Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

திருமணம் முடிந்து அவர்கள் நேரே சென்றது தேவிகா அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்கு தான்.

அசோக் ரூமிற்கு வெளியேயே நின்றுக் கொள்ள…….. செந்திலும் ராஜியும் சீனியப்பனும் ரூமின் உள்ளே நுழைந்தனர்.

அங்கே தேவிகா உறங்கிக்கொண்டிருக்க அண்ணாமலை  அமர்ந்திருந்தார். கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே அங்கே பார்த்த அண்ணாமலை ராஜி உள்ளே வருவதை பார்த்தார்.

கண்கள் பளிச்சிட சந்தோஷமாக அவளைப் பார்த்த உடனே, “ராஜிம்மா”, என்று அழைத்துக்கொண்டு எழுந்தார். உணர்ச்சி மிகுதியில் அவர் சத்தமாக அழைக்க அந்த அழைப்பிலேயே தேவிகாவும் விழித்தார்.

புதிதாக கட்டப்பட்டிருந்த ராஜியின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு பளிச்சென்று இப்போது தேவிகாவின் கண்களுக்கும் தெரிந்தது, அண்ணாமலைக்கும் தெரிந்தது.

அவளின் பின்னோடு செந்திலும் சீனியப்பனும் நுழைந்தனர்.

“என்ன பாப்பா இது”, என்று பதட்டத்தோடு படுத்துக்கொண்டிருந்த தேவிகா எழ, அண்ணாமலை ராஜியின் அருகில் வர முற்பட…… ராஜி செந்திலின் பின்னே மறைந்தாள்…..

மறைந்தவள் அவனின் கைகளையும் இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.

அதுவே சொல்லாமல் சொன்னது அவள் கழுத்தில் இருந்த தாலி செந்தில் கட்டியது என்று…..

“அவ்வளவு கேட்டும் எங்களுக்கு தெரியவே தெரியாதுன்னு சாதிச்சிடீங்களே”, என்றார் அண்ணாமலை சீனியப்பனை நோக்கி……..

அண்ணாமலையாவது கேள்வி கேட்டார்……. தன் மகள் திரும்ப வந்துவிட்ட மகிழ்ச்சி இருந்தாலும் அவள் வந்து நின்ற கோலம் தேவிகாவை வாயடைக்க வைத்திருந்தது.

தாங்களே தங்களின் மகளை இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளிவிட்டோமோ என்று தோன்றியது.

ஒரு நிமிடம் மௌனியாக நின்றவர், “ஏன் பாப்பா! ஏன் பாப்பா! இப்படி செஞ்ச…… இவரைத்தான், இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேனு சொல்லியிருந்தா…. நாங்க பண்ணிவெச்சிருப்போமே பாப்பா! இந்த மாதிரி ஒரு முடிவை ஏன் எடுத்த? நாங்களே உன்னை இப்படி ஒரு முடிவு எடுக்க வெச்சிட்டோமா……..”,

“அப்பா மேல கோபம்னா? அம்மாவை கூட நீ நம்பலையா பாப்பா! ஏன் பாப்பா இப்படிச் செஞ்ச?”, என்று கதறி விட்டார்.   

அவளின் அம்மா அழுதது ராஜியின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அம்மாவின் பக்கத்தில் போகக் கால்கள் பரபரத்தாலும் அருகில் அண்ணாமலை நின்றிருந்ததால் பிடித்த செந்திலின் கையை விடவே இல்லை.

அண்ணாமலையும் தேவிகாவும் நினைத்தது அவள் செந்தலை தேடித் தான் வீட்டை விட்டுப் போயிருக்கிறாள். அவர்களிடம் தான் அவள் இருந்திருக்கிறாள் என்று.

“என்னை வந்து பார்த்து ஆறுதல் எல்லாம் சொன்னீங்களே அண்ணா! ஆனா அப்போ கூட என் பொண்ணு உங்ககிட்ட இருக்கான்னு சொல்லவே இல்லையே”, என்றார் தேவிகா சீனியப்பனை  நோக்கி……..

