Advertisement

அத்தியாயம் இரண்டு:

செந்தில் அவனின் வீட்டில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்க அவனின் அன்னை அன்னபூரணி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். செந்திலின் யோசனை முழுக்க ராஜ ராஜேஸ்வரியின் மேலேயே இருந்தது. எப்படி அவளை தன்னை காதலிக்க வைப்பது என்ற யோசனையிலேயே இருந்தான்.

அதுவும் இன்று அவள் நடந்து கொண்ட விதம் தன்னிடம் வாயை திறந்து பேச கூட யோசிக்கிறாள் என்பது அவனால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. முதலில் இருந்து அவளை காதலித்து கல்யாணம் செய்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பதையும் மீறி அவளை எப்படியாவது தன்னை காதலிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் ஓங்க ஆரம்பித்தது.

இப்போது அவளின் சொத்து விவரங்கள் எல்லாம் பின்னுக்கு போக ஆரம்பித்தது. 

“சாப்பிடும் போது என்ன செந்தில் யோசனை …சாப்பாட்டை பாரு”, என்றார் அவனின் அன்னை.

“ம்ம்”, என்றவன் அவனின் யோசனையில் இருந்து வெளி வருவதாக காணோம்…… இன்னும் சாப்பாட்டை கொறித்துக் கொண்டு தான் இருந்தான்.

“என்னடா யோசனை”, என்று அவனின் அன்னை ஒரு அதட்டல் போடவும் நிகழ்வுக்கு வந்தவன், “ஒண்ணுமில்லைமா”, என்றான்.

அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவனின் தந்தை சீனியப்பன் வந்தார்.

“உட்காருங்க நீங்களும் சாப்பிட்டு விடுவீங்கலாம்”, என்று அன்னபூரணி சொல்லவும், அவருக்கு இருந்த பசியில் அவசரமாக கையை கழுவி அமர்ந்தார்.

சாப்பிட்டு முடித்து தலையை நிமிர்த்தியவர்……… இன்னும் தன் மகன் சாப்பாட்டை அளந்துக்  கொண்டிருப்பதை பார்த்து, “இன்னுமாடா சாப்பிடற”, என்றார்.

அவன் அவரை பார்க்கவும், “நீ உன் வாழ்க்கையில உருப்படியா பண்ற விஷயம் கொட்டிகறது தான்…….. இன்னைக்கு அதுக்கும் என்னடா வந்துச்சு”, என்றார்.

தந்தையின் சொல் கேட்டவன் அவரை கோபமாக பார்த்தான்….

அவனின் பார்வையை பார்த்தவர், “இந்த பார்வைக்கெல்லாம் குறைச்சல் இல்லை….. ஒழுங்கா ஒரு தொழிலை பார்த்து உட்கார்றியா……… டெக்ஸ்டைல் டெக்னாலஜி டிப்ளமோ முடிச்சு அஞ்சு வருஷம் ஆகுது…….. இருபத்தி நாலு வயசாகுது….. ஒரு வேலைல ஒழுங்கா உட்கார்றியா நீ”,

“எனக்கு வேலைக்கு போக பிடிக்கலை…….. முடிஞ்சா எனக்கு ஒரு தொழில் வெச்சு குடுங்க, அப்புறம் பேசுங்க”,

“என்னடா தொழில் வெச்சு குடுக்கறது………. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி பேசணும். நானே ஒரு இடத்துல வேலைக்கு இருக்கேன். வர்றது கைக்கும் வாய்க்கும் சரியா போயி ஏதோ கொஞ்சம் சேமிப்பு நிக்குது…….. அதைய உன்னை நம்பி கொடுத்துட்டு கடைசி காலத்துக்கு நானும் உங்கம்மாவும் என்ன பண்றது……. இந்த அஞ்சு வருஷமா ஒரு இடத்துலையாவது நீ நிலைச்சு நின்னியா……. போற, ஆறு மாசம் ஒரு வருஷம் இருக்க……. விட்டுட்டு வந்துடற”, 

“எனக்கு உங்களை மாதிரி அடிமை வேலை பண்றது எல்லாம் விருப்பம் இல்லை, எனக்கு தனியா தொழில் தொடங்கி தான் செய்யனும்”,

