. “பார்க்கவும் சுமார்………. உன்னையும் மதிக்க மாட்டேங்கறா…….. அப்படி அவ உனக்கு தேவையா. பணம் இருக்குன்ற ஒரே காரணத்துக்காக அவ எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் அவ பின்னாடி சுத்துவியா நீ”, என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது. 

“சீ, சீ, இந்த பழம் புளிக்கும்”, என்று தோன்ற ஆரம்பித்தது…………

கிட்ட தட்ட ஒரு வருடமாக அவள் போகும் போதும் வரும்போதும் அவளின் பார்வைக்காக பார்த்து நின்றது எல்லாம் மறந்து போயிற்று. காதலிப்பதற்காக அவள் காலிலா விழ முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது.

முதலில் அவனுக்கு அவள் மேல் இருப்பது காதலா என்றே தெரியவில்லை. ஏதோ பார்த்தான்………. வசதியான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால் வசதியான வாழ்க்கை வாழலாம் என்று தான் நினைத்தான். அவன் நினைப்பு அவனுக்கு தப்பாக தோன்றாததால் அவள் பின்னாடி சுற்றவும் செய்தான்.

இன்று அவள் நாயை போல் தன்னை முதல்ல நீ கீழ போ என்று விரட்டியது அவனை மிகவும் பாதித்தது.   

அவனுக்கு புரியவில்லை நிஜமாகவே அவன் அவளை காதலித்து இருந்தால் அவள் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் அவள் பின்னோடு சுற்றத் தான் தோன்றும் அவளின் வார்த்தைகள் சற்றும் வருத்தாது என்று புரியவில்லை.

இந்த ஒரு வருடமாக அவள் பின்னோடு சுற்றிய தன்னை நினைத்து அவனுக்கே கோபமாக வந்தது. “இவள் இல்லாவிட்டால் வேறொரு பெண். இப்படி இவளின் பின்னால் சுற்ற வேண்டுமா? அவசரப்பட்டு காதல் வேறு சொல்லிவிட்டேனே”, என்று அவனின் மீதே வருத்தமாக இருந்தது.    

“இவளை விட பணக்காரியா அழகியா பார்த்து கல்யாணம் கட்டனும்டா”, என்று சூளுரைத்தான்.   

இந்த நினைவுகளும் கோபமும் வருத்தமும் அவனை ஒருங்கே தாக்க…… அவன் சென்ற வேலை முடித்து திரும்ப வந்தபோதும் அமைதியாகவே இருந்து கொண்டான். ராஜியும் இவனை பார்த்தவுடனே மேலே சென்று விட்டாள்.

அவளும் மிகுந்த கோபத்தில் தான் இருந்தாள். எவ்வளவு தைரியம் இருந்தால் நான் தனியாக இருக்கிறேன் என்று தெரிந்தும் மேலே வந்திருப்பான். எது கொடுத்தது இந்த தைரியம். அவன் காதல் சொன்ன போதே அவன் மறுபடியும் தன்னை திரும்பி கூட பார்க்காத அளவிற்கு நன்றாக் திட்டி இருக்க வேண்டும். சும்மா விட்டதுமே வீட்டிற்கே வேலைக்கு வந்துவிட்டான். இன்று மேலே வந்து என்னை பார்த்து கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டு வேற இருக்கான்.

இந்த வீட்ல வேலை செய்யறோம்னு எண்ணம் கூட இல்லை. வேலை செய்யும் போதே இந்த லட்சணம் இன்னும் இவனெல்லாம் முதலாளியா இருந்தா கிழிஞ்சது. மனதிற்குள் நிறைய நேரத்திற்கு புலம்பிக் கொண்டே இருந்தாள்.     

அதன் பிறகும் கிட்ட தட்ட ஒரு மணிநேரம் கழித்த பிறகே சீனியப்பனும் அவளின் அம்மா தேவிகாவும் வந்தனர். வேறு ஒரு உறவினர் காரில் வந்து விட்டுவிட்டு போனார்.

