Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

நல்லதே நடக்கும் என்று நினைத்தவனாக செந்தில்…….. அவன் அணைத்து நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்து, “சாரி! ராத்திரி உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா”, என்றான்.

இரவின் இனிய நினைவுகளில் இருந்த ராஜி முகம் சிவந்தளாக அவனை பார்த்து, “இல்லையே”, என்றாள்.

செல்லமாக அவளின் தலையோடு தன் தலையை இடித்தவன், “மண்டு! நான் அதை சொல்லலை……. வாமிட் பண்ணினதை சொன்னேன்”, என்றான்.

“ஆமாமில்லை!”, என்று அவனை விட்டு விலகி நின்றவள்……..

“நான் எழுந்த உடனே அதுக்கு சண்டை போடணும்னு நினைச்சேன்”, என்றாள் அவனை முறைத்தவளாக……

“நிஜமாவே ரொம்ப சாரி! நேத்து நான் குடிச்சது தான் ஃபர்ஸ்ட் டைம்! அதே மாதிரி அது தான் லாஸ்ட் டைமும் கூட”, என்றான் உறுதியான குரலில்.

அவள் நம்பியும் நம்பாமலும் பார்க்க……… “நிஜமா! எல்லோரும் அந்த கருமத்தை எப்படி குடிக்கறாங்களோ தெரியலை……… என்னால நேத்து  ஒண்ணுமே முடியலை….”,

“அப்போ உங்களால முடியும்னா குடிபீங்களா”, என்று அவள் முறைக்க…..

“இல்லை குடிக்கலை”, என்று அவளை மறுபடியும் இழுத்து அணைத்துக்கொண்டான்.

“ஆனா நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா! நீங்க அழுத உடனே, எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு………. ஹார்ட் பீட்லாம் அதிகம் ஆகிடுச்சு”,  

“அது தான் நான் ஃபீல் பண்ணினேனே……. இங்க சாஞ்சிகிட்டு”, என்று அவன் சாய்ந்த பகுதியை தொட்டு காட்ட வர வேகமாக விலகினாள். 

“வட போச்சே”,  என்றான்.

இருவருக்குமே சிரிப்பு பொங்கிய போதும்…… “பீ சீரியஸ்”, என்றாள்.

“பீ தான் ஏ சி க்கு நடுவுல கூலா உட்கார்ந்து இருக்கே…… அது ஏன் சீரியஸா இருக்கு”, 

முதலில் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்தவள்……. பின்பு அவன் ஏ பீ சீ டீ எழுத்துகளை சொல்கிறான் என்று புரிந்தவுடன்……

“ஐயோ! ஐயோ! மொக்க தாங்களை! இப்படி கூட பேசுவீங்களா நீங்க”, என்று சொல்லிகொண்டே அவனை செல்லமாக ஒரு அடி வைக்க………

அடித்த அவளின் கைகளை பிடித்துக்கொண்டு………. “சாரி”, என்றான் மறுபடியும்…..

“இப்போ எதுக்கு சாரி, அதுதான் சொல்லிட்டீங்களே”,

“இது வேற! எனக்காக உன் கௌரவத்தை விட்டு உங்கப்பாக்கிட்ட உதவி கேட்க வேண்டி வந்துடுச்சே அதுக்காக”,

“அதான் நீங்களே சொல்றீங்களே உங்களுக்காகன்னு….. எனக்கு அதை செய்யறதுல ரொம்ப வருத்தம் தான்…….. இருந்தாலும் உங்களுக்காக நான் செய்வேன். இப்போதைக்கு அவங்களை விட்டா எனக்கு வேற எதுவும் வழி தெரியலை. வழியை யோசிச்சு நாளை தள்ளி போடவும் முடியாது, அப்படி தள்ளிபோட்டா கை சரியாகாதா நிலைமைக்கு போயிடுச்சுன்னா……”,

“உனக்கு என்மேல அவ்வளவு காதலா”,  

“அதை கேட்க இதுதான் நேரமா……… உங்க மாமனார் வந்துடுவார்”,  

“வரட்டும்! வரட்டும்! ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட் ஆனா பரவாயில்லை. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு”,  

“என்ன வேலை”, என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்………..

“நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே”,

“ஷ்! அப்பா, என்ன அடம் இது?”,  

“ப்ளீஸ் சொல்லு”,

“இதெல்லாம் சொல்ல முடியாது………. இது ஒரு உணர்வு! அது எப்போ தோணிச்சின்னு சொல்ல முடியாது. அது சொன்ன தான் தெரியுமா என்ன சொல்லாமையே தெரியணும்”,

“இது பதில் இல்லை”,  

“ம்கூம், நிஜம்! இதுதான் பதில்!”, என்றவள்………

“காதல்ங்கறது ஒரு உணர்வு! அது உங்க மேல எனக்கு எப்போ வேணா வந்திருக்கலாம்! நீங்க ஒரு வருஷமா என்னை பார்த்து டீக்கடையில சைட் அடிச்சிட்டு உட்கார்ந்திருந்தீங்களே அப்போ வந்திருக்கலாம்………. இல்லை……… ”,

“நீங்க என்னை பார்த்து ஐ லவ் யூ சொன்னப்போ வந்திருக்கலாம்………. இல்லை……… எங்க வீட்ல வேலைக்கு சேர்ந்து என்கூட சண்டை போட்டப்போ வந்திருக்கலாம்….. இல்லை………. எனக்காக பஸ்ல சண்டை போட்டப்போ வந்திருக்கலாம்…… இல்லை……..”,

“என்னை நீங்க கொண்டு போய் காலேஜ் விட்டப்போ வந்திருக்கலாம்…… இல்லை…… எனக்காக கையை காயப்படுத்திகிட்டு நின்னிங்களே அப்போ வந்திருக்கலாம்………. இல்லை……… என்னை பார்க்க வராத பார்க்க வராதன்னு சொன்னபோ வந்திருக்கலாம்…….. இல்லை……….”,  

“நான் உனக்கு சரியான மேட்ச் கிடையாது ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னப்போ வந்திருக்கலாம்”,

“இல்லை……. நான் வீட்டை விட்டு போனப்போ என்னை நீங்க தேடி வந்தப்போ வந்திருக்கலாம்………. இல்லை…… என்னை கல்யாணம் பண்ணினப்போ வந்திருக்கலாம்………. இல்லை……..”,

“எனக்காக நீங்க இவ்வளவு வலி அனுபவிக்கறீங்கன்னு தெரிஞ்சப்போ வந்திருக்கலாம்….. இல்லை……….. கல்யாணமாகிடுச்சேன்னு என் மீது பாய்ஞ்சிடாம என்னை விட்டு விலகி விலகி நின்னிங்களே அப்போ வந்திருக்கலாம்…….. இல்லை……”, என்று மூச்சு வாங்க இழுத்தாள்…..

“மூச்சு விட்டுட்டுப் பேசு……. அப்போ இத்தனை மாசம் நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேனா……..”, என்று அதுதான் சாக்கென்று அவளின் மூச்சு வாங்கிய இடத்தை தடவிக்கொடுக்க……

“டூ பேட்! கையை எடு”, என்று தட்டிவிட்டாள்…….

சிரித்தபடியே எடுத்தவன்……. “என்ன இழுவை”, என்று அவன் டைலாக் அடிக்கவும்,

“நேத்து நைட் கூட வந்திருக்கலாம்”, என்று கண்ணடித்தாள்.

“அவ்வளவு என்ஜாய் பண்ணினியா நீ”, என்று கேட்டு அவள் முகம் சிவக்க வைக்க….

“அய்யே! ரொம்ப தான்! நீங்க அழுததை பார்த்துச் சொன்னேன்”, என்று மறுபடியும் கண்ணடித்தாள்…

“உன்னை!”, என்றவன் செல்லமாக கன்னத்தைக் கடிக்க…

“ஷ்! பா! வலிக்குது!”, என்று சிணுங்கினாள்.

“வலிக்கறதுக்கு தான் கடிக்கறது”, என்று சொன்னான்.

