Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

செந்தில் ராஜியின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிள் ஆக இரு தரப்பிலும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நடந்தது.

தேவிகா டிஸ்சார்ஜ் ஆகி ஒரே வாரத்தில் நடந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டே இந்த வரவேற்பை நடத்தினான் செந்தில். சாமான்யத்தில் ராஜி ஒத்துக்கொள்ளவில்லை.

அன்று அவனின் அன்னை ராஜியை ஓடிப்போனவள் என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்தே சம்மதம் வாங்கினான்.

“ஊருக்குள்ள அந்த மாதிரி பேச்சு வராம இருக்கணும்னா கட்டாயம் இந்த வரவேற்பு நடக்கணும் ராஜி. கல்யாணம் அவசரமா உங்கம்மா ஆசைப்படி ஹாஸ்பிடல்லயே நடந்திடுச்சுன்னு தான் எல்லோர் கிட்டயும் சொல்ல போறோம்”.

“ஏன்? அம்மா அப்பாவை எதிர்த்து ஊர் உலகத்துல யாரும் கல்யாணமே பண்ணிக்கறது இல்லையா……… அந்த மாதிரி இருந்துட்டுப் போகுது”, என்றாள்.

“அது கல்யாணத்தை எதிர்க்கறவங்களுக்கு…….. இவங்க தான் இந்த கல்யாணத்தை எதிர்க்கலையே”,

“இல்லை! எங்கம்மாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை! அது எங்கம்மா பேச்சுல இருந்தே தெரியுது”.

அது செந்திலுக்கும் புரிந்தது தான்……… ஆனால் இப்போது அதை அவளிடம் ஒப்புக்கொண்டால், அதையே சாக்காக வைத்து தான் சொல்வதை கேட்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும், அதனால் அவளின் பேச்சை மறுத்தான்.

“இஷ்டமில்லை தான்! அதுக்காக இந்த கல்யாணத்தை ஒத்துக்கலைன்னு என்றா சொன்னாங்க………. அப்படியெல்லாம் எதுவுமில்லை”, என்றான்.

பிறகும் இருவருக்குள்ளும் மிகுந்த வாக்குவாதம் இருந்தாலும் செந்தில் அவள் ஒத்துக்கொள்ளும் வரையில் விடவில்லை.

“என்னவோ செய்ங்க”, என்று அவள் எரிச்சலாக கத்தி அவளின் சம்மதத்தை தெரிவித்த பிறகு வேகமாக வேலைகள் நடந்தது………..  தேவிகா சற்று உடல்நிலை சமன்பட்டு தேறிய பிறகு…… தேவிகாவை அதிகம் அலைக்கழிக்காமல் அண்ணாமலையே எல்லா வேலைகளையும் செய்து வரவேற்பை மிக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே  அழைத்து உள்ளூரில் இருந்த மண்டபத்திலேயே மிக சிறப்பாக செய்துவிட்டார்.

தேவிகாவிற்கு மகள் இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது பற்றி வருத்தம்தான் இருந்தாலும் ராஜியின் வார்த்தைகளுக்கு பிறகு எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. அவள் சந்தோஷம் தானே முக்கியம் என்பது போல அமைதியாக இருந்துவிட்டார்.

ஆனால் எதிலும் ஒரு பட்றற்ற தன்மை வந்துவிட்டது. கணவன் தான் அப்படி என்றால் மகளும் இப்படி செய்துவிட்டதில் மிகவும் நொந்து விட்டார் அவர். எதுவும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடமாடினார்.

வரவேற்பு முடியும் வரையும் செந்தில் வீட்டிலேயே தான் இருந்தாள் ராஜி. வரவேற்பு முடிந்த அடுத்த நாள் அண்ணாமலை உறவுகள் புடைசூழ சீர் வரிசை எல்லாம் கொண்டு வந்து செந்தில் வீட்டில் இறக்கினார்.