“செய்டா உன்னாலேயே செய்ய முடிஞ்சா செய்……. என்னை எதிர்பார்க்காத”,

“எதையும் எதிர்பார்க்காதன்னா எப்படி? பெத்துட்டா மட்டும் போதுமா……. பசங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர வேண்டாமா”,

“என்னால படிக்க வைக்க தான் முடியும்…….. உன் வேலையை பொழைப்பை நீதான் தேடனும்……. என்னை என்ன பண்ண சொல்ற? வேலை வேணுமா வா……. நான் என் முதலாளி கிட்ட சொல்லி உனக்கு வேலை போட்டு தர்றேன்”,

“அப்பா சொல்றதும் நல்லா தானே இருக்கு செந்திலு….. பேசாம கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போ……… அப்புறம் ஏதாவது தொழில் அமையுதான்னு பார்க்கலாம்”, என்றார் அன்னபூரணி.

“என்ன ராஜேஸ்வரியின் வீட்டில் நான் வேலை செய்வதா…. நான் அந்த வீட்டிற்கு எஜமானன் ஆக ஆசைப்பட்டால் இவர்கள் அங்கே என்னை வேலைக்காரனாக ஆக்க முடிவு செய்கிறார்கள்”,

அவசரமாக, “அதெல்லாம் சரி வராது”, என்றான்.

“ஏண்டா ஒரு இடத்துலயும் வேலை செய்யாம சொந்த தொழில் பார்க்கிற அனுபவம் உனக்கு எப்படிடா வரும்……… எங்கயாவது வேலை செஞ்சு முதல்ல அந்த நுணுக்கம் எல்லாம் கத்துக்கோ…….. அப்புறம் ஏதாவது யோசிக்கலாம்”, என்றார் சீனியப்பன்.

எதற்கும் அசையவில்லை செந்தில் வேலவன்………..  அவன் மனம் எப்படி சிரமப்படாமல் பெரிய பணக்காரனாவது என்பதை பற்றி மட்டுமே யோசிக்கும். சினிமாவில் வருவது போல ஒரே பாட்டில் அவனுக்கு தான் பணக்காரனாக வேண்டும்.

நடை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை உழைப்பு மட்டுமே மனிதனை உயர்த்தும் என்பது அவனுக்கு புரிந்தாலும் அதை ஒத்துகொள்ள மனமில்லை. ஏனென்றால் அவனுக்கு தெரியும் வெறும் உழைப்பு மட்டுமே கை கொடுக்காது….. அதனோடு நேரம், காலம், அதிர்ஷ்டம், இவையும் ஒத்துழைக்க வேண்டும் என்று. இந்த வழியில் அதையெல்லாம் முயன்று தான் பார்ப்போமே என்று எண்ணினான்.

அதற்காக மற்ற அநியாயமான வழிகளில் எல்லாம் ஈடுபட அவனுக்கு மனமில்லை. ஒரு பணக்கார பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொண்டால் பணக்காரனாகி விடலாம் என்பதே அவனின் எண்ணம்.

அவனுக்கு யாரையும் ஏமாற்றும் எண்ணமெல்லாம் இல்லை……… இந்த மாதிரி பணக்கார ஒற்றை பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் நோகாமல் முன்னேறி விடலாம் என்பது அவனின் எண்ணம்.

அதற்காக இந்த ஒரு வருடமாக அவளின் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அவள் தான் திரும்பி பார்ப்பதாக காணோம்.

என்ன செய்வது? எப்படி அவளின் மனம் தன் மேல் திரும்புமாறு செய்வது? என்பதே  அவனின் யோசனையாக இருந்தது.

அவனின் யோசனையை கலைக்க மறுபடியும் அவனின் தந்தை ஆரம்பித்தார்……… “செந்திலு சொன்னா கேளுப்பா……… என் இடத்துலயே கொஞ்ச நாள் வேலையை பாரு……. அப்புறம் முதலாளி கிட்ட சொல்லி ஏதாவது தொழில் ஏற்பாடு பண்ண சொல்றேன்”, என்றார் தன்மையாக……… எப்படியாவது தன் மகனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.

