Advertisement

அத்தியாயம் பதினான்கு:

ராஜிக்கும் செந்திலின் நினைவுகளே……… அவளுக்கு நன்றாக புரிந்தது செந்தில் தன்னை தவிர்க்கிறான என்று . அவனே தவிர்க்கிறானே நீ எதற்காக இப்படி அவன் பின்னோடு போகிறாய் என்று மனம் ஒரு புறம் சொல்ல………. மற்றொரு புறம் மனம்அதையெல்லாம் காதிலேயே போடாமல் அவனின் நினைவுகளிலேயே உழன்றது.

தந்தை ஒரு புறம் எதிர்ப்பை காட்ட செந்திலின் புறம் சாய்ந்த மனம்……. செந்திலின் விலகலால் இன்னும் அவன் புறம் சாய்ந்தது. இரண்டு நாட்கள் போராடி அவனுக்கு போன் செய்யாமல் நேரடியாக போய் பார்க்காமல் இருந்தாள்.

மூன்றாவது நாள் அவளால் முடியவில்லை……. அவளின் டிரைவர் அவளை காலேஜில் இறக்கி விட்டு வண்டி எடுத்து போகும்வரை பார்த்திருந்தவள் அவன் போய்விட்டான் என்று தெரிந்ததுமே செந்தில் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடல் நோக்கி கிளம்பினாள்.

அங்கே அவள் சென்றபோது அவளின் அதிர்ஷ்டம் செந்திலின் ரூமில் யாரும் இல்லை. கதவை தட்டி உள்ளே நுழைந்த பின் தான் யாரும் இல்லாததை பார்த்தாள்.

இவளை செந்தில் எதிர்பார்க்கவேயில்லை.

அவளை திகைத்து பார்த்தான். வரவேண்டாம் என்று தான் சொன்னதால் ரோஷப்பட்டு வராமல் இருப்பாள் என்று தான் நினைத்திருந்தான். இப்படி வந்து நிற்பாள் என்று எதிர் பார்க்கவில்லை.

முதலில் திகைப்பை காட்டிய அவனின் பார்வை பின்பு சற்று கடுப்பை காட்டியது. ராஜிக்கு செந்திலின் பார்வை வித்தியாசங்கள் புரிந்தாலும் அதிகம் அதை கருத்தில் கொள்ளவில்லை.  

“எப்படி இருக்கீங்க……. இப்போ உடம்பு பரவாயில்லையா”, என்று அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“பரவாயில்லை”, என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

“ஏன் என்னை பார்த்து பேசக்கூட அவ்வளவு கஷ்டமா இருக்கா”, என்றாள் பட்டென்று.

என்ன பதில் சொல்வது என்று செந்திலுக்கு புரியவில்லை. இப்படி நேரடி கேள்விகளை அவன் ராஜியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. 

“அதான் இங்க என்னை பார்க்க வராதன்னு சொல்றேன்………. திரும்ப திரும்ப வந்து நின்னா நான் என்ன செய்வேன்”.

“ஏன் வரக்கூடாது”,

“வரக்கூடாதுன்னா……. வரக்கூடாது”, என்றான் கடுமையாக……..

அவனின் கடுமையில் ராஜிக்கு அவளையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது. அவளின் நீர் நிறைந்த கண்களை பார்த்தவன் அவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.

“ராஜி! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! உங்கப்பாவுக்கு நீ என்னை பார்க்க வர்றது தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்………. மறுபடியும் எனக்கு தான் சிக்கல்”,

“ஏன்? எங்கப்பாவை பார்த்து உங்களுக்கு பயமா”,

“அது அப்படியில்லை ராஜி………. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட்டுக்க வேண்டாமேன்னு தான்”,.

“அப்போ நான் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனையா”,

“ப்ச்! புரிஞ்சிக்கோ ராஜி! இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது. இப்போ எதுக்கு நீ என்னை பார்க்கணும்”,

“நீங்க தான் போன்ல கூட என்கிட்டே பேசமாட்டேன்றீங்களே…… அப்புறம் நான் என்ன பண்ணட்டும்”,

“எதுக்கு பார்க்கணும்? என்ன பேசணும்?”,

“நீங்க……… நீங்க தான் என்னை காப்பாதினிங்க”,

“சரி! அதுக்கு தான் ஒரு தடவை நீ வந்து பார்த்த……. நன்றி சொல்லிட்டு போயிட்ட…… அதுக்கப்புறமும் ஏன் நீ என்னை பார்க்கணும்……… வீணா உன் பேர் தான் கெடும்……”,