“இல்லைமா, இல்லை”, என்று அவசரமாக மறுத்த சீனியப்பன்…..

“சத்தியமா எங்களுக்கு பாப்பா இருக்கிற இடம் தெரியாது. பாப்பா ஸ்கூல்ல அது கூட படிச்ச ஒரு பொண்ணோட ரொம்ப ஸ்நேகிதம்னு தெரியும். ஒரு வேளை அந்த பொண்ணுக்கு விவரம் தெரியுமான்னு கேட்க இன்னைக்கு காலையில தான் திருப்பூர் போனோம்……… பார்த்தா நம்ம பாப்பா அங்க இருந்தது”.

“வீட்டுக்கு கூப்பிட்டோம் தான், ஆனா அது வரமாட்டேன்னு பிடிவாதம். மறுபடியும் அதை தனியா விட்டுட்டு வர முடியாது……… ரெண்டு பேரும் இஷ்டப்பட்டாங்க…… அதான் கல்யாணம் முடிச்சே கூட்டிட்டு வந்துட்டேன்”.

“பொண்ணை பெத்தவங்க நாங்க இங்க குத்துக்கல்லு மாதிரி தானே இருக்கோம்! அவ இருக்கிற இடம் தெரிஞ்ச உடனே எங்ககிட்ட சொல்லியிருக்க வேண்டாமா?”, என்று சீனியப்பனிடம் அண்ணாமலை எகிற…..

அதை காணச் சகியாத செந்தில்…… “நீங்க வேண்டாம்னு தான் வீட்டை விட்டு போயிட்டா! மறுபடியும் உங்ககிட்ட சொல்லி வேற எங்கயாவது போறதுக்கா….. ஏதோ ஒரு அதிர்ஷ்டம் இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சு. வேற எங்கயாவது போயி நமக்கு தெரியாம இருந்தாலோ இல்லை வேற ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கிட்டாலோ என்ன பண்றது”.

என்ன வார்த்தைகள் வந்தாலும் அண்ணாமலையாலும் தேவிகாவாலும் நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை.

“இந்த பையன் அதிகம் படிக்கவும் இல்லை. வெறும் டிப்ளமோ தான் படித்திருக்கிறான். நிரந்தர வேலையும் இல்லை…. தொழிலும் இல்லை…… வசதியும் இல்லை…… இவனை நம்பித் திருமணம் செய்திருக்கிறாளே……..”, அண்ணாமலையின் நடத்தைத் தான் அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுக்க ராஜியைத் தூண்டி இருக்கிறது என்று தேவிகா ஸ்திரமாக நம்பினார்.   

“ஏன் பாப்பா? ஏன் பாப்பா? அவசரப்பட்டு இப்படி செஞ்சிட்ட !”, அவள் வீட்டை விட்டுக் காணாமல் போனது எல்லாம் தேவிகாவிற்கு மறந்து போனது.

இப்போது அவர்களின் திருமணம் மட்டுமே கண்முன் நின்றது.

தேவிகா ஆவேசமாக கத்த ஆரம்பித்தார்.

“எப்படியெல்லாம் செல்லமா வளர்த்தோம் உன்னை! எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்னு நினைச்சோம்! எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு  நினைச்சோம்! எல்லாம் கெட்டுப்போச்சே……..”,

“இப்படியொரு வாழ்க்கை அமைச்சிக்கிட்டு நிக்குதே…….”,.

“என் பொண்ணு யாருமில்லாத அனாதை மாதிரி அதுவே இந்த மாதிரி மாப்பிள்ளை தேடிட்டு வந்து நிக்குதே! எல்லாம் உன்னாலதான்!”, என்று அண்ணாமலையின் சட்டையை பிடித்து உலுக்கினார்.

கேட்டிருந்த செந்திலின் முகம் கருத்தது. 

உலுக்கியபடியே மீண்டும் மயக்கமானார் தேவிகா. மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

மனைவியின்  வார்த்தைகளின் நிதர்சனம் அண்ணாமலையை செயலிழக்க செய்தது.     தீவிர சிகிச்சை பிரிவின் வாயிலில் எல்லோரும் காத்திருந்தனர்.

