Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு:

வெண்ணந்தூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது…. சென்னை கிளம்ப மிகவும் யோசித்துக்கொண்டிருந்தான் செந்தில்.

அவனை விட்டு ஒரு மாதம் பிரிய வேண்டுமா என்று தோன்றிய போதும்……. கை ரொம்பவும் முக்கியம் என்பதால் அவனை போகச்சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தாள் ராஜ ராஜேஸ்வரி.

செந்தில் தான் மிகவும் யோசித்தான், ராஜி இருக்கும் போது எப்படியோ, இப்போது அவர்கள் வீட்டில் தங்கச் சொல்லி தான் ஆகாஷ் சொல்லுவான்…. வேறு இடம் தங்க விடமாட்டான் என்று தெரியும்.

மீறி தங்கும் நிலையிலும் இல்லை செந்தில்….. எங்கே தங்குவான் ஓரிரு நாளென்றால் ஹோட்டலில் கூட பிடிவாதம் பிடித்து தங்கிக்கொள்வான்…… ஆனால் ஒரு மாதம் தான் தங்கிக்கொண்டு மாமனாரை பில் கட்டுங்கள் என்று சொல்ல முடியாது……

பணமில்லாத நிலை மீண்டும் அவனை வாட்டியது, வதைத்தது. மீண்டிருந்த சிரிப்பும் சந்தோஷமும் மீண்டும் தொலைந்து போனது…….

ஊருக்கு கிளம்பும் ஓரிரு நாட்களுக்கு முன்பே முகம் சிரிப்பை தொலைத்தது…..

அவனின் மாற்றங்களை கவனித்த ராஜி, “என்னப்பா ஏன் இப்படி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா……. இல்லை கை பத்தி யோசிக்கறீங்களா……… சரியாகிடும்!”, என்றாள்.

முயன்று சிரித்தவன், “ஒண்ணுமில்லை விடு”, என்றான்.

அவனின் பதிலில் ராஜிக்கு திருப்தியில்லை அவனையே விடாமல் பார்க்க…. எதிர்காலத்தை நினைத்து பயம் என்று சொல்லாமல், “கையை பற்றி தான்”, என்றான்….

“நிஜமா”,

“நிஜம்மா”,

“சரியாகிடும்!”, என்று அவனுக்கு நம்பிக்கை ஊட்டினாள்…..

“உங்கப்பா போன் பண்ணினார்”, என்றான்.

“என்னவாம்…….?”,

“நாளன்னைக்கு ஊருக்கு போகலாமான்னு”,

“நீங்க என்ன சொன்னீங்க?”,

“அதுக்கு அடுத்த நாள் போகலாம்னு சொல்லிட்டேன்”,

“ஏன்?”,

“அசோக் தங்கச்சி கல்யாணம் மறந்து போச்சா”,

“அட ஆமாமில்லை! எனக்கு ஞாபகமே இல்லை”,

“உங்கம்மா வேற உன்னை பார்க்கணும்னு சொன்னாங்களாம்! உங்கப்பா சொன்னார்!”,

“தேவைன்னா அவங்க வருவாங்க”, என்றாள்.

“எல்லா நேரமும் உன்னை பார்க்க வர்றாங்க தானே! எப்பயாவது வர முடியலை வான்னு சொன்னா நீ போகவேண்டியது தானே! போ! போயிட்டு வா!”,

“அப்படியா சொல்றீங்க……… அப்போ சரி! நீங்களும் வாங்க! நீங்க வந்தா போறேன்!”, என்று நிபந்தனை விதித்தாள்……

“வர, வர உன் பிடிவாதம் அதிகமாகிட்டே போகுது ராஜி!”, என்று கடிந்து கொண்டே எழுந்தான்……… “வா போகலாம்”, என்று…….

“நான் அப்படிதான்”, என்று பழிப்பு காட்டிக்கொண்டே அவனோடு சென்றாள்.

அங்கே தேவிகா சற்று சோர்வாக தெரிந்தார். பார்த்தவுடனே ஏதோ சரியில்லை என்று ராஜிக்கு தெரிந்துவிட்டது.

“ஏன்மா, என்ன பண்ணுது?”, என்றாள் கவலையாக ராஜி.

“தெரியலை ராஜி! காலையில இருந்து கொஞ்சம் தலை சுத்தலாவே இருக்கு”.

