Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

என்ன தான் வேகமாக போனாலும் செல்லும் தூரத்தை கடந்து தானே ஆகவேண்டும். அவர்கள் சேலத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆயிற்று. அங்குள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையை அடைந்தனர்.

இவனின் நிலைமையை சொன்னவுடனே வேகமாக வந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து கொண்டு போனர்.   

அப்போது தான் அசோகிற்கு ஞாபகம் வந்தது………. “அப்பா, அவன்கிட்ட பணம் இருந்தது…….. அங்க கடையில அதை குடுத்தானா”,

“இல்லையேப்பா”, என்றார்.

உடனே தூக்கி போனவர்களை நிறுத்தி அவன் பாக்கெட்டை பார்க்க……… அங்கே பணம் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு விட்டான் அசோக். செந்திலுக்கு முதலுதவி உடனடியாக நடந்தது.

பணத்திற்கு என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த சீனியப்பனுக்கு அதை பார்த்ததும் தான் சற்று நிம்மதி ஆகிற்று.

“கைல பணம் இல்லையே……….. இந்த நேரத்துக்கு என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”, என்றார்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, “டாக்டர் கூப்பிடுறார்”, என்று ஆள் வந்து சொல்ல இருவரும் சென்றனர்.

அவர்களை பார்த்த டாக்டர்……… “எப்படி ஆச்சு”, என்றார்.

“மீன் தொட்டிக்குள்ள கையை  விட்டுட்டானுங்க”,

“எப்படி”,

“வேற ஒருத்தங்க தெரியாம விழப்போனாங்க……….. அவங்களை தள்ளப் போய் இவன் கையை அது மேல வேகமா விடவும் அது உடைஞ்சு இவன் கையை கிழிச்சிடுஞ்சுங்க”. 

“உடனே ஆபரேஷன் பண்ணனும்………. கைல நிறைய இடத்துல கண்ணாடி கிழிச்சு இருக்கு………… என்னென்ன அதனால பாதிக்கப்பட்டிருக்குன்னு பார்த்தா தான் தெரியும். முடிஞ்சவரைக்கும் எல்லாத்தையும் சரி பண்ணமுயற்சி பண்றோம்…………. இருந்தாலும் எங்களால எதுவும் சொல்ல முடியாது. நரம்பு கட்டாகியிருக்கலாம் இல்லை டெண்டன் கட்டாகியிருக்கலாம்…….”,

“அதனால என்ன ஆகுங்க சார்”, என்றார் சீனியப்பன் கலங்கி போனவறாக……

“கையோட செயல்பாடு பாதிக்கும்”, என்றார் டாக்டர்.

“இப்போதைக்கு பேச நேரம் இல்லை……… நீங்க சொன்னா தான் நான் பிளாஸ்டிக் சர்ஜனை வர சொல்லணும். எங்களோட  சேர்ந்து அவரும் தான் இதை பண்ணுவார். உங்களுக்கு இதுக்கெல்லாம் சம்மதம்னா சொல்லுங்க”,

“எதுக்கெல்லாம் சார்”,  

“அதாங்க கையோட செயல்பாடு……….. எந்தளவுக்கு வரும்னு சொல்லமுடியாது……. சம்மதம்னா ஆபரேஷன் பண்றோம்……….. எழுதி கையெழுத்து போட்டு குடுங்க”, என்றார்.

“போடுங்க அப்பா………. இது ஆபரேஷன் பண்ணும் போது எல்லா ஆசுபத்திரிலையும் வாங்கறது தான்”, என்றான் அசோக்.

அவர்கள், “சரி”, என்று சொன்னவுடனேயே அவர்கள் முன் ஒரு பாரம் நீட்டபட்டு அதில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.

“ரிசெப்சன்ல அம்பதாயிரம் ரூபா கட்டிடுங்க”, என்றனர்.

கையில் பணமிருந்தால் உடனே கட்ட……….. அவர்களும் உடனே சிகிச்சையை ஆரம்பித்தனர்.

கிட்ட தட்ட ஐந்து மணி நேர ஆபரேஷன்…… டாக்டர்களே இவ்வளவு சீரியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி மூன்று இடங்களில் கண்ணாடி துகள்கள் கிழித்திருந்தது……… அதை எடுப்பது மட்டுமல்லாமல் கிழித்த இடங்களை தைக்க வேறு வேண்டி இருந்தது.

