Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

ஆம், வாழ்க்கை ராஜியை மீறி அதன் போக்கில் இழுத்துக்கொண்டு தான் சென்றது. பல சிக்கல்கள் அன்று காலையில் இருந்து மாலை வரை நடந்தேறி ஒரு உயிரையும் காவு வாங்கியது.

ராஜி சென்று பார்த்த போது ஆகாஷ் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான், செந்தில் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

செந்திலின் அருகில் சென்ற ராஜி, “என்ன ஆச்சு”, என்று கேட்க…….

“தெரியலை! ஒரு போன் இப்போ தான் வந்தது………. வந்ததும் அப்படியே உட்கார்ந்துட்டாங்க”, 

பின் காலையில் குழந்தை பிறந்தவுடன் அதை குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கு சென்றனர், அனிதாவை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர். இதையெல்லாம் மீறி அவர்கள் வீட்டில் நடந்த துயர சம்பவம் ஆகாஷை நிலைகுலைய  வைத்தது.

அது அன்று நிகழ்ந்த அவனின் தந்தையின் மறைவு.

சிறிது நாட்களாகவே உடல் நலக் குறைவாக தான் இருந்தார். அன்று ஹாஸ்பிடல் அனிதாவை அட்மிட் செய்யும் போது கூட, “எனக்கு ஒரு மாதிரி இருக்கு…… நீங்க முன்னப் போங்க! நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்”, என்று சொன்னவர் தான்…….

குழந்தை பிறந்தவுடன் அதற்கு மூச்சு விட சிரமமாயிருக்கிறது என்று அதற்குரிய பிரிவிற்கு கொண்டு சென்றது, அனிதாவிர்க்கு பீ பீ குறையாமல் அவளை ஐ சீ யு விற்கு கொண்டு சென்றது என்று சற்று நேரம் ஆகாஷிற்கு ஒன்றும் ஓடவில்லை .

சில மணிநேரம் கழித்தே தெளிந்தான். தெளிந்த பிறகே அவனின் அப்பாவிற்கு இன்னும் தகவல் சொல்லவில்லை என்பது ஞாபகம் வர……..   

“குழந்தை பிறந்த செய்தியை அப்பாவிடம் சொல்லிவிடுங்கள்”, என்று வேலையாளிடம் சொல்ல சொல்லி ஆகாஷ் சொன்னவுடன் வேலையாள் சென்று பார்த்த போது தான் அவர் இறந்ததே தெரிய வந்தது.

வேலையாள் வேகமாக மறுபடியும் அவனுக்கு அழைத்து விவரத்தை சொன்னார்.

செய்தி கேட்டவுடன் இடிந்து போய் அமர்ந்தவன் தான்…… யாரிடமும் அதை அவனால் பகிரக் கூட முடியவில்லை.

செந்திலும் ஒன்றிரண்டு முறை என்ன என்று கேட்டான் தான்……… பதில் சொல்ல நினைத்தாலும் அவனால் சொல்லவே முடியவில்லை…….. துக்கம் தொண்டையை அடைத்தது.   

அழுது விடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

அப்போது தான் ராஜி வந்து பார்த்து, “என்ன”, என்று செந்திலிடம் வினவினாள். செந்திலும், “ஒரு போன் கால் வந்தது, அப்போ இருந்து இப்படி தான் உட்கார்ந்து இருக்கான், என்னன்னு சொல்ல மாட்டேங்கறான்”, என்றான்.

ஆகாஷ் மனதை மிகவும் முயன்று திடப்படுத்திக் கொண்டிருந்தான். எவ்வளவு துக்கம் மனதை அழுத்தினாலும் இந்த மாதிரி விஷயங்களில் நாம் செய்ய வேண்டிய கடமையை செய்துத் தானே ஆகவேண்டும். துக்கம் கொண்டாடிக்கொண்டு செயலற்று அமர்ந்து இருக்க முடியாதே……….