“இதை கவனிக்காம என்ன பண்றார் உன் புருஷன்”, என்றாள் காட்டமாக………

“ராஜி!!!!”, என்று அதட்டிய தேவிகா, “அப்பாவை இப்படியெல்லாம் என் முன்னாடி எப்பவும் மரியாதையில்லாம பேசாத”, என்றார்.

“நான் அப்படிதான் பேசுவேன்”, என்றாள்……

“பேசக்கூடாதுன்னா…… பேசக்கூடாது”, என்று மறுபடியும் கடுமையாக ஒரு அதட்டல் போட்டார் தேவிகா.

“ஏன்? ஏன்? அவர் இவ்வளவு தப்பு செஞ்சும் நீ அவருக்கு சப்போர்ட் பண்ற……”,

“நான் அப்படிதான்”, என்றார் தேவிகாவும் பிடிவாதமாக………

ராஜியின் பிடிவாதம் யாரிடம் இருந்து வந்தது என்று செந்திலுக்கு நன்கு புரிந்தது. செந்தில் நடுவில் புகுந்தான்…….. “ராஜி! நீ இப்போ அவங்களை பார்க்க வந்தியா? இல்லை சண்டை போடா வந்தியா?”,

“நீங்க இதுல தலையிடாதீங்க! உங்க வேலையை மட்டும் பாருங்க!”, என்றாள் எடுத்தெறிந்து….

தேவிகா பயந்து போனார் செந்திலுக்கு கோபம் வந்துவிடுமோ என்று……. ஆனால் அந்த பயத்திற்கு எல்லாம் அவசியமே இல்லாமல்……. “நான் என் வேலையை தான் பார்க்கிறேன், உன்னை பார்க்கறது தான் என் வேலை”, என்றான்.

அவன் அந்த வார்த்தைகள் சொன்ன விதத்தில் ராஜியின் கோபம் சற்று மட்டுப்பட்டது…. “ப்ச்! பேச்சை மாத்தி விடாதீங்க”, என்றாள்.

“சண்டையை அப்புறம் போடலாம்! முதல்ல அவங்களுக்கு என்ன பண்ணுது பாரு! ஹாஸ்பிடல் போறதுன்னா போகலாம்”, என்றான்.  

இவர்களின் இந்த பேச்சுக்கள் தேவிகாவிற்கு மிகுந்த நிம்மதியை கொடுத்தது. தன் பெண் என்ன செய்தாலும் செந்தில் சமாளித்துவிடுவான் என்று தோன்ற…. இருந்த சோர்வும் விலகுவது போல தோன்றியது.     

“என்னமா பண்ணுது”, என்றாள் மறுபடியும்.

“கொஞ்சம் சக்கரை கம்மியாயிடுச்சு போல பாப்பா! காலையில படபடப்பா வந்து மயக்கமா வந்துடுச்சு……. அப்பா உடனே சக்கரையை போட்டார்……. அப்புறம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனார்….. ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க பாப்பா……. இருந்தாலும் கொஞ்சம் படபடப்பா இருக்கு”, என்றார்.

அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று செந்தில் இறங்கி கீழே வந்தான்.

“இன்னும் ரெண்டு நாள்ல அவரும் அவங்க மாமனாரும் சென்னை போறாங்க… நீ எப்படி தனியா இருப்ப”, என்றாள்.

முதலில் தேவிகாவுக்கு புரியவில்லை, யாரைச் சொல்கிறாள் என்று. பிறகு தான் அண்ணாமலையை சொல்கிறார் என்றுணர்ந்தவர்……… சிரித்தே விட்டார்.

“அது என்ன அவர் மாமனார்…..?”,

“உனக்கு தான் உன் புருஷன்னு சொன்னா கோபம் வருதே…..”,

“அப்போ அப்பான்னு சொல்ல மாட்ட”,

“மாட்டேன்”, என்றாள் பிடிவாதமாக.

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய தேவிகா……. ராஜியை என்ன செய்வது என்பது போல பார்க்க…….. பதிலுக்கு ராஜியும் தேவிகாவை என்ன செய்வது என்பது போல பார்த்தாள்….

“எப்படிம்மா? எப்படிம்மா அவரோட செய்கையை உன்னால மன்னிக்க முடிஞ்சுது, எப்படி நீ அவரை சகிச்சுகுற!”, என்றாள் தன் தந்தையின் செயலை அருவருத்து…..

தேவிகா ஏதோ பேச வர…….. “நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்……..”, என்றாள்.