ரத்த நாளங்கள், நரம்புகள், தசைகள் என்று ஏகத்துக்கும் சேதமாகி இருந்தது. முடிந்தவரை நன்றாகவே அதை சரி படுத்த முனைந்தனர்.

இங்கே சீனியப்பனுக்கு அசோகிற்க்கும் பதட்டம் ஏறிக்கொண்டு இருந்தது. உயிருக்கு ஆபத்து இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும். இருந்தாலும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று இருவருக்குமே புரியவில்லை.

இதற்குள் சீனியப்பன் அவரின் மனைவி அன்னபூரணிக்கு அழைத்து சொல்லியிருந்தார். நிறைய சொல்லி பயமுறுத்தவில்லை……… செந்திலுக்கு கையில் எதிர்பாராமல் அடிப்பட்டு விட்டது. அவனை சேலம் ஆசுபத்திரிக்கு அழைத்து வந்திருக்கிறோம்……….. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஒருவாறாக தேற்றி இருந்தார். இல்லையென்றால் அன்னபூரணி ஏகத்துக்கும் கவலைப் படுவார் என்று தெரியும்.

அது நிஜமாகவே கவலைப்படும் விஷயம் என்று சீனியப்பனுக்கு இன்னும் சரியாக புரியவில்லை. 

ஐந்து மணி நேரம் ஐந்து யுகங்களாய் கழிந்தது செந்திலின் தந்தைக்கு……..

டாக்டர்கள் ஆபரேஷன் முடித்து வெளியே வந்தவர்கள்……….. “எங்களால முடிஞ்ச வரைக்கும் சரி செஞ்சிருக்கோம்”, என்றனர்.

சீனியப்பனாலும் அசோகாலும் செந்திலை பார்க்க முடியவில்லை………… அவனை அப்படியே ஐ சீ யு கொண்டு சென்று விட்டனர்.

மணி விடியற்காலை மூன்று என்றது. அங்கே இருந்த பெஞ்சிலேயே ஆளுக்கு ஒரு பக்கமாக உறங்கினர் அசோக்கும் சீனியப்பனும்.

ஐந்து மணி ஆனா உடனேயே அசோக்கை எழுப்பிய சீனியப்பன், “அசோக்கு நீ போய் அவங்க வண்டியை விட்டுட்டு செந்தில் அம்மாவை கூட்டிட்டு வந்துடு! அப்புறம் உங்களை விட்டுட்டு தான் நான் பேங்கு போயி பணம் எடுத்துட்டு வரணும்”, என்றார்.

கூடவே, “உனக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே”, என்றார்.

“என்னப்பா இப்படி கேட்டுடீங்க……..  செந்திலுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா………. அவன் சரியாகி வர்றவரைக்கும் நீங்களே வேண்டாம்னாலும் நான் இங்க தான் இருப்பேன்”, என்றான் அசோக்.

பின்பு சீனியப்பன் சொன்ன மாதிரி அண்ணாமலையின் வண்டியை அவன் கொண்டு போய் விட்ட போது மணி காலை ஆறரை…

“என்ன ஆச்சு”, என்றார் அண்ணாமலை.

“இருபத்தி மூணு எடத்துல கிழிச்சிருக்காம்…… உள்ளேயும் நிறைய சேதாரமாயிருக்கும் போல……. அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணினாங்க……. அப்படியே ஐ சி யு க்கு கூட்டிட்டு போயிட்டாங்க”, என்று நடந்ததையெல்லாம் பெரிய கதையாக சொன்னான் அசோக்.

இவ்வளவு சீரியசாக இருக்கும் என்று அண்ணாமலையே எதிர்பார்க்கவில்லை. 

அசோக் சென்று விட அண்ணாமலை உள்ளே வந்தார்…….. வந்தவரிடம் தேவிகா, “செந்திலுக்கு எப்படி இருக்கு”, என்று கேட்டார். அவரின் பதிலுக்காக அங்கே ராஜியும் ஆர்வமாய் காத்திருப்பதை பார்த்த அண்ணாமலைக்கு எல்லா விவரங்களையும் சொல்ல பிடிக்கவில்லை. 

“ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்களாம்”,  என்று மட்டும் சொல்லி சென்றுவிட்டார். ராஜி நேற்று இரவில் இருந்தே சரியாக உறங்கவில்லை. செந்திலின் கைக்கு என்னவாயிற்றோ என்ற பதட்டத்திலேயே இருந்தாள்.

அவளுக்கு தேவையான விவரங்கள் அண்ணாமலையின் வாயிலாக கிடைக்கவில்லை. எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறான் என்றும் தெரியவில்லை. எப்படி யாரிடம் தெரிந்து கொள்வது என்றும் தெரியவில்லை…………. மனம் அடித்துக்கொண்டது.

சீனியப்பன் நம்பர் அம்மாவிடம் இருக்கும் என்று தெரியும். தந்தை குளிக்க போகும்வரை காத்திருந்துவிட்டு அவர் சென்றதும் சீனியப்பன் நம்பர் கேட்டாள்.

“எதுக்கும்மா”, என்றார் தேவிகா……

“என்னம்மா எனக்காக அடிப்பட்டு இருக்காங்க…… எப்படி இருக்குன்னு கூட கேட்க வேண்டாமா”, என்றாள்.

“நேத்தே பிரச்சனை ராஜி………. அப்பாக்கு தெரிஞ்சா கோவிச்சுக்குவாங்க”,

“அப்பாக்கு தெரிஞ்சா தானே அவருக்கு தெரியாம நான் பார்த்துக்கறேன்”,

“அது தப்புப் பாப்பா”,

“எது தப்பு? அவர் நமக்கு தெரியாம எவ்வளவு பெரிய வேலை செஞ்சிருக்கார் ……அதோட ஒப்பிட்டா இதெல்லாம் ஒண்ணுமேயில்லை நீ குடு”, என்றாள்.

மகள் பிடிவாதக்காரி என்று தெரியும் தேவிகாவிற்கு…….. தான் சொல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவள் தெரிந்துக்கொள்வாள் என்று தெரியும். அதற்கு தானே கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தவர் நம்பரை அவளிடம் கொடுத்தார்.

நம்பரை வாங்கி கையில் வைத்துக்கொண்டவள்…….. “நீ இப்போ இந்த நம்பருக்கு போன் பண்ணி…….. எப்படியிருக்காங்க எந்த ஹாஸ்பிடல்ன்னு கேட்கற”, என்றாள்.

அவளுக்கு எப்படியாவது செந்திலைப் பற்றி தெரிந்துக்கொண்டே ஆகவேண்டி இருந்தது.

“வேண்டாம் பாப்பா! நேத்தே ஏதோ பேசப்போய் தான் இப்படி ஆகிடுச்சு….. அப்பாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்”, என்றார் திரும்பவும்.

“அவர் இப்படி இருக்கும்போதே நீ அவர் கோவிச்சுக்குவார்ன்னு சொல்ற……. இன்னும் அவர் மட்டும் சரியா இருந்தார்னா உன்னை கையில பிடிக்க முடியாது. இத்தனை வருஷம் நம்ம கிட்ட வேலை பார்த்தவர் பையன்னு கூட பார்க்காத…….. உன் பொண்ணை அடிபடாம காப்பாத்த போய் தானே இப்படி ஆச்சு. இல்லைன்னா இந்த நேரம் அவர் கையோட நிலைமை என் முகத்துக்கு வந்திருக்கும்……… யோசிச்சுப் பாரு! என் முகமே சிதைஞ்சு போயிருக்கும்……… அந்த கவலை கூட இல்லையா உனக்கு”, என்று அதட்டினாள்.

அவள் சொல்வது முற்றிலும் உண்மை என்றுணர்ந்த தேவிகா சீனியப்பனுக்கு அழைத்தார்

“அண்ணா, செந்தில் எப்படியிருக்கான்”, என்றார்.

“எங்களுக்கே தெரியலைம்மா! ஆபரேஷன் முடிஞ்ச உடனேயே ஐ சி யு கொண்டு போயிட்டாங்க……… காலையில என்னை பார்க்க மட்டும் விட்டாங்க……. அப்போ அவன் தூங்கிட்டு இருந்தானம்மா”, என்றார்.