“மறுபடியும் பீ பீ ரெய்ஸ் ஆகிடிச்சு…….. அது கண்ட்ரோல் ஆன பிறகு தான் ரூமிற்கு மாத்துவோம்”, என்றனர்.

“வீட்டுக்கு போயிட்டு வரலாமா ராஜி”, என்ற செந்திலின் கேள்விக்கு……….

“இங்கயே இருக்கலாமே அம்மாக்கு சரியாகற வரைக்கும்”, என்றாள்.

சீனியப்பன் அன்னபூரணியை சமாளிக்க வேண்டி இருந்ததால் அவர் அசோக்கை கூப்பிட்டு கொண்டு கிளம்பிவிட்டார்.

செந்திலுக்கு வேறு அலைந்து திரிந்ததில் சரியாக மாத்திரை சாப்பிடாமல் கைகள் வேறு விண் விண் என்று வலித்தது. அவன் மறைக்க முயன்றும் முகம் வலியை காட்டிக்கொடுத்தது.

“வலிக்குதா”, என்றாள்.

“கொஞ்சம்”, என்று முகம் சுனங்கியவனை செய்வதறியாது பார்த்தாள். அம்மாவை விட்டுவிட்டு செல்லவும் மனதில்லை. செந்திலை அனுப்பிவிட்டு தனியாக இருக்கவும் மனதில்லை.

“இந்த ஹாஸ்பிடல்ல தானே இருந்தீங்க! இங்கயே எதாவது மாத்திரை கேட்டு வாங்கி சாப்பிடலாமா”, என்று கேட்டு……. மாத்திரை வாங்கி கொடுத்து………. அவனை அங்கே இருந்த பெஞ்சிலேயே படுக்கச் செய்தாள்.

ராஜியை காணோம் என்று கேள்விப்பட்டதில் இருந்தே சரியாக உறங்காத செந்தில் படுத்ததும் ஹாஸ்பிடலின் ஆட்கள் இங்கும் அங்கும் நடக்கும் களேபாரத்திலும் உறங்கினான்.

அண்ணாமலை ஒரு பக்கம் அமர்ந்திருக்க……… ராஜி ஒரு புறம் அமர்ந்திருந்தாள்.

அண்ணாமலை மிகுந்த கழிவிரக்கதில் இருந்தார்……….. தானே தன் மகளை இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளிவிட்டோமோ என்று. அது அவரை எதுவும் பேச விடாமல் வாய் மூடி அமைதியாக இருக்கச் செய்தது.

சிறிது நேரத்தில் ஆகாஷ் வந்தான். அவர்களை ரூமில் சென்று தேடி அவர்கள் அங்கில்லாததால் ஐ சீ யு விற்கு வந்தவன்………. பதட்டத்தோடு, “என்ன ஆச்சு”, என்றான்.

அண்ணாமலை பதில் பேசாமல் பார்வையை திருப்ப, அங்கு ராஜி அமர்ந்திருப்பதை பார்த்தான்.

“எப்போ? எப்போ வந்தா ராஜி?”, என்று பரபரப்போடு அவளின் அருகில் செல்ல…… அவளின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு அவனின் கண்களுக்கு பளிச்சென்று தெரிந்தது.

அப்படியே நொறுங்கினான். ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான். அவனின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. பிறகு சுதாரித்து கண்களை சுற்ற விட   அருகில் ஒரு பெஞ்சில் படுத்திருந்த செந்திலும் கண்களுக்கு தெரிந்தான்.

வேகமாக அண்ணாமலையின் அருகில் வந்தவன், “அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா”, என்றான்.

“ஆகிடுச்சு”, என்று அண்ணாமலை சொல்லவும்……

ராஜி இனி தனக்கில்லை என்பது நன்கு புரிந்தது. ராஜியின் அருகே செல்லத் துடித்த கால்களை அப்படியே திருப்பி வெளியே வந்தவன்……. ஹோட்டல் ரூமை உடனே காலி செய்து சென்னை நோக்கி பயணப்பட்டான்.

யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை அவன்……….. யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை.

மனதில் சொல்லொணா துயரம் எழுந்தது. இந்த பெண்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று திட்டத் தோன்றியது. தன் அக்கா எல்லாம் இருந்தும் இந்த அண்ணாமலையுடனான வாழ்க்கையை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று அவனுக்கு இன்னும் புரியவில்லை.

இந்த ராஜி தன்னிடம் என்ன குறையை கண்டுவிட்டாள். தன்னிடம் எல்லாம் இருந்தும் தனக்கு பக்கத்தில் எந்த வகையிலும் நிற்கக் கூட முடியாத இந்த செந்திலை தேர்ந்தெடுத்து இருக்கிறாள்.

இந்த பெண்களைப் பற்றி புரியவேயில்லை என்று மனதின் புலம்பலோடு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஆகாஷ் வந்தது, அருகில் வர முயன்றது……… பின்பு தன் கழுத்தில் தாலியை பார்த்து அப்படியே நின்றது. அருகில் உறங்கிக்கொண்டிருந்த செந்திலை பார்த்தது. உடனே அப்படியே திரும்பி சென்றது என்று அனைத்தையும் ராஜி பார்த்துக் கொண்டுதானிருந்தாள். 

அண்ணாமலையும் கவனித்தார் தான்……… இனி அவர் கையில் அவரின் மகளின் வாழ்க்கை இல்லை என்று அவருக்கு தெரியும். அவரும் என்ன செய்வார் அவன் போகட்டும் என்று அமர்ந்துவிட்டார்.

அன்று இரவு முழுவதும் அண்ணாமலை ஐ சீ யூவின் வெளியேயே அமர்ந்திருக்க……. செந்திலிடம் சொல்லி ராஜியை தேவிகா அட்மிட் ஆகியிருந்த அறையில் படுத்துக்கொள்ளச் சொன்னார்.

ஆம்! செந்திலிடம் சொல்லி தான் சொன்னார். அவருக்கு தெரியும் ராஜி அவரிடம் பேசமாட்டாள் என்று……… செந்திலிடம் பேசுவதை தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை.

உணவுமே வாங்கிவர அண்ணாமலை அவசரம் காட்டவேயில்லை. அவருக்கு தெரியும் ராஜி அவர் வாங்கி வந்தால் உண்ணமாட்டாள் என்று தெரியும்.

என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அவர் நினைத்திருக்க…… அவர் விரும்பியபடியே செந்தில் வந்து அவரிடம், “நான் டிஃபன் வாங்கப் போறேன், உங்களுக்கு என்ன வாங்கட்டும்”, என்றான்.  

“நீங்க எது வாங்கறீங்களோ, அதுவே எனக்கும் வாங்கிடுங்க”, என்றார்.

ஒரு மறைமுகமான அங்கீகாரம்.

கேட்கவா வேண்டாமா என்று தயங்கி தயங்கி தான் செந்தில் கேட்டான். அவர் ஏதாவது சுடு சொல் பேசுவார் என்று அவன் எதிர்பார்த்து கேட்க…… அவரோ சுமுகமாக பேசினார், இதை செந்தில் எதிர்பார்க்கவேயில்லை.  

அவனோ அடி தடி லெவலுக்கு எதிர்பார்த்து மனதை திடப்படுத்தி அதை எதிர்கொள்ள தயாராயிருக்க….. அவரோ பேச்சில் கூட காயப்படுத்தவில்லை. 

அவன் வாங்கி வந்த உணவையும் மறுக்காமல் உண்டார்.

இந்த அவரின் நடவடிக்கையிலேயே செந்தில் அயர்ந்து நின்றான்.  இவர் என்னடா வெடியாய் வெடிப்பார் என்று நினைத்தால் ஊசிப் பட்டாசாய் கூட வெடிக்கவில்லை புஸ் என்று ஆகிவிட்டது. 

ராஜியும் இவருக்கு கோபமில்லையா…….. எப்படி இப்படி நடந்துக் கொள்கிறார் என்ற யோசனையிலேயே இருந்தார்.

