Advertisement

அத்தியாயம் பதினேழு:

சீனியப்பன் நடுவில் வந்து தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ யாருமே அறியார். அண்ணாமலையின் மீது கோபத்தோடு பாயப்போனான் செந்தில்.

 ராஜி காணவில்லை என்ற செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தான் செந்தில். தன்னிடம் ஆறுதல் தேடி வந்தவளை தானும் வதைத்து விட்டோமோ என்ற எண்ணமே காரணம்.  

அண்ணாமலையை நேரில் பார்க்கவும் அது எல்லாம் கோபமாக உருமாறி அண்ணாமலை நோக்கி திரும்பியது.

அவனின் ஆவேசத்தை பார்த்த அண்ணாமலை கூட ஒரு நிமிடம் அரண்டு போனார். அவரையறியாமல் பின்னே சென்றார்.

ஆகாஷ் கூட செந்திலின் கோபத்தை பார்த்து நின்று விட்டான். செந்திலுக்கும் ராஜிக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என்று அவன் உள்மனது சொல்ல துவங்கியது.

அது அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியாத அளவுக்கு சோர்வை கொடுத்தது.  

செந்திலை தடுத்த சீனியப்பன் அண்ணாமலையிடம் பேசினார். “நான் இங்கேயே தான் இருக்கேன், பாப்பா இங்க வரலை………. எனக்கு நிச்சயமா தெரியும்”, என்று சொன்னவர்…… “நமக்குள்ள இப்போ சண்டை வேண்டாம், முதல்ல பாப்பாவை தேடுங்க”, என்றார்.

ஆகாஷும் அண்ணாமலையிடம் அதே தான் சொன்னான். “ஒரு வேளை அவ இங்க வந்தா பிரச்சனையில்லை……. எப்படியும் இங்க வர்றதுனால அவளுக்கு ஆபத்து இல்லை…. தனியா போய் வேற எங்கயாவது பிரச்சினையில மாட்டிக்கப் போறா, நீங்க வாங்க….”, என்று அவரை கூட்டிக்கொண்டு போனான்.

எங்கே போய் தேடுவது என்று அண்ணாமலைக்கும் புரியவில்லை…… ஆகாஷிற்க்கும் புரியவில்லை. தேவிகா வேறு இப்படி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார்.

எப்படியும் செந்திலிடம் தான் வந்திருப்பாள் என்று அண்ணாமலை நினைத்தார். ஆனால் அவள் இப்போது அங்கில்லை எனவும் மனதிற்குள் கலவரம் மூண்டது.

எங்கே போயிருப்பாள் என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டார். “தேடலாம் கிடைச்சிடுவா………. கவலைபடாதீங்க”, என்று ஆகாஷ் தான் அவரை தேற்றினான். அவரை தேற்றி விட்டான் தான், ஆனால் அவனுக்குமே எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று புரியவில்லை.

சென்னையில் இருக்கும் தன் தந்தையுடன் என்ன செய்வது என்று பேசினான். அவர் தனக்கு தெரிந்த போலிஸ் நண்பர் ஒருவரிடம் இது பற்றி ஆலோசித்து கூறுவதாக கூறினார்.

அவர் மூலமாக இங்கே லோகலில் இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் பேசினர், எப் ஐ ஆர் போடாமலேயே ராஜியை தேடும் பணி ஆரம்பமானது.

அண்ணாமலைக்கு எங்கே போய் தேடுவது யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை……

செந்திலுக்கு எங்கே தேடுவது என்று தெரியவில்லை. அதுவும் ஹாஸ்பிடலில் இருக்கும் பட்சத்தில் எங்கே போவது. அவர்கள் டிஸ்சார்ஜ் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என்றனர். அப்படியே டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாலும் கையில் இருக்கும் கட்டை மூன்று வாரம் கழித்தே அகற்றுவோம். அதற்கு பிறகு தான் கையை அசைக்க வேண்டும், அதுவரை அசைக்கக் கூடாது என்றனர்.

அசோக்கை அழைத்து அவள் கல்லூரி தோழிகள் யாரிடமாவது கேட்க முடியுமா என்றான்.

அசோக் ஒரு புறம் அவனை நன்றாக திட்டினான். “இப்போ தேடு தேடுன்னா எங்கடா போய் தேடுவோம். நான் அப்போவே சொன்னேன், அவகிட்ட நல்ல விதமா நாலு வார்த்தை பேசுன்னு……. நீ பேசியிருந்தா அந்த பொண்ணுக்கு ஒரு கஷ்டம்ன உடனே உன்னை தேடி வந்திருக்கும். இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு”, என்று அவனை நோக்கி கோபமாக கத்தினான்.