அவரின் பேச்சை கேட்டவன் அவரை ஏளனமாக பார்த்தான். “உங்க முதலாளி பெருமையை நிறுத்துங்க…….. என்ன தெரியும் அவருக்கு…… அவருக்கு தொழிலை பத்தி ஒண்ணும் தெரியாது. எல்லாம் நீங்க தான் பார்த்துக்கறீங்கன்னு எனக்கு தெரியும். உங்களால தான் அவர் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கார்…… என்ன செஞ்சிட்டார் உங்களுக்கு”,

“என்னடா செய்யனும் எனக்கு? நான் வேலை பார்க்கிறேன்……. அவர் சம்பளம் கொடுக்கிறார்”,

“என்ன வேலை பார்க்கறீங்களா………. அப்படியா நீங்க நினைக்கறீங்க…….. எப்படி எடுத்துக்கட்டி அவர் தொழிலை வளர்த்து விட்டு இருக்கீங்க…… அது மட்டுமில்லாம அவர் நில புலன்  எல்லாம் பார்த்துக்கறீங்க…….. நீங்க இல்லைனா அவர் தொழில் இவ்வளவு வளர்ந்து இருக்குமா”, என்றான் ஆவேசமாக.

“அவர் நேரம் நல்லா இருக்குது அவர் முன்னேறார். அதுகெல்லாம் நாம தான் காரணம்னு நினைச்சுக்க கூடாது………. நாம இல்லைனா இந்த வேலையை செய்ய யாராவது இருப்பாங்க”,

“நீங்க ஒத்துக்க மாட்டீங்க”,    

தன் மகனின் பிடிவாதத்தை நன்கு அறிந்தவர் சீனியப்பன். ஒன்றை பிடித்து விட்டால் அதை முடிக்கும் வரை அதிலேயே முழு மூச்சாக நிற்பான். யார் பேச்சையும் கேட்க மாட்டான்……….. இந்த பிடிவாதத்தை அவன் ஆக்க பூர்வமாக காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் வருந்தாத நாளில்லை. அவனை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் எப்படியாவது அவனுக்கு புரிய வைத்து விடும் நோக்கத்தில் பேச்சை வளர்த்தார்.   

“செந்திலு தொழிலை எப்படி செய்யனும்னு தெரிஞ்சு வெச்சிருந்தா மட்டும் பத்தாது…… அதையும் மீறி பணத்தை வசூல் பண்ண தெரியணும். அது தெரிஞ்சா தான் தொழிலே பண்ண முடியும். பணம் வசூல் பண்றது எல்லாம் அவர் வேலை……. அதனால் நான் இல்லைனா கூட வேற யாரையாவது வெச்சு அவர் வேலையை வாங்கிக்குவார்”, என்று பொறுமையாக அவனுக்கு விளக்கினார்.

“போங்கப்பா! உங்களால தான் அவங்களுக்கு இவ்வளவு முன்னேற்றம்ன்னு நீங்க ஒத்துக்க மாட்டீங்க…….. ஆனா அது தான் உண்மைபா”, என்றான் அவருக்கு சளைக்காமல் அவனும்.

இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் நொந்து போனார் சீனியப்பன். அன்னபூரணியும் வாழ்க்கையின் நிதர்சனத்தை எப்போது தன் மகன் புரிந்து கொள்வானோ என்று கவலைக்குள்ளானார்.

இதெல்லாம் சாதாரண கவலைகள் இதையெல்லாம் விட பல மடங்கு கவலைகளை தங்களின் மகன் தங்களுக்கு கொடுக்க போகிறான் என்று அந்த பெற்றோருக்கு தெரியவில்லை.

கொஞ்சம் யோசிக்கவும் ஆரம்பித்தான் செந்தில்…….. “இப்படி ஒரு வருடமாக தூர இருந்து பார்த்து அவளிடம் தன்னால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லையே… அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு சென்றால் அவளை அருகில் இருந்து பார்பதற்க்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அவளும் தன்னை அருகில் இருந்து பார்ப்பாள். தன் மேல் ஏதாவது ஈர்ப்பு வருகிறதா என்று பார்ப்போமா”, என்று தோணியது.

சீனியப்பன் மறுபடியும் ஒரு முறை அவனிடம் நயமாக பேசினார்………. “செந்திலு திடீர்ன்னு தொழில் செஞ்சா ஒண்ணும் புரியாது………. ஒரு இடத்துல வேலைக்கு இருந்து முதல்ல வியாபாரத்தோட நெளிவு சுளிவு எல்லாம் தெரிஞ்சிக்க………. அப்புறம் தொழிலை பத்தி யோசிடா……… வேற எடத்துக்கு கூட வேலைக்கு போகாத……… என் எடத்துக்கு வா………. என் முதலாளி எல்லோரையும் நல்ல படியா தான் நடத்துவாறு. உனக்கு எந்த கௌரவ குறைச்சலும் இருக்காது”, என்று மறுபடியும் மறுபடியும் சொன்னார்.

