Advertisement

 அத்தியாயம் இருபத்தி ஐந்து:

“நீ ஹீரோவா? வில்லனா?”, என்று அவனை பார்த்து கேட்டவள், அவனையே பார்த்திருக்க……….  

“நிஜமா எனக்கே தெரியலை”,

“இதுல நான் வேண்டாம்னு நீ முடிவு பண்ணியிருக்க”,

“அது……… நீ என்னை அப்படித் திட்டுன உடனே ரொம்பக் கோபம்! என்னால அப்படி கேவலமா பேச்சு வாங்கி உன் பின்னால சுத்த முடியலை……. அப்படி என் தன்மானத்தை விட்டு உன் பின்னாடி வரணுமான்னு ஒரு எண்ணம்…… ஆனா உண்மையான காதல் அதையெல்லாம் பார்க்காதுன்னு லேட்டா தான் புரிஞ்சது……. உன்னை தேடி ஓடி வரவும் வெச்சது……..”,

அவள் அமைதியாகவே இருக்கவும்……   

“ரொம்பக் கோபம் வருதா என் மேல”, என்றான் செந்தில்.

“ப்ச்! வரலை…….! வரலை!”, என்றால் ஆத்திரமாக………

“அதுதான் எனக்கு கோபமா வருது! பணத்துக்காக உன் பின்னாடி சுத்தி ஐ லவ் யூ சொன்னேன்னு நீ சொன்ன பிறகும் எனக்கு உன் மேல கோபம் வரலை…… எனக்கு சூடு சொரணையே இல்லையான்னு என் மேல எனக்கு கோபம் வருது!”, என்றவளின் ஆத்திரம் வருத்தமாக மாறி கண்களில் கண்ணீர் கூட எட்டி பார்க்கலாமா வேண்டாமா என்றது…….. இவ்வளவு நேரம் தைரியமாக நிதர்சனத்தை எதிர்கொண்டவளுக்கு இப்போது அந்த தைரியம் சற்று குறைந்தது.  

தழுதழுத்த குரலில், “என்ன ஒரே சந்தோசம் காதலில்லாம நீ காதல் சொன்ன போது எனக்கும் உன் மேல காதல் வரலைன்றது…… அதே மாதிரி என்னை கல்யாணம் பண்ணும் போதும் உனக்கு பணம் ஒரு குறிக்கோளாய் இல்லை……. அந்த மாதிரி எண்ணமே உனக்கு இல்லைன்னு தான்”, என்றாள்….

மறுபடியும், “இல்லை தானே”, என்றாள்.

“இல்லை! இல்லை! நிஜமா இல்லை!”, என்றான்.

“என்ன நீ சொல்லாம விட்டிருந்தாலும் எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்க போறதே. இல்லை……. என்னை தவிர யார்கிட்டயும் நீ இதை சொல்லியிருக்க மாட்டேன்னு ஒரு நம்பிக்கை….. எப்படியும் எனக்கு தெரியப்போறது இல்லைன்னு தெரிஞ்சும் உண்மையை ஒத்துகிட்டது ஒரு நல்ல விஷயம்”,  

“உனக்கு என்னைப் பிடிக்கலையா? வெறுப்பா இருக்கா?”, என்றான் செந்தில்.

“நிஜமாவே எனக்கு அந்த மாதிரி எல்லாம் இப்போ தோணவே இல்லை! இனிமே அந்த மாதிரி தோணாததும் உன் கையில தான் இருக்கு! பணத்துக்காக நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு இப்போதைக்கு எனக்குப் புரியுது…….. ஆனா அந்த எண்ணம் மாறாம இருக்கிறது இனிமே நாம வாழபோற வாழ்க்கையிலும், உன்கையிலும் தான் இருக்கு”, என்றாள் உணர்ச்சி பூர்வமாக.

அப்படியே அவளை அணைத்துக்கொண்டவன்…….. “நிச்சயம் ராஜி! எனக்கு நம்பிக்கையிருக்கு! அந்த மாதிரி உனக்கொரு எண்ணம் வரவே வராது”, என்றான்.

அவனுள்ளேயே புதைந்துக் கொண்டாள். விலகவே இல்லை……

“ராஜி!”, என்று அன்னபூரணி கூப்பிடும் சத்தம் கேட்க……. ராஜி அசையவும் இல்லை.

“அம்மா கூப்பிடுறாங்க பாரு”,

“என்னால இப்ப யாரையும் பார்க்க முடியாது”,

“நான் பார்த்துட்டு வர்றேன், விடு!”, என்றவனை மெதுவாக விடுவித்தாள்.

“என்னம்மா”, என்று வெளியே வந்தவனிடம்………

“ராஜி இன்னும் சாப்பிடலைடா! சாதம் சாப்பிடறதுன்னா சாப்பிட சொல்லு, இல்லை தோசை ஊத்திகறான்னா சாதத்துல தண்ணி ஊத்திட சொல்லு, நான் தூங்க போறேன்”, என்றார்.

“நீ போம்மா! நான் பார்த்துக்கறேன்!”, என்றான்.

அவளிடம் கேட்காமலேயே அவள் இரவு சாதம் உண்ண விரும்ப மாட்டாள் என்று தெரிந்து, அவனாகவே ஒற்றை கையாலேயே தோசை ஊற்றி கொண்டு வந்தான். அவன் வருவதற்கு பதினைந்து நிமிடத்திற்கும் மேல் ஆகவும், இருந்த மன உளைச்சலில் உறங்கியிருந்தாள்.

“ராஜி!”, என்று அவளை எழுப்பவும் எழுந்தவள்…….. அவனின் கையில் இருந்த தட்டை பார்க்கவும், “என்னால சாப்பிட முடியாது”, என்றாள்.

“ப்ளீஸ்! ஒரு தோசையாவது சாப்பிடேன்”,

“இல்லை! என்னால முடியவே முடியாது!”, என்று தீர்மானமாக சொன்னவள்…. உறக்கம் வந்ததோ இல்லையோ மீண்டும் படுத்துக் கண்மூடி கொண்டாள்.

வேறு வழியில்லாமல் அம்மா வேஸ்டானால் திட்டுவார்களே என்று சுட்ட தோசையை அவனே கஷ்டப்பட்டு உண்டு படுத்துக்கொண்டான்.

இருவருக்குமே தூக்கமில்லா இரவு…….

காலையில் எழுந்ததும் எடுத்து வைத்தது எல்லாம் சரியாக இருக்கா என்று ஒருமுறை பார்த்தவள், “போகலாமா”, என்றாள் செந்திலை பார்த்து.

அங்கே அவளின் அம்மா வீட்டிற்கு சென்று அங்கே இருந்து கிளம்புவதாக இருந்தது.

“கிளம்பலாம்”, என்றவன்…… இன்னும் அவனின் பேச்சை கேட்ட தாக்கத்தில் இருந்து தெளியாத அவளின் முகத்தைப் பார்த்து, “என்னை நம்பறதானே”, என்றான்.