தேவிகா உள்ளே வரும்போதே, “ராஜி வந்துட்டாளா”, என்று செந்திலிடம் கேட்டுகொண்டே வந்தார்.

“வந்துட்டா”, என்ற பதிலை கேட்ட பிறகே மேலே மெல்ல ஏறி சென்றார்.

தேவிகாவிற்கு சற்று கனத்த சரீரம் என்று சொல்வதை விட குண்டான பெண்மணி என்றே சொல்லாம். அப்படி ஒன்றும் வயதானவர் கூட இல்லை. சிறிய வயது தான். அவருக்கு திருமணமாகும் போது பதினேழு வயது……… அண்ணாமலைக்கு இருபத்தி மூன்று வயது அவ்வளவே. திருமணமான ஒரே வருடத்தில் தாயாகிவிட…….. கல்லூரியின் இரெண்டாம் ஆண்டில் இருக்கும் இருபது வயது ராஜியின் தந்தைக்கு வயது நாற்பத்தி நான்கு, தாய்க்கு வயது முப்பத்தி எட்டே.

ஆனால் அவளின் தாய்க்கும் தந்தைக்கும் தோற்றத்தில் நிறைய வித்தியாசம். ராஜியின் தந்தை ஒரு முப்பத்தியைந்து வயது மதிக்க தக்க தோற்றத்துடன் இளமையாக காட்சியளிப்பார். அவரும் அவரின் மகளும் போனால், “உங்கள் சிறிய தங்கையா”, என்று கேட்க கூடிய அளவில் தான் இருக்கும்.

தாயோ கேட்கவே வேண்டாம் பயங்கர குண்டு……… முப்பத்தி எட்டு வயதில் ஒரு ஐம்பது வயது தோற்றத்தை பெற்றிருப்பார்.

செந்தில் கூட அவர்களை பார்க்கும் போது நினைப்பான் இருவருக்கும் பொருத்தமே இல்லையே என்று. உடல் பொருத்தம் இல்லாவிட்டால் என்ன மனப்பொருத்தம் இருந்துவிட்டால் போதுமே.

அந்த வகையில் பார்த்தால் இருவரும் மற்றவரின் கண் அசைவிலேயே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்வர். அவர்களின் இந்த இருபது வருட வாழ்க்கையில் அதிக சண்டை சச்சரவு என்பது கிடையாது.

இப்போது தேவிகா மேலே ஏறிக்கொண்டு இருப்பதை பார்த்த செந்திலுக்கு அண்ணாமலையின் வேகத்துக்கும் இவரின் வேகத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்று தோன்றியது.

இவனின் மனதில் இந்த எண்ணங்கள் தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்க……… அவனின் சிந்தனையை கலைத்தார் அவனின் அப்பா சீனியப்பன்……. “நான் வீட்டுக்கு போறேன்,  நீ கொஞ்ச நேரம் இருந்து அவங்க கீழ வந்ததுக்கு அப்புறம் வா…… இன்னும் வேற ஆளுங்க யாரும் வரமாட்டாங்க……… எல்லாரும் அப்படியே வீட்டுக்கு போயிட்டாங்க முதலாளி வேற இல்லை”, என்றார்.

அவனிருந்த மனநிலையில், “என்னால முடியாது”, என்று சொல்ல வாயெடுத்தவன் அவர் இழவு காரியத்து சென்று வந்திருக்கிறார் அவர் முதலில் குளிக்க வேண்டும் என்று தெரிந்தவனாக சரி என்று தலையாட்டினான்.   

சிறிது நேரம் இருந்து தேவிகா வருவாரா சொல்லிவிட்டு செல்லலாம் என்று பார்த்து இருந்தான். அவர் வரும் வழியாக காணோம்…….. அவனுக்கா உடனே வீட்டிற்கு போய்விட்டால் தேவலாம் போல இருந்தது.

கீழே இருந்து பெல் அடித்தாலும் மேலே இருந்து வருவார்கள். பெல் அடித்தான். ராஜேஸ்வரி தான் எட்டி பார்த்தாள்.