“டேய்! என்னை திட்டுறதை விட்டுட்டு எப்படியாவது அவளை கண்டுபிடிக்கிற வழியை சொல்லுடா”, என்றான் பரிதாபமாக செந்தில்.             

 ஆயிற்று ராஜி காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆயிற்று……. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. இதற்குள் அரசல் புரசலாக அண்ணாமலையின் இன்னொரு வாழ்க்கை உறவுகளுக்கு மத்தியில் பிரபலம் ஆகிற்று.

தேவிகா வேறு கண்விழிப்பதும் மயங்குவதுமாக இருந்தார். அவருடைய பீ பீ யும் சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் வராததால் அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தார்.

அவரைப் பார்க்க வரும் உறவுகளுக்கு மத்தியில் அனிதா தர்மசங்கடப்பட்டு நிற்க வேண்டாம் என்று நினைத்த ஆகாஷ் அவளை சென்னைக்கு அனுப்பி வைத்தான். தேவிகாவை பார்க்க வந்த உறவுகளுக்கு அண்ணாமலைக்கும் அனிதாவிற்கும் தொடர்பு இருப்பது புரிந்தது.

அதுவும் யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்க்காமல் அவரை அப்பா என்றே அழைக்க……. அவன் அவரின் மகனாகவே பாவிக்கப்பட்டான்.  

“ராஜி எங்கே?”, என்று கேட்ட உறவுகளுக்கு அவள் கல்லூரியில் வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருக்கிறாள் என்றே கூறப்பட்டது. அவர்களுக்கு அதை நம்புவது கடினமாக இருந்தது. இருந்தாலும் அண்ணாமலையிடம் என்ன நடக்கிறது என்று கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை.

அதுவுமில்லாமல் தேவிகா இப்படி இருக்கும் சூழ்நிலையில் பெரியவர்களால் கூட அவரிடம் என்ன ஏதென்று கேட்க முடியவில்லை. அண்ணாமலையும் மிகவும்  இறுக்கமாகவே இருந்தார். 

பெண்ணை தொலைத்து விட்டோமே என்ற நினைப்பு அவரை மனதளவில் மிகவும் ஒடுங்கச்செய்தது. மிகவும் தைரியமான அண்ணாமலை அவரின் தைரியம் எல்லாம் தொலைந்து போய் மிகவும் பரிதாபமான நிலையில் தான் இருந்தார்.    

 அவளுடைய கல்லூரியில் கூட அவளுக்கு உடம்பு சரியில்லை, அதனால் நோட்ஸ் வேண்டும் என்ற போர்வையில் ஆகாஷ் அவளின் தோழிகளை கண்டறிந்து அவர்களிடமும் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்தான்.

அங்கேயும் பலன் பூஜ்யமே.

அசோக்கிடமும் செந்தில் அவள் கல்லூரி தோழிகளிடமே விசாரிக்க சொன்னான். “எனக்கு தெரிஞ்சு அவளுக்கு அவங்களை விட்டா யாரும் தெரியாது”, என்றான். 

அது பெண்கள் கல்லூரி என்பதால் அசோக்கால் உள்ளே நுழைய முடியவில்லை.  ஆகாஷை போல திறமையாக பேசி உள்ளே நுழைய தெரியவில்லை. தன்னுடைய தங்கையை அழைத்து வந்து அதன் மூலமாக அவளின் தோழிகளை கண்டறிந்து விசாரித்தான்.

அங்கேயும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இப்படியே நான்கு நாட்கள் ஓடிவிட்டது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

தேவிகாவை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ரூமிற்கு மாற்றினர். தேவிகா அண்ணாமலையிடம் பேசவேயில்லை………. அவர் அண்ணாமலையிடம் பேசிய ஒரே வார்த்தை, “என் பொண்ணை என்கிட்ட கூட்டிட்டு வாங்க”, என்றதுதான்.

அவர் அழக்கூட இல்லை எங்கேயோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார்.

செந்தில் இருக்கும் அதே ஹாஸ்பிடலில் தான் தேவிகாவும் இருந்ததினால் சீனியப்பன் கூட அடிக்கடி  வந்து தேவிகாவை சந்தித்து ஆறுதலாக பேசினார்.

தேவிகா அவரிடம் கூட, “எங்கண்ணே போயிருப்பா”, என்று புலம்பினார். அப்போது கூட அவளின் கல்லூரி வட்டத்தை பற்றி யோசித்து கொண்டிருந்த சீனியப்பன் அவளின் பள்ளி தோழமையை மறந்துவிட்டார். 

அன்று செந்திலுக்கு டிஸ்சார்ஜ் வேறு…….  அதனால் அங்கே உதவுவதற்காக வந்த அசோக், “அவ ஃபிரிண்ட்ஸ்க்கும் ஒண்ணும் தெரியலைடா”, என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

அப்போது தான் சீனியப்பன் ஞாபகம் வர பெற்றவராக……….