“இத்தனை நாளா தினமும் நீங்க என் பின்னாடி வந்ததை எல்லாம் யாரும் தப்பா பேசமாட்டங்களா”,

“அது நான் அறியாமையில செஞ்ச தவறு ராஜி…… அதுக்காக நான் உன்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன்”,

“அப்போ என்கிட்டே ஐ லவ் யூ சொன்னதும் என்பின்னாடி வந்ததும் இவனுக்கு தவறா”, என்ற எண்ணம் அவளின் மனதில் ஓடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

அதை கேட்டும் விட்டாள்…….. “உங்களுக்கு என்னை பிடிக்கவேயில்லையா? அப்புறம் ஏன் என்கிட்டே ஐ லவ் யூ சொன்னீங்க?”, என்றாள் குரலில நிறைய தடுமாற்றம் இருந்தது………. இல்லை என்று சொல்லிவிடாதே என்ற மன்றாடல் இருந்தது.

எப்படி சொல்லி அவளுக்கு புரியவைப்பது என்று செந்திலுக்கு புரியவில்லை. அவளின் மனம் நோக பேசவும் அவனுக்கு இஷ்டமில்லை.

“நீங்க ஐ லவ் யூ சொன்னது சொன்னதுதானே……. அது எப்படி இல்லைன்னு ஆகும்”, என்றாள் திரும்பவும்.

“கல்யாணம் பண்ணி ஒண்ணா வாழ்ந்த புருஷன் பொண்டாட்டியே நிமிஷத்துல பிரிஞ்சிடறாங்க……. இதுல நான் ஒரு ஐ லவ் யூ சொன்னதை பிடிச்சிட்டு எதுக்கு எல்லாரும் தொங்கறீங்கன்னு புரியலை”. 

“இப்போ நான் ஐ லவ் யூ சொன்னதுக்கும் நீ இங்க வர்றதுக்கும் என்ன சம்பந்தம். நீ என்னை லவ் பண்றியா”, என்றான் செந்தில் அவளிடம் நேரடியாக……..

அவள் தடுமாறவும் இல்லை, யோசிக்கவும் இல்லை…….. “தெரியலை”, என்றாள் தெளிவாக……… இந்த கேள்வியை அவளுக்குள்ளே கேட்டு பதில் தெரியாமல் நின்றது போல இருந்தது அவளின் பதில்.

“இது சரிவராது ராஜி………. உனக்கு இப்போ நான் உன்னை காப்பாதினேன்னு என் மேல ஒரு சாப்ட் கார்னர். அது உன் மனசை அலைபாய விடுது”,

“இருக்கலாம்…… எனக்கு தெரியலை”, என்றாள்.

“உனக்காக தான் சொல்றேன்……… உங்கப்பாக்கு நீ வந்து என்னை பார்த்தேன்னு தெரிஞ்சது நிறைய பிரச்சனை பண்ணுவார்”.

“பண்ணட்டும், எனக்கு ஒண்ணும் பயமில்லை”, என்றாள் அவளின் குரலிலேயே அவரை பிடிக்காத தன்மை வெளிப்பட்டது.

“உங்கப்பாவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா…….. நான் அன்னைக்கு கூட பார்த்தேன். ஏன் எல்லார்கிட்டயும் சண்டை போடற அனுசரிச்சு போ”, என்றான்.

அவன் தன்னை எல்லோரிடமும் சண்டை போடுகிறவள் என்று சொன்னவுடனே ராஜிக்கு கோபம் வந்தது……..

“நான் யாரோடெல்லாம் சண்டை போட்டு பார்த்திருக்கீங்க”, என்றாள் கண்களில் நீரோடு ரோஷமாக………

“ப்ச்! கோபிக்காத! என்னோட சண்டை போட்டிருக்கிற…….. இப்போ உங்கப்பாவோட சண்டை போடற”,

“உங்களோட சண்டை போட்டேன்னா……… அப்போ நீங்க என் பின்னாடி வந்தது பிடிக்கலை, போட்டேன்………. எங்கப்பாவோட நான் சண்டையெல்லாம் போடலையே, நான் அவரைவிட்டு விலகிட்டேன்”, என்றாள்.

“என்ன ஒரு சாதாரண விஷயத்துக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசற நீ… விலகிட்டேன் அது இதுன்னு……..”, என்றான் கண்டிக்கும் குரலில்……..