“என்ன”, என்றாள்.

அவளுக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாதவன்…….. “அம்மாவை கூப்பிடு”,

அவளின் அன்னை இன்னும் குளித்து கொண்டு இருந்தார், அதை சொல்ல விரும்பாமல்……. “என்கிட்டயே சொல்லுங்க”, என்றாள்.

என்ன திமிர் என்று நினைத்தவன்……… “நான் வீட்டுக்கு போகணும்”, என்றான்.

“இருங்க கேட்டு சொல்றேன்”, என்றவள் அன்னையிடம் போய் கேட்டுவிட்டு வந்தாள்.

“கொஞ்ச நேரம் இருக்கறதாம்…….. அம்மா வர்றாங்களாம்”,

கீழே இருந்த டிவியை உயிர்பித்து அமர்ந்து கொண்டான்.

பொறுமையின்றி அவன் அமர்ந்திருக்க அவன் பொறுமையை எல்லாம் சோதிப்பது போல மெதுவாக கீழே இறங்கி வந்த தேவிகா……… “செந்தில் ரோட்டு கடையில பரோட்டா வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போறியா”, என்றார்.

முதலாளியம்மா ஆகிட்றே சொல்வதை செய்து தானே ஆகவேண்டும், “ம், குடுங்க”,

வேகமாக அவர் பணமும் பையும் கொடுக்க………. அவனின் டிவி எஸ் 50 யை வேகமாக உதைத்து ஸ்டார்ட் செய்தான்…….. யார் மேலோ இருக்கும் கோபத்தை வண்டி மேலே காட்டினான்.

அவனின் வண்டி பறந்தது.  அவன் திரும்ப வந்தபோது கீழே ராஜேஸ்வரி தான் அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவளின் கையில் கொடுக்காமல் அங்கே இருந்த இடத்தில் வைத்தவன்………. “கேட்டை நான் பூட்டிட்டு போறேன், கதவை நீ பூட்டிக்க”, என்று சொல்லி கிளம்பினான். அவர்களிடமும் கேட் சாவி இருந்தது, அவனிடமும் கேட் சாவி இருந்தது.

அவன் மீண்டும் வண்டியை எடுக்கும் வரையிலும் அவள் கதவை பூட்டவில்லை…….. அதை பார்த்த செந்தில் இறங்கி வந்து, “முதல்ல கதவை பூட்டு”, என்று அதட்டினான்.

“நாங்க முதலாளியா இவன் முதலாளியா….. பெருசா அதட்டுறான். இவனும் இவன் ஓட்டை வண்டியும்”, என்று எண்ணியபடியே வேகமாக வந்து அவன் முகத்தில் அறைவது போல கதவை அறைந்து சாத்தினாள்.

 “திமிர் உடம்பெல்லாம் திமிர்”, என்று அவன் குரல் சற்று உயர்ந்து சொல்ல……. கதவின் மறுபுறம் இருந்த ராஜிக்கு நன்றாக கேட்டது.

கேட்டதும் உடனே கதவு பட்டென்று திறந்தது………. கதவு திறந்த உடனே செந்தில் ராஜியை பார்க்க………

“யாருக்கு திமிர்”, என்றாள் காட்டமாக.

“உனக்கு தான்”, என்று பதிலளித்தான் அதற்கு சற்றும் குறையாமல் செந்தில்.