“செந்திலு அவளுக்கு ஸ்கூல் ல கூட ஒரு பொண்ணு ரொம்ப ஃபிரண்டு. நம்ம பாப்பா பிளஸ் டூ படிக்கும்போது அந்த பொண்ணோட அக்காக்கு கூட கல்யாணம்னு திருப்பூர் கூட போனோம். அவ்வளவு க்ளோஸ் அந்த பொண்ணோட”.

“அப்போ நம்ம பாப்பா துணைக்கு கூட நான் தான் துணைக்கு போனேன்”, என்றார்.

“ரொம்ப ஃபிரன்ட், இத்தனை நாளா எனக்கு அந்த பொண்ணு ஞாபகத்துல வரல பாரு”, என்று வருத்தப்பட்டார்.

உடனே பரபரத்த செந்தில், “அந்த பொண்ணு எங்க இருக்கப்பா” என்றான்.

“நம்ம ஊரு இல்லை அந்த பொண்ணு ராசிபுரம்ன்னு தெரியும். ஆனா இப்போ அவங்க அங்க இல்லை, திருப்பூர் போயிட்டாங்க. அந்த பொண்ணோட அக்காவை திருப்பூர்ல கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க அந்த கையோட அவங்க திருப்பூர் போயிட்டாங்க.  பாப்பா ஒரு தடவை என்கிட்டே சொல்லியிருக்கு”.

“இப்போ எங்கேன்னு போய் தேடுவோம்பா”, என்றார் மனம் விட்டவனாக…… 

“அவங்க வீடு திருப்பூர்ல எங்கன்னு தெரியாது, ஆனா அவ அக்கா வீடு திருப்பூர்ல தெரியும்….. அவங்க அக்கா கல்யாணத்துக்கு நம்ம பாப்பா போனபோது நான் தான் துணைக்கு போனேன்”.

“கல்யாணத்துக்கு போனதால பையன் வீடு தெரியும்.பையன் வீடு ரொம்ப வசதி, வீட்டு முன்னாடியே பெரிய பந்தல் போட்டு கல்யாணத்தை நடத்தினாங்க”, என்றார்.

“அப்போ இந்த பொண்ணை பத்தி தெரியணும்னா அங்கே போய் கேட்டா தான் தெரியுமா”, என்றான்……..   அங்கே போய் பார்க்கலாம் என்று மனது உந்த……                                         

டிஸ்சார்ஜ் ஆன உடனே அங்கே போகலாம் என்று சொல்லி பரபரத்தான்……..

“மணி பாரு இப்போவே நைட்டு எட்டு. இனிமே நாம அங்க போறதுக்கு எப்படியும் பதினொன்னு பன்னண்டு ஆகிடும்…….. அதனால காலையில போகலாம்”, என்றார் சீனியப்பன்.

“அப்பா! நிச்சயமா கூட்டுட்டு போவீங்க இல்லை”, என்று அவரின் மேல் நம்பிக்கை குறைந்தவனாக கேட்க.

“கட்டாயம்! அது நான் வளர்த்த பொண்ணு! அப்படி அவளை தேடாம விடுவானா!”, என்றார்.

இரவு முழுவதும் உறங்குவதும் விழிப்பதுமாக அரைத்தூக்கத்தில் தான் இருந்தான் செந்தில்……. ஏதாவது அவளை பற்றிய தகவல் தெரிய வேண்டுமே என்று வேண்டிக்கொண்டே.

விடியற் காலை நான்கு மணிக்கெல்லாம் வாடகை காரை வைத்து கொண்டு கிளம்பினார்கள் செந்திலும் சீனியப்பனும் அசோக்குடன்.

அவரை ஒரு வழியாக்கி அந்த நேரத்திலேயே கிளம்ப வைத்துவிட்டான் செந்தில். அன்னபூரணி கூட, “எதுக்குடா இவ்வளவு காலையில, நேத்து தான் ஆசுபத்திரில இருந்து வந்திருக்க………. உடம்புக்கு எதுவும் இழுத்து வெச்சிடாதடா”, என்று சொல்ல சொல்ல கிளம்பினான்.

இப்போதைக்கு அவனுக்கு கிடைத்த ஓரே நம்பிக்கை அவளது பள்ளி தோழிதான்.

உடனே உடனே விவரம் கேட்க வேண்டும் என்று மனம் பரபரபரத்தது. உள் மனது  ஏதாவது தகவல் அந்த பெண்ணிடம் கிடைக்கும் என்று சொன்னது. அவர்கள் அந்த வீட்டை அடைந்த போது மணி ஏழு தான்.

கேட்டில் நின்ற காவலாளியே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டான்.