ராஜி அதைப்பற்றி ஏனோ யோசிக்க மறந்துவிட்டாள். முன்பே யோசித்து இருந்தால் வேண்டாம் என்பது மாதிரி ஏதாவது பேசி இருப்பாள். இப்போது உறவுகள் முன்னிலையில் கொண்டு வந்து இறக்கிய பிறகு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லவும் முடியவில்லை……… அதை ஏற்றுக்கொள்ளவும் மனம் வரவில்லை.

இரண்டு பெரிய சூட்கேசுகளை வேறு அன்னபூரணியிடம் தேவிகா தனியாக கொடுத்தார். ராஜியிடம் உறவுப்பெண் ஒருவர் அப்போது பார்த்து பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்க அவள் கவனிக்கவில்லை.

நிற்கக் கூட இடமில்லாமல் சீர்வரிசையை அடுக்கி விட்டார் அண்ணாமலை.

ராஜி என்ன சொல்வாளோ என்று பயந்தபடியே இருந்தார். எல்லோரும் இருந்ததினால் ராஜி ஒன்றும் பேசமுடியாதவளாகி போனாள்.  

எல்லோருக்கும் செந்தில் வீட்டில் விருந்து தயாராகி இருக்க அதை உண்டனர்.   

உண்டு முடித்ததும், அண்ணாமலையும் தேவிகாவும் அவர்களை அடுத்த நாள் விருந்துக்கு அழைத்தனர். ராஜி யோசிக்க….. அவளை தனியாக அழைத்து சென்ற தேவிகா பொரிந்து தள்ளிவிட்டார்.

“என்ன பாப்பா இவ்வளவு யோசிக்கிற? அது உங்கப்பா வீடு மட்டுமில்லை என் வீடும் கூட தான். இப்படி தள்ளி தள்ளி நின்னு எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்த போறியா”, என்று கேட்டார்.

“நீ மட்டும் வீட்டுக்கு வரலை…… அப்புறம் அம்மாவை நீ எப்பவுமே மறந்துட வேண்டியதுதான்”, என்றார். உடனே கூடவே, “அதுதான் நீ ஏற்கனவே மறந்துட்டியே… இல்லைனா நீ வீட்டை விட்டுப் போயிருப்பியா”, என்றார் உணர்ச்சிப்பிழம்பாக…

அம்மாவிடம் எந்த சமாதானமும் எடுபடாது என்றுணர்ந்த ராஜி, “சரி! வர்றேன்மா!”, என்றாள்.

அன்று அன்னபூரணியும் தேவிகாவை எதிர்த்து பேசியதுடன் சரி…. அதன் பிறகு ஓரளவுக்கு அவரிடம் சுமுகமாகவே நடக்க முற்பட்டார். என்ன இருந்தாலும் விடப்போகும் உறவல்ல இது. பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம் என்ற நினைப்பு இருந்தவராகவே இருந்தார்.

தேவிகா ஹாஸ்பிடலில் இருக்கும் வரை ராஜி அவருடன் தான் இருந்தாள். பின்பு செந்திலின் வீட்டிற்கு வந்துவிட்டாள். அன்னபூரணியும் அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டார். புது இடம் என்ற அவளின் நிலையுணர்ந்து நடந்து கொண்டார். அங்கிருந்து கல்லூரிக்கும் சென்றாள் ராஜி.

அன்றைய பேச்சுக்கு அவளிடம் மன்னிப்பும் வேண்டினார் அன்னபூரணி. அதையெல்லாம் ராஜி எதிர்பார்க்கவில்லை…….. “விடுங்கத்தை”, என்று பிரச்சனையை அவளும் முடித்துவிட்டாள், அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கவில்லை. 

செந்திலுக்கும் ராஜிக்கும் தனித்தனி படுக்கையே. சடங்கு சம்பிரதாயமெல்லாம் நல்ல நாள் பார்த்தே செய்ய வேண்டும் என்று அன்னபூரணி சொல்லிவிட்டார்.

