Advertisement

அத்தியாயம் பதினைந்து:

ஆகாஷின் குரலில் இருந்த கடுமை ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது……..

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற”, என்றாள் பதிலுக்கு அவளும் கடுமையாக…….

“நீ என் அக்காவை கேள்வி கேட்கற வேலையெல்லாம் வெச்சிக்காத……… உனக்கு ஏதாவது கேட்கணும்னா உங்கப்பாவை கேளு, அதைவிட்டுட்டு…..”, என்றவனால் ஆத்திரத்தில் மேலே பேசவே முடியவில்லை.

இவளுக்கு தான் புத்தியில்லை என்றால் இவ்வளவு பெரிய பெண்ணை மகளாக வைத்திருக்கும் அந்த மனிதனுக்கு எப்படி இன்னொரு பெண்ணுடன் உறவாட முடிந்தது என்ற ஆத்திரம் அவனுக்கு…….

அனிதா ஏதோ பேச வர…….. “நீ அமைதியாயிரு அனி”, என்றான் அவளிடம்.

அவன் சொல்வது அந்த க்ஷணத்தில் சரியாக தோன்றியதால் அமைதியான ராஜி….. தான் இவனின் வண்டியில் ஏறி தப்பு செய்துவிட்டோமோ என்று தோன்ற, “நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்”, என்றாள்.

“ப்ச்! பேசாம வா”, என்றான்.

ஆகாஷ் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல தோன்றினாலும்……. தான் பேசுவதற்கு கோபமாக மறுத்து பேசுவது போல தோன்றினாலும்………. அதில் ஏதோ உரிமை தொனிப்பது போல தோன்றியது ராஜிக்கு.

அது அவளுக்கு பிடிக்கவில்லை. கோபமாக பதில் பேசத் தோன்றினாலும் அவளுக்கு அவனுடன் பேச விருப்பமில்லை. பேச்சும் கூட அவனுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பை ஏற்படுத்தி விடுமோ என்று பயந்தாள். 

ஒருமுறை அவன் திருமணத்தை பற்றி பேசியது அபஸ்வரம் போல அப்போது அவளுக்கு நினைவில் வந்தது…..   

அதிலும் அவளுக்கு பிடித்தமில்லை……  

 அவள் பதில் பேசாமல் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போதே கதவு திறக்க முயற்சிக்க அது திறப்பேனா என்றது.

“சென்ட்ரல் லாக் போட்டிருக்கேன்……. உங்க வீடு வர்ற வரைக்கும் திறக்காது”, என்றான் ஆகாஷ் அசால்டாக.

அவள் மேலே யோசிக்க தேவையில்லாமல் வீடும் வந்துவிட்டது.

கதவு லாக் நீங்கியவுடனே அவள் இறங்கி வீட்டினுள் சென்றுவிட்டாள். காரிலிருந்த மற்றவர்கள் வீட்டுக்குள் வருகிறார்களா இல்லையா என்று பார்க்கக் கூட இல்லை.

காலை வேலையில் இவள் வந்ததை பார்த்ததும் அண்ணாமலை……. “என்ன ராஜிம்மா அதுக்குள்ள வந்துட்ட”, என்று சற்று பதறி அவளின் அருகில் போக முயற்சிக்க…  அவரை பார்வையாலேயே விலக்கி மேலே சென்றாள்.

அதற்குள் ஆகாஷ் உள்ளே வந்திருந்தான். இவன் எப்போது வந்தான்…… வருவது போல சொல்லவில்லையே என்ற யோசனையோடே அவனை வரவேற்றார் அண்ணாமலை.

“வா ஆகாஷ்! எப்போ வந்தே”,

“இப்போதான்”, என்றவன் அனிதாவும் நந்தனும் வந்திருப்பதை பற்றி அவரிடம் எதுவும் சொல்லவில்லை.

“நான் அக்காவை பார்க்கணும்”, என்றான்.

தேவிகாவை பற்றி தான் அவன் பேசுகிறான் என்று புரிந்த அண்ணாமலை…. “அவ மேல இருக்கா! வா போகலாம்!”, என்று அவரும் சேர்ந்து உடன் வரப் போக………

“இல்லை! நான் அவங்களை தனியா பார்க்கணும்…….. நீங்க இங்கயே இருங்க”, என்று சொல்லியவன் தனியாக மேலே போனான்.