“எது? எது? சாதாரண விஷயம்……… எங்கப்பா செஞ்சது சாதாரண விஷயமா…… ஆம்பளைங்க இல்லையா? அதனால அவங்களுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க”,

“விஷயம் என்னன்னே தெரியாது? அப்புறம் நான் எப்படி அவருக்கு சப்போர்ட் பண்றேன்னு பேசற…….. என்ன விஷயம்னு சொல்லு முதல்ல”,

“அது…….”, என்று கோபமாக ஆரம்பித்தவள்…….. “ப்ச்! விடுங்க!”, என்றாள். தன்னுடைய தந்தையின் செயலை கடை பரப்ப அவள் விரும்பவில்லை.

ஆனால் அவள், “ப்ச்! விடுங்க!”, என்று சொன்னதிலேயே ஒரு சோகம், ஒரு கோபம், என்பதைவிட ஒரு விரக்தி இருந்தது……. அவளும் ஆளே மிகுந்த டல்லாக தெரிந்தாள்…. ஏதோ அவளுக்கு பிரச்சனை என்று செந்திலால் உணர முடிந்தது…. எப்படியோ அவள் போகட்டும் என்றும் அவனால் அவளை விடமுடியவில்லை.

“என்ன ஏதாவது பிரச்சனையா?”, என்றான்.

அவள் அமைதியாகவே இருக்க…….    

“நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்……… நம்பி சொல்லு! மனசுல வெச்சு குழப்பிக்காத”, என்றான்.

அவள் அமைதியாகவே இருந்தாள்.

“யார்கிட்டயாவது சொன்னா மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் சொல்லு”, என்றான் மறுபடியும்.

அவனின் குரலில் தெரிந்த பரிவு அவளையும் மீறி அவனிடம் விஷயத்தை சொல்ல வைத்தது.

கேட்ட செந்திலுக்கு அதிர்ச்சி என்பதைவிட தான் சந்தேகப்பட்ட மாதிரியே ஆகிவிட்டதே என்று தான் இருந்தது.

இந்த விஷயத்தில் என்ன மாதிரியான ஆறுதல் சொல்ல முடியும் என்றும் அவனுக்கு தெரியவில்லை

விஷயம் சொல்லி முடிந்தும் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவியது அங்கே.

அந்த பிரச்சனையை பற்றி தான் எதுவும் பேசுவது சரிவராது என்றே தோன்றியது. அடுத்தவர் வாழ்க்கையை விமர்சிக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அது ராஜியின் தந்தையாக இருந்தாலும்……….  

“உன்னோட இந்த பிரச்சனையும் உன் மனசை என் மேல திசை திருப்பி விட்டிருக்கும் ராஜி….. அதான் நீயென்னை பார்க்க வரச்சொல்லி மனசு சொல்லுது….. நீ பழைய ராஜியா இருந்தா நீ என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டே……… நல்லா யோசிச்சு பார் உனக்கே புரியும்”,

“அதே மாதிரி தான் உங்கப்பா விஷயமும் நடந்தது நடந்துடிச்சி….. இதுல உன்னைவிட அதிகமா பாதிக்கபட்டிருக்கிறது உங்கம்மா…….. அவங்களே பொறுமையா இந்த விஷயத்தை அணுகும் போது நீயேன் உன் மனசை போட்டு குழப்பிக்கற…… நீ ரொம்ப செல்லமா வளர்ந்துட்ட…. உனக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் புதுசு. அதனால கண்டதையும் நினைக்காம உன் வேலையை பார்க்கக் கத்துக்கோ”,

“அந்த ஆகாஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டா பண்ணிக்கோ தப்பேயில்லை…. நான் பார்த்த வரைக்கும் ரொம்ப நல்ல பையனா தான் தெரியறாங்க… அதைவிட நிறைய சம்பாதிக்கறாங்க போல……… அவங்க வைச்சிருக்கிற கார்லயே தெரியுது…..”,

“அவ்வளவு சொகுசான கார்ல போறதை விட்டுட்டு ஒரு ஓட்டை டீ வீ எஸ் பிப்டி ல என்கூட போக உன்னாலயே முடியாது…… பேசறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும் ஆனா செயல்ன்னு வரும்போது அது ரொம்ப கஷ்டம்………”,