ராஜியும் வந்து, “என்ன ஆச்சுங்க”, என சற்று வற்புறுத்தும் குரலில் கேட்கவும் மெதுவாக வாயை திறந்த ஆகாஷ், “அப்பா தவறிட்டாங்களாம்”, என்றான்…..

செந்திலோ ராஜியோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

“எங்கே”, என்ற செந்திலின் கேள்விக்கு……

“வீட்ல”, என்றான்.

என்ன சொல்லி தேற்றுவது என்று ராஜிக்கும் புரியவில்லை செந்திலுக்கும் புரியவில்லை. என்ன இருந்தாலும் தாங்கள் அவனுக்கு இந்த நேரத்தில் பக்க பலமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்……..   

“நீங்க உடனே வீட்டுக்கு கிளம்புங்க, இங்க நாங்க பார்த்துக்கறோம்”, என்ற வார்த்தை அவளையும் மீறி வெளியே வந்தது.

“போகணும்”, என்றவனின் கால்கள் அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தது. அவன் மிகவும் உடைந்து போய் இருக்கிறான் என்றுணர்ந்த ராஜி ஏதாவது செய்யேன் என்பது போல செந்திலை பார்த்தாள்.

சில நொடி யோசித்தவன், “நீ குழந்தையைப் பார்த்துக்கோ, நான் இங்க ஐ சீ யூல இருக்கேன், அவங்க அக்காவை பார்த்துக்க……… உங்கப்பாவை ஆகாஷ் கூட அனுப்பலாம்”, என்றான்….. எப்படியும் ராஜிக்கு அனிதாவை பார்த்துக்கொள்ள பிடிக்காது என்றுணர்ந்தவனாக……… 

“நீங்க எப்படி அவங்கக்காவை பார்த்துக்குவீங்க”,

“எனக்கும் அவங்க அக்கா மாதிரி தான் ராஜி, அதான் சிஸ்டர் இருக்காங்களே நான் சமாளிக்கறேன்” என்றான்.

“சரி”, என்றவள்…….. “அவரை போய் கூட்டிட்டு வாங்க”, என்று சொல்லி அனுப்பினாள்…….

கேள்விப்பட்ட அண்ணாமலைக்கும் அதிர்ச்சியே… ஆனால் நிலைமையை கையில் எடுத்துக்கொண்டு இவர்களை ஹாஸ்பிடலில் விட்டு ஆகாஷை அழைத்துக்கொண்டு வீடு சென்று ஆகவேண்டிய வேலைகளை பார்த்தார்.

நன்கு வாழ்ந்தவர் என்பதால் அவசரமாக எடுக்கவும் முடியவில்லை. அடுத்த நாள் காலை தான் எடுப்பது என்று முடிவாயிற்று. அதற்குள் அங்கு வந்த உறவுகள் எல்லாம் இங்கும் வந்து குழந்தையையும் அனிதாவையும் பார்த்து சென்றனர்.

உறவுமுறைகள் அரசல் புரசலாக தெரிந்த போதும் இப்போது இன்னும் நன்றாக எல்லோருக்கும் தெரிந்தது. ராஜி அவரின் முதல் மனைவியின் மகள், இப்போது அவள் தான் குழந்தையையும் அனிதாவையும் பார்த்துக்கொள்கிறாள் என்பது போலவும் வந்தது.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெரும் அவஸ்தையில் இருந்தால் ராஜி.

பள்ளி சென்றிருந்த நந்தனை வேறு அழைத்து வந்தனர். அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம் செய்து அவன் வேறு வந்திருந்தான்.

ஐ சீ யூ வில் அவனின் அம்மாவை பார்த்தவுடன் அப்படி ஒரு அழுகை. வேலையாள் தான் அழைத்து வந்திருந்தான். அவனால் சமாளிக்கவே முடியவில்லை. செந்திலாலும் பார்க்கவே முடியவில்லை. குழந்தையுடன் இருந்த ராஜியை அழைத்தவன், “இந்த பையன் ரொம்ப அழறான் பா”, என்றான்.