“இவன் எதுக்கு தனியா பார்க்கணும் தெரியலையே…………”, என்று எண்ணியவாறே செய்யும் வகை தெரியாதவராக அமர்ந்து கொண்டார். அவர் சற்றும் நினைக்கவில்லை அனிதாவும் நந்தனும் வந்திருப்பர் என்று அதனால் உள்ளயே அமர்ந்து கொண்டார்.

இவன் எதற்கு வந்திருப்பான் என்று தெரிந்து கொள்ள அனிதாவிற்கு போன் செய்தார். இரண்டு முறை அழைத்த பிறகு அது எடுக்கப்படாமலேயே போக நம்பரை பார்த்து அவளாக அழைப்பாள் என்று  விட்டுவிட்டார்.  

ஆகாஷ் மேலே வந்தான். ஹாலில் யாரும் இல்லை.

அமர்ந்து கொண்டான். உள்ளே சமையல் அறையில் தேவிகாவும் ராஜியும் இருப்பது தெரிந்தது. ராஜி விஷயத்தை தேவிகாவிடம் சொல்லியிருக்க அவர் வெளியே என்ன நடக்கிறது என்று பார்பதற்காக வந்தார்.

அவர்கள் கீழே தான் இருப்பார்கள் என்றெண்ணி தேவிகா வெளியே வந்தார். அவர் ஆகாஷை ஹாலில் எதிர்பார்க்கவில்லை.

இறுக்கமான முகத்துடன் அமர்ந்து இருந்தான். தேவிகாவை பார்த்ததும் எழுந்து நின்றான். ராஜியும் அங்கே வந்தாள்.

தேவிகாவும் எதுவும் பேசவில்லை ஆகாஷும் எதுவும் பேசவில்லை. இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது போல ராஜி பார்த்திருக்க…….

“நீ கொஞ்சம் உள்ள போறியா…… நான் அக்காவோட பேசணும்”, என்றான்.

“தோடா! யாரு? யாருக்கு அக்கா?”, என்றாள் கிண்டலாக ராஜி.

“தோ பார்! நம்ம அப்புறம் சண்டை போடலாம், இப்போ நீ கிளம்பு”, என்றான்.

“ஏன் ஏதாவது பேசி எங்கம்மாவை ஏமாத்தவா”, என்றாள்……..

ஆகாஷ் பேச வர…….. அவனை பேச விடாமல்……. “என்ன தைரியம் இருந்தா விஷயம் தெரிஞ்சும் ஒண்ணும் தெரியாத மாதிரி எங்க வீட்ல வந்து நீங்க தங்கி எங்கம்மா கையாலேயே சாப்பிட்டு இருப்பீங்க…….. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா”, என்று ராஜி படபடவென பொறிய ஆரம்பிக்க……….

அவளை மேலே பேச விடாமல், “ப்ளீஸ் உள்ள போ…….. இதுல முடிவெடுக்க வேண்டியவங்க அவங்க நீ இப்போவே சண்டையை ஆரம்பிக்காத போ”, என்றான்.

அதெல்லாம் முடியாது என்பது போல ராஜி நிற்க…… அவளை கையை பிடித்து உள்ளே கூட்டிப் போக ஆகாஷ் அருகில் நெருங்க……… அவனின் செய்கையை ராஜியும் தேவிகாவும் எதிர்ப்பார்க்கவில்லை.

“என்ன பண்றீங்க”, என்று ராஜி பின்னடைய…….. தேவிகா பேசும்முன்னே, “ப்ளீஸ் உள்ள போ”, என்றான் மன்றாடிய குரலில் மறுபடியும்.

“நீ போ!”, என்பது போல தேவிகாவும் ராஜியை பார்க்க………. வேறு வழியில்லாமல் ராஜி உள்ளே சென்றாள்.

என்ன தான் பேசுவான் இவன் என்பது போல தேவிகா பார்க்க……. ஆகாஷ் எதுவுமே பேசவில்லை……..