“நீ எதையுமே மறக்கலையா………. அப்படியே எல்லாத்தையும் படமா ஓட்டற…..”, என்று அவளை இன்னும் இறுக்கிக்கொண்டான்.

எல்லாம்…. எல்லாம்……. ஒன்று விடாமல் சொல்கிறாள். தான் அவள் மனதில் ஆழமாக இருக்கிறோம் என்று புரிந்தது.  

“எப்படி இருக்கு என் படம்”,

“சண்டையில ஆரம்பிச்சாலும் இப்போதைக்கு பயங்கர ரொமாண்டிகா போகுது”, என்று அவன் புன்னகைக்க……

“என் படம் சண்டையில ஆரம்பிச்சு ரொமாண்டிக்கா போகுது….. உங்க படத்தை பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லைலையே”,

“என் படமா? அது என்ன படம்”,

“அதுதான் இந்த ராஜி பின்னாடி ஒரு வருஷமா சுத்தி……. ஐ லவ் யூ சொல்லி, திடீர்ன்னு ஐ லவ் யூ வை வாபஸ் வாங்கி போடின்னு சொன்னீங்களே….. அந்தப் படம்”,  

சட்டென்று அவனின் முகம் மாறியது….. என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியவன்…… “இது பயங்கர சீரியஸ் வில்லத்தனாமான ஃபில்ம்! உன்கிட்ட கண்டிப்பா ஒரு நாள் சொல்வேன், ஆனா இப்போ இல்லை! இப்போ அதை உன்கிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை! எப்பயாவது தைரியம் வந்தா சொல்றேன்”, என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே……..

அன்னபூரணி, “அசோக் வந்திருக்காண்டா”, என்று குரல் கொடுக்க………. இருவரும் வெளியே வந்தனர். இப்போதைக்கு தப்பித்தோம் என்று ஆசுவாசப்பட்டுக்கொண்டே வெளியே வந்தான். ராஜியும் அவள் அப்போதிருந்த மனநிலையில் அவன் பேசியதை அவ்வளவு சீரியசாய் எடுத்துக்கொள்ளவில்லை. 

“வாங்கண்ணா”, என்று ராஜி உபசரிக்க… அவளைப் பார்த்து புன்னகைத்தவன், செந்தில் கையில் ஒரு கவரை கொடுத்தான்.

“தேங்க்ஸ் டா”, என்று செந்தில் சொல்லவும்……..

“எனக்கு தேங்க்ஸா! போடா! போடா! வேலையை பாருடா”, என்றான்.

உடனே கிளம்பவும்…….. “இருடா டீ குடிச்சிட்டு போகலாம்”,  என்ற செந்திலைப் பார்த்து,

“இல்லைடா! அவசரமா வந்தேன்! நீ நல்லபடியா போயிட்டு வா”, என்று சொல்லி சென்றான்.

திரும்பப் பையை எடுத்து வர உள்ளே செல்லும் போது…… அந்த கவரை ராஜியிடம் கொடுத்தான் செந்தில்.

“என்ன இது?”,

“பணம்”,

“எதுக்கு”,

“நம்ம கையில கொஞ்சமாவது வேண்டாமா! எல்லாத்துக்கும் உங்கப்பாகிட்ட நிக்க முடியுமா! நீ அவர்கிட்ட பேசவும் மாட்ட………. அதனால நீ அவர்கிட்ட கேட்க மாட்ட!  அதான் உன்கையில இருக்கட்டும்னு”,  

“இதையே தான் சொல்லி எங்கம்மாவும் என்கிட்டே பணத்தை கொடுத்தாங்க”, என்றாள்…

“கணக்கு வெச்சிக்கோ! நாம திருப்பி கட்டாயம் கொடுத்திடலாம்”, என்றான்.

அவள் அவனையே முடியுமா என்பது போல பார்க்க……..

“நம்பு ராஜி! நம்பு! நம்பிக்கை தான் வாழ்க்கை”, என்றான்.

“அதற்குள் என்னடா இன்னும் காணோமே”, என்று அண்ணாமலையே வந்துவிட்டார்.