“ஏன் ஒத்துக்க முடியாது…..? அவர் இப்படி செஞ்சிட்டார்ன்றதுக்கா நான் அவர் மேல வெச்ச அன்பு இல்லைன்னு ஆகிடுமா…….. நமக்கு பிடிச்ச மாதிரி இருந்தா தான் அவங்க மேல அன்பு இருக்குமா என்ன? என்னோட அன்பு உண்மையானது அவர் எப்படி இருந்தாலும் அவரை மட்டுமே நினைக்கும்”,

“அவர் என்னை விட்டுட்டு போயிருந்தா கூட…….  நான் அவரை மட்டுமே தான் நினைச்சிட்டு இருந்திருப்பேன்…..”,

“நீ சொன்னியே ஒரு வார்த்தை அவரை எப்படி சகிச்சுக்கிறேன்னு……. நான் அவர் மேல வெச்ச காதல் தான் எனக்கு இந்த சகிப்பு தன்மையை கொடுக்குது…… நான் முன்னாடி ஆயிரம் காரணம் சொல்லியிருக்கலாம், குடும்ப கௌரவம் அது இது…. என்னோட இடத்தை நான் யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன் அப்படி இப்படின்னு…….. அதெல்லாமும் நிஜம் தான்………”,

“ஆனால் அதையெல்லாம் மீறி எனக்கு அவர்மேல இருக்குற அன்பு, பாசம், காதல், இதெல்லாம் தான் எனக்கு இந்த மாதிரியான காரணங்களை தேட வைக்குது. அவர் செயலை மன்னிக்க வைக்குது…….. தொடர்ந்து என்னை அவரோட வாழ வைக்குது……”,

தன் அன்னையின் விளக்கங்களை கேட்டு ராஜிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை……

இப்படி ஒரு காதலை, ஒரு வார்த்தையை அவள் தன் அன்னையிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த அன்பிற்கெல்லாம் தன் தந்தை தகுதியில்லாதவர் போலவே தோன்றியது.

“ஆனா அவர் உன்மேல காதல் வைக்கலையே…….. அந்த பொண்ணு மேல இல்லை வெச்சிருக்கார்”.

“அந்த பொண்ணு மேல காதல் வெச்சிருக்கார் தான்! அதுக்காக என்மேல இல்லைன்னு அர்த்தமா”, என்றார்.

எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது என்று ராஜிக்கு தெரியவில்லை…. உன்னை என்று பல்லை கடித்தவள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

“இந்த டீ வீ சீரியல் எல்லாம் பார்த்து பார்த்து கெட்டு போயிட்டம்மா….. தப்பையெல்லாம் சரின்ற மாதிரியே காட்டுறாங்க……. இருக்கற அத்தனை சீரியல்லையும் ரெண்டு பொண்டாடிங்க, நம்மல்லாம் எங்க போயிட்டு இருக்கோம்னே தெரியலை”, என்றாள் ஆதங்கமாக……

“நான் எந்த சீரியல் பார்க்கிறேன்”, என்று அவளிடம் சண்டைக்கு வந்தார்.  

“ம்கூம்! இது திருந்தாத ஜென்மம்….. தன் தந்தை கடைசிவரை அங்கேயும் இருப்பார் இங்கேயும் இருப்பார்”, என்று புரிந்துவிட்டது ராஜிக்கு.   

“அதுக்காக நான் உங்கப்பா செஞ்சது சரின்னு சொல்லலை! அது மன்னிக்கக் கூடாத தப்புதான்…….! என்னோட நிலையை தான் சொல்றேன்……… உனக்கும் என்னைக்காவது என்னை புரியும் பாப்பா!”, என்றார்.

ராஜி தலையை நிமிர்த்தவே இல்லை….  தன் அன்னையை இப்போது பார்த்தால் இருக்கும் கோபத்திற்கு வார்த்தைகளால் கடித்து குதறி விடுவோம் என்று தெரியும்.. முயன்று அமைதி காத்தாள்.

“இரு! இன்னும் மாப்பிள்ளைக்கு நான் எதுவுமே குடிக்க கொடுக்கலை! நான் போய் காபி போடறேன்”, என்று போனார்.

செந்தில் சண்டை முடிந்ததா, இல்லை தொடருகிறதா……… போய் பிரித்து விடலாம் என்று மேலே வந்தான். ராஜி இருந்ததினால் மேலே போக தயங்கிக்கொண்டே இருந்த அண்ணாமலை செந்தில் மேலே போகிறான் என்று தைரியமாக அவனை பின்தொடர்ந்தார். 