செந்தில் அவன் ரூமில் உறங்க….. ராஜி அன்னபூரணியுடன் படுத்துக்கொண்டாள்…   சீனியப்பன் ஹாலில் படுத்துக்கொண்டார். அது சற்று பெரிய வீடு… இரண்டு அறைகளும் வேறு இருந்ததால் ராஜிக்கு ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

அதுவும் எல்லாம் அட்டாச்சுடு பாத்ரூம் வசதியுடன் இருந்ததால் ராஜிக்கு ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. வீடு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் புதிதாக காட்டியிருந்தார் சீனியப்பன்.

ஒட்டு வீடாக இருந்ததை மொட்டை தார்சு போட்டிருந்தார். புதிய வீடு ஓரளவு வசதியுடன் இருந்ததால் ராஜி அதனுடன் பழகிவிட்டாள். பொருட்கள் எல்லாம் தான் மிகவும் பழையதாக இருந்தன. சீனியப்பன் வீடுகட்டவே அண்ணாமலை மிகவும் உதவியிருந்தார்.  

தேவிகாவிற்கு அதுவரை சற்று திருப்தியே தன் மகள் வீட்டை கொண்டு சிரமப்பட வேண்டியிருக்காது என்று.        

அவள் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அன்னபூரணியுடனே செலவானது. செந்திலுக்கும் ராஜிக்கும் அதிகம் பேசும் சந்தர்ப்பத்தை கூட உருவாக இடம்  கொடுக்கவில்லை அன்னபூரணி.

அவர்வேண்டும் என்றே தான் அப்படி நடந்துகொள்கிறார் என்று ராஜிக்கும் புரிந்தது செந்திலுக்கும் புரிந்தது. அது ஒன்றும் அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

இருவருக்குள்ளும் அப்போதைக்கு வேறு எண்ணங்களோ சலனங்களோ இல்லவே இல்லை. இருவருக்குமே இல்லாத போது அதற்குரிய எதிர்பார்ப்புகளும் அவர்களுக்குள் இல்லை.  

அதுவுமில்லாமல் செந்தில் இன்னும் வலி நிவாரண மாத்திரைகளிலேயே இருந்தான். வலியுடன் சற்று போராட்டமாக தான் இருந்தது. முடிந்தவரையில் வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடமாடினான்.   

வரவேற்பிற்கு மறக்காமல் அந்த டீக்கடைக்காரரை போய் அழைத்தான் செந்தில்.

“எப்படியோ செந்திலு நினைச்சதை சாதிச்சிட்ட போல”,

“அதான் நடக்ககூடாதுன்னு நீங்க வெளியூர்காரங்க கிட்ட எல்லாம் புரணி பேசுன மாதிரி தெரிஞ்சது”,

“நான் சொல்லலை, அவராதான் தெரிஞ்சிகிட்டார்”, என்றார் அவர்.

“அண்ணே எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும்! இத்தனை நாள் நீங்க இந்த விஷயத்தை ஊர்க்காரங்க கிட்ட சொல்லாம இருந்ததே பெரிய விஷயம்! ஏதோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நீங்க தப்பிச்சிடீங்க…….. ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தது அப்போ தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு இந்த செந்திலை பத்தி”,

“என்ன செந்திலு மிரட்ரியா”,

“ஒஹ்! உங்களுக்கு இப்போ தான் அது புரிஞ்சதா”,

“நம்ம பழக்கம் என்ன அப்படியா செந்திலு”,

“அது நீ அடுத்தவங்க கிட்ட போட்டு குடுக்கும் போது தெரியலையா”,

“விடு! விடு! செந்திலு”, என்று அவர் சமாதானத்திற்கு தான் வந்தார். அவருக்கு கொஞ்சம் செந்திலின் குணம் தெரியும், கோபக்காரன் என்று……. வீண் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்தார்.

செந்திலும் அதிகம் பிரச்சனையை வளர்க்க விரும்பாமல் சென்றுவிட்டான்.                       

இப்படியாக ஒருவாறு நெருங்கிய உறவுகளையும் சில பல தெரிந்தவர்களையும் அழைத்து வரவேற்ப்பை முடித்து…….. அடுத்த நாள் சீர்வரிசையையும் வைத்து…… அதற்க்கு அடுத்த நாள் விருந்துக்கும் அழைத்து….. செந்தில் மற்றும் ராஜியின் பதிலுக்காக காத்திருந்தனர்.