அன்னபூரணி மறுபடியும், “உங்க மாமனார் வந்திருக்கார் செந்தில்”, என்று குரல் கொடுக்க…….

“கிளம்பிட்டே தான் இருந்தோம்”, என்று சொல்லியபடியே செந்தில் முன்னே வந்தான்.

ராஜி இரண்டு கைகளிலும்  பேகை தூக்கி வந்தாள்.

பார்த்தவன் வேகமாக வாங்க போக…….. “உங்களுக்கு கை வலிக்கும்”, என்று அவள் கொடுக்க மறுக்க……

“இந்த கை நல்லா தான் இருக்கு”, என்று அவன் கொடு என்பது போல கையை நீட்டிக்கொண்டு இருக்க……….

“ப்பா ரொம்ப பிடிவாதம்”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்துக் கொண்டே கொடுத்தாள். 

“இன்னும் சாப்பிடலை நீங்க”, என்று அன்னபூரணி சொல்ல……

“சொல்ல மறந்துட்டேன் அத்தை! அம்மா அங்க வந்து சாப்பிட சொன்னாங்க! நான் வேண்டாம்னு சொன்னேன்! நான் எதிர்பார்பேன்னு சொல்லிட்டாங்க!”, என்றாள் சங்கடமாக……

“அதுக்கென்ன கிளம்புங்க”, என்றார் அன்னபூரணி.

“இங்க செஞ்சதெல்லாம் வேஸ்ட் ஆகிடுமா”, என்றாள் பயத்தோடு….. அவர் ஏதாவது தப்பாக எடுத்துகொள்வாரோ என்று.

“தோசை தான் ஊத்தலாம்னு இருந்தேன், ஒண்ணும் பிரச்சனையில்லை! கிளம்புங்க!”,  என்றார்.

சீனியப்பனும் கிளம்பினார்……… “நான் இவங்களை அனுப்பிட்டு வர்றேன்”, என்று.

வரவேற்பு முடிந்து அடுத்த நாள் விருந்துக்கு வந்த ராஜியும் செந்திலும் அவர்கள் எடுத்திருந்த முடிவுப்படி நகையும் பணத்தையும் திருப்பி கொடுத்து சென்றவர்கள் தான்.

தேவிகா திரும்ப எடுத்து செல்ல வற்புறுத்திய போதும்…… அண்ணாமலை விடு என்று தடுத்து விட்டார். “வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று சொல்லும் அவர்களுக்கு நாம் தடையாக இருக்க வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம்”, என்று விட்டார்.  

அதன் பிறகு தேவிகா தான் போய் பார்த்து வந்தார்……. ராஜி வரவேயில்லை. தந்தையிடம் முகம் சுனங்கியவளாகவே இருந்தாள்.

நேற்று செந்தில் அழுதது அவளை மிகவும் அசைத்திருந்ததால்……. அவள் நினைத்து இருந்ததையெல்லாம்விட்டு அம்மா வீட்டை நோக்கி வந்திருந்தாள்.   அவன் அழுததே அவளுக்கு பிரதானமாக நினைவில் இருந்தது. அப்போது அவளின் சுய கவுரவமோ சுய மரியாதையோ பெரிதாக தோன்றவில்லை. அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அவன் கையை சரிப்படுத்த வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.       

மகள் காலையில் வந்து சென்னைக்கு கிளம்ப முடிவு செய்த போதே…… “இங்கே தான் சாப்பிட்டுவிட்டு கிளம்ப வேண்டும்”, என்று தேவிகா சொல்லிவிட்டார். மறுத்து ஏதாவது சொன்னால் மிகுந்த கோபப்படுவார் என்றறிந்த ராஜியும் சரியென்று விட்டாள்.   

அங்கே வீடு சென்று தேவிகா சமைத்து வைத்திருந்த காலை விருந்தை உண்டனர். அண்ணாமலை யாரையோ எதிர்பார்த்து இருப்பது போல தெரிய சீனியப்பன், “யாரவது வரணுங்களா”, என்றார்.

“நான் தான் ஓட்டப்போறேன்! இருந்தாலும் ஒரு டிரைவர் எதுக்கும் கூட இருக்கட்டும்னு  சொல்லியிருந்தேன்……   வர்றேன்னு சொன்னான், இன்னும் காணோம்”, என்றார்.