அப்போது தான் குழந்தையிடம் இருந்து வந்திருந்த அவள் இங்கே நந்தனின் அழுகையை வேறு பார்க்கவும்…… மானசீகமாக அவளுக்கு பிடிக்காவிட்டாலும் எப்படியாவது இந்த அனிதாவை நல்ல படியாக பிழைக்க வைத்துவிடு என்று கடவுளிடம் விடாமல் வேண்டுதல் வைத்தாள். 

நந்தனின் அழுகை அவளை கரைத்தது. அவனை அவளின் அம்மா கொஞ்சினார், அவளின் அப்பாவை உரிமையோடு அப்பா என்றழைக்கிறான் அந்த சிறுவன் என்று தான் அவள் வீட்டை விட்டே போனாள். இப்போது அது எதுவும் அவளின் ஞாபகத்தில் இல்லை.

தயங்கி தயங்கி நந்தனின் அருகில் சென்றவள், “அழக்கூடாது உங்கம்மா சரி ஆகிடுவாங்க”, என்றாள்.

அவளை பார்த்ததும், “அக்கா”, என்று வந்து கட்டிக்கொண்டு அழுதான்.

“இதுவேறா”, என்று தோன்றி அவள் அவனை விலக்க முயன்றபோது அவனின் எண்ணம் புரிந்தவனாக செந்தில், “வேண்டாம் இருக்கட்டும் விடு”, என்பது போல தலையசைத்தான்.

அவனை பார்த்து பல்லை கடித்தாள். அவனின் கெஞ்சுதலான பார்வை தொடரவும், “அங்க குழந்தைக்கு ஏதாவது வேணும்னு கேட்டா நான் போகணும்”, என்றாள்.

நந்தன் அருகில் வந்த செந்தில், “மாமாவோட இருக்கியா! அக்கா உன் தங்கச்சியை பார்க்க போகணும்”, என்றான்.

“நானும் தங்கச்சியைப் பார்க்க போறேன்”, என்றான் நந்தன் அழுகையோடே.

“வேண்டாம் நந்தா! அம்மா இங்க இருகாங்களே! ஒருவேளை அவங்க கண் முழிச்சா அவங்க உன்னை தேடுவாங்க. நாம இங்கயே இருக்கலாம். அப்புறமா தங்கச்சியை பார்க்கப் போகலாம்”, என்று சமாளித்து அவனை இருத்திக்கொண்டான்.

“ஹப்பா”, என்று ஆசுவாச பெருமூச்சு விட்டு சென்றாள் ராஜி. 

“அக்காவை இப்போ தானே பார்க்குற நீ”, என்று அவனிடம் செந்தில் சந்தேகம் எழுப்ப…….

“இல்லை நான் அங்க ஊர்ல வீட்ல பார்த்திருக்கேன். அப்பா அப்போவே அக்காகிட்ட பேசச் சொன்னாங்க……… அவங்க என் அக்காஎன்று எனக்கு தெரியும்……. ஆகாஷ் மாமாவும் அம்மாவும் இருக்கிற மாதிரி, நானும் அவங்களும்ன்னு அம்மா சொல்லியிருக்காங்க”, என்றான் தெளிவாக.

இது மட்டும் ராஜிக்கு தெரிந்தால் சாமியாடிவிடுவாள் என்று செந்திலுக்கு தெரியும். விஷயங்கள் மேலும் மேலும் சிக்கலாவது போலவே செந்திலுக்கு தோன்றியது. நடக்காத ஒன்றை அவர்கள் நடத்திக்கொள்ள விரும்புகிறார்கள் என்று புரிந்தது. ராஜி நிச்சயம் மனசு மாறமாட்டாள், அவர்களுடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்தவும் மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயமே. நடுவில் அரைப்பட போவது தான் என்பதும் அவனுக்கு நிச்சயமே.   

