Advertisement

அத்தியாயம் மூன்று:

ராஜேஸ்வரி தன்னை மிரண்ட விழிகளோடு பார்ப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கண்ணடித்தான். முதலில் அவனின் செயல் பார்த்து திகைத்தவள் பின்பு முறைத்தாள்.

அந்த முறைப்புக்கெல்லாம் அவன் அசருபவனாக தெரியவில்லை. அவளை பார்த்து தெரிந்தும் தெரியாமலும் புன்னகைத்தான். (அதென்ன தெரிந்தும் தெரியாமலும், அது அவளுக்கு தெரிந்தும் மற்றவர்களுக்கு தெரியாமலும்).

அதை கவனியாதவள் போல ராஜேஸ்வரி திரும்பி போகப் போக……. அவளின் தந்தை “தம்பி யாருன்னு தெரியுதாம்மா”, என்றார்.

அவள் தெரியும் என்றும் சொல்லவில்லை……… தெரியாது என்றும் சொல்லவில்லை, அமைதியாக பார்த்தபடி நின்றாள்.

எப்போதும் தூரத்தில் இருந்து பார்ப்பவன் இப்போது தான் அருகில் இருந்து அவளின் நடவடிக்கைகளை பார்க்கிறான்.

“நம்ம சீனியப்பன் பையன்மா இனிமே எனக்கு உதவியா நம்ம கிட்ட இருப்பாப்படி”,

“கிழிஞ்சது……. வெளிய தொல்லை குடுத்தது போதாதுன்னு உள்ளயே வந்துட்டானா”, என்று மனதிற்குள் நினைத்தவள் முகத்தில் ஒன்றும் காட்டவில்லை.

“நீ என்னமா சொல்ற”, என்று அவர் அவளின் பதிலை எதிர்பார்க்க……. “இனி என்ன செய்ய முடியும்”, என்று நினைத்தவள்……. சரிப்பா என்று வாயை திறந்து சொல்லாமல் தலையாட்டினாள்.

அவளின் செய்கைகள் அனைத்தும் ஒரு நிமிர்வோடு இருந்தது.

அவள் அவனை பார்க்கும் பார்வையிலேயே ஒரு கம்பீரம் இருந்தது. இவள் உன்னிடம் மயங்குவது எல்லாம் நடக்க கூடிய காரியம் இல்லையடா என்று அவனின் மனமே அவனுக்கு உரைத்தது.

இவள் மயங்காவிட்டால் என்னடா……. இவளின் தந்தையை மயக்கியாவது இவளை திருமணம் செய்து கொள்வேன்  என்று அந்த நிமிடத்தில் புதிய சபதம் எடுத்தான் செந்தில் வேலவன்.

அவனின் சபதங்களை எல்லாம் அறியாத ராஜ ராஜேஸ்வரி இவனின் தொல்லை வீட்டில் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற யோசனையோடே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

செந்திலின் தந்தை சீனியப்பன்  அப்போது தான் அவனை பார்த்தவர், “எப்படி முதலாளி இருக்கான், என் பையன்”, என்று கேட்டார்.

“சொல்லிகுடுக்கறதை அப்படியே பிடிச்சிக்கிறான். கொஞ்சம் கவனமா பழகினா நல்லா வருவான்”, என்று செந்திலை தட்டிக் கொடுத்தார்.

முகத்தில் அவ்வளவு பணிவை வைத்து அண்ணாமலை பக்கத்தில் செந்தில் நின்றிருந்தான்.

தன் மகனா இவன் என்று சீனியப்பனுக்கே பயங்கர ஆச்சர்யம் ஆகிவிட்டது. இவ்வளவு பணிவாக அவர் என்றுமே செந்திலை பார்த்தது இல்லை. தன் மகனை பற்றி தெரியாமல் அவருக்கு மிகுந்த சந்தோஷம் ஆகிவிட்டது……… தான் அவனை இங்கே சேர்த்துவிட்டு நல்ல வேலை செய்திருக்கிறோம் என்று.   

அதன் பிறகும் தன் தந்தையோடு சேர்ந்து அங்கே இருந்த எக்ஸ்போர்ட் துண்டு  களையெல்லாம் மூட்டை போடும் வேலையை பார்த்தான். அதாவது அங்கே இருந்த துண்டுகளையெல்லாம் அடுக்கி பண்டல் பண்டலாக கட்டி பேக் செய்தனர்.