இத்தனை நாட்களாக அவர் சொன்ன போது எல்லாம் தட்டிக் கழித்த செந்தில் இப்போது ராஜேஸ்வரியிடம் பழக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததால் இந்த முறை அதை ஒத்துக்கொள்ளலாம் என்று நினைத்து………. “வருவேன் ஆனா பிடிச்சா தான் இருப்பேன், பிடிக்கலைன்னா இருக்க மாட்டேன்”, என்றான்.

அவன் சொன்னதே போதும் என்று நினைத்த சீனியப்பன், “சரி”, என்று சந்தோஷமாக ஒத்துக்கொண்டு………. “நாளைக்கு காலைல ரெடியா இரு போகலாம்”, என்றார்.

இப்படியும் ராஜேஸ்வரியின் மனதில் இடம் பிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம் என்று நினைத்த செந்திலும் சரி என்று தலையாட்டினான்.   

அங்கே ராஜராஜேஸ்வரியின் வீட்டில் அவளின் தந்தை அண்ணாமலை மீண்டும் அவளிடம் கேட்டார், “வேற ஒண்ணும் பிரச்சனையெல்லாம் இல்லையே ராஜிம்மா”, என்று.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா”, என்று மறுபடியும் சொன்ன பதிலையே இன்னும் சற்று ஸ்ட்ராங் ஆக சொன்னாள் ராஜேஸ்வரி.

“நானே கேட்டுட்டேன்…….. நீங்க வேற ஏன் அதை திருப்பி திருப்பி கேட்கறீங்க”, என்ற தேவிகா……… “முதல்ல சாப்பிடுங்க……… அப்போ தான் என் வேலை ஆகும்”, என்று சொல்லி இருவரையும் அழைத்து சென்றார்.

ராஜேஸ்வரியின் கவனம் முழுவதும் அன்று செந்தில் நடந்து கொண்ட விதத்திலேயே இருந்தது. “என்ன தைரியம்……. பட்டென்று வந்து ஐ லவ் யூ சொல்கிறான். ஏதோ வயசுக் கோளாறு தினமும் போகும் போதும் வரும்போதும் பார்க்கிறான் என்று நினைத்தால் இன்று வந்து தன்னிடம் என்ன சொல்லிவிட்டான்”.

அப்பாவிற்கு தெரிந்தால் அவனை துவைத்து காயப்போட்டு விடுவார் என்று தெரியும் அதனால் அதை பற்றி அவள் ஒன்றும் தனது தந்தையிடம் சொல்லவில்லை. அவள் சிறு வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன்…….. தங்களது தொழிலுக்கு ஆணிவேராய் இருக்கும் சீனியப்பனின் மகன், அவனை காட்டி கொடுக்க மனம் வரவில்லை…….. ஏதோ தடுத்தது.

அவளின் கவனம் இங்கே இல்லை என்று உணர்ந்த அவளின் அன்னை, “என்ன பாப்பா ஏதோ யோசனையிலேயே இருக்க”, என்றார்.                    

“நாளைக்கு காலேஜ்ல பரீட்ச்சை இருக்குமா, அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”,

“சாப்பிடும் போது முதல்ல அதை கவனி………. இல்லைனா சாப்பிடறது உடம்புல ஒட்டாது”, என்றார்.

இனி என்ன தொந்தரவு கொடுக்கப் போகிறானோ என்று செந்திலைப் பற்றி சற்று பயந்தவளாக சாப்பாட்டில் கவனத்தை திருப்பினாள்.

அடுத்த நாள் காலை அவன் தந்தை அவனிடம், “இன்னைக்கு நீ என்னோட வர்ற தானே”, என்று கேட்க…………. “ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன்”, என்று சொல்லி வேகமாக ராஜேஸ்வரி காலையில் கல்லூரி கிளம்புமுன் எப்போதும் உட்காரும் டீக்கடையில் போய் உட்கார்ந்து கொண்டான். அன்று அசோக்கையும் காணோம்.

