Advertisement

அத்தியாயம் இருபது:

நான்கு மாதங்கள்………… மிக கடுமையான நான்கு மாதங்கள்……….

ராஜியும் செந்திலும் மிகவும் சிரமப்பட்டு கடந்த மாதங்கள்………. செந்திலுக்கு கைகளில்  வலியிருக்க, அதை பார்த்து மனதினில் வலியெடுத்தது ராஜிக்கு…….

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை பற்றி நினைக்க கூட முடியாத நாட்களாக செந்திலுக்கு இருந்தன.

நிறைய வலியை அனுபவித்தான். அது அவனை அவனுக்குள்ளே ஒடுங்கச் செய்தது. 

ராஜியும் அவனை புரிந்தவளாகவே இருந்தாள். அவளுக்கு செந்திலின் வலியும் வேதனையும் புரிந்தது.  

அவர்களுக்குள் தானாகவே ஒரு நல்ல புரிதல் இருந்தது. அதனால் அதிக பேச்சுக்கள் இல்லாமலேயே அவனுக்கு உதவினாள் ராஜி.

காலையில் எழுவதில் இருந்து இருந்து இரவு உறங்கப்போகும் வரை அவன் கேட்காமலயே வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் குறிப்பறிந்து அவனின் தேவைகளை செய்தாள்.

அவனின் அருகாமையில் கொஞ்சமே கொஞ்சமாக சலனப்படும் மனதும்  அவனின் வலி நிறைந்த முகத்தையோ இல்லை யோசனையான முகத்தையோ பார்த்து மறைந்து போகும். வலி, கைகளினால்……. யோசனை, இனி வாழ்க்கையில் தான் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதினால்.  

செந்திலின் கை நீட்டிய வாக்கில் அப்படியே இருந்தது. இந்த நான்கு மாதங்களாக விடாது பயிற்சி கொடுத்தனர். மற்ற விரல்களை மடக்கி நீட்ட முடிந்தது ஆள்காட்டி விரலும் நடுவிரலும் நீட்டியது நீட்டிய படியே இருந்தது.

பயிற்சி கொடுக்கும்போது உயிர் வாதனை என்று சொல்லும்படியாக தான் வலி இருந்தது செந்திலுக்கு. மணிக்கட்டிலும் முழு அசைவு வரவில்லை. அதனால் அவனால் எந்த வேலையும் அந்த கையில் செய்ய முடியவில்லை.

இன்னதென்று சொல்ல முடியாத வலி அவன் கையில். அவனுடைய டாக்டரிடமும் அவனுக்கு பயிற்சி கொடுக்கும் பிஸியோதெரபிஸ்ட்யிடமும் கேட்டால் நரம்புகள் செயலுக்கு வர ஆரம்பிக்கும்பொழுது சில சமயம் அப்படித்தான் வலி இருக்கும் என்றனர்.

வலியை தாங்குவதுக் கூட அவனுக்கு பெரிதாக இல்லை. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தான் அவனுக்கு மிகுந்த சோர்வை கொடுத்தது. இந்த கையைப் பார்த்துகொண்டே இருப்பதால் அவனால் எந்த வேலையையும் செய்யமுடியவில்லை.

முதலில் என்ன வேலை செய்வது என்பதே தெரியவில்லை. எங்காவது வேலைக்கு போவதா சுயமாக ஏதாவது தொழில் தொடங்குவதா ஒன்றும் தெரியவில்லை. கையின் செயல்பாடு இல்லாத தன்மையில் என்னச் செய்வது என்று அவனுக்கு யோசிக்க முடியவில்லை.

நாளாக நாளாக வாழவே விருப்பமற்று போய்விடுமோ என்று ஒருக்கட்டதில் அவனே பயந்து விட்டான். ராஜியின் முகம் பார்த்து, பெற்றோரின் முகம் பார்த்து தன்னைவிட அதிக பிரச்சனைகள் உள்ள மக்களை நினைத்து நினைத்து தன்னை தேற்றிக்கொள்வான்.

ராஜி எப்பொழுதும் போல கல்லூரிக்கு சென்றுக் கொண்டு இருந்தாள். செந்தில் இந்த கையை கொண்டே எதிலும் பிடிப்பற்றவனாக சிறிது சிறிதாக மாறிக்கொண்டு இருந்தான்.