“வர்ரேன்மா”, என்று ராஜியின் பதிலை கொண்டு தேவிகா அன்னபூரணியின் முகம் பார்க்க……… “அனுப்பி வைக்கிறேன் அண்ணி”, என்று அவரும் வாக்கு கொடுத்தார்.

அன்று வைக்கலாம் என்று நினைத்திருந்த சடங்கும் செந்திலின் கைகட்டை முன்னிட்டு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாள் கழித்து அவனின் கட்டை எடுத்துவிட்டு விரல்களுக்கு அசைவு கொடுக்கலாம் என்று டாக்டர் சொல்லியிருந்தார்.

அதனால் வேறு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல்  விருந்துக்கு மட்டும் அழைத்து சென்றனர், அவர்களின் உறவுகளையெல்லாம் அழைத்துக்கொண்டு தேவிகாவும் அண்ணாமலையும்.

ராஜிக்கும் சில விஷயங்களை தெளிவாக்க அவளின் வீட்டிற்கு போகவேண்டி இருந்தது. அதற்கு முன் இங்கே செந்திலின் வீட்டிலும்  அவளுக்கு பேச வேண்டி இருந்தது.

அண்ணாமலையும் தேவிகாவும் சென்ற உடனேயே அந்த பெட்டிகள் இரண்டையும் அன்னபூரணி ராஜியிடம் கொடுத்து……. “செந்தில் ரூம்ல வெச்சிடுமா”, என்றார்.

“என்னத்தை இது”,

“உங்கம்மா கொடுத்தாங்க……. உள்ள வை, அப்புறமா பாரு. இப்போ எல்லோரும் இருக்காங்க”, என்று விட்டார்.

வந்த உறவுகள் எல்லாம் சீர்வரிசையை விமர்சித்து கொண்டிருந்தாலும் பெட்டியில் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தனர்.

அனேகமாக நகைகள் இருக்கும் என்று அனுமானித்தனர்….. அதை பார்க்க ஆர்வமாயும் இருந்தனர். ஆனால் அன்னபூரணி அதை உள்ளே வைக்க சொல்லிவிட்டார்.

நகைகள் என்றால் யார் கைக்கு மாறுகிறது என்றே தெரியாது. எது இருந்தது இல்லை என்று அவருக்கும் தெரியாது. அதனால் அவர் அதையெல்லாம் கடை பரப்பவில்லை.

அப்படியே பெட்டிகளை ராஜியிடம் ஒப்படைத்து விட்டார்.

எல்லோரும் கிளம்பி சென்ற பின்னர் ரூமிற்கு சென்ற ராஜி என்ன இருக்கிறது என்று ஒரு பெட்டியை திறந்து பார்க்க எல்லாம் அவளின் நகைகள். தேவிகா அவளுக்காக பார்த்துப் பார்த்து சேர்த்தது அது மட்டுமில்லாமல் புதிதாகவும் நிறைய இருந்தது.

இந்த ஒரு வாரத்தில் வாங்கியிருக்கிறார்கள் என்று அனுமானித்தாள் ராஜி. அதுவுமில்லாமல் நேற்று வரவேற்பிற்கு வேறு புதிதாக சில நகைகளை தேவிகா ராஜிக்கு அணிவிதிருந்தார். இன்று வந்ததும் மறுபடியும் அதை அணிந்துக் கொள்ள சொல்லிவிட்டார். அதுவும் அவள் கழுத்தில் இன்னும் கழட்டப்படாமல் இருந்தது.

அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே செந்தில் உள்ளே வந்தான். அவனுக்கு நகைகளை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதெல்லாம் எத்தனை சவரன் மொத்தமாய் தேறும் என்று அவனுக்கு தெரியவில்லை. இவ்வளவு நகைகளா என்றிருந்தது.