அவள் தூரத்தில் இருந்து வரும்போதே இவன் பார்த்து விட……… அவளும் தூரத்தில் இருந்தே இவன் அமர்ந்திருப்பதை கண்டு கொண்டாள். இத்தனை நாட்களாக எதையும் கவனிக்காமல் அவனை கடந்து சென்று விடுவாள், இன்று ஏனோ பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது எங்கே அவன் மறுபடியும் வந்து பேசிவிடுவானோ என்று.

அவள் பயந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்கவில்லை தூரத்தில் இருந்து அவளை பார்க்க ஆரம்பித்த செந்தில் அவள் தன்னை கடந்து செல்லும் வரையிலும் விடாமல் பார்த்தான். எப்பொழுதும் போல ராஜேஸ்வரி திரும்பியும் பார்க்கவில்லை. இப்படியே போனால் சரி வராது அவளுடன் பேச பழக சந்தர்ப்பமே கிடைக்காது என்றுணர்ந்த செந்தில் அவளின் வீட்டிற்கு வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்துகொண்டான்.

தினமும் இவன் இங்கே அமர்ந்து ராஜேஸ்வரி போகும் போதும் வரும்போதும் பார்ப்பதை அந்த டீக்கடைக்காரர் ஒரு வருடமாக தினமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அவரின் பார்வைக்கு எதுவும் தப்பாது.

எப்பொழுதும் கடையில் யாராவது ஆட்கள் இருப்பர் இல்லையென்றால் அவனின் நண்பன் அசோக் கூட இருப்பான்………. அதனால் இதை பற்றி எதுவும் பேசமாட்டார் மற்றபடி பொதுவாக பேசிக்கொண்டு இருப்பர்.

இன்று அவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார், “என்னா செந்திலு? ரொம்ப நாளா முயற்சி பண்ற மாதிரி தெரியுது. பொண்ணு திரும்பி கூட பார்க்க மாட்டேங்குது போல”,  என்றார்.

“என்ன அண்ணா  நீங்க…….. அது நம்மாலுண்ணா…டெய்லி அவ காலேஜ் போகும்போது நான் இங்க உட்காரணும்றது அவ ஆர்டர்”, என்றான்.

டீக்கடைக்காரர் நம்பாமல் பார்த்தார்……..

“என்ன அண்ணா? நான் சொல்றதை நீங்க நம்பலை போல”,

“பின்ன எப்படி நம்பறது? அந்த பொண்ணு உன்னை பார்க்குறதே இல்லை….. பேசினது இல்லை……. இதை என்னை நம்பச் சொல்றீயா”,

“அண்ணா அப்படியில்லைனா…….. இந்த ஒரு வருஷமா நான் இங்க உட்கார்ந்து அவளை பார்க்கறதை அவங்கப்பா கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்திருக்க மாட்டா”, என்றான்.

“இதுவும் ஞாயமான கேள்வி தான்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்த டீக்கடைக்காரர் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“அது ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா….. என்னை பார்க்குது, ஆனா அவங்கப்பாக்கு தெரிஞ்சா ப்ரச்சனையாகிடும்னு பயப்படுது. அது தாங்கணா அப்படி”, என்றான்.

அவனை நம்பியும் நம்பாமல் பார்த்தார்.

“என்ன அண்ணா நம்பாம பார்க்கறீங்க……….. தூரமா வரும்போதே என்னை பார்த்துடுவா……… பக்கத்துல வந்தா தான் பார்க்க மாட்டா…….. நம்பலைன்னா நாளைக்கு கவனிங்க, ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதீங்கனா…… எங்க காதலை வாழ வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. அவ அப்பாக்கு தெரிஞ்சா படிப்பு கெட்டிடும், சின்ன பொண்ணு படிக்கட்டும்…….. எங்களுக்கு இப்பத்திக்கு கல்யாணத்துக்கு ஒண்ணும் அவசரமில்லை”, என்று பெரிய மனித தோரணையில் பேசினான்.

“என்னை அடிக்கடி பார்க்கனுங்கறதுக்காகவே என்னை அவ வீட்டுக்கே வேலைக்கு வர சொன்னான்னா பார்த்துக்கங்களேன்”, என்றான் பெருமையாக.