உணவில் உடையில் எதிலும் அக்கறை இருக்கவில்லை. அன்னபூரணியும் ராஜியும் மிகுந்த கட்டாயபடுத்தினால் சரியாக உண்பான். இல்லையென்றால் ஏதோ பெயருக்கு கொறித்து விட்டு எழுந்துவிடுவான்.

அவனின் முகம் பார்த்தே அவனின் தேவையை அறியும் அளவுக்கு அவனோடு மனதளவில் நெருங்கி இருந்தால் ராஜி. அவன் பேச்சை எந்த அளவுக்கு குறைத்துக்கொண்டானோ அந்த அளவுக்கு  அதிகப்படுத்திக்கொண்டாள் ராஜி.

முடிந்தவரையில் அவனிடம் பேச முற்பட்டாள், ஆனால் அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்காது. வேறு ஒருவராய் இருந்தாள் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் ஒன்று அவன் மேல் கோபப்படுவர் இல்லை நீ பெரிய இவனா போடா என்று சொல்ல முற்படுவர்.

ராஜி எந்த முகசுனக்கத்தையும் காட்டாதது இன்னும் வலித்தது செந்திலுக்கு. பெரிய இவன் மாதிரி வந்த சீர்வரிசைகளை ஜம்பமாக கொடுத்துவிட்டோம்….. கொடுத்தது அவனுக்கு வருத்தமல்ல……. ஆனால் சொல்லிகொடுத்த காரணம், இது தங்களுக்கு அவசியமில்லை என்ற ஒரு சூழ்நிலை வரும்பொழுது வாங்கிக்கொள்வோம் என்பதே.

அதாவது வாழ்க்கையில் மிகவும் உயர்ந்துவிடுவோம் என்பதே. இப்போது அதற்கு திக்கும் இல்லாமல் வக்கும் இல்லாமல் வலியோடு இருப்பது அவனை உள்ளுக்குள்ளே தின்றுக் கொண்டிருந்தது. 

அது ராஜியிடம் அவனை சரியாக நடந்துகொள்ள விடாமல் தடுத்தது. அவனும் ராஜியிடம் சிரித்துப் பேசவேண்டும். அவளை தன் முகம் பார்த்து நடக்க விடக்கூடாது, தானாக உரிமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பான் தான் முடியதான் இல்லை.   

அவளையும் வருத்துகிறோமோ என்ற நினைவே அவனை கொல்லாமல் கொன்றது. ராஜி எதையும் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. அவனுடைய இயலாமையே அவனை இப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்று புரிந்து பொறுமையாக இருந்தாள்.        

சீனியப்பன் அண்ணாமலையிடமே இன்னும் வேலை செய்துகொண்டிருந்தார். அண்ணாமலைக்கு அவரை விட மனமில்லை. எங்கேயாவது போய் கஷ்டப்பட்டால் இப்போது இருக்கும் சூழலில் தன் மகளும் சேர்ந்து தானே கஷ்டப்படுவாள் என்று அவரை கைக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.

அவருக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தார். இங்கே வீட்டுக்கு ஏதாவது வாங்கும்போது அங்கேயும் போகும்படி பார்த்துக்கொண்டார். இதெல்லாம் ராஜிக்கு தெரியாமலேயே பார்த்துக்கொண்டனர்.

ராஜி தான் சற்று திணறி போனாள். செலவு செய்து பழக்கப்பட்ட கை, நம்பிவந்தவனும் இப்போது வருமானமில்லாமல் அமர்ந்திருக்க ஒவ்வொரு செலவுக்கும் அன்னபூரணியின் கையை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. உரிமையாய் கேட்கவும் சற்று கூச்சமாக உணர்ந்தாள்.

அன்னபூரணியாக பார்த்து பார்த்து குடுக்க வேண்டியிருந்தது.

தேவிகாவும் அவளை பார்க்க வரும்போது முடிந்தவரை அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் அதட்டி உருட்டி மிரட்டி பணம் கொடுத்து போவார்.