“யார் நீங்க?….. யாரை பார்க்கணும்?…….. எதுக்கு பார்க்கணும்?……. அம்மாவை பார்க்கணும்னா, அய்யா கிட்ட கேட்கணும்…… அய்யா இப்போ எழுந்திருக்க மாட்டார்…… அவர் எழுந்ததுக்கு அப்புறம் அவர்கிட்ட கேட்டுட்டு உள்ளே விட சொன்னா தான் அனுப்புவேன்……..”, என்றான்.

வேறு வழியில்லாமல் எட்டு மணிவரை  வாசலிலேயே இருந்தனர்.

எட்டு மணிக்கு மேல் அவர்களை உள்ளே அனுமதிக்க…….. அங்கே வீட்டுக்கு முன் இருந்த தோட்டத்தில் ஒரு பெரியவர் பேப்பர் படித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

இவர்கள் அவரிடம் வந்த விவரம் சொல்ல, “மருமக பொண்ணோட தங்கச்சியை பார்க்கணுமா”, என்று யோசனையாய் கேட்டவர்…….. அப்போதும் அந்த பெண்ணின் வீட்டு விலாசம் சொல்லவில்லை.

“இருங்க, அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேன்”, என்றவர் அவரின் மருமகளிடம் சொன்னார்.

விஷயம் கேள்விப்பட்டு வந்த அந்த பெண் தன் மாமனாரின் முன் தயங்கி தயங்கி நின்றாள்.

“என்னமா என்ன விஷயம்”, என்று இவர் கேட்க்க………

“அந்த பொண்ணு ராஜ ராஜேஸ்வரி,  நம்ம லதாவை  தேடிதானுங்க மாமா ஒரு ஐஞ்சு நாளைக்கு முன்னால வந்துச்சுங்க”.

பரபரப்போடு இவர்கள் அந்த பெண் சொல்ல போகும் செய்திக்காக காத்திருக்க……

“ஏதோ கஷ்டத்துல இருக்கன்னு சொல்லியிருக்குங்க……. நம்ம லதா தான் நம்ம பனியன் கம்பனியில ஒரு வேலை போட்டு தர சொன்னா……… நான் தானுங்க அவர்கிட்ட சொல்லி ஒரு வேலை போட்டு குடுக்க சொன்னேனுங்க. நம்மகிட்ட வேலை பார்க்கிற பொண்ணுங்க தங்கியிருக்கிற இடத்துல தானுங்க இருக்கு”, என்று விவரத்தை சொன்னாள்.

“எதுவும் செய்யறதுக்கு முன்னால எங்கிட்ட கேளுங்கன்னு சொன்னா உனக்கும் புரியறதில்லை, உன்ற ஊட்டுக்காரனுக்கும் புரியறதில்லை”, என்று அவரிடம் திட்டு வாங்கியவள்……

இவர்களை பார்த்து, “இப்போ ஒன்பது மணி ஷிப்டுக்கு தான் வருவா…. போனா நீங்க பார்க்கலாம்”, என்று இடம் சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் உடனே விரைந்து அந்த இடம் செல்ல…….. இவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு வேன் வந்து நிற்க……… நிறைய பெண்கள் அதிலிருந்து இறங்கினர்.

இறங்குபவர்களை இவர்களின் மூவரின் கண்களும் அலச………

“நம்ம பாப்பா அங்க இருக்கு”, என்று உணர்ச்சி மிகுதியில் சற்று கத்தியேவிட்டார் சீனியப்பன்.

இறங்கிக் கொண்டிருந்தவர்களில் ராஜ ராஜேஸ்வரியும் இறங்கிக்கொண்டிருந்தாள்…. பார்த்த மூவருக்குமே வாயடைத்து போயிற்று. ஐந்தே நாட்களில் ஒரு பெண்ணால் இவ்வளவு கூட உருக்குலைந்து விட முடியுமா என்பது போல இருந்தாள்.

ராஜி அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகற்றவள் என்று சொல்ல முடியாது. ஒரு தோற்ற பொலிவு இருக்கும், ஒரு நிமிர்வு இருக்கும், செல்வ செழிப்பு கொடுக்ககூடிய கர்வம் இருக்கும்.

இப்போது பார்க்கும் ராஜியில் எதுவும் இல்லை, தோற்ற பொலிவு இல்லை, நடையில் நிமிர்வு இல்லை…… பார்க்கவே பரம ஏழை போல ஒரு தோற்றம்…….. கழுத்திலும் கையிலும் அணிமணிகள் எதுவும் இல்லை……. தங்கம் இல்லாவிட்டால் போகிறது ஒரு பிளாஸ்டிக் கூட இல்லை……. மொத்தத்தில் தோற்றத்தில் ஒரு வெறுமை தெரிந்தது.