“எனக்கில்ல திமிர் உனக்கு தான்…….. வேலை செய்ய வந்திருக்கோம் சம்பளம் வாங்கற இடம்னு உனக்கு தான் மரியாதையே தெரியலை…….. திமிரா நடந்துக்கற”,

“ஏய்! முதல்ல மரியாதையா பேசு…… சம்பளம் குடுக்கறீங்கன்னா சும்மாவா குடுக்கறீங்க……….. வேலை செய்யறேன் குடுக்கறீங்க”,

“பின்ன வேலை செஞ்சா தான் குடுப்பாங்க………. உனக்கு சும்மா வேற குடுக்கணுமா”,

“நான் ஒண்ணும் உன்கிட்ட வேலை பார்க்கலை………. உங்க அப்பாகிட்ட தான் பார்க்கிறேன்”,

“நானெல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு வேலை குடுக்க மாட்டேன்”,

“நீ கிழிச்ச”,

“ஏன்? நீ தான் கிழிப்பியா”,

“எத்தனை தடவை சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறாதா மரியாதையா பேசுன்னு”,

“எனக்கு இப்படி தான் பேசத்தெரியும்”,

“ஏய் வாய மூடுடி”,

“டி போட்டு பேசுன…….. நானும் டா போடுவேன்”,

“ம்ம்! போடுவ! போடுவ!”,

“போடாம என்ன? முதல்ல நீ வாயை மூடிட்டு போடா”,

“என்னடி சும்மா எப்போ பார்த்தாலும் போடா போடான்னு சொல்ற……… எனக்கு போகத் தெரியும்……….. ஆளையும் அவளையும் அவ மொகரையும் பாரு……… என்ன போன்னு சொல்ல வந்துட்டா”,

“ஏன்? எனக்கென்ன குறைச்சல்………. இந்த முகத்தை பார்த்து தானே ஒரு வருஷமா என் பின்னாடி சுத்துற”,

“உன்னை பார்த்தா சுத்துனன்……… உன் பணத்தை பார்த்து சுத்துனேன்……..”, என்று சொல்ல முடியாமல்……. “நான் இருக்கிற இடமா பார்த்து நீ தான் வந்த”, என்றான்.

“ஒஹ்! இதுதான் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கறதா”,

“எதையும் நான் மறைக்கலை”,

“அப்போ என்னை பார்த்து எப்படி ஐ லவ் யூ சொன்ன”,

“அதுவா தெரியாம சொல்லிட்டேன்…….. அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன்”,

“வருதப்படுறியா…… படு! படு! ப்ச்! ப்ச்! ஒண்ணும் தப்பில்லை……… எப்படியோ நான் தப்பிச்சா சரி”, என்றாள் நக்கலாக.

அவளின் இந்த பதிலை கேட்டு மேலே என்ன பேசுவது என்றே தெரியவில்லை செந்திலுக்கு. “யம்மா……. என்னா வாயிடி உனக்கு”, என்றான்.  

“டேய்! போடா! போடா!”,

“நீ போடி முதல்ல”,

இவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் போதே தேவிகா மேலேயிருந்து   குரல் கொடுத்தார்……… “ராஜி! இன்னுமா செந்தில் வரலை”,

“வந்துட்டாங்கம்மா……… கதவை பூட்டிட்டு வர்றேன்”, என்றவள் சண்டையை அப்படியே விட்டு கதவை முகத்தில் அறைந்தார் போல மறுபடியும் சாத்தினாள்.

“திமிர்பிடிச்ச கழுத!”, என்று இந்த முறையும் சற்று சத்தமாக தான் சொல்லி செல்ல திரும்பினான் செந்தில்.

இந்த முறையும் கதவை உடனே திறந்து……… “உன்வீட்டு சோத்த தின்னா நான் திமிர் பிடிச்சு அலையிறேன்……… இல்லையில்லை போடா”, என்றாள் ராஜி.

“யம்மா! நிஜமாவே நீ தப்பிக்கலைடி………. உன்கிட்ட இருந்து நான் தான் தப்பிச்சு இருக்கேன்……… ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல”,

“நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கன்னு  ஊருக்குள்ள சொல்லிகிட்டாங்க”, என்று அதற்கும் நக்கலாக பதிலளித்தாள்.  

இவளோடு வாய் கொடுத்து மீள முடியாது என்று நினைத்தவன், “போடி! போடி!”, என்று சொல்லி……….  இவள் விட்டால் இன்னும் பேசுவாள், அவளின் அம்மா கீழே வந்துவிட்டால் என்ன செய்வது என்று அங்கே மேலும் பேசிக்கொண்டு நிற்காமல் கேட்டை பூட்டி சென்றான்.