“அதான் டிரைவர் வர்றாரே, அப்புறம் நீங்க ஏன் ஓட்டறீங்க”, என்றார் சீனியப்பன்.

“அவன் புதுசு அவன் எப்படி ஒட்டுவான்னு தெரியாம! அவ்வளவு தூரம் எப்படி போறது”, என்றார்.

“டிரைவரே தேவையில்லை! நான் இருக்கேன்ல கிளம்பலாம்! நான் கொஞ்சம் நேரம் ஓட்டறேன்”, என்றான் செந்தில்.

“எப்படி முடியும்”, என்று எல்லோரும் அவனையே பார்க்க…..

“ரெண்டு விரல் தானே மடக்க முடியலை……. மீது மூணு விரல் இருக்கே……. கீர் மாத்தறது தானே பார்த்துக்கறேன்”, என்றான். இத்தனை நாட்களாக இல்லாத நம்பிக்கை இப்போது அவன் மனதில் அதிகம் இருந்தது.

அவனின் வண்டி ஓட்டும் திறமை அண்ணாமலைக்கு தெரிந்ததே…… அதனால் மூவரும் சீனியப்பனை இங்கே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர்.

நேற்றிருந்த செந்தில் என்றால் வண்டியோட்டுவதை பற்றி யோசித்து கூட இருக்க மாட்டான். இன்று இருந்த செந்திலுக்கு தன்னம்பிக்கை இப்போது அதிகமாக இருந்ததினால் தைரியமாக கிளம்பினான்.

அண்ணாமலை வண்டி ஓட்ட ……… அவன் முன்னாள் அமர்ந்துகொள்ள…… ஊர் எல்லையை கூட தாண்டியிருக்க மாட்டார்கள்…… ராஜி ஒரு பில்லோவை தலைக்கு வைத்து காலை குறுக்கி சீட்டிலேயே படுத்துக்கொண்டாள், உறங்கியும் விட்டாள்.

ஹை வேய்ஸ் தொடும் வரை அண்ணாமலை ஓட்ட……… அதன் பிறகு பிடிவாதமாக செந்தில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன்……… ராஜியின் தூக்கம் கெடாமல் அலுங்காமல் குலுங்காமல் வண்டியை, இடையில் ஒரு டீ அருந்த மட்டும் நிறுத்தி…… ஆறேழு மணிநேரம் ஆகும் பயணத்தை ஐந்தரை மணிநேரத்தில் கொண்டு வந்து சென்னை மாநகரத்தை தொட்டான்.

பிறகு அண்ணாமலை வண்டியை ஓட்ட ………. ஹாஸ்பிடலுக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இருவருக்கும் ரூம் போட்டார்.

“உங்களுக்கு”, என்று செந்தில் ஆரம்பிக்கும்போதே அவனை பார்வையால் அடக்கினாள் ராஜி.

அவர்களை விட்டவர்……… “நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க! எத்தனை மணிக்கு அப்பாயின்மென்ட்ன்னு பார்த்துட்டு நான் வர்றேன்”, என்று சொல்லி சென்றார்.

அவர் போனபிறகு………. “இவர் எங்கே போறார்?”, என்று செந்தில் கேட்க……. இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள் ராஜி.

“ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் பேசுவீங்க”, என்று அவனை கோபத்தோடு திட்ட….

அவனுக்கு சட்டென்று விஷயம் ஞாபகம் வரவில்லை…

அவளையே பார்த்திருக்க………. “இங்க அவருக்கு ஒரு வீடு இருக்கிறது உங்களுக்கு ஞாபகம் வரலையா? நம்ம அங்க வரமாடோம்னு நம்மளை இங்க விட்டுட்டு அவர் அங்க போறார்”, என்று அவள் மறுபடியும் கடிக்க……. அப்போதுதான் அனிதா ஞாபகம் வந்தது செந்திலுக்கு,

“ஹி! ஹி!”, என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க…..

“பார்க்கவே சகிக்கலை! கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க!”, என்றாள். 