உடை மட்டுமே அவளை அடையாளம் காட்டியது. அவளிடம் பழையது எதுவும் இல்லாததால் உடுத்தியிருந்த சேலை மட்டுமே சற்று புதிதாய் இருந்தது.        

ஜீவனற்ற கண்கள்……….. எங்கேயோ பார்த்தபடி இறங்கினாள். சற்று தள்ளி அவளின் பார்வையில் விழக்கூடிய வட்டத்துக்குள் தான் மூவரும் இருந்தனர். ஆனால் அவர்களை அவள் கவனிக்கவே இல்லை. அவர்களை கடந்து அவள் பாட்டிற்கு சென்றாள். 

அவள் திரும்பி பார்க்காததால் அவள் பின்னே சில அடிகள் சென்ற செந்தில்……            

“ராஜி”, என்று அழைக்க……. பட்டென்று திரும்பினாள்………… அந்த க்ஷணத்தில்  அவனின் குரல் அவள் உயிர் வரை தீண்டிச் சென்றது.

சட்டென்று அவளின் கண்களில் இருந்த வெறுமை மாறியது………. “நீ வந்துவிட்டாயா”, என்பது போல ஒரு உயிரை உருக்கும் பார்வை……..

பக்கத்தில் நின்ற அசோக்கோ சீனியப்பனோ அவளின் கண்களுக்கு தெரியவேயில்லை.

அவள் பார்வை முழுவதும் செந்திலை தாங்கியே நின்றது. செந்தில் பார்க்க பார்க்க அவளின் கண்களில் நீர் நிரம்பியது. கைகளை கொண்டு இரண்டு கண்களையும் துடைத்தாள்……….. துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது.

ராஜி ஒரு கோபத்தில் ஒரு ஆத்திரத்தில் வீட்டை விட்டு வந்து, தன் தோழியின் துணை கொண்டு அங்கே வேலைக்கு சேர்ந்து விட்டாள் தான். ஆனால் ஒரு நாள் கூட அவளால் அங்கே இருக்க முடியவில்லை, அது தான் உண்மை.

வீட்டு ஞாபகம்……. அவளின் அன்னையின் ஞாபகம் அதிகம் இருந்தது. கஷ்டப்படாமல் சொகுசாகவே வளர்ந்த விட்ட அவளால் அந்த வேலை பார்க்கும் சூழலோடு ஓட்ட முடியவில்லை.

காலை ஒன்பதில் இருந்து மாலை ஆறு வரை இருந்த அந்த வேலையை அவளால் செய்யவும் முடியவில்லை. செய்யும் மற்ற பெண்களை பார்த்துப் பார்த்து மனதை தேற்றிக்கொண்டு இருந்தாள்.

ஆனால் அவளால் அங்கே இருக்கவே முடியவில்லை. அந்த சூழலில் இருக்கவும் முடியாமல் எங்கே போவது என்று வழியும் தெரியாமல் இருந்தாள்.

இந்த நிலையில் செந்திலை பார்க்கவும்…….. அவளுக்கு சொல்ல முடியாத நிம்மதி.

அது சந்தோஷத்தைக் கொடுக்க…… அவளின் இந்த நிலைமை அவளுக்கு துக்கத்தை கொடுக்க………. இரண்டும் சேர்ந்து அவளின் கண்களில் நீரைப் பொழிய வைத்தது.         

அவளருகில் சென்ற செந்தில், “ஷ்! என்ன இது? நான் தான் வந்துட்டேன் இல்லை…. அழாத”, என்றான்.

“ஒரு வேளை நீங்க வராம போயிருந்தா”, என்றாள் பதிலுக்கு உடைந்த குரலில்.

“அதெப்டி  வராம இருப்பேன்……..   நீ எங்க இருந்தாலும் எப்படியாவது வந்திருப்பேன். கடவுள் உன்னை என் கண்ல நிச்சயம் காட்டியிருப்பார், எனக்கு நம்பிக்கையிருக்கு”, என்றான் அவளுக்கு நம்பிக்கையூட்டும் குரலில்.     

“போகலாமா”,

“எங்கே”,  

“நீ எங்க சொல்றீயோ அங்க போகலாம்”,

“எங்க போகறதுன்னு தெரியாம தான் இங்க வந்து இருக்கேன், திரும்பவும் நீங்க என்கிட்டயே கேட்டா”, என்றாள் கலங்கிய குரலில்.

“அப்போ உங்க வீட்டுக்கு போகமாட்ட”,

“மாட்டேன்”, என்பது போல மறுத்து தலையசைத்தாள்.

“உங்க வீடுன்றது உங்கப்பா மட்டும் இல்லை ராஜி, அம்மா கூட தான். அதை நீ மறக்கலாமா”,

“அவங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை”,

“அதனால வீட்டை விட்டு வந்துடுவியா, அது தப்பு இல்லையா. இப்போ நீ இங்க பாதுகாப்பா இருக்கவும் பிரச்சனையில்லை……. அதுவே விரும்பத்தகாதது ஏதாவது நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்”, என்று சற்று அதட்டினான்.