“நம்ம உண்மை, நம்பிக்கை, நேர்மை, நாணயம், காதல், கல்யாணம், அது, இதுன்னு எவ்வளவோ பேசலாம்……… ஆனா வாழ்க்கை அப்படின்னு வரும்போது இதையெல்லாம் விட என்னை பொருத்தவரை வசதி வாய்ப்பு மிக முக்கியம்….”,

“அதோடவே வாழ்ந்து வளர்ந்துட்ட உன்னால…… அது இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டம்”, 

“அதுவும் நமக்குள்ள காதல் அந்த மாதிரி எதாவது இருந்தா பரவாயில்லை……… அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை…… இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்ததால…… நான் உன்னை காப்பாதினேன்னு உன் மனசுல ஆழ பதிஞ்சிருக்கிறதால வந்த ஈர்ப்பு தான் இது”, என்று பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.  

அவளும் அதை மனதினுள் உள்வாங்கியது போல தான் தோன்றியது……. ஆனால் அவள் முகத்தில் இருந்து எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

“நான் சொல்றது புரியுதா ராஜி, வீட்ல உன்னை ஆகாஷை கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ணிக்கோ”, என்றான்.

“எப்படி? எப்படி? எங்கம்மாவுக்கு துரோகம் பண்ணின ஒருத்தங்களை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்”,

“ஆகாஷ் துரோகம் பண்ணினான்னு உனக்கு தெரியுமா…….. அவங்கக்காக அவன் பரிஞ்சு பேசலாம்……. அவனோட சூழ்நிலை அப்படியா கூட இருக்கலாம்…….. ஆனா அதைப் பத்தி நமக்கு தெரியாது…… ஏன்னா நம்ம ரெண்டு பேருக்குமே கூட பொறந்தவங்க இல்லை…… “, என்றான் ஆகாஷின் நிலைமையை சரியாக கணித்து.

கேட்ட ராஜிக்கு எரிச்சல் மிகுந்தது……. “தோ பாரு! உனக்கும் எனக்கும் சரிவராதுன்னு சொல்லிட்ட அதோட நிறுத்திக்கோ………. நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கனும்றதை பத்தியெல்லாம் நீ பேசாத”, என்றாள் கோபமாக.

“இந்த மாதிரி எடுத்தெரிஞ்சு பேசற உன்னோட குணம் நமக்குள்ள சரிவராது”, என்றான்.

அது அவளை மிகவும் காயப்படுத்தியது… “அப்போ உனக்கு என் மேல இஷ்டம் இல்லை, அப்படிதானே”, என்றாள்.

“இல்லை”, என்றான் தீர்மானமாக…….  

ஒரு நிமிடம் ராஜி யோசித்தாள்……. “தான் எதற்கு வந்தோம், இவன் என்ன பேசிக்கொண்டு இருக்கிறான், அப்படி இவன் பின்னால் போகவேண்டிய அவசியம் எனக்கென்ன வந்தது? பெரிய இவன் மாதிரி எனக்கு அட்வைசாக கொடுத்து தள்ளிக்கொண்டு இருக்கிறான்”,.

நினைக்கும் போதே முகத்தில் ஒரு கடுமை ஏறியது……    

அவளையே பார்த்துக்கொண்டிருந்த செந்திலுக்கு அவளின் முக மாறுதல்கள் நன்றாக தெரிந்தது… எதற்கு இவ்வளவு கடுமை என்று அவனுக்கு புரியவில்லை…..    

ராஜி என்று செந்தில் மறுபடியும் பேச ஆரம்பிக்க……

“பேசறது எல்லாம் பேசிட்டீங்க……… இனிமே நமக்குள்ள பேசறதுக்கு ஒண்ணும் இல்லை………”, என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காது விருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்…           

அவர்கள் பேச ஆரம்பித்த சில நிமிடத்திலேயே அசோக் வந்துவிட்டான்…….. ரூமின் உள் ராஜி இருப்பதை பார்த்ததுமே சத்தமில்லாமல் வெளியிலேயே இருந்து கொண்டான்.   

அவன் வெளியே வந்த ராஜியை பார்த்து புன்னகைத்தான்…….

பதிலுக்கு ராஜியும் அவனை பார்த்து புன்னகைக்க முயன்றாள்……… ஆனால் புன்னகை வரவில்லை…… ஏனோ அழுகை வரும்போல இருந்தது.