ராஜி அவ்வப்போது அவன் தன் தந்தையிடம் பேசுவதற்கு முறைத்து முறைத்துப் பார்த்தாலும்……… செந்தில் அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.

அவரே விரோதம் பாராட்டாதப் போது தான் பாராட்டுவது சரியல்ல என்றே நினைத்தான்.

அண்ணாமலைக்கு செந்திலிடம் இப்போது விரோதம் பாராட்டும் எண்ணம் எல்லாம் இல்லை. அவனை ஏதாவது சொல்ல சொல்ல தன் மகளை இன்னும் அது தன்னிடம் இருந்து விலக்கி வைத்துவிடும் என்று அவருக்கு நிச்சயமே.

சீனியப்பனிடம் என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்று ஒரு வார்த்தை மட்டுமே கேட்டார் அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேசவில்லை. தேவிகா கோபப்பட்ட அளவிற்கு கூட அவர் கோபத்தை காட்டவில்லை.

அவருக்கு கோபம் என்பதை விட வருத்தம் அதிகமாக இருந்தது.

தன் செய்கையே தன்னுடைய பெண்ணின் இந்த நிலைக்கு காரணம் என்பதும் அவருக்கு நிச்சயமே.   

அவருக்கு ஊர் உலகத்தை பற்றி கவலையில்லை……… அப்படி கவலைப்படக்கூடிய ஆசாமியும் அவர் இல்லை.

இருந்தாலும் தன்னுடைய பெண்ணின் இந்த திருமணத்தை யாரும் விமர்சிக்க கூடாது என்று நினைத்தார்.

அதனால் மறுபடியும் தங்களே திருமணத்தை செய்து வைப்பது போல செய்துவிடலாமா என்று நினைத்தார்.

இந்த நிலையில் பிரச்சனை செய்தால் ஊர் முழுவதிற்கும் தாங்களே செய்தியாகிவிடுவோம் என்று அவருக்கு தெரியும். அவரைப் பற்றி யார் பேசினாலும் அவருக்கு கவலையில்லை.

ஆனால் ராஜி யார் வாயிலும் விழுந்து அரைப்பட கூடாது என்று நினைத்தார். இல்லையென்றால் அவருக்கு தெரியும், “அந்த பொண்ணு வீட்டை விட்டு ஓடிப்போயிடுச்சாம், இந்த பையன் போயி கல்யாணம் கட்டி இழுத்துட்டு வந்திருக்கான். என்ன கசமுசாவோ தெரியலை……. நாலைஞ்சு நாள் யாருக்கும் தெரியாம இருந்திருக்கு……. எங்க இருந்ததோ?, யார் கூட இருந்ததோ?”, என்பது மாதிரியான பேச்சுக்கள் தான் வரும்.

அந்த மாதிரியான பேச்சுக்கள் தன் மகளை தீண்டக்கூடாது என்று நினைத்தார். செந்திலுடன் போயிருந்தாலாவது பரவாயில்லை ஏதோ காதலித்தார்கள் ஓடி போனார்கள் என்று வரும்……… ஆனால் இவள் தனியாக அல்லவா போயிருக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய சிறு செயலும் தன் மகளின் வாழ்க்கையை அடுத்தவரின் வாயிற்கு அவலாகி விடும் என்றும் தெரியும்.  

“என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?”, என்றே யோசித்தார்.    

ராஜி தேவிகா இருந்த ரூமிற்கு போன பிறகு அவராகவே போய் செந்திலிடம் பேசினார்.   

“எங்க இருந்தா”, என்று பேச்சை ஆரம்பித்தார்.

“திருப்பூர்ல”, என்று அவனும் அவருக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஒவ்வொன்றாக விவரங்கள் வாங்கினார்…….. வாங்கியவருக்கு நிச்சயமே தன்னுடைய செய்கையே தன் பெண்ணின் இந்த முடிவிற்கு காரணம் என்று.