இது எல்லாம் செந்திலுக்கு ஓரளவிற்கு தெரியும். அவனுக்கு தான் இன்னும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் அவனும் அன்னபூரணியையே பணத்திற்கு எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

முன்பு அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டு இருந்தது தான், இருந்தாலும் இப்போது திருமணமாகி தன் மனைவியையும் அப்படி ஒரு நிலையில் வைத்திருப்பதற்கு சுய கவுரவம் தடுத்தது. எல்லாவகையிலும் மனது அவனை மிகவும் சோர்வு கொள்ள வைத்தது. அவன் நிம்மதியாக உறங்கிக் கூட வெகுநாட்கள் ஆகியிருந்தது. 

அன்றும் பிசியோதெரபிஸ்ட் இடம் சென்று பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்தால் கைகளில் பயங்கர வலி. அசோக்கும் அவனுடன் வேறு இரு நண்பர்களையும் சந்தித்தான்.

அதில் ஒருவனுக்கு பிறந்தநாள் என்று பார்ட்டி கொடுப்பதற்காக டாஸ்மாக்கிற்கு அழைத்து செல்ல…… இதுவரை செந்தில் குடித்ததே இல்லை. அசோக் குடித்தாலும் கூட இருந்து அவனை பத்திரமாக வீடு கொண்டு விட்டு செல்வான்.

இன்று அவன் வலியில் இருக்கவும், “குடிடா, வலி கொஞ்சம் தெரியாது”, என்று நண்பர்கள் சொல்லக் குடித்தான். கொஞ்சம் நிறையவே குடித்துவிட்டான்.

வீட்டிற்கு செல்ல பயமாக இருந்தது, ராஜி என்ன சொல்வாளோ என்று…… பயந்தபடியே வீடு சென்றான் கதவு திறந்திருந்தது. அங்கே முன்னே யாரும் இல்லை, விரைவாக அவனின் ரூமிற்குள் சென்று புகுந்து கொண்டான்.

இவன் வந்த அரவம் கேட்டு ராஜி வரும்முன் ரூமிற்குள் புகுந்திருந்தான். புதிதாக குடித்தது வேறு தள்ளாட்டமாக இருந்தது. கமுக்கமாக சென்று உடை கூட மாற்றாமல் படுத்துக்கொண்டான்.  

உள்ளே ராஜி வந்து பார்த்தபோது படுத்திருந்தான். சில சமயம் வலி அதிகமாக இருக்கும் போது யாரிடமும் எதுவும் பேசாமல் வந்து படுத்துக்கொள்வான் தான். அப்படி தான் இன்றும் வந்து படுத்துக்கொண்டான் என்று நினைத்தவள்…….

“ரொம்ப வலிக்குதா”, என்று பக்கத்தில் போய் அமர்ந்தாள்.

அவனிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. இருந்தாலும் பதிலை எதிர்பார்க்காதவளாக, “கொஞ்சமா சாப்பிட்டிட்டு மாத்திரை போட்டுட்டு படுத்துக்கங்க, வலி கொஞ்சம் கம்மியாகும்…….. எழுந்து வாங்க!”,

“இல்லை, எனக்கு வேண்டாம்”, என்றான் திரும்பாமலேயே.

“சரி! அங்க வராதீங்க! இங்க நான் கொண்டு வர்றேன்”, என்றவள்…….. திரும்பவும் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் உணவு எடுத்து வர சென்றாள்.                 

“வேண்டாம் ராஜி”, என்றவனின் சொற்கள் அவளின் காதை தீண்டவேயில்லை.

அவன் அதற்குள் தூங்கிவிடப்போகிறானோ என்று வேகமாக ஒரு தட்டில் இட்லியும் சட்னியும் கொண்டுவந்து வைத்தவள், “எழுந்திருங்க”, என்று அவன் போர்த்தியிருந்த போர்வையை இழுத்து எடுத்தாள்.

அப்போதுதான் உடை கூட மாற்றாமல் அவன் படுத்திருப்பதை பார்த்து, “ஏன் ட்ரெஸ் கூட சேஞ் பண்ணலை, எழுந்திருங்க”, என்று அவனின் முகம் இருக்கும் புறம் போய் நின்று எழுப்ப………. அவனால் பொய்யாக கண்மூடி இருக்க முடியவில்லை.