இருந்தாலும் திடீரென்று ஒரு பத்து வயது பையன் அண்ணாமலையை எப்படி உடனே அப்பா என்று ஏற்றுக்கொண்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.

“நீ என்ன படிக்கற நந்தா”,

“பிஃப்த் ஸ்டாண்டர்ட்”,

“அப்பாவை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்”, என்றான்……. பையன் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ளக் கூடாதே என்ற வேண்டுதலுடன்.

அவனை விசித்திரமாக பார்த்தான் நந்தா………

“இல்லையில்லை நான் என்ன கேட்கறேன்னா………. உங்கப்பா உன்னை ஸ்கூலுக்கெல்லாம் கொண்டு போய் விடுவாரா”, என்றான்.

“இங்க இருக்கும்போது அப்பா தான் என்னை கொண்டு போய் விடுவாங்க”, என்றான்.

“எந்த ஸ்டாண்டர்ட் ல இருந்து கொண்டு போய் விடுவாங்க…….”,

“நான் ஃபர்ஸ்ட் படிக்கும் போது இருந்து அப்பா கொண்டு போய் விடுவாங்க”, என்றான்.

“அப்போ இது ரொம்ப வருஷப் பழக்கம் போல”, என்று நினைத்துக்கொண்டான்.

“அக்காவை பத்தி எப்போ தெரியும்?”,

“அது இப்போதான்! என்னோட போன லீவ்ல தான் அம்மா சொன்னாங்க! அப்போ தான் நாங்க பெரியம்மாவையும் அக்காவையும் பார்க்க ஊருக்கு வந்தோம்”, என்றான் தெளிவாக……….

மேலும் மேலும் செந்தில் துருவவில்லை, விட்டு விட்டான்.                       

அங்கே துக்க வீட்டில் ஆகாஷால்  வந்தவர்களிடம் பேசவே சரியாக இருந்தது. எல்லா  ஏற்பாடுகளையும் அண்ணாமலை தான் கவனித்தார். இரவு என்னென்னவோ பேசி நந்தனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் செந்தில். ஒரு வழியாக அடுத்த நாள் காலை ஆகாஷ் அவனின் தந்தையை சகல மரியாதைகளோடு விடை கொடுத்தான்.

எல்லாம் முடித்து மறுபடியும் அவர்கள் அடுத்த நாள் ஹாஸ்பிடல் வந்த போதும் அனிதாவின் நிலைமை அப்படியே தான் இருந்தது. குழந்தை சற்று தேறி இருந்தது. நந்தனும் அண்ணாமலையுடனும் ஆகாஷுடனும் வந்துவிட்டான்.  

அண்ணாமலைக்கு அவனை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. அடிக்கடி ஐ சீ யூ உள் சென்று அம்மாவை பார்க்க வேண்டும் என்றான்.

ஆகாஷ் ராஜியிடம் வேறு, “ப்ளீஸ்! அக்கா கண் முழிக்கற வரைக்கும் குழந்தையை  பார்த்துக்கறியா”, என்றான்.  

அவளையும் முந்தி கொண்டு செந்தில், “பார்த்துக்கறோம்”, என்று வாக்கு கொடுத்தான்.

செந்திலை முறைத்து பார்த்த ராஜி……… பின்பு ஆகாஷை பார்த்து, “பார்த்துக்கன்னா, பார்த்துக்கறேன். அதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம் போடுறீங்க…… போங்க நீங்க போங்க அங்க இருங்க”, என்று அனிதாவிடம் அனுப்பினாள். 

“எதுக்கு லுக்கு”, என்றான் செந்தில்.