“அவ தனியா போனது தெரிஞ்சா ஊருக்குள்ள கண்டதும் பேசுவாங்க! அவ போனது நீங்க கூட்டிட்டு வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம்”,

“நாங்களே இந்த கல்யாணத்தை நிச்சயம் பண்ணின மாதிரி, மறுபடியும் ஒரு தடவை நடத்திடலாமா”, என்று அவனிடமே ஆலோசனை கேட்டார்.

“அது சரிவராது……. அவ உங்க வீட்டுக்கே வரமாட்டா……. அப்புறம் கல்யாணத் தேதி குறிச்சு அது நடக்கற வரைக்கும் அவ எங்க இருப்பா”, என்றான்.

“ஏதாவது அவகிட்ட பேசி நீங்க சம்மதம் வாங்க முடியாதா”,

“இந்த சூழ்நிலையில ரொம்பக் கஷ்டம்! காலப்போக்குல கூட மாறலாம்! ஆனா இப்போ நிச்சயம் ஒத்துக்க மாட்டா”.

“என்ன பண்ணலாம்”, என்று அவனிடமே கேட்டார்.

சற்று யோசித்தவன்…….. “அவங்கம்மாவுக்கு திடீர்ன்னு ரொம்ப முடியாம போச்சு! பொண்ணு கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க, அதனால அவசரமா மாப்பிள்ளை பார்த்து யாருக்கும் தெரியாம உடனே ஹாஸ்பிடல்லயே கல்யாணம் பண்ணிடோம்னு சொல்லி……. ஒரு ரீசெப்சன் மட்டும் வெச்சிடுவோம்”, என்றான்.

அவனின் யோசனை சற்று சரி வரும் போல தான் அண்ணாமலைக்கு தோன்றியது. அதை விட்டால் வேறு வழியும் அவருக்குத் தெரியவில்லை.

ராஜி அவளை நினைத்து இருவருக்குமே பயமாக இருந்தது. செந்தில் சொல்லிவிட்டான் தான் இருந்தாலும் ராஜி என்ன சொல்வாளோ என்று இருந்தது. அண்ணாமலைக்கும் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று இருந்தது.         

காலையில் தேவிகாவை ரூமிற்கு மாற்றிவிட்டனர். இப்போது சற்று தெளிவாக இருந்தார் தேவிகா.

அண்ணாமலை விரோதம் பாராட்டுவார் என்று செந்தில் நினைத்திருக்க, நடந்தது நடந்துவிட்டது இனி அதை சரி செய்வோம் என்று அவர் சுமுகமாக இருக்க தான் முற்பட்டார்………. ஆனால் சற்றும் எதிர்பாரமால் தேவிகா விரோதம் பாராட்டினார்.

ரூமிற்கு வந்தவுடனே செந்திலை பார்த்து கேள்வி கேட்டார்.

“அவளை பார்த்தவுடனே நீ எங்களுக்கு தான் தகவல் கொடுதிருக்கணும். என்ன தைரியத்துல நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீ திட்டம் போட்டு ஏதோ வேலை செஞ்சிருக்க, என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு”, என்று ஏகத்துக்கும் வார்த்தையை விட்டார்.

அண்ணாமலையே இதை எதிர்பார்க்கவில்லை. அண்ணாமலை ஏதோ தடுத்துப் பேச வர, “எல்லாம் உங்களால தான், உங்களால தான், எதுவும் பேசாதீங்க….. வாயை மூடுங்க”, என்று கத்தினார்.

மறுபடியும் ஐ சீ யூ போகிற நிலைமைக்கு வந்துவிடுவாரோ என்று அண்ணாமலை அமைதி காத்தார்.     

செந்தில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான். தடுமாறினான் என்பதை விட அவமானமாக உணர்ந்தான். நேற்று தேவிகா பேசிய வார்த்தைகளும் இன்று தேவிகா பேசிய வார்த்தைகளும் செந்திலை ஏகத்துக்கும் காயப்படுத்தின. அவனின் முகம் சிறுத்து விட்டது.  

இந்த வார்த்தைகளை கேட்டு காயப்பட்டது அவன் மட்டுமில்லை……… அப்போதுதான் வந்த சீனியப்பனும் அன்னபூரணியும் கூட.