“என்னை இத்தனை வருஷம் கண்ணுக்கு கண்ணா வளர்த்த எங்கப்பாவை நம்ப முடியாத ஒரு சூழ்நிலை வந்தப்போ கூட உங்களை நம்பினேன் நான்…… எதுக்கு இந்த கேள்வி”, என்றாள்.

“நீ இன்னும் சரியாகவே இல்லையே”,

“உடனே ஆகமுடியுமா? கொஞ்சம் கூட டைம் எடுக்காதா! நீங்க இதையெல்லாம் கவனிக்காம கிளம்புங்க! நான் சரியாகிவிடுவேன்!”, என்றாள் முயன்று வரவழைத்த புன்னகையுடன்.

செந்திலுக்கு இந்த சூழலில் அவளை விட்டுச் செல்லவே மனமில்லை, இருந்தாலும் கிளம்பினான்.  செந்தில் அண்ணாமலையுடன் கிளம்ப…… ராஜி தேவிகாவுடன் இருந்து கொண்டாள்.

சென்னை அவர்கள் சென்ற போது ஆகாஷின் வீட்டிற்கு தான் கார் சென்றது.

ஒரே காம்பவுண்டிற்க்குள் இரண்டு பங்களாக்கள் இருந்தன….. இவர்கள் அங்கே போகவும் ஆகாஷின் கார் வரவும் சரியாக இருந்தது.

“ஹப்பா! கரெக்ட் டைம்க்கு வந்துட்டேன் போல!”, என்றபடியே வந்தான். “இது எங்க வீடு! அதுவும் எங்க வீடு தான்! இப்போதைக்கு சினிமா ஷூட்டிங்க்கு வாடகைக்கு விடுறோம்”, என்று பக்கத்தில் இருந்த பங்களாவை காட்டினான்.  

“வாங்க செந்தில்!”, என்றழைத்தபடியே அனிதாவும் வாசலுக்கே வந்து வரவேற்றாள். உள்ளே நுழைந்ததும் வீட்டின் பிரமாண்டம் அவனை அச்சுறுத்தியது.

அண்ணாமலை அனிதாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கினார். செந்திலும் ஆர்வமாக குழந்தையை பார்க்க, “பேபி! எப்பவும் மாமா வர்ற டைம் நீ தூங்குவ! இன்னைக்கு முழிச்சிருக்க!”, என்று கொஞ்சினான் ஆகாஷ்.

கையில் குழந்தையை வாங்கியதும் அண்ணாமலைக்கு மனதை என்னவோ செய்தது. கண்கள் சிறிது பனித்தது கூட. இப்படித் தான் ராஜி கூட குழந்தையாக இருக்கும் போது உறங்கிக்கொண்டு இருந்தாலும் அவர் கையில் தூக்கினால் முழித்து அவரை பார்த்து பொக்கை வாய் சிரிப்பை சிரிப்பாள். அவளைத் தான் அவர் நிரந்தரமாக இழந்துவிட்டாரே….. மனது வலித்தது.   

ராஜி வளர்ந்த விதம் அவர் கண்முன்னால் ஓடியது………

என்ன தான் அவர் வெளியில்  காட்டிக்கொள்ளாவிட்டாலும் ராஜியின் புறக்கணிப்பு அவரை கொல்லாமல் கொன்றது.  அவருடைய வாழ்க்கையின் முக்கியப் பங்கு ராஜியுடையது.

அதுவும் இந்த குழந்தையை பார்க்க பார்க்க அவளின் ஞாபகம் அதிகமாக வந்தது.  இப்படி தான் வெண் பஞ்சு பொதியாய் இருப்பாள் அவரின் கைகளில்.  இப்போது அப்படியே எதுவும் இல்லாமல் போய்விட்டது. 

ராஜி அவருக்கு இல்லை என்றாகிவிட்டது. என்றாவது மனம் மாறுவாளா என்று நினைக்கக் கூட முடியாது. அவளின் பிடிவாதத்தை அவரை விட நன்கு அறிந்தவர் யார். மனதில் ஒன்று நினைத்துவிட்டால் அதிலிருந்து மாறவே மாட்டாள்.   

அந்தக் குழந்தையை பார்க்க பார்க்க பயம் வந்தது. இந்த உறவாவது நிலைக்குமா என்று…… என்னவோ ஒரு சஞ்சலம், ஒரு வெறுமை மனதை சூழ ஆரம்பித்தது. 

ஆனால் அவர் முகம் எப்பொழுதும்போல எதையும் காட்டவில்லை. 

எல்லோரையும் பார்த்து புன்னகைத்தாலும் என்னவோ மாதிரி இருந்தது செந்திலுக்கு. அந்த சூழலில் ஓட்ட முடியவில்லை.

 அதனை புரிந்த ஆகாஷ், “அட வாடா! ஏன் கூச்சப்படற! இது உன் வீடு மாதிரி தான்!”, என்று தோளில் கைபோட்டு அழைத்துப் போனான். 

அவனுக்கு ஒரு ரூமை காட்டி…… “ப்ரெஷ்ஆகிட்டு வாப்பா சாப்பிடலாம்”, என்றான். அவன் வரும்வரை காத்திருந்து அவனுடன் உண்டான். உண்டவுடன், “சாயந்தரம் தான் ஹாஸ்பிடல் போகணும்! நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு! நான் ஷோ ரூம் போயிட்டு வந்துடறேன்!”, என்றான்.

“எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு இல்லை! நானும் வரவா!”, என்றான் தயங்கி தயங்கி செந்தில்.

“அதுக்கென்ன வா! வா! நானே திடீர்ன்னு பொறுப்பெடுத்ததால ரொம்ப  குழம்பிப் போயிருக்கேன். அங்க போறதுன்னாலே பயமா இருக்கு! நீ வந்தா எனக்கும் பேச்சு துணைக்கு ஆள் ஆச்சு, வா!”, என்றான்.  

A A CLOTH MERCHANTS என்ற பெரிய போர்டை தாங்கிய கட்டிடத்திற்கு அழைத்து சென்றான். அங்கே சென்று பார்த்த செந்தில் வாயை பிளக்காமல் இருக்க மிகுந்த சிரமப்பட்டான். நான்கு மாடி கட்டிடம் தான் இருந்தாலும் பரப்பளவு மிகவும் அதிகமாக தோன்றியது.

எங்குப் பார்த்தாலும் துணிகள், அதைவிட அதிகமாக ஆட்கள் இருப்பாரோ என்பதாக ஜனசந்தடி இருந்தது.

“இங்க எங்க கிட்ட கிடைக்காத வெரைட்டி யே கிடையாது…… எல்லாமே கிடைக்கும். பெரியவங்கள்ள இருந்து பிறந்த குழந்தை வரைக்கும், வேற உபயோகத்து துணிங்க எல்லாம் கிடைக்கும்…… ஆனா எல்லாமே ஹோல் சேல் தான். ரீடெயில்ல எதுவும் கிடைக்காது”, என்றான்.