அப்படியே நெடுஞ்ஜாண் கிடையாக அவரின் காலடியில் விழுந்தான்….. “ப்ளீஸ் என் அக்காவுக்கு ஒரு மன்னிப்பை கொடுங்களேன்”, என்று வேண்டிக்கொண்டே……..

இதை சத்தியமாக தேவிகா எதிர்பார்க்கவில்லை…….

“ஐய்யோ தம்பி! என்ன பண்றீங்க! எழுந்திருங்க!”, என்றார் பதறியவராக……..

ஆகாஷ் அசையவேயில்லை….. “நீங்க மன்னிப்பேன்னு சொல்லுங்க”, என்றான் திரும்பவும்.

‘தம்பி எழுந்திருங்க தம்பி! நம்ம எதுவா இருந்தாலும் பேசலாம்! எழுந்திருங்க!”, என்று அவர் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

பின்பு தான் ஆகாஷ் அந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“நான் எங்கக்கா பண்ணினது சரின்னு சொல்லலை! தப்புதான்! இருந்தாலும் அவளை மன்னிச்சிடுங்களேன்”, என்றான்.

தேவிகாவின் நின்றதலியே நிற்கும் ஸ்திரமான இதயம் ஆகாஷின் செய்கையால் கரைய ஆரம்பித்தது. அவனின் இந்த செய்கை அவனின் அக்காவுக்காக செய்தது அவரை மிகவும் நெகிழ்த்தி இருந்தது.

“அவளுக்கு உடம்பு சரியில்லை. அவ செய்கை தப்புன்னு அவளுக்கே தெரியும். அதனால அவளுக்கு பயங்கர டிப்ரஷன். கொஞ்ச நாள் அதுக்கு ட்ரீட்மென்ட் கூட எடுத்துக்கிட்டா…… இப்போ குழந்தை உருவாகி இருக்கறதால அவ அந்த மாத்திரைகளையும் சாப்பிட கூடாது, அது குழந்தையை பாதிக்கும்…… நீங்க அவளை மன்னிசீங்கன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா, அவளுக்கு அது பெரிய நிம்மதியைக் கொடுக்கும்”, என்றான்.

“என்னை என்ன தம்பி செய்ய சொல்றீங்க, என் நிலைமையில உங்கக்கா இருந்திருந்தா இப்படி தான் பேசுவீங்களா”,

“இப்போ கூட நான் என் அக்கா செய்யறது சரின்னு கட்டாயம் சொல்லலை. இனிமே நடந்ததை மாத்த முடியாது. அவ வயித்துல இருக்கிற குழந்தையும் நாலு மாசம் அதையும் எதுவும் பண்ண முடியாது”, என்றான்.

“அவ உங்களை பார்க்கணும்னு வந்திருக்கா, வெளிய கார்லயே இருக்கா…. நான் இங்க கூட்டிட்டு வரவா”, என்றான் கெஞ்சல் குரலில்.

அவனின் அன்பு அவனின் அக்காவின் மேல் தேவிகாவை வியக்க வைத்தது.

“உங்கக்கா மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கிற நீங்க, அவளுக்கு முதலிலேயே ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுத்திருந்தா இப்படி அவ பாதை மாறியிருக்கா மாட்டா இல்லை”, என்றார் தேவிகா.

“இல்லை என் பையன் போதும் எனக்குன்னு கிட்ட தட்ட பத்து வருஷமா இருந்துட்டா….. திடீர்ன்னு இப்படி ஒருத்தர் அவளோட வாழ்கையில வருவார்ன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. விட்டு விலகற சூழ்நிலை எல்லாம் கைமீறி போச்சு. இப்போ அதை எப்படி சரி செய்யனும்னு மட்டும் தான் பார்க்க முடியும்”, என்றான்.

“அவ சென்னையிலயே தான் இருப்பா….. இங்க வரமாட்டா உங்களை எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்க மாட்டா…… நான் செய்யறது சரியா தப்பான்னு கூட தெரியலை…….. ஏதாவது பண்ணுங்களேன்”, என்றான் மன்றாடிய குரலில். 