“என்ன ஆபரேஷனா”, என்றார் தேவிகா. அவர் என்னவோ கையில் இருந்த கண்ணாடி துண்டுகளை அகற்ற ஆசுபதிரியில் சேர்த்திருப்பார் என்று நினைத்தால் இப்படி எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஆபரேஷனா”, என்று அம்மா கேட்டதுமே பயந்து விட்டாள் ராஜி…….. என்னவோ ஏதோவென்று……..

பின்பு நடந்த விவரங்களை எல்லாம் சீனியப்பன் தேவிகாவிடம் சொல்ல…… “எந்த ஆசுபத்திரி”, என்று கேட்டு போனை வைத்தார்.

அவர் போனை வைக்கவும் அண்ணாமலை வரவும் சரியாக இருந்தது. அதனால் ராஜியால் என்ன விவரம் என்று கேட்டறிய முடியவில்லை. தந்தை மேல் எரிச்சலாக வந்தது. 

“யாரு போன்ல”, என்றார் அண்ணாமலை தேவிகாவிடம்.

“சீனியப்பண்ணா”,

“அவர் கூப்பிட்டு இருந்தாரா?”,

“இல்லை! நான் கூப்பிட்டேன். நம்ம பொண்ணை அடிபடாம காப்பாத்தியிருக்கான் அவர் பையன்…….. அவன் எப்படி இருக்கான்னு கூடக் கேட்க கூடாதா என்ன ?”,

“அது அவனா இழுத்து விட்டுகிட்டது……. நாம என்ன செய்ய முடியும். அவன் அப்படி வெளில பேசாம இருந்தா நான் ஏன் அவனை விசாரிக்க போறேன்…….. அதைவிட இவ நடுவுல வராம இருந்திருந்தா இப்படி ஒரு நிகழ்ச்சியே நடந்திருக்காது…….. அந்த பையனும் அடிப்பட்டு இருக்க மாட்டான்”.

தன் தந்தை தன்னை குறை சொல்வதை பொறுக்காத ராஜி….. பதிலுக்கு அவளின், “அன்னையிடம் நான் நடுவுல போனதால அப்படி நடக்கலை…….. இவர் என்னை இழுத்து விடவும் தான் அப்படி நடந்தது…….. அப்போ யார் மேல தப்பு”, என்றாள்.

இதுவரை அவளின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அவளின் அப்பா இப்போது நேரடியாக ராஜியிடம்………. “ஆமா! நாங்க அந்த பையனை கேள்வி கேட்டுட்டு இருந்தா………… உன்னை யாரு நடுவுல வரசொன்னது”, என்றார் கோபமாக.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று ராஜிக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவளுக்கே தெரியவில்லை. அவளின் தந்தை அவனை அடித்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் ஒரு அக்கறையில் போனாள்………. ஆனால் அந்த அக்கறை ஏன் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

அவளின் தந்தையின் கேள்விக்கு அவளால் பதில் கொடுக்க முடியவில்லை.

பதில் தான் கொடுக்க முடியவில்லையே தவிர அவரை நேர் பார்வை பார்த்தாள். பதிலுக்கு அவளின் தந்தையும் அவளை முறைத்துப் பார்த்தார்.

இருவரும் எதிரும் புதிருமாக நிற்பதை பார்த்த தேவிகா அந்த இடத்தை விட்டு ராஜியை தள்ளிக்கொண்டு போனாள்.     

“என்ன நீ அப்பாகிட்ட சண்டை போடற? இதனால பிரச்சனைத் தான் பெருசாகும். உனக்கு பிடிக்கலையா தூர ஒதுங்கப் பழகு”, என்றார் தேவிகா.

“சரி அதை விடு! சீனியப்பன் மாமா என்ன சொன்னாரு? அதைச் சொல்லு!”, என்றாள்.

தேவிகா தன்னிடம் சீனியப்பன் சொன்னதைச் சொல்ல…….. விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் என்று உணர்ந்தாள். அவளுக்கு உடனே செந்திலை பார்க்க வேண்டும் போல இருந்தது.

“எந்த ஹாஸ்பிடல்”, என்று மறக்காமல் தன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டாள்.

“இப்போது எப்படி செந்திலை பார்ப்பது”, என்பது மட்டுமே அவளின் நினைவில் இருந்தது வேறு எதுவும் நினைவில்லை.