“எல்லாமே எக்ஸ்போர்ட் பண்றோம், இந்தியாக்கு உள்ளயும் வெளிநாட்டுக்கும்.   எல்லாம் அப்பாவும் அனிதாவும் தான் பார்த்துக்கிட்டாங்க….. இப்போ அப்பா இல்லை, அனிதா இப்போதைக்கு வர முடியாத சூழ்நிலை. எனக்கு இதை பார்த்துக்க கஷ்டமா இருக்கு! வேலை ட்ரில் எடுக்குது. இன்னும் நான் நிறைய கத்துக்கணும்!”, என்றான்.

நான் தான் எல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லாமல்…… உண்மையை ஒத்துக்கொள்ளும் ஆகாஷின் குணம் செந்திலுக்கு ரொம்ப பிடித்தது.

“நான் சுத்திப் பார்க்கட்டுமா”, என்றான் செந்தில்.

“ஒஹ்! சுயூர்! ஆனா என்னால இப்போ வரமுடியாது ஆடிட்டர் வர்றேன்னு சொல்லியிருக்கார்! அப்புறம் போலாமா?”, என்றான்.

“நீங்க உங்க வேலையை பாருங்க! நான் சுத்தி பார்க்கிறேன்! யாராவது ஆள் இருந்தா மட்டும் அனுப்பிவிடுங்க!”, என்றான்.

“மறுபடியும் ங்க வா! டேய் உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா!”, என்றான் உரிமையாக.

“சரி அனுப்பு பா”, என்றான்.

“இது கொஞ்சம் பரவாயில்லை”, என்றவன் ஆள் அனுப்பினான். சுற்றிப் பார்த்த செந்திலுக்கு ஒரே பிரமிப்பு,எப்படி இவ்வளவையும் கட்டி மேய்கிறார்கள் என்று.

ஒரு பக்கம் துணிகளை வகைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் அதை பேக் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் வந்திருக்கும் டீலர்ஸ்சோடு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் பெரிய கண்டெய்னர்களில் அதை ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். சூழ்நிலையே பரபரப்பாக இருந்தது.     

தான் வாழ்க்கையில் வெட்டியாக இவ்வளவு வருடத்தை வீண் செய்தது போல ஒரு நினைப்பு தோன்றுவதை செந்திலால் தடுக்க முடியவில்லை. அவன் டெக்ஸ்டைல் சார்ந்த படிப்பையே படித்திருந்ததால் எல்லாவற்றையும் ஆர்வமாக பார்த்தான்.

அவன் சுற்றி முடிப்பதற்குள்ளாகவே அவனை அழைத்தான் ஆகாஷ். “போய் மூணு மணி நேரம் ஆச்சு எங்க இருக்க?”, என்று.

“அவ்வளவு நேரம் ஆகிடுச்சா, நேரம் போனதே தெரியலை”, என்றான்.

“வா! நாளைக்கு கூட பார்க்கலாம்! இப்போ ஹாஸ்பிடல் போகணும்”, என்றான்.

ஹாஸ்பிடல் பயணிக்கும் போதே ராஜியிடம் இருந்து போன்……… அப்போதுதான் தான் அவளுக்கு அழைக்காதது ஞாபகத்திற்கு வர, எடுத்தவுடனேயே, “சாரி மறந்துட்டேன்”, என்றான்.

“என்ன மறந்துட்டியா? உங்க மாமனார் போய் சேர்ந்துட்டோம்னு எங்க அம்மாக்கு சொல்லி நாலு மணிநேரம் ஆகுது! நீ கூலா மறந்துடேன்னு சொல்ற! நானும் நீ இப்ப பண்ணுவ அப்ப பண்ணுவன்னு பார்த்துட்டு இருந்தா, மறந்துட்டேன்னு சொல்றியா, அறிவுகெட்ட முண்டம்”, என்று ஆரம்பித்தவள் சற்று நேரம் வாய்க்கு வந்தபடி திட்டினாள். செந்தில் பேசியதை எல்லாம் மறந்து இப்போது ஃபார்மிற்கு வந்திருந்தாள் ராஜி.

அவள் ஃபோர்சாக திட்டியது அமைதியான சூழலில் கொஞ்சம் வெளியேயே கேட்டது.என்னவென்று புரியாவிட்டாலும் ஏதோ திட்டுகிறாள் என்று புரிந்தது.  “உன்னை ரொம்ப கொஞ்சறாப் போல”, என்று ஆகாஷ் கூட நக்கலடித்தான்.  

சற்று நேரம் கழித்து பொறுக்க முடியாமல் செந்தில், “போதும் ராஜி”, என்றான்.

“ஒஹ்! ஆமா, போதும்! போதும்! இல்லைனா உன் வாயால தானே,” நான் உன்னை விட்டுட்டு போகனும்னு நினைச்சேன்னு” நீ சொல்லுவ”, என்றாள்.

கேட்ட செந்திலுக்கு நிறைய கோபம் வந்துவிட்டது. அருகில் ஆகாஷ் இருந்ததினால் ஒன்றும் பேசமுடியவில்லை.

“நான் அப்புறம் கூப்பிடறேன்! இப்போ ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கோம்!”, என்றான்.

அதைகேட்ட ஆகாஷ், “இரு! நான் ஒரு ரெண்டு வார்த்தை பேசிடறேன்!”, என்று போனை வாங்கினான்.

“ஹலோ! ராஜி மேடம் எப்படி இருக்கீங்க !”,

“நல்லாவேயில்லை”, என்றாள்.

“எதுக்கு இந்த கோபம்”,

“பின்ன! அங்க வந்து சேர்ந்து நாலு மணிநேரம் ஆகலை! அதுக்குள்ள என் வீட்டுக்காரர் என்னை மறந்துட்டார்! நான் என்ன சொல்ல?”, என்றாள்.

“என்ன சொல்லவா? நாலு மணிநேரம் உன் தொல்லை இல்லாம இருந்ததினால உன்னை மட்டுமில்லை இந்த உலகத்தையே மறந்திருப்பான்”,

“என்ன நான் தொல்லையா?”, என்று பல்லைக் கடித்தாள்.

“அதை நான் வேற என் வாயால சொல்லனுமா”, என்றான்.

அதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிட, “நான் அப்புறம் கூப்பிடறேன்”, என்று வைத்துவிட்டான்.

அங்கே செந்திலுக்கு சிகிச்சை ஆரம்பமானது….. வலி….. மீண்டும் வலி…… தாங்க முடியாத வலி……… மறுபடியும் அவனுக்கு சித்திரவதை ஆரம்பமானது.

ஆகாஷிற்கே அவன் வலியில் துடிப்பதை பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டது. வீடு வந்தவன் களைப்பில் படுக்க ராஜி மீண்டும் அழைத்தாள்.

எடுத்தவன் அவள் மேல் இருந்த கோபத்தில் எதுவும் பேசவில்லை.