கண்ணை கரித்துக்கொண்டு வந்தது, அவனிடம் ஒரு தலையசைவில் விடைபெற்று வந்தாள்…

அவள் வரும்போது எதிரே சீனியப்பனும் அன்னபூரணியும் ஊரிலிருந்து செந்திலுக்கு உணவு எடுத்துக்கொண்டு அப்போது தான் வந்தனர்.

ராஜிக்கு அவர்கள் எதிரே வந்தது கூட தெரியவில்லை….. கண்களில் இருந்த நீர் மறைத்தது.

அன்னபூரணி தான் முதலில் அவளை பார்த்தார். “என்னங்க அந்த பொண்ணு”, என்று அவளை சீனியப்பனிடம் காட்டினார்.

அவள் அழுதுகொண்டே வருவது போல தெரிந்தது சீனியப்பனுக்கு…… அவள் இவர்களை கவனிக்காமல் செல்ல…….. “பாப்பா”, என்றார் சீனியப்பன்…..

சட்டென்று கண்களை துடைத்து திரும்பி பார்த்தாள் ராஜி…….

ராஜியை பார்த்ததும் சீனியப்பன் ஏதோ பேச வர……… “இன்னும் நீங்களும் ஏன் வந்தேன்னு கேட்காதீங்க……… தெரியாம வந்துட்டேன்…….. சரியா?”, என்று அவரிடம் படபடவென்று பொரிந்து சென்றுவிட்டாள்.

அவள் அவ்வாறு சொன்னதிலேயே செந்திலுக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் என்று இருவருக்கும் புரிந்தது.

உள்ளே சென்றவர்கள் செந்திலிடம்……… “ஏண்டா பாப்பா அழுதுட்டே போகுது”, என்றார் சீனியப்பன்.

“அழுதுட்டேவா போறா”, என்றான் செந்தில். மனதினுள் அவனையறியாமல் ஒரு தவிப்பு.  

“ஆமாம்டா அழுதுட்டே தான் போறா”, என்றார்.

அதைகேட்டவுடனே செந்திலுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.  

“நீ ஏதாவது திட்டுனியா அவளை”,

“இல்லையேப்பா”,

“பார்க்க வராதன்னு சொன்னியா”,

“ஆமாம்”,

“என்னடா இது இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதை வேற நீ இழுத்து விட்டுட்டு இருக்க………. அவங்கப்பா எல்லாம் உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார்டா”,

“யாருக்கு கல்யாணம்”, என்றான்.

“நீயும் பாப்பாவும் தானேடா காதலிக்கறீங்க”,

“இல்லையேப்பா அப்படி எல்லாம் எதுவும் இல்லை”,

“அப்புறம் ஏண்டா பாப்பா உன்னை பார்க்க வருது…. நீ பார்க்க வராதேன்னு சொன்னா அழுதுட்டு போகுது”,  

“அது நான் அவளை காப்பாத்தினேன்னு அப்பா”,

“நீ அந்த பொண்ணு பின்னாடி சுத்தியிருக்குற”,

“உங்களுக்கு எப்படி தெரியும்”, என்றான்.

“எப்படியோ தெரியும்! ஆனா சுத்துனியா இல்லையா”,

“அது அப்ப”,

“எப்பவோ சுத்தினது இல்லைன்னு ஆகிடுமா”,

“இப்போ என்ன சொல்ல வர்றீங்க”,

“இதெல்லாம் சரிவராது விட்டுடு”, என்றார்.

“விட்டுட்டேன்”, என்றான் செந்தில்.

இதைகேட்டுகொண்டிருந்த அசோக் அவனை முறைத்து பார்த்தான்.

செந்தில் அவனின் புறம் பார்வையை திருப்பவேயில்லை…….. அசோக் கண்டிப்பாக அவனை திட்டுவான் என்று தெரியும்….

இந்த வார்த்தையை கேட்டதும் அசோக் கோபமாக வெளியேற போக….

“அசோக்”, என்று அவனை அழைத்து அவனிடம் சமாதானம் கூற முற்பட்டான் செந்தில்.   

ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த ராஜிக்கு காலேஜிற்கு போக மனமில்லை. பஸ் மிஸ் பண்ணிட்டேன் என்று சொன்னால் காலேஜில் அனுமதிப்பார்கள் தான், இருந்தாலும் அவளுக்கு போக மனமில்லை.

திரும்ப ஊருக்கு செல்ல முடிவெடுத்து பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டாள்…..