மீண்டும் அவளின் கண்களில் நீர் கோர்க்க……….

நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்திருந்தனர் அசோக்கும் சீனியப்பனும்.   இருவருக்கு நடுவிலும் தலையிடவில்லை.

கண்களில் மீண்டும் நீர் வழிய……… “இப்போ நான் இங்க இருக்கவா! இல்லை உள்ளே போகவா!”, என்றாள் சற்று ரோஷமாக.

“கோபத்துக்கு மட்டும் கம்மியே இல்லை……… வா போகலாம்”, என்றான் மீண்டும்.

“எங்கே”, என்றாள் மறுபடியும்.

“எங்க வீட்டுக்கு வர்றியா?”,

“அது எப்படி உங்க வீட்டுக்கு வர முடியும்! எங்க அப்பா விட மாட்டாறே!”, என்றாள்.

“உங்கப்பா உன்னை கூப்பிட உரிமையில்லாத மாதிரி செஞ்சிக்கலாம்”, என்றான்.

அவள் புரியாமல் பார்க்க……..

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்றான் நேரடியாக……..

“இவன் என்ன இப்படி பேசுகிறான்”, என்பது போல சீனியப்பன் பார்க்க……….

“பயபுள்ள நேரடியா ப்ரபோஸ் பன்றாண்டா…….. கலக்கறாண்டா, கலக்கறாண்டா”, என்பது போல அசோக் பார்க்க…..

“நீயா பேசியது”, என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்தாள் ராஜி.

“ம்! சொல்லு பண்ணிக்கலாமா”, என்றான் மறுபடியும்.

அவள் திருமணத்தை பற்றி எல்லாம் யோசித்தது கூட இல்லை.  

“நீங்க தான் என்னை லவ் பண்ணவே இல்லைன்னு சொன்னீங்களே”, என்றாள் ராஜி.

“அதனால என்ன பரவாயில்லை! பொண்ணு பையன்னு இருந்தா லவ் பண்ணி லவ் மேரேஜ் தான் பண்ணிக்கனும்னு ஏதாவது இருக்கா என்ன?”, என்று இடைவெளி விட்டவன்…….   

“நாம அரேஞ் பண்ணி, அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்கலாம்”, என்றான் ஒரு சின்ன சிரிப்போடு.

மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் ஏதோ மந்திரம் செய்தது போல குறைவதாய் உணர்ந்தாள்.அவன் வார்த்தைகளிலும் அவன் புன்னகையிலும்……….   

அப்போதும் விடாமல்……….. “நீங்க தான் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க”, என்றாள், அவன் ஆகாஷை திருமணம் செய்ய சொன்னதை மனதில் வைத்து……

“அப்போ எனக்கு நீ இப்படி எல்லாம் பண்ணுவனு தெரியாதே”, என்றான்.

“நான் அம்மா கிட்ட கேட்கணும்”,

“உங்கம்மா கேட்கற நிலைமையில இல்லை”, என்றான்.

“என்ன சொல்றீங்க?”, என்று அவள் கலவரத்தோடு கேட்க……..

“நீ அவங்களை விட்டுட்டு வந்தா……. அவங்க எப்படி நல்லா இருப்பாங்க? அவங்களுக்கு உடம்பு சரியில்லை……. ஹாஸ்பிடலில் இருக்காங்க”,

மறுபடியும் கண்களில் நீர் வழியத் துவங்க……..

“நீ எதிர்ல போய் நின்னா அவங்களுக்கு சரியாயிடும், போகலாமா”, என்றான்.

அம்மாவுக்கு அப்படி என்று கேள்விப்பட்ட பிறகு அவள் கால்கள் எப்படி நிற்கும்……

“போகலாம்”, என்று சொல்லி சுற்றுப்புறத்தை பார்க்க……….. அப்போதுதான் அசோக்கும் சீனியப்பனும் கண்களில் பட்டனர்.

இவர்களும் வந்திருக்கிறார்களா என்பது போல பார்த்தவள் புன்னகைக்க முயன்று தோற்றாள்.

“என்ன பாப்பா! இப்படியா பயமுறுத்துவ! இப்படி வீட்டை விட்டு வரலாமா, ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்ன பண்றது?”,  என்று அவரின் பங்குக்கு அவரும் கேள்வி கேட்டார்.

பிறகு அவளை அழைத்துக்கொண்டு அவள் தங்கியிருக்கும் இடம் வந்தனர், ராஜி  அவளின் உடமைகளை எடுத்து வர உள்ளே போனாள்.