“வா! வா! சேர்ந்து எடுக்கலாம்”,

“எதை”, என்றாள் நக்கலாக……..

“ஏன் ராஜி? நேத்து பிரஸ்ட் நைட் கொண்டாடின பையனை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா”,

“எனக்கு அந்த பையனை எல்லாம் தெரியாது! நேத்து ஒரு பையன் யாரோ தேம்பி தேம்பி அழுதாங்க? அவங்களைத் தான் தெரியும்!”, என்றாள்.

“ஒரு தடவை அழுததை எத்தனை தடவை சொல்லுவ நீ”, என்றான் பரிதாபமாக……  

“சும்மாவா எப்படி பயமுறுத்திட்ட என்னை அழுது! காலைல எழுந்த உடனே எங்கம்மா வீட்டுக்கு ஓட வெச்சயில்லை, அதனால எப்பப்போ ஞாபகம் வருதோ! அப்பப்போ சொல்லுவேன்”, என்றாள்.

“அம்மா தாயே! இந்த பேச்சுக்கு நான் தனியாவே ரெஸ்ட் எடுப்பேன்”, என்றான் பாவம் போல……

“அது! அந்த பயம் இருக்கட்டும்”, என்றாள் தெனாவெட்டாக…..

அந்த க்ஷணம் வாழ்கையே வண்ணமயமாய் தான் தோன்றியது செந்திலுக்கு…….. இது நீடித்திருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்………. இருக்கும் என்ற நம்பிக்கையுடன்…….

அது கொடுத்த நிம்மதியில் நன்றாக தூங்கி விட்டான். ஐந்து மணிக்கு எழுப்பிவிட்ட ராஜி, “ரெடியாகுங்க! எப்படியும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”, என்று அவள் சொல்ல…….

“அவர் இப்ப வந்துடுவாரா என்ன? அவர் என் சின்ன மாமியாரை பார்த்துட்டு லேட்டால்ல வருவாரு”, என்றான் செந்தில்……… வெளியில் அல்ல மனதிற்குள், பின்னே ராஜி அவனை ஒருவழியாக்கிட மாட்டாள்.   

இருவரும் ரெடியாகி அமரவும்……. அண்ணாமலை அழைக்கவும் சரியாக இருந்தது. “நான் இங்க கீழ ரீசெப்சன்ல இருக்கேன், நீங்க வர்றீங்களா?”, என்றார் செந்திலிடம்.

“இதோ வர்றோம் மாமா”, என்றவன் ராஜியுடன் கிளம்பி கீழே வந்தான்.

அங்கே அண்ணாமலையுடன் ஆகாஷும் அமர்ந்திருந்தான்…….

ராஜியும் செந்திலும் ஆகாஷை எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் ஒரு கணம் தயங்க……… அந்த தயக்கம் சிறிதும் ஆகாஷிற்கு இருப்பது போல தோன்றவில்லை…..

“ஹலோ செந்தில்!”, என்றபடி அருகில் வந்து கையை குலுக்கினான்.

பதிலுக்கு, “ஹலோ சர்”, என்றான் செந்தில்.   

“என்ன சாரா? கால் மீ ஆகாஷ்”, என்றான் செந்திலை பார்த்து……

பிறகு ஒரு விரிந்த புன்னகையோடு………… “எப்படி இருக்க ராஜேஸ்வரி”, என்றான் ராஜியை பார்த்து.

பதிலுக்கு சற்றும் குறையாத புன்னகையோடு ராஜி……. “நல்லா இருக்கோம்”, என்று பதில் கொடுத்தாள்.

“சாரி! அன்னைக்கு நான் உங்களை ஹாஸ்பிடல்ல பார்த்தேன்! ஏதோ ஒரு மூட் விஷ் பண்ணாம கிளம்பிட்டேன். அப்புறம் உங்க ரீசெப்சன் அப்போ நான் ஆஸ்ட்ரேலியா போயிட்டேன். அதான் வரமுடியலை. அங்க கொஞ்சம் வேலையெல்லாம் இருந்தது, முடிச்சிட்டு நிரந்தரமா இந்தியா வந்துட்டேன்!”, என்றான் இருவரையும் பார்த்து. 