அண்ணாமலையை எதிர் கொள்ள தயாராக தான் இருந்தான் செந்தில். ஆனால் தேவிகா இவ்வளவு கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவன் தடுமாறிய சில நொடிகளிலேயே ராஜி பேச ஆரம்பித்தாள்……

“அம்மா”, என்று தேவிகாவை அதட்டியவள், “முதல்ல அவரை இந்த மாதிரி நீ, வா, போன்னு பேசறதை நிறுத்து. நான் உனக்கு பொண்ணுன்னு நினைச்சியின்னா அவர் உனக்கு மாப்பிள்ளை, முதல்ல அந்த மரியாதையை அவருக்கு குடு”.

“அப்புறம் அவர்கிட்ட இந்த கேள்வி கேட்கற வேலையெல்லாம் வெச்சிக்காத…….. உனக்கு ஏதாவது கேட்கணும்னா என்னைக் கேளு, அவரையெல்லாம் நீ கேட்கக்கூடாது”, என்றாள். அன்று ஆகாஷ் அவளைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை அப்படியே சொன்னாள்.

தேவிகா இதை ராஜியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. செய்வதறியாது திகைத்து நிற்க……… “இனிமே இந்த மாதிரி வார்த்தையை விடற வேலையெல்லாம் வெச்சிகாதீங்க…..”, என்றாள் கடுமையாக.

தேவிகாவிற்கு முகம் தொங்கி போய் மறுபடியும் அழ ஆரம்பித்தார்…… “எல்லாம் உங்களால தான்”, என்று அண்ணாமலையை சாடிக்கொண்டே.  

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும்……… ராஜி செந்திலுக்காக பரிந்து பேசியதை கேட்டாலும்…….. அன்னபூரணியால் தாங்க முடியவில்லை. ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்தார்.

“ஏன் என் பையனுக்கு என்ன தகுதியில்லை? எங்ககிட்ட பணமில்லை தான்! ஆனால் பணம் மட்டும் தான் இல்லை. மானம் மரியாதை எல்லாம் ரொம்ப இருக்கு. உன் பொண்ணுக்கு அடி பட்டுடக்கூடாதுன்னு அவன் கையை காயப்படுத்திட்டு நிக்கறான்ல அவனுக்கு இந்த வார்த்தையெல்லாம் கேட்கணும்னு அவசியம் தான்”. “ஓடிப்போன உன் பொண்ணை  போய் தேடிப்பிடிச்சி கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்தானே, அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”.

“பெத்த பொண்ணு வீட்டை விட்டு ஓடிபோற அளவுக்கு நடத்தை இருக்கிறவங்களையெல்லாம் நீ வெச்சிகிட்டு…. என் பையனோட தகுதியைப் பத்தி பேசக்கூடாது”.

“இன்னொன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க…….. உங்க நிலைமை மாதிரி ஒரு நிலைமை உங்க பொண்ணுக்கு என்னைக்கும் வர விடமாட்டான் என் பையன். இதைவிட அவனுக்கு என்ன தகுதி வேணும்! பணம் காசு இருந்தா ஆச்சா! மனுஷங்களுக்கு ஒழுக்கம்னு ஒண்ணு வேண்டாமா”, என்று சாட்டையடியாய் அவர் வார்த்தைகளை அடிக்க……….

“அம்மா அவங்க தான் பேசறாங்கன்னா……. நீயும் பேசணுமா”, என்று அவரை வெளியே தள்ளிக்கொண்டு போனான் செந்தில்.

எந்த பக்கம் பேசுவது என்று தெரியாமல் சீனியப்பனும் அண்ணாமலையும் தடுமாறி நின்றனர்.

ராஜியை ஓடிப்போனவள் என்ற வார்த்தை மிகவும் அசைத்து பார்த்து இருந்தது. என்ன முயன்றும் கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது.   

அன்னபூரணியை வெளியே தள்ளி கொண்டு போன செந்தில் அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்து, “நான் சொல்ற வரை நீ இங்க இருந்து எந்திரிக்கக் கூடாது”, என்று அதட்டினான்.   