ராஜி தலையில் கைவைத்து அமர்ந்திருந்ததை பார்த்த செந்தில்….. “என்ன ராஜி?”, என்றபடி அருகில் போக…….. அம்மாவிடம் காட்ட முடியாத கோபத்தை செந்திலிடம் காட்டினாள்.

அவனை முறைத்தாள்….

“ஏன்? ஏன்? இப்படி உட்கார்ந்து இருக்கிற…… உங்கம்மாவை ரொம்ப திட்டிட்டியா”, என்றான்.

அவனின் கேள்வியில் இன்னும் அவனை முறைத்தாள்.

“அவங்க என்னை திட்டியிருக்க மாட்டங்களா……..”,

“அவங்களாவது உன்னை திட்டுறதாவது…… நீ அதுக்கு விடுவ”, என்றான்.

அவனின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள்…….. “என் மேல ரொம்ப நம்பிக்கை போல”, என்றாள்.

அவள் கொட்டுவதற்கும் அண்ணாமலை வருவதற்கும் சரியாக இருக்க….. அண்ணாமலை கண்டும் காணாமல் உள்ளே போக……

செந்தில்தான் அசடு வழிந்தான்.

“ஏன் ராஜி இப்படி பண்ற?”, என்று அவளை அதட்ட………

“தோ பாருங்க! நானே நொந்து போயிருக்கேன்! கடுப்படிக்காதீங்க!”,

“ஏன்  இந்த எஃபக்டு?”,

“ம்ம்ம்ம்ம்! இங்க ஒரு லவ் ஸ்டோரி ஓடிச்சு! அதை பார்த்து தான்!”, என்றாள் இன்னும் கடுப்பாக…..

“என்ன? என்ன?”, என்றான் சுவாரசியமாக செந்தில்……

என்ன இருந்தாலும் அது தன் அன்னையின் உணர்வுகள், அதை செந்திலிடம் கூட அவளால் பகிர முடியவில்லை. 

“கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா! தலையை வலிக்குது”, என்றாள்.

“சொல்ல இஷ்டம் இல்லைனா சொல்ல முடியாதுன்னு சொல்லு! என்னை ஏன் பேசாம இருக்க சொல்ற…….”, 

“ஷ்! யப்பா! முடியலை, விடுங்க!”, என்று அதட்டல் போட்டாள்.

அதற்குள் காபியுடன் தேவிகா வர……. பேச்சை விட்டனர் இருவரும். 

“ஏன் தம்பி? நாளன்னைக்கு சென்னைக்கு போக வேண்டாம்னு சொல்லீடிங்கலாம்”, என்றார் தேவிகா

“அன்னைக்கு அசோக்கோடா தங்கச்சிக்கு கல்யாணம், நான் இல்லைன்னை அவனுக்கு ரொம்ப வருத்தமாயிடும்…… அதுதான்!”,

“அப்போ நம்ம பாப்பாவும் வருதா”,

அவர் எதற்கு கேட்கிறார் என்று புரியாவிட்டாலும்……… “அவ இல்லாமலா நிச்சயம்  வருவா”, என்றான்.

அவர் கேட்டதன் அவசியம் அவர்கள் கிளம்பும் போது புரிந்தது. நகைப் பெட்டியோடு வந்து நின்றார் தேவிகா…….

“அம்மா”, என்று ராஜி ஆரம்பிக்கும் போதே……..

“கல்யாணம் முடிஞ்ச உடனே திருப்பிக் கொடுத்துடு”, என்றார்

செந்திலைப் பார்க்க…….. வாங்கு என்றும் சொல்லவில்லை, வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை, உன் இஷ்டம் என்பது போல நின்றிருந்தான்.

கண்களால் என்ன செய்யட்டும் என்று வினவ….. “அங்க என்ன பார்வை! நீ நமக்குள்ள அவரை தலையிட வேண்டாம்னு சொல்லிட்ட அவர் வரமாட்டார்!”, என்றார் அவளின் வார்த்தையை வைத்தே……….

“அம்மா வர வர நீ ரொம்ப புத்திசாலி ஆயிட்ட”, என்ற சிணுங்கிக்கொண்டே   வாங்கிக்கொண்டு கிளம்ப போக………

“அப்பா ஊருக்கு போகும்போது, நீ இங்க வந்து இருக்கியா”, என்றார் கெஞ்சுதலாக…..

“வான்னு சொன்னா வர்றேன், அதுக்கு ஏம்மா இப்படி கேட்கற”,

“நீ தான் ரொம்ப விலகிப் போற”, என்றார் வருத்தமாக…….