விவரம் சொல்லியவுடன் தன் மகளின் முக மாறுதல்களை……. அதில் இருந்த தீவிரத்தை தேவிகா கவனிக்கவில்லை.

அன்று அண்ணாமலையே அவளை காலேஜ் கொண்டு போய் விட முடிவு செய்து தயாராக இருந்தார்.

ராஜிக்கு இப்போது சேலம் போக வேண்டும்……. எப்படியாவது செந்திலை பார்க்க வேண்டும்……… அதனால் அவள் தன் தந்தையுடன் போவதை எல்லாம் மறுக்க வில்லை.

எப்போதும் வண்டியில் தன் தந்தையின் அருகில் அமரும் ராஜி……… அன்று அவர் முன் அமர, இவள் பின்னால் தான் அமர்ந்தாள். பயண நேரம் முழுவதும் தந்தை மகளிடையே ஒரு சிறு பேச்சு வார்த்தை இல்லை.

அண்ணாமலைக்கு பயண நேரம் முழுவதும் தான் செந்திலை போய் பார்ப்பதா வேண்டாமா என்ற யோசனையே இருந்தது. நேற்று அவன் நடந்துக் கொண்ட முறையில் அவன் கட்டாயம் ஏதோ ராஜியை பற்றி பேசியிருக்கிறான் என்று புரிந்தது. அதனால் அவனை போய் பார்க்க பிடிக்கவில்லை.

அதே சமயத்தில் சீனியப்பன் தன்னிடம் இத்தனை வருஷமாக விசுவாசமாக உழைத்தவர்……. அதுவுமில்லாமல் அவன் சிறிது தாமதித்து இருந்தாலும் அவன் கையின் நிலைமை தன் பெண்ணின் முகத்திற்கு வந்திருக்கும். அதை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.

நல்லதோ, கெட்டதோ போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தார்.

ராஜியை காலேஜ் வாசலில் இறக்கிவிட்டு………. அவர் ஹாஸ்பிடல் சென்ற போது சீனியப்பன் மட்டுமே ஐ சி யு வாசலில் இருந்தார். அதுவரை அன்னபூரணியும் அசோக்கும் வந்திருக்கவில்லை.

அவரிடம் சென்ற அண்ணாமலை……… “எப்படி இருக்கான்”, என்றார்.

“தெரியலைங்க! நான் ரெண்டு தடவை உள்ள போயிட்டு வந்தேன். கண்ணு திறக்கலைங்க”, என்றார்.

“அது நிறைய மருந்து கொடுத்திருப்பாங்க……. அதனால கூட இருக்கும்……. பணம் ஏதாவது வேணுமா “,

“இல்லை இருக்குங்க……… நேத்து வசூல் பணம் ஒரு எம்பதாயிரமும் அவன் கையில தாங்க இருந்தது. இப்போ இங்க அதை கட்டிட்டேன்………. அப்புறமா அதை எடுத்து கொடுத்துடறேன்”, என்றார்.

“பரவாயில்லை! ஒண்ணும் அவசரமில்லை! பையனை பார்த்துட்டு அப்புறமா குடுங்க…. இன்னும் பணம் வேணும்னாலும் வாங்கிக்கங்க”,  என்றார்.

“சரிங்க”, என்று சீனியப்பன் சொல்லும் போதே…….

“அவனை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சீனி………  அவன் என் பொண்ணை பத்தி இனிமே இப்படி பேசிட்டு திரிஞ்சான்னு தெரிஞ்சது, விளைவுகள் வேற மாதிரி இருக்கும். உங்களுக்கு என்னை பத்தி தெரியாதது ஒண்ணுமில்லை……. பையனை பத்திரமா பார்த்துக்கோங்க”, என்று நேரடியாக மிரட்டி சென்றார்.

உள்ளே சென்று செந்திலை பார்க்கவெல்லாம் முற்படவில்லை……. வந்தார்……. சொன்னார்…….. சென்றார்.

“இதை சொல்லத் தான் இந்த மனுஷன் வந்திருப்பார் போல”, என்று சீனியப்பன் நினைக்க அவரையறியாமல் பெருமூச்சு எழுந்தது.     