“இப்போ வேண்டாம், சாப்பிட்டிட்டு மாத்துங்க…….. போய் கை கழுவிட்டு வாங்க”, எனவும் தடுமாறி எழுந்து பாத்ரூம் போய் கை கழுவி வந்தான்.

அவனின் தடுமாற்றம் அவளின் கண்களுக்கு தப்பவில்லை.

“ஏன் தடுமாறீங்க”, என்று அவனருகில் போக முற்பட…… அவன் விலகி விலகி போனான். இருந்தாலும் அவன் மீது இருந்து வந்த நெடி அவனின் நிலையை உணர்த்த…….

“குடிச்சிருக்கீங்களா”, என்றாள் கோபமாக……

“ஆமாம்”, என்பது  போல பாவமாக அவன் தலையாட்ட………

அவனின் தள்ளாட்டமான நிலையே அவன் நிறைய குடித்திருக்கிறான் என்பதை காட்ட…. இப்போது பேசுவது சரியல்ல என்பது போல உணர்ந்தவள்……

“சாப்பிடுங்க”, என்றாள் கோபத்தை அடக்கியவளாக…..

“சாரி”, என்றான்

“சாப்பிடுங்க”, என்று அவள் ஒரு அதட்டு அதட்டவும் சாப்பிட ஆரம்பித்தான். ஒரு வழியாக அவன் சாப்பிட்டவுடன்………

“ட்ரெஸ் மாத்திட்டு படுங்க”, என்று சொல்லி தட்டுடன் வெளியே சென்றவள் திரும்ப உள்ளே வரும்போதும் அவன் விழித்து தானிருந்தான்.

“தூங்கலையா…….”,

“ஒரு மாதிரி மப்பா இருக்கு…….. தூக்கம் வரலை….. தலை வேற வலிக்குது”,

“அவ்வளவு கஷ்டப்பட்டு இதை குடிக்கணுமா”,

“ரொம்ப வலிச்சது…….. குடிச்சா வலி குறையும்னு சொன்னாங்க”,

இப்படி சொல்பவனிடம் என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை…….

“கோவமா”, என்றான்.

“கோவமில்லைன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்”, என்றாள் முறுக்கியவளாக….

“சாரி”, என்றான் மறுபடியும்.

“எத்தனை  சாரி தான் சொல்வீங்க! வாய் பேசாம படுங்க”, என்ற ஒரு அதட்டல் போட்டவள் அதற்கான முயற்சியில் இறங்கினாள்.          

உறங்கியும் விட்டாள். ஒன்றிரண்டு மணிநேரம் கழிந்த பின் ஏதோ சத்தம் கேட்பது போல இருக்க எழுந்து பார்த்தால்……..

செந்தில் வாமிட் செய்து கொண்டிருந்தான். மெத்தையைவிட்டு சற்று தள்ளித்தான்…… ஆனால் அதற்க்கு முன்பே மெத்தை மேலேயே எடுத்திருப்பான் போல இருந்தது……..

அவசரமாக லைட்டை போட்டவள், அவன் கைபிடித்து எழுப்ப போக அவள் மேல் எல்லாம் ஆனது. இருந்தும் விடாமல் அவனின் கைப்பற்றி தூக்கிவிட்டவள் பாத்ரூம் அழைத்து சென்றாள்.

தலையை பிடித்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் வாமிட் செய்தான். அவனின் உடையிலெல்லாம் இருத்தது. சற்று நேரம் பொறுத்து அவன் ஆசுவாசப்படவும்…….

சற்றும் முகம் சுளிக்காமல், “ட்ரெஸ் கழட்டுங்க, நான் வெந்நீர் கொண்டு வர்றேன்”, என்று சொன்னவள் அந்த நேரத்தில் அவனுக்கு சுடுதண்ணீர் வைத்துக்கொண்டு வந்து……

“நான் ஹெல்ப் பண்றேன் குளிக்கறீங்களா”, என்றாள்.

“இல்லை! நான் குளிச்சிக்குவேன்”, என்று அவன் சொல்லிய பிறகே அவனை குளிக்க சொல்லி விட்டு சென்றாள்.

அவன் குளித்து வருவதற்குள் ரூமில் இருந்து மெத்தை மேல் இருந்த பெட்ஷீட் எல்லாம் மாற்றி, அவன் தரையில் வாமிட் செய்ததையெல்லாம் சுத்தம் செய்திருந்தாள்.