“அம்மா”, என்றவள் செந்திலை காட்டி……… “இவர் மாமனார் கிட்ட இருந்து தான் விலகறேன், உன்கிட்ட இருந்து இல்லை”, என்ற சொல்லி சென்றாள்.

“அடங்கவே மாட்ட நீ”, என்று சொல்லிய படியே அழைத்து சென்றான் செந்தில்.

அசோக்கின் தங்கையின் வெகு சிம்பிள் ஆக நடந்தது.

மண்டபம் உள்ளே நுழையும் போதே எல்லோரையும் பார்வையால் அளந்தாள்…….. எல்லோரும் சாதாரணமாக தான் இருந்தனர்…….. “பரவாயில்லை, இந்த அம்மா குடுத்தாங்கன்னு எல்லா நகையையும் போடாம வந்தேன். அப்புறம் நான் மட்டும் இங்க தனியா தெரிஞ்சிருப்பேன்”, என்றாள் செந்திலிடம்.

“சொந்தக்காரங்களை விட அசோக் வீடு கொஞ்சம் வசதி தான். இருந்தாலும் மூணு பொண்ணுங்க இல்லையா அவங்கப்பா  அதனால எண்ணி எண்ணி தான் செலவு செய்வார்……”, என்று செந்திலும் பதிலளித்துக்கொண்டே வந்தான்.

மணவறையில் மாப்பிள்ளை மட்டுமே அமர்ந்து அய்யர் சொன்ன மந்திரங்களை சொல்லிக்கொண்டு  இருந்தான்.

“நீ இங்க உட்கார்ந்திரு, நான் அசோக்கு ஏதாவது தேவையான்னு பார்த்துட்டு வந்துடறேன்”.

“நேத்து மதியம் போனவங்க கல்யாண வேலைன்னு சொல்லி இப்போ என்னை கூட்டிட்டு வரத்தான் வந்தீங்க……. இங்கயும் என்னை விட்டுட்டு போகணுமா” என்று அவள் கேட்டுக்கொண்டு இருக்கும்போது அவர்களின் அருகில் வந்து………. “வாம்மா!”, என்று அவனை வரவேற்றான் அசோக்.

பின்னேயே அவனின் அன்னையும் தந்தையும் வந்து வரவேற்றனர்.

“டேய் செந்திலு, பந்தி கிட்ட ஆளே இல்லை. போய் கொஞ்சம் கவனிடா! நான் இங்க தாலி கட்டினதும் வந்துடறேன்”, என்றான் அசோக்.

“இப்பவே போறேன்”, என்றவன்…… கண்களாலேயே ராஜியிடம் சொல்லிவிட்டு விரைந்தான்.

அவன் பின்னேயே சென்றவள், “கை இப்படி இருக்கு, நீங்க என்ன வேலை செய்வீங்க! வலிக்கப் போகுது!”, என்றாள்.

“மேற்பார்வை மட்டும் தான் பார்ப்பேன், வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்”, என்று சொன்னப் பிறகே இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அதன் பின் ராஜிக்கு என்ன வேலை அங்கிருந்தவர்களை எல்லாம் கண்களால் படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

முதலில் அவள் படம் பிடித்தது மாப்பிள்ளையை தான்……. ரொம்பவும் சுமார் ரகமாக கூட தோன்றவில்லை. அவள் மாப்பிள்ளையை பற்றி யோசிக்கும் போதே பெண்ணை அழைத்து வந்தனர்.

பார்த்தவள் அசந்து விட்டாள்…… பெண் அப்படி ஒரு அழகு….. நல்ல நிறம்…. நல்ல முக லட்சணம்….. பெண்களின் சாதாரண உயரத்தை விட சற்று கூடுதலான உயரம்……. நல்ல அழகி…….. இவளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையா என்று தோன்றியது.

அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த நிறைய பேருக்கு அதுதான் எண்ணம் போல….. நிஜமாகவே திருமணம் பந்தம் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகவே தோன்றியது.

“இவ்வளவு அழகா இருக்குற பொண்ணுக்கு, இப்படி ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க எப்படி தான் அவங்க அப்பா அம்மாக்கு மனசு வந்ததோ”, என்று நினைத்த போதே……….

“உங்கப்பா கூட தான் அழகு, கம்பீரம். ஆனா அவர் செஞ்சி வெச்சிருக்கிற வேலை………. அழகென்ன அழகு, மனசும், ஒழுக்கமும், நடத்தையும் தான் முக்கியம்”, என்று சமாதானப்படுத்திக்கொண்டாள்.  