“ஹலோ! ஹலோ! நான் பேசுறது கேட்குதா”, என்று அதற்குள் கத்தி விட்டாள்.

“ம்! கேட்குது சொல்லு”, என்றான்.

குரலின் பேதத்தை உணர்ந்தவள், “என்ன ஆச்சு?”, என்றாள்.

“இன்னும் என்ன ஆகணும்? நீ இப்போ தானே என்னைக் குத்தி காட்ட ஆரம்பிச்சி இருக்க……… இனிமே நம்ம வாழ்க்கை அமோகமா இருக்கும்”, என்றான்.

“என்ன குத்திக் காட்டினேன்?”, என்றாள் ஸ்ருதியிறங்கி…

“அதான் நீ பேசுனியே நான் உன்னை விட்டு போயிடுவேன்னு சொல்லுவேன்னு சொன்னியே” என்றான்.

தன்னுடைய வார்த்தைகள் அவனை காயப்படுத்தி விட்டதை உணர்ந்தவள், “சாரி! சாரி! அது தெரியாம வந்துடிச்சி! இனிமே நான் சொல்ல மாட்டேன்”, என்றாள்.

“கவனம் ராஜி! இந்த மாதிரியான வார்த்தைகள் நம்ம வாழ்க்கையை நரகமாக்கிடும்”, என்றான் கடுமையாக.

“ஜஸ்ட் அது ஒரு கிண்டல் பேச்சு! அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படறீங்க!”,

“சாதாரண கிண்டல் பேச்சுக்கும் இதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்”, என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

அவனின் கடுமை அவளைத் தாக்க, “சாரி! சாரி! கோபம் வேண்டாம்! நான் இனிமே இப்படி பேசவே மாட்டேன்”, என்றாள், குரல் தழுதழுத்தது.

இன்னும் கொஞ்சம் பேசினால் அழுதுவிடுவாள் என்றறிந்தவன்….. “சரி! விடு!”, என்றான் சோர்வாக……..

“ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா”,

“நீ பேசுனது கஷ்டம் தான்! ஆனா அதை விட கஷ்டம் இந்த கை வலி!”, என்றான்.

“ரொம்ப வலிக்குதா”,

“வலிக்குது”,

“நானும் அங்க வரட்டா”, என்றாள்.

“உன் செமஸ்டர் எக்ஸாம் முடியட்டும்! அதை மிஸ் பண்ணிடாத……. ஆனா முடிஞ்சவுடனே வந்துட்டா பரவாயில்லை! என்னால தனியா இந்த வலியை தாங்க முடியும்னு தோணலை”, என்றான்.

கேட்ட ராஜிக்கு அழுகையே வந்துவிட்டது. “இல்லை நான் இப்போவே வர்றேன்! அப்புறம் நெக்ஸ்ட் டைம் சேர்த்து எழுதிக்கறேன்”.

“வேண்டாம்! வேண்டாம்! எக்ஸாம் டென் டேஸ் தானே! சமாளிக்கறேன். நீ இங்கயே நினைச்சிட்டு எக்ஸாம் கோட்டை விட்டுடாத”, என்றான்.

“அதெல்லாம் விடமாட்டேன்”, என்றாள் ரோஷமாக.

பத்து நாட்கள் வேகமாக போனது……… தினமும் காலை ஆகாஷுடன் சேர்ந்து அவனுடைய ஷாப்பிற்கு செல்பவன், அங்கே ஆகாஷிற்கு உதவிக்கொண்டு இருப்பான். பின்பு ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுப்பான். மீண்டும் ஷாப்பிற்கே வந்துவிடுவான்.

அந்த வேலைகள் பார்ப்பது அவனுக்கு கை வலியை மறக்கச் செய்தது. ஆகாஷும் பார்த்தான், செந்தில் கடுமையான உழைப்பாளி என்பது அவன் வந்த சில நாட்களிலேயே தெரிந்தது. அவன் எப்போதும் சோம்பி உட்காரவேயில்லை. ஏதாவது வேலை அவனாக இழுத்துப் போட்டு செய்து கொண்டே இருந்தான்.  

அதைவிடவும் முக்கியமாக அவனுக்கு தொழிலாளர்களிடத்தில் பழகத் தெரிந்தது. அது ஆகாஷிற்கு வராத ஒன்று. முன்பிருந்தே அவன் முதலாளி வர்கத்திலேயே இருந்து பழகிவிட்டதால் அவன் தொழிலாளிகளிடத்தில் நல்ல உறவு முறை வைத்திருந்தாலும் அவர்களோடு அவர்களாக பழகும் பழக்கம் வராது.

அது செந்திலுக்கு நன்றாக வந்தது. அதனால் அவர்களிடத்தில் தொழிலாளியோடு தொழிலாளியாக நின்று ஈசியாக வேலை வாங்கினான். அவன் வந்த பிறகு அங்கே தீர்க்கப்படாமல் முதலாளிகளின் பார்வைக்கு வராமல் இருந்த சில பிரச்சனைகள் கூட ஆகாஷின் காதுக்கு செந்தில் மூலமாக வந்தது.

ஆகாஷ் அதை உடனே நிவர்த்தி செய்யவும், அவனுடைய மதிப்பும் அங்கே உயர்ந்தது.

ராஜி அவளுடைய எக்ஸாம் முடிந்ததும் செந்திலுக்கு அழைத்தாள், “நான் அங்கே வர்றேன்”, என்று.

“வா! ஆனா நான் இங்க ஆகாஷோட கடைக்கு வந்துடுவேன்! நீ தனியா தான் இருக்கணும், பரவாயில்லையா”, என்றான்.

“என்ன அப்போ வலியெல்லாம் குறைஞ்சிடுச்சா”,

“அது இருக்கு! நான் அதுக்கு பழகிட்டேன்!”, என்றான்.

“ஏதோ ஒண்ணு நான் வர்றேன்”, என்றாள் பிடிவாதமாக.

“சரி வா!”, என்றான்.

“உங்க மாமனார் இங்க வந்தா தானே நான் வரமுடியும், எங்கம்மா தனியா இருப்பாங்களே”, என்றாள்.

“அதை எப்படி நான் அவர்கிட்ட சொல்வேன்”,

“அதெல்லாம் எனக்கு தெரியாது? நீங்க சொல்றீங்க!”, என்றாள்.

மிகுந்த தர்மசங்கடதிற்கு உள்ளானான் செந்தில்……. அண்ணாமலையிடம் சென்று “ராஜி இங்கே வர்றேன்னு சொன்னா”, என்றவுடனேயே…..

அவரே, “அப்போ நான் அங்க ஊருக்கு போறேன், தேவி தனியா இருப்பா”, என்று கிளம்பினார்.

மிகுந்த நிம்மதியில் செந்தில் அவரைப் பார்க்க……. “என் மகளைப் பத்தி எனக்கு தெரியாதா”, என்றார்.