எதற்கும் நாளைக்கு பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார் டீக்கடைக்காரர். அவன் சொல்லுவதெல்லாம் அடுத்தவருக்கு நிஜம் போலவே தோன்றும்படி சொன்னான்.    

அவள் தன்னுடைய காதலி என்று தான் ஊருக்குள் உலாவ வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். பின்னே தன் முகத்தை பார்த்து ஒரு பதில் கூட கூற மாட்டேன் என்கிறாள் அவளா நானா பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.  அதற்கு அடி போட்டு தான் டீக்கடைக்காரர் கேட்டவுடன் இந்த மாதிரி கூறினான்.   

டீக்கடைக்காரர் நம்பின மாதிரியும் இருந்தது நம்பாத மாதிரியும் இருந்தது. இன்று அவன் பார்த்தான், தூரத்தில் வரும்போதே அவள் தன்னை பார்த்தது மாதிரி தான் இருந்தது. அதை மனதில் வைத்து தான் அவள் தூரத்தில் வரும்போதே தன்னை பார்க்கிறாள் என்று கூறினான். அதுவுமில்லாமல் அவளின் வீட்டிற்கு வேறு வேலைக்கு போவது அவனுக்கு சாதகமாக இருந்தது அதனால் அதையும் சேர்த்தே கூறினான்.

தனக்கு தான் அவள், அது எப்படியாவது நடக்க வேண்டும் என்று விரும்பினான். மனதில் ஒரு  மூலையில் சிறு பயமும் இருந்தது, மாட்டிக்கொண்டால் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று தெரியும். இருந்தாலும் ஏதோ ஒரு அசட்டு தைரியம் முயன்று தான் பார்ப்போமே என்று.  

மனதில் அவனை அறிந்தே ஒரு பிடிவாதத்தை அவனே வளர்த்துக் கொண்டான். “பெரிய இவளா அவ, அட காதலிக்கலைன்னா கூட பரவாயில்லை…… திரும்பி கூட பார்க்க மாட்டேங்கறா……. அவ்வளவு மோசமாவா நான் இருக்கேன், இல்லை அவ்வளவு திமிரா…….. என்னை திரும்பி பார்க்க வைக்கமா விடறது இல்லை”, என்ற எண்ணம் வேரூன்ற ஆரம்பித்தது.   

அவன் வீட்டிற்கு வரும்போதே அவனின் தந்தை தயாராக இருந்தார்……. அவனை அழைத்து செல்ல………

“சீக்கிரம் கிளம்புடா……… நான் ஒன்பது மணிக்கெல்லாம் இன்னைக்கு அங்க இருக்கணும் தறி காரங்க வர்றேன்னு சொல்லியிருக்காங்க”,

“அப்பா உங்களுக்கு நேரமானா கிளம்புங்க……. எனக்கு பசிக்குது…….. நான் சாப்பிட்டிட்டு தான் வருவேன்”, என்றான் ஆசுவாசமாக.

அவனின் தந்தைக்கு அதை கேட்டதும் மிகுந்த எரிச்சல் வந்தது. முதல் நாள் ஒரு புது இடத்திற்கு வேலைக்கு போகிறோம் என்ற பரபரப்பு கொஞ்சமாவது இந்த பையனிடம் இருக்கிறதா……. எவ்வளவு தெனாவெட்டாக இருக்கிறான் என்று.

இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை…… ஏதாவது சொன்னால் வேலைக்கு வராமல் முறுக்கி கொண்டால் என்ன செய்வது என்று பொறுமை காத்தார்.

“சரி நான் போறேன்……. நீ சீக்கிரமா வந்துடு”, என்று சொல்லிக் கிளம்பினார்.

“ம்ம்! வர்றேன்”, என்றான் அலட்சியமாக.

“கடவுளே இந்த பையனுக்கு நல்ல புத்தியை கொடுப்பா”, என்று கடவுளிடம் வேண்டியபடியே சென்றார்.

அவரை நிறைய சோதிக்காமல் காலை பத்து மணிக்கெல்லாம் கரக்டாக ஆஜராகி விட்டான் செந்தில்.