“இல்லை! உங்களால அவளை சகிச்சிக்கவே முடியாதுன்னு நினைசீங்கன்னா நான் இப்படியே அவளை கூட்டிட்டு போயிடறேன். அவ தலையெழுத்து எப்படியோ நடக்கட்டும்”, என்றான்.     

“எங்க வீட்டு ராணி அவ…….. ரொம்ப செல்லமா வளர்ந்தா……… எங்க வீட்ல  தேர்ந்தெடுத்துக்கொடுத்த வாழ்க்கையும் ரெண்டு மாசத்துல முடிஞ்சு போச்சு! நான் அவளை விட ஆறு வயசு சின்னவன்….. எனக்கும் அப்போ ஒண்ணும் அதிகமா தெரியலை………. நாங்க எவ்வளவோ பேசியும் மறுபடியும் ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைச்சி கொடுக்க எங்களால முடியலை……..”,

“அவளா தேர்ந்தெடுத்த வாழ்க்கையும் முறையில்லை.  நான் கூட தேறிட்டேன். எங்கப்பா நிலைகுலைஞ்சு போயிட்டார். அவளோட கல்யாணம் அவளுக்கு தேவைன்றதை விட எங்கப்பாவுக்கும் நிறைய தேவை……… எதுவா இருந்தாலும் முடிவு உங்க கையில தான்………”,   

இப்படி பேசுபவனிடம் என்ன பேசுவது என்பது தெரியாமல் தடுமாறி நின்றார்.

அவரின் பதிலுக்காக ஆகாஷ் பொறுமையாக காத்திருந்தான்………

எதுவாக இருந்தாலும் வயிற்றில் பிள்ளையோடு ஒரு பெண் வெளியே நிற்கிறாள். சரியோ தவறோ முதலில் அவளை உள்ளே கூப்பிடுவோம் என்று நினைத்தார் தேவிகா….

“நானும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வைத்திருக்கிறேனே! என்ன பாவம் செய்தேனோ என் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. இனியும் ஏதாவது செய்து என் பிள்ளையையும் அது பாதித்து விட்டால்……..?”, என்பது போல தான் அவரின் சிந்தனை ஓடியது.

“கூட்டிட்டு வாங்க”, என்றார் தேவிகா.

“தேங்க்யூ! தேங்க்யூ வெரி மச்!”, என்றவன்……… “நான் அவளை கூட்டிட்டு வரேன்”, என்றபடி கீழே விரைந்தான்.

அவன் சென்றதும் ராஜியை அழைத்தார் தேவிகா…. அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்……..

கீழே சென்றவன் வெளியே போகப்போக……. அவனை பார்த்த அண்ணாமலை என்ன? என்று கேட்குமுன்னே அவன் வெளியே விரைந்தான்.

எங்கே இவ்வளவு அவசரமாக போகிறான் இவன் என்பது போல அவன் பின்னோடு போக…….

அவன் காரை நெருங்குவது தெரிந்தது. என்ன செய்கிறான் என்பது போல பார்க்க ஆகாஷ் கார் கதவை திறக்க……. முதலில் நந்தன் இறங்கினான்…… அவனின் பின்னே அனிதா இறங்க……. அவர்களை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் எதற்கு இங்கே வந்திருக்கிறார்கள் என்று அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

இருந்தாலும் சமாளித்துக்கொண்டார்…….

அவர்களை பார்த்ததும் அவரும் காருக்கு அருகில் விரைந்தார். அவரை பார்த்ததும் நந்தன் ஓடி வந்து அவரை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனின் தலையை தடவியவாறே……… “நந்து கண்ணா எப்போ வந்த? கார்லயே ஏன் இருந்த? வீட்டுக்குள்ள வர்றதுதானே”, என்றார்.

பேச்சு நந்தனிடம் இருந்தாலும் பார்வை அனிதாவிடமே இருந்தது.

“மம்மி தான் நாம கொஞ்ச நேரம் கார்லயே இருக்கலாம்னு சொன்னாங்க அப்பா”, என்றான்.

ஆமாம்! அவரை அப்பா என்று தான் நந்தன் அழைத்தான்.