அவள் போன சில நொடிகளில் தன் தந்தையிடம் அவளை திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டான் செந்தில்.

“இது சரிவருமா”, என்று பதில் கேள்வி கேட்டார் சீனியப்பன் அவனிடம்.

“ஏன் பா? அண்ணாமலையை பார்த்துப் பயப்படறீங்களா”,

“அவரை பார்த்து பயம் தான், இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா நீ பார்த்துக்குவேன்னு தைரியம் இருக்கு. நான் நினைச்சி பயப்படறது ராஜியை பத்தி….. ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு! நம்மளோட அது அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்”,

“வசதி வாய்பெல்லாம் தூக்கி எரிஞ்சிட்டு தானே அவ வீட்டை விட்டு வந்திருக்கா”,

“அது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு எடுக்குற முடிவு. ரொம்ப நாள் தங்காது”, என்றார்.

“நான் இப்படியே இருக்க மாட்டேன் பா. என் வசதி வாய்ப்பை நிச்சயமா அதிகப்படுத்திக்குவேன்”, என்றான் உறுதியான குரலில்.

அவருக்கு வேண்டியதும் இந்த வார்த்தைகளே……… திருமணம் செய்வது பெரிதல்ல அந்த பெண்ணை வைத்து காப்பாற்ற வேண்டாமா? இவனோ நிலையாய் ஒரு வேலையிலும் இருப்பது இல்லை……… அந்த கவலை தான் அவருக்கு…….. அதை நேரடியாகவும் அவரால் செந்திலிடம் சொல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் அவனை காயப்படுத்தும் என்று தெரிந்து தான் அதை சொல்லாமல் விடுத்தார். இப்போது அவன் சொன்னது அவருக்கு பெருத்த நிம்மதியை தர……… எல்லாம் சரி வர வேண்டும் என்ற நினைப்புடன்……….. ஒன்றும் பேசாமல் அவனுடைய தோளில் தட்டி அவரின் சம்மதத்தை தெரிவித்தார்.

அவரிடம் பேசிய செந்தில் தன் நண்பனிடம் திரும்பி, “என்ன மச்சி? நான் செய்யறது சரியா”, என்றான்.

பதில் பேசாமல் அவனை அணைத்து விடுவித்தவன்…….. “நீ செய்டா மாப்ள……. நீ என்ன செஞ்சாலும் நான் உன் கூட இருக்கேன்”, என்றான்.

“சரி இப்போ அவளை எங்க கூட்டிட்டு போறோம். என்ன செய்ய போறோம்”, என்றார் சீனியப்பன்.

“ஏதாவது ஒரு கோவில்ல வெச்சு தாலி கட்டி அதுக்கப்புறம் அவங்கம்மாவை பார்க்க கூட்டிட்டு போறேன்பா”, என்றான் செந்தில்.  

“என்ன உடனேவா”,

“ஆமாம்பா! இல்லைனா அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பற மாதிரி வரும். அவ போகமாட்டா………. நம்ம வீட்டுக்கு கல்யாணம் பண்ணாம எப்படி கூட்டிட்டு போறது. அதுவுமில்லாம அவங்கப்பா நிச்சயம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பார்”.

“இவளை கல்யாணம் பண்ணிக்கறது தான் எனக்கு சேப்டி……. இல்லைனா நான் தான் கடத்தி வெச்சேன்னு அந்தாளு சொன்னாலும் சொல்வார்பா……… அப்படி சொல்லலைன்னாலும் அந்த ஆகாஷ் கூட இவ கல்யாணம் உடனடியா நடக்கற மாதிரி ஏதாவது முயற்சி எடுக்கலாம், எதுக்கு சிக்கல்……”,

“என்னைக்கு இருந்தாலும் வரப்போறதை பார்த்து தான் ஆகணும்……… அது இன்னைக்கே இருந்தா என்ன?”, என்றான்.

“உங்கம்மா? அவ என்ன சொல்லுவளோ?”, என்று செந்திலின் அன்னையை நினைத்து சீனியப்பன் தயங்க….

“அவங்களை நீங்க தான்பா சமாளிக்கணும்”, என்று முடித்துக்கொண்டான் செந்தில்.

அடுத்த முக்கியமான பிரச்சனை எப்படி திருமணம் செய்வது என்பதே…….. ஏனென்றால் செந்திலின் கையில் அடிப்பட்டு இருந்ததால், கையில் கட்டு போடப்பட்டு இருந்தது. விரலின் நுனிகள் மட்டும் வெளியே தெரியுமாறு கட்டு இருந்தது. அவனால் விரல்களை அசைக்க முடியாது…….. அசைக்கவும் கூடாது…..

“எப்படிடா தாலி கட்டுவ”, என்றார் சீனியப்பன்.