“ஒரு காலத்தில் இப்படி மனைவி எல்லாம் கொண்டு வந்து நீ வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று தானே நினைத்தாய்”, என்று அவனின் மனம் கரக்டாக அவனுக்கு எடுத்துச் சொல்ல………

“டேய் அடங்குடா”, என்று அதை உள்ளுக்குள் அதட்டிக் கொண்டிருந்தான். 

“இதெல்லாம் எவ்வளவு இருக்கும்”, என்றான் செந்தில். அவனுக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது.  அதன் மேல் ஆசை என்று சொல்வதற்கு இல்லை, ஒரு ஆர்வத்தில் கேட்டான்.

“சரியா தெரியலை, எப்படியும் நூத்தி ஐம்பதுக்கு பவுனுக்கு மேல இருக்கும்”, என்றாள்.

“அவ்வளவா”, என்று வாயை பிளந்தான்.

“நம்மளே வெச்சிக்குவோமா”, என்றாள், அவளுக்கு அதை வைத்துக்கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை. அவன் என்ன நினைக்கிறான் என்று அவன் வாயில் இருந்து வரட்டும் என்று நினைத்தாள்.

“இவ்வளவு நகைங்க திருப்பி குடுக்க வேண்டாம்ன்னு சொல்ல தான் தோணுது….. இருந்தாலும் வேண்டாம் கொடுத்துடு…… இவங்க இதையெல்லாம் கொடுத்து நாம வாழ்ந்ததா இருக்க வேண்டாம்……. நாம முதல்ல வாழ்ந்துக் காட்டலாம்….. அப்புறம் நமக்கு இதெல்லாம் தேவையில்லைன்ற சூழ்நிலை வரும்போது இதைக் கட்டாயம் வாங்கிக்கலாம்…….. இப்போ வேண்டாம்”, என்றான் தெளிவாக…….

அவன் பேசியதில் இருந்தே அவன் இதைப்பற்றி முன்பே யோசித்திருக்கிறான் என்று புரிந்தது.

“முன்னாடியே இதை யோசிச்சு இருந்தீங்களா”,

“ஆமாம்”, என்பது போல தலையாட்டியவன்…….. “நீ எப்படியும் இதை வேண்டாம்னு சொல்வேன்னு எதிர்பார்த்தேன். நீ சொன்னா உங்கம்மா உன்கிட்ட சண்டை போடுவாங்கன்னு தெரியும்…….. அப்போ சொல்லச் சொல்லலாம்னு நினைச்சேன்”,

தன்னை அவன் நன்றாக புரிந்து வைத்திருக்கிறான் என்று ராஜி உணர்ந்தாள்.

“தேங்க்ஸ்”, என்றாள்.

“எனக்கு தேங்க்ஸா……. நீ அடி வாங்கப் போற”, என்றான் செல்லமாக……        

ராஜி எல்லாவற்றையும் எடுத்து பார்த்து மீண்டும் இருந்தபடியே அடுக்கினாள். அவள் காலையில் அணிந்திருந்ததையும் சேர்த்து கழட்டினாள்.  செந்தில் அவள் செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான்.

எல்லாவற்றையும் கழட்டியவள், ஒரு சங்கிலி இரண்டு வளையல்கள் மட்டும் அணிந்து கொண்டாள்.

“இது எனக்கு போதும் தானே”, என்றாள்.

அவள் எதற்கு கேட்கிறாள் என்று புரியாவிட்டாலும், “போதும்”, என்று தலையாட்டினான் செந்தில்.

“இது கூட இல்லைனா எங்கம்மா விடமாட்டாங்க”, என்றவள்……. “அப்போ நாளைக்கு நாம விருந்துக்கு போகும்போது இதையெல்லாம் கொடுத்துட்டு நீங்க சொன்ன மாதிரி சொல்லிடலாம்”, என்றாள்.  

ஒரு பெட்டியை கச்சிதமாக அடுக்கி முடித்தவள் அடுத்த பெட்டியை திறந்து பார்க்க எல்லாம் பணம்…….. ராஜி இதை எதிர்பார்க்கவில்லை……… செந்திலும் இதை எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள்.

இருவருமே அதிர்ச்சியில் கண்களை விரித்தனர்.