அங்கேயும் இங்கேயும் வேலையாட்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் அவரால் மேலே பேசமுடியவில்லை………

“உள்ள வாங்க”, என்றழைத்துக்கொண்டு போனார். நந்தன் அவரை பற்றிய கையை விடவேயில்லை.

மேலே சென்றால் தேவிகா இவர்களை பார்த்து என்ன சொல்வாளோ என்று பயந்து கொண்டே தான் மேலே அழைத்து சென்றார்.

இவர்களை பார்த்தும், “வாங்க”, என்ற தேவிகா உபசரிக்க…….. அண்ணாமலை சற்று ஆச்சர்யமாக பார்த்தார். இருந்தாலும் என்ன வரப்போகிறதோ என்று பயமாக தான் இருந்தது.

ராஜிக்கு நடப்பது எதுவும் பிடிக்கவில்லை……… அவளின் அம்மா அவர்களை உபசரிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் நந்தன் அவளின் தந்தையின் கையை உரிமையாக பற்றியிருப்பது இன்னுமே பிடிக்கவில்லை.

அவரை முறைத்துப் பார்த்தாள். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அண்ணாமலை இல்லை.

தேவிகா பார்வையால் அனிதாவை ஆராய்ந்தார். தனக்கும் அவளுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று தோன்றியது. அதனால் தான் அண்ணாமலை அவளிடம் வீழ்ந்து விட்டாரோ என்று தோன்றியது.

நிச்சயமாக அழகி என்று சொல்லும்படியாக தான் அனிதாவின் தோற்றம் இருந்தது. அதே சமயம் ஒரு பரிதாபமும் அவளிடம் தோன்றியது. என்ன இல்லை இந்த பெண்ணிடம்? அழகில்லையா? படிப்பில்லையா? பணமில்லையா?, கணவனை இறந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது இல்லையா? இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.               

 பார்ப்பதற்கு அனிதா அப்போது களைத்து தெரிந்தாள் தேவிகாவின் கண்களுக்கு. வயிறும் சற்று மேடிட ஆரம்பித்து இருந்தது. நாலு மாசம் என்றான் ஆகாஷ். ஆனால் அதற்கும் மேலே இருக்கும் போல இருக்கிறதே……. வயிறே மேடிட ஆரம்பித்து விட்டதே என்று அவளை யோசனையோடு பார்த்தார்.

அங்கே அத்தனை பேர் இருந்தாலும் ஒரு கனமான மௌனம் நிலவியது. ஏனோ அண்ணாமலையை வைத்துக்கொண்டு  அனிதாவோடு பேச தேவிகாவிற்கு விருப்பம் இல்லை.

“நீங்க கீழ போய் வேலையை பாருங்க”, என்று தேவிகா அண்ணாமலையிடம் நேரடியாகவே சொன்னார். தான் இங்கே இருப்பதை தேவிகா விரும்பவில்லை என்று நன்றாக புரிந்தது. தனியாக விட்டுப் போகவும் அவருக்கு விருப்பமில்லை. தயங்கி தயங்கி நிற்க… ‘நீங்க போங்க”, என்றே இப்போது சொன்னார் தேவிகா.

மனமேயில்லாமல் அண்ணாமலை கீழே போகப்போக…… “இருங்கப்பா நானும் வர்றேன்”, என்று நந்தன் அவருடனே கீழே போனான்.

அவன் அப்பா என்றழைத்தது ராஜிக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது. தேவிகாவின் முகம் பார்க்க…….. அவர் அதை எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.                              

அது இன்னும் ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது.

“உட்காருங்க”, என்று உபசரித்தவர்……… அனிதாவின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பவள் என்பதை கருத்தில் கொண்டு, “என்ன சாப்பிடற”, என்றார்.

அனிதா மறுத்து எதுவும் பேசவில்லை…….. “நீங்க எது கொடுத்தாலும்”, என்றாள்.

அவர் உள்ளே போக ராஜியும் அவருடனே போனவள்…….. “அந்தம்மா தான் எது கொடுத்தாலும் சாப்பிடுவேன்னு சொல்லுதே, கொஞ்சம் விஷத்தை கொடுக்க வேண்டியது தானே”, என்றாள் ராஜி.