அவள் ஊரில் சென்று இறங்கி ஒரு இரண்டு நடை தான் நடந்து இருப்பாள்….  அவளருகில் ஒரு கார் வந்து நின்றது……… அந்த காரை பார்த்தவுடனே அவளுக்கு அது யாருடைய கார் என்று தெரிந்துவிட்டது…..

அது ஆகாஷின் கார்…..

“ஏறு ராஜி”, என்றான்…….

“இல்லை, நான் நடந்து வர்றேன்”, என்றாள் பட்டென்று….

“ப்ளீஸ் ஏறு! நம்ம சண்டையை வீட்ல போய் வெச்சிக்கலாம்”, என்றான்.

“எப்படி? எப்படி உன்னால ஒன்னுமே நடக்காத மாதிரி எங்க வீட்டுக்கு வர முடியுது?”, என்றாள்……..

“ஏறு ராஜி”, என்றான் திரும்பவும்……

அப்போது தான் அவனை நன்றாக பார்த்தாள்….. அவனின் அருகில் யாரோ ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான்…….

இவள் அந்த சிறுவனை பார்க்கவும்…….. இவளை பார்த்து அந்த சிறுவன் ஆர்வமாய் புன்னகைத்தான்.

கள்ளமில்லா மழலை சிரிப்பு………

ராஜி யாரிவன் என்பது போல பார்த்துக்கொண்டு இருக்கும் போதே……. “நந்து நீ பின்னாடி உட்கார்ந்துக்கோ! அக்கா இங்க உட்காருவாங்க”, என்றான்.

அதை கேட்டதும் நந்தன் சமர்த்தாக இறங்கி போய் பின்னால் கதவை திறந்து ஏறி அமர்ந்து கொண்டான்.  

“ராஜி ஏறு!”, என்று மறுபடியும் அவளைக் கட்டாயப்படுத்தினான் ஆகாஷ்.

அதற்குள் இரண்டொருவர் தங்களை கவனிப்பது போல தோன்ற வேறு வழியில்லாமல் ஏறினாள்.

அவள் ஏறி அமர்ந்ததும் தான் பார்த்தாள், பின்னால் அந்த சிறுவனோடு ஒரு பெண்ணும் அமர்ந்திருப்பதை…….. இவள் திரும்பி பார்ப்பதை பார்த்ததும், “எப்படியிருக்கிற ராஜி”, என்றாள் அந்த பெண்.

அவளுக்கு பதில் சொல்லாமல், “யார் இந்த பெண்”, என்று ஆராய்ச்சியில் இறங்கினாள் ராஜி……..

ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க தோற்றம்……. நல்ல நிறம்…… அழகான முகம்……… பார்த்தவுடனே ஸ்நேகிதத்தை ஏற்படுத்திக்கொள்ள தூண்டும் தோற்றம் தான்…… அவளை பார்த்தவுடன் ராஜியின் மனதில் ஏதோ சந்தேகம் தோன்ற, “யாரிவங்க”, என்றாள் ஆகாஷை பார்த்து……

ஒரு நொடி தாங்கியவன்…….. “என் அக்கா”, என்றான்.

ராஜிக்கு உடனே யார் என்று புரிந்தது…….. கண்மண் தெரியாத கோபம் அவளை ஆக்ரமிக்க ஆரம்பிக்க……..

“இங்க எதுக்கு வர்றாங்க”,

“உங்கம்மாவை பார்க்கணுமாம்”,

“எதுக்கு பார்க்கணும்”,

“அது அவளை தான் கேட்கணும்”, என்றான்.

“எதுக்கு எங்கம்மாவை பார்க்கணும்………”, என்றாள் உடனே அனிதாவை திரும்பி பார்த்து……

அனிதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாற…..

“அவளுக்கு உங்கம்மாவை பார்த்து மன்னிப்பு கேட்கணுமாம்”, என்று ஆகாஷ் அனிதாவுக்காக பதில் சொன்னான்.

“மன்னிப்பு கேட்டா நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா…..”,

“மன்னிப்பு கேட்கறது அவளோட திருப்திக்காக……. ஒரு வேளை அதனால உங்கம்மா மனசுக்கு நிம்மதி கொடுக்க முடியுமான்னு பார்க்கறதுக்காக………… மத்தபடி நடந்தது நடந்ததுதான் ராஜி……… இனிமே எல்லாம் அதை மாத்த முடியாது…… மாத்தவும் நான் விடமாட்டேன்”, என்றான் ஆகாஷ் கடுமையான குரலில்……  

Advertisement