அவன் சென்ற பிறகே கதவை பூட்டி மேலே சென்றாள் ராஜேஸ்வரி. அப்போதும் “தப்பிச்சிட்டானாம இவன்…….. வெட்டியா சுத்திட்டு இருந்த பய பேசுற பேச்சை பாரு”, என்று நொடித்துக்கொண்டே சென்றாள்.

இப்படியாக ஒரு நேரடி போர் இருவருக்குள்ளும் ஆரம்பமானது.   

செந்திலுக்கு செல்வியின் பேச்சை கேட்டு ஆச்சர்யமாக இருந்தது, எப்படி வாயடிக்கிறாள் அடுத்தவர்களை பதில் பேச விடாமல். இவளிடம் மாட்டுபவன் நிஜமாகவே அவஸ்தை தான் படப்போகிறான் என்று எண்ணிக்கொண்டே வீட்டிற்கு செல்லாமல் அசோக்கை பார்க்க சென்றான்.

அவன் அவனின் வீட்டில் தான் இருந்தான். அவர்களுக்கும் துண்டு வியாபாரம் தான் ஆனால் மிக சிறிய அளவில் செய்தனர். அசோக் தன் தந்தைக்கு உதவியாக அவரின் தொழிலையே செய்தான்.

இவன் திடீரென்று வந்திருப்பதை ஆச்சர்யமாக பார்த்தவன்……… “என்ன மாப்ள இன்னைக்கு வேலை கம்மியா சீக்கிரம் வந்துட்ட”, என்றான் அசோக்.

அதற்கு பதிலளித்த செந்தில், “சீக்கிரம் முடிஞ்சது அதான்”, என்றான்.

“என்னா  மாப்ள டல்லா இருக்க”,

செந்தில் ராஜியுடன் சண்டையிட்டதில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. அதே சமயம் அதை அசோக்கிடம் சொல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

“லேசா தலைவலி, அதான்”, என்று சமாளித்தான்.

“வா! வா! உட்காரு”, என்று வீட்டின் முன் இருந்த திண்ணையில் அமர்ந்தவர்கள்…….. “அம்மா எங்க ரெண்டு பேருக்கும் டீ”, என்று உள்ளே குரல் கொடுத்தான்.

வெளியே வந்து யார் என்று பார்த்த அசோக்கின் அம்மா……… “செந்திலு என்னப்பா இப்போல்லாம் வீட்டு பக்கம் ஆளையே காணோம்”, என்றார்.  

“கொஞ்சம் வேலை அதிகம்மா”, என்றான்.

“இரு டீ எடுத்துட்டு வர்றேன்”, என்று அவர் உள்ளே போக……… அதன் பிறகு அவனின் அப்பா வந்து அதையே கேட்டார்………. பிறகு அசோக்கின் மூன்று தங்கைகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து அதையே கேட்டனர். எல்லோருக்கும் பதிலளித்தே ஒரு வழியானான் செந்தில்.

அதற்குள் டீ வர………. அதை குடித்த பிறகே சற்று தெம்பாக உணர்ந்தான். மனம் முழுவதும் ராஜியின் பேச்சுக்களே, “பிசாசு என்னமா உயிரை எடுக்குது”, என்று நினைத்தபடியே இருந்தான்.

அவன் வாய் இயல்பாக பதிலளித்து கொண்டு இருந்ததே தவிர நினைவெல்லாம் ராஜியை சுற்றியே இருந்தது.

நண்பனின் கவனம் இங்கே இல்லை என்று புரிந்த அசோக்……… “என்னடா மாப்ள ஏதாவது பிரச்சனையா ஒரு மாதிரி இருக்க”.

“அது”, என்று இழுத்தவன்………. “வேலைக்கு போவோமா இல்லை விட்டுடுவோமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”.