“ஷ்! என்ன பாப்பா இது? ஒரு பிள்ளைதாச்சி பொண்ணை பார்த்து இப்படியா பேசுவ! ரொம்ப தப்பு! மொதல்ல சாமிகிட்ட தெரியாம சொல்லிட்டேன்னு மன்னிப்பு கேளு!”, என்றார் கோபமாக……..

“விட்டா அவளை இங்கேயே வெச்சு நல்லா கவனிச்சு பிரசவம் பார்த்து அனுப்புவ போல நீ”, என்றாள் பதிலுக்கு கோபமாக ராஜி.        

“கவலைப்படாத அவ தம்பி அவளை அருமையா பார்த்துக்கறான். அந்த நிலைமை எல்லாம் அவளுக்கு வர விடமாட்டான்”, என்றார்.

“நீ பேசறதே எனக்கு பிடிக்கலைம்மா! அவங்க நாக்கை பிடிங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்கறதை விட்டுட்டு நடு வீட்ல உட்கார வெச்சிட்டு உபசரிச்சிட்டு இருக்க…..”,

“நான் கேட்டா மட்டும் நடந்தது இல்லைன்னு ஆகிடுமா………. விடு ஆக வேண்டியதை பார்ப்போம்”, என்றார்.

“என்ன ஆகவேண்டியது”, என்றாள் ராஜி கடுமையாக….

“பாப்பா! அவங்க வெளில உட்கார்ந்து இருக்காங்க! அந்த குட்டி பையன் என்ன சாப்பிடுவான்னு கேளேன்”, என்றார்.

“அதெல்லாம் என்னால முடியாது”, என்றாள்.

“குட்டி பையனாம், குட்டி பையன்! என் அப்பாவை அப்பான்னு எவ்வளவு உரிமையா கூட்டிட்டு போறான்…….. வந்ததுல இருந்து அவர் கையை கூட விடலை……. அவன் என்ன சாபிடறான்னு நான் கேட்கணுமா”,

“பாப்பா! கேளு பாப்பா!”, என்ற தேவிகாவின் வேண்டுதல்கள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.

“முடியாதுன்னா முடியாது”, என்று விட்டாள்.

தேவிகா வெளியே வந்து, “குட்டி பையன்  என்ன சாப்பிடுவான்?”, என்று ஆகாஷிடம் கேட்க……….

“பால் சாப்பிடுவான்”, என்றான் ஆகாஷ்.

எல்லோருக்கும் தேவையானதை கலந்து தேவிகாவே எடுத்து வந்தார்………….. ராஜி எந்த உதவியும் செய்யவில்லை.

ஆகாஷின் கண்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறவில்லை.

“நந்து”, என்று ஆகாஷ் கூப்பிட………. உடனே மேலே ஏறி வந்த நந்தனிடம் பால் டம்ளரை தேவிகா நீட்ட……… “தேங்க்ஸ் பெரியம்மா”, என்றான் பதிலுக்கு நந்தன்.

“என்ன பெரியம்மாவா……..”,

தேவிகா நந்தனை பார்க்க…….. “நான் தான் சொல்லிகொடுத்தேன் அக்கா”, என்றாள் அனிதா…

“என்ன அக்காவா…….”,

இந்த உறவு முறைகளை கேட்ட ராஜியால் பொறுக்கவே முடியவில்லை. அவளின் ரூமிற்குள் போய் அடைந்துக் கொண்டாள்……

“இந்தம்மா உப்பு போட்டு சாப்பிடுதா இல்லையானு தெரியலை…… கொஞ்சம் கூட ரோஷமே இல்லை…….. என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்கு புரியலையே….. இவங்க உறவை ஒத்துக்குடுமா…….”, மனதில் மிகுந்த கவலையாகிப் போயிற்று ராஜிக்கு……..    

ராஜி உள்ளே போனதுமே தேவிகாவிற்கும் அனிதாவிற்கும் தனிமை கொடுக்க விரும்பி ஆகாஷ் ஏதோ வேலையிருப்பது போல நந்தனை அழைத்துக்கொண்டு கீழே வந்துவிட்டான்.