“பசங்களைஎல்லாம் ஓரளவுக்கு மேல சொல்ல முடியாது……. நாம சொல்லச் சொல்ல நம்மை மீறி செய்யனும்ன்ற உத்வேகம் தான் அதிகமா இருக்கும். அது ஏன் இந்த மனுஷருக்கு புரியலை……… சும்மா இருக்குற பிரச்சனையை இவரே ஊதி ஊதி பெருசாக்கிடுவார் போல……..”, என்று அவர் நினைக்கும் போதே அங்கிருந்த சிஸ்டர் மருந்து லிஸ்டை கையில் கொடுக்க அதை வாங்க சென்றார்.

ராஜியை காலேஜ் வாசலில் இறக்கி விட்டு அண்ணாமலை திரும்பிய உடனேயே……..  ராஜி காலேஜ் உள்ளே போகாமல் வெளியே வந்தாள். ஒரு ஆட்டோ பிடித்து செந்தில் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடல் சென்றாள்.

உள்ளே நுழையுமுன்னே தன் தந்தையின் சுமோ அங்கே நிற்பதை பார்த்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மறைவாக நிற்கவும் இடமில்லை. ஹாஸ்பிடல் உள் இருந்த லேபில் போய் அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் பேஷன்ட் எங்கே என்று கேட்டதற்கு, “வருகிறார்கள்”, என்று சொல்லி ஒரு கால் மணிநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.

“அப்பா கிளம்பியிருக்க வேண்டும்”, என்று நினைத்துக்கொண்டே……… சற்று பயந்து கொண்டே வெளியே வந்து பார்த்தால் வண்டியில்லை.

“ஹப்பா”, என்று பெருமூச்சு விட்டவள் கிளம்பி………. ஐ சீ யு எங்கே இருக்கு என்று விசாரித்துப் போக……….. அங்கே சீனியப்பன் வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

இவளை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி……… எங்கே இவள் இங்கே வருகிறாள் என்று.

“இப்போதான் அவங்கப்பா வந்து மிரட்டிட்டு போறார்………. இந்த பொண்ணு பின்னாலேயே வந்து நிக்குதே”,

“மாமா, உங்க பையனுக்கு எப்படி இருக்குது”, என்றாள்.

“ஆபரேஷன் பண்ணியிருக்காங்க…….. இன்னும் ஐ சி யு ல தான் இருக்கான். நீ வர்றது அப்பாக்கும் அம்மாக்கும் தெரியுமா”, என்றார் குரலில் ஒரு விலகல் தன்மையோடு. எப்போதும் தன்னிடம் பரிவோடு பேசும் சீனியப்பனின் குரல் பேதத்தை நன்கு உணர்ந்தாள். 

தயங்கியவள், “தெரியாது”, என்றாள்.

“அவங்களுக்கு நீ இங்க வர்றது பிடிக்காது பாப்பா…….. நீ கிளம்பிப் போயிடு”, என்றார்.

“நான் ஒரு தடவை அவங்களை பார்த்துட்டு போயிடறேனே”, என்றாள்.

“சரி, பார்த்துட்டு போ! ஆனா இனிமே வராத பாப்பா………. வீணா பிரச்சனையாகும் உனக்கும் பிரச்சனையாகும், செந்திலுக்கும் பிரச்சனையாகும், இப்போ தான் உங்கப்பா வந்து மிரட்டிட்டுப் போறாரு”.

என்ன சொல்வது என்று தெரியாதவளாக பேகை அங்கேயே வைத்துவிட்டு உள்ளே போனாள்.

அவள் போன போது நிறைய ரத்தம் செந்திலின் உடம்பில் இருந்து வெளியேறி இருந்ததால் அவனுக்கு ரத்தம் ஏறிக்கொண்டு இருந்தது.

அங்கே நான்கைந்து பேஷன்ட் இருந்ததால் அவளுக்கு செந்திலை எப்படி தேடுவது என்று புரியவில்லை. அங்கங்கே ஒவ்வொரு பேசன்ட்டுக்கும் திரை மாட்டி இருந்தனர்.

அங்கே இருந்த சிஸ்டர், “யாரைப் பார்க்கணும்”, என்றாள்.

“செந்தில்”, என்று இவள் சொன்னவுடனே அங்கே இருந்த ஒரு திரையை காட்டியவள்…. “ரொம்ப நேரம் பண்ணக்கூடாது பார்த்துட்டு உடனே வந்துடணும்”, என்றாள்.