“ஏண்டா மாப்ள”,

உண்மையான காரணத்தை சொல்லாமல்………. “தொழில் ஏதாவது தொடங்கலாம்னு பார்க்கிறேன்”, என்றான்.

“என்னடா மாப்ள! அந்த பொண்ணை பக்கத்துல இருந்து பார்க்கிறேன்……. அப்போ தான் அவளுக்கு என்னை பிடிக்கும்னு சொன்ன….. இப்போ இப்படி சொல்ற”, 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று செந்திலுக்கு தெரியவில்லை.

“ஏன் அது சரிபடாதுன்னு நினைக்கிறியா”,

“அப்படியெல்லாம் இல்லை……….. நான் அதை பத்தி எல்லாம் யோசிக்கலை. என்னவோ அடுத்தவங்க கிட்ட கையை கட்டி வேலை பார்க்க பிடிக்கலை”,

“இப்படி சொல்லி சொல்லியே தான் எந்த வேலைலையும் இருக்க மாட்டேங்கற……. ஆனா இந்த உத்தியோகம் அப்படி இல்லை………. நல்ல சம்பளம் கொடுக்குறாப்டியே உன் ஆளோட அப்பா”,

முன்பெல்லாம் உன் ஆளு என்று கேட்டவுடனே எழும் சந்தோஷம் இப்போது செந்திலின் மனதில் இல்லை…….. இருந்தாலும் நண்பனிடம் காட்டிக்கொள்ளாமல்……

“அதென்ன விஷயம் மச்சி……… பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்……. பணத்துக்காக பார்க்கறதா”, என்றான் பணத்தை பற்றி அக்கறை இல்லாதவன் போல………

“பணம் ரொம்ப முக்கியம்டா மாப்ள……….. நல்ல வேலை விட்டுடாத……. கொஞ்ச நாள் இரு………… கொஞ்சம் பணம் சேர்ந்ததுக்கு அப்புறம் தொழில் செய்யறதை பத்தி யோசி. பணமில்லாம தொழில் செய்ய முடியாது. உங்கப்பாவும் பணம் தர மாட்டேங்கறார் யோசிச்சு செய்”, என்றான்.

அசோக் பணத்தை பத்தி யோசி என்று சொல்ல செந்தில் ராஜியை பற்றி யோசித்தான். “இப்போது வேலையை விட்டு நின்றால் நிச்சயம் அவளுக்கு பயந்து நின்ற மாதிரி தான் ஆகிவிடும்………. அவளுக்கு பயந்து நிற்பதா………. அதைவிட கேவலம் தனக்கு கிடையாது”, என்று நினைத்தவன் இப்போதைக்கு வேலையை விட்டுவிடும் எண்ணத்தை ஒத்திப்போட்டான்.

மனம் சற்று தெளிந்தவனாக………. “சரிடா அசோக் நான் கிளம்பறேன்”,

தன் பேர் சொல்லி அழைக்கும் நண்பனை அதிசயமாக பார்த்தான் அசோக். செந்தில் அவன் பேர் சொல்லி அழைப்பது அபூர்வம். எப்போதும் மச்சி மாப்ள என்று தான் அழைப்பான். இன்று என்னவோ மூடு சரியில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.  

அவனை மேலும் தூண்டி துருவாமல்…….. “நாளைக்கு பார்போம்டா”, என்று அவனுக்கு பதில் கொடுத்தான் அசோக்.

வீட்டிற்கு வந்தவனுக்கு சாப்பிட கூட பிடிக்கவில்லை. ராஜியோடான சண்டை அவளின் அலட்சியம் நிறைய அவனை பாதித்து இருந்தது. ஒரு வருடமாக அவளின் பின்னால் சுற்றியதற்கு அவனே மிகவும் கேவலமாக உணர்ந்தான்.

அவனின் அம்மா அவனை சாப்பிட வற்புறுத்தியும் சாப்பிடாமல் படுத்துவிட்டான். ராஜேஸ்வரியோடான சண்டை செந்திலை மிகவும் பாதித்தது. ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.     