“என்ன இந்தியாவே வந்துடீங்களா?”,

“எஸ்! வந்துட்டேன்! இப்போ தான் நாலு நாள் ஆச்சு, உங்களை பார்க்க வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே இங்க வந்துடீங்க”,

“போகலாமா”, என்று அண்ணாமலை சொல்ல கிளம்பினர்.

ஆகாஷும் அவர்களோடே வந்தான். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவமனை…….. அங்கே இருந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் தான் அழைத்து சென்றனர்.

“பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் தோத்தது போ! ஹாஸ்பிடல் என்னம்மா இருக்குதுடா”, என்று வியந்து கொண்டே வந்தான் செந்தில்.

அவனின் முக பாவனைகளை பார்த்தே ராஜி, “என்ன?”, என்பது போல கேட்க…… “ஒண்ணுமில்லை”, என்றான் சிறு தலையசைவில்…….   

சாதாரண நேரமாக இருந்தால் சொல்லியிருப்பான், ஆகாஷ் இருந்ததால் அடக்கி வாசித்தான்.

அவர்களுக்குள் நடந்த இந்த பார்வை பரிமாற்றத்தை ஆகாஷ் கவனித்தான். அவன் மனதில் லேசான பொறாமை உணர்வு எழுவதை தவிர்க்கமுடியவில்லை…..

ராஜியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும், பழக வேண்டும் என்று இந்த நான்கு மாதங்களாக மனதை தேற்றி ஒரு மாதிரி மாற்றி வந்திருந்தான். அவனுக்கு அவளுடன் நட்பாவது பாராட்ட வேண்டும் என்று ஆசை.

இந்த கண்களால் நடக்கும் பார்வை பரிமாற்றங்கள் சிறிது ஏக்கத்தை ஏற்படுத்தின. வெளியில் சிறிதும் காட்டிக்கொள்ளவில்லை. அந்த உற்சாகம் மாறாத முகத்தை அப்படியே வைத்தான்.

செந்திலை பரிசோதித்த மருத்துவர் அவர்களிடம் பேசினார்.

“மே பீ, ஏதாவது டெண்டன் டைட்டா இருக்கலாம், அதனால் இந்த ரெண்டு விரலும் மடக்க முடியாம இருக்கும். நான் சொல்றது இருக்கலாம் தான் அதுவே காரணம்னு சொல்லமுடியாது. அது மறுபடியும் ஓபன் பண்ணினா தான் தெரியும். ஒரு வேளை அது காரணமா இருந்தா அதை ரிலீஸ் பண்ணினா விரலை மடக்கலாம்”, என்றார்.

ராஜி செந்திலை பார்க்க……… செந்தில் ராஜியை பார்த்தான்.

அவர்கள் சொல்வதற்காக மருத்துவர் காத்திருக்க…….. “யோசிச்சு சொல்லலாமா டாக்டர்”, என்றான் ஆகாஷ். இன்னும் ஒரிருவரிடம் ஒபினியன் கேட்கலாம் என்பது அவனது எண்ணமாக இருந்தது. அதை முன்னிட்டு அவன் அப்படி சொல்ல…

“ரொம்ப டைம் எடுக்குற அளவுக்கு உங்ககிட்ட டைம் கிடையாது! ஏற்கனவே நாலு மாசம் ஆகிடுச்சு. இனியும் தாமதிச்சா ஜாயின்ட் ஸ்டிஃப் ஆகிடும். இதுவே லேட்!”, என்றார் டாக்டர்.

“ஓகே டாக்டர்! நாளைக்கு சொல்லிடறோம்”, என்றான் ஆகாஷ்.

மறுபடியும் ஒரு சர்ஜெரியா என்று ஆயாசமாக இருந்தது செந்திலுக்கு……..

வெளியே வந்த ராஜி, “சரின்னு சொல்லிடலாமா”, என்று செந்திலிடம் கேட்க…..

“இரு அவசரபடாத! இன்னும் ரெண்டு டாக்டர்கிட்ட கேட்போம்”, என்றான் ஆகாஷ்.