“எதுன்னாலும் நான் தான் சொல்லுவேன்……. எதையாவது நான் செய்வனா செய்ய மாட்டேனான்னு தெரியாம வாக்குறுதியை அள்ளி வீசக்கூடாது…… புரிஞ்சதா!”, என்றாள் அதட்டலாக.

அவளைப் பற்றி நன்கு தெரிந்தவன் தானே, “புரிஞ்சது”, என்று மண்டையை மண்டையை ஆட்டினான்.

அண்ணாமலையும் ஆகாஷும் அனிதாவை பார்த்துக்கொள்ள செந்திலும் ராஜியும் குழந்தையை பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு வேலை ஒன்றும் இல்லை, அங்கே இருந்த சிஸ்டர்களே எல்லாம் செய்தனர். செந்திலும் ராஜியும் அடிக்கடி உள்ளே போய் குழந்தையை பார்த்து மட்டும் வருவர்.

குழந்தைக்கு தேவையான எதையாவது சிஸ்டர் கேட்டால் வாங்கி தருவர். ஆனால் அதுவே ராஜிக்கு அந்த குழந்தையின் மீது ஒரு ஒட்டுதலை கொடுத்தது.

அனிதா கண்விழிக்க இரண்டு நாட்கள் ஆனது. தந்தையை பற்றி கேள்விப்பட்டவுடன் மீண்டும் சிறிது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் பிழைத்துக்கொண்டாள்..

அவளையும் குழந்தையையும் தனி ரூமிற்கு மாற்றினர்…….

ராஜி அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள். அந்த இரு குழந்தைகளின் நிலையும் அனிதா பிழைத்துவிட வேண்டும் என்றே அவளை வேண்ட வைத்திருந்தது. அவளின் வேண்டுதலும் வீண் போகவில்லை.

ஆனால் மூன்று நாட்களாக அங்கே இருந்தாலும்  அனிதாவை சென்று பார்க்கவேயில்லை. குழந்தையை மட்டுமே பார்த்தாள். 

அவர்களை கருத்தில் கொண்டு ஒரு நாள் தள்ளிப்போன செந்திலின் கையின் ஆபரேசனும் அதன் பிறகே நடந்தது.

இங்கே ஒரு பக்கம் இவர்கள் இருக்க……… அங்கே அனிதாவும் குழந்தையும் ஒருபக்கம் ஹாஸ்பிடலில் இருந்தனர். அக்காவை நன்றாக பார்த்துக்கொண்டாலும் ஆகாஷ் செந்திலையும் பார்க்க தவறவில்லை.

செந்திலுக்கு ஆகாஷை மிகவும் பிடித்து விட்டது. தந்தை இறந்த துக்கத்தை மனதில் புதைத்து அதை சிறிதும் வெளியில் காட்டாமல் அந்த வேலையையும் பார்த்துக்கொண்டு இங்கே இவர்களையும் கவனித்துக்கொண்டு….

“நாங்க பார்த்துக்கறோம், நீங்க போங்க”, என்று ராஜி சொன்னாலும் சிறிது நேரமாவது எட்டி பார்த்துவிட்டு போவான். இந்த நந்தன் வேறு, “மாமா! அக்கா!”, என்று இவர்கள் இருக்கும் ரூமிற்கு அடிக்கடி வந்துவிடுவான்.

செந்திலுக்கு தான் தர்ம சங்கடமாகிவிடும்…….. அவனையும் சமாளித்து, ராஜியையும் சமாளித்து……… முடிவில், “தேவுடா! என்னை மட்டும் காப்பாத்துடா”, என்று கடவுளை கேட்கும் அளவிற்கு வந்துவிட்டான்.

சர்ஜெரி முடிந்த நான்கு நாளில் இவர்களை டிஸ்சார்ஜ் செய்த டாக்டர்…… “இன்னும் ஒரு வாரம் கழித்து தையல் பிரிக்க வாங்க”,என்று சொன்னார்.