அவன் வந்த பிறகு, “கொஞ்ச நேரம் அந்த சேர்ல உட்காருங்க, இதெல்லாம் காயட்டும்”, என்று சொல்லியவள்……… அந்த துணிகளை எல்லாம் ஊற வைத்து, அவளும் போய் குளித்து வந்தாள்.   

அவள் வரும்வரையிலும் தலையை பிடித்துக்கொண்டு சேரில் அமர்ந்திருந்தான்.

வந்தவள்…….. அவன் உட்கார்ந்திருந்த நிலையை பார்த்து, “தலை வலிக்குதா! நான் வேணா கொஞ்சம் தைலம் தேய்ச்சிவிடவா!”, என்று அவன் உட்கார்ந்திருந்த சேரின் அருகில் போனது தான் தெரியும்……

அருகில் வந்தவளின் இடுப்பை சுற்றி கைபோட்டு அணைத்து பிடித்தவன், அவளின் நெஞ்சில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழத் துவங்கினான். அவள் விலக நினைத்தாலும் விலக விடவேயில்லை.

“ஏன் அழறீங்க?”, என்று அவள் பதறினாலும் அவன் அவளை சற்றும் நகரக் கூட விடவில்லை. அவளின் உடையின் மேற்புறத்தில் இருந்த அவனின் கண்ணீரின் ஈரத்தை அவளின் உடலும் உணர்ந்தது. 

முதலில் விலக நினைத்த ராஜியும் பிறகு அவனை ஆதூரமாக அணைத்துக்கொண்டு அழட்டும் என்று விட்டு விட்டாள். 

அவனுடைய அழுகை வெகுவாக அவளை அசைத்தது……….. அவளை நெகிழ்த்தியது.

வெகு நேரம் கழித்தே விலகினான்.

“ஏன்பா? என்ன ஆச்சு?”, என்று அவள் கேட்கவும்,

அவனின் மனதில் இருந்த பயம் வார்த்தையாக வெளிப்பட்டது, “என் கை சரியாகாதா”, என்றான் கலங்கிய குரலில் அவளின் முகம் பாராமல்.

அவனின் கலக்கம் புரிந்தது……… இப்போது அவளாக அவனை அணைத்துக் கொண்டவள், “நிச்சயம் சரி ஆகிடும்”, என்றாள்.

அவளின் வார்த்தைகள் அவனுடைய பயத்தை போக்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும்…….. இப்போது அழுகை எல்லாம் செந்திலிடத்தில் இல்லை. ஆனால் அவளிடமிருந்து விலக மனமில்லாமல் சுகமாக அவளுள் புதைந்து நின்றான். 

“இந்த நொடி! இந்த நொடி! இப்படியே உறையாதா!”, என்பதாக இருவருக்குமே தோன்றியது.

முதல் அணைப்பு……. அதுவும் அவளின் நெஞ்சினில்……..  அவளின் இருதயம் துடிக்கும் ஓசை கூட செந்தில் உணர்ந்தான்.

விட்டு விலக விருப்பமில்லாத நிலை. மெல்ல மெல்ல இருந்த நிலை அவர்களுக்குள் சில ஹார்மோன்களின் மாற்றத்தை உருவாக்க……….  

இத்தனை நாட்களாக தோன்றாத உணர்வுகள் ஒரே இரவில் தோன்றி இருவரையும் வசியப்படுத்த ஆரம்பித்தது.

அவனின் கைவலியை நினைத்து அவள் தயங்க…… தான் குடித்து விட்டு வந்ததினால் கோபமாக இருக்கிறாளே என்று அவன் தயங்க…….

அவன் விலக நினைக்கும் போது அவளின் அணைப்பு இறுகியது…… அவள் விலக நினைக்கும் போது அவனின் அணைப்பு இறுகியது.  

மொத்தத்தில் இருவருமே முழு மனதோடு விலக நினைக்கவில்லை……..    

இந்த நிலை இருவரின் உணர்வுகளை தூண்டும் வரையில் நீடித்தது. தூண்டப்பட்ட உணர்வுகள் வடிகால் தேட முற்பட்டது. ஒரு சுகமான தேடல் இருவருக்குள்ளும் ஆரம்பமானது.  