பெண்ணுக்கு நகை செய்வது வழமை தான்….. சொத்தும் கொடுப்பர் தான்……. பணமாக கொடுப்பது அதுவும் இப்படி பெட்டியில் கொடுப்பது அவர்களிடத்தில் மிகவும் அரிது, அதுவும் இவ்வளவு பணம்….. செந்திலுக்கு நகை தான் எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட தெரியவில்லை…….. ஆனால் பார்த்தவுடனே தெரிந்தது பணம் பல லட்சங்கள் தேறும் என்று.

செந்தில் அதை ஒரு கையாலேயே எடுத்து வெளியே வைத்தான். வைக்கும்போதே அதை கணக்கிட்டவன், “இருவதஞ்சி லட்சம்”, என்றான்.

மறுபடியும் எடுத்து உள்ளே வைக்க ஒரு கையாலேயே முயல…… “இருங்க! நான் வைக்கிறேன்”, என்று ராஜி மறுபடியும் அதை அடுக்கினாள்.

“இதையும்……..”, என்று அவள் பேச ஆரம்பிக்கும்போதே………. “நாளைக்கு கொண்டு போய் கொடுத்துடலாம்”, என்று அவன் முடித்தான்.

அண்ணாமலை எதை நினைத்து பணம் கொடுத்தார் என்றெல்லாம் எண்ணி மனதை குழப்பத் தயாரில்லை அவன். யோசிக்காமலேயே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டான் செந்தில்.

அதே சமயம்…… “அவங்க கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் இருந்துட்டு போகட்டும் ராஜி……… அதை திருப்பிக் கொடுத்தா அவங்களுக்கு மத்தவங்க மத்தியில ரொம்ப அசிங்கமாயிடும். பணம் நகை திருப்பிக் கொடுத்தா யாருக்கும் தெரியாது”, என்றான்.  

“அத்தைகிட்டயும் மாமாகிட்டயும் சொல்ல வேண்டாமா”, என்றாள்.

“சொல்லிடுவோம்”, என்று சொன்னவன்…….. அவர்களை அழைத்து அவனின் முடிவை சொல்ல……. அவ்வளவு நகை பணத்தை பார்த்த பிறகு……. லகுவாக போகவேண்டிய வாழ்க்கையை அவர்கள் சிரமப்பட்டு வாழ நினைப்பது மாதிரி தான் பெற்றோர்களுக்கு தோன்றியது.

“எப்படியும் வாங்கிக்க போறோம்னு தான் சொல்றீங்க, அதை இப்பவே வாங்கினா என்ன?”, என்றார் சீனியப்பன்.

“வேண்டாம்பா இத்தனை சீர் செனத்திக்கு தகுந்த மாப்பிள்ளையா நான் முதல்ல என் தகுதியை வளர்த்துக்கறேன்…….. அப்புறம் இதையெல்லாம் வாங்கிக்கறேன்”, என்றான் செந்தில் முடிவாக…..

அவனின் பேச்சுக்கள் ராஜியை சற்று பெருமையாக உணரவைத்தது. செந்திலை கைபிடித்து தான் தவறு எதுவும் செய்யவில்லை என்ற ஒரு உணர்வை அவளுக்கு கொடுத்தது.

தன் மகனின் தன்மானம் பெற்றவர்களுக்கு பெருமையாக இருந்த போதும்……… வலிய வரும் சீதேவியை வேண்டாம் என்பதா என்பது போல தான் இருந்தது. இருந்தாலும் மறுத்து எதுவும் பேசவில்லை, ”சரி” என்று விட்டனர்.

சடங்கு சம்பிரதாயம் என்று நாள் குறிக்காவிட்டாலும் அன்றே அன்னபூரணி ராஜியிடம்………. “நீ செந்தில் ரூம்லயே படுத்துக்கம்மா”, என்று விட்டார்.

பணம் நகை விஷயத்தில் சற்றும் தங்களை கொண்டுப் போக விடாமல் பொறுப்பாய் இருக்கும் பிள்ளைகள்…….. அவர்களின் வாழ்க்கை விஷயத்திலும்  நல்ல முடிவாகவே எடுப்பர். அவர்களுக்கு தெரியாதது தனக்கு என்ன தெரிந்து விடப் போகிறது.