அனிதா எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தடுமாறிக்கொண்டு இருக்க……… தேவிக்காவே கேட்டார்………. “எத்தனாவது மாசம் இப்போ”, என்றார்.

“நாலு”, என்று அனிதா சொல்ல………

“அதுக்குள்ள வயிறு தெரிய ஆரம்பிச்சிடுச்சே”,

“அது நாலு முடியவே போகுது. எனக்கு தெரியவேயில்லை, நான் கவனிக்கவும் இல்லை, மூணு மாசத்துல தான் நானே கவனிச்சேன்”, என்றாள் அனிதா.

அதன்பிறகு தேவிகா எதுவும் பேசவில்லை……..

தயங்கி தயங்கி அனிதா, “எங்களுக்குள்ள இந்த உறவு……….”, என்று விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கும் போதே தேவிகா……… “நான் அதை பத்தி எதுவும் தெரிஞ்சிக்க விரும்பலை, அதைப் பத்தி பேசவேண்டாம்”, என்றார்.

“ஐ அம் சாரி! இது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க”, என்றாள் அனிதா.

“மன்னிச்சிட்டா நடந்ததெல்லாம் இல்லைன்னு ஆகிடுமா…….”, என்று நிறுத்தியவர்…. “என் கணவர் மேல தப்பிருக்கும் போது  நான் மத்தவங்களை என்ன பேசறது”, என்றார் தேவிகா விரக்தியாக……..

“நான் என்ன பண்ணட்டும் இப்போ”, என்றாள் அனிதா.

“என்னை கேட்டா”,

“நான் கல்யாணத்தை அவர்கிட்ட கேட்கலை”, என்றாள் அனிதா.

“நீ விரும்பினாலும் விரும்பாட்டியும் அவர் உன்னை கட்டாயம் கல்யாணம் செஞ்சிப்பார்……………. எனக்கு தெரியும்! நான் முடிஞ்ச வரைக்கும் அதை தடுக்க பார்த்தேன்! அதுக்கு கூட வழியில்லாம பண்ணிட்டான் உன் தம்பி”,

“ஆகாஷ் உங்களை மிரட்டினானா”,

“ச்சே! ச்சே! மிரட்டி இருந்தா போடான்னு சொல்லியிருப்பனே…. அவன் தான் கால்ல விழறானே”, என்றார் தேவிகா.

இது முற்றிலும் புதிய செய்தி அனிதாவிற்கு……….. “என்ன? என்ன சொல்றீங்க?”, என்றவளுக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது.  

“அவன் வசதியென்ன? படிப்பென்ன? அந்தஸ்தென்ன……..தனக்காக என்னவெல்லாம் செய்கிறான் அவன்”, என்று ஆகாஷை நினைத்து கண்கள் கலங்கியது அனிதாவிற்கு.

“கொடுத்து வெச்சிருக்க நீ……… நல்ல உடன்பிறப்பு. எனக்கு இந்த மாதிரி எல்லாம் உடன் பிறப்பு இல்லை. இருந்தா இவருக்கு இப்படியெல்லாம் எனக்கு துரோகம் செய்ய தைரியம் வந்திருக்காதோ என்னவோ”,  என்ற தேவிகா………. “என்கையில எதுவும் இல்லை! என்னவோ பண்ணுங்க! ஆனா இங்க இந்த ஊருல எதுவும் நடக்கக்கூடாது……… என் பொண்ணு வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்”, என்றார்.

“எங்க ஆகாஷ்க்கு அவளை கொடுத்துடுங்களேன், அவளை நல்லா பார்த்துக்குவான். நீங்க கவலைப்படவேண்டியதே இல்லை. என் தம்பின்றதால நான் இதை சொல்லலை. ஆகாஷ் எந்த பொண்ணுக்கும் ரொம்ப தகுதியான மாப்பிள்ளை”, என்று நேரடியாக அனிதா தேவிகாவிடம் சம்மந்தம் பேச………. அவர் “ஆங்”, என்று அதிர்ந்து விழித்தார்.  

Advertisement