இருவருக்குள்ளும் திரையிடப்பட்டு இருந்த மெல்லிய காதல்……. திரை விலகி இப்போது காமம் கலந்து பலப்பட ஆரம்பித்தது. 

இருவரின் இதழ்களுக்குள்ளும் முதலில் ஒரு தடுமாற்றத்தோடு ஆரம்பித்த தேடல், பின்பு வேகமெடுத்தது………. கெஞ்சல் மிஞ்சல் என்று எதுவுமில்லாமல் இருவரின் விருப்பத்தோடும் முடிவில்லாமல் சென்றது.

இருவருக்குள்ளும் ஒரு மோகத்தீயை பற்ற வைத்தது. அதை அணைக்கிறேன் பேர்வழி என்று இருவரும் சேர்ந்து செய்த வேலைகள் எல்லாம் அதை அதிகப்படுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்ததே தான் செய்ததே தவிர, அதை அணைக்கும் வழியாக காணோம்…… 

முடிவில்லாமல் சென்ற தேடல்…… இருவராலும் முடித்துவைக்கபடாமல் விடியல் வரை தொடர்ந்தது.

முடித்து வைக்க விருப்பமில்லாமல் இருந்த போதிலும்……. விடியலின் ஆரம்பத்தில்  கட்டாயமாக ராஜியால் முடித்து வைக்கப்பட்டது.

வெகுநாட்களுக்கு பிறகு அந்த விடியலின் ஆரம்பத்தில் செந்தில் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.

அவனின் முகம் பார்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். அவன் இரவு அழுததே அவளின் ஞபாகத்தில் அதிகம் இருந்தது. அதை யோசித்துக்கொண்டே படுத்து இருந்தாள். 

அவன் உறங்கிவிட்டான் என்று தெரிந்த பிறகே படுக்கையை விட்டு எழுந்தவள் வேகமாக ஊறவைத்த துணிகளை எல்லாம் துவைத்து போட்டு குளித்து டீயைக் கூட குடிக்காமல் கிளம்பினாள்.

“ஏழு மணி தானே ஆகுது பாப்பா! அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட”, என்றார் சீனியப்பன். அதே கேள்வியை தொக்கி நின்றது அன்னபூரணியின் பார்வையும்………

“அம்மாவை பார்த்துட்டு வர்றேன் மாமா”, என்றவள்……. அன்னபூரணியிடமும் சொல்லி கிளம்பினாள்.  

“ஏன்? எதற்கு?”, என்று அவர்கள் கேட்கும் வரையில் அவள் அங்கே இல்லை.

அவள் கதவை தட்டி நிற்க…… வந்து கதவை திறந்தது அண்ணாமலை. அவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர், “என்ன ராஜிம்மா?, இந்த நேரத்துல”, என்றார்.

அவருக்கு பதில் சொல்லாமல் அவள் தேவிகாவை பார்க்க மேலே போக…. அவரும் மேலே ராஜியின் பின்னாலேயே சென்றார். அவருக்கு ராஜியின் இந்த ஒதுக்கம் பழகி விட்டது. அவள் பேசவேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர் பேசிக்கொண்டே தான் இருப்பார்.  

தேவிகாவும் ராஜியை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர், “என்ன பாப்பா?”, என்று பதறி அருகே வந்தார்.

வேகமாக வந்ததினால் மூச்சு வாங்க பேசினாள், “அவருக்கு கையே இன்னும் சரியாகலைம்மா……… ஆகுமா ஆகதான்னும் தெரியலை…… வேற யாரவது இன்னும் கைக்குன்னு  இருக்கிற ஸ்பெசலிஸ்ட் பார்க்கலாமா”, என்றாள்.

அண்ணாமலையும் அதை பற்றி யோசித்து கொண்டு தானிருந்தார்….. செந்திலின் கையின் நிலைமையை அவரும் பார்த்துக்கொண்டுதானிருந்தார்.           

ராஜி சொல்லவும் உடனே அதை செயலாக்க நினைத்தவர்……. “நான் விசாரிக்கிறேன்! நீ அவளுக்கு குடிக்க ஏதாவது கொடு! பாரு, டல்லா தெரியறா!”, என்று தேவிகாவிடம் சொல்லிக்கொண்டே போனை எடுத்துக்கொண்டு சென்றார்.  