“ஹப்பா”, என்று பெருமூச்சு விட்டான் செந்தில். 

அத்தியாயம் இருபத்தி ஆறு:

ராஜி வருகிறாள் என்று தெரிந்ததுமே வாய் வார்த்தைக்காக கூட ஆகாஷ் அவளை வீட்டிற்கு கூப்பிடவில்லை, ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுத்துவிட்டான்.  

“தேங்க்ஸ்! தேங்க்யூ வெரி மச்!”, என்றான் செந்தில் ஆகாஷிடம்.

“நீ உதை வாங்கப் போற!”, என்றான் அசோக் மாதிரியே ஆகாஷும். இவனும் அசோக் போல தனக்கு இன்றியமையாதவனாகி விட்டான் என்று செந்திலுக்கு புரிந்தது.

ராஜி ட்ரெயினில் வர, செந்திலும் ஆகாஷும் அழைக்கச் சென்றிருந்தனர்.

அவளைப் பார்த்ததும் ஆகாஷ், “பார்த்துக்கோம்மா! பார்த்துக்கோ! உன் புருஷனை பத்திரமா உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன்”, என்றான்.

ராஜி பதிலுக்கு ஏதாவது வாயடிப்பாள் என்று பார்த்தால், அவளோ விடாமல் செந்திலைப் பார்த்திருக்க….. அவனும் ராஜியை பார்த்திருந்தான்.

“ஆரம்பிச்சிடாங்கடா!”, என்ற ஆகாஷ்……….. “இங்க கல்யாணம் ஆகாத பையன் ஒருத்தன் இருக்கேன்ற ஞாபகம் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா இல்லையா, அநியாயத்துக்கு கண்லயே ரொமான்ஸ் பண்றீங்க……”, என்று அவன் நொடிக்க.

“உங்களை யார் கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொன்னது”, என்று ராஜி பொங்கி எழுந்தாள்.

“பண்ணிக்கறேன்! பண்ணிக்கறேன்! யாருக்காக இல்லைனாலும் உனக்காக பண்ணிக்கிறேன்”, என்றான்.

அவன் சாதாரணமாகத் தான் சொன்னான். அது ராஜிக்குப் புரிந்தது, ஆனால் அந்த விளையாட்டுப் பேச்சுக் கூட அவளுக்கு ரசிக்கவில்லை.

“ம்கூம்! இந்த பேச்சே தப்பு! உங்களுக்காக பண்ணிக்கங்க….. வர போற பொண்ணுக்காக பண்ணிக்கங்க…. அது தான் நீங்க அந்தப் பொண்ணுக்கு குடுக்கற மரியாதை”, என்றாள்.

வழக்காடாமல் “சரி!”, என்றான் ஆகாஷும் உடனே, அவனுக்கும் அந்த முகம் தெரியாத பெண்ணுக்குமாக சேர்த்து.

“சரி பொண்ணாவது என் சார்பா பாருங்க”, என்றான்.

“அதுக்கென்னா பார்த்துட்டாப் போச்சு”, என்றாள் ராஜி……..

“ஆமாம்பா சிம்பாலிக்கா என்  பொண்டாட்டி சொல்றா! கல்யாணம் பண்ணிகிட்டா உன் நிம்மதி போச்சுன்னு!”, என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் செந்தில் ஜோக்கடித்து…….

“என்ன உன் நிம்மதி போச்சு!”, என்று சில வசவுகளையும் பல அடிகளையும் பரிசாக பெற்றான்.

“பாவம் விட்டுடு”, என்று ஆகாஷ் சமாதானக் கொடி பிடித்த பிறகே விட்டாள். ராஜி வந்த பிறகு இன்னமும் ஊக்கத்தோடு செந்தில் பயிற்சியில் ஈடுபட கை சற்று சுமாரானது.

நன்றாகிவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு மாதத்திற்கு பிறகு அவனால் அவனின் வேலைகளை செய்ய முடிந்தது. சற்று ஊனம் ஊனம் தான்! இருந்தாலும் வேலை செய்ய முடிந்தது வண்டி ஓட்ட முடிந்தது. இவ்வளவு தான் முடியும் என்று டாக்டர்களும் சொல்லி விட்டனர். இல்லாததற்கு ஏதோ என்று திருப்தியாக வேண்டி இருந்தது.

ராஜிக்கு தான் மிகுந்த வருத்தம்……. தன்னால் தான் இப்படியோ என்று. இவ்வளவு வலி வேதனைகளுக்கு பிறகும் கை பூரணமாக குண மாகவில்லையே என்று செந்திலிடம் புலம்பி தள்ளினாள்.

அவன் கவலைப்படுவதற்கு பதில் அவளை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.   

அன்று அவர்களை ஆகாஷ் விருந்திற்கு அழைத்தான். “நான் உன்னை இங்க வந்த முதல் நாளே கூப்பிட்டேன். நீதான் இன்னொரு நாள் வர்றேன்னு சொன்ன! ஞாபகம் இருக்கா! என்றான் ராஜியைப் பார்த்து.

“இருக்கு”, என்றாள்.

“அப்போ இன்னைக்கு போகலாமா”, என்றான்.

அவள் எப்பொழுதும் போல செந்திலை பார்க்க…….. “போகலாம்”, என்பது போல தலையசைத்தான்.

“ஆரம்பிச்சிட்டாங்கடா”, என்று மனதிற்குள்ளேயே புலம்பியவன்… அவர்களை அங்கிருந்த பிரசித்தி பெற்ற ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.

அங்கே வந்து பழக்கமில்லாத செந்திலும் ராஜியும் முகத்தை முகத்தை பார்க்க……. “என்ன ஆர்டர் பண்ணட்டும்”, என்று ஆகாஷ் கேட்க….. “நீங்களே சொல்லுங்க”, என்றாள் ராஜி.

“உங்களுக்கு தான் இந்த ட்ரீட். நீங்க தான் சொல்லணும்”, என்றான்.

அவனிடம் எங்களுக்கு சொல்ல தெரியாது என்றா சொல்ல முடியும்…… “நோ ப்ரோப்லம், நீங்க சொல்லுங்க”, என்றாள்.

பிறகு ஆகாஷே ஆர்டர் செய்தவன்….. “முதல்ல சூப் கொண்டுவாங்க! அதையெல்லாம் நான் சொல்லும் போது கொண்டுவந்தா போதும்”, என்றுவிட்டான்.

சூப் வரவும் அதை குடித்து முடித்தவர்களிடம்…….. “நான் உங்க கிட்ட பேசணும்”, என்றான்.

எதற்கு இந்த பீடிகை என்பது போல ராஜியும் செந்திலும் பார்க்க…….

“யோசிக்காம வேண்டாம்னு சொல்ல கூடாது! யோசிச்சு சரின்னு தான் சொல்லணும்!”, என்றான்.