திருமணம் முடிந்தும் செந்தில் வந்த பாடாகவே காணோம்…. அவனை தேடி பிடித்தவள், “நான் போறேன்! தனியா உட்கார்ந்து இருக்க போர் அடிக்குது”, என்றாள்.

“நீ கிளம்பு!  நான் வர்றதுக்கு சாயந்தரம் ஆகிடும்! மண்டபம் எல்லாம் காலி பண்ணி கணக்கையெல்லாம் முடிச்சிட்டு தான் வருவேன்”,

“எங்க அசோக் அண்ணா? நான் சொல்லிட்டு போறேன்”, என்றாள்.

“ஐயோ! வேற வினையே வேண்டாம்! அவன் கண்டிப்பா உன்னை விடமாட்டான். நீ இங்க உட்கார்ந்து இருந்தா எனக்கும் வேலையே ஓடாது, உன் ஞாபகமாவே இருக்கும். நீ கிளம்பு! நான் சொல்லிக்கறேன்”,

பிறகு அவசரமாக, “சாப்பிட்டிட்டு போ! வா!”, என்று அவள் அருகேமர்ந்து அவள் உண்டப் பிறகு அனுப்பினான்.

செந்தில் வரும் போது மணி இரவு எட்டு….. அடுத்த நாள் காலையே அவன் சென்னை கிளம்புவதாக இருந்ததால்  அவன் துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள் ராஜி….. அணிந்திருந்த டிரெஸ்ஸை கூட மாற்றாமல் அப்படியே படுத்தவனை, “எந்திரிங்க ட்ரெஸ் மாத்துங்க”, என்று எழுப்பினாள்.

“காலையில இருந்து அங்க இங்க அலைஞ்சதுல ரொம்ப உடம்பெல்லாம் வலிக்குது….. இப்படியே படுத்திருக்கிறேன் ஒரு டென் மினிட்ஸ். அப்புறம் எழுந்து மாத்தறேன்”, என்றான் கெஞ்சுதலாக……..

“சரி, சாப்டீங்களா?”,

“இல்லை, அவன் இருக்கச் சொன்னான். இன்னும் நேரம் வேற ஆகும் போல இருந்தது. கொஞ்ச நேரத்துல வர்ரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”,

“மறுபடியும் போவீங்களா”,

“இல்லை”, என்று தலையசைத்து கண்ணை மூடிக்கொண்டான்.

அவனுக்கு வேண்டியதையெல்லாம் எடுத்து வைத்து முடித்தவள், “ஒரே வேர்வை வாசனை, போய் குளிச்சிட்டு வாங்க”, என்று கட்டாயப்படுத்தி அனுப்பினாள்.

அவன் வரும்போது சாதம் பிசைந்து எடுத்து வந்திருந்தவள், “சாப்பிடுங்க”, என்று கையில் கொடுத்தாள்…

அவளையே பார்த்தபடி செந்தில் சாப்பிட ஆரம்பிக்க……

“அசோக் அண்ணாக்கு அப்படி ஒரு தங்கச்சியா”, என்றாள்.

செந்தில் என்னவென்று புரியாமல் பார்க்க……… “பொண்ணு ரொம்ப அழகு! அந்த பொண்ணுக்கு எப்படி அப்படி ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுந்தாங்க………”,

“எனக்கு கூட பிடிக்கவேயில்லை……… அவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையான்னு தான் இருந்தது……… என்ன பண்றது மாப்பிள்ளை வீடு நல்ல வசதி போல, அதுவுமில்லாம ரொம்ப நாளா மாப்பிள்ளை தேடுறாங்க…….. இப்ப வசதி வாய்ப்பை பார்த்து கட்டிக்கொடுத்திருக்காங்க”,

“ஆமா, அவ்வளவு அழகான பொண்ணையெல்லாம் பார்த்துட்டு என்னை எப்படி கல்யாணம் பண்ணிகிடீங்க, அவளை லவ் பண்ணனும்னு தோணலையா”, என்றாள்.

“லூசு! என்ன பேசற?”, என்று அவளை கடிந்தவன்…….. “அசோக் தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான்”, என்றான்.

சற்று நேரம் வார்த்தையே வரவில்லை ராஜிக்கு…… செந்திலை நினைத்து பெருமையாக இருந்தது.