இரவு முழுவதும் உறங்காதது ராஜியை மிகவும் சோர்வாகவே காட்டியது.

அரை மணிநேர தொலைபேசி விசாரிப்புகள் ஒரு முடிவிற்கு வர………… “நம்ம சென்னை கிளம்பறோம்”, என்றபடியே ராஜி முன் வந்து நின்றார். 

அவள் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது போல பார்க்க……. “சென்னையில கைக்குன்னு இருக்கிற ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்க சொல்லியிருக்கேன். எப்படியும் இன்னைக்கு சாயந்தரம் வாங்கிடறேன்னு சொல்லியிருக்காங்க….. நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பினா தான் அங்க சாயந்தறதுக்குள்ள  போய் சேர முடியும்”, என்றார்.

யாரிடம் சொல்லியிருக்கிறார், யார் வாங்கப்போகிறார்கள் என்று அவளுக்கு கேட்க தோன்றவில்லை.

இவருடனா போக வேண்டும் என்பது போல ராஜி யோசிக்க…..

அவளின் யோசனை ஓடும் திக்கை அறிந்தவராக தேவிகா…….. “நீ தனியா போய் தடுமாறுவ பாப்பா! என்ன பண்ணனும்னு உனக்கு தெரியாது! அப்பா கூட வரட்டும், வேண்டாம்னு சொல்லாத”, என்றார்.

“நீங்களும் வர்றீங்களா”, என்றாள் தேவிகாவை பார்த்து……

“இல்லை பாப்பா! நீங்க முதல்ல போங்க! அப்புறமும் அம்மா தேவைன்னு நினைச்சியினா நீ சொல்லு, அப்புறம் வர்றேன்”, என்றார்.

சென்னை என்பதால் தயங்குகிறார் என்று புரிந்த ராஜியும் அதிகம் வற்புறுத்தவில்லை.

வீட்டிற்கு சென்று சீனியப்பனிடமும் அன்னபூரணியிடமும் விவரம் சொல்லி உள்ளே சென்று செந்திலை பார்க்க அவன் இன்னமும் உறக்கத்தில் இருந்தான்.

“எழுந்திருங்க”, என்று அவனை எழுப்பவும்…..

அவளை பார்த்தவுடனே அவளின் பரபரப்பு செந்திலுக்கு புரிய, “என்ன? என்ன ராஜி?”, எழுந்து அமர்ந்தான்.

அவனிடம் விவரம் சொன்னவள்…….. “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”, என்று அனுப்பினாள்.

அவன் அதிக கேள்வி கேட்காமல் தயாராகி வரும்போதே…….. அவள் தங்கள் இருவருக்கும் தேவையான உடைகளை எடுத்து வைத்திருந்தாள்.

“போகலாமா”, என்று பையை அவள் தூக்க……..

“ராஜி”, என்று அவனின் குரல் கேட்டு அவனை பார்த்தாள்.

கைகளை விரித்தபடி நின்றிருந்தான். 

அவனை புரிந்தவள் வேகமாக அவனின் கைகளுக்குள் வந்து சிறைபட…….. அவளை அணைத்துக்கொண்டான். 

அவன் காதலாக அணைத்திருக்க…….. அவள் சற்றும் குறையாத காதலோடு சிறைப்பட்டிருந்தாள். நேற்றைய இரவு ஒரு அலாதியான நெருக்கத்தை அவர்களிடத்தில் உண்டு பண்ணியிருந்தது.

சிறிது நாட்களாக அவனின் மனதில் இல்லாத நிம்மதி அவள் கைகளுக்குள் வந்ததும் அவனுக்குள் வந்தது. 

தன் வாழ்க்கை சரியாகும் என்ற எண்ணம் திடமாக தோன்றியது.  

எண்ணங்கள்,  வாழ்க்கையின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டது. நம் எண்ணங்கள் எப்படியோ நம் வாழ்க்கையும் அப்படிதான் இருக்கும். நாம் நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்.

செந்திலும் இப்பொழுது நல்லதையே நினைத்தான்.    

Advertisement