இவர்களை தொடர்ந்து வெளியே வந்த சீனியப்பன் மௌனப் பார்வையாளர் ஆனார்.

“எனக்கு தெரிஞ்ச எங்கம்மா இப்படியெல்லாம் பேசமாட்டாங்க…….. நீயாம்மா இப்படி பேசின”, என்று அதட்டினான்.

“டேய் நீ சும்மா இருடா! உனக்கொண்ணும் தெரியாது. இந்த மாதிரி உன்னை மரியாதையில்லாம பேசறதை எல்லாம் ஆரம்பத்துலயே அடக்கிடனும்! இல்லைனா காலத்துக்கும் அதுவே வரும்”.

“நம்ம கிட்ட பணம் காசு இல்லை…….. அதைவிட்டா வேற என்னடா குறைச்சல் நமக்கு. சாப்பிட வழியில்லாமையா இருக்கோம். கல்யாணம் பண்ற வயசுல பொண்ணை வெச்சிக்கிட்ட இந்தம்மா புருஷன் இப்போ போயி வேற ஒரு பொம்பளைக்கு புள்ளைய குடுத்து வெச்சிருக்கான். இவங்கெல்லாம் கவுரதையான குடும்பமா என்ன?”,

“என் பையனுக்கு என்ன தகுதியிருக்குன்னு இந்தம்மா கேக்குது, இவங்க பொண்ணுக்காக கையை வேற உடைச்சு வெச்சிக்கிட்டு இருக்க, அந்த கவலையே எங்களுக்கு இன்னும் ஓயலை இதுல இந்தம்மா பேச்சு வேற கேட்கணுமா”. 

“நீ என்ன வேணா பேசிக்கோ……… அதுக்காக என் பொண்டாட்டிய இனிமே ஓடிபோனவன்னு சொல்ற வேலையெல்லாம் வெச்சிக்காத……… அப்புறம் உனக்கும் எனக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது”, கடினமாக.

“அங்க பேசாம திக்கித் திக்கி நிக்கற……. உன் பொண்டாட்டி பேசற அளவுக்கு கூட நீ பேசலை, என்னை அதட்ட வந்துட்டான்”,

அவர் என்ன பேசினாலும்…….. “உன் பொண்டாட்டியை இனிமே நான் அப்படி சொல்ல மாட்டேன்”, என்று அவர் உறுதி கொடுக்கும் வரை அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை….

இந்த வார்த்தையை கேட்டு அவள் வேறு எப்படி இருக்கிறாளோ என்று கவலைப்பட்டுகொண்டே ராஜியை சமாதானப்படுத்த விரைந்தான்.  

அவன் நினைத்த மாதிரியே கலங்கிய கண்களோடு நின்றுக் கொண்டிருந்தாள். தேவிகா ஒரு பக்கம் அழுதுகொண்டு இருந்தார். அண்ணாமலை ஒரு பக்கம் முகத்தை தொங்கப் போட்டுகொண்டு அமர்ந்திருந்தார்.

யாருமில்லாதவள் போல ஓய்ந்த தோற்றத்தோடு ராஜி நின்றிருக்க செந்திலுக்கு உருகி விட்டது.

“நீ வா”, என்று அவள் கையை பிடித்து வெளியே கூப்பிட்டு கொண்டு வந்து, அங்கே வெளியே மரத்தின் அடியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

“நான் ஓடிப்போனவளா என்ன?”, என்று பரிதாபமாக கேட்க……

“ஷ்! அம்மா தெரியாம பேசிட்டாங்க……… நீ எதையும் மனசுல வெச்சிக்காத”, என்று சமாதானப்படுத்தினான்.    

அவனின் வார்த்தைகள் எந்த வகையிலும் அவளை சமாதனப்படுத்தவில்லை…… பொங்கிப் பொங்கி அழ ஆரம்பித்தாள்.

நிஜமாகவே செந்திலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“ராஜி…… ப்ளீஸ் ராஜி…… அழாத”, என்று மீண்டும் மீண்டும் சமாதானப்படுத்திகொண்டிருந்தான். 

Advertisement