ராஜி உள்ளே போனபோது அவனுக்கு ஒரு கையில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. மற்றொரு கையில் பெரிய கட்டுப்போடப்பட்டு இருந்தது. அங்கே இருந்து டுயுப் மாதிரி வெளியே வந்தது. அவன் கண்களும் மூடியிருந்தது.

“செந்தில்…….”, என்று அழைக்க முற்பட்டாள்………. வாயிலிருந்து சத்தம் வருவதாக காணோம் ஏதோ ஒரு பதட்டம் அவளுக்கு.

ஒரே நாளில் ஆள் உருத்தெரியாமல் மாறியிருந்தது போல தோன்றியது ராஜிக்கு. தயங்கி தயங்கி கைகள் நடுங்க…….. ரத்தம் ஏறிக்கொண்டிருந்த அவனின் கையை  தொட்டாள்.

அவளின் தொடுகையில் மெதுவாக கண்திறந்தான் செந்தில். அவன் ராஜியை அங்கு எதிர்பார்க்கவில்லை.

அவன் கண்களை திறந்ததும் என்ன பேசுவது என்று ராஜிக்கு தெரியாமல்…… “ரொம்ப வலிக்குதா”,  என்றாள்.

“ஆமாம்”, என்பது போல தலையாட்டினான்.

“சாரி, என்னால தானே இப்படி”, என்றாள்.

“நடக்கறது நடந்திருக்கு…….. அதுக்கு நீயென்ன பண்ணுவ”, என்றான் மெதுவான குரலில்.

“கொஞ்ச நேரம் நீங்க தாமதிச்சு இருந்தீங்கன்னா கூட என் முகம்”, என்று அவள் இழுக்க……

“அதான் நடக்கலையே…… அதைப் பத்தி பேசாத”, என்றான்.

அதற்குள் எட்டிப் பார்த்த சிஸ்டர்…… “ஏம்மா நீயின்னும் கிளம்பலையா, டாக்டர் ரௌண்ட்ஸ் வர்ற நேரம்……… பார்த்தா திட்டுவாரு”, என்றாள்.

அவள் சென்றதும் செந்திலைப் பார்த்தவள்………. “தேங்க்ஸ்”, என்றாள்.

அவளை காப்பாற்றியதற்கு தான் தேங்க்ஸ் சொல்கிறாள் என்று புரிந்தவன்…. “இந்த தடவை சீக்கிரமா சொல்லிட்டப் போல”, என்றான்.

இருவர் முகத்திலுமே ஒரு மென்னகை தோன்றியது.அவள் மனமேயில்லாமல் கிளம்ப “ராஜி”, என்றழைத்தவன்………. “என்னை பார்க்க வராதே ராஜி…… உங்கப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்”, என்றான்.

அவன் பார்க்க வராதே என்று பட்டென்று சொன்னவுடனே….. அதையே தான் சீனியப்பனும் சொல்லியிருந்ததால், கேட்ட உடனே ராஜிக்கு கண்களில் நீர் கோர்த்தது.

தந்தையை காரணமாக எல்லோரும் மாற்றி மாற்றி சொல்ல ஒரு பிடிவாதம் தோன்றியது ராஜியிடம். கண்களில் நீரோடே…… “யார் சொன்னாலும் நான் உங்களை பார்க்க வருவேன்”, என்றாள் பட்டென்று.

“ஏன்”, என்றான் ஒற்றை வார்த்தையில்………

இதற்கு ராஜியிடம் எந்த பதிலும் அப்போது இல்லை.

“தெரியலை”, என்றாள் உண்மையாக………

சொன்னவள் அவன் பதில் பேசுவதற்கு கூட இடம் கொடுக்காமல் கிளம்பிவிட்டாள்.    

செந்தில் ஆயாசமாக கண்களை மூடிக்கொண்டான்,

“இவளுக்கு எப்படி புரிய வைப்பது தெரியலையே……… ஒரு வேளை இவளைப் பற்றி நான் தேவையில்லாமல் என் ஆளு, அது இது….. நாங்க காதலிக்கிறோம்……. என்று தப்பும் தவறுமாக சொன்னதால் தான் கடவுள் என்னை தண்டித்து என் கை இப்படியாகிவிட்டதோ”, என்ற எண்ணம் தோன்றுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.              

                 

                      

Advertisement