அதற்கு முன்னேயே அண்ணாமலையிடம் பேசியிருந்தார் சீனியப்பன். அண்ணாமலைக்கும் ஆள் தேவையாக தான் இருந்தது. உள்வேலைகள் எல்லாம் சீனியப்பன் பார்த்துக்கொள்வார். ஆனால் வெளி வேலைகளான பேங்க் போவது பார்ட்டிகளிடம் பணம் வசூல் செய்வது போன்ற பணத்தை கையாளும் அனைத்து வேலைகளையும் அவரே பார்க்க வேண்டியிருந்தது.

சீனியப்பன் கடுமையான உழைப்பாளி……. தொழில் செய்ய தெரிந்த அளவுக்கு அவருக்கு பணத்தை கையாள தெரியாது. அதனால் அண்ணாமலையே எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. பண விஷயத்தை நம்பி விடும் அளவிற்கு அவரால் யாரையும் நம்ப முடியவில்லை.

இப்போது சீனியப்பனின் மகன் என்பதால் சந்தோஷமாக ஒத்துகொண்டார்.

“பரவாயில்லை சீனியப்பா……. எனக்கும் இந்த வேலைங்க அதிகமா தான் இருக்கு. உன் பையன் வந்தா பரவாயில்லை”, என்று சொன்னவர், செந்தில் வந்தவுடனே…. “வா செந்தில்”, என்றவர், “கிளம்பலாமா”, என்றார்.

செந்திலுக்கு ஒன்றுமே புரியவில்லை……. அவன் புரியாமல் பார்க்க, “பேங்க் போகணும் கிளம்பலாமன்னு கேட்டேன்”, என்றார்.

அவர் தன்னை வேலையில் சேர்த்துக்கொண்டார் வேலைக்கு கூப்பிடுகிறார் என்று அவனுக்கு புரியவே சற்று நேரம் ஆகிற்று…….

அவனின் தந்தையை அவன் பார்க்க…… கண்களாலேயே அவர் போ என்பது போல சொல்ல……… அவன் வேலை அந்த வீட்டில் தொடங்கிற்று.

அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். அங்கே அவரின் புல்லட் நின்று கொண்டிருந்தது. அவர் கம்பீரமாக அதில் ஏறி அமர்ந்தவுடன் அவனை பார்த்த ஒற்றை பார்வையில் தானாக செந்தில் வேலவன் அதன் பின் ஏறி அமர்ந்தான்.  

அந்த டீக்கடை வழியாக தான் பைக் சென்றது……… கவனமாக டீக்கடைக்காரர் தன்னை பார்க்கிறாரா என்று பார்த்தான்.

அவர் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அங்கே தான் அசோக்கும் அமர்ந்து கொண்டிருந்தான்.

இவன் இங்கே வேலைக்கு வருவது அவனுக்கு இன்னும் தெரியாது. திடீரென்று எடுத்த முடிவு தானே…… இவர்கள் போவதை அவன் வாயை திறந்து ஆச்சர்யமாக பார்த்தான்.

அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான். “பயபுள்ள என்ன செய்ய போறானோ தெரியலையே”, என்று நினைத்தான் அசோக்.

முதல் நாளே வேலை ட்ரில் வாங்கி விட்டது. அண்ணாமலை அவனிடம் நன்றாக பேசினார். அவன் வேலை செய்ய வந்தவன் என்பது போல வித்தியாசம் பாராட்டவில்லை.

அவர் பேச்சிலேயே சீனியப்பன் மேல் அவர் கொண்டுள்ள மரியாதை அவனுக்கு தெரிந்தது. இப்படி பேசி பேசி தான் எங்கப்பாவை இவர் மயக்கி வேலை வாங்கறார் போல என்று நினைத்துக்கொண்டான்.  

பேங்கில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். பிறகு வசூலுக்கு வண்டியிலேயே சேலம் அழைத்து சென்றார். அங்கேயே நாள் முழுதும் வேலை இருந்தது……. மதிய உணவு கூட அங்கேயிருந்த உணவகத்திலேயே முடித்தனர்.  மாலை இவர்கள் வீடு திரும்பிய போது ராஜேஸ்வரி வீடு திரும்பியிருந்தாள். இவனை தன் தந்தையோடு பார்த்ததும் அவளும் வாயை பிளந்து நின்றாள்.     

அவளை பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை உதித்தது. அதையும் மிரண்ட விழிகளோடு பார்த்திருந்தாள் ராஜராஜேஸ்வரி.

Advertisement