என்னவோ என்பது போல பார்த்தவர்களிடம்……

“ராசிபுரம்ல இருந்து நாமக்கல் போற வழில எங்களுக்கு ஒரு மில் இருக்கு. அது எங்களுதுனு கூட சொல்ல முடியாது என்னுது தான். என் பங்குக்கு வந்தது. அக்காக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. அது ரொம்ப நாளாவே நஷ்டத்துல தான் ஓடிட்டு இருக்கு. நான் அதை வித்துடலாம்னு சொன்னேன். அப்பா கேட்கவேயில்லை”.

“இப்போ அவர் இல்லை….. அதை வித்துடலாம்னு தான் முடிவு பண்ணி வெச்சிருந்தேன்”.  

“இப்போ இந்த ஒரு மாசமா செந்திலோட உழைப்பை பார்க்கவும்……. நீ ஏன் அதை எடுத்து நடத்தக்கூடாதுன்னு தோணுது”, என்றான்.

செந்தில் அதிர்ந்தான், “நானா”, என்று.

“ம்! நீதான்”,

“எனக்கு ஒரு மில்லை நடத்தற அளவுக்கு திறமையோ, அனுபவமோ கிடையாது”,

“அனுபவம் கிடையாதுன்னு சொல்லு! சரி! ஆனா திறமையில்லைன்னு சொல்லாத! நான் நேர்ல பார்த்தேன்…….. நீ நல்ல உழைப்பாளி மட்டுமில்லை, புத்திசாலியும் கூட. எனக்கு நம்பிக்கையிருக்கு”, என்றான்.

ராஜி எதிலும் தலையிடாமல் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“அதுவே நஷ்டத்துல இருக்கு……. என்னால முடியாம இன்னும் நஷ்டமாயிடுச்சுன்னா”,

“ஒண்ணும் பிரச்சனையில்லை! நீ ஒரு ஆறு மாசம் முயற்சி பண்ணி பாரு! உன்னால முடியலைன்னா அதுக்கப்புறம் நான் வித்துட்டு போறேன். ஆனா அந்த நிலைமை வராதுன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு”, என்றான்.

அவன் தங்களுக்கு உதவுவதற்காக தான் இதை செய்கிறான் என்றெண்ணிய ராஜி…… நேரடியாகவே அவனிடம் கேட்டாள், “நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு இதை செய்றீங்களா?”,

“இதை நான் செய்யறதுனால உங்களுக்கு ஹெல்பா இருக்கும்ன்றது உண்மை தான்! ஆனா நான் இதை ஹெல்ப்க்காக செய்யலை. என்னோட மில்லை காப்பாத்திக்கனும்ன்ற எண்ணம் தான். செந்திலோட உழைப்பு திறமையை பார்த்து தான் கொடுக்கிறேன். அவன் ஒரு முயற்சி பண்ணட்டும் முடிஞ்சா பார்க்கலாம் இல்லைன்னா அதை அப்புறம் நான் வித்துக்கறேன்”, என்றான்.

செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள், “நாங்க நாளைக்கு சொல்றோமே”, என்றான் செந்தில்.

“கண்லயே பேசி என்னை கடுப்படிக்கராங்கடா”, என்று நினைத்த ஆகாஷின் வாய் தானாக, “சரி”, என்றது.

பிறகு ஆகாஷும் ராஜியும் தான் அதிகம் பேசி உண்டனர். செந்தில் அதிகம் பேசவேயில்லை. யோசனையிலேயே இருந்தான்.

“சரின்ற பதில் தான் எனக்கு வேணும். உங்களுக்காக இல்லை எனக்காக இது! எங்கப்பாவோட ரொம்ப இஷ்டமான சொத்து அது கைவிட்டு போகக்கூடாதுங்கறதுக்காக…..”, என்று சொல்லி அவர்களை அபார்ட்மெண்டில் விட்டுச் சென்றான் ஆகாஷ்.

“என்ன பண்ணலாம்”, என்றாள் ராஜி செந்திலை பார்த்து.

“தெரியலை, குழப்பமா இருக்கு”, என்றான்.

“எப்படியும் மில் புல் இன்சார்ஜ் விடறாங்கன்னா, நல்ல சம்பளம் குடுப்பாங்க தானே”, என்றாள் ராஜி.

“அப்போ போன்னு சொல்றியா”,

“இது ஆகாஷோட சொத்து மட்டும் தானே! அதனால் எனக்கு பிரச்சனையில்லை!”, என்றாள் ராஜி.

“எனக்கும் அது பிரச்சனையில்லை ராஜி”,

“வேற என்ன பிரச்சனை”,

“நான் ஜெயிக்கற மாதிரி இருந்தாதான் அந்த பொறுப்பை எடுக்கணும். சும்மா நானும் போனேன் வந்தேன்னு போய் என்னால சமாளிக்க முடியாம மறுபடியும் நஷ்டம் வந்து…. அதுக்கப்புறம் ஆகாஷ் வித்துடலாம்னு முடிவெடுத்தா, நான் தோத்துப்போன மாதிரி ஆகிடாதா”.

“வாழ்க்கையில தோல்வி பயம் இருந்தா என்னைக்கும் யாராலயும் ஜெயிக்க முடியாது. முடியும்னு நினைங்க அப்போதான் முடியும். சில சமயம் தப்பிப் போறதும் உண்டு. அதுக்காக துவண்டு போகக்கூடாது. அடுத்த முயற்சி செய்யலாம்”.

“வாழ்க்கையில வெற்றி தோல்வி ரெண்டும் தான் வரும்……… அது ரெண்டுல எதையுமே நம்மை கொண்டு போக விடக்கூடாது”,

“யோசிங்க நீங்களே முடிவெடுங்க! அப்புறம் நாம இப்படி செஞ்சிருக்கலாமோ அப்படி செஞ்சிருக்கலாமோன்னு குழம்பாதீங்க”, என்றாள்.

“என்னால முடியும்ன்றியா”,

“முடியும்! முடியலைன்னாலும்……….?”, என்று அவள் ஆரம்பிக்கும்போதே, கையை காட்டி அவளின் பேச்சை தடுத்து……

“என்னால முடியும்ன்றியா” என்றான் திரும்பவும்.

“முடியும்! நிச்சயம் முடியும்!”, என்றாள் ராஜி.

அடுத்த நொடி போனை எடுத்தவன் ஆகாஷிடம், “சரி”, என்றான்.            

“ஹேய்! செந்தில்”, என்று போனிலேயே கத்தியவன்……. “எனக்கு ரொம்ப சந்தோசம், எங்கப்பா இத்தனை நாளா கட்டிக் காத்து வந்த சொத்தை இழக்கப் போறேன்னு நினைச்சேன். இனிமே அந்த நிலைமை வராதுன்னு நம்பிக்கை இருக்கு”, என்றான் ஆகாஷ்.

“கண்டிப்பா அதைக் காப்பாத்திடுவோம்னு எனக்கும் நம்பிக்கை இருக்கு”, என்றான் செந்தில்.