“இப்போவே லேட்ன்றாரே டாக்டர்”,

“நம்ம ரொம்ப நாள் பன்னபோறது இல்லை! இன்னைக்கே பார்த்துடுவோம்! நாளைக்கு சொல்லிடலாம்”, என்றான்.

ராஜி செந்திலை பார்க்க…….. செந்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க……

ராஜியை பார்த்த ஆகாஷ், “நான் உனக்கு ஃபிரன்ட் தானே! நமக்குள்ள இருக்கிற ஃபிரண்ட்ஸ் ஷிப் இன்னும் இருக்கு தானே”, என்றான்.

மின்னலாய் செந்திலை தழுவி மீண்டது ராஜியின் பார்வை……… அதில் அவளுக்கு புரிந்த ஒப்புதலை கொண்டு……… ராஜிஆகாஷிற்கு தெளிவாகவே சொன்னாள், “நிச்சயம் இருக்கு”, என்று.

“அப்போ நான் பார்த்துக்கறேன்! நீ வொர்ரி பண்ணாத!”, என்றான். 

அவனிடம் விட்டுவிடு என்று செந்திலின் பார்வை உணர்த்திய செய்தியை புரிந்த ராஜி, ”ஓகே! நீங்களே பார்த்துக்கோங்க”, என்றாள்.

என்னவென்று ஆகாஷிற்கு புரியாத போதும் ஏதோ பார்வை பரிமாற்றங்கள் இருவருக்குள்ளும் என்பது வரை அவனுக்கு புரிய……

“எல்லாத்துக்கும் உன் ஹஸ்பண்ட்கிட்ட பெர்மிஷன் கேட்பியா”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்………

“அது பெர்மிஷன் இல்லை, இன்ஃபர்மேசன்”, என்று ராஜி ஆகாஷ் போலவே  சொல்ல…..

“நம்பிட்டேன்! வாங்க!”, என்று ஆகாஷ் சொல்லிகொண்டே அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அண்ணாமலையும் கிளம்ப போக…. “நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

அண்ணாமலை ராஜியை மனதில் கொண்டு அசையாமல் நிற்க…

“அவரை போகச் சொல்லு ராஜேஸ்வரி”, என்றான் ஆகாஷ்.

“எதுக்கு போக சொல்லணும்”, என்ற கேள்வியை அவள் பார்வை தாங்கி நிற்க…..

“இப்போ அனிதாக்கு டெலிவரி டைம்! இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்ல ட்யூ சொல்லியிருக்காங்க! நானே அவரை வர சொல்லலாம்னு இருந்தேன். அவரே இப்போ இங்க வந்திருக்கார்……. அவ கூட இருக்கட்டுமே”, என்றான்.

“நீங்க நிஜமாவே எனக்கு ஹெல்ப் பண்ண வந்தீங்களா? இல்லை அவரை அனுப்ப வந்தீங்களா?”,

“தோ பார்! அது வேற, இது வேற….. அதுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! அவர் இப்போதைக்கு இங்க இருந்து எதுவும் பண்ண போறது இல்லை, அங்க அவகூட இருந்தாலாவது அவளுக்கு தைரியமா இருக்கும் புரிஞ்சிக்கோ”, என்றான்.

ராஜிக்கு தன் தந்தை கூட இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை…… ஆனால் ஏதோ ஒரு பிடிவாதம்……… வாதம் செய்து கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்த செந்தில், “அதான் அவர் அவ்வளவு சொல்றாரு இல்லை, சும்மா எதுக்கு ரகளை பண்ற! உங்கப்பா போகட்டும்”, என்று மெலிதாக அதட்டினான்.

அவனை முறைத்துக்கொண்டே, “என்னவோ பண்ணுங்க”, என்றாள்.

“நீங்க போங்க மாமா”, என்றான் செந்தில். “தேங்க்ஸ்”, என்ற ஆகாஷிடம்…. “எனக்கும் அவங்க அக்கா போல தான்”, என்றான்………. இன்னும் அதிகமாக முறைத்தாள் ராஜி.

Advertisement