அப்படியெல்லாம் ராஜேஸ்வரி அதிகமாக ஃபீல் செய்யவில்லை…….. எப்பொழுதையும் விட அதிகமாக இரண்டு பரோட்டாவை உள்ளே தள்ளினாள்.

“நானா திமிர் பிடித்தவள்……… அவன் தான் திமிர் பிடித்தவன். ஏதோ வெளியே பார்த்து வைக்கிறான் அங்கே ஏதாவது பேசினால் நன்றாக இருக்காது என்று நான் அமைதியாக இருந்தால்……… என் வீட்டிற்க்கே வந்து என்னிடம் பேசிப் பார்க்கிறானா, பிச்சிட மாட்டேன் பிச்சு”, என்று மனதிற்குள்ளேயே காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலை பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகும் போது அவளின் கண்கள் அனிச்சை செயலாக செந்திலுக்காக பார்த்தன. ஆனால் அங்கே அவன் இல்லை. அசோக் மட்டுமே அங்கே அமர்ந்து கொண்டிருந்தான்.

அசோக்கும் ராஜேஸ்வரியை பார்த்தான், “என்னடா நம்ம நாள் தவறினாலும் தவறாம செந்தில் அவன் ஆளை பார்க்க வந்துடுவானே…….. இன்னைக்கு என்ன காணோம்”, என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தான்.

தூரம் இருந்து மட்டுமே ராஜி செந்தில் அமர்ந்திருப்பதை பார்ப்பாள்……. இன்று பக்கத்தில் வந்தும் ஒருமுறை ராஜியின் கண்கள் டீக்கடையை அலசியது……. “எங்கே அவனை காணோம்”, என்று எண்ணவும் செய்தாள்.

“பய பயந்துட்டனா”, என்று ஒரு ரகசிய புன்னகையும் முகத்தில் மலர்ந்தது.

அவள் கண்கள் செந்திலை தேடி பின்பு அவள் செல்வதை பார்த்த அசோக் செந்திலின் செல்லுக்கு அழைத்தான்.“என்னடா மாப்ள ஆளையே காணோம்……..  உன் ஆளு வேற உன்னை தேடுது”, என்றான் அசோக்.

அவளாவது என்னை தேடுறதாவது……….. இவன் ஏதாவது உளறுவான் என்று நினைத்ததை வெளியில் சொல்லாமல்……….. “கிளம்பிட்டே இருக்கண்டா நீ இருக்கியா கிளம்பறியா”,

“இல்லை நான் கிளம்பறேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு……. அப்புறம் முடிஞ்சா சாயந்திரம் பார்க்கலாம்”, என்று சொல்லி கிளம்பினான் அசோக். ஏதோ தன் நண்பனிடம் சரியில்லை என்று உணர்ந்தான். ஆனால் என்னவென்று பிடிபடவில்லை.

அங்கே புதிய முடிவு எடுத்திருந்தான் செந்தில். இனி ராஜியை திரும்பியும் பார்ப்பதில்லை என்று. அதனால் தான் இன்று அவன் டீக்கடைக்கு கூட செல்லவில்லை.

பெரிய இவள் மாதிரி கொஞ்சம் கூட மட்டு மரியாதையில்லாமல் பேசுகிறாள்…….. இவளை எல்லாம் திருமணம் செய்து கொண்டு ஒரு மனிதன் எப்படி நிம்மதியாக வாழமுடியும்………. நேற்றிலிருந்து என் மனதை எவ்வளவு பாதித்து விட்டாள். அவள் தனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தான். இருந்தாலும் நினைவுகள் அவளை சுற்றியே வட்டம் இட்டன.          

அவனுக்கு மட்டுமல்ல ராஜியும் செந்திலை பற்றியே தான் நினைத்து இருந்தாள். ஒரு வருடத்திற்கும் மேலாக நாள் தவறாமல் தன்னை தொடர்ந்தவன் இன்று ஆளை காணோம் என்று. 

Advertisement