ஆகாஷ் ஒருவாரம் தானே இங்கேயே இருந்துவிட்டு செல்லுங்கள் என்று எவ்வளவு கூறியும் ராஜி இருக்க மறுத்து……… “நாங்க அடுத்த வாரம் வர்றோம்”, என்று கிளம்பிவிட்டாள்.

செந்தில் மட்டும் சென்று அனிதாவையும் குழந்தையும் பார்த்து வந்தான். ராஜிக்கு அங்கே செல்ல மனமில்லாத போதும் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

அதை உணர்ந்தவனாக ஆகாஷ் குழந்தையை ரூமிற்கு வெளியில் எடுத்து வந்து அவளின் கையில் கொடுத்தான். கையில் வாங்கிய போது ஏதோ ஒரு பரவசம் ராஜிக்கு, சிறிது நேரம் வைதிருந்தவள் அவனிடம் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டாள்.

அண்ணாமலை அனிதாவையும் குழந்தையையும் வீட்டில் விட்ட பிறகு வருகிறேன் என்று தேவிகாவிடம் கூறி இருந்ததால்… செந்திலும் ராஜியும் ட்ரெயினிலேயே கிளம்பினர். ஆகாஷ் டிரைவர் போட்டு கார் அனுப்ப விழைந்தும் மறுத்து கிளம்பினர்.

“ஆனாலும் புருஷனும் பொண்டாட்டியும் ரொம்பப் பிடிவாதம்”, என்று அவர்களை திட்டியே அனுப்பினான் ஆகாஷ்.   

அங்கே சேலம் சென்று இறங்கியவுடன் வண்டியுடன் காத்திருந்தான் அசோக்…….

“ஏண்டா டேய்! இதுக்குத் தான் எப்போ வருவன்னு கேட்டியா, ஏன் நாங்க பஸ்ல வரமாட்டமா”, என்று கடிந்தான் செந்தில்.

“ஆமாம்! ஆபரேஷன் முடிஞ்சு நாலு நாள் தான் ஆகுது! கைவலில நீ அவ்ளோ தூரம் வந்திருக்க……. இதுல மறுபடியும் அலைச்சல்ன்னு தான் நான் வந்தேன்”.

“தேங்க்ஸ் அண்ணா! என்ற ராஜி நிஜமாவே நான் ரொம்ப டையர்டா தான் இருக்கேன், மறுபடியும் பஸ்சான்னு பயந்துக்கிட்டே இருந்தேன்! நீங்க வண்டி கொண்டு வந்துடீங்க!”,  என்று முதல் ஆளாக அசோக் யாரிடமோ கேட்டு வாங்கிவந்திருந்த ஒம்னியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

செந்திலுக்கு தன்னுடைய வசதி வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என்ற நினைவு மேலோங்க ஆரம்பித்தது. சாதாரண வாழ்க்கைக்கு ராஜி அட்ஜஸ்ட் செய்வது மிகவும் சிரமம் என்றே செந்திலுக்கு தோன்றியது. முகம் மாறுதல்களை காட்ட ராஜி கவனிக்கவில்லை…..

ஏறி அமர்ந்ததும் மறுபடியும் உறங்க ஆரம்பித்தாள்……  

செந்திலின் முக மாறுதலை அசோக் கவனித்தான், “என்னடா மச்சி! என்ன யோசனை?”,

“அதொன்னும் இல்லை விடறா மாப்ள!  கனிமொழி கல்யாண ஏற்பாடு எப்படி இருக்கு”,

கனிமொழி அசோக்கின் தங்கை…… நிறைய நாட்களாக வரன் தகையாமல் இருந்து இப்போது திடீரென்று அமைந்தது.  