“நீ நல்லவன்னு தெரியும்! ஆனா இவ்வளோ நல்லவன்னு தெரியாதே!”, என்றாள் அவனைக் காதலாக பார்த்தபடி…….. அவளின் தலையில் செல்லமாக முட்டினான் செந்தில்.

“என்ன? உன் லவ் ஸ்டோரியை தான் என்கிட்டே சொல்ல மாட்டேங்கற”, என்றாள் சோகமாக……..

“சொல்லிடுவேன்! ஆனா நீ இப்போ சொன்ன ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்கிடுவ பரவாயில்லையா”, என்றான் விளையாட்டு போல.

“என்னப்பா ஒரேடியா பில்ட் அப் விடுற! சும்மா சொல்லு!”,

“ஒரு வேலை கோவிச்சுக்கிட்டு என்னை விட்டு போயிட்டீன்னா”,

“நானு………! உன்னை விட்டுப் போவேன்……….! உனக்கு அந்த ஆசை வேற இருக்கா. அதெல்லாம் இந்த ஜென்மத்துல சாத்தியமில்லை மாமூ”, என்று அவனை கழுத்தில் கட்டிக்கொண்டாள்……

“பேச்சு மாற மாட்டியே”,

“நீ போடுற பில்ட் அப் பார்த்தா! எனக்கே கொஞ்சம் டௌஃப்ட்டா இருக்கு! முதல்ல சொல்லு!”,

“சரி! கழுத்தை விடு சொல்றேன்”,

“அதெல்லாம் விட முடியாது! நீ சொல்ற விஷயத்தை பொறுத்து உன்னை கொஞ்சுறதா கொல்லுறதான்னு முடிவு பண்ண வேண்டியிருக்கும்! அதுக்கு இந்த பொஷிசன் தான் வசதி!”, என்றாள் கழுத்தை சுற்றிப் போட்டிருந்த கைகளை ஒருமுறை இறுக்கி பின் தளர்த்தி……

“ராட்சசி அழுத்தாதடி”,

“நீ சீக்கிரம் சொல்லுடா! சும்மா உதார் உடுறான்……..”,

எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாற, ராஜி எடுத்துக்கொடுத்தாள்….. “நீ ஏன் என் பின்னாடி சுத்துன? அப்புறம் என்னை வேண்டாம்னு சொன்ன? அப்புறம் எப்படி என்னை கல்யாணம் பண்ணிகிட்ட ?”,

உண்மையை சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தவன்…….

“உன் பின்னாடி ஒரு வருஷம் சுத்தினப்போ உன் மேல காதல் இருந்ததுன்னு சொல்ல முடியாது…….. ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இருந்தது. அதுக்கு காரணம் நீ உங்கப்பாம்மாக்கு ஒரே பொண்ணு, நிறைய சொத்து இருக்கு, உன்னை கல்யாணம் பண்ணிகிட்டா லைப்ல செட்டில் ஆகிடலாம்னு ஒரு எண்ணம்”,

அவனின் கழுத்தில் இருந்த அவளின் கைகள் தானாக விலகியது……. “அப்போ என்கிட்டே ஐ லவ் யூ சொன்னது…….”,

“கல்யாணத்துக்காகதான்…….. பொண்ணு கேட்டு வர்ற அளவுக்கு என்கிட்டே எந்த தகுதியும் இருந்த மாதிரி எனக்கு தெரியலை. அதனால காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்”.

“அப்போ காதலே இல்லாம காதல் சொல்லியிருக்கீங்க, ம்ம்ம்”, என்று ஏதோ போலீஸ் என்குயரி போல கூர்மையான பார்வையுடன் கேள்வி கேட்டாள். மரியாதையுடனும் மரியாதையில்லாமலும் வார்த்தைகள் மாறி மாறி வந்தது.   

“ம்”, என்று பரிதாபமாக தலையாட்டினான்.

“ஒரு வேளை அதை உண்மைன்னு நம்பி திருப்பி நான் ஐ லவ் யூ சொல்லியிருந்தா என்ன வாயிருப்பேன்……”, என்று அவளே பேசிக்கொள்ள…

“மிஸஸ் செந்தில் ஆகியிருப்ப”, என்றான். 

“ம், நக்கலு”, என்று அவனை முறைத்தவள்……. “ம், உன் லவ்வே இல்லாத லவ் ஸ்டோரிய மேல சொல்லு”, என்றாள் அலட்சியமாக…   

அவன் அவளையே பாவமாக பார்க்க, அதற்கெல்லாம் அசராமல்…….