“இதுதான் என் செந்தில்”, என்று ஓடிவந்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள் ராஜி. 

ஆறு மாதங்களுக்கு பிறகு………

செந்தில் அந்த மில்லின் பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. மிகவும் கடுமையாக உழைத்தான். என்ன ஏதென்று அவனுக்கு விஷயங்கள் புரிபடவே மூன்று மாதங்கள் ஆகின.

உரிமையாளர் அங்கே இருந்து மேற்பார்வை பார்க்காததால் தான் இவ்வளவு நஷ்டம் வரக் காரணம் என்பது புரிந்தது. ப்ரொடக்ஷன் சரியாக இல்லை. எப்படியும் சம்பளம் வந்துவிடுகிறது என்று தொழிலாளர்களும் ஆர்வமாக இல்லை.

ஆகாஷிடம் பேசி நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று ஒரு மாதத்திற்குள் இவ்வளவு ப்ரொடக்ஷன் காட்டினால் ஊக்கத்தொகை என்று ஆசை காட்டினான்.

அதை கொடுத்த போது இன்னும் நஷ்டம் தான். இருந்தாலும் தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அவர்களுக்கு தெரியாமல் எதுவும் இல்லையே. நஷ்டத்திலேயே இவ்வளவு செய்பவர்கள் லாபத்தில் இன்னும் செய்வார்கள் என்று மேனேஜ்மெண்ட் மீது ஒரு நம்பிக்கை வர வைத்து வேலை வாங்கினான்.

அவனும் அவர்களோடு கலந்து நன்றாக பழகினான். அவர்களின் கோரிக்கை ஏதாவது இருந்தால் முடிந்தவரை உடனே செய்து கொடுத்தான்.         

அப்படியும் சில சமயம் தன்னால் முடியுமா முடியாதா என்று அவனையும் மீறி அவனுக்கு எண்ணம் தோன்றும் போது, “முடியும்”, என்று ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தாள் ராஜி.

இந்த ஆறு மாதங்களுக்கு பிறகு தான் அவனால் நஷ்டமில்லாமல் அந்த மில்லை செயல் பட வைக்க முடிந்தது. இன்னும் சில மாதங்களுக்கு அப்படி தான் ஓடும். லாபம் வர இன்னும் ஆறு மாதமோ வருடமோ கூட ஆகலாம் என்று அவனுக்கு தெரியும். நஷ்டமில்லாமல் செய்ததே பெரிய காரியம்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்க்கு வருவான். நைட் ஷிப்ட், டே ஷிப்ட் என்று எல்லாவற்றையும் கண்காணிப்பான். அவன் எப்பொழுது உறங்குவான் என்றே யாருக்கும் தெரியாது. 

இந்த மாதங்களில் அவன் மனம் ராஜியிடம் கூட லயிக்கவில்லை. அந்த மில்லின் முன்னேற்றமே அவனின் வெறியாக இருந்தது. 

ராஜிக்கு கஷ்டமாக இருந்தாலும் தான் அவனுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்று மனதை தேற்றிக்கொள்வாள்.

ராஜி கூட செந்திலை கிண்டல் செய்வாள், “ஏம்பா? உன் லவ் ஸ்டோரிய ஓட்டி என் வாழ்க்கையில ஒரு சோகமான சீன் வெச்சப்போ கூட அதுல ரொமான்ஸ் கொண்டு வந்த நீ…….. ஆனா இப்போ தான் என்னை அம்போன்னு விட்டுட்ட! என் வாழ்க்கையையே பாலைவனமாகிட்ட……..”, என்பாள்…….

“பொறுமை! பொறுமை! சீக்கிரம் சோலைவனமாக்கிடறேன்”, என்பான்.

“என்னவோ டைலாக்லாம் பெருசா தான் இருக்கு பார்ப்போம்”.

அன்று ஆகாஷ் வருவதாக இருந்தது. என்ன இருந்தாலும் முதலாளி இல்லையா சற்று பதட்டமாக சீக்கிரம் கிளம்பினான் செந்தில்.

ஆகாஷும் நேரே மில்லுக்கே வந்தான்.  நிலைமையை பார்த்தவன் அவனை மிகவும் பாராட்டினான். “நீ சாதிச்சிட்ட செந்தில்”, என்றான்.

“சரி! இதுல சைன் பண்ணு!”, என்று சில பேப்பர்களை நீட்ட செந்திலும் என்ன ஏதென்று கேட்காமல் கையெழுத்திட்டான்.

“படிச்சு பாக்கமாட்டியா நீ”,

“முதலாளி சொன்னா கையெழுத்து போட வேண்டியது தானே”, என்றான் செந்தில்

“யார்? யாருக்கு முதலாளி?”, என்றான் ஆகாஷ்.

செந்திலுக்கு மனதில் திக்கென்றது……….

“லாபமில்லைன்னு விக்கப் போறியா! லாபமில்லைனாலும் நஷ்டம் இல்லையே! இன்னும் கொஞ்ச நாள் பொறுக்கலாம்!”, என்றான் பதட்டமாக.

பெரிதாக சிரித்த ஆகாஷ்….. “அட நீ வேற! நான் உனக்கு முதலாளி இல்லை பார்ட்னர்”, என்றான்.

செந்தில் புரியாமல் பார்க்க……… “நீ கையெழுத்து போட்டது பார்ட்னர் ஷிப் பேப்பர்! நீ என்னோட வொர்கிங் பார்ட்னர்! எனக்கு சிக்ஸ்டி, உனக்கு ஃபார்ட்டி”, என்றான்.

செந்திலின் முகத்தில் மலர்ச்சியில்லை, அசையாமல் நின்றான், “ஆனா ஏன்?”,  என்ற கேள்வியோடு……

“இது திடீர்ன்னு எடுத்த முடிவில்லை! உனக்கு நான் இதை ஆஃபர் பண்ணினப்பவே எடுத்த முடிவு! இந்த சொத்தை நீ காப்பாத்தி குடுத்துட்டன்னா உனக்கு ஷேர் கொடுக்கணும்னு அப்பவே முடிவு பண்ணினது தான்…..”

“ஆனா அப்பவே சொல்லியிருந்தா புருஷனும் பொண்டாட்டியும் ஒத்துட்டு இருக்க மாட்டீங்க! அதான் நான் சொல்லலை! என்ன அப்போதைய முடிவுல ஒரு சின்ன மாற்றம்…….. அப்போ நான் எனக்கு எழுபது உனக்கு முப்பதுன்னு நினைச்சியிருந்தேன்”.

“இப்போ உன் கடின உழைப்பை பார்த்து அறுபது நாப்பதுன்னு மாத்திட்டேன்”, என்றான்.

அப்போதும் செந்திலின் முகத்தில் மலர்ச்சியில்லை, “என்னடா பத்தலையா? பிஃப்டி பிஃப்டி கேட்கறியா, சொல்லு பண்ணிக்கலாம்”, என்றான்.