“ஒரு கையாலேயே கட்டிடுவேன்”  

“எப்படி முடியும்”

“அதுக்காக யார் கழுத்தலயாவது கட்டி ட்ரையலா பார்க்க முடியும்”

“இந்த சிச்சுவேஷன்லையும் உனக்கு நக்கலா….. ஏத்தம்டா உனக்கு……”, என்று அவனை அசோக் கடிய  சற்று அடங்கினான் செந்தில்.

அவளை கூட்டிக்கொண்டு அவசரமாக ஒரு நகை கடைக்கு சென்று அவர்களின் பிரிவில் கட்டும் தாலியை வாங்கி திருப்பூர் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்தனர்.

அங்கே அவர்களை அப்படி எல்லாம் திருமணம் செய்ய முடியாது என்றனர். அதற்கு முன்பே கோவில் நிர்வாகத்திடம் சம்மதம் வாங்கியிருக்க வேண்டும் என்றனர்.

பிறகு அவர்களிடம் ஏதேதோ காரணம் சொல்லி ஒரு வழியாக சம்மதம் வாங்கி…… திருமணதிற்குரிய பணத்தை கட்டி….. அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து…..

ராஜிக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்கத் தான் சரியாக தான் செய்கிறோமா இல்லை தவறு செய்கிறோமா என்ற சஞ்சலமெல்லாம் தோன்ற ஆரம்பித்தது.

அதை உணர்ந்தவன் போல செந்தில்…….. “உனக்கு இந்த கல்யாணத்துல முழு மனசோட சம்மதம் தானே”, என்று கேட்டான்…….

அவளுக்கு முழுமனதோடு சம்மதமா இல்லையா என்று அவளுக்கே தெரியாது……….  வீட்டிற்குப் போகவும் விருப்பம் இல்லை, வேலைக்குப் போகவும் விருப்பம் இல்லை…… எதிலிறிந்தோ தப்பிக்கப் ஆசைப்பட்டு, செந்தில் தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்……… ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில், “சம்மதம்”, என்றே வாய் மொழியாக உரைத்தாள்.

அதன் பிறகு வேலைகளில் ஒரு விரைவு தோன்ற…….. ஒரு அய்யர் மந்திரம் ஓத…… அவசரமாக வளர்க்கப்பட்ட ஹோம குண்டத்தின் முன்…….. மணமக்களுக்குரிய அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் செந்திலும் ராஜியும் அமர்ந்தனர்………  

கோவிலுக்கு வந்தவர்களில் சிலர் சூழ…. அய்யரின், “தாலியைக் கட்டுங்க”, என்ற வார்த்தையை தொடர்ந்து………

ஒற்றை கையால் பின்னி பின்னி மூன்று முடிச்சையும்  செந்தில் சற்று சிரமப்பட்டு தடுமாறி போட்டுவிட்டான், ஆனால் அந்த முடுச்சுக்களை இறுக்க முடியவில்லை.

அங்கே ராஜியின் முகத்தை பார்த்த வயதில் மூத்த ஒரு பெண்மணி அந்த முடிச்சுகளை இறுக்கினார்.    

இப்படியாக ராஜி……… திருமதி ராஜ ராஜேஸ்வரி செந்தில் ஆனாள்.

அசோக் இந்த நிகழ்வுகளையெல்லாம் தன்னுடைய செல் போனில் படம் பிடித்தான்.

அதன் பிறகு அவர்கள் ஊரை நோக்கி கிளம்பும் போது சீனியப்பன் சொல்லத் தயங்கிய வார்த்தைகளை அசோக் தன் நண்பனை நோக்கிச் சொன்னான்.

“கல்யாணம் பண்றது பெருசில்லை செந்திலு, நல்லா வாழ்ந்துக் காட்டனும்”, என்றான்.

“நிச்சயமா”, என்று ஒரு உறுதியோடு செந்தில் சொன்னான் அசோக்கை நோக்கி அல்ல……..  ராஜியை நோக்கி………       

பணக்காரன் ஆகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு ராஜியின் பின்னால் சுற்றியது எல்லாம் அப்போது செந்திலுக்கு நினைவிற்கு வரவே இல்லை. அவனுடைய பார்வையில் உன்னை நன்றாக வைத்திருப்பேன் என்ற உறுதி தெரிந்தது.

அது ராஜிக்கு புரிந்ததோ இல்லையோ சீனியப்பனுக்கும் அசோகிற்கும் நன்கு புரிந்தது. தாங்கள் அவனுக்கு திருமணம் செய்து வைத்து தவறாக எதுவும் செய்துவிடவில்லை என்ற நிம்மதியையும் கொடுத்தது.

அது இதனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற தைரியத்தை கொடுத்தது. அண்ணாமலையை எதிர்கொள்ளத் தயாராகினர்.

Advertisement