“நடந்துகிட்டு இருக்கு”,

“எப்போ முகூர்த்தம்”,

“இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு”,

“எப்படிடா நான் சென்னைக்கு போன பிறகு தானே அவங்க பொண்ணு பார்க்கவே வந்தாங்க! கல்யாணம் உறுதி ஆகிடுச்சுன்னு சொன்ன! அதுக்குன்னு இவ்வளவு சீக்கிரமா?”,

“தெரியலை! அவங்க அவசரப்படறாங்க அப்பாவும் சரின்னு சொல்லிட்டார்…..”,

“அவரும் என்ன பண்ணுவார்! இன்னும் ரெண்டு பேர் இருக்காங்களே”, என்றான் செந்தில்.

பிறகு நினைவு வந்தவனாக, “டேய்! நீ குடுத்த பணம் அப்போ உடனே வேணுமா”, என்றான்.

“இல்லை! இப்போதைக்கு தேவையில்லை”, என்றான், செந்திலால் உடனே முடியாது என்று தெரிந்த அசோக்.

“நீ எனக்காக சொல்றியா? இல்லை நிஜமாவே பணம் இப்போதைக்கு தேவையில்லையா?”,

“இல்லை டா! நிஜமாவே கல்யாணத்துக்கு இருக்கு! அதுக்கப்புறம் தீபாவளி அது இதுன்னு வரும்போது தேவைப்படும்! அதுக்குள்ள குடுத்துடு!”, என்றான்.

“தேங்க்ஸ் டா”, என்றான் மனதார செந்தில்.

“சும்மா, சும்மா தேங்க்ஸ் சொன்ன, நீ என்கிட்டே அடி தான் வாங்க போற”, என்றான்.

அவனுக்கு தெரியும் அவனால் இப்போதைக்கு முடியாது என்று  தெரிந்ததால் தான் அசோக் பணத்தை கேட்கவில்லை என்று……

செந்திலின் மன பாரம் ஏறிக்கொண்டே போனது. அங்கே சென்னையில் இருந்த வரைக்கும் அங்கிருந்த பிரச்சனைகளில் ஒன்றும் தெரியவில்லை. இப்போது ஊருக்கு வந்தவுடனே மனதில் பாரம் ஏறிக்கொண்டது, என்ன செய்ய போகிறோம் என்று.

தன் கை சரியாகிவிடவேண்டும் என்று அத்தனை கடவுள்களிடமும் வேண்டுதல் வைத்துக்கொண்டே வந்தான்.

அடுத்த வாரம் அவர்கள் மீண்டும் சென்னை போன போது தையலை பிரித்து மீண்டும் கட்டு போட்டனர். இன்னும் பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்க வேண்டும் என்ற பேச்சோடு…

இங்கே செய்துகொண்டால் பரவாயில்லை என்றும் சொன்னர்.

சேலத்திலேயே செய்து கொள்கிறோம் என்ற அவனின் மறுப்பிற்கு ஒரு மாதமாவது இங்கே செய்தால் பரவாயில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

அவர்களுடன் ஹாஸ்பிடலில் இருந்த ஆகாஷும் அதையே தான் சொன்னான். “மறுபடியும் ஒரு வலியை தாங்கியிருக்க, அது பிரயோஜனமில்லாம போயிடக்கூடாது. இங்கே செஞ்சிக்கலாம்!”,

“ஏற்கனவே இவ காலேஜ் வேற ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது, அந்த டைம்ல இவளுக்கு செமஸ்டர் எக்ஸாம் இருக்குது”, 

“அதனால என்ன? அவளை ஊருலயே விட்டுடு நீ மட்டும் இங்க வந்து எடுத்துக்கோ…… கையை சரி பண்றது ரொம்ப முக்கியம்”, என்றான்.

ஆகாஷ் சொல்வதும் சரி என்பதாகவே பட்டது ராஜிக்கு……. ஆனால் ஒரு மாதம் அவன் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் இருந்தது……. கையும் முக்கியம்…… யோசிப்போம் என்று முடிவெடுத்தாள்.

பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்தான் ஆகாஷ்……   

அவர்கள் அங்கே சென்றதற்கு முதல் நாள் தான் குழந்தையும் அனிதாவும் வீட்டிற்கு சென்றனர்.  ராஜிக்கு குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் மறுத்துவிட்டாள்……..

“ரொம்பவும் பிடிவாதம் உனக்கு”, என்றான் ஆகாஷ்…..

“எத்தனை தடவை இதையே சொல்வீங்க”, என்ற ராஜி………

சற்றும் தயவு தாட்ச்சண்யம் இல்லாமல், “பாருங்க! உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்த நட்பு நீங்க தொடர வேண்டும்னு நினைச்சீங்கன்னா உங்கக்காவை நடுவுல எப்பவுமே கொண்டு வரக்கூடாது”, என்றாள் தீர்மானமாக….

“அது அவ வீடு மட்டும் இல்லை, என் வீடு கூட தான்”,

“பரவாயில்லை, இதை விட்டுடுங்க”,  

அவள் முகத்தில் அடித்தது போல பேசியது செந்திலுக்கு கூட பிடிக்கவில்லை….. “ராஜி! என்ன பேச்சு இது”, என்று அதட்ட……..

“இது தான் பேச்சு”, என்றாள் மறுபடியும் பிடிவாதமாக.

ராஜியை புரிந்தவனாக, “சரி! நாம ஃபிரிண்ட்ஸ் விடு!”, என்று நட்புக்கரம் நீட்டினான் ஆகாஷ்…….

செந்திலுக்கு தெரியும் அனிதா ஆகாஷிற்கு எவ்வளவு முக்கியமானவள் என்று இருந்தாலும் ராஜியுடன் உள்ள நட்பிற்காக இந்த உறுதி கொடுக்கிறான் என்று புரிந்தது……….  

அவர்கள் வீட்டிற்கு வரவில்லை என்றதுமே அண்ணாமலை ஹாஸ்பிடல் வந்தவர் அவர்களுடனே ஊருக்கும் கிளம்பி விட்டார். இப்போது அனிதாவும் குழந்தையும் நன்றாக இருந்தார்கள். அவர்களை பார்த்துக்கொள்ளவும் மூன்று பெண்களை நியமித்து இருந்தான் ஆகாஷ். 

பதினைந்து நாளில் செந்திலை அழைத்துக்கொண்டு ஊர் வந்து சேருங்கள் என்று ஒரு கட்டாயத்தோடு அவர்களை அனுப்பி வைத்தான் ஆகாஷ்.

ராஜியிடமும், “நீ வரமாட்டேன்னு தெரியும்! இருந்தாலும் செந்திலை அனுப்பிவிடு! அவன் கை ரொம்ப முக்கியம், ஒரு மாசம் பிரிஞ்சு இருந்தா ஒண்ணும் தப்பில்லை! அனுப்பிவிடு!”, என்றான்.

“நான் என்ன உன்னை பிரிய முடியாதுன்னு முகத்துல எழுதி ஒட்டிகிட்டா திரியறேன்”, என்று கூச்சத்தோடு செந்திலை பார்க்க…..

அவளை புரிந்தவன், “முகத்துல தெரியுது போல”, என்று கிண்டல் பண்ணினான் செந்தில்.

என்ன பேசுகிறார்கள் என்று ஆகாஷிற்கு புரியவில்லை……. “என்ன”, என்று கேட்க…….

ராஜி, “ஒன்றுமில்லை”, என்று சிவந்த முகத்தோடு தலையாட்டினாள் செந்திலின் மீது ஒரு பார்வையை பதித்துக்கொண்டே ……..அவர்களின் அன்னியோன்யம் ஆகாஷை எப்பொழுதும் போல ஏக்கம் கொள்ள வைத்தது.   

“ஐ மிஸ்ட் ஹெர்”, என்றான் மனதிற்குள் ஆகாஷ்.  மனதிற்குள் தானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.   

Advertisement