தான் அவர்களை எதற்கு தனித்தனியாக பிரித்து வைத்துக்கொண்டு என்று நினைத்தவர் ராஜியை செந்திலின் ரூமிற்கு உறங்க அனுப்பிவிட்டார்.

திருமணமாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் தனித்து விடப்பட்டது அன்று தான். அதற்கு முன்பும் தனிமை கிட்டவில்லை என்று சொல்ல முடியாது……. அது சில பல மணித்துளிகளே. “இவன் உன் கணவன். இவனோடு இனிமேல் நீ இரு”, என்று உரிமையாக விடப்பட்டது அப்போதுதான்.

முதல் முறையாக ஒரு கூச்சம், ஒரு வெட்கம் ராஜிக்கு. இவனோடுதான் நான் இனி உறங்க வேண்டும் என்று…..

அது அவளுக்கு நாணத்தை கொடுக்க…… பேச்சில் ஒரு தயக்கம் எட்டிப் பார்த்தது.  “எங்கே படுக்க”, என்று ரூமை ஆராய்ந்தாள்….. ஒற்றை நாடாக் கட்டில் இருந்தது…….. அங்கே ஒருவர் படுத்தாலே புரளக் கூட முடியாது…..

செந்திலை மேலே படுக்கச் சொல்லிவிட்டு…….. தான் கீழே படுக்கலாம் என்று ராஜி நினைத்திருக்க…….

அந்த மாதிரி எண்ணம் எல்லாம் செந்திலுக்கு இருப்பது போல தெரியவில்லை.

அவள் ஆரய்ந்து கொண்டிருக்கும் போதே அந்த நாடாக் கட்டிலை ஒற்றை கையால் தூக்கி ஓரமாக நிறுத்தினான் செந்தில். ராஜியின் வீட்டில் கட்டில் கொடுக்கும் பழக்கம் இல்லாததால் அவர்கள் அதை சீர்வரிசையில் கொண்டு வரவில்லை. மெத்தை மட்டுமே இருந்தது.

“அதை கொண்டு வந்து போட்டுக்கலாமா”, என்றான் செந்தில்.

“ம்”, என்று ராஜி சொல்ல….. அதை தூக்க முயற்சித்தால் செந்திலால் ஒரு கையால் தூக்க முடியவில்லை.

அன்னபூரணியும் சீனியப்பனும் உறங்கச் சென்றிருந்ததால் ராஜி ஒரு கைபிடிக்க அதை தூக்கி வந்து ரூமிற்குள் போட்டனர்.   

ராஜி பாத்ரூமில் போய் நைட்டி மாற்றிக்கொண்டு வந்து புடவையை மடித்துக்கொண்டு இருக்க……. செந்தில் சற்று சிரமப்பட்டு ஒரு கையால் ஷர்ட் பட்டன்களை கழட்டி கொண்டிருந்தான்.

கூச்சம் வெகுவாக தடுத்த போதும் ராஜி யோசித்தது சில நொடிகளே…….. அவனருகில் சென்று, “நான் ஹெல்ப் பண்றேன்”, என்று அவன் சட்டையை கழட்ட உதவினாள்.

ஒரு கையால் லுங்கியை தலைவழியாக மாட்டி பேன்ட்டை கழற்றியவனால் அதை  கட்ட முடியவில்லை.

முயன்று பார்த்து பரிதாபமாக நின்றான்.

அவனுடைய நிலை புரிந்தாலும் அப்போது சற்று சிரிப்பு எட்டி பார்த்தது ராஜிக்கு. “இத்தனை நாளா எப்படி கட்டுனீங்க……”,

“அப்பா கட்டி விடுவாங்க”, என்றான்.

அருகில் வந்து அவனது துணியை கையில் பிடித்து கட்ட முயன்ற போது கைகள் சற்று நடுங்கியது கூட ராஜிக்கு. அவனுக்கு இவ்வளவு அருகில் முதன் முதலாக உரிமையாய் நிற்கிறாள். செந்திலும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.   