ஆட்கள் அதையெல்லாம் செய்வதை மேற் பார்வை பார்த்தான் செந்தில். அவன் தான் புதிய முடிவு எடுத்திருக்கிறானே எப்படியாவது அண்ணாமலையை கவர்வது என்று. அதற்குரிய வழியாக தான் தொழிலில் கவனம் செலுத்தி அவரிடம் நற் பெயரை வாங்குவது என்று முடிவு செய்தான்.

அதற்காக தான் வந்த முதல் நாளே எல்லாவேலையையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தான்.

வீடு திரும்பும்போது மணி பத்தாகி விட்டது. அதுவரை எத்தனை வேலைகள் செய்துகொண்டிருந்தாலும் ராஜேஸ்வரி கண்ணில் படுகிறாளா என்று பார்த்தபடி தான் இருந்தான்.

ராஜேஸ்வரியும் பொதுவாக அவளின் படிக்கும் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டால் ஆட்கள் வேலை செய்வதை வந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டிருப்பாள். இன்று செந்தில் இருந்ததினால் இறங்கியே வரவில்லை

அவளை பார்க்காத ஏமாற்றத்தோடே கிளம்பினான் செந்தில். அவளின் தந்தையின் மனதில் நல்ல பெயர் எடுக்க வேண்டி அவன் வேலைகள் எல்லாவற்றையும் செய்தாலும்…….. அதையும் மீறி வேலை செய்தது அவனுக்கு மிகுந்த திருப்தியை கொடுத்தது.

வீடு வந்து உணவு உண்டு அவன் உறங்க செல்ல அவனை ஆச்சர்யமாக பார்த்தனர் அவனின் அன்னையும் தந்தையும். ஏனென்றால் அவன் உணவு உண்ண எப்பொழுதும் நிறைய நேரம் எடுத்துக்கொள்வான், ஆனால் இன்று மளமளவென்று உண்டு சென்றுவிட்டான்.

எப்படியோ பையனுக்கு நல்ல புத்தி வந்தால் போதும் இறைவா என்று பெற்றவர்கள் மனதிற்குள் அவர்களையரியாமல் ஒரே மாதிரி வேண்டுதலை வைத்தனர்.

நேரம் கழித்து உறங்கினாலும் எப்பொழுதும் போல ராஜேஸ்வரி கல்லூரி போகும் சமையத்தில்  சரியாக டீ கடையில் போய் அமர்ந்துகொண்டான். இன்று அசோக் அவனுக்கு முன்னமே அமர்ந்திருந்தான்.

“என்னடா மாப்ள! ரெண்டு நாளா ஆளையும் பார்க்க முடியலை போன்லயும் பேசலை நேத்து என்னடான்னா உன் ஆளோட அப்பாவோட பின்னாடி உட்கார்ந்து போற……… என்னதான்டா நடக்குது”.

அவனை பார்த்து புன்னகைததவன், “நான் அவங்க வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்டா”,

“என்னடா திடீர்ன்னு”,

“எவ்வளவு நாள் தான் தூரத்துல இருந்து பார்க்குறது, என் ஆளை பக்கத்தில் இருந்து பார்க்கணும் பழகணும்னு தோணிச்சு அதான்”, என்றான்.

“பார்த்துடா மாப்ள, எதுவும் சிக்கல்ல மாட்டிக்காத……… நீ அவங்க பொண்ணுக்காக தான் வர்றன்னு அவங்கப்பாக்கிட்ட மாட்டுன…….. மவனே பின்னி பெடல் எடுத்துடுவாங்காடி”,

“விடறா….. விடறா……… எல்லாம்  நான் பார்த்துக்குவேன்”, என்றான் தெனாவெட்டாக……… அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே ராஜேஸ்வரி வருவது தெரிய அவளை கவனிக்க ஆரம்பித்தான்.

டீக்கடைக்காரரும் நேற்று அவன் சொன்னது உண்மையா என்று அறிய ராஜேஸ்வரியை பார்க்க……… இதையெல்லாம் அறியாத ராஜி தூரத்தில் இருந்து வரும்போதே செந்தில் தன்னை பார்க்கிறானா என்று எப்பொழுதும் போல பார்த்தாள். சிறிது தூரம் வரை பார்த்தவள் அவன் பக்கத்தில் சிறிது வர ஆரம்பித்ததும் அவனிடம் இருந்து பார்வையை திருப்பி பார்க்காதது போல சென்றாள்.

செந்திலும் அவள் தன்னை கடந்து போகும்வரை விடாமல் பார்த்தான்.

“எரும மாடு எப்படி பார்க்குது பாரு”, என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே சென்றாள் செல்வி.  

அவள் தூரத்தில் இருந்து வரும்போது செந்திலை பார்த்தது……… பக்கத்தில் வந்ததும் பார்வையை திருப்பியதையும் கவனித்த டீக்கடைக்காரரும் இந்த பையன் நேத்து சொன்னது சரிதான் போல இருக்கே………. இந்த காலத்து பொண்ணுங்களையே நம்ப முடியலைப்பா”, என்று சலித்துக்கொண்டார்.    

அவரை பார்த்து, “நான் சொன்னது சரியா”, என்பது போல ஒரு பார்வை பார்த்த செந்தில் அசோக்கோடு பேச்சை தொடர்ந்தான்.

“நீயும் விடாம என்னென்னவோ முயற்சி எடுக்குற பார்ப்போம்…… என்ன நடக்குதுன்னு”, என்று செந்திலிடம் சொன்ன அசோக்……… “எப்படி மாப்ள இருக்குது அங்க வேலையெல்லாம்”,

“நேத்து முதல் நாள் ஒண்ணும் தெரியலை மச்சி……… இருந்தாலும் நிறைய வேலைடா பென்ட் எடுக்குது……….. சரி கிளம்பலாமா போய் சாப்பிட்டிட்டு கிளம்பணும்”, என்றான் பொறுப்பாக செந்தில்.

ஒரே நாளில் தன் நண்பன் இப்படி பொறுப்பாக மாறிய அதிசயத்தை வியந்தபடியே “கிளம்பலாம் மாப்ள”, என்றபடி எழுந்தான் அசோக்.

நேற்றைக்கும் முன்னதாகவே தந்தையும் மகனும் அண்ணாமலையின் வீட்டிற்கு வந்துவிட்டனர். வந்ததோடு அல்லாமல் வேலையையும் ஆரம்பித்து விட்டான் செந்தில்.

வந்த தறிகாரர்களுக்கு எல்லாம் பொறுப்பாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். அவனுக்கு விவரம் அதிகம் தெரியவில்லை என்றாலும் தந்தையிடம் கேட்டு கேட்டு சொல்லிக்கொண்டு இருந்தான்.

சீனியப்பனுக்கு மகனின் இந்த மாற்றத்தை நினைத்து பெருமை பிடிபடவில்லை. அன்றும் அண்ணாமலை அவனை கூப்பிட்டு கொண்டு வெளி வேலைகள் பார்க்க கிளம்பி விட்டார்.

ஆனால் நேற்று போல் நிறைய நேரம் ஆகவில்லை. மதியத்துக்குள் வீடு திரும்பி விட்டனர்.                              

பின்பு வீட்டில் இருந்த வேலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தான். மாலை எப்பொழுது வரும் என்று ராஜியின் தரிசனத்திற்காக காத்து இருந்தான். ராஜியின் பார்வையும் வீட்டுக்குள் வந்ததுமே செந்திலை தேடியது. அது அவன் இன்றும் இங்கேயேவா இருக்கிறான் என்ற தேடல் மட்டுமே…….. அதையும் மீறி ஒன்றுமில்லை தான் இருந்தாலும் அவன் தினமும் தன்னை தொடர்வதால் காலையும் மாலையும் அவளின் பார்வை அவளை அறியாமல் அவனிடம் நிலைத்தது.

அவள் தன்னை பார்ப்பதை செந்திலும் உணர்ந்து இருந்தான். இப்போதைக்கு இது போதும் என்று நினைத்தவன் அதிகமாக அவளை சீண்டவில்லை. அவனுக்கு நிஜமாகவே அவளை கவர வேண்டும், அசட்டு தனமாக ஏதாவது செய்து அவளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய அதிகப்ரசங்கித்தனமான செய்கைகளை சற்று மூட்டை கட்டி வைத்தான்.

இப்போது நினைத்தான் ஐ லவ் யூ வே அவசரமாக சொல்லிவிட்டோமோ என்று. இனி நினைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்று விட்டுவிட்டான். அது தான் செந்தில். எல்லாவற்றையும் ஈஸி யாக எடுத்துக்கொள்ள கூடியவன். அதனால் தான் காதல் செய்வதையும் அவ்வளவு ஈஸி யாக எடுத்துக்கொண்டான். ராஜேஸ்வரியின் பெயரை தன்னோடு சேர்ந்து டீக்கடையில் எல்லாம் பேசுவதையும் ஈஸியாக எடுத்துக் கொண்டான்.

அக்கா தங்கை என்று பெண்களோடு பிறந்திராத அவனுக்கு…….. அவர்களின்  உறவை அருகில் இருந்து பார்த்திராத அவனுக்கு………. இது எவ்வளவு பெரிய அவப்பெயரை ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தும் என்று புரியவில்லை.

இப்படியே கிட்ட தட்ட இரண்டு மாதம் ஓடிற்று…….. அண்ணாமலையின் தொழிலில் செந்தில் இன்றியமையாதவனாகி போனான். தொழிலின் உள் விவகாரங்கள் எல்லாவற்றையும் சீனியப்பன் பார்த்துக்கொள்ள வெளி விவகாரங்கள் அனைத்தையும் செந்தில் பார்த்துக்கொண்டான்.

அவனுக்கும் இந்த தொழில் பார்ப்பது பிடித்து இருந்தது. அவனின் வேலையை பார்த்து அவன் எதிர்பார்க்காத சம்பளத்தையும் அண்ணாமலை அவனுக்கு கொடுத்தார். இங்கே வேலைகள் எல்லாவற்றையும் செந்திலின் மேற்பார்வையில் விட்டுவிட்டு அவர் ஆர்டர் பிடிக்கிறேன் என்று வெளியூர் வேலைகள் பார்க்க ஆரம்பித்தார்.  தொழில் இன்னும் விரிவடைந்தது.   

இதற்கு இடையில் செந்தில் காலைவேளைகளில் ராஜேஸ்வரியை தொடர்வதையும் விடவில்லை. என்ன அசோக்கும் அவனும் சேர்ந்து சுற்றும் நேரங்கள் தான் குறைந்து விட்டன.

ராஜேஸ்வரி சற்று பயந்து தான் இருந்தாள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டானே…… காதல் அது இது வென்று உளறி தொந்தரவு கொடுப்பனோ என்று. ஆனால் அது மாதிரி எல்லாம் செந்தில் செய்யவே இல்லை. பார்வையால் அவளை தொடர்வான், அவளிடம் பேசுவதற்கும் அவனின் ஆர்வம் தெரியும். ஆனால் அதற்குரிய சந்தர்ப்பத்தை ராஜி ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டாள்.  

அன்றைக்கு காலேஜ் விட்டு ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்த போது வீட்டில் யாருமே இல்லை. செந்தில் மட்டுமே இருந்தான். அவனாக ஏதாவது சொல்வான் என்று ராஜி எதிர்பார்த்திருக்க அவன் வாயையே திறக்கவில்லை. வேண்டும் என்றால் அவள் கேட்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.

அவன் பலமுறை அவளிடம் சாதரணமாக பேசமுயன்றும் அவள் அதற்கு இடம் கொடுக்காமல் விலகி விடுவாள். அது அவனுள் பயங்கர கடுப்பை கிளப்பி இருந்தது. என்னோட பேச கூட இவளால முடியலையா அப்படி என்ன குறைஞ்சு போயிட்டேன் நான் என்று அவனுக்குள் தோன்ற வைத்திருந்தது.

அவன் சாதாரணமாக பேசுவதாக அவன் நினைத்து இருக்கலாம். ஆனால் ராஜி மறுபடியும் அவன் ஐ லவ் யூ என்று சொல்லிவிடுவானோ என்று பயந்தே அவனுடன் எந்த பேச்சையும் தவிர்த்தாள்.   

இன்று வேறுவழியில்லாமல் ராஜி அவனிடத்தில், “அம்மா எங்கே”, என்றாள். அவளின் தொனியே நான் எஜமானி நீ வேலையாள் என்பது போல இருந்தது. அது சுர்ரென்று செந்திலுக்கு கோபத்தை கொடுத்தது. 

அவளிடம் செல்போன் இல்லை. அவளின் கல்லூரியில் அதற்கு அனுமதியில்லை என்பதால் அவளின் தந்தை வாங்கிக்கொடுக்க வில்லை. அதனால் அவளின் அம்மாவும் அவளுக்கு சொல்லவும் வாய்ப்பு இல்லை. அப்பாவும் வெளியூர் ஆர்டர் பிடிக்கிறேன் என்று அன்று காலை தான் கிளம்பி இருந்தார்.

அவளுக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று அவன் யோசிக்கும் போதே……..

“அம்மா எங்கேன்னு கேட்டேன்”, என்றாள் மறுபடியும் அதிகாரமாக.

அவனையும் மீறி, “வெளில போயிருக்காங்க”, என்று வாய் உரைத்தது. 

“அதான் எங்கேன்னு கேட்கறேன்”,

“இங்க வீட்ல வேலை செய்யற கந்தசாமி அவரோட சம்சாரம் இறந்துட்டாங்க…… அங்க போயிருக்காங்க”,

“எல்லாரும் அங்க தான் போயிருக்காங்களா”,

“ஆமாம்”, என்றபடி தலையசைத்தான்.

“நீங்க மட்டும் ஏன் இருக்கறீங்க…….. நீங்க போகறதுன்னா போங்க…… நான் இருந்துக்குவேன்”,

“இல்லை உங்க அம்மா அவங்க வர்ற வரைக்கும் என்னை இங்க இருக்க சொன்னாங்க”,

“என்னவோ செய்”, என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.

“எவ்வளவு அலட்சியம் இவளுக்கு என்னை பார்த்தா”, என்று கோபம் அதிகரிக்க துவங்கியது செந்திலுக்கு.   

சாதரணமாகவே செந்தில் சற்று முன் கோபி. இப்போது அவளின் செய்கைகள் அவனுக்கு கோபத்தை கொடுத்தன. “நான் அவளை காதலிக்கிறேன்னு சொன்னா அவ்வளவு இளக்காரமா போயிட்டனா…… எங்கம்மா எங்கேன்னு கேட்டேன்னு எப்படி அதட்டுறா”,

“எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும், அப்போ இருக்குடி உனக்கு”, என்று மனதிற்குள் கருவிக்கொண்டான் .

மேலே சென்று முகம் கழுவியவள் முகத்தில் பரு சற்று இருக்கவும்……. அது வலிக்க வேறு செய்யவும்……. சற்று சந்தனத்தை தடவலாம் என்று நினைத்தவள், சந்தனத்தை கலக்கினாள்.

பிறகு செந்தில் மட்டும் தானே வீட்டில் இருக்கிறான் தடவுவதா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு அதற்கென்ன கால் மணிநேரத்தில் முகம் கழுவி விடலாம், அவன் என்ன மேலேயா வரப் போகிறான் என்று தைரியமாக முகம் முழுக்க தடவினாள்.

தடவியவள் அது காயும் வரை பாட்டு கேட்கலாம் என்று நினைத்து வீட்டில் இருந்த செல்போனில் பாட்டை போட்டு ஹெட் போனை மாட்டி கண்மூடி அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் சந்தனம் காய்ந்து முகம் முழுக்க கண்களை தவிர எல்லாம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது. 

கீழே செந்திலுக்கு தறிகாரர்களிடம் இருந்து ஒரு நிமிடம் நெய்யும்  இடத்திற்கு வந்து போகுமாறு அழைப்பு வந்தது. ஒரு பத்து நிமிடம் தானே ஆகும் போய் வந்து விடலாம் என்று நினைத்தவன்……… ராஜேஸ்வரியிடம் சொல்வதற்காக அவளை அழைத்தான்.

“ராஜேஸ்வரி, ராஜேஸ்வரி”, என்று ஒரு பத்து முறைக்கு மேலாவது கூப்பிட்டு இருப்பான் அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. சத்தத்தையே காணோம் என்றதும் என்னவோ ஏதோ வென்று பதறி மேலே வந்தான்.

வந்து பார்த்தால் அவள் ஹாலில் சாய்ந்து உட்கார்ந்து, காலை தூக்கி எதிரே இருந்த டீ பாயில் போட்டுக்கொண்டு, காதில் ஹெட் போன் மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டு கண்மூடி இருந்தாள்.

அவளின் முகம் முழுக்க காய்ந்த சந்தனம். இதில் பாட்டின் நடுவில் கையை அசைத்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு பாட்டை வேறு உச்சரித்துக்கொண்டு இருந்தாள்.

பார்த்த செந்திலுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. இவன் மேலே வந்து நின்று அவளை பார்த்து சிரித்து கொண்டிருப்பது அவளுக்கு சற்றும் தெரியவில்லை.  

அவள் என்ன தான் செய்கிறாள் என்று செந்தில் நின்று பார்த்துக்கொண்டு இருக்க ஏதோ உந்துதலில் கண்ணை திறந்தவள் எதிரே செந்தில் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

வேகமாக எழுந்து நின்று ஹெட் போனை கழற்றி, “நீங்க என்ன பண்றீங்க இங்க”, என்றாள் கோபமாக கண்ணை உறுத்து விழித்து.

அவள் கண்களை அகல விரித்து பார்க்கவும் அவள் பூசியிருந்த சந்தனத்தின் நடுவில் கண்கள் பெரிதாக தெரிய………. “பார்க்க பேய் மாதிரி இருக்க”, என்று அவளிடம் சொன்னவன் மறுபடியும் சிரிக்க துவங்கினான்.

அவனின் சிரிப்பு அவளுக்கு எரிச்சலை கொடுக்க……. “உன்னை யாரு இங்க மேல வரச்சொன்னா”, என்று மரியாதை பன்மையை கைவிட்டு ஏக வசனத்தில் கோபமாக கேட்டாள்.

அதெல்லாம் செந்திலின் கருத்தில் படவே இல்லை….. “கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்…… உன் சத்தத்தையே காணோம். என்னவோ ஏதோன்னு பதறி வந்து பார்த்தா நீ இப்படி”, என்று மறுபடியும் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

“அதுவும் கண்ணை மூடிட்டு……….என்னமா டான்ஸ் ஆடற”, என்று அவளை மாதிரியே கைகளை அசைத்துக்காட்டியவன்……. “ஆமாம் அது என்ன பாட்டு”, என்றான் சமய சந்தர்ப்பம் தெரியாமல்.

“ம்! உன் மூஞ்சி முதல்ல கீழ போ நீ”, என்று அதட்டினாள்.

“ஏய்! என்ன ஓவரா பேசற”,

“முதல்ல நீ கீழ போ…….. நான் வர்றேன்”, என்று அவனை கீழே அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.

“நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு……… கீழ போ கீழ போன்னு இந்த தொரத்து தொரத்துற”, என்று செந்திலும் எகிறினான்.

“நீ என்ன பண்ணிடுவ என்னை………. ஒண்ணும் பண்ண முடியாது……. முதல்ல கீழ போ”, என்றாள் மறுபடியும்.

கையில் கிடைக்கும் எதையாவது தூக்கி அவன் மேல் விட்டெறிவோமா என்றளவுக்கு அவளுக்குள் ஆத்திரம் மிக………… அதற்கு சற்றும் குறையாமல் செந்திலுக்கும் ஆத்திரம் பெருக ஆரம்பித்தது. அவனுக்குமே அவள் அவனை துரத்திய துரத்தலில் அவளின் கன்னம் பழுக்க ஒரு அரை விட வேண்டும் என்று ஆத்திரம் வந்தது.

ஆத்திரம் மிக…….. அதை அடக்கும் வழி தெரியாமல்…….. அவள் தனியாக இருக்கும் பெண் என்பதை கருத்தில் கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக கீழே வந்தான்.

அவன் வந்த சிறிது நேரத்திலேயே அவசரமாக முகம் கழுவி பொட்டிட்டு கீழே வந்தவள், “எதுக்கு வந்த”, என்றாள்.

“முதல்ல மரியாதையா பேசு……… நான் உன்னை விட பெரியவன்”, என்றான்.

“ஒஹ்! கூப்பிடலைன்னா என்ன செய்வ”, என்று வாய்வரை வந்த கேள்வியை வாய்க்குள்ளேயே அடக்கினாள். அவனை அதிகமாக சீண்ட வேண்டாம் என்று நினைத்து, “எதுக்கு வந்தீங்க”, என்றாள்.

“நான் பின்னாடி தெருவுல இருக்குற தறி நெய்யற இடத்துக்கு போனதும் வர்றேன்……. நீ கதவை சாத்திட்டு இரு, வேற யாரும் இல்லை”, என்றான்.

“சரி”, என்பதாக தலையை மட்டும் அசைத்தாள்……. “என்ன திமிர் இந்த பெண்ணிற்கு”, என்றபடி நினைத்தபடி வேலையை பார்க்க போனான். 

அவளை காதலிக்க வைக்க தான் இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தோம். இப்படி அவளிடம் கோபப்படுவது சண்டை போடுவது சரியா. அது அவனின் திட்டத்திற்கு சரிவருமா என்றெல்லாம் நினைக்கவில்லை. இப்போதைக்கு ஏதோ ஒரு வகையில் அவள் தன்னிடம் இப்படி அலட்சியமாக நடந்து கொள்வதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. அவள் தன்னை மரியாதையாக பார்க்க வேண்டும் போல தோன்றியது.

Advertisement