“ப்ச்! இதுக்கே ராஜி என்ன சொல்வாளோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்! இதுல பிஃப்டி பிப்டிஃ, நீ காமெடி பண்ற! இதுவே அதிகம்!”, என்றான் சலிப்பாக…..

“சத்தியமா!!!!!!!!! இப்படி ஒரு எக்ஸ்பிரஸ்ஷன் நான் எதிர்பார்க்கலை”, என்றான் ஆகாஷ்.

மதியம் வரை அங்கிருந்த வேலைகளை பார்த்து மதியம் உணவுக்கு அவனை வீட்டிற்கு அழைத்து சென்றான் செந்தில்.

அங்கே சென்று ராஜியிடம் விஷயத்தை ஆகாஷ் பகிரவும் செந்தில் பயமாக ராஜியைப் பார்த்தான்…….. எங்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று

ஆனால் ராஜி முகத்தில் கேட்டவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி, அன்னபூரணியும் சீனியப்பனும் கூட மகிழ்ந்தனர். ராஜிக்கு அது அவனின் உழைப்பிற்கு கிடைத்த பரிசாக தான் தெரிந்தது.

விருந்து முடித்து அப்படியே செந்திலை மட்டும் அழைத்துக்கொண்டு போய் தேவிக்காவிடமும் அண்ணாமலையிடமும் விஷயத்தை சொல்லி அவர்கள் முகத்திலும் மலர்ச்சியைப் பார்த்து சென்றான் ஆகாஷ்.

“இருந்துட்டுப் போடா, இன்னும் நீ கணக்கே பார்க்கலை”, என்று செந்தில் சொன்னதையும் மீறி……….

“இல்லை வேலையிருக்கு! அடுத்த மாசம் கட்டாயம் ரெண்டு நாள் இருக்கிற மாதிரி வந்து கணக்கைப் பார்க்கறேன்”, என்று சொல்லிச் சென்றான்.         

அன்று இருந்த சந்தோஷத்தில் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டான் செந்தில்……

“என்ன அதிசயம் சீக்கிரம் வந்துட்டீங்க!”, என்று கேட்டுகொண்டே அவனின் பின்னே ரூமிற்குள் நுழைந்த ராஜியை அவசரமாக அணைத்தான்.

“ஹேய்! என்ன இது?”, என்று ராஜி சிணுங்கினாலும் கணவனின் அணைப்பில் அடங்க தவறவில்லை. இப்படி அவன் அணைத்தே பல நாட்கள் ஆகியிருந்தன.

வெகு நேரம் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் நீடித்தது இந்த அணைப்பு.

“என்ன இது பார்ட்னர் ஷிப் சந்தோஷமா….. “,

“அதுவும் ஒரு காரணம், ஆனா அதுமட்டுமே காரணமில்லை…… இது எனக்கு ஆரம்பம் தான். இன்னும் நான் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு”, என்றான்.

“வேற என்ன காரணம்?”,

“என் பயமெல்லாம் போச்சு”, என்றான்.

“என்ன பயம்?”, என்றாள் புரியாமல் ராஜி.

“என் வாழ்க்கையை பத்தின பயம்! அதை நான் எப்படி வாழப்போறேன்ற பயம்! என் கை சரியாகுமான்ற பயம்! முழுசா சரியகாதபோது இதை வெச்சு நான் என்ன வேலை செஞ்சு உன்னை காப்பாத்தபோறேன்ற பயம்! இந்த வேலையை ஒத்துக்கிட்டோமே இதை சரியா செய்ய முடியுமான்ற பயம்…….. !”,

“இப்ப எனக்கு எந்த பயமுமில்லை”, என்று சிரித்தான்.

கணவன் சிரிப்பதையே கண்களில் சிறையெடுத்தாள்….. வெகு நாட்களுக்கு பிறகு அவனின் கண்களும் சேர்ந்து சிரித்தது.

மறுபடியும் அவளை அணைத்துக்கொண்டவன்……… “நீ இல்லைன்னா என்னால இதெல்லாம் முடிஞ்சிருக்காது ராஜி”, என்றான்.

அவனை விலக்கியவள்…… “இதென்ன பேச்சு! இது உங்க உழைப்பு”, என்றாள்.

“நிச்சயம் என் உழைப்பு தான்! ஆனா எனக்கு உழைக்கணும்! என்னால உழைக்க முடியும்னு ஆர்வத்தை கொடுத்தது நீ! உனக்கு தெரியுமா தெரியாதா தெரியலை….. உங்கப்பா கிட்ட வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வெட்டியா சுத்திட்டு இருப்பேன். எந்த ஒரு வேலையிலேயும் நிலைச்சு இருக்க மாட்டேன். அசோக் என்னை திட்டிட்டே இருப்பான்……… அப்போ கூட கேட்க மாட்டேன்”.

“அப்போ தான் கல்யாணம் பண்ணிக்க உன் பின்னாடி சுத்தினது கூட…. ரொம்ப மோசமா இருந்திருக்கேன்”.

“இப்போ என்னோட இந்த மாற்றத்துகெல்லாம் காரணம் நீதான்!….. நீ மட்டும் தான்!”, என்றவன் அணைப்பை ஆவேசமாக இறுக்கி…… சில பல முத்திரைகளை பதிக்க அவனின் தாக்குதலில் திணறியவள்……..

“இதென்ன ஒரே நாள்ல பாலைவனத்தை சோலைவனமா ஆக்குறீங்களா”,

“எஸ்! சோலைவனமா தான் ஆக்கப்போறேன்! அதுல என்னை தாலாட்டுற நிலவு நீதான்”, என்றான்.

“அய்யோப்பா! என்னமா டைலாக் அடிக்கறீங்க”,

“ஆமா! இது கூட நல்லா இருக்கே! நீதானே தாலாட்டும் நிலவு”, என்று அவளை பார்த்து செந்தில் சிரிக்க…..

“ஆமாம்! நல்லா தான் இருக்கு! நீதானே தாலாட்டும் நிலவு!”, என்று அவளும் சொல்லியபடியே ஆசையாய் அவன் தோள் சாய்ந்தாள் ராஜி.   

இப்போது செந்திலுக்கு முழு நம்பிக்கை இருந்தது வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்று……….

நம்பிக்கை தானே வாழ்க்கை…….

நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்……. நம் எண்ணங்களின் பிடியிலேயே நம் வாழ்வு……

வெற்றி பெறுவோம் என்று நினைக்க வெற்றியே பெறுவோம்…… மீறி வரும் தோல்வியும் வெற்றிக்கு முதல் படியே…….  

செந்திலும் ராஜியும் ஒருவர் மீது மற்றொருவர் எல்லையில்லா காதலோடும் அன்போடும் இருக்க……….. வண்ணமயமான எதிர்க்காலம் அவர்களுக்கு காத்திருந்தது……….. அதை எதிர்நோக்கி அவர்களும் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தனர்.

                                                            ( நிறைவுற்றது )

 

Advertisement