அவளே அதை ஒரு மாதிரியாக கட்டி விட…….. இருவரின் அருகாமையை மற்றவர் அறியாமல் இருவருமே ரசித்தனர்.

“இப்படி கட்டுனா நான் ரெண்டு நடை நடக்கறதுகுள்ள கழன்டிடும்”, என்று பேசியவாறே அவனின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞ்ஜான் கயிற்றை எடுத்து லுங்கி மேலே விட்டு தற்போதைய பெல்ட் ஆக்கினான் அதை.

பார்த்து சிரித்த ராஜி படுத்துக்கொண்டாள்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் வந்த பிறகு ராஜி சிரிக்கவேயில்லை. இப்போது தான் பிரச்சனைகள் எல்லாம் மறந்து அவளின் முகத்தில் சிரிப்பு எட்டி பார்த்தது.

அது வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தன் கையில் தான் இருக்கிறது என்றுணர்ந்த செந்திலின் மனதில் பெரிய பாரம் ஏறிக்கொண்டது.

தான் வாழ்க்கையில் வெற்றி பெற இப்போதைக்கு தன்னிடம் குறையாய் இருப்பது பணம் மட்டுமே என்று அவனுக்கு தோன்றியது….. பணம் சம்பாதிப்பது சிலருக்கு சுலபமாக இருந்தாலும் பலருக்கு அது கஷ்டம் என்று அவனுக்கு தெரிந்ததே. 

எப்படி என்ன செய்ய போகிறோம் இனி? என்ற கேள்வியே அவனின் முன் பூதாகரமாக நின்றது. ஆனால் அவனின் கேள்வியை அவனின் கைவலி மறக்கடித்தது. காலையில் இருந்து எல்லோரும் இருந்ததால் கையை தொங்க விட்டுக்கொண்டே இருந்தான். அது சற்று வலியை அதிகப்படுத்தி இருந்தது. 

படுத்தவன் மீண்டும் எழுந்து உட்கார……. ராஜியும் அரவம் உணர்ந்து எழுந்து உட்கார்ந்தவள், “என்ன”, என்று கேட்டாள்……….

“மாத்திரை சாப்பிட மறந்துட்டேன்”, என்றான்.

அவனின் முக பாவனையே கை வலியை உணர்த்த……..

“கை ரொம்ப வலிக்குதா”, என்று கேட்டுகொண்டே மாத்திரை எடுத்துகொடுத்து அவன் சாப்பிட உதவினாள்.

“படுத்துக்கங்க”, என்று அவனிடம் சொல்லி அவனுக்கு போர்வை போர்த்திவிட்டு அவனின் கைவைக்க ஒரு தலைகானியையும்  வாகாக வைத்து……

“நான் இந்த பக்கம் படுத்தா கையை இடுச்சிடுவேன்”, என்று அவனுக்கு மறுபுறம் படுத்துக்கொண்டாள்.  படுத்துகொண்டவள் உடனேயே, “வலி போயிடுச்சா”, என்றாள்.

“இப்போதானே மாத்திரை சாப்பிட்டேன், அதுக்குள்ள போயிடுமா”, என்று அவன் சோர்வாக சிரிக்க…..

“சரியாயிடும்”, என்று சொல்லிகொண்டாள்…….. அவனுக்கு மட்டுமில்லை, அவளுக்கும் சேர்த்து.  

சற்று முன் இருந்த அவர்களின் மனநிலை எல்லாம் மாறி அவனின் கை சரியாக வேண்டுமே என்ற கவலையே இப்போது இருவர் மனதிலும் பிரதானமாக இருந்தது.

சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளலாம்                                                                            துக்கத்தை பகிர்ந்துகொள்ளலாம்                                                                                           வலியை பகிர்ந்து கொள்ள முடியாது                                                                                         அது அவரவர் மட்டுமே அனுபவிக்க வேண்டியது…….                                                          அது உடலின் வலியானாலும் சரி………. மனதின் வலியானாலும் சரி……. 

Advertisement