“அப்புறம் எதுக்கு என்னை வேண்டாம்னு சொன்னீங்க”,

“உங்க வீட்ல ஒரு நாள் உன்னை கூப்பிட்டும் நீ வராததால நான் மாடியேறி வந்தேன்.. அப்போ நீ என்னை கீழ போங்கன்னு நாயை விரட்ற மாதிரி விரட்னியா…. என்னால அதை தாங்கவே முடியலை……. எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு…. உன் பின்னாடி என்ன ஆனாலும் சுத்தவே கூடாதுனு நினைச்சு……. நீ எனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணினேன்”.

“ஒஹ்! இதுல ரோஷம் வேற……. அதனால உன் மானங்கெட்ட லவ்வ ஒரே நிமிஷத்துல தூக்கி எறிஞ்சிட்ட…. அப்புறம்…….”, என்றாள் நக்கலாக….

“மானங்கெட்ட லவ்”, என்று அவள் சொன்னவுடன் கண் மண் தெரியாமல் மீண்டும் கோபம் வந்தது செந்திலுக்கு……… அவன் முகம் அதை காட்டிக் கொடுக்க……

“மறுபடியும் ரோஷம் வந்து என்னை வேண்டாம்னு போயிடுவியா நீ”, என்றாள். 

கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை அப்படியே அதன் மேலே தள்ளி அவளின் மேலே அவன் படர்ந்தான். அவளை அசைய விடாமல் செய்தவன், “நான் சொல்லி முடிக்கற வரைக்கும் நீ வாயையே தொறக்கக் கூடாது….. இந்த வாயைப் பார்த்து தான் நீ வேண்டாம் உன்னை விட்டு ஒடனும்னு தோணிச்சு”,

“தொறந்தா என்ன பண்ணுவ?”,

“என்ன பண்ணுவனா”, என்றவன் மேலும் பேச விடாமல் அவளின் இதழ்களை சிறை செய்தான்.  நீண்ட நேரம் அது நீடிக்க…….. என்ன நடக்கிறது இங்கே என்று நாம் கேட்கும் படியாக மானங்கெட்ட காதலர்களாக அவர்கள் நமக்கு தோன்றினார்கள். 

வெகு நேரம் கழித்துப் போனால் போகிறதென்று அவனிடம் இருந்து முகத்தை விலக்கியவள்……… “ஷ்! இது என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சோகமான சீன்! இதுல எதுக்குடா ரொமான்ஸ் கொண்டு வர்ற!”,

“எங்க நீ என்னை பேச விடறியா”  

“சரி! மேல சொல்லு!”,

“அப்புறம் ஏன்னு தெரியலை! நான் உன்னை விட்டு தள்ளி போகனும்னு நினைச்சாலும் உன்கிட்ட நெருங்கற மாதிரியே சந்தர்ப்பங்கள்…… அதுவும் உனக்கு அடிப்பட போகுதுன்னு தெரிஞ்ச உடனே என்னையும் மீறி நான் பாய்ஞ்சுட்டேன்…….”,

“நீ ஹாஸ்பிடல் என்னை வந்து பார்த்தப்போ கூட உன்னை விட்டு விலகிடனும்னு தான் நினைச்சேன்…. அதான் ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கன்னு கூட சொன்னேன்………. ஆனா நீ வீட்டைவிட்டு போயிட்டேன்னு தெரிஞ்ச பிறகு உன்னை கண்ல பார்க்கற வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்லை……. அதுவும் உன்னை பார்த்ததுக்கு அப்புறம் உன்னை விடவே முடியாதுன்னு தோணிச்சு! அதான் நீ குழம்பியிருந்த அந்த நேரம் உன்னை வேகமா கல்யாணம் பண்ணிகிட்டேன்”, என்றான்.

அவன் அசந்த நேரம் பார்த்து அவனை தன் மேலே இருந்து தள்ளியவள் வாகாக படுத்துக்கொண்டு அவனையே பார்த்திருந்தாள்…….  அவளின் பார்வை செந்திலுக்கு புரியவில்லை.

“இது தான் என் காதல் கதை”, என்றான்.

கேட்டும் அசையாமல் இருந்தாள் ராஜி……

“சொல்லு! என்னை கொல்லப் போறியா! இல்லை கொஞ்சப் போறியா!”,

“அது தான் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றாள்.

“என்ன யோசிக்கிற?”,

“நீ ஹீரோவா?……… இல்லை….. வில்லனானு